ஓவியம் தருவாய், சிற்பம்
உணர்விப்பாய், கவிதை யூட்டக்
காவியம்
தருவாய், மக்கள்
கலகல வெனச்சி ரிப்பு
மேவிடும் விகடம்
சொல்வாய்
மின்னிடும்
காதல் தந்து
கூவுவாய்,
வீரப் பேச்சுக்
கொட்டுவாய்க்
கோலத் தாளே
எனப்
பத்திரிக்கையின் மகத்துவத்தைப் பாடுவார் பாவேந்தர் பாரதிதாசன். நண்பர்களே,
இக்கவிதை வலைப் பூவிற்கும் கச்சிதமாய்ப் பொருந்துகிறதல்லவா?
யாதும் ஊரே
யாவரும் கேளிர்
என்பார் கனியன்
பூங்குன்றனார். கேளிர் என்றால் சுற்றம், நண்பர், உறவினர் என்பது பொருளாகும்.
நண்பர்களே, கனியன் பூங்குன்றனாரின், இவ்வரிகளுக்கு உயிர் கொடுத்து, மெய்ப்பித்து
வருவது வலைப் பூ அல்லவா?
நண்பர்களே, வலைப் பூ நமக்கு புதுப் புது
உறவுகளை, நண்பர்களை, நாள்தோறும் வற்றாத அட்சய பாத்திரமாய் வழங்கிக் கொண்டே
இருக்கிறது.
நண்பர்களே, வலை உலகின் அட்சய பாத்திரமே என்
இல்லம் நாடி வந்தது, எங்களையும், தன் சுற்றமாய், நட்பாய், உறவாய் இணைத்துக்
கொண்டது என்று கூறினால் நம்புவீர்களா?
உண்மை நண்பர்களே, உண்மை.
கடந்த 7.10.2013 திங்கட் கிழமை காலை 8.30
மணியளவில், தஞ்சைக்கு, என் இல்லத்திற்கு, தன் மனைவியுடன் வருகை தந்தார் அன்பின்
சீனா.
தமிழ் கற்றவர். புலவர் இல்லை. ஆனால்
புரவலர்.
நாமெல்லாம் கணினியில் எழுதி, நமது
எழுத்துக்களைக் கண்டு மகிழ்கிறோம். இவரோ பிறரை எழுதவைத்து அழகு பார்ப்பவர்.
புத்தம் புது வலை உலக எழுத்தாளர்களை அறிமுகப் படுத்துவதில் ஆனந்தம் அடைபவர்.
வலைப்
பதிவு உலகின்
பிதாமகர்
வலைச்
சரம்
நிருவாகக்
குழுவின் தலைவர்.
எனக்கு
எழுதுவதில் இருந்த இன்பத்தை விட, பதிவுகளைப் படித்துப் பார்ப்பதிலும், பொருள்
பொதிந்த மறுமொழிகள் எழுதியதிலும் அதிக இன்பம் பெற்றேன். அதிக நேரம் செலவிட்டேன்.
அதிக நண்பர்களைப் பெற்றேன் என்கிறார்.
சொல்ல மறந்து விட்டேன் நண்பர்களே இவரது
முழுப் பெயர் சிதம்பரம் காசி விஸ்வநாதன் என்பதாகும். காரைக் குடியினைச்
சேர்ந்தவர். சிதம்பரம் என்னும் பெயரினை அங்குள்ளோர், சீனா தானா என்றுதான்
அழைப்பார்கள்.
இவரோ தானா வைத் தனியே விட்டு
விட்டு, அன்பை இணைத்துக் கொண்டார். அன்பின் சீனா ஆனார்.
அன்பின் சீனா அவர்களின் மனைவி திருமதி
மெய்யம்மை ஆச்சி.
ஏதோ படிக்க வேண்டும் என்று படித்தேன்.
ஆனால் படித்தால்தான் சோறு என்பதை அசை போட்டே வளர்ந்தேன். கற்றபோது சுவைக்கவில்லை
கல்வி. கற்பித்தபோது சுவைத்தது. என் சொல்லைக் கேட்டு சின்னஞ்சிறு உள்ளங்கள்
மயங்கின. அவர்களை நல்லவர்கள் ஆக்க வேண்டும் என்றே நான் நல்வழி நடந்தேன். இதுதான்
நான், இது – மெய். இதைத் தவிர வேறில்லை எனக்கு என்று கூறுகிறார்.
வாக்கு
கற்றவன் வாத்தியார்
என்பர் நம்
முன்னோர். இவர் முழுமையாக வாக்கு கைவரப் பெற்றவர். இவரது பேச்சு தமிழருவி.
தற்பொழுது இலண்டனில் வசிக்கின்ற, இவரது
மகள் கூறுவாராம்
எனது
தாயும் தந்தையும்
திருக்குறளின்
இரண்டு அடிகள்.
திருமதி மெய்யம்மை ஆச்சி அவர்களும், ஒரு
வலைப் பூ வைத்திருக்கிறார். வலைப் பூவின் பெயரே, இவரது உள்ளத்தை நமக்கு நன்கு
உணர்த்தும்.
பட்டறிவும் பாடமும்
நான் பிறந்தது தஞ்சையில். எட்டாம் வகுப்பு வரை
படித்தது தஞ்சையில். 1963 ஆம் ஆண்டு மதுரையில் குடியேறினோம். தஞ்சை மண்ணில் கால்
பதித்து, ஆண்டுகள் 50 கடந்து விட்டன. பிறந்த வீட்டினையும், படித்த பள்ளியினையும்,
மீண்டும் ஒரு முறை பார்க்க ஆவலாய் உள்ளேன் என எனக்கு முன்னரே மின்னஞ்சல் அனுப்பி
இருந்தார் அன்பின் சீனா.
ஞாபகம்
வருதே
ஞாபகம்
வருதே
நினைவலைகளை
நோக்கி ஓர் இனிய பயணம் தொடங்கினோம்.
முதன் முதலில் அகத்தியர் இல்லம்
சென்றோம். அகத்தியர் வாழும் இல்லம் என்னும், எனது முந்தையப் பதிவினைப்
படித்தமையால், முதலாவதாக அகத்தியர் இல்லம் செல்ல விரும்பினார்.
அகத்தியர் இல்லத்தில், மருத்துவர்
தம்பையா அவர்களை அறிமுகப்படுத்தினேன். ஐந்து நிமிடம், பத்து நிமிடமல்ல, இரண்டு
மணி நேரத்திற்கும் மேல், பேசினர், பேசினர், பேசிக்கொண்டே இருந்தனர்.
செவிக்குணவு இல்லாத போழ்து
சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்
தமிழாசிரியை திருமதி மெய்யம்மை ஆச்சியும்,
தமிழ் உணர்ந்த ஞானி தம்பையா அவர்களும், பேசுவதைக் கேட்டேன், கேட்டேன், மெய் மறந்து
கேட்டுக் கொண்டேயிருந்தேன்.
அன்பின் சீனா அவர்கள் கேட்டார், மனம்
என்பது நமது உடலில் எங்கிருக்கிறது?
அதன்பின் நடந்த உரையாடலை விவரிக்கும் வயதோ,
அறிவோ, அனுபவமோ எனக்கில்லை. மிகவும் தத்துவார்த்தமான உரையாடல் அது. பரவச நிலையில்
அமர்ந்திருந்தேன்.
சுமார் இரண்டு மணி நேரம் கழித்து,
அகத்தியர் இல்லத்தில் இருந்து, புறப்பட மனமின்றி புறப்பட்டோம். புறப்படுவதற்கு
முன் அகத்தியர் இல்லத்தின், அருட்பெருஞ் ஜோதி அறக்கட்டளையின் சார்பாக, தினந்தோறும்
நடத்தப் பெறும் அன்னதானத்தின் ஒரு நாள் செலவினை தான் ஏற்பதாகக் கூறி ரூ.3000
நன்கொடை வழங்கினார்.
யானையை விழுங்கும் பாம்பு |
சீனா அவர்கள், தான் பிறந்த வீடு, மேல
வீதியும் தெற்கு வீதியும் சந்திக்கும் இடத்தில், சங்கட மடத்தினை ஒட்டியவாறு இருந்தது
என்றார். இரு வீதிகளும் இணையும் இடத்திற்குச் சென்றோம். புதுப் புதுக்
கட்டிடங்கள். இடையே இரண்டே இரண்டு பழமை மாறாத ஓட்டு வீடுகள்.
இடது புறம் இருக்கிறதே ஒரு ஓட்டு வீடு,
வீட்டின் முன் புறம் ஒரு சிறிய பெட்டிக் கடை. இந்த வீடு, இந்த வீடுதான் நண்பர்களே,
நமது அன்பின் சீனா அவர்கள் பிறந்த வீடு. மழலையாய் தவழ்ந்த வீடு.
அடுத்த நொடி சீனா குழந்தையானார். வீட்டைச்
சுற்றிச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்தார். நண்பர்களே, 50 ஆண்டுகளுக்குப் பிறகு,
நாம் பிறந்த வீட்டினைப் பார்ப்பதற்கு இணையான மகிழ்ச்சி ஏதேனும் இருக்கிறதா என்ன?
அன்பின் சீனா அவர்கள் சிறுவனாய் இருந்த பொழுது, சீனாவின் நண்பர்கள் பலர், கல்வி பயின்ற பள்ளி, கல்யாணசுந்தரம் மேனிலைப் பள்ளி. சென்றோம். அப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு பாண்டியராஜன் அவர்கள் எனது நண்பர். தலைமையாசிரியரைச் சந்தித்தோம். தாராளமாகப் பள்ளியைச் சுற்றிப் பாருங்கள் என்றார். கண்களில் மகிழ்ச்சி மின்ன, ஒவ்வொரு வகுப்பாகப் பார்த்தார் சீனா. சில மணித்துளிகள் கடந்த பின் அங்கிருந்து புறப்பட்டோம்.
ஒவ்வொரு மனிதனாலும், மறக்க இயலாத பள்ளி
என்று ஒன்று இருக்குமானால், அது அவர்கள் முதன் முதலில் கல்வி கற்க காலடி
எடுத்து வைத்த பள்ளியாகத்தான் இருக்கும்.
இதோ, இதுதான் நண்பர்களே, அன்பின் சீனா அவர்கள், அரைக்கால் டிராயர், சட்டையுடன்,
ஐந்து வயதில் தயங்கித் தயங்கி நுழைந்த முதல் பள்ளி. அன்பின் சீனா அவர்கள் ஒன்றாம்
வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஐந்தாண்டுகள் தொடக்கக் கல்வியைப் பயின்ற பள்ளி.
டி.கே.சுப்பையா நாயுடு தொடக்கப் பள்ளி
இப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும், எனது
நண்பர் திரு ஆறுமுகம் அவர்கள் அன்போடு வரவேற்றார். தலைமையாசிரியை முகம் மலர
வரவேற்றார். சிறிய பள்ளிதான். எனினும் ஆயிரம், ஆயிரம் இளம் சிறார்களுக்கு
எழுத்தறிவித்த ஆலயமல்லவா.
தலைமையாசிரியர் அறையின் சுவர்களில் மாட்டப்
பெற்றிருந்த படங்களை சீனா ஆர்வமுடன் பார்க்கிறார். சீனா அவர்களின் தலைமையாசிரியர் திரு
வேணுகோபால் என்பவர், ஆசிரியர் தினம் கொண்டாடப் படுவதற்கு காரண கர்த்தாவான,
மேதகு முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருட்டிணன் அவர்களிடமிருந்தே,
நல்லாசிரியர் விருது பெறும் படம் சீனாவின் கண்களைக் கவர்ந்தது. எனது
தலைமையாசிரியர், எனது தலைமையாசிரியர் என குழந்தைபோல் கூறினார்.
சீனா அவர்கள் 6, 7 மற்றும் 8 ஆம்
வகுப்புகளைப் பயின்ற பள்ளி வீரராகவா மேனிலைப் பள்ளி. மங்கல விலாஸ்
எனப்படும் அரசர் காலத்துக் கட்டிடம். தரைத் தளத்தில் ஒரு காலத்தில் நீதி மன்றம்
இயங்கி வந்தது. முதல் தளத்தில் பள்ளியின் 6,7 மற்றும் 8 ஆம் வகுப்புகள் இயங்கி
வருகின்றன.
இன்று தரைத் தளம் பயன்பாடின்றி பூட்டப் பட்டுள்ளது.
மெதுவாகப் படிகளில் ஏறி, முதல் தளத்திற்குச் சென்றோம். அங்கிருந்த ஆசிரியைகள் வரவேற்றனர்.
சீனா அவர்கள் அப் பள்ளியின் முன்னாள் மாணவர்
என்பதை அறிந்தபோது, அந்த ஆசிரியைகளின் மகிழ்ச்சி இரட்டிப்பானது.
இதோ, இதுதான் எனது வகுப்பு என்றார்
சீனா. அங்கு வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவர்களிடம் சிறிது நேரம் பேசுங்களேன்
என்றேன்.
மாணவர்களே, உங்களைப் போல் சிறுவனாய் நான்
பயின்ற பள்ளி இது. நான் பயின்ற வகுப்பு இது. இன்று நான் வாழ்வின் உயர்ந்த நிலையில்
இருப்பதற்கு இந்த பள்ளிதான் காரணம். கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கடந்த நிலையில், எனது
பள்ளியை, எனது வகுப்பைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையினால் இன்று இங்கு
வந்துள்ளேன். மாணவர்களாகிய நீங்கள், நல்ல முறையில் பயின்று, என்னைப் போல் வாழ்வில்
உயர வேண்டும் என்று மாணவர்களை வாழ்த்தினார்.
அடுத்த நொடி மாணவர்கள், அன்பின் சீனா
அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். கை கொடுத்து மகிழ்ந்தனர். தங்களது புத்தகத்தின், முதல்
பக்கத்தில் கையொப்பமிட்டுக் கொடுங்கள் எனப் புத்தகத்துடன் சீனாவைச் சுற்றி
வளைத்தனர்.
ஒவ்வொரு மாணவனுக்கும் கையொப்பமிட்டுக்
கொடுத்தார். அப்பொழுது அவர் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டுமே. தான்
பயின்ற பள்ளியில், தான் பயின்ற வகுப்பில் அமர்ந்து, மாணவர்களுக்கு ஆட்டோகிராப்
போடும் பொழுது ஏற்படும் இன்பத்திற்கு எல்லைதான் ஏது. இதற்குத் தானே ஆசைப் பட்டார்
அன்பின் சீனா.
நேரம் பிற்பகல் 2.30 ஆகிவிட்டதால்,
வீட்டிற்குத் திரும்பினோம். சிறிது நேர ஓய்வு. மீண்டும் 3.30 மணிக்குப்
புறப்பட்டோம்.
சரசுவதி மகால் நூலகம் சென்றோம். சுற்றுலா
வந்த மாணவ, மாணவியர் வரிசையாய் நூலகத்திற்குள் சென்று கொண்டிருந்தனர். சரசுவதி
மகால் நூலகத்தில் பணியாற்றும், எனது நண்பர் மணி.மாறன் என்கிற சரபோஜி
அவர்களைச் சந்தித்தோம். நூலகத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் அழைத்துச் சென்று
விவரங்களை எடுத்துரைத்தார்.
பின்னர் அருங்காட்சியகம் பார்த்தோம். எனது
அலைபேசி அழைத்தது. மறு முனையில் ஹரணி. எங்கிருக்கிறீர்கள் என்றார். அரண்மனையில்
என்றேன். அடுத்த பத்தே நிமிடங்களில் நேரில் வந்தார். தஞ்சையின் மிக முக்கியப்
பதிவர் ஹரணி. அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்.
ஹரணி |
அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய திமிங்கலத்தின் எலும்புக் கூட்டின் தலைப் பகுதியில் சீனாவுடன் ஹரணி |
திமிங்கலத்தின் வால் பகுதியில் சீனாவுடன் நான் |
திருமதி மெய்யம்மை ஆச்சி அவர்கள்
அண்ணாமலையில் பயின்றவர். ஹரணியோ அன்னாமலையில் பணியாற்றுபவர். கேட்கவும் வேண்டுமா?
அதிலும் ஹரணிக்கு, அன்பின் சீனாவுடனும், திருமதி மெய்யம்மை ஆச்சியுடனுமான முதல்
சந்திப்பு இது. உரையாடல் நீண்டு கொண்டே சென்றது. நண்பர்களே, மெத்தக் கற்றவர்களின்
உரையாடலைக் கேட்பதும் இன்பம்தானே. கேட்டேன், ரசித்தேன்.
பின்னர். புன்னை நல்லூர் மாரியம்மன்
கோயில் சென்றோம். தொடர்ந்து மேல வீதியில் சங்கர நாராயண சாமி கோயில்,
காமாட்சி அம்மன் கோயில்.
இரவு வீடு திரும்ப மணி 9.00 ஆகிவிட்டது.
இருவரும் எனது இல்லத்திலேயே தங்கினர்.
மறுநாள் காலை வைத்தீஸ்வரன் கோயில்
செல்லப் புறப்பட்டனர். எனது மனைவியையும் உடன் அழைத்துச் சென்றனர். நான்
பள்ளிக்குச் சென்றேன்.
மாலை 4.00 மணியளவில் மூவரும் வீடு
திரும்பினர். வைத்தீஸ்வரன் கோயிலில் வழிபட்டதை மறக்க இயலாது. அருமையான தரிசனம்
என்றனர். பின்னர் பிரியா விடை பெற்று மதுரை புறப்பட்டனர்.
நண்பர்களே வலையில் மீன்கள் சிக்கும். ஆனால்
வலைப் பூவிலோ, புதுப் புது உறவுகள் மலர்ந்து மனம் வீசுகின்றன.