01 செப்டம்பர் 2013

திருவள்ளுவர் தவச்சாலை

   
  

    
      வையத்துள்  வாழ்வாங்கு  வாழ்பவன்  வானுறையும்
      தெய்வத்துள்  வைக்கப்  படும்

என்றார் திருவள்ளுவர். இப்புவியில் வாழும்போதே, தங்கள் சொல்லால், எழுத்தால், செயலால், தங்கள் வாழ்க்கை முறையால் தெய்வத்திற்கு இணையாக வாழ்வாங்கு வாழ்ந்து வருபவர்கள் பலர், இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

     நண்பர்களே, நாம் அனைவரும், நமது வாழ்வின் பல்வேறு கால கட்டங்களில், பயணங்கள் பலவற்றை மேற்கொண்டவர்கள்தான். புனிதத் தலங்கள் பலவற்றைக் கண்டு, மெய்மறந்து வணங்கி, இறைவனோடு ஒற்றெணக் கலந்து பரவசப் பட்டவர்கள்தான்.

      நண்பர்களே, ஒரு முறை, ஒரே ஒரு முறை என்னோடு வருகிறீர்களா?அன்னைத் தமிழின் வளர்ச்சிக்காகவே தனது வாழ்வின் ஒவ்வொரு நொடியினையும் அர்ப்பணித்து, தெய்வத்திற்கு இணையாக வாழ்வாங்கு வாழ்ந்து வருகின்ற ஒரு தமிழ் முனிவரின் தமிழ்த் தலத்திற்குத் தங்களை அழைத்துச் செல்ல விரும்புகின்றேன். வருகிறீர்களா?

     நன்றி நண்பர்களே, அழைத்தவுடன், சிறிதும் தயங்காது, மனதில் மகிழ்ச்சியோடும், உதட்டில் மலர்ச்சியோடும் பயணப்பட இசைந்தமைக்கு நன்றி.

     வாருங்கள், வாகனம் தங்களுக்காகத் தயாராகக் காத்திருக்கின்றது. அமருங்கள். புறப்படலாமா?

     இதோ தஞ்சையிலிருந்து புறப்பட்டு விட்டோம். இதோ திருச்சி சத்திரம் பேரூந்து நிலையம். இதோ நமது வாகனம் கரூர் சாலையில் பயணிக்கின்றது. வலது புறம் காவிரி. இடது புறம் சிறு சிறு சிற்றூர்கள். முத்தரச நல்லூரைத் தாண்டிவிட்டோம்.

     இதோ அல்லூர். இதுதான் நண்பர்களே, நாம் காண வந்த தமிழ்த் தலம். புண்ணிய பூமி.


     திருக்குறளுக்குக் கோயில் எழுப்பி, வள்ளுவமாய், வாழும் வள்ளுவராய் வாழ்ந்து வரும்,
தமிழ்க் கடல்
உலகப் பெருந் தமிழர்
செந்தமிழ் அந்தணர்
முதுமுனைவர் புலவர் இரா.இளங்குமரனார் அவர்களின்
திருவள்ளுவர் தவச்சாலை.


    
வணக்கம் ஐயா, வாருங்கள். நம்மை அன்போடு அழைக்கின்றார்.

     அகவை 85ஐக் கடந்தபோதும், மலர்ந்த முகம், ஒடிசலான தேகம், தெளிவான தமிழ்ச் சிந்தனை, இனிமையானச் சொற்களுக்குச் சொந்தக்காரர்.     விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப் புத்தூர் அருகேயுள்ள, வாழவந்தாள் புரம் என்னும் சிற்றூரில், ராமு – வாழவந்தாள் தம்பதியினரின் அருமை மகனாய்த் தோன்றியவர்.

     பள்ளிக் கூடமே இல்லாத, வாழவந்தாள் புரத்தில், பள்ளிக் கூடம் ஒன்றினை உருவாக்கி, தானே ஆசிரியராகவும் பணியாற்றியவர். பின்னர் கரியவலம் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

     ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன், தனது குடும்பத்தினரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு, தனது ஓய்வூதியத் தொகை முழுவதையும் செலவிட்டு, திருச்சி அல்லூரில் திருவள்ளுவர் தவச் சாலையினை நிறுவித், தமிழ் முனிவராய் வாழ்ந்து வருபவர்.

       திருக்குறள் வகுப்புகளைத் தமிழகம் முழுவதும் நடத்தி வருபவர். இதுவரை ஐயாயிரத்திற்கும் மேற்பட்டத் திருமணங்களை தமிழ் முறைப்படி நடத்தி வைத்துள்ளார். தொடர்ந்து நடத்தியும் வருகிறார். ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.

     இளங்குமரனார் எழுதிய திருக்குறள் கட்டுரைகள் என்னும் நூலின் பத்து தொகுதிகளை, 1963 இல் வெளியிட்டவர் யார் தெரியுமா? இந்தியத் திருநாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு.

     புதுமணை புகுவிழா, பூப்புனித நீராட்டு விழா, காதணி விழா, மணி விழா, பெயர் சூட்டு விழா மற்றும் இறுதிச் சடங்குகள் உட்பட அனைத்தையும், தமிழ் முறைப்படி. தூய தமிழிலே பாங்குடன் செய்து வருபவர்.

     தமிழில் எப்படி விழாக்களை நடத்துவது? என்பதை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், தமிழ் நெறிக் கரணங்கள் என்னும் நூலொன்றினையும் எழுதி வெளியிட்டவர்.

     தனது காலத்திற்குப் பிறகும், இப்பணியினைத் தொடர்ந்து திறம்பட நடத்திட, தமிழகம் முழுவதும் தமிழறிஞர்கள் பலருக்கும் பயிற்சி அளித்து, தமிழின் பெருமையினைக் காத்து வருபவர்.

பணியுமாம் என்றும் பெருமை
என்பார் வள்ளுவர். இதற்குப் பொருள் விளங்காதவர்கள், ஐயா அவர்களைக் கண்ட ஒரு சில நொடிகளிலேயே, இக்குறளின் பொருளை முழுமையாய் உணர்வர்.

     தமிழ்க் கடல் இளங்குமரன் ஐயா அவர்கள் தனது வாழ்வியல் அனுபவங்களைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டுள்ளார். நூலின் தலைப்பு என்ன தெரியுமா? ஒரு புல்.

             மனிதரெலாம்  அன்புநெறி  காண்ப  தற்கும்
                   மனோபாவம்  வானைப்போல்  விரிவடைந்து
             தனிமனித  தத்துவமாம் இருளைப் போக்கிச்
                   சகமக்கள்  ஒன்றென்ப  துணர்வ  தற்கும்
             இனிதினிதாய்  எழுந்தஉயர்  எண்ண  மெல்லாம்
                   இலகுவது  புலவர்தரு  சுவடிச்  சாலை
             புனிதமுற்று  மக்கள்புது  வாழ்வு  வேண்டில்
                   புத்தகசா  லைவேண்டும்  நாட்டில்  யாண்டும்

எனப் பாடுவார் பாவேந்தர் பாரதிதாசன். பாவேந்தரின் எண்ணம் செயலாக்கம் பெற்ற இடம்தான் தமிழ்க் கடலின் இல்லம். இல்லம் என்பது தவறு நண்பர்களே. நூலகம் என்பதுதான் உண்மை. வீட்டிற்கொரு நூலகம் அமைக்கச் சொல்வார் பாவேந்தர். ஆனால் இளங்குமரனாரே நூலகத்தில், தனது இல்லத்தை அமைத்தவர்.

     பாவாணர் நூலகம். சுமார் இருபத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள். மலைப்பு ஏற்படுகிறது. அத்துனைப் புத்தகங்களின் ஒவ்வொரு ஏட்டிலும் உள்ள எழுத்துக்கள் அனைத்தையும், கரைத்து ரசித்துக் குடித்தவர் இளங்குமரனார். திருக்குறளுக்கு இதுவரை இவ்வுலகில் எழுதப்பட்ட உரைகள் அனைத்தும் இவரிடம் தஞ்சம். இளங்குமரன் ஐயா அவர்களே இதுவரை, திருக்குறளுக்காக மட்டும் எழுபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதி உள்ளார். வெளிநாட்டினர் உட்பட, யார் வேண்டுமானாலும், இங்கு வந்து தங்கி ஆய்வு மேற்கொள்ளலாம்.     அடுத்ததாகக் கலைக் காட்சியகம். தமிழ் இனம், தமிழர் வாழ்வு, தமிழ் இலக்கியங்களுக்காகத் தொண்டாற்றிய, நூற்றுக் கணக்கானத் தமிழறிஞர்களின் படங்களைக் கொண்ட கலைக் காட்சியகம் ஒன்றினையும் தனது இல்லத்திலேயே ஏற்படுத்தி பராமரித்து வருகின்றார். இக்கலைக் காட்சியகம், இதுவரை நாம் கண்டிராத வேறொரு புதிய உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும்.

      இளங்குமரனார் ஐயா அவர்கள், தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழ் மாமலைகளின் அன்பிற்கு உரியவர். அப்பெரியோர்கள், இளங்குமரனாருக்குத், தங்கள் கைப்பட எழுதியக் கடிதங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.
 
சோமசுந்தர பாரதியாரின் கடிதம்
               
மறைமலை அடிகளாரின் கடிதம்
                பார்க்கும் இடமெல்லாம் பல்கலைக் கழகம்
                பார்வை சரியாக இருந்தால்

                உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்
                உள்ளம் சிறுத்தால் உறவும் பகையே

                காரணம் சொல்பவன் கடமை செய்யான்
                தம்துயர் தாங்கார் பிறர்துயர் தீரார்

                வாழ்ந்த நாளிலேயே வீடுபேறு பெறாதவன்
                வீழ்ந்த பின்னரா பெறுவான்

கலைக் காட்சியகத்தின் சுவர் முழுவதும் காணப்படும் வாசகங்கள், நம்முள் எழுச்சியினையும், கிளர்ச்சியினையும், புதிய சிந்தனைகளையும் உண்டாக்குகின்றன.

     இல்லத்தின் பின்புறம், இயற்கையை மனிதம் பாழாக்காதிருக்க, நல் அறிவுரைகளை வாரிவழங்கும் இயற்கை நல நிலையம்.

     திருவள்ளுவர் தவச்சாலையின் வாயிற் கதவுகளைத் திறந்து கொண்டு உள்ளே செல்வோமானால், வலது புறத்தில் ஓர் ஆலயம்.

                    

                         
                       திருக்குறள் நம்மறை – நெறி

                      திருக்குறள் வாழ்வியல் நடைநூல்
                      அது, மாந்தரை மாந்தர் ஆக்கும்
                      அது, மாந்தரை சான்றோர் ஆக்கும்
                      அது, மாந்தரை தெய்வம் ஆக்கும்
                      மாந்தப் பிறவியின் நோக்கு, தெய்வமாதல்

என நமக்கு அறிவுறுத்தி, முதலில் மனிதனாகலாம் வா, என நம்மை அழைக்கிறது திருக்குறள் ஆலயம்.

      ஆலயத்தின் கருவறையில், குறளின் அறத்துப் பால், பொருட் பால், இன்பத்துப் பால் மூன்றும் மும் மலைகளாய் காட்சியளிக்கின்றது. நடுவினில திருவள்ளுவர்.

     மும் மலைகளும் சிறுசிறு கற்களால் வடிவமைக்கப் பட்டவை. இளங்குமரனார் ஐயா அவர்களின் திருவடி படாத ஊரே தமிழகத்தில் இல்லை எனலாம். தமிழகத்தில் தான் காலடி பதித்த, ஒவ்வொரு ஊரில் இருந்தும், 1984 முதல் 1994 வரை பத்தாண்டுகளில், இவர் சேகரித்த கற்களின் எண்ணிக்கை 1330.

     அறத்துப் பாலில் 380 குறள்கள். எனவே 380 கற்களை உடைய ஒரு மலை. பொருட் பால் பெரியது. மொத்தம் 700 குறட்பாக்கள். எனவே 700 கற்களை உடைய ஒரு பொருட்பா மலை. இன்பத்துப் பால் சிறியது. மொத்தமே 250 குறள்கள்தான். எனவே 250 கற்களை உடைய ஒரு சிறு மலை.

     திருக்குறளின் முப் பாலையும் குறிக்கும், மும் மலைகளுக்கு முன்னதாக, மனிதனின் இரு பாதச் சுவடுகள்.

     ஏன் தெரியுமா? திருக்குறள் என்பது படிப்பதற்கல்ல. பின் பற்றி நடப்பதற்கு என்பதனை உணர்த்தவே, இப்பாதச் சுவடுகள்.

     இத் திருக்குறள் ஆலயத்தில் தீப ஒளி வழிபாடு கிடையாது. ஊது பத்தி வழிபாடு மட்டும்தான். ஏன் தெரியுமா? இதற்குப் பெரும்புலவர் ஐயா அவர்கள் கூறும் விளக்கம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். அதனை அவரே கூறுகிறார் கேளுங்கள்.

     ஊது பத்தியினைப் பாருங்கள். அதன் உருவத்தினை நோக்குங்கள். ஒரு மெல்லிய குச்சியினை, நெருப்பினையும், புகையினையும், நறுமனத்தினையும் உண்டாக்கும் ஒரு பசை பற்றியிருக்கின்றது. ஊது பத்தியினைப் பற்றவைப்போமேயானால், குச்சியினை பசை பற்றியிருக்கின்றவரை நெருப்பு தொடரும். பற்றியிருக்கும் பசை முடிந்தவுடன் ஊது பத்தி நின்றுவிடும். அதுபோலத்தான் மனித வாழ்வும்.

    
நம் மனத்தினை ஆசை, பேராசை, வெறுப்பு, கோபம் என்றும் பற்று, பற்றியிருக்கும் வரைதான், போராட்டங்களும், வருத்தங்களும், துயரங்களும், வேதனைகளும். பற்றைத் துறப்போமானால் தெய்வ நிலையினை அடையலாம்.

     திருக்குறள் கோயில் வளாகத்திலேயே மன வள நிலையம் ஒன்றினையும் நடத்தி வருகிறார்.

     ஆண்டுதோறும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வாரமும், பயணம், பயணம், பயணம்தான். திருமணம், சொற்பொழிவு என்று ஓயாத பயணமே இவரின் வாழ்க்கை. ஆனால் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமை அன்று மட்டும், உலகப் பெருந்தமிழரை, திருவள்ளுவர் தவச்சாலையில் சந்திக்கலாம்.

     ஒவ்வொரு வாரமும், செவ்வாய்க் கிழமையன்று, அல்லூரில் இருந்தும், பிற பகுதிகளில் இருந்தும், குடும்பப் பிரச்சினைகளைச் சுமந்து கொண்டு, மீள வழியின்றித் தவிக்கும் அன்பர்களுக்கு, தக்க மன நல ஆலோசனைகளை வழங்கி, அவர்களின் சிந்தனையினைத் தொடும் வண்ணம், எடுத்துரைத்து, புத்தம் புது மனிதராய் மாற்றி அனுப்புவதை வழக்கமாய் கொண்டுள்ளார்.

                  தேரிழுக்கச்  செல்வாரில்  தீயணைக்கச் செல்வாரே
                நேருயர்ந்த மேலார் நினை
என்னும் உன்னத எண்ணத்தின் வழி நின்று, உயரிய வாழ்வினை வாழ்ந்து வரும் இளங்குமரனார் ஐயா , அவர்கள் பேசத் தொடங்கினாலே தமிழருவி கொட்டும், தமிழமுதம் பொங்கும்.

      நா து என்னும் சொல்லொன்றினைக் கூறினார். சிலப்பதிகாரத்தில் நா து என்னும் சொல் வருகிறது. நா என்றால் நாக்கு. து என்றால் துணை. அதாவது பேச்சுத் துணை.

     ஒரு பெண் திருமனமாகி, புகுந்த வீட்டிற்குச் செல்லும் பொழுது, தன் கணவரின் சகோதரியே, புது மணப் பெண்ணிற்கு சிறந்த பேச்சுத் துணையாய், தோழியாய் அமைவார். எனவே கணவரின் சகோதரியைக் குறிக்கும் சொல்லே நா து என்பதாகும். இது ஒரு காரணப் பெயர். பின்னாளில் இப்பெயர் மருவி, மாறி இன்று, நாத்தனார் என வழங்கப் படுகிறது என்றார். பெரும் புலவர் இளங்குமரனார் ஒரு நடமாடும் தமிழ்க் களங்சியம்.


                    
                        நல்லோரைக் காண்பதும் நன்றே
                     நல்லோர் சொல் கேட்பதும் நன்றே
என உரைப்பர் நம் முன்னோர். அப்படிப் பட்ட ஒரு நல்லோரை, தமிழில் இமயம் போல், உயர்ந்தோரை, வள்ளுவத்தின் வழி நின்று வாழ்ந்து வருவோரைச் சந்தித்தது, தங்களுக்கும், மகிழ்ச்சியினை, மன நிறைவினை, புத்துணர்ச்சியினை, உங்கள் உதிரத்தில் கலந்திருக்கும் என நம்புகின்றேன் நண்பர்களே.

     இச்சிறியேனின் அழைப்பினை ஏற்று, என்னுடன் பயணித்தமைக்கு, நன்றி நண்பர்களே. மீண்டும் சந்திப்போமா..