15 நவம்பர் 2013

கண்ணகியின் அடிச்சுவட்டில் ஒரு நீநீநீண்ண்ட பயணம்


தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
என்பார் திருவள்ளுவர்., நாமும் நமது பணியினை நிறைவாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், தினமும் முயன்று கொண்டே இருப்பவர்கள்தான். ஆனாலும் நமது முயற்சியின் எல்லை சிறியது, முயற்சிக்கும் காலமும் சிறியது.

      நாம் அனைவரும் புத்தகங்கள் படிப்பவர்கள்தான். எத்துனையோ மாமனிதர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கரைத்துக் குடித்தவர்கள்தான். இதிகாசங்களையும், இலக்கியங்களையும், காப்பியங்களையும் படித்தவர்கள்தான். ஆனால் நம்மில் எத்தனைபேர், நூல்கள் சுட்டும் திசையில் பயணித்திருக்கிறோம்.

      களப் பணி என்னும் சொல் இன்று மிகவும் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. தமிழாய்வாளர்கள் இன்று களப்பணி செய்து, புதிய புதிய செய்திகளை, உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார்கள்.

     தமிழ்ப் பல்கலைக் கழகத்திலே பணியாற்றும், எனது நண்பர் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள், விடுமுறை நாட்களில், பௌத்தத்தின்அடிச்சுவட்டைத் தேடி, சோழ நாடு முழுமையும் பயணம் செய்து கொண்டே இருக்கிறார்.

    இன்று களப்பணி ஆற்றுவதற்கு தொடர் வண்டிகள், பேரூந்துகள், வானூர்திகள், இரு சக்கர வாகனங்கள் என ஏராளமான வசதிகள் பல்கிப் பெருகிவிட்டன. ஆனால் இன்றைக்கு 68 ஆண்டுகளுக்கு முன்னர், பயண வசதிகள் என்ன இருந்திருக்கும், என்பதை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள் நண்பர்களே.

     ஒரு சில புகை வண்டிகள், மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், இரு சக்கர மிதி வண்டிகள் இவைதானே, அன்றிருந்தவை.
பேராசிரியர் சி.கோவிந்தராசனார்
     தஞ்சாவூர், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், கரந்தைப் புலவர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிய பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், இலங்கையைச் சார்ந்த பேரறிஞர், யாழ் நூல் என்னும் தமிழ் இசை இலக்கண நூலின் ஆசிரியர், சுவாமி விபுலானந்த அடிகளாரிடம், சிலப்பதிகாரத்தைத் திறம்படக் கற்றவர். சிலப்பதிகாரத்தில் ஊறித் திளைத்தவர். அவரது மனதில் நீண்ட நாட்களாகவே, ஓர் ஆசை, ஏக்கம், கனவு. சிலப்பதிகாரத்தில் கண்ணகி பயணம் செய்த, பாதை வழியாகவே, ஒரு பயணம் செய்தால் என்ன என்ற தணியாத தாகம்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு
பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களும் எண்ணி, எண்ணித் துணிந்து இறங்கினார்.

     சொன்னால் நம்ப மாட்டீர்கள், பேராசிரியர் சி.கோவிந்தராசனார், கண்ணகியின் அடிச்சுவட்டில் பயணம் தொடங்கிய ஆண்டு 1945. ஆம் நண்பர்களே, இன்றைக்கு 68 ஆண்டுகளுக்கு முன்னர், துணிந்து இறங்கினார்.

      கண்ணகியின் அடிச்சுவட்டில், கண்ணகி பயணித்த பாதை வழியாகவே, இவரும் நடந்தே சென்றார். கல்லூரி விடுமுறையில் நடந்தார், விடுமுறை எடுத்துக் கொண்டு நடந்தார். ஊதியத்தைச் செலவிட்டு நடந்தார். தனது உடமைகள் ஒவ்வொன்றையும், விற்று, விற்று, காசாக்கிக் கொண்டே நடந்தார்.

     இவர் நடந்தது ஒரு மாதம், இரு மாதமல்ல, பதினேழு ஆண்டுகள் நடந்தார். முடிவில் சிலப்பதிகாரம் என்பது கற்பனைக் கதையல்ல, வரலாற்று நிகழ்வு என்பதனை உலகிற்கு உணர்த்தினார்.


     அதுமட்டுமல்ல, சிலப்பதிகாரத்தில், குன்றக்குரவை என்னும் காதையுள், கண்ணகி மலைமேல், வேங்கை மர நிழலில் நின்று தெய்வமான இடத்தினையும், அவ்விடத்தில் சேரன் செங்குட்டுவன் அமைத்த பத்தினிக் கோட்டம் என்னும் கண்ணகிக் கோயிலையும் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்த பெருமைக்கு உரியவரும் இவரேதான்.

      பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், பதினேழு ஆண்டுகள் செலவிட்டு, கண்ணகியின் பாதச் சுவடுகளைப் பின் பற்றி நடந்த பாதையின் வழியே, நாமும் ஒரு புனிதப் பயணம் மேற்கொள்வோமா. வாருங்கள் நண்பர்களே வாருங்கள்.

      பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், தனது பயணத் திட்டத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டார்.

     காவிரிப் பூம்பட்டிணம் முதல், காவிரியின் வடகரை வழியாக, திருவரங்கம், உறையூர் வரையிலான பாதை, இவரது ஆய்வின் முதல் பகுதி.

     உறையூர் முதல், கற்குடி, பூங்குடி, விராலிமலை, கொடும்பாளூர் வழியாகப் பிரான் மலை, அழகர் மலை, மதுரை வரையிலான பாதை இவரது ஆய்வின் இரண்டாம் பகுதி.

     மதுரை மாநகர் ஆராய்ச்சி இவரது ஆய்வின் மூன்றாம் பகுதி.

     மதுரை முதல் வையை கரை வழியே நெடுவேள் குன்றம் வரையிலான பாதை இவரது ஆய்வின் நான்காம் பகுதி.

கண்ணகியில் அடிச்சுவட்டில் பேராசிரியர் பயணித்த பாதை

    


1945 ஆம் ஆண்டின் ஓர் நாள், இவர் மயிலாடுதுறை என்று இன்று அழைக்கப் படுகின்ற மாயுரம் வரை புகை வண்டியில் சென்றார். அங்கிருந்து இரு சக்கர மிதி வண்டிதான். அந்தக் காலத்தில், இவர் மாயுரத்தில் இறங்கி விசாரித்த பொழுது, காவிரிப் பூம்பட்டிணம் எங்கிருக்கிறது என்று யாருக்குமே தெரியவில்லை.

     பலமுறை முயன்ற பிறகு, கடற் கரையில் மீனவர்களின் ஒரு சில குடிசைகளுடன், மணற் பரப்பும், மணல் மேடுகளும், கள்ளியுடன் காரைச் சூரைச் செடிகளும் செறிந்த புதர்களும், சவுக்குத் தோப்புகளும், புனங் காடுகளும் சூழ்ந்திருந்த பட்டணம் என்று, அன்று அழைக்கப் பட்டப் பகுதியே, பண்டைய புகார் நகரம் இருந்த இடம் என்பதைக் கண்டுபிடித்தார்.

     அங்கிருந்த மீனவர்களின் துணையோடு, கட்டுமரத்தில் ஏறி, ஒரு கல் அளவு கடலில் பயணித்தார். கடல் ஆழமின்றி இருந்ததை அறிந்தார். கடலில் மூழ்கி, மூச்சை அடக்கிக் கொண்டு, கடலுள் பயணிக்கும் பயிற்சி பெற்றிருந்த முழுக்காளிகள் சிலரை, கடலினுள் மூழ்கச் செய்து, கடலடி ஆய்வு செய்தார். கடலில் மூழ்கிய மீனவர்கள் பழமையான செங்கற் பகுதிகள், சுண்ணக் காரைகள், பாசி படிந்த பானை ஓடுகள் என பலவற்றை எடுத்து வந்து இவரிடம் வழங்கினர்.

     இவ்வாராய்ச்சியின் பயனாக, கடற்கோளினால் அழிந்து கடலடியில் மறைந்து நிற்கும் நிலப் பரப்பே, காவிரிப் பூம்பட்டிணம், கண்ணகி பிறந்த இடம் என்பதை உறுதி செய்தார்.

     1945 ஆம் ஆண்டில் பூம்புகாரில் ஆய்வினைத் தொடங்கிய இவருக்கு, கால் நடையாக ஆராய்ந்து, ஆராய்ந்து, நடந்து, நடந்து மதுரை வரை செல்வதற்கே பன்னிரண்டு ஆண்டுகள் தேவைப் பட்டன.

     திருப்பரங் குன்றம் செல்லும் சாலையில் பழங்காலத்தில், இடுகாடாக இருந்த கோவலன் திடல் என்ற பகுதியினையும், செல்லத்தம்மன் கோயிலில் இருந்த, கண்ணகி சிலையினையும் கண்டு பிடித்தார்.

      பிறகு, மதுரையில் கோவலனை இழந்த கண்ணகி, சேரநாடு நோக்கிச் சென்ற வழியில், இளங்கோ அடிகள் தந்த குறிப்புகளின் உதவியுடன் நடக்கத் தொடங்கினார்.

     வையை ஆறானது, சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, பாதை வழியாகவே, தடம் மாறாமல் இன்றும் பயணிப்பதை கண்டு கொண்டார்.
     மதுரையில் இருந்து கோட்டையின் மேற்கு வாசல் வழியாக மனமுடைந்து, வெறுப்பு உணர்ச்சியோடு, தனித்துப் புறப்பட்ட கண்ணகி, வையை ஆற்றின் ஒரு கரையைப் பின்பற்றி, மேற்கு நோக்கி சென்று, நெடுவேள் குன்றத்தில் அடி வைத்து ஏறி, மலை மேல் இருந்த, வேங்கை மரச் சோலையில் நின்று தெய்வமானாள்.

    சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் நிறுவி, அதில், தான் இமயத்தில் இருந்து கொண்டு வந்த கல்லில், சிலை செய்து வைத்து வழிபாடு செய்தான். அச் செய்தியினை, அறிந்த கண்ணகியின் செவிலித் தாயும், பணிப் பெண்ணும், தேவந்தி என்கிற தோழியும் சேர்ந்து, கண்ணகித் தெய்வத்தைக் காண, காவிரிப் பூம்பட்டிணத்தில் இருந்து புறப்படுகிறார்கள். இவர்கள் மதுரைக்கு வந்து, அங்கிருந்த மாதரியின் மகள் ஐயை, கண்ணகியைப் பற்றிக் கூறக் கேட்டு, அவளையும் அழைத்துக் கொண்டு, வையை ஆற்றின் ஒரு கரை வழியாகச் சென்று, பெரிய மலையின் மேல் ஏறி, கண்ணகியின் கோயிலை அடைந்தார்கள்.

       மேற்கண்ட இரு செய்திகளும், சிலப்பதிகாரக் கட்டுரைக் காதையிலும், வாழ்த்துக் காதை உரைப் பாட்டுப் பகுதியிலும் இடம் பெற்றுள்ளன.

     எனவே, மேலே கண்ட சிலப்பதிகார வழிகளின் படி மதுரையில் இருந்து, தரை வழியாகச் சென்றால், வையை ஆற்றின் தென் கரையே, அதற்குரிய வழி என்பதைப் பேராசிரியர் சி.கோவிந்தராசனார் ஆராய்ந்து உணர்ந்தார்.

     இவ்வழியைப் பின்பற்றி நடந்தப் பேராசிரியர் சி.கோவிந்தராசனார், 40 மைல்களுக்கும் மேல் பயணித்து, வையை ஆற்றின் தென்புறம் தொடர்ந்து நடந்து சுருளி மலைத் தொடரை அடைந்தார்.

     சுருளி மலைத்தொடரின் மேற்குப் புறக் கோடியில் உற்பத்தியாகும் வையை ஆறு, பள்ளத்தாக்கின் வழியாக, வடக்கு நோக்கி ஓடி, தேனி அருகில், கிழக்கு நோக்கித் திரும்புகிறது. இங்கு குன்னூர் இருக்கிறது. இங்கிருந்து கண்ணகி நடந்த வழியாகச் செல்வதற்கு காட்டிலும், கரம்பிலும், சதுப்பு நிலத்திலும் ஓடி வரும் வையை ஆற்றைப் பின்பற்ற வேண்டும்.

     குன்னூரில் இருந்து வையை ஆற்றைப் பின்பற்றி நடந்து, எதிரில் நிற்கும் மலைத் தொடரின் குறுக்கே, எங்காவது ஓரிடத்தில் மலை மேல் ஏறுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தார்.

வையை ஒரு கரைகொண்டு ஆங்கு நெடுவேள்
குன்றம் அடிவைத்து ஏறினாள்
என்று இளங்கோ அடிகள் கூறியிருப்பதற்கு ஏற்ப, இயற்கையில் அமைப்பு அவ்விடம் இருப்பதை அறிந்தார்.

     மேல் சுருளிமலையின் ஒரு பகுதியை ஆராயத் தொடங்கினார். சுருளி மலைதான் நெடுவேள் குன்றம் என்பதை உறுதி செய்தார்.

      பண்டைக் காலத் தமிழ் மரபுப் படி, முருகனின் பெயர்களுள் ஒன்று நெடுவேள் என்பதாகும். அப்பெயராலேயே, இம்மலைத் தொடர் அழைக்கப் பட்டிருக்க வேண்டும் என முடிவு செய்தார்.

     சித்தன் இருப்பு என்ற பெயருடன் விளங்கிய மலை, ஆவினன் குடியாகி, பின்னர் பொதினி மலையாக மாறி, தொடர்ந்து அதுவும் திரிந்து பழநி மலை என்று ஆனது போலவே, நெடுவேள் குன்றம் என்னும் பெயர், மலையில் இருந்து சுருண்டு விழும் அருவியின் பெயரால் சுருளி மலையாக மாறியிருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார்.

     சுருளி மலைத் தொடராலும், பழநி மலைத் தொடராலும் இணைந்து முப்புறமும் சுவர் வைத்தாற்போல் சூழப்பட்ட பகுதியில், வர்ஷ நாடு எனப்படும், கம்பம் பள்ளத்தாக்கின் காட்டுப் பிரதேசம் பரந்து விரிந்து கிடக்கிறது.

     வர்ஷ நாட்டின் மலைப் அடிவாரப் பகுதிகளை ஆராய்ந்த பேராசிரியர் சி.கோவிந்தராசனார், கீழக் கூடலூருக்குத் தெற்கே உள்ள கோயிலில் கல்வெட்டு ஒன்றினைக் கண்டு பிடித்தார்.

     கி.பி.14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு அது. மங்கல தேவி அம்மன் பூஜைக்கு, சேர மன்னன் ஒருவன், தானமாக வழங்கிய நிலங்களைப் பற்றிய செய்தி, அக்கல்வெட்டில் பொறிக்கப் பட்டிருந்தது.

      பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களின் மனதில் ஒரு மின்னல் வெட்டியது. கண்ணகிக்கு அடைக்கலம் தந்தபொழுது, அவளுக்கு உரிய சிறப்புப் பெயரில் ஒன்றான, மங்கல மடந்தை என்னும் பெயரை கவுந்தி அடிகள், இடையர் குல மங்கையான மாதரியிடம் கூறும் காட்சி, இவருக்கு நினைவிற்கு வந்தது.

     1963 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி, மங்கலதேவி மலை ஆராய்ச்சிக்காக கூடலூருக்குச் சென்றார் பேராசிரியர். அடுத்த நாள் 17 ஆம் தேதி, அதிகாலை நான்கு மணிக்கு, ஊர் மக்கள் சிலரின் துணையுடனும், முத்து மற்றும் கந்தசாமி என்னும், இவரது இரு மாணவர்களோடும் புறப்பட்டார்.

     கூடலூரில் இருந்து மலையின் அடிவாரத்திற்குச் செல்ல மூன்று மைல்கள் நடக்க வேண்டியிருந்தது.  முல்லையாறு, காட்டாறு, களிமண் வழுக்கல், காடு கரம்பு, யானைகளின் புழக்கம் ஆகியவற்றைக் கடந்தாக வேண்டியிருந்த்து. ஏழு மணிக்கு மலை ஏறத் தொடங்கினார்கள். மலையில் தொடர்ந்து உயரும் மூன்று அடுக்குகளையும் ஏறிக் கடக்க வேண்டியிருந்தது. இடையே பற்பல இடையூறுகள்.

     ஒரு வழியாக, மங்கல தேவி மலையின் மேற் பரப்பிற்கு வந்தார்கள். போதைப் புற்காடு எட்டடி உயரத்திற்கு வளர்ந்து மண்டிக் கிடந்தது. அப் புதற்களுக்கு இடையில், ஓரிடத்தில், மூன்று சிற்ப வேலைப் பாடுகளுடன் கூடிய பெரிய, பெரிய கற்களைக் கண்டார்.

     அவற்றுள் இரண்டு கம்பமாக நிறுத்தப் பட்டிருந்த்து. ஒன்று வில் வடிவமாக கம்பத்தின் மீது நிறுத்தப் பட்டிருந்த்து. வில் வடிவமான கல்லின், ஒரு முகப்பில், மகர வாசிகையும, இரு பெண்களின் உருவமும் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப் பட்டிருந்தன. இதை ஆராய்ந்த்தில், இது ஒரு சிற்ப முறையிலான மகர தோரண வாயில் என்பதை அறிந்தார்.

     பேராசிரியருடன், உடன் வந்த உள்ளூர் காரர்களில் ஒரு வேட்டைக் காரரும் இருந்தார். அந்த வேட்டைக் காரர், எல்லோரையும் உரக்கக் கத்துமாறு கூறவே, அனைவரும் தங்களால் இயன்ற வரை ஒலி எழுப்பினர். எதிரே திட்டாகத் தெரிந்த காட்டில் இருந்து எதிரொலி கிளம்பியது.

        எதிரொலி கிளம்பிய திட்டைச் சுட்டிக் காட்டிய வேட்டைக் காரன், அதோ தெரிகிறதே, அதுதான் வேங்கைக் கானல். அதனுள்ளேதான் கோட்டம் உள்ளது, அங்கிருந்துதான் எதிரொலி வருகிறது என்றார்.

      பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களின் நெஞ்சம், ஒரு நிமிடம், துடிப்பதை சற்றே நிறுத்திவிட்டுப் பிறகு துடிக்கத் தொடங்கியது. வேங்கைக் கானல், கோட்டம், ஆகா, ஆராய்ச்சியின் இலக்கைத் தொட்டு விட்டோம். பதினேழு ஆண்டுகால ஆராய்ச்சிக்கு, உழைப்பிற்குப் பலன் கிடைத்து விட்டது. மனம் மகிழ்ச்சியில் குதூகலிக்கத் தொடங்கியது.

     இது எப்படி வேங்கைக் கானல் ஆகும்? கோட்டம் என்றால் என்ன? யார் சொன்னது? என கேள்வி மேல் கேள்விகளால், வேட்டைக் காரனைத் துளைத்தெடுத்தார்.

     அதெல்லாம் தெரியாதுங்க. இதை வேங்கைக் கானல் என்றுதான் கூப்பிடுவாங்க. இதுக்குள்ளேதான மங்கல தேவி குடி. அதுதான் கோட்டம். இதுக்கு இதுதான் பேரு என்றார்.

     வேங்கைக் கானல் என்ற பெயரைக் கேட்டவுடன் கோவிந்தராசனார் அவர்களின் உடல் ஒரு முறை சிலிர்த்தது. உள்ளத்தில் புதிய சக்தி பிறந்தது. கானலில நுழைந்தார். 200 அடி பக்கமுள்ளதாகவும், ஓரளவு சதுரமாக உள்ளதுமாகிய கோட்டத்தைக் கண்டார். கருங்கற்கள் அடுக்கிய நிலையில், யானைகள் உள்ளே வராத வகையில், மதிர் சுவர் அமைந்திருந்தது. உட்பகுதி முழுவதும் புதர் மண்டிக் கிடந்தது. மரங்கள் நிறைந்திருந்தன.

     செடி, கொடிகளால் சூழப்பட்டு சிதைந்த நிலையில் நிற்கும் கற்படைக் கோயில்கள் நான்கு ஆங்காங்கே இருந்தன. இரண்டு கோயில்கள் சிறியதாகவும், அழகுடனும் காட்சியளித்தன. இக் கோயிலின் உட்பகுதி வேரும், விழுதும், தழை மடிசல்களும், மழை நீரும் நிறைந்து, இடிபாடுகளுடன் இடிந்து கிடந்த்து.

     கோட்டத்தின் கிழக்குப் பகுதியில் ஓர் அழகான படிக்கட்டு. அதற்கு முன்னர் அரை குறையாகக் கட்டப் பட்டு, குத்துக் கற்களுடன் நிற்கும் வாயில். கோட்டத்திற்கு வெளியே சிறு சுனை.

    சுனையினைச் சூழ்ந்து, அடர்ந்து இருண்டு நிற்கும் காட்டு வேங்கை மரங்கள்.

     மிகப் பழமையோடு கூடியதும், பலி பீடத்துடன் உள்ளதுமாகிய மூன்றாவது கோயிலின் அருகினில் சென்றார்.

கண்ணகி சிலையின் மேற்பகுதி
கண்ணகி சிலையிருந்த அடிப் பகுதி (பீடம்)

      உள்ளே சுமார் இரண்டடி உயர அளவில், ஒரே கல்லில், இரண்டு கைகளுடன், இடது காலை பீடத்தில் மடக்கி, வலது காலை ஊன்றிய நிலையில், ஒரு பெண்ணின் சிலை.

      அப்பெண்ணின் தலையில் கிரீடம் இல்லை. விரிந்த கூந்தல். இடதுப் புற மார்பு சிறியதாக இருந்தது.

      இதுதான், இதுதான் நண்பர்களே சேரன் செங்குட்டுவன் அமைத்த கண்ணகி சிலை. படிக்கும் நமக்கே, இவ்வளவு மகிழ்ச்சியும், பெருமையும் ஏற்படுகிறதே, இதனைக் கண்டு பிடித்த பேராசிரியர் சி.கோவிந்தராசனார் எவ்விதம் இருந்திருப்பார். உள்ளத்தில் உணர்ச்சிகள் அலைமோத, உற்சாகக் கடலிலே அல்லவா மிதந்திருப்பார். பதினேழு ஆண்டுகால இடையறா முயற்சி அல்லவா?

     கண்ணகி சிலை செய்யப் பெற்றக் கல், திண்மை இல்லாத, ஒருவகைக் கருங்கல். அதனால் அழிந்த அக் கட்டடத்தில் இருந்து , கீழே விழுந்த கற்களால் சிதைந்து போயிருந்தது. 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிலையல்லவா.

     பல நூற்றாண்டுகளாக, இச்சிலை வழிபாட்டிற்கு உரியதாக இருந்துள்ளது என்பதனை, சிலையில் இருந்த வழவழப்பான தேய்வு புலப்படுத்தியது.

     இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில், பல இடங்களில் குறிப்பிடும், நெடுவேள் குன்றமும், பத்தினிக் கோட்டமும் இதுதான் நண்பர்களே. சேரன் செங்குட்டவன் அமைத்த கண்ணகி சிலையும் இதுதான்.
கண்ணகி தீர்த்தம்
கண்ணகி கோயில் கல்வெட்டு




கண்ணகி கோயில், இன்றும்  அதே நிலையில்




கண்ணகி கோயிலும், செல்லும் மலைப் பாதையும்
 (இது இன்றைய நிலைமை)

கோவை நன்னெறிக் கழகத்தின் சார்பில், 21.3.1965 அன்று ம.பொ.சி அவர்கள் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில்தான் முதன்முதலாக, கண்ணகி சிலையினைக் கண்டு பிடித்தது பற்றி வெளியுலகிற்குத் தெரியப் படுத்தினார். தொடர்ந்து பல இதழ்களில் கட்டுரைகள் எழுதினார்.

      இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின் போது, தனது கண்டுபிடிப்புப் பற்றி சிறிய ஆங்கில நூல் ஒன்றினையும் வெளியிட்டார். அன்றைய தமிழக முதல்வர் அவர்கள், 17.5.1971 அன்று பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களைக் அழைத்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற, இளங்கோவடிகள் சிலைத் திறப்பு விழாவின் போது, பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களின் கண்டுபிடிப்பு பற்றி, தமிழக முதல்வரே , தமிழ் உலகிற்கு அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.

தேடிச் சோறுநிதந்  தின்று – பல
     சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக வுழன்று – பிறர்
     வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
    கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
    வீழ்வே னென்று நினைத் தாயோ?
என்று பாடுவாரே பாரதி. அம்மகாகவியின் வரிகளுக்கு ஏற்ப, வேடிக்கை மனிதராய், வகுப்பறையே உலகென்று வீழ்ந்து விடாமல், வீறு கொண்டு எழுந்து, நடையாய் நடந்து, மலைதனில் மறைந்த வரலாற்றிற்கு உயிர் கொடுத்து, உலகறியச் செய்த மாமனிதரல்லவா இவர்.
   
கர்மவீரர் காமராசருடன் கை குலுக்குபவர் பேராசிரியர் சி.கோவிந்தராசனார்


பதினேழு ஆண்டுகள், ஒரே சிந்தனை, ஒரே செயல். சாதித்துக் காட்டிய மனிதரல்லவா பேராசிரியர் சி.கோவிந்தராசனார்.

பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்களை சில நாட்களுக்கு முன்னர்,
இந்தப் பதிவிற்காகச் சந்தித்த போது எடுத்துக் கொண்ட படம்.
(படம் எடுத்து உதவியவர் நண்பர் கரந்தை சரவணன் அவர்கள்)
      பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள், இன்றும் நலமுடன் உள்ளார். அவருக்கு வயது 94. பத்தினி தெய்வம் கண்ணகியை நமக்கு மீட்டுக் கொடுத்தப் பேராசிரியர் சி.கோவிந்தராசனார், இன்னும் நூறாண்டு வாழ வாழ்த்துவோம். அவர்தம் உழைப்பை எந்நாளும் போற்றுவோம்.

       


     


     
பேராசிரியர் சி.கோவிந்தராசனார் குடியரசுத் தலைவரிடம் விருது பெறும் காட்சி

பேராசிரியர் சி.கோவிந்தராசனார் அவர்கள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பாராட்டப்பெறும் காட்சி
---------------------------------

ஆர்வத்தினால், பதிவு சற்று நீண்டு விட்டது.
பொறுத்தருள வேண்டுகிறேன்

என்றென்றும் நட்புடன்,
கரந்தை ஜெயக்குமார்
---------------

07 நவம்பர் 2013

நெஞ்சில் நின்ற திருமணம்

நாம் பிறந்தது, நாம் வளர்ந்தது தமிழ் நாடு – தமிழா
நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு

நாமறிவோம் உலகத்தில்நம் பண்பாடு – தமிழா
நாம்தமிழர் நம்திறத்துக் கெவர்ஈடு?

மூவேந்தர் முறைசெய்தது நம் தமிழ்நாடு – தாய்
முலைப் பாலொடு வீரம் உண்டது செந்தமிழ் நாடு

நாவலரும் காவலரும் ஆண்டதி ந்நாடு – நிமிர்ந்து
நாம் தமிழர் நாம் தமிழர் என்று பாடு
-          பாவேந்தர் பாரதிதாசன்

     நண்பர்களே, நாம் அனைவரும் மாதந்தோறும், வாரந்தோறும், உறவினர் இல்லத் திருமணம், நண்பர் இல்லத் திருமணம் என, ஆயிரக் கணக்கானத் திருமணங்களுக்குச் சென்று வாழ்த்தி மகிழ்வுற்றிருப்போம்.

     திருமண மேடையில், மணமக்கள் அமர்ந்திருக்க, திருமண விழா நிகழ்வுகள் மேடையில் அரங்கேறிக் கொண்டிருக்கும் அதே வேளையில், நாமெல்லாம் உறவினர்களுடனும், நண்பர்களுடனும் மகிழ்வாய் பேசிக்கொண்டிருப்போம்.

     கெட்டி மேளச் சத்தம் கேட்டவுடன், சுதாரித்துக் கொண்டு, அட்சதையினை, மணமக்களை நோக்கித் தூவுவோம். வாழ்த்துவோம்.

     நண்பர்களே, இதற்குக் காரணம் என்ன? சிந்தித்துப் பார்த்தால், இரண்டு காரணங்கள், உடனே மனதில் பளிச்சிடுகின்றன. திருமணம் போன்ற சுப நிகழ்வுகளில்தானே, நமக்கு, நமது உறவுகளை, நண்பர்களைக் காண, பேசி மகிழ வாய்ப்பு கிடைக்கிறது. இது முதல் காரணம்.

     நண்பர்களே, மேடையில் நடைபெறும் நிகழ்வுகளுக்கான விளக்கங்கள், காரண காரியங்கள், நமக்குப் புரியாததும், நமது தாய் மொழியில், திருமணங்கள் நடத்தப் பெறாததுமே இரண்டாவது காரணம் என எண்ணுகின்றேன். சரிதானே நண்பர்களே.

     நண்பர்களே, நமது தாய் மொழியான, தமிழ் மொழியில், முழுவதுமாய் தமிழ் முறையினையேப் பின்பற்றி, ஒரு திருமணம் நடைபெற்றால் எப்படி இருக்கும்?. அத்தகைய ஒரு திருமணத்தைக் காணுகின்ற, கண்டு மகிழ்கின்ற, உணர்ந்து நெகிழ்கின்ற ஒரு வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

     நண்பர்களே, யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம், என நண்பர்களான உங்களுடன், இம் மகிழ்வினைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர, வேறு என்ன வேலை எனக்கு இருக்கிறது?

     வாருங்கள் நண்பர்களே, வாருங்கள். தமிழ் முறைப்படி நடைபெற்ற திருமணத்தைக் காண வாருங்கள், இதோ திருமண அரங்கு, இதோ இருக்கை, அமருங்கள்.

     எனது பெரியம்மாவின் மகள் தமிழ்ச் செல்வி, இவரின் கணவர் புலவர் திருநாவுக்கரசு. இவர் தஞ்சை, வழுத்தூர், சௌகத் இஸ்லாம் மேனிலைப் பள்ளியில் பத்தாண்டுகளுக்கு மேல் தமிழாசிரியராய் பணியாற்றி, சிங்கப்பூர் சென்று, அங்கு இருபதாண்டுகள் தமிழாசிரியராய்ப் பணியாற்றியவர், மிகச் சிறந்த இலக்கியவாதி, எழுத்தாளர், கவிஞர், ஓவியர், இவை எல்லாவற்றையும் விட, தமிழுணர்வாளர் என்பதில் பெருமை கொள்பவர்.

     இவரது மகன் மற்றும் மகளின் பெயரே, இவரின் தமிழுள்ளத்தைப் பறைசாற்றும். மகன் பாவேந்தன், மகள் அன்னம். பாவேந்தன் மருத்துவர். ஹோமியோபதி மருத்துவர். ஹோமியோபதியில் முதுநிலைப் பட்டம் பயின்றவர்.

     பாவேந்தனுக்கும், செல்வி.சபீதா என்பாருக்கும் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சபீதா, பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவரது தந்தை திரு தர்மராசு.

     இவர், தஞ்சை,அய்யம்பேட்டைக்கு அருகில் உள்ள மாகாளி புரத்தில் வசிப்பவர். பெருநிலக் கிழார். இவர் வயலை மட்டும் ஆழ உழுபவரல்ல, தமிழையும் ஆழமாய் நேசிப்பவர், சுவாசிப்பவர்.

     திரு திருநாவுக்கரசர் அவர்களுக்கு, இத் திருமணத்தினை, தமிழ் முறைப்படி, தக்கவரைக் கொண்டு நடத்திட வேண்டும் என்ற பேரார்வம். பெண் வீட்டாரும் மகிழ்வுடன் சம்மதித்தனர்.

     இத்திருமணத்தினை நடத்தி வைத்திட யாரை அழைப்பது என்று எண்ணியபோது, மனதில் தோன்றிய முதல் பெயருக்கும், உருவத்திற்கும் சொந்தக்காரர் புலவர் இரா. இளங்குமரனார்.

     விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப் புத்தூர் அருகே உள்ள வாழவந்தாள் புரம் கிராமத்தில், ராமு, வாழவந்தாள் தம்பதியினரின் மகனாய் தோன்றியவர். தமிழாசிரியராய் பணியாற்றி, ஓய்வு பெற்று, தமிழ்ப் பணிக்கு என்று தம்மையே முழுமையாய் தத்துக் கொடுத்தவர்.

     திருச்சி, அல்லூரில், திருவள்ளுவர் தவச்சாலையினை நிறுவி, வள்ளுவமாய் வாழ்ந்து வரும், அகவை 83 நிறைவுற்ற இளைஞர். திருக்குறளுக்குக் கோயில் எழுப்பியவர். 500 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். 5000 ற்கும் மேற்பட்ட திருமணங்களை, தமிழகத்தில் மட்டுமன்றி, இந்தியாவில் மட்டுமன்றி,  தமிழர்கள் இப்புவிப் பந்தின், எந்தெந்த நாடுகளில் எல்லாம் வாழ்கிறார்களோ, அந்தந்த நாடுகளுக்கு எல்லாம் பறந்து சென்று, தமிழ்த் திருமணங்களை நடத்தி, தமிழின் பெருமையினை உலகுக்கு உணர்த்தி வருபவர்.

    எனவே, தமிழ்க் கடல், உலகப் பெருந் தமிழர், முதுமுனைவர், இரா.இளங்குமரனார் அவர்களைக் கொண்டே, பாவேந்தன் சபீதா திருமணத்தை நடத்துவது என சம்பந்திகள் இருவரும் முடிவு செய்தனர்.

     புலவர் இரா.இளங்குமரனார் அவர்களை நான் நன்கறிவேன். கரந்தைத் தமிழ்ச சங்க விழாக்களுக்காக, பலமுறை அவரை, கரந்தைக்கு அழைத்து வந்திருக்கிறேன். இதன் காரணமாக, பெரியவர் இளங்குமரனார் அவர்களுடன் பலகும் நல் வாய்ப்பினையும் பெற்றவன் நான்.

     இருப்பினும் புலவர் கந்தசாமி அவர்களைத் தொடர்பு கொண்டேன். ஓய்வு பெற்றத் தமிழாசிரியர்,. தமிழுக்கென்றே வாழும் தகைமையாளர். அய்யா இளங்குமரனார் அவர்களுடன் தொடர்ந்து, தொடர்பில் இருப்பவர். எனவே புலவர் கந்தசாமி அய்யா அவர்கள் மூலமாகவே, தமிழ்க் கடல் இளங்குமரனார் அவர்களைத் தொடர்பு கொண்டு, திருமணத்தினை நடத்தி வைத்திட ஒப்புதல் பெற்றோம்.

     பாவேந்தனின் தந்தையார் திரு திருநாவுக்கரசு, சபீதாவின் தந்தையார் திரு தர்மராசு, ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு பாலு மற்றும் நான் ஆகிய நால்வரும் இருமுறை அல்லூர் சென்று, உலகப் பெருந்தமிழரைச் சந்தித்தோம்.

     ஜுன் மாதம் 12 திருமண நாள். கும்பகோணம் அசூர் பிரிவுச் சாலையில் உள்ள டி.எஸ்.மகால்.

      காலை மணி 8.45. ஒரு இண்டிகா கார் உள்ளே நுழைகிறது. புலவர் இரா.இளங்குமரனார் வந்துவிட்டார். திருமண நேரம் காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள். ஆனாலும் மணமக்கள் வீட்டார், தனது வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கக் கூடாது, என்ற உயரிய எண்ணத்தினால், முன்னதாகவே வந்து விட்டார். இவர்தான் இளங்குமரனார்.

     மணமக்களின் விட்டார் வரிசையாக நின்று, கரம் கூப்பி வணங்கி வரவேற்றனர். மலர்ந்த முகத்துடன் வரவேற்பை ஏற்றவாறு, அரங்கினுள் நுழைந்து அமர்கின்றார்.

     உறவினர்களும் நண்பர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இரண்டாயிரம் பேர் அமரக்கூடிய திருமண மண்டபம. நிரம்பி வழிந்தது. மண்டபத்திற்கு வெளியிலும், அமைக்கப்  பட்டிருந்த பந்தலில் நூற்றுக் கணக்கானோர் அமர்ந்திருக்க, எங்கள் குடும்பத்தின் மூத்தோர், உறவிற்குப் பெருமை சேர்த்து வரும் திருமிகு ஜி. ரெங்கசாமி மூப்பனார், திருமிகு ஜி.சந்திரசேகர மூப்பனார், திருமிகு எஸ்.சுதாகர் மூப்பனார்,  திருமிகு எஸ். சுரேஷ் மூப்பனார் முதலியோர் வருகை தந்து, முதல் வரிசையில் அமர்கின்றனர்.

     காலை 10.45 மணிக்கு திருமண விழா தொடங்கியது. மேடையில் மண மக்கள் அமர்ந்திருக்க, அவர்களுக்கு அருகே, ஐந்தடி உயரத்தில் திருவள்ளுவர் படம்.

     உறவினர்களே, நண்பர்களே இத் திருமண விழாவினை, உலகப் பெருந் தமிழர், தமிழ்க் கடல் இளங்குமரனார் அய்யா அவர்கள் நடத்தி வைப்பார்கள் என்று ஒலிப் பெருக்கியின் முன் நின்று நான் அறிவித்தேன். இளங்குமரனார் அய்யா இருக்கும் மேடையில், ஒலிப் பெருக்கியின் முன் நின்று, தமிழ்க் கடலின் பெயரினை உச்சரிக்கக் கிடைத்த வாய்ப்பினை எண்ணி மெய்சிலிர்த்தேன்.


     அடுத்ததாக மணமகன் மருத்துவர் பாவேந்தனின் தந்தையார் வரவேற்வுரை ஆற்றினார். தமிழ்க் கடல் இளங்குமரனார் அய்யா அவர்கள் ஒலிப் பெருக்கியின் முன் வருகிறார்.


அன்புடையோரே வணக்கம்.

      வைத்துள்  வாழ்வாங்கு  வாழ்பவன்  வானுறையும்
      தெய்வத்துள் வைக்கப்  படும்

என்ற குறளினை வள்ளுவர் இல்வாழ்விலே கூறினார். காரணம் என்ன தெரியுமா? மண்ணுலகிலேயே, விண்ணுலக இன்பத்தைக் காணலாம் என்பதால்.

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை

என உரைத்தவர் திருவள்ளுவர்,

பெண்ணிற் பெருந்தக்க யாவுள?

என அறத்துப் பாலில் வினா எழுப்பி,

பெண்ணே பெருமையுடைத்து

எனப் பொருட் பாலில் விடை கூறி,

பெண்ணிற் பெருந்தக்கது இல்

என இன்பத்துப் பாலில் உறுதியளித்தவரும் திருவள்ளுவரே.

     வாழ்க்கையில் அவனுக்கு அவள் துணையும், அவளுக்கு அவன் துணையும் ஆதல் வேண்டும் என வாழ்க்கைத் துணை நலம் உரைத்தவர் திருவள்ளுவர்.

     இல் வாழ்க்கை இனிய வாழ்க்கை, இல்லாமை என்பது இல்லாத வாழ்க்கை என்பதை நிலைநாட்டுபவள் இல்லாளே, என்றவரும் அவர்தான். எனவே மணமக்கள் இப்பொழுது திருவள்ளுவருக்கு மலர் தூவி வணங்குவார்கள் எனக் கூறினார்.

       மணமக்கள் இருவரும் தங்களது இருக்கையில் இருந்து எழுந்து, திருவள்ளுவரின் பாதக் கமலங்களில் மலர் தூவி, இரு கரம் கூப்பி வணங்கினர்.



      அடுத்ததாக மணமக்களின் பெற்றோர் மேடைக்கு அழைக்கப் பெற்றனர். மணமகன் தனது தாய்க்கும், தந்தைக்கும் மாலை அணிவித்து, பாதம் பணிந்து வாழ்த்துப் பெற்றார். மணமகளும் அவ்வாறே, தனது தாய்க்கும், தந்தைக்கும் மாலை அணிவித்து, பாதம் பணிந்து வாழ்த்துப் பெற்றார். பெற்றோர் நால்வரும், தமது மக்கள் பெரு வாழ்வு வாழ வாழ்த்தினர்.

     வாழ்க்கை எதுவென்றால், பலரும் பலவகையாகக் கூறுவர், ஆனால் தமிழ்ச் சான்றோர் கூறுவர்,
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை

என்று, இவ்விழா இரு மனங்கள் இணையும் விழா, இரு குடும்பங்கள் இணையும் விழா, இரு உறவுகள் இணையும் விழா, இதோ மேடையில் மணமக்கள் இருவர், மணமகனின் பெற்றோர் இருவர், மணமகளின் பெற்றோர் இருவர் என அறுவர் நின்கின்றனர். இதுதான் ஆறு முகம். ஆறு முகமும் ஒரு முகமாய் இணையும் விழா,

      பெற்றோர் மங்கல நாண் எடுத்துத் தர, இக்குடும்பத்தின் மூத்த உறவினர் பெருந்தகை அய்யா ஜி.ரெங்கசாமி மூப்பனார் அதைப் பெற்று, மணமகனிடம் தர, மணமகன், மணமகளின் கழுத்தில் மங்கல நாண்  சூட்டுவார் என்றார்.

       மணமக்களின் பெற்றோர் மங்கல நாணை வணங்கி, தங்களின் பிள்ளைகள் நிறை வாழ்வு வாழ வாழ்த்தி, குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பெருந்தகை ஜி. ரெங்கசாமி மூப்பனார் அவர்களிடம் வழங்க, அவரும் வாழ்த்தியபடி மணமகனிடம் வழங்கினார்.

     முழுவம், முரசம் முதலிய மங்கல இசை முழங்க, பாவேந்தன் சபீதாவிற்கு மங்கல நாண் அணிவித்தார். மங்கல நாண் சூட்டி, பாவேந்தன் சபீதாவிற்கு மாலை அணிவிக்க, சபீதா பவேந்தனுக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து மணமக்கள் இருவரும் இடம் மாறி அமர்ந்தனர்







     சென்ற நிமிடம் வரை இவர் வேறு. அவர் வேறு. ஆனால் இந்நிமிடம் முதல் இருவரும்  வேறுவேறல்ல. இருவரும் ஒன்றானவர்கள். வாழ்க்கைத் துணை நலமாய் இணைந்தவர்கள். பாவேந்தன் தனது இடத்தை சபீதாவிற்கும், சபீதா தனது இடத்தைப் பாவேந்தனுக்கும் அளித்தார். இன்று முதல் எனதெல்லாம் உனது, உனதெல்லாம் எனது. எல்லாமே நமது என்பதைக் குறிப்பிடும் வகையில் மணமக்கள் இடம் மாறி அமர்ந்தனர்.

       பின்னர் மணமக்கள் இருவரும் எழுந்து நின்று, சுற்றம் சூழ வருகை தந்து, வாழ்த்த வந்திருந்த உறவினர்களையும், நண்பர்களையும் நோக்கி, இரு கரம் கூப்பி வணங்கினர்.

      கலகல, சலசல, படபட, மடமட என்பவை இரட்டைச் சொற்கள். இரட்டைக் கிளவிகள் எனப்படும். இவற்றைப் படிக்காத பாமரர் கூட தனித் தனியாக பிரித்துக் கூறமாட்டார். ஏனெனில் இச் சொற்கள் பிரித்தால் பொருள் தராது. இணைந்திருந்தால் மட்டுமே இனிமை தரும், பொருள் தரும்.

      கணவனும் மனைவியும் இரட்டைக் கிளவி போல் அமைய வேண்டும், எனவே

இரட்டைக் கிளவி போல் பிரியா வாழ்வினர்

என்றார் பாவேந்தர். அந்தப் பாவேந்தரின் வரிகளாலேயே, இப் பாவேந்தனையும், சபீதாவையும் வாழ்த்துகிறேன்.

     நிலத்திற்கு மேலே பொலிவுடன் தெரிவது மரம். பூவும், இலையும், காயும், கனியும், கிளையும் வெளிப்படத் தெரியும். அவற்றாலா மரம் நிற்கிறது? வளர்கிறது? வளம் தருகிறது? உரமும், ஊட்டமும் நீரும் நிலையும் பெற வாய்ப்பது வேரால் அல்லவா? வேர்ப்பிடி இல்லாமல், நீர்ப்பிடி உண்டா? நிலைப் பிடி உண்டா? அதனால்தான்,
ஆண் மரம், பெண் வேர்

என்றார் பாவேந்தர்.அந்தப் பாவேந்தரின் வார்த்தைகளாலேயே, சபீதாவை வாழ்த்துகிறேன்,
வேராய் விளங்கி, குடும்பத்தைக் காப்பாய்

என வாழ்த்துகிறேன் என இளங்குமரனார் வாழ்த்தினார்.

     பின்னர் அரங்கில் நிறைந்திருந்தோரை நோக்கி,
உறவினர்களே, நண்பர்களே, இதோ உங்கள் முன் மணமக்கள் இருகரம் கூப்பி வணங்கி நிற்கின்றனர். மணமக்களை நாமும் வாழ்த்துவோமாக, என்று கூறி
மணமக்கள் என்று கூற, அரங்கில் இருந்தோர் வாழ்க வாழ்க என முழங்கினர்.

மணமக்கள்
வாழ்க வாழ்க

மணமக்கள்
வாழ்க வாழ்க

மணமக்கள்
வாழ்க வாழ்க

வாழ்த்தொலியால் அரங்கம் அதிர்ந்த்து.

     குடும்பத்தின் குத்து விளக்கு மனைவி என்பர். ஒற்றைத் திரி, எத்தனை திரிகளுக்கு ஒளி வழங்குகிறது. ஒளி வழங்கும் திரி, தன் ஒளியில் குறைவு படுகிறதா? இருண்ட வாழ்வை ஒளி வாழ்வு ஆக்குவது பெண்மையே என்பதைக் கண்டது பண்டைத் தமிழகம். அதனால்தான்

மனைக்கு விளக்கம் மடவார்

என்றனர் நமது முன்னோர். இதோ மணமக்கள் இப்பொழுது குடும்ப விளக்கை ஏற்றுவர் என்று கூறிய தமிழ்க் கடல், மணமக்களை குடும்ப விளக்கேற்ற அழைத்தார்.

       மணமக்கள் குடும்ப விளக்கேற்றினர்.

     அடுத்து மணமக்கள் இருவரும், பெற்றோரின் தாழ் பணிந்து வணங்க, பெற்றோர் நால்வரும், உள்ளம் பூரித்து, மனதில் மகிழ்ச்சி பொங்க, அன்றலர்ந்த மலர் போல் மலர்ந்த முகத்துடன், மலர் தூவி, தங்களின் செல்வங்களை வாழ்க, வாழ்க என வாழ்த்தினர்.

     அவைமுழுதும் நிரம்பியிருக்கும் உறவினர்களே, நண்பர்களே, மண மக்களைப் பெற்றோர்கள் மட்டுமே மலர் தூவி வாழ்த்துகிறார்களே, அரங்கில் அமர்ந்திருக்கும் நமக்கு அட்சதை வழங்கவில்லையே என நினைக்கலாம். தாங்கள் அட்சதையைத் தூவி எறிய, தங்களின் முன் அமர்ந்திருப்போர்களின் தலையில் அல்லவா அட்சதை போய் சேருகிறது. இதோ நீங்கள் அமர்ந்திருக்கும் இடம் நாடி, மணமக்கள் வாழ்த்து பெற வருகிறார்கள். மணமக்களுக்கு முன், மலர் தட்டு ஏந்தியவாறு இருவர் வருவர். மலர் தூவி வாழ்த்துக்கள், மனமார வாழ்த்துங்கள் என்றார்.

      மணமக்கள் இருவரும், மேடையினின்று இறங்கி, அரங்கு முழுவதும் வலம் வந்தனர். உறவினர்கள் , நண்பர்கள் அனைவரும் மலர் தூவி வாழ்த்த அரங்கே மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியது.

     தமிழர் திருமணம், தமிழ்த் திருமணமாய் அரங்கேறிய காட்சி, அரங்கில் இருந்தவர்களின் மனங்களில் நீங்கா இடத்தினைப் பிடித்து விட்டது. மணவிழாவின் ஒவ்வொரு நிகழ்விற்கும், விளக்கம் கூறி, காரண காரியங்களை எடுத்துரைத்து, தமிழ்க் கடல் இளங்குமரனார் நடத்திக் காட்டிய விதமே, தனியொரு அழகாய் திருமண விழாவிற்கு மெருகூட்டியது,

     எத்துனையோ திருமண விழாக்களுக்குச் சென்றிருந்தாலும், பாவேந்தன் சபீதா திருமணம், தமிழ்த் திருமணமாய், தனித் தமிழ் திருமணமாய், திருவள்ளுவரின் நெறி நின்று நடைபெற்றது, பண்டைத் தமிழரின் பெருமையினை, தமிழரின் உயர்ந்த உன்னத வாழ்வியல் நெறிகளை, இன்றைய உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதாய் அமைந்த்து.

                பிறக்கும்  போதே  பெருமை  யோடு
              பிறந்தவன் தமிழன் – தமிழ்ப்
              பெருங்குடி தன்னிற் பிறந்தவன் தமிழன்

              முதலில் தோன்றிய  மனிதன்  தமிழன்
              முதல்மொழி  தமிழ்மொழி  - ஆதலால்
              புதுவாழ்  வின்வேர்  தமிழர் பண்பாடே

என்று முழங்குவார் பாவேந்தர். அத்தகு பெருமை வாய்ந்த பாவேந்தரின் வரிகளாளேயே நாமும் மணமக்களை வாழ்த்துவோம்.

                  மணமகளாரே,  மணமகனாரே
                  இணைந்தின்  புற்றுநன்  மக்களை  ஈன்று
                  பெரும்புகழ்  பெற்றுநீ  டூழி
                  இருநிலத்து  வாழ்க  இனிது.