19 செப்டம்பர் 2013

சிலம்பே முழங்கு

     நண்பர்களே, கடந்த வாரம் நாமெல்லாம் தஞ்சைப் பெரியக் கோயிலைக் கண்டு களித்தோம். பெரியக் கோயிலில் நாம் செலவிட்ட நேரம், மிகுந்த மகிழ்ச்சியினையும், மன நிறைவினையும், நல் அமைதியினையும் அளித்திருக்கும் என நம்புகின்றேன்.

     நண்பர்களே, இந்த வாரம் மிகச்சிறந்த தமிழறிஞர் ஒருவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகின்றேன். அறிமுகப்படுத்துகிறேன் என்ற வார்த்தையே தவறுதான், ஏனெனில் நீங்கள் அனைவரும் இவரை நன்கு அறிந்திருப்பீர்கள், உலகம் அறிந்த தமிழர் இவர்.

     நல்லோரைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசுவதும், மீண்டும் மீண்டும் கேட்பதும் இன்பம்தானே. அந்த இன்பத்தை, இனிய செய்திகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன், வாருங்கள் நண்பர்களே, தமிழறிஞரைச் சந்திப்போம்.

கனியிடை  ஏறிய  சுளையும் – முற்றல்
கழையிடை  ஏறிய  சாறும்
பனிமலர்  ஏறிய  தேனும் – காய்ச்சுப்
பாகிடை  ஏறிய  சுவையும்
நனிபசு  பொழியும்  பாலும் – தென்னை
நல்கிய  குளிரிள  நீரும்
இனியன  என்பேன்  எனினும் – தமிழை
என்னுயிர்  என்பேன்  கண்டீர்
எனத் தமிழை தனது உயிருக்கு ஈடாக வைத்துப் பாடுவார் பாவேந்தர் பாரதிதாசன். பாவேந்தரின் இவ்வரிகளுக்கு ஏற்ப தமிழே தன்னுயிராய், தமிழ் மொழியே தன் வாழ்வாய் கொண்டு வாழ்ந்து வருபவர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள்.
 
சிலம்பொலியார்
     தமிழை நேசிப்பவர் பலருண்டு. இவரோ தமிழையே சுவாசிப்பவர். அரசுப் பள்ளியில் ஆசிரியராய் தன் வாழ்வினைத் தொடங்கி, தலைமையாசிரியர், தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பதிப்புத் துறை இயக்குநர், பதிவாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர், செம்மொழி எண்பேராயக் குழு உறுப்பினர் எனத் தமிழோடு இணைந்த, இரண்டறக் கலந்த வாழ்வினை வாழ்ந்தவர், இன்றும் வாழ்ந்து வருபவர்.எளியநடை  யில்தமிழ்நூல்  எழுதிடவும்  வேண்டும்
    இலக்கணநூல்  புதிதாக  இயற்றுதலும் வேண்டும்
வெளியுலகில்,  சிந்தனையில்  புதிது  புதிதாக
    விளைந்துள்ள எவற்றினுக்கும்  பெயர்களெலாங்  கண்டு
தெளிஉறுத்தும்  படங்களோடு  சுவடியெலாம்  செய்து
செந்தமிழைச்  செழுந்தமிழாய்ச் செய்வதுவும்  வேண்டும்

இலவச  நூற்  கழகங்கள்  எவ்விடத்தும்  வேண்டும்
    எங்கள்தமிழ்  உயர்வென்று  நாம்சொல்லிச்  சொல்லித்
தலைமுறைகள்  பலகழித்தோம்  குறைகளைந்தோ  மில்லை
    தகத்தகாயத்  தமிழைத்  தாபிப்போம்  வாரீர்
என்ற பாவேந்தரின் அழைப்பிற்கிணங்க, எண்ணற்ற இலக்கிய நூல்களையும், கணக்கற்ற இலக்கியக் கட்டுரைகளையும், மூன்று உலகத் தமிழ் மாநாட்டு மலர்களையும், தமிழன்ணைக்கு அணிவித்து அழகு பார்த்தவர்.

     நாம் அனைவரும் நூல்களை விரும்பிப் படிப்பவர்கள்தான். ஆனால் எத்துனை பேர் படித்தவற்றைப் பிறருடன் பகிரிந்து கொள்ளுகிறோம், படித்தவற்றைப் பற்றி எழுதுகிறோம் என்று பார்த்தால் மிகச் சிலரே மிஞ்சுவார்கள்.

     ஆனால் சிலம்பொலியாரோ, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களுக்கு அணிந்துரை வழங்கியவர். இவர் வழங்கிய அணிந்துரைகள் மட்டுமே, சிலம்பொலியார் அணிந்துரைகள் என்னும் தலைப்பில் ஆறு தொகுதிகள், இதுவரை வந்துள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

     சிலப்பதிகாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, சிலப்பதிகாரத்தை தன் உதிரத்தோடு ஒன்றெனக் கலந்தவர். சிலப்பதிகாரத்தைத் தமிழகத்தின் பட்டி, தொட்டி எங்கும், கடந்த 60 ஆண்டுகளாக பரப்பி வருபவர். இவர் சிலப்பதிகாரத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினால், கேட்போர் தம்மையே மறப்பர். இதுவரைத் தாங்கள் அறிந்திராத ஆனந்தப் பெரு வெளியில், ஆகாயத்தில் மிதப்பர். இவரின் வார்த்தையின் இனிமையில் மதி மயங்குவர். எனவேதான் சிலம்பொலி என்னும் சீர்மிகு பட்டம், இவரை நாடி வந்து பெருமையடைந்த்து.

     பேரறிஞர் அண்ணா, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., முத்தமிழ் அறிஞர் கலைஞர் என மூன்று முன்னாள் தமிழக முதல்வர்களின் பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்கும் உரியவர்.
                          பொன்னை நாடார்
                          பொருளை நாடார்
                          தீயன நாடார் என்றும்
                          சிறுமைகள் நாடார்
                          வாழ்வில் மாயங்கள் நாடார்
                          வெற்று மந்திரம் நாடார்
                          நீண்ட வாய்கொண்டு
                          மேடை சாய்க்கும்
                          வரட்டு வார்த்தைகள் நாடார்

என்ற கண்ணதாசனின் பாடல் வரிகள் கர்ம வீரர் காமராசருக்கு மட்டுமல்ல, சிலம்பொலியாருக்கும் கச்சிதமாய்ப் பொருந்தும்.

     நண்பர்களே, இச்செய்தி தங்களுக்கு வியப்பளிக்கலாம், சென்னையில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தும், இதுவரை ஒரு வீடோ, ஒரு காரோ இவர் சம்பாதித்தது இல்லை. பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை வீட்டிலும், தமிழைத் தனது உதிரத்திலும், ஏராளமான தமிழன்பர்களின் அன்பு என்னும் அசையாத் சொத்தையும்தான் இவர் இதுவரை சேர்த்து வைத்துள்ளார்.

      ஆம் நண்பர்களே, இவர் பணத்தினை என்றுமே நாடியவரல்ல. பணித்தினை வெறும் வண்ணக் காகிதமாகவே பார்த்துப் பழகியவர் இவர். சிலம்பொலியார் செல்வத்தின் திசை நோக்கி என்றுமே திரும்பிப் பாராதவர். என்றுமே தமிழையேப் பெரும் செல்வமாய் போற்றி வாழ்பவர்.

     சிலம்பொலியார் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராய் அமர்ந்து சீர்மிகு பணியினை ஆற்றிய கால கட்டத்தில், 1984 இல் தமிழக அரசானது,     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவராய் அமர்ந்து, முப்பதாண்டுகள் ஒப்பிலாப் பணியாற்றிய செந்தமிழ்ப் புரவலர்,  தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் அவர்களின் நூற்றாண்டு விழாவினை, அரசு விழாவாக நடத்திட முடிவு செய்தது.


    
சிலம்பொலியாரிடம், நூற்றாண்டு விழாவினை நடத்தும் பொறுப்பினை தமிழக அரசு வழங்கியது. தேவையான நிதியினையும் ஒதுக்கீடு செய்தது.

     கரந்தைத் தமிழ்ச் சங்க வரலாற்றில், பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய விழாவாக, உமாமகேசுவரனாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப் பெற்றது.

     சிலம்பொலியாரின் தமிழ் உணர்விற்கும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பேரில், அவர் கொண்டிருக்கும், வற்றா தமிழ்ப் பாசத்திற்கும் எடுத்துக்காட்டாய் அவ்விழா அமைந்தது.

     கரந்தைத் தமிழ்ச் சங்க வளாகத்திலேயே, தமிழவேளின் நூற்றாண்டு விழாவினை அரங்கேற்றிய சிலம்பொலியார், விழாவின் நிறைவில், இந்நூற்றாண்டு விழாவிற்கென தமிழக அரசு குறிப்பிட்ட நிதியினை ஒதுக்கியது. விழா முடிந்து, விழாவிற்குரிய அனைத்துச் செலவினங்களுக்கும் உரிய தொகைகள் வழங்கப்பட்டு விட்டன. ஆயினும் ரூ.20,000 மீதமிருக்கின்றது. இத்தொகையினை, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சிக்காக வழங்குகின்றேன் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறி ரூ.20,000 ஐ கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கே வழங்கினார்.

      தோன்றிய நாள் தொடங்கி, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினை எள்ளளவும் விட்டு விலகாமல், இணைபிரியாத் தோழமையாய், இணைந்தே வளர்ந்தது நிதிப் பற்றாக்குறை என்னும் கொடு நோயாகும்.

     சிலம்பொலியார் வழங்கிய தொகை, நிதிப் பற்றாக்குறை என்னும் கொடு நோய்க்குப், பெரு மருந்தாய் அமைந்தது.

     ஆம். பெரு மகனார் சிலம்பொலியார் வழங்கிய தொகையினைக் கொண்டுதான், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், ஆசிரியர் பயிற்சி வகுப்பு தொடங்கப் பெற்றது.

     ஆசிரியர் பயிற்சி வகுப்பினால்தான், நிதி என்னும் நல்லாள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில், தன் திருவடிகளைப் பதித்தாள்.

     இன்று, காணும் இடமெல்லாம் கட்டிடங்கள், புதுப் புதுக் கல்வி நிறுவனங்கள், புதுப் புது ஆய்வகங்கள், கலைக் கல்லூரியில் புதுப் புது பிரிவுகள் என, கரந்தைத் தமிழ்ச் சங்கம் ஆல விருட்சமாய், கிளைகள் பல பரப்பி, தழைத்திருந்தாலும், இவ் வளர்ச்சிக்கு விதை விதைத்தப் பெருமைக்கு உரியவர் சிலம்பொலியாரே ஆவார்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிட்டியதால், பலமுறை சிலம்பொலியாரிடம் பழகும் நல் வாய்ப்பினைப் பெற்றவன் நான் என்பதைப் பெருமையோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும் விழாக்களுக்காகப் பல தமிழறிஞர்களைத் தொடர்பு கொண்டு அழைத்தல், தங்க வைத்தல், விழாவில் பங்கேற்கச் செய்தல், வழியனுப்புதல் என பல பணிகளை, நானும், எனது நண்பரும் முதுகலை ஆசிரியருமான திரு வெ.சரவணனும் மேற்கொள்வோம்.

     பலமுறை சிலம்பொலியாரை அழைத்திருக்கின்றோம். நான் தற்சமயம் நாமக்கல்லில் இருக்கின்றேன். விழாவிற்கு உரிய நேரத்தில் வந்து விடுகிறேன் என்பார். சொல்லிய வண்ணமே வந்து, விழாவினைச் சிறப்பிப்பார். நாமக்கல்லில் இருந்து வாடகைக் காரிலேயே வருவார்.

     விழா முடிந்து விடைபெறும் வேளையில், சிலம்பொலியார் வாடகைக் காரில் அமர்ந்ததும், அவர் அருகில் சென்று, ஒரு சிறு தொகை அடங்கிய உறையினை அவரிடம் நீட்டுவேன். ஐயா, நாமக்கல்லில் இருந்து வாடகைக் காரிலேயே வந்திருக்கிறீர்கள், பயணச் செலவிற்காக இச்சிறு தொகையினைத் தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டுவேன்.

     அப்பொழுது சிரிப்பார் பாருங்கள் ஒரு சிரிப்பு, அந்தச் சிரிப்பிலே சிலம்பின் ஒலியினை, ஓசையினை பலமுறை கேட்டிருக்கின்றேன். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் பேசுவதற்குப் பணமா? வேண்டாம் ஐயா, மிக்க நன்றி, வருகிறேன் என இருகரம் கூப்புவார்.

     இவ்வார்த்தைகளை ஒரு முறை, இரு முறை அல்ல, பலமுறை கேட்டு மெய் மறந்திருக்கின்றேன். நண்பர்களே கூறுங்கள், இதுபோன்ற தமிழறிஞரை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா, சந்தித்திருக்கிறீர்களா?

தன்பெண்டு  தன்பிள்ளை  சோறு வீடு
சம்பாத்யம் இவையுண்டு  தானுண் டென்போன்
சின்னதொரு  கடுகுபோல்  உள்ளங்  கொண்டோன்
தெருவார்க்கும்  பயனற்ற சிறிய வீணண்
கன்னலடா  என்சிற்றூர்  என்போ  னுள்ளம்
கடுகுக்கு  நேர்மூத்த  துவரை  யுள்ளம்
தொன்னையுள்ளம்  ஒன்றுண்டு  தனது  நாட்டுச்
சுதந்தரத்தால்  பிறநாட்டைத்  துன்பு றுத்தல்

ஆயுதங்கள்  பரிகரிப்பார், அமைதி காப்பார்
அவரவர்தம்  வீடுநகர்  நாடு  காக்க
வாயடியும்  கையடியும்  வளரச்  செய்வார்
மாம்பிஞ்சி  யுள்ளத்தின்  பயனும்  கண்டோம்
தூயஉள்ளம் அன்புள்ளம்  பெரிய உள்ளம்
தொல்லுலக  மக்களெலாம்  ஒன்றே  என்னும்
தாயுள்ளம்  தனிலன்றோ  இன்பம், ஆங்கே
சண்டையில்லை  தன்னலந்தான் தீர்ந்த தாலே

என்று பாடுவார் பாரதிதாசன். தன்னலமற்ற தூய உள்ளத்திற்கு, தாயுள்ளத்திற்கு, தமிழுள்ளத்திற்குச் சொந்தக்காரரான, சிலம்பொலியார் இம்மாதம் செப்டம்பர் 24 இல், அகவை 85 இல் தடம் பதிக்கிறார்.

    சிலம்பொலி செல்லப்பனார் இன்னும் நூறாண்டு வாழ வேண்டும், சிம்மக் குரலால் முழங்க வேண்டும் என இந்நன்னாளில் நாமும் வாழ்த்துவோமா நண்பர்களே.

வாழ்க சிலம்பொலி செல்லப்பனார்
17 கருத்துகள்:

 1. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களுக்கு அணிந்துரை வழங்கியது வியக்க வைத்தது... என்னே சிறப்புகள்... சிலம்பொலி செல்லப்பனார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 2. //ஆனால் சிலம்பொலியாரோ, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களுக்கு அணிந்துரை வழங்கியவர். இவர் வழங்கிய அணிந்துரைகள் மட்டுமே, சிலம்பொலியார் அணிந்துரைகள் என்னும் தலைப்பில் ஆறு தொகுதிகள், இதுவரை வந்துள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.//

  அடேங்கப்பா ! அவருக்கு எம் வாழ்த்துகள்.

  அருமையான ஒருவரைப்பற்றி தாங்கள் கொடுத்துள்ள இந்தப் பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 3. தன்னலமற்ற தூய உள்ளத்திற்கு, தாயுள்ளத்திற்கு, தமிழுள்ளத்திற்குச் சொந்தக்காரரான, சிலம்பொலியார் இம்மாதம் செப்டம்பர் 24 இல், அகவை 85 இல் தடம் பதிக்கிறார்.

  பல்லாண்டுகள் வாழ்ந்து
  தமிழ்த்தொண்டுகள் புரிய வாழ்த்துவோம்..!

  பதிலளிநீக்கு
 4. ஆயிரம் நூல்களுக்கு அணிந்துரை (ஆறு தொகுதிகள்!) வழங்கியவர் என்பது முதற்கொண்டு சிலம்பொலியார் பற்றிய அத்தனை தகவல்களும் வியக்க வைத்தது. அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம். தங்கள் பகிர்வுக்கு பாராட்டுக்களும் நன்றியும்!

  பதிலளிநீக்கு
 5. பெயரில்லா19 செப்டம்பர், 2013

  வணக்கம்
  ஐயா

  வியக்க வைக்கும் பதிவாக உள்ளது பல விடயங்கள அறியக்கிடைத்தமைக்கு மிக நன்றி பதிவு அருமை வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு

 6. சிலம்பொலி செல்லப்பனார் பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன். அரிய பல தகவல்கள் உங்கள் பதிவு மூலம் கிடைக்கப் பெற்றேன். நன்றி

  பதிலளிநீக்கு
 7. நல்லோரைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசுவதும், மீண்டும் மீண்டும் கேட்பதும் இன்பம்தான் ஐயா.
  நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 8. THIS WEEK VERY NICE.THRU SILAMPOLIAR A GREAT PERSON IN THIS WORLD.I WISH TILL IN MY LIFE.THANK YOU SO MUCH SIR.

  பதிலளிநீக்கு
 9. வருகின்ற செப்டம்பர் 24ந்தேதி பிறந்த நாள் காணும் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!

  அவரைப்பற்றி அழகு தமிழில் எழுதியிருக்கும் உங்களுக்கும் ம‌னம் நிறைந்த வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 10. அற்புதமான கட்டுரை. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
  உங்கள் கட்டுரை மூலம் நிறைய தமிழ் அறிஞர்கள் பற்றி, தமிழ் பற்றி தெரிந்து கொள்கிறேன். உங்களது புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.
  வருகின்ற செப்டம்பர் 24ந்தேதி பிறந்த நாள் காணும் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
  மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி திரு கரந்தை ஜெயகுமார்.

  பதிலளிநீக்கு
 11. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/4.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
 12. ஐயா அவர்களைப்பற்றிய அரிய தகவல்களை அளித்தமைக்கு நன்றி!..ஐயா அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து மேலும் புகழ் பெற வேண்டும்!..

  பதிலளிநீக்கு
 13. தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நான் பணியில் சேர்ந்த காலகட்டத்தில் (1982) ஐயா அவர்கள் பதிப்புத்துறை இயக்குநர் பொறுப்பிலும், பதிவாளர் பொறுப்பிலும் இருந்தார். பணியில் சேர்ந்த மூன்றாம் நாள் நான் தட்டச்சு செய்த ஓர் ஆங்கிலக் கடிதத்தை அனைத்துப் பணியாளர்களிடமும் காண்பித்து கடிதம் என்றால் இவ்வாறாகத் தட்டச்சு செய்யப்படவேண்டும் என்று கூறியது இன்னும் என் நினைவில் உள்ளது. கையில் பிரதியின்றி அவர் சொல்லச் சொல்ல நான் கட்டுரைகள் தட்டச்சு செய்துள்ளேன். பிற நற்குணங்களுடன் நல்ல பணியாளரைப் பாராட்டும் அரிய பண்பு அவரிடம் உண்டு.

  பதிலளிநீக்கு
 14. சிலம்பொலியாரின் பெருமை சொல்லற்பாலதன்று. தன் வீட்டில் உள்ள அனைத்து புத்தகங்களுக்கும் பள்ளிப்புத்தகங்கள் போல அட்டை போட்டுப் பெயரெழுதி வைப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். பள்ளி ஆசிரியராக இருந்து பல்கலைக்கழகம் வரை உயர்ந்தும் ‘தன்னை வியந்து தருக்காத’ பெருந்தகையாளர் அவர். என் பெயரே கொண்டவர் என்பது எனக்கு இன்னும் அதிக மகிழ்வூட்டுவதாகும்.

  பதிலளிநீக்கு
 15. தன்னலமற்ற தூய உள்ளத்திற்கு, தாயுள்ளத்திற்கு, தமிழுள்ளத்திற்குச் சொந்தக்காரரான, சிலம்பொலியார் இம்மாதம் செப்டம்பர் 24 இல், அகவை 85 இல் தடம் பதிக்கிறார்.

  சிலம்பொலி செல்லப்பனார் இன்னும் நூறாண்டு வாழ வேண்டும்,//
  சிலம்பொலி செல்லப்பனார் அவர்களைப் பற்றி நன்றாக சொன்னீர்கள்.
  அவர்கள் நூறாண்டு வாழ உங்களுடன் சேர்ந்து நாங்களும் வாழ்த்துகிறோம்.

  பதிலளிநீக்கு
 16. //சிலம்பொலியாரோ, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களுக்கு அணிந்துரை வழங்கியவர். இவர் வழங்கிய அணிந்துரைகள் மட்டுமே, சிலம்பொலியார் அணிந்துரைகள் என்னும் தலைப்பில் ஆறு தொகுதிகள், இதுவரை வந்துள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.//- வியப்பாகவும் மலைப்பாகவும் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 17. அன்புள்ள ஜெயக்குமார்..


  தமிழப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய தருணமதில் ஐயா சிலம்பொலியாருடன் பழக்கம். எளியவர். ஆழமானவர். கருத்துக்கடல். ஆற்றொழுக்கான பேச்சு. கேட்டுக்கேட்டுத் திளைத்தவன். அவரின் சிலம்புகுறித்த புலமை அத்தனையையும் தொகுத்தால் இன்னொரு புதிய காவியம் உருவாகும். அன்னார் அவர்கள் 85 வயதைக் கடந்து இன்னும் பல்லாண்டுகள் தமிழ்ப்பணி செய்திட இறைவனை வேண்டுவோம். தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவதில்லை என்றதுபோல அவரெல்லாம் தமிழின் உயிர்.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு