தமிழ்ச் சமூகம்
மிகத் தொன்மையானது.
குறிஞ்சி மற்றும்
முல்லை நிலங்களில்தான், முதன் முதலில் வேளாண்மை தோன்றியது.
வேளாண் பணிகளை முதன் முதலில் செய்தவர்கள் பெண்கள்.
அன்று எளிய முறையில்
தொடங்கிய வேளாண்மை, இன்று பண்பட்ட நிலைக்கு வளர்ந்திருக்கிறது.
இருப்பினும்
பல சடங்கு மற்றும் சம்பிரதாயங்களைச் சுமந்தே இன்றும் நிலைத்து நிற்கிறது.
முதலில் மழைச்
சடங்கு.
சித்திரை மாதம்
அறுவடை முடிந்து
மூன்று அல்லது நான்கு மாதங்கள் கடந்த நிலையில், சித்திரையில் மழை பொழியும்.
இதனை சித்திரை
பத்து என்பார்கள்.
அதாவது சித்திரை
மாதம் பத்தாம் தேதி வாக்கில் இந்த கோடை மழை பொழியும்.
மழை பெய்ததும்,
பொன்னேர் பூட்டுவார்கள்.
மழை பெய்த ஈரம்
நிலத்தில் இருக்கும்பொழுதே, நிலத்தை உழுவார்கள்.
ஏற்கனவே நிலத்தின்
மேல் வளர்ந்து, வெயிலால் காய்ந்து கருகியிருந்த புல், பூண்டுகள் எல்லாம் கீழே செல்லும்.
கீழிருந்த மண்
மேலே வரும்.
ஈரத்தால் மண்ணுயிர்கள்
பெருகும்.
ஊர் திருவிழாக்கள்
நடப்பதெல்லாம் இந்த மழை திருவிழாவின் நீட்சிதான்.
செயற்கை வெளிச்சங்கள்
அதிகம் இல்லாத அந்நாளில், சித்திரை மாதத்தின் முழு நிலவு அன்று, ஊரே வெளிச்சத்தில்
மிதக்கும்.
சித்ரா பௌர்ணமி
திருவிழா நடக்கும்.
தொடர்ந்து விதை
விதைத்தல்.
ஏற்கனவே விளைந்த
நெல் மணிகளை எடுத்து, கோட்டை கட்டுதல் என்னும் முறையில், வைக்கோலால் மூடி, சாணம் தடவி
பாதுகாத்து வைத்திருப்பார்கள்.
இந்த கோட்டையைப்
பிரித்து, நெல் மணிகளை வெளியே எடுத்து, விதை தெளிப்பார்கள்.
நாற்று பறித்தல்.
பின் நாற்று
நடுதல்.
பெண்கள்தான்
இப்பணியில் முழுமையாய் ஈடுபடுவார்கள்.
ஒற்றைப்படை எண்ணிக்கையில்தான்
பெண்கள் வயலில் இறங்கிப் பணியாற்றுவார்கள்.
இறுதியாய் கதிர்
அறுத்தல்.
அனைத்து வேளாண்
பணிகளையும், இறை வழிபாட்டுடன்தான் தொடங்குவார்கள்.
அதுவும் ஈசானி
மூலையில் இருந்துதான் தொடங்குவார்கள்.
ஈசானி மூலை.
வடகிழக்கு மூலை
தொடக்க காலத்தில்
இந்திரன்தான் வேளாண்மையின் முதல் தெய்வம்.
மருத நிலத்திற்கு
இந்திரன்.
சங்க காலத்தில் இந்திரவிழாதான் நடந்தது.
இதுவே பின்னர்,
பக்தி காலத்தில், பிள்ளையார் வழிபாடாக மாறியது.
இதன் பின்னர்தான்,
எந்தச் செயலைச் செய்தாலும், பிள்ளையாரை வழிபட்டுத் தொடங்குதல் மரபாகவே வளர்ந்தது.
இதைத் தாண்டி,
இயற்கை வழிபாடு
சிறு தெய்வ வழிபாடு
பெருந் தெய்வ
வழிபாடு என்றெல்லாம் சடங்குகள் தொடர்ந்தன.
இயற்கை வழிபாடு
என்பது பொங்கல் விழா
முதல் நாள் இயற்கையை
வழிபடுதல்
இரண்டாம் நாள்
கால்நடைகளை வழிபடுதல்.
மூன்றாம் நாள்
கன்னிப் பொங்கல் அல்லது காணும் பொங்கல்.
ஆடியில் உழவுத்
தொழிலைப் பெண்கள் வழியாகக் கற்றுக் கொண்டதால், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்
கன்னிப் பொங்கலை இன்றும் கொண்டாடி வருகின்றோம்.
காவேரிக் கரை
பகுதிகளில் இன்றும் கன்னிமார் தெய்வங்களுக்குக் கும்மி அடித்து வழிபாடு செய்து வருகிறார்கள்.
இதன் தொடர்ச்சிதான்
சிறுதெய்வ வழிபாடு.
இந்த மரபில்தான்
ஐயனார், காத்தவராயன் முதலான தெய்வங்களை வழிபட்டு வருகின்றோம்.
ஏரி, குளம் போன்ற
நீர் நிலைகளில், மழை பெய்ய வேண்டி, இன்றும் இந்த சிறு தெய்வ வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
அடுத்தது, ஆகம
விதிகளுக்கு உட்பட்ட பெருந்தெய்வ வழிபாடு.
இதுபோன்ற வழிபாட்டு
முறைகளில்தான், சடங்குகள், நம்பிக்கைகள் எல்லாம் வருகின்றன.
சடங்கு என்பதற்கு
சில வரையறைகள் உண்டு.
சடங்கை நிகழ்த்துவதற்கு
சில வழிமுறைகளும் உண்டு.
படையலிடுதல்.
படையல் வழிபாடு.
வழிபாட்டைத்
தொடங்கும்போது குழவை ஒலி எழுப்புதல்.
சிறு தெய்வங்கள்
என்றால், அதிலும் ஆண் தெய்வங்கள் என்றால், ஆடு, கோழிகளைப் பலியிடுதல்.
சிறுதெய்வகளில்
பெண் தெய்வங்கள் என்றால், பூசனிக்காய், எலுமிச்சை அறுத்துப் பலியிடுதல்.
சடங்கிற்கு அடுத்ததாக
நம்பிக்கை.
சோதிடம் பார்த்தல்
என்னும் நம்பிக்கை.
இந்த சோதிடம்
பார்ப்பதிலும் சில வகைகள் உண்டு.
சிறு தெய்வக்
கோயில்களில் இருக்கும், வயது முதிர்ந்த பூசாரிகளிடம் சோதிடம் பார்ப்பது.
அந்தணர்களிடம்
பார்ப்பது.
சிலசமயம் வீட்டில்
உள்ள வயது முதிர்ந்தவர்களிடம் பார்ப்பது.
இவர்கள் குறித்துக்
கொடுக்கக்கூடிய நாட்களில்தான், வேளாண் சடங்குகளைச் செய்வார்கள்.
இவர்கள் நாட்களை
மூன்று வகையாகப் பிரிப்பார்கள்.
மேல் நோக்கு
நாள்.
கீழ் நோக்கு
நாள்
சம நோக்கு நாள்
பூமியில் விதைத்தபின்,
மேல் நோக்கி வளரக்கூடிய விதைகளுக்கு மேல் நோக்கு நாள்.
கீழ்நோக்கி பூமிக்குள்
வளரக்கூடிய கிழங்குகளின் விதைகளுக்கு கீழ் நோக்கு நாள்.
இரண்டு விதமான
விதைகளுக்கும் அவ்வப்போது சமநோக்கு நாளையும் தேர்ந்தெடுப்பார்கள்.
பொன்னேர் பூட்டுதலுக்கு
நல்ல நாள் பார்த்தல் என்பது முக்கியான நிகழ்வாகும்.
இதற்குப் பெரும்பாலும்
பஞ்சமி திதியைத்தான் தேர்ந்தெடுப்பார்கள்.
வளர்பிறையில்
பஞ்சமியில் தொடங்குவார்கள்.
பஞ்சமி என்பது
ஐந்தைக் குறிக்கும்.
வளர்பிறை தொடங்கியதில்
இருந்து ஐந்தாம் நாள்.
இந்நாட்களிலும்
அமிர்த யோகம், சுபயோகம் போன்ற நேரங்களில்தான் தொடங்குவார்கள்.
ஈசானி மூலையில்
தொடங்குவார்கள்
அதாவது வடகிழக்கு
மூலையில் வழிபாடு நடத்தித் தொடங்குவார்கள்.
இதேபோல் விதைகளை
ஊற வைத்தல், எடுத்துச் செல்லுதல், விதைத்தல், நாற்று நடுதல், அறுவடை செய்தல் என ஒவ்வொன்றிற்கும்
நல்ல நாள் பார்ப்பார்கள்.
தமிழர்களிடம்
நல்ல நாள் பார்க்கும் பழக்கம் மட்டுமல்ல,நல்ல சகுணம் பார்க்கும் பழக்கமும் உண்டு.
நெற்கதிர்களை
அறுக்கச் செல்லும்போது, யாருக்கும் தெரியாமல் வைகரையில் செல்வார்கள்.
அப்படிச் செல்லும்போது,
எதிரே யாரும் வந்துவிட்டால், அவ்விடத்திலேயே சிறிது நேரம் அமர்ந்து, தண்ணீர் குடித்துவிட்டுத்தான்
நகர்வார்கள்.
இதுமட்டுமல்ல,
பலவித நம்பிக்கைகளும் வேளாண் சடங்குகளில் உள்ளன.
கருடன் வானத்தில்
வட்டமிட்டால் நல்ல நேரம்.
எதிரே ஒரு அந்தணர்
தனியே வந்தால், கெட்ட நேரம்.
எதிரெதிர் துருவங்களில்
மின்னல் வெட்டினால் மழை.
காற்று சுழன்று
அடித்தால் மழை
ஈசானி மூலையில்
கருத்தால் மழை
பறவைகள் மற்றும்
விலங்குகளில் செயல்பாட்டில் மாற்றம் தெரிந்தால் மழை.
சில வெள்ளைப்
பூச்சி இனங்கள் திடீரென்று கண்ணெதிரே பறந்தால் மழை
தவளை கத்தினால்
மழை
தட்டன் பறந்தால்
மழை
நண்டு வளையை
மூடினால் மழை
கரையான் புற்றை
மூடினால் மழை
கட்டெறும்பு
தரையில் இருந்து, முட்டைகளுடன் உயரத்திற்குச் சென்றால் மழை.
மழை அளவிற்கும்
அதிகமாய், தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தாலும், அதனை நிறுத்துவதற்கும் ஒரு சடங்கு உண்டு.
குழந்தையை நிர்வாணமாக்கி,
அதன் கையில் கொள்ளிக் கட்டையைக் கொடுத்து, வான் நோக்கி உயர்த்திக் காட்டினால், மழை
நின்றுவிடும் என்னும் நம்பிக்கை.
மழையே பெய்யவில்லை
என்றாலும், கொடும்பாவி கட்டி எரித்தால் மழை பொழியும் என்னும் நம்பிக்கை.
சங்க இலக்கியங்களில்
மழை சடங்கு பற்றிய 25 சிறு தெய்வ வழிபாட்டு முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
எனவே சடங்குகள்
மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில்தான்
மழைச் சடங்கு
பொன்றேர் பூட்டுதல்
விதை விதைத்தல்
நாற்று நடுதல்
அறுவடை என அனைத்து
வேளாண் பணிகளும் நடந்து வருகின்றன.
---
ஏடகம்
ஞாயிறு
முற்றம்
8.2.2026 ஞாயிற்றுக் கிழமை மாலை
ஏடக அரங்கில்
வேளாண்
சடங்குகளும் நம்பிக்கைகளும்
எனும் தலைப்பில்
சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன,
சுவடியியல் புல, இளநிலை ஆராய்ச்சி அலுவலர்
சொற்பொழிவாற்றினார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க, தஞ்சை மாவட்டத் தலைவர்
திரு
பி.செந்தில்குமார் அவர்கள்
தலைமையில் நடைபெற்ற, இப்பொழிவிற்கு வந்திருந்தோரை
ஏடகம், சுவடியியல் மாணவி
செல்வி
நா.தீபிகா அவர்கள்
வரவேற்றார்.
பொழிவின் நிறைவில்
புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி
வருகைதரு விரிவுரையாளர்
முனைவர்
கா.செந்தாமரைச்செல்வி அவர்கள்
நன்றி கூறினார்.
தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்வியியல் கல்லூரி, உதவிப் பேராசிரியர்
முனைவர்
ரா.ராஜலட்சுமி அவர்கள்
விழா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.
ஏடக
அரங்கில்
ஈரக்
காற்று
மண்
வாசனை.
ஏடக
நிறுவனர், தலைவர்
முனைவர்
மணி.மாறன் அவர்களைப்
போற்றுவோம்,
வாழ்த்துவோம்

