உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், முதுகலை
ஆசிரியராகப் பணியாற்றும் நண்பர் திரு எஸ்.சரவணன் அவர்கள், நாட்டு நலப்
பணித் திட்டத்தின், திட்ட அலுவலராகவும், பல்லாண்டுகள் சீரிய முறையில்
பணியாற்றி வருபவர்.
இரண்டாண்டுகளுக்கு முன்னர், தமிழ்
நாட்டிலேயே மிகச்சிறந்த நாட்டு நலப் பணித்திட்ட மாணவர் என்ற பெருமையினைப் பெற்ற,
மாணவரை உருவாக்கிய சாதனைக்கு உரியவர். அமைதியானவர், அதிர்ந்து பேசாதவர், சிறந்த
ஆசிரியர் இவை எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல சமூக நல சிந்தனையாளர்.
ஆண்டுதோறும் நாட்டு நலப் பணித் திட்ட
சிறப்பு முகாம்களைத் திறம்பட நடத்தி வருபவர். இவ்வாண்டு, தஞ்சாவூர் அரசர்
மேனிலைப் பள்ளியுடன் இணைந்து, சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அரசர் மேனிலைப் பள்ளியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர், எனது நண்பரும்
உடற்கல்வி ஆசிரியருமான திரு டி.செந்தில்வேலன் ஆவார். எல்லோரிடமும் கலகலப்பாய்
பழகும் தன்மை உடையவர். சுறுசுறுப்பாய், அங்கு, இங்கு என எங்குமிருப்பவர்.
இத்தகைய இருவர் இணைந்து, ஒரு சிறப்பு
முகாமினை நடத்துகின்றார்கள் என்றால், அதன் வெற்றியினைச் சொல்லவும் வேண்டுமா?
நாட்டு நலப் பணித் திட்டத்தின் திட்ட அலுவலர்கள் நண்பர்கள் திரு எஸ்.சரவணன் மற்றும் திரு டி. செந்தில் வேலன் |
இவ்வாண்டிற்கான நாட்டு நலப் பணித் திட்ட
சிறப்பு முகாம், தஞ்சாவூர், நீலகிரி ஊராட்சியில் அமைந்துள்ள, ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 23.9.2013 திங்கள் முதல் 29.9.2013 ஞாயிற்றுக்
கிழமை வரை ஏழு நாட்கள் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப் பெற்றிருந்த்து. இந்த ஏழு
நாட்களும், மாணவர்கள், இங்கேயே இரவும் பகலும் தங்கி பயிற்சி பெறுவர்.
கடந்த ஆண்டினைப் போலவே இவ்வாண்டும்,
என்னையும், எனது நண்பர் திரு வெ.சரவணன் அவர்களையும் (எங்கள் பள்ளியில் இரு
சரவணன்கள். ஒருவர் முதுகலை வேதியியல் ஆசிரியர் திரு வெ.சரவண்ண், மற்றொருவர்
முதுகலை விலங்கியல் ஆசிரியரும், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலருமான திரு
எஸ்.சரவண்ண்) என்னையும், மாணவர்களிடைய பேசுவதற்காக அழைத்திருந்தார். நண்பர் வெ.சரவணன்
அவர்களுக்கு வழங்கப் பெற்றத் தலைப்பு மாணவர்களுக்கு இணையதள பயன்பாடுகள்.
எனக்கு வழங்கப் பெற்றத் தலைப்பு வீட்டுக்கொரு நூலகம்.
நண்பர்களே, மாணவர்களிடம் பேசுவதென்றாலே தனி மகிழ்ச்சிதானே. மாணவர்களிடம்
பேசியதை, தங்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர, வேறு என்ன முக்கிய வேலை எனக்கு
இருக்கப் போகிறது.
நண்பர்களே,
கடந்த 24.9.2013 செவ்வாய்க் கிழமை காலை இருவரும் மாணவர்களிடைய பேசினோம். அவ்வமயம் தஞ்சாவூர், அருள்நெறி உயர் நிலைப்
பள்ளி, பட்டதாரி ஆசிரியர் திரு எஸ்.விஜயக்குமார் அவர்களும், உமாமகேசுவர மேனிலைப்
பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளான திரு ஆர்.லெனின், திரு எஸ்.பாலசுப்பிரமணியன், திருமதி
பி.மகேசுவரி, திருமதி யு.சாரதா, திருமதி பி.உஷாராணி, திருமதி பி.காயத்ரிதேவி
ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக்க் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்
என்றார் வள்ளுவர். நண்பர்களே, சிறிது
நேரம், உங்களது செவிகளைத் தாருங்கள்.
வீட்டுக்கொரு நூலகம்
மூலையிலோர் சிறுநூலும் புதுநூ
லாயின்
முடிதனிலே சுமந்துவந்து தருதல் வேண்டும்
எனப்
புத்தகத்தின் பெருமையினைப் பறைசாற்றுவார் பாரதிதாசன். நண்பர்களே, முதலில்
புத்தகம் என்ற வார்த்தை எப்படி வந்தது என்பதைப் பார்ப்போமா?
புத்தகம் என்பது ஒரு தூய தமிழ்ச் சொல்.
தொன்மைக் காலத்திலே எழுத்துக்களை பனை ஓலைகளிலே பொறித்து வைத்தவன் தமிழன். போந்தை
என்றால் பனை என்று பொருள். பனை ஓலைகளில் எழுதப் படுவதால் அது போந்தையகம்
என வழங்கப் பெற்றது. பின்னாளில் போந்தையகம் போந்தகம் ஆயிற்று. பின்னர்
போந்தகம் பொத்தகமாக மாறி, இறுதியில் பொத்தகம் என்பது புத்தகம் என
ஆயிற்று.
புதிய சிந்தனைகளை, புதிய கருத்துக்களை
அகத்திலே தாங்கியிருப்பதுதான் புத்தகம். எனவே மனிதனானவன், தான் வாழும் காலம் வரை
நூல்களைப் படிக்க வேண்டும். இதனால்தான்
வாசிக்காத நாட்கள் எல்லாம் சுவாசிக்காத
நாட்கள்
என்றனர் நம்
முன்னோர்.
சாகும்போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும்
என்தன் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்
என்றான் ஈழக்கவி
சச்சிதானந்தன். இவரைப் போலல்லவா படிக்க வேண்டும்? என்ன நண்பர்களே இவ்வாறு
படிக்க முடியுமா என்கிறீர்களா? நிச்சயம் முடியும்.
நண்பர்களே அறிஞர் அண்ணா அவர்களை
அறியாதவர்கள் யாருமிருக்க இயலாது. சென்னை கன்னிமாரா நூலகத்தில் உள்ள
நூல்கள் அனைத்தையும் படித்து முடித்த ஒரு மனிதர் உண்டென்றால் அது அண்ணாதான்.
காலையில் கன்னிமாரா நூலகத்திற்குள் நுழைபவர்,
இரவு நூலகர் அருகில் வந்து, அண்ணா, நூலகம்
மூடும் நேரமாகிவிட்டது என்று கூறினால்தான் இருக்கையில் இருந்தே
எழுவார்.
பின்னாளில் தனது பேச்சால், எழுத்தால்,
செயலால் தமிழக முதல்வரானார். முதல்வரான அடுத்த ஆண்டிலேயே புற்றுநோயால்
தாக்கப்பட்டார். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அமெரிக்காவின் நியூயார்க்
நகரத்தில் மெமோரியல் மருத்துவமனை. அறுவை சிகிச்சைக்கானத் தேதியினைக்
குறித்துவிட்டு, அண்ணாவிடம் தெரிவிக்கும் பொருட்டு, மருத்துவர்கள் அண்ணாவைச்
சந்தித்தனர். தன்னைக் காண வந்த மருத்துவர்களிடம் அண்ணா ஒரு வேண்டுகோள் விடுத்தார்,
அறுவை சிகிச்சையினை ஒரு நாள் தள்ளிப் போடுங்களேன்.
மருத்துவர்கள் வியப்போடு அண்ணாவைப்
பார்த்தனர். நீங்கள் பகுத்தறிவு வாதி என்றல்லவா கூறினார்கள். நீங்களுமா நல்ல
நாள், நல்ல நேரம் பார்க்கிறீர்கள் எனக் கேட்டனர்.
அறிஞர் அண்ணா மெதுவாகச் சிரித்தார். காரணம்
அதுவல்ல, தனது படுக்கையின் அருகிலேயே இருந்த பெரிய புத்தகத்தைக்
காட்டுகிறார், இந்த புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கின்றேன். இன்னும்
படித்து முடிக்கவில்லை. படித்து முடிக்க இன்னும் ஒரு நாள் கால அவசாசம் தேவைப்
படுகிறது. அறுவை சிகிச்சை முடிந்து உயிருடன் இருப்பேனா இல்லையா எனத் தெரியாது.
எனவே உயிருடன் இருக்கும் போதே, இப்பொழுதே படித்து முடித்து விட விரும்புகின்றேன்
என்றார்.
இவர்தான் அண்ணா. புத்தகத்தை நேசிப்பது,
சுவாசிப்பது என்பது இதுதான்.
எப்படிப் படிக்க வேண்டும் நேசிக்க வேண்டும்
என்பதற்கு அண்ணாவை விட சிறந்த ஓர் எடுத்துக்காட்டு கிடையாது நண்பர்களே. எப்பொழுது
நூல்களைப் படிக்க வேண்டும்? இதோ விடை சொல்ல வருகிறார் பாவேந்தர்.
நூலைப் படி
சங்கத் தமிழ் நூலைப்
படி
முறைப்படி நூலைப் படி
காலையில் படி
கடும் பகல் படி
மாலை இரவு
பொருள் படும் படி
நூலைப் படி
படிப்பதற்கு நேரம்,
காலமெல்லாம் கிடையாது. எப்பொழுதும் படி, எப்பொழுது வேண்டுமானாலும் படி என்கிறார்.
படித்தால் மட்டும் போதுமா? எந்த நூல்களைப்
படிக்க வேண்டும், எந்த நூல்களின் பக்கமே
பார்க்கக் கூடாது என்பதையும் பாவேந்தரே கூறுகிறார் கேளுங்கள்
பொய்யிலே கால்படி
புரட்டிலே முக்கால்படி
வையம் ஏமாறும்படி
வைத்துள்ள நூல்களை
ஒப்புவதெப்படி......
நூலைப் படி முறைப்படி
நூலைப் படி
குழந்தைகளுக்காகப்
பாரதிதாசன் இயற்றிய கவிதை இது. பெரியவர்களுக்கும் அழகாய்ப் பொருந்துவதைப்
பாருங்கள்.
திருவள்ளுவரும் இதையேதான் கூறுகிறார்
கற்க கசடற கற்பவை
கற்கக்
கூடியவற்றைக் கற்றுக் கொள் என்றார்.
நாம் படிக்க வேண்டும். ஒருமொழியினுடைய
அழகைக் காண்பதற்கு நாம் படிக்க வேண்டும். ஒரு மொழியினுடைய சொற்களை உணருவதற்கு நாம்
படிக்க வேண்டும். ஒரு மொழியினுடைய கட்டமைப்பை தெரிந்து கொள்வதற்கு நாம் படிக்க
வேண்டும்.
திருவள்ளுவர் மேலும் கூறுவார்
கற்றபின் நிற்க அதற்குத் தக
நூல்களை
தெளிவாக கற்றபின், கற்று உணர்ந்த பின், அதன் படி நட என்கிறார்.
நூல்கள் மிகப் பெரும் வல்லமை படைத்தவை.
மனிதனை முழு மனிதனாய் மாற்றும் சக்தி படைத்தவை. தேசத்தையே, ஏன் உலகினையே புரட்டிப்
போடும் சக்தி படைத்தவை நூல்கள்தான். எப்படி என்கிறீர்களா? வாருங்கள் பார்ப்போம்
மகாத்மா காந்தி
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஒரு இளம்
வழக்கறிஞராக, தென் ஆப்பிரிக்காவில் கால் பதித்த காலம். 1904 ஆம் ஆண்டு. வழக்கறிஞர் பணி தொடர்பாக
ஜோகனஸ்பர்க்கில் இருந்து டர்பன் நகருக்குப் பயணிக்க வேண்டியிருந்தது. தொடர்
வண்டிப் பயணம். தொடர்ந்து 24 மணி நேரம் பயணித்தாக வேண்டும்.
காந்தியை வழியனுப்ப வந்த அவரது நண்பர் ஹென்றி
போலக் என்பவர், காந்தி நீங்கள் 24 மணிநேரம் பயணம் செய்தாக வேண்டும்.
உங்களுக்கு வழித் துணையாக இச்சிறு நூலினை வழங்குகின்றேன். பயணத்தின்போது படித்துப்
பாருங்கள் என்று கூறி ஒரு புத்தகத்தினை வழங்கினார்.
அந்தப் புத்தகத்தின் பெயர் Unto this last . எழுதியவர் ஜான் ரஸ்கின். காந்தி
அந்தப் புத்தகத்தை மகிழ்வுடன் பெற்றுக் கொண்டு, தொடர் வண்டியில் ஏறினார். தனது
வாழ்க்கையின் பாதையினை மாற்றப் போகிற புத்தகம் அது என்பதை காந்தி அப்பொழுது
உணரவில்லை.
பின்னாளில் காந்தி தான் எழுதிய சுய
சரிதையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார், புத்தகத்தைப் படிக்கத் தொடங்கிய
பிறகு, என்னால் அந்தப் புத்தகத்தை கீழே வைக்கவே முடியவில்லை. அந்தப் புத்தகம் எனது
சிந்தனையினை முழுமையாய் தன் வசப்படுத்திக் கொண்டது. அன்று இரவு என்னால் தூங்கவே
முடியவில்லை. அந்தப் புத்தகத்தில் உள்ளபடி எனது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது
என்று அன்றே முடிவு செய்தேன். படித்த
மாத்திரத்தில், எனது வாழ்வினைப் புரட்டிப் போட்டப் புத்தகம் அது.
அந்தப் புத்தகம் எனக்குப் போதித்தக்
கருத்துக்கள் மூன்று.
1. தனி
மனிதனின் நல் வாழ்வே, தேசத்தின் நல் வாழ்வு
2. வாழ்க்கையினை
வாழ்வதற்காக உழைக்கின்ற போது, வழக்கறிஞர் தொழிலின் மதிப்பும், சலூன் காரரின்
மதிப்பும் சமமானதுதான்.
3. தினக்
கூலியின் வாழ்க்கை, அது நிலத்தை உழுபவராக இருந்தாலும், கைத்தொழில் செய்பவராக
இருந்தாலும், அவர்களின் வாழ்க்கையும், வாழத் தகுதியான வாழ்க்கையே.
முதல் கருத்து எனக்குத் தெரிந்ததுதான். இரண்டாம் கருத்தை சிறிது உணர்ந்திருந்தேன்.
மூன்றாவது கருத்து இதுவரை எனக்குத் தோன்றாதது. மறுநாள் அதிகாலை எழுந்தபொழுது, எனது
வாழ்க்கைப் பாதையே மாறியிருந்தது.
ஆம் நண்பர்களே. ஒரு சிறு நூல்
காந்தியின் வாழ்க்கைப் பாதையினையே மாற்றியது. இந்நூலினைத்தான் காந்தி பின்னாளில், சர்வோதயா
என்னும் பெயரில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.
காந்தி சர்வோதயா இயக்கம் தொடங்கியதும் இந்நூலினால்தான். காந்தி கதர்
இயக்கம் தொடங்கியதற்கும், அந்நியத் துணிகளை துறக்கச் சொன்னதற்கும் காரணம்
இச்சிறு நூல்தான் நண்பர்களே.
ஒரு புத்தகத்தின் வலிமையைப் பாருங்கள்
நண்பர்களே, வலிமையைப் பாருங்கள்.
கணிதமேதை சீனிவாச இராமானுஜன்
நண்பர்களே, கணிதமேதை சீனிவாச
இராமானுஜனைத் தாங்கள் நன்கறிவீர்கள். ஏழ்மையின் பிடியில் சிக்கி, உண்ண உணவிற்கே
வழியின்றி, வெறும் தண்ணீரைக் குடித்தே வாழ்க்கையை நகர்த்தியவர் இராமானுஜன்.
அனைத்துப் பாடங்களிலும்
ஆர்வமாய், புலியாய் இருந்த இராமானுஜனைக் கணிதத்தின் பக்கம் திருப்பியது ஒரு நூல்
என்று சொன்னால் நம்புவீர்களா நண்பர்களே, நம்புவது கடினம்தான். ஆனால் அதுதான்
உண்மை.
இராமானுஜன் தன் பள்ளிப்
படிப்பை முடிப்பதற்குச் சில காலத்திற்கு முன், 1903 ஆம் ஆண்டு வாக்கில், வீட்டில்
தங்கியிருந்த மாணவர்கள் மூலமாகக் கணக்குப் புத்தகம் ஒன்றினைப் பெற்றார். நூலின்
பெயர் A Synopsis of Elementary Results in Pure and Applied Mathematics என்பதாகும்.
இதை எழுதியவர் ஜார்ஜ் ஷுபிரிட்ஜ் கார் (George Shoobridge Carr) என்பவராவார்.
ஜார்ஜ் கார் ஒரு கணித
ஆசிரியர். இலண்டனில் மாணவர்களுக்கு, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெளியே, தனிப்
பயிற்சி அளிக்கும் எண்ணற்ற ஆசிரியர்களுள் ஒருவர். தன்னிடம் தனிப் பயிற்சி பெறும்
மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத் தயாரித்து
தொகுத்தளிக்கப்பட்ட, விடைக் குறிப்புகளை உள்ளடக்கியதே இப் புத்தகமாகும்.
கணித ஆசிரியர் கார் இதுவரை
இல்லாத, கண்டுபிடிக்கப் படாத புதிய தேற்றங்கள் எதனையும் இந்நூலில் சேர்க்கவில்லை.
மாறாக ஏற்கனவே நிரூபிக்கப் பட்டத் தேற்றங்களை மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும்
வகையில், படிப்படியாக விளக்கியிருந்தார்.
கணிதத்தில் நாட்டமுடைய இராமானுஜனுக்கு, இப்புத்தகம் ஒரு புதிய பரிமாணத்தைப்
புரிய வைத்தது. இப்புத்தகத்தில் உள்ள சமன்பாடுகள், சூத்திரங்கள் இராமானுஜனுக்குப்
புதியவை அல்ல. ஆனால் அவற்றைப் பெறக் கையாளப்பட்ட வழிமுறைகள் இராமானுஜனின் மனதில்
புதிய ஒளியை உண்டாக்கின. எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகளுக்கான பாதையை
இப்புத்தகம் காட்டியது.
எதிர்காலத்தில் மற்ற
பாடங்களில் கவனம் செலுத்தாமல் கணிதம், கணிதம் என்று கணிதத்தையே தனது உலகாக, தனது
மூச்சாக சுவாசிக்க இராமானுஜனுக்குக் கற்றுக் கொடுத்தது இப்புத்தகமேயாகும்
.
ஆம் நண்பர்களே
காந்திக்கு
Unto this last
இராமானுஜனுக்கு
A synopsis of
Elementary Results in Pure and Applied Mathematics
நண்பர்களே, தனி மனிதனின்
வாழ்க்கைப் பாதையினையும், நாட்டின் வாழ்க்கைப் பாதையினையும் மாற்றும் திறன்
படைத்தவை ஆயுதங்கள் அல்ல புத்தகங்கள்தான்.
சாக்ரடீஸ்
ஏதென்சு நாட்டிலே, குற்றவாளிக்
கூண்டிலே நிற்கிறார் சாக்ரடீஸ். நீ, உனக்கு அறிவு வளர்ந்திருப்பதாகச்
சொல்கிறாயாமே , உண்மையா? என்றனர். சாக்ரடீஸ் அமைதியாகப் பதில் கூறினார. ஆம்,
எனக்கு அறிவு வளர்ந்திருக்கின்றது என்று சொன்னேன். உண்மைதான் என்றார். என்ன
ஆணவம் பார்த்தீர்களா? அறிவு வளர்ந்திருக்கிறது என்று நெஞ்சம் நிமிர்த்திச்
சொல்கிறானே எனப் பல கண்டனக் குரல்கள் எழும்பின.
கண்டனக் குரல்களின் ஒலி அடங்கியதும்,
சாக்ரடீஸ் மெதுவாகக் கூறினார், எனக்கு இன்னும் அறிவு வளரவில்லை என்பதைத்
தெரிந்து கொள்ளுகிற, புரிந்து கொள்ளுகிற அளவிற்கு, எனக்கு அறிவு வளர்ந்திருக்கிறது,
ஆம் நண்பர்களே, அறிவு வளரவில்லை என்பதைத்
தெரிந்து கொள்வதற்குக் கூட அறிவு வேண்டும். கடலளவு கற்றால்தான், கல்லாதது கடலளவு
என்பதையே அறிந்து கொள்ள முடியும்.
தெளிந்த அறிவையும், தெளிந்த அறிவால்
உருவாகும் நல் ஞானத்தினையும், ஞானத்தால் உண்டாகும் நேர்மையான வீரத்தினையும்,
துன்பங்களைக் கண்டு துவளாத மனத்தினையும் வழங்குவது புத்தகங்களே.
ஜோசப் இவானோவிச்
ரஷ்யா. ஜோசப், ஜார்ஜியா பகுதியைச்
சேர்ந்தவர். சிறு வயதில் பள்ளிக்குச் சென்ற காலத்திலேயே, தனது வாசிப்பு எல்லையை
விரிவுபடுத்திக் கொண்டவர். மற்ற மாணவர்கள் எல்லாம் பாடப் புத்தகங்களை ஊன்றிப்
படித்தபோது, பிரெஞ்சு புரட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை என
மூழ்கியவர்.
1905 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம். லெனின்
தலைமையில் மாநாடு. ஜோசப் உற்சாகத்துடன் கிளம்பிச் சென்றார். தனது கனவு நாயகன்,
லெனினை நேரில் பார்க்க வேண்டும் என்ற கட்டுக்கடங்காத ஆவல். நேரில் எப்படி
இருப்பார், தன்னுடன் பேசுவாரா? மனம் முழுதும் சிந்தனைகள் , கனவுகள்.
மாநாட்டில் லெனினை கண்ணாரக் காண்கிறார்.
இவரா லெனின்? அஜானுபாகுவாக, கம்பீரமாக இருப்பார் என்றல்லவா நினைத்தேன்? இத்தனைக்
குள்ளமானவரா? இத்தனைச் சாதாரணமானவரா? ரஷ்யா முழுவதும் கிளர்ச்சியை ஏற்படுத்தி
வரும் தலைவர் இவரா? எத்துனை எளிமை.
ஜோசப் லெனினை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்
கொண்டிருக்கிறார். லெனின் என்னுடன்
பேசுவாரா? அவருடன் கை குலுக்கலாமா?
லெனின்
புன்னகையுடன் ஜோசப்பை நெருங்கி வருகிறார்.
பிறகு
ஜார்ஜியா எப்படி இருக்கிறது?
ஒரே வார்த்தை.
தடுமாறி விட்டார் ஜோசப். மென்று விழுங்கி எதையோ சொல்கிறார். லெனின் தலையசைத்துக்
கொண்டே செல்கிறார்.
எத்தனை பெரிய
விசயம். அறைக்குத் திரும்பிய ஜோசப்பிற்கு லெனின் தன்னுடன் பேசினார் என்பதையே நம்ப
முடியவில்லை.
மாநாடு முடிந்த பின்னர், லெனின் ஜோசப்பை
அழைத்தார்.
ஒன்று
சொல்ல மறந்து விட்டேன். உங்களுடைய கட்டுரைகளை நான் தொடர்ந்து வாசித்துக்
கொண்டிருக்கிறேன். ஒரே திருத்தம் மட்டும் செய்தால் நான்றாக இருக்கும் என
நினைக்கிறேன்.
என்ன,
சொல்லுங்கள்?
உங்களுடைய
பெயரை எப்படி எழுதுகிறீர்கள்?
ஜோசப்
இவானோவிச்
உங்கள்
எழுத்துக்களில் உள்ள வலிமையை, வெளிப்படுத்தக் கூடிய பெயராக இல்லையே? என்று சொல்லிவிட்டு ஏதோ யோசனையில ஆழ்கிறார்
லெனின். சிறிது நேரம் கழித்து, திடீரென்று திரும்பினார்,
உங்களை
ஏன் ஸ்டாலின் என்று அழைக்கக் கூடாது?
ஜோசப் சலனமற்று
நின்று கொண்டிருந்தார்.
ஸ்டாலின்,
இரும்பு மனிதர். இந்தப் பெயர் உங்களுக்குச் சரியாக இருக்கும் என நினைக்கிறேன் என்றார் லெனின்.
அந்த வினாடி முதல் உலகம் அவரை அப்படித்தான்
அழைக்கத் தொடங்கியது. ஆம் நண்பர்களே, இவர்தான், இந்த ஜோசப்தான், லெனினைத்
தொடர்ந்து ரஷ்யாவை ஆட்சி செய்த இரும்பு மனிதர் ஸ்டாலின்.
ஸ்டாலின் மிகச் சிறந்த படிப்பாளி. உத்வேகம்
மிக்க எழுத்துக்களுக்குச் சொந்தக் காரர். நாட்டிற்காக எதையும் தியாகம் செய்யத்
எந்நேரமும் தயாராக இருந்த இரும்பு மனிதர்.
நண்பர்களே, நாட்டுக்காகத் தனது வாழ்வினையே
அர்ப்பணித்த ஸ்டாலின், செய்திட்ட மகத்தான தியாகம் ஒன்றுள்ளது. நினைத்தாலும்
நெஞ்சம் நடுங்கும்படியான ஒரு தியாகத்தை, ஒரே நொடியில், எவ்வித மாற்று யோசனையும்
இன்றி நாட்டுக்காகச் செய்தவர்தான் ஸ்டாலின்.
வாருங்கள் நண்பர்களே, சற்றுப்
பின்நோக்கிப் பயணிப்போம். இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருக்கின்றது. ஹிட்லரின்
ஜெர்மானியப் படைகள் சென்ற இடங்களில் எல்லாம் வெற்றி வாகை சூடுகின்றன. ஜெர்மானியப்
படைகள் முதன் முதலில் தோல்வியைச் சந்தித்த நாடு ரஷ்யா. காரணம் கடுமையானப் பணிப்
பொலிவு. ஜெர்மன் வீரர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. விளைவு பின் வாங்கினர்.
பின்
வாங்கிய ஜெர்மானிப் படைகள் ரஷ்ய வீரர்கள் சிலரைச் சிறைபிடித்துச் சென்றனர்.
அவ்வாறு ரஷ்ய வீரர்களால் சிறைபிடிக்கப் பட்ட ஒரு வீரனின் பெயர் லெஃப்டினெண்ட்
யாகோப்.
நண்பர்களே இந்த யாகோய் வேறு யாருமல்ல,
ரஷ்ய அதிபர் ஸ்டாலினின் சொந்த மகன். விசாரனையின் போதுதான், ஜெர்மானியப்
படையினருக்குத் தெரிந்தது, தாங்கள் பிடித்து வந்திருப்பது, ஸ்டாலின் வாரிசு என்று.
ஜெர்மனி
ஸ்டாலினைத் தொடர்பு கொண்டது.
உங்கள்
மகன் யாகோப் இப்பொழுது எங்கள் கையில்
இதயமே
நின்றுவிடும் போலிருந்தது ஸ்டாலினுக்கு. ஒரே நொடிதான், சுதாரித்துக் கொண்டார்.
சரி
சொல்லுங்கள்
யாகோப்பை
உங்களிடம் திருப்பி அனுப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் ஒரு நிபந்தனை.
நீங்கள் சிறைபிடித்து வைத்திருக்கிறீர்களே, ஜெர்மானிய வீரர்கள், அவர்களை
அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். சம்மதமா?
மன்னிக்கவும்.
எனக்குப் பேரம் பேசிப் பழக்கமில்லை.
தொலைபேசியைத்
துண்டித்துவிட்டார் ஸ்டாலின். யாகோப்பின் தலை துண்டிக்கப் பட்டது.
நண்பர்களே, இது வரலாற்று உண்மை. வரலாற்றின் பக்கங்களில்
உளி கொண்டு செதுக்கப்பட்ட இரத்த சரித்திரம். நினைத்துப் பாருங்கள் நண்பர்களே,
இத்தகைய தியாகத்தினைச் செய்ய, எத்துனை துணிவு வேண்டும்? எவ்வளவு நாட்டுப் பற்று
வேண்டும்? எவ்வளவு மன உறுதி வேண்டும்?
இப்படி ஒரு நிலையினை நினைத்துப் பார்க்க
முடிகிறதா நண்பர்களே ? துப்பாக்கி முனையில் மகன் இருந்தபோதும், தெளிவாய்
சிந்திக்கின்ற ஆற்றலை, அறிவை, தயங்காது முடிவெடுக்கக் கூடிய துணிவை ஸ்டாலினுக்குத்
தந்தவை புத்தகங்கள் அல்லவா?
ஆம் நண்பர்களே, சிறந்த புத்தகங்கள் நம்மை
வழி நடத்தும் வல்லமை வாய்ந்தவை. தாங்க இயலா சோதனைகளில் சிக்கி, நாம் தத்தளிக்கும்போது,
கலங்கரை விளக்காய் இருந்து, நமக்கு நல் வழிகாட்டுபவை புத்தகங்களே.
புனிதமுற்று மக்கள்புது வாழ்வு
வேண்டில்
புத்தகசா லைவேண்டும் நாட்டில்
யாண்டும்
என்பார்
பாவேந்தர் பாரதிதாசன். நண்பர்களே, தினமும் ஒரு பக்கமாவது படிப்போம். மாதமொரு
நூலேனும் சேர்ப்போம். வீட்டிற்கொரு புத்தகசாலை அமைப்போம்.