வகுப்பறை.
ஆசிரியை ராஜாமணி
பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
அப்பொழுது கோபத்துடன்
வந்தார் ஒரு தாய்.
என் பையனை வெளியில் அனுப்புங்க
சத்தம் போட்டார்.
ஆசிரியைக்கு
ஒன்றும் புரியவில்லை.
ஏன்? என்ன பிரச்சனை?
தினந்தோறும் வீட்டுல சாப்புட்டுட்டு இங்க வந்து
உட்கார்ந்துக்கிட்டா, யார் வேலை பார்ப்பது?
அந்தத் தாய்க்கு
எட்டு குழந்தைகள்.
இவரது கணவர்
முட்டை கடையில் கணக்குப் பிள்ளை
வருமானம் மிகக்
குறைவு.
தந்தைக்கு மகன்களைப்
படிக்க வைக்க ஆசை.
படிக்கவும் வைத்தார்.
தாய்க்கு சுத்தமாய்
விருப்பமே இல்லை.
பிள்ளைகள் படிப்பதை
ஒரு ஆடம்பரச் செலவாகவே கருதினார்.
எட்டும் வேலை
பார்த்தால், குடும்பச் சுமை குறையும் என்று எண்ணினார்.
தினமும் கணவரோடு
சண்டை.
மூத்த பிள்ளையையாவது, படிப்பை நிறுத்தி, வேலைக்குப்
போகச் சொல்லுங்கள் என வற்புறுத்தினார்.
மகன் பரிட்சையில் பெயிலானால், படிப்பை நிறுத்திவிடுகிறேன்
என்றார் தந்தை.
மகனோ பாஸாகி,
பாஸாகி அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் சென்று கொண்டே இருந்தான்.
வருடக் கணக்கில்,
கணவனிடம் சண்டை போட்டு போட்டு அலுத்துப் போய், இன்று பள்ளிக்கே வந்துவிட்டார்.
தெண்டத்துக்குச் சோறு போட்டு பள்ளிக்கு அனுப்ப
முடியாது, வெளியே அனுப்புங்கள்.
பிள்ளைக்குச் சோறு போட்டு பள்ளிக்கு அனுப்புவதுதான்
பிரச்சனையா? சரி இனி நான் சோறு போடுகிறேன் என்றார் ஆசிரியை.
பிச்சை எடுத்தெல்லாம் என் பிள்ளையைப் படிக்க
வைக்க வேண்டிய அவசியமில்லை. அனுப்புங்கள அவனை.
அம்மா, உங்கள் பிள்ளைக்கு நான் சோறு போட வேண்டிய
அவசியமில்லை. படிக்கின்ற பிள்ளைகளுக்கு அரசாங்கமே சோறு போடுது. தமிழக முதல்வர் காமராசர்
மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறார் என்றார் ஆசிரியை.
காமராசரின் மதிய
உணவுத் திட்டம் மாணவனின் படிப்பைக் காப்பாற்றியது.
காமராசர் காலத்தில்
மதிய உணவோடு, மாலை பள்ளி விட்டதும், மாணவர்களுக்குப் பால் பவுடரும் கொடுப்பார்கள்.
இம்மாணவன் பால்
பவுடரை தினமும் அம்மாவிடம் கொடுத்தான்.
செம்பு செம்பாய்
பால் கிடைத்தது.
தாய் மகிழ்ந்தாள்.
வீட்டில் தினமும்
இட்லி, தோசை சுட்டு விற்பாள் இவனது தாய்.
இவனோ தினமும்
மாவரைத்துக் கொடுப்பான்.
மாலை நேரத்திலும்,
விடுமுறை நாட்களிலும், இவனது தந்தை புதிதாய் தொடங்கி இருந்த முட்டைக் கடையில் வியாபாரம் பார்ப்பான்.
முட்டை என்றால்
கோழி முட்டை அல்ல,
அப்பொழுது எல்லாம்
வாத்து முட்டைதான்.
கோழி முட்டைகளை
சிறிய வியாபாரிகள், கிராமங்களில் இருந்து கொண்டு வந்து கொடுப்பார்கள்.
அதனை வாங்கிக்
கடையில் விற்பார்கள்.
இம்மாணவர் பள்ளிப்
படிப்பு முடிந்ததும், மிதிவண்டியை எடுத்துக் கொண்டு அக்கம் பக்கத்து கிராமங்களுக்குச்
செல்வார்.
அப்பொழுதெல்லாம்
கிராமங்களில் வாத்து பட்டி போட்டிருப்பார்கள்.
வாத்து முட்டைகளை
வாங்கி வருவார்.
வரும் வழியில்
உள்ள கிராமங்களில் கிடைக்கும் கோழிகளை விலைக்கு வாங்கி வந்து, தஞ்சையில் உள்ள உணவு
விடுதிகளுக்குக் கொடுப்பார்.
இவரது அப்பா,
கடையை மெல்ல வளர்த்து, கடன் வாங்கி ஆயிரக் கணக்கில் வாத்துகளை வாங்கினார்.
தஞ்சை மாவட்டம்
முழுக்க எல்லா பகுதிகளுக்கும் வாத்துகளை ஓட்டிப் போய் மேய்ப்பார்கள்.
பருவ காலம் முடிந்து
போனால், கேரளா, மைசூர், பத்ராவதி என வாத்துகளை ஓட்டிப் போவார்கள்.
அப்பொழுதெல்லாம்,
இவர்தான் முழுமையாய் கடையைப் பர்த்துக் கொள்வார்.
கடையைப் பார்த்துக்
கொண்டே, படிப்பையும் பார்த்துக் கொண்டார்.
தஞ்சாவூர், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், கரந்தைப் புலவர்
கல்லூரியில் சேர்ந்துப் படித்துப் புலவரானார்.
சங்க இலக்கியம்
முதல் தமிழ் சார்ந்த பல விசயங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
எழுத்தாளர்கள்
சங்கக் கூட்டங்களில் கலந்து கொண்டார்.
அறிவை வளர்த்துக்
கொண்டதோடு, தொடர்பையும் பெருக்கிக் கொண்டார்.
புத்தக வாசிப்பு.
இவர் இரத்தத்தோடு
கலந்து போனது.
நிறையப் படித்துவிட்டோம்
என்று இவர் எண்ணி மகிழ்ந்தபோதுதான், தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு வந்த, இலங்கை தமிழ்ப்
பேராசிரியர் க.சிவத்தம்பி அவர்களைச் சந்தித்தார்.
நீண்ட நேரம்
பேசினார்.
இவரது பேச்சைக்
கேட்ட சிவத்தம்பி கூறினார், பரவாயில்லை, தமிழில்
ஓரளவு தெரிந்து வைத்துள்ளீர்கள்.
தமிழை நிறையப்
படித்துவிட்டோம் என்ற இவரது எண்ணம் சுக்கு நூறாய் தகர்ந்து போனது,
தமிழை முழுமையாய் தெரிந்து கொள்ள வழிகாட்டுங்கள்
என வேண்டினார்.
தமிழை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால்,
தமிழ் நாட்டின் வரலாறு, உற்பத்தி முறை, சாதிய முறை, அரசியல் இயக்கங்கள் இவற்றைப் பற்றியெல்லாம்
படிக்க வேண்டும்.தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
படித்தார்.
தெரிந்து கொண்டார்.
படித்தாலும், வேலைக்குச் செல்லவில்லை.
தந்தையோடு உடனிருந்து
உதவினார்.
இன்றும் தன்
தந்தையின் தொழிலை விடாமல் பார்த்து வருகிறார்.
இருப்பினும்
படித்துக் கொண்டே இருக்கிறார்,
சங்க இலக்கியம்
படிப்பார்.
பின்நவீனத்துவம்
சார்ந்த புத்தகங்களையும் படிப்பார்.
சங்கரர் தத்துவத்தையும்
படிப்பார்.
திராவிட இயக்கங்கள்
பற்றியும் படிப்பார்.
கல்வெட்டுகள்
பற்றியும் படிப்பார்.
உளவியல் நூல்களையும்
உளப்பூர்வமாய் படிப்பார்.
சிறுகதைகள் படிப்பார்.
நாவல்களும் படிப்பார்.
அனைத்தையும்
படிக்கும் மனோபாவம் இவருக்கு.
ஒரு செய்திக்கு, ஒரு நிகழ்ச்சிக்கு, ஒரு வரலாற்றுக்குப்
பல பரிமாணங்கள் இருக்கும். அப்படிப் பார்க்கக்கூடிய தகுதியை நாம் வளர்த்துக் கொள்ள
வேண்டும். அப்படி இல்லையென்றால். எதுவும் உள்ளபடி புலப்படாது என்ற சிவத்தம்பியின்
வாக்கினைப் புரிந்து கொண்டார்.
தன்னை வளர்த்துக்
கொண்டார்.
தன்னை வளர்த்துக்
கொண்டு, உள்ளதை உள்ளபடி புரிந்து கொண்டு, வாசித்துக் கொண்டே இருக்கிறார்.
எழுதிக் கொண்டே
இருக்கிறார்.
இவர் இதுவரை
எழுதிய நூல்களே, இவர் உள்ளதை உள்ளபடி புரிந்து கொண்டதைத் தெள்ளத் தெளிவாய் நமக்கும்
புரிய வைக்கும்,
பொற்காலங்களும்,
இருண்ட காலங்களும்
கோயில்,
நிலம், சாதி
பொய்யும்
வழுவும்
வரலாறு
என்பது கற்பிதம்
பரத
கண்ட புராணம் (கால்டுவெல் நூல் பதிப்பு)
பழந்தமிழ்
நூல்கள் நவீனமான வரலாறு
சோழர்
ஆட்சியிலும் அடிமைகளா?
இந்திய
தத்துவமும், தமிழ் தத்துவ மரபுகளும்
தஞ்சையில் வசித்தவர்.
இன்று நாமக்கல்லில்
வசித்து வருகிறார்.
தமிழக வரலாற்று
ஆய்வில் மிகுந்த ஆர்வம் உடையவர்.
வரலாற்றுத் தரவுகளை
மறு வாசிப்பு செய்வதும், மாற்று வரலாற்றை உருவாக்குவதும்தான் இவரது எழுத்துக்களின்
முக்கிய நோக்கம்.
தமிழக அரசின்
தமிழ்த்
தென்றல் திரு வி.க., விருது
விஜய் தொலைக் காட்சியின், நீயா நானா நிகழ்வின்
சிறந்த
ஆளுமை விருது
விகடனின்
நம்பிக்கை
மனிதர் விருது
அமெரிக்காவின் விளக்கு அமைப்பின்
புலமைப்பித்தன்
விருது
முதலான பல விருதுகளுக்குச் சொந்தக்காரர்.
இவர்தான்
எழுத்தாளர் பொ.வேல்சாமி
.jpg)

