02 அக்டோபர் 2013

அகத்தியர் வாழும் இல்லம்

வாழ்வு முழுதும் சோகம் என்றாலும் கலங்காதே
உன் துக்கத்தினால் காலை உதயம் தன் அழகை இழந்துவிடாது.
ஓடைநீர் தனது பளபளப்பான நிலையான அழகை
அசோக மர இலைக்கோ, தாமரை மலருக்கோ தராமல் போகாது.

வாழ்க்கை இருண்டது, சிக்கலானது என்றாலும் கலங்காதே,
நேரம் நிற்காது, உன் துக்கத்திற்காக தாமதிக்காது.
இன்று இவ்வளவு நீண்டதாக, விசித்திரமானதாக, கசப்பானதாக
இருப்பது, விரைவில் மறந்து போன கடந்த காலமாகி விடும்.

அழாதே, புதிய நம்பிக்கை, புதிய கனவுகள், புதிய முகங்கள்,
இன்னும் பிறக்காத வருடங்களின் அனுபவிக்காத சந்தோஷம்,
துக்கப்படும் இதயத்தை துரோகி என்று நிரூபிக்கும்.
கண்களை கண்ணீர்த் துளிகளுக்கு விசுவாசமற்றதாக்கும்.
-          கவிக்குயில் சரோஜினி நாயுடு

      இந்த வாரம் எனது சொந்தக் கதையினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன் நண்பர்களே.

     விஞ்ஞானத்தின் உச்சத்தைத் தொட்டுவிட்டோம், மருத்துவத் துறையில் மகத்தான சாதனையினை சாதித்து விட்டோம் என நாளும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. கேட்பதற்கும், படிப்பதற்கும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் நடப்பில், யதார்த்தத்தில், இந்த வளர்ச்சிகள் முழுமையாகப் பயன்படுத்தப் படுகின்றனவா? யாவரும் இதன் பயனை அடைகின்றார்களா? என்றால் விடை கேள்விக் குறியே.


     அழிவின்  அவைநீக்கி  ஆறுஉய்த்து  அழிவின்கண்
     அல்லல்  உழப்பதாம்  நட்பு
என்பார் திருவள்ளுவர். துன்பத்தில் உடனிருந்து உதவுவது நட்பு. ஆம் நண்பர்களே, அந்த நட்பின் மகிமையை, பெருமையினை நான் முழுமையாய் உணர்ந்தது இக்கால கட்டத்தில்தான். நண்பர்களே உடனிருந்து காத்தனர். துயர் துடைத்தனர். இன்று என் மகள் நலமுடன்.

     நண்பர்களே, பல்லாண்டுகளாகவே எனது மனைவிக்குத் தலைவலி வரும். வந்தால் சில நிமிடங்களில் சரியாகிவிடும். பின்னர் அவ்வப்பொழுது வரும் தலைவலி ஒரு மணி நேரம் வரை நீடித்திருக்கும்.

     நண்பர்களே, கடந்த ஜுலை மாதம் முதல் வாரத்தில் என் மனைவிக்குத் தலைவலி வந்தது. ஆனால்  இம்முறை நாட் கணக்கில் விடவேயில்லை. அதனைத் தலைவலி என்று சொல்வதுகூட தவறு.  தலையில் இடி விழுந்தாற் போன்ற ஒரு வலி. சிறு சிறு ஒலிகளைக் கூட தாங்க இயலாத வலி. தலையே வெடித்துச் சிதறிவிடுமோ என்று எண்ணத் தக்க வகையில் வலி. தலையில் நீண்ட துணி கொண்டு, எவ்வளவு முடியுமோ, அவ்வளவு இறுக்கிக் கட்டுவார். பலநேரங்களில் இரு கைகளாலும் தலையில் மடார், மடார் என்று அடித்துக் கொள்ளுவார்.

    கண் மருத்துவரை அணுகினோம். பரிசோதனையின் முடிவில், இத் தலைவலிக்கும், கண்ணுக்கும் தொடர்பில்லை என்றார். பல் மருத்துவரை நாடினோம். அவரும் அவ்வாறே கூறினார்.

     தஞ்சையிலேயே மூத்த மருத்துவர்களில் ஒருவராகிய, மூளை நரம்பில் மருத்துவர் ஒருவரை, கடந்த 10.7.2013 அன்று சந்தித்தோம். ஒரு வாரத்திற்கு மாத்திரை எழுதித் தருகிறேன். சாப்பிடுங்கள், அப்படியும் தலைவலி விடாவிட்டால், ஒரு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்து பார்ப்போம் என்றார்.

     ஐயா, எனது மனைவி கடந்த இரண்டு நாட்களாக தொடர்  தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். எனவே இப்பொழுதே வேண்டுமானாலும் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் சோதனையினை செய்து விடுகிறேன் என்றேன்.

     எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்தோம்.

·        Chronic  infarcts  in  both  basal  ganglia
·        No  venous  sinus  thrombosis  is  seen

பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. மூளையில் இரு இடங்களில் நரம்பு உட்புறமாக சிறிது சுருங்கி உள்ளது. மாத்திரைகள் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று கூறினார்.

     சில இரத்தப் பரிசோதனைகள் செய்யுமாறு கூறினார். மீண்டும் 13 ஆம் தேதி இரத்தப் பரிசோதனை அறிக்கையோடு மருத்துவரைப் பார்த்தோம். தலைவலி விடவேயில்லை என்றோம்.

     இரண்டு நாட்களாகத்தானே மாத்திரைகள் சாப்பிடுகிறீர்கள். தொடர்ந்து சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்றார். இரத்தப் பரிசோதனை அறிக்கையில் குறையொன்றுமில்லை என்றார்.

     பத்து நாட்களுக்குமேல் மாத்திரைகள் சாப்பிட்டும், தலைவலி விடவேயில்லை. என் மனைவி, எப்பொழுது பார்த்தாலும், இரு கைகளாலும் தலையை அமுக்கியபடியே அமர்ந்திருப்பார்.

       23.7.2013இல் மீண்டும் மருத்துவரைச் சந்தித்தோம். தலைவலி குறையவேயில்லை. அவ்வப்பொழுது காய்ச்சல் வேறு வருகிறது என்றோம்.

     இதற்குமேல் தஞ்சையில், இந்தத் தலைவலிக்கு மருத்துவம் கிடையாது. உடனே சென்னை செல்லுங்கள். சென்னையில் உள்ள இந்த மருத்துவ மனைக்குச் செல்லுங்கள், இந்த மருத்துவரைப் பாருங்கள். Thrombosis Test   என்று ஒன்று உள்ளது. தஞ்சையில் இது கிடையாது. இந்த சோதனை செய்தால்தான் குணப்படுத்த முடியும் என்றார்.
 
நண்பர் அனந்தராமன்
     அன்று இரவே சென்னையில் இருக்கும் நண்பர் அனந்தராமன் அவர்களைத் தொடர்பு கொண்டேன். நாளை காலை, முதல் வேலையாக, மருத்துவமனைக்குச் சென்று, மருத்துவரைச் சந்திக்க நேரம் பெறுகிறேன் என்றார்.

     மறுநாள் காலை அலைபேசி அழைத்தது. நாளை காலை 11.00 மணிக்கு மருத்துவரைச் சந்திக்கிறோம். இரவே சென்னைக்கு, எனது வீட்டிற்கு வந்துவிடுங்கள் என்றார்.

     அன்று மதியமே வாடகை காரில், நானும் எனது மனைவியும் சென்னைக்குப் பயணமானோம். சென்னை, வளசரவாக்கத்தில், எனது நண்பர் அனந்தராமன், அவரது மனைவி, மகன் விஷ்ணு மூவரும், இரவு உணவுடன் எங்களுக்காகக் காத்திருந்தனர்.

     மறுநாள் 25.7.2013, காலை 10.30 மணிக்கு மருத்துவமனையில் இருந்தோம். 12.00 மணியளவில் மருத்துவரைச் சந்தித்தோம். பாசமிகு தந்தைபோல் பேசினார். காய்ச்சல் அவ்வப்பொழுது வருவதாகச் சொன்னதால், அதே மருத்துவமனையில் உள்ள, எம்.டி., மருத்துவரை முதலில் பாருங்கள் என்றார்.

     ஒரு மணிநேரக் காத்திருத்தலுக்குப் பிறகு மருத்துவரைச் சந்தித்தோம். தலைவலிக்காக வந்தோம். அடிக்கடி காய்ச்சல் வருவதாகச் சொன்னதால், தலைவலி மருத்துவர், முதலில் உங்களது கருத்தை அறிந்து வரச் சொன்னார் என்றோம்.

    நண்பர்களே, வாழ்வில் இதுவரை கேட்டிராத, வித்தியாசமான பதிலை இந்த மருத்துவரிடம்தான் முதன் முதலில் கேட்டேன். ஜுரம் வருகிறது என்று நீங்கள் சொல்வதை நம்பி, நான் மருத்துவம் பார்க்க மாட்டேன். கருத்து கூற மாட்டேன். ஜுரத்தினை அளவிடும் தெர்மா மீட்டர் அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கிறது. தெர்மா மீட்டரை வாங்கி, ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை, ஜுரத்தின் அளவினைக் கணக்கிட்டு, ஒரு  காய்ச்சல் வரைபடம் (Fever Chart) தயார் செய்து எடுத்து வாருங்கள். காய்ச்சல் வரைபடத்துடன் வந்தால் மட்டுமே நான் மருத்துவம் பார்ப்பேன் என்றார்.

     என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை. இரத்தப் பரிசோதனைகள் சிலவற்றை எழுதித் தருகிறேன். இரத்தப் பரிசோதனை அறிக்கையுடன் என்னை வந்து பாருங்கள் என்றார்.

     இதோ உடனே இரத்தப் பரிசோதனை செய்து, அறிக்கையுடன், மீண்டும் இன்றே உங்களைப் பார்க்க வருகிறோம் என்றோம்.

     இல்லை, இல்லை. இரத்தப் பரிசோதனை அறிக்கை கிடைக்க ஐந்து நாட்களாகும். எனவே அறிக்கை கிடைத்தவுடன் , ஐந்து நாட்கள் கழித்து, வந்து பாருங்கள்.

      அறிக்கை கிடைக்கும் வரை, ஏதேனும் மருந்து சாப்பிட வேண்டுமா?

      இரத்தப் பரிசோதனை அறிக்கை கிடைத்தால் மட்டுமே, மருந்து தருவேன். எனது கருத்தினை எழுதி, தலைவலி மருத்துவருக்குத் தருவேன். அதுவரை தரமாட்டேன் என்றார்.

      மருத்துவக் கட்டணமாக ரூ.700 பெற்றுக் கொண்டார். மருந்து தரமாட்டேன் என்று கூறியதற்கு இந்தக் கட்டணம்.

     மீண்டும் தலைவலி மருத்துவரைப் பார்க்க வந்தோம். மருத்துவரின் செயலாளர், எம்.டி., மருத்துவரிடமிருந்து, கருத்து கிடைத்த பிறகுதான், இந்த மருத்துவரைப் பார்க்கலாம் என்றார்.

     ஐயா, அவர் ஐந்து நாட்கள் சென்றபின், இரத்தப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே, மருந்து கொடுப்பேன், கருத்துரை வழங்குவேன் என்கிறார். எனது மனைவியோ தலைவலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். எம்.டி., மருத்துவரின் அறிக்கை கிடைக்கும் வரை, எனது மனைவி வலியால் துடித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதானா? என்றேன்.

      சிறிது நேரம் சிந்தித்தவர், சற்றுப் பொறுங்கள், மருத்துவரைப் பார்க்கலாம் என்றார்.

     மீண்டும் ஒரு மணி நேரக் காத்திருப்பு. மருத்துவரைப் பார்த்தோம். காய்ச்சல் குறித்த அறிக்கை மெதுவாக வரட்டும். காய்ச்சலுக்கும், தலைவலிக்கும் சம்பந்தமில்லை. மாத்திரைகள் எழுதித் தருகிறேன். தொடர்ந்து நான்கு மாதங்கள் சாப்பிடுங்கள். வலியைக் குறைக்கத் தனியே மாத்திரை எழுதித் தருகின்றேன் என்று கூறி எழுதித் தந்தார்.

     ஐயா, Thrombosis Test  செய்ய வேண்டும் என்று தஞ்சை மருத்துவர் கூறினாரே, நரம்புகள் சற்று உள்நோக்கி சுருங்கி இருப்பதாகக் கூறினாரே என்றோம்.

     ஸ்கேன் அறிக்கையினையும், ஸ்கேன் செய்தப் படங்களையும், ஐந்து நிமிடங்களுக்குமேல் ஆராய்ந்து பார்த்தவர். நரம்பு எந்த இடத்திலும் சுருங்கி இல்லை.. கவலைப் படாதீர்கள். Thrombosis Test  க்குத் தேவையே இல்லை என்றார்.

     எனது நண்பர் அனந்தராமன் குறுக்கிட்டு, ஐயா, தலையில் ஏதேனும் அடைப்பு இருக்குமோ என இவர்கள் பயப்படுகிறார்கள் என்றார்.

     ஆச்சரியத்துடன் பார்த்த மருத்துவர்,
      இவருக்குத் தலையில் அடைப்பு இல்லை
                            அடைப்பு இல்லை
                            அடைப்பு இல்லை
என மூன்று முறை கூறினார். நன்றி கூறி விடைபெற்றோம். தஞ்சைக்கு வந்து சேர்ந்தோம்.
 
முத்துச் சிதறல் மனோ சாமிநாதன் அவர்களுடன் எனது மனைவி
     இந்நிலையில்தான், 3.8.2013 அன்று எனது இல்லத்திற்கு வருகை தந்தார், அன்புச் சகோதரி முத்துச் சிதறல் மனோ சாமிநாதன் அவர்கள். சகோதரியாரின் வருகையும், வார்த்தைகளும் எங்களுக்கு மிகுந்த ஆறுதலைத் தந்தன.

     ஆனால், பத்து நாட்களுக்கு மேல் தொடர்ந்து மாத்திரைகளை சாப்பிட்டும் பலனில்லை. மாத்திரைகள்தான் குறைந்தனவே தவிர, தலைவலி குறையவில்லை.

     செய்வதறியாது திகைத்த நின்ற வேளையில், எனது ஆசிரியர் திருமிகு பி.விசுவநாதன் அவர்களைச் சந்தித்தேன். நான் மாணவனாய், இதே உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பயின்றபோது, எனது வகுப்பாசிரியர் இவர். மாணவர்களிடம் அன்பாய் பழகும் தன்மை படைத்தவர்.

     பிற்காலத்தில் இதே பள்ளியில் ஆசிரியராய் நான் நுழைந்தபோது, மனதார வரவேற்று, முன்னாள் மாணவாய் என்னைப் பாராது, சகஆசிரியராய் ஏற்று நட்புடன் பழகியவர். திருமிகு பி.விசுவநாதன் அவர்கள் ஓய்வு பெற்று பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும் இன்றும் எனது ஆசிரியருடன் தொடர்பில் இருக்கிறேன்.

     எனது மனைவியின் நிலையினை அறிந்து கொண்டவுடன், ஆங்கில மருந்துகளால் தலைவலியை ஒரு போதும் குணப்படுத்த முடியாது. நாட்டு மருந்துகளாலும், ஹோமியோபதி மருத்துவத்தாலும் மட்டுமே, தலைவலியை முழுமையாய் குணப்படுத்த முடியும் என அறிவுறுத்தினார்.

     எனவே ஹோமியோபதி மருத்துவரை நாடினேன். சுமார் ஒரு மாதம் ஹோமியோபதி மருந்து உட்கொண்டும் பலன் கிடைக்கவில்லை. ஒரு நாள் ஹோமியோபதி மருத்துவர், தஞ்சையில் எடுத்த எம்.ஆர்.ஐ., ஸ்கேன் அறிக்கை தவறு என்று சென்னை மருத்துவர் சொல்லிவிட்டார் அல்லவா, எனவே, வேறொரு ஸ்கேன் செண்டரில், மீண்டும் ஒரு எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்து பார்ப்போமே என்றார்.

     மீண்டும் வேறொரு ஸ்கேன் செண்டரில் எம்.ஆர்.ஐ., எடுத்தேன்.
Multiple, streaky and nodular hyperintense lesions in the frontal peri-venticular region (affecting the grey and white matter) bilaterally with no surrounding edema, haemorrhage or mass effect as described above. No evidence of recent vascular insult. No features of evolving infarct are detected at present. Brain stem and cerebellum appear normal. Exact aetiology is uncertain. Possibility of lacunar infarcts appear likely rather than demyelination or encephalitis. Contrast MRI scan may be done for further evaluation. Correlate clinically.

     நண்பர்களே, என் மனைவிக்கு இருமுறை எம்.ஆர்.ஐ., செய்தேன். இருமுறையும் வெவ்வேறு அறிக்கைகள். ஒரு முறை எம்.ஆர்.ஐ. எடுக்கக் கட்டணம் ரூ.5,000. இருமுறை செய்தும் செல்ல வேண்டிய பாதையினைக் காட்டாத வெற்று அறிக்கைகள். இன்றைய நவீன மருத்துவம் என்பது இதுதானா நண்பர்களே.

     எம்.ஆர்.ஐ., அறிக்கையுடன் ஹோமியோபதி மருத்துவரைப் பார்த்தேன். எதற்கும் ஒரு மூளை, நரம்பியல் நிபுணரிடம், இந்த அறிக்கையினைக் காட்டி கருத்து கேட்கலாமே என்றார். வேறொரு மூளை நரம்பியல் மருத்துவரைப் பரிந்துரைத்தார்.

       சந்தித்தோம். எம்.ஆர்.ஐ., அறிக்கையினைக் கொடுத்தோம். நிலைமையினை எடுத்துச் சொன்னோம். எம்.ஆர்.ஐ., அறிக்கையினைக் கூட அவர் முழுமையாகப் படித்ததாகத் தெரியவில்லை. ஆனால் மிகத் தெளிவாக பதில் கூறினார்.

     உங்கள் மனைவிக்கு வந்திருப்பது Migraine பிரச்சினை. இதைக் குணப்படுத்தவே முடியாது.

     உடலியல் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்று கூறுவதன் பெயர்தான் மருத்துவமா? ஒன்றுமே புரியவில்லை நண்பர்களே. எந்த நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதே எனக்கு இன்னும் விளங்கவில்லை. குழப்பமாயிருக்கிறது. மீண்டும் கற்காலத்தை நோக்கிப் பயணிப்பதைப் போல் ஒரு உணர்வு.

    மருத்துவரைப் பார்த்துக் கேட்டோம். நாங்கள் என்னதான் செய்ய வேண்டும்.

    தலைவலியை குணப்படுத்தவே முடியாது. ஆனால் வாழ்நாள் முழுவதும், தொடர்ந்து மாத்திரைகளை சாப்பிடுவதன் மூலம், ஓரளவு கட்டுக்குள் வைத்திருக்கலாம். ஒரு மாதத்திற்கு மாத்திரைகள் எழுதித் தருகிறேன். ஒரு மாதம் கழித்து வாருங்கள் என்றார்.

     ஒன்றல்ல, இரண்டல்ல, ஒன்பது மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். மருத்துவ மனையினை விட்டு வெளியே வந்து, ஹோமியோபதி மருத்துவருடன், அலைபேசி வழியே தொடர்பு கொண்டேன். அவ்வளவு மாத்திரைகள் சாப்பிட வேண்டாம், உடலுக்கு நல்லதல்ல. நாளை வாருங்கள், வேறொரு மருந்து தருகிறேன் என்றார்.

     மருந்தினை மாற்றிக் கொடுத்தார். ஆயினும் பலனில்லை. என் மனைவிக்கு மருத்துவம் பார்த்து, பார்த்து ஹோமியோபதி மருத்துவரே தளர்ந்துவிட்டார். வருத்தம் முகத்தில் தெரிந்தது. இறுதியில், வேண்டுமானால், மூளை நரம்பில் கொடுத்த மாத்திரைகளை ஒரு மாதம் சாப்பிட்டுப் பாருங்களேன் என்றார்.

     தலைவலியினைக் குணப்படுத்தவே முடியாது என்று சொல்லுபவர் எழுதித் தந்த மாத்திரைகளை, என் மனைவிக்குக் கொடுக்க எனக்கு விருப்பமில்லை.

     அடுத்து யாரை அணுகுவது என்று யோசித்தேன். உடனே மருத்துவர் தம்பையா அவர்கள் நினைவிற்கு வந்தார்.

      என் வாழ்வில் நான் என்றுமே மறக்கக் கூடாத மருத்துவர்தான் திரு தம்பையா. எனது தந்தையைக் காப்பாற்றியவர்.
 
மருத்துவர் தம்பையா
     சற்றேரக்குறைய ஏழு ஆண்டுகளுக்கு முன்னர், எனது தந்தைக்கு இதயத்திற்குச் செல்லும் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டது. ஒன்று, இரண்டல்ல, பல்வேறு இடங்களில் அடைப்பு. நடக்கவே சிரமப்படுவார். குளித்துவிட்டு தலையினைத் துவட்டவே இயலாது. மூச்சு வாங்கும்.

     ஆஞ்சியோகிராம் சோதனை செய்தால்தான் அடைப்பின் விவரம் தெரியும், தொடர்ந்து பைபாஸ் அறுவை சிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம் என்றனர். ஆஞ்சியோகிராம் செய்வதற்காக திருச்சி சென்றோம். முதலில் இரத்தப் பரிசோதனை செய்தனர். சிறிது நேரத்தில் மருத்துவர் எங்களை அழைத்தார். இரத்தத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், ஆஞ்சியோகிராம் செய்வதென்பதே இயலாத காரியம். மீறி செய்தால், இன்று மாலைக்குள் கிட்னி பழுதடைந்துவிடும் என்றார். தொடக்கத்திலேயே பெருந்தடை. தஞ்சைக்குத் திரும்பினோம்.

       நாங்கள் வசிக்கும் தெருவிலேயே வசிக்கும் நண்பர் விஜயகுமார் என்பவர், ஒரு நாள் வீட்டிற்கு வந்தார். தஞ்சை மாதாகோட்டை சாலையில் மருத்துவர் தம்பையா என்று ஒருவர் இருக்கிறார். அவரைப் பாருங்கள் என்றார்.


அகத்தியர் ஆலயம்

     மருத்துவர் தம்பையா ஆங்கில மருத்துவம் பயின்றவரல்ல. தமிழ் மருத்துவர். சித்த மருத்துவர். அகத்தியர் இல்லம் என்னும் பெயரில் மருத்துவமனை ஒன்றினை நடத்தி வருபவர். வடலூர் இராமலிங்க அடிகளாரின் பெரும் பக்தர். அருட்பெருஞ்சோதி அறக்கட்டளை என்னும் பெயரில் அறக்கட்டளை ஒன்றினை நிறுவி, நடத்தி வருபவர்.
 
இடது புறம் அகத்தியல் இல்லம், வலது புறம் இராமலிங்க அடிகளார் தியான மண்டபம்
     தானத்தில் சிறந்தது அன்னதானம்
என்பார்கள். மருத்துவர் தம்பையா அவர்கள், தனது அறக்கட்டளையின் மூலம், நாள்தோறும் நூறு பேருக்குமேல் அன்னதானம் செய்து வருபவர். தினமும் பிற்பகல் 12.00 மணியளவில், அருட்பெருஞ்சோதி அறக்கட்டளை என்னும் பெயருடன் கூடிய, மேற்புறம் மூடிய சிறிய ரக லாரி ஒன்றினை, தஞ்சைப் பெரியக் கோயிலுக்கு அருகில் காணலாம். இந்த லாரியில் தயிர் சாதப் பொட்டலங்கள் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும். பெரியக் கோயிலின் அருகினில் இருக்கும் ஏழை எளியவருக்கு தினமும் அன்னதானம் செய்து வருகிறார்.
 
மிகவும் தூய்மையாய் உணவு தயாரிக்கும் இயந்திரங்கள்
       நண்பர்களே, விரும்பினால் நாமும் இந்த அன்னதான நிகழ்வில் பங்கு பெறலாம். நமது பிறந்த தினத்திலோ, திருமண நாளிலோ, அன்ன தானம் செய்ய விரும்பினால், அந்தத் தேதியினைக் குறித்துக் கொடுத்து, பணம் செலுத்துவோமேயானால், அன்றைய தினத்தில், நமது சார்பாக, அறக்கட்டளையின் மூலம் அன்னதானம் செய்வார்.
 
ஜோதி மயமான இராமலிங்க அடிகளாருக்கு தீப ஒளி வழிபாடு நடைபெறுமிடம்
     அகத்தியர் இல்லத்திற்குள் காலடி எடுத்து வைத்தோமானால், உடனடியாக ஒருவித அமைதியினை உணரலாம். சித்தர்கள் வாழும் புண்ணிய பூமியில் நாமும் நுழைந்ததைப் போன்ற அனுபவத்தினை அடையலாம். அகத்தியர் ஆலயம், இராமலிங்க அடிகளார் தியான மண்டபம் என அமைதி தவழும் அற்புத இடம்.

     நண்பர்களே, கன்னியாகுமரி விவேகானந்தர் பாறைக்குப் படகில் பயணித்திருக்கிறீர்கள் அல்லவா? அங்கே விவேகானந்தர் தியான மண்டபத்தில் சம்மனமிட்ட பல மணித்துளிகள் அமர்ந்து, அமைதியில் ஆழ்ந்திருக்கிறீர்களா? என்னவொரு அமைதி.

      விவேகானந்தர் பாறையில், விவேகானந்தர் தியான மண்டபத்தில், இமயம் போன்ற கவலைகளையும், துயரங்களையும் நொடிப் பொழுதில் மறந்து அனுபவிப்போமல்லவா ஒரு வகை ஆழ்ந்த அமைதியினை, அந்த அமைதியினை, இந்த இராமலிங்க அடிகளார் தியான மண்டபத்திலும் நீங்கள் உணரலாம்.

     தியான மண்டபத்தின் மேடையில், அமர்ந்திருக்கும் அமைதி தவழும் இராமலிங்க அடிகளாரின் திருஉருவைப் பார்த்தாலே, நமது கவலைகள் கரையும்.










   



    அத்தகு அற்புத அகத்தியர் இல்லத்திற்கு நானும், எனது தந்தையும் முதன் முறையாகச் சென்றோம். நாடியை பிடித்துப் பார்த்தார். அடுத்த நொடி, எனது தந்தையின் உடலின் நிலையினை துல்லியமாய் தெரிவித்தார். நான்கே மாதங்களில் எனது தந்தையை குணப்படுத்தினார்.

     எனது தந்தை, இப்பொழுதெல்லாம் காலை நான்கு மணிக்கே எழுந்து நடைப் பயிற்சிக்குச் செல்கிறார். பத்து மாடியானாலும் சளைக்காமல் ஏறுவார். வயது 72.

     நண்பர்களே, கடந்த 3.9.2013 இல் என் மனைவியுடன் சென்று, மருத்துவர் தம்பையாவைச் சந்தித்தேன்.

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டா
மனமது செம்மையானால் வாசியை உயர்த்தவேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்தவேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே
-          அருள்மிகு அகத்தியர்

பழுக்கும் வகையைப் பகருவேன் மக்களே
அழுக்கு மனத்தை அறுத்து அகற்றிடு
இழுக்குப் பிறவித் துயரைக் களைந்திடும்
செழிக்கும் உள்முலம் சிவயோகம் சென்றிடே
-          அருள்மிகு மச்ச முனிவர்
அகத்தியர் இல்லத்தில் நம்மை வரவேற்கும் வரிகள் இவை.

     என்னால் முடியும். நிச்சயம் இந்த தலைவலியை முழுமையாய் குணமாக்குகிறேன் என்றார்.

     மருத்துவர் தம்பையாவின் வார்த்தைகளே, பாதி தலைவலியை குணமாக்கிவிட்டது. ஒருமாத காலமாக, மருத்துவர் தம்பையா அவர்கள் வழங்கிய லேகியங்களை உட்கொண்டு வருகிறார். தேறியும் வருகிறார்.

     இருப்பினும், பத்து நாட்களுக்கு ஒருமுறையேனும், பழைய வலிமையுடன் தலைவலி மீண்டும் வந்து, இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்து தாக்குதல் நடத்தத்தான் செய்கிறது.

      ஆனால் இம்முறை மனதில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. விரைவில் குணமடைவார் என்னும் நம்பிக்கை. நம்பிக்கைதானே வாழ்க்கை.

     நண்பர்களே, பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்கள், அவசியம் அனைவரும் படிக்க வேண்டிய நூல்கள் என மூன்று நூல்களை பரிந்துரைத்துள்ளதை, தாங்கள் நன்கு அறிவீர்கள்.

திருக்குறள்
Light from Many Lamps
Man, the unknown

    இரண்டாவது புத்தகம், விளக்குகள் பல தந்த ஒளி என்னும் பெயரில் கண்ணதாசன் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. நண்பர்களே அவசியம் இந்த நூலை வாங்கிப் படியுங்கள்.

     இந்நூலை எடுத்த எடுப்பிலேயே ஒன்றிரண்டு நாட்களில் படித்து முடித்து விடக் கூடாது. படுக்கை அருகிலோ அல்லது ஒரு அறையின் மேஜையிலோ வைத்துத், தேவையானபோது படித்து, அவ்வப்போது புரட்டி, சிறு சிறு பகுதிகளாக படித்து அனுபவிக்க வேண்டும். ஒரு நண்பனைப் போல் இந்த நூலை மறுபடி, மறுபடி அணுக வேண்டும்.

      இந்நூல் உங்கள் சூழலுக்குப் பொருத்தமான கருத்துக்களைக் கூறும். கவலைப் படுபவர்கள், பிரிவுத் துயரில் இருப்பவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், உடல் நலமில்லாதவர்கள், உணர்வு பாதிப்பில் மூழ்கியவர்கள், நம்பிக்கையை, விசுவாசத்தை இழந்தவர்கள் எல்லோருக்குமே இதில் பயனுள்ள தகவல்கள் உண்டு.

    நண்பர்களே, எனக்கு ஆறுதலையும், நம்பிக்கையினையும் ஏற்படுத்திய புத்தகமும் இதுதான். எனது போதிமரம் இந்நூல்
இதுவும் கடந்து போகும்
இதுதான் இப்போதிமரத்தடியில், நிழல் நாடி ஒதுங்கிய எனக்குக் கிடைத்த உயர் ஞானம்.

இதுவும் சென்று விடும். ஓ இதயமே இதை மறுபடி மறுபடி கூறு
உன் ஆழமான சோகத்தில், ஆழமான துக்கத்தில்
எந்த காயமும் நீடித்திருக்காது – நாளை
ஒருவேளை குணம்  பெறலாம்.

இதுவும் சென்றுவிடும், தானாகவே குறைந்துவிடும்
அதன் வேகம் தணியும்,
சூரியன் அஸ்தமனமாகும் போது காற்று குறைவது போல
தணிந்து அமைதியாகி நீ மறுபடி சமாதானமாயிருப்பாய்.
நடந்தது ஒன்றுகூட நினைவிலிருக்காது.

மறுபடி மறுபடி அதைக் கூறு இதயமே, உன் ஆறுதலுக்காக,
இதற்கு முன் சென்றதைப் போலவே இதுவும் சென்றுவிடும்.
பழைய வலி, மற்ற சோகங்கள்
உங்களிடம் ஒருசமயம் இருந்தவை எல்லாமே

இரவில நட்சத்திரங்கள் வருவது போல் நிச்சயமாய்
காற்று வீசினால் புல் ஆடுவதைப் போல் இயற்கையாய்
உங்கள் துக்கம் துயரம் எதுவாக இருந்தாலும்
இதுவும் கடந்த சென்றுவிடும்.
-          கிரேஸ் நோல் குரோவெல்