14 மார்ச் 2014

இரோம் சர்மிளா

     
அது ஒரு பேரூந்து நிற்குமிடம். அதிகாலையின் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டியபடி, பேரூந்திற்காகப் பலர் காத்திருக்கிறார்கள். ஆண்களும், பெண்களும் கலந்து நிற்கிறார்கள். அப்பொழுது, அவ்வழியாகச் சென்ற பச்சை நிற இராணுவ வாகனம், பேரூந்து நிறுத்தத்திற்கு முன் வந்ததும் நிற்கிறது. இரண்டு இராணுவ வீரர்கள் வண்டியில் இருந்து இறங்குகிறார்கள். இருவர் கைகளிலும் இயந்திரத் துப்பாக்கிகள். பேரூந்திற்காகக் காத்திருப்பவர்களை நோக்கி இருவரும் சரமாரியாகச் சுடுகிறார்கள்.


     அறுபத்தி இரண்டு வயதான லேசாங்பம் என்னும் வயதான பெண்மணி முதல், பதினெட்டே வயதான, வீரத்திற்காக தேசிய விருதினைப் பெற்ற, சினாம்சந்தரமணி என்னும் இளைஞன் வரை, அங்கு பேருந்திற்காகக் காத்திருந்த பத்து பேரும், அடுத்த நொடி, வேரறுந்த மரங்கள் போல், தரையில் விழுந்து துடிதுடித்து இறக்கின்றனர்.

     இராணுவ வீரர்கள் இருவரும், அமைதியாய், எதுவுமே நடக்காதது போல், வண்டியில் ஏறுகின்றனர். வாகனம் விரைகிறது.

     நண்பர்களே, படிக்கவே உள்ளம் நடுங்குகிறதல்லவா? இது கற்பனையல்ல, நிஜம். நெஞ்சைச் சுடும் நிஜம்.

     மணிப்பூர் மாநிலம், இம்பாலில் இருந்து, பதினாறு கி.மீ., தொலைவிலுள்ள மாலோம் என்னும் பகுதியில்தான் இந்தக் கொடூரம் அரங்கேறியது.
    
பத்து பேர் கொல்லப்பட்டதன் நினைவிடம்
நண்பர்களே, இந்தக் கொடூரம் நடந்தது, 2000 வது ஆண்டு நவம்பர் இரண்டாம் நாள் வியாழக் கிழமை. இக்கோரக் கொலையினைக் கண்டு மணிப்பூர் நடுங்கியது. சுதந்திர இந்தியாவின் ஜாலியன் வாலாபாக்.

      

   அந்தப் பெண்ணின் வயது 28. இரு நாட்களாகவே அவர் மிகவும் குழப்பம் அடைந்திருந்தார். நாளிதழ்களிலும், தொலைக் காட்சிகளிலும், பேரூந்து நிலையப் படுகொலையைப் படங்களாகப் பார்த்த நொடியில் இருந்தே, அவருடைய கோபமும், வேதனையும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

     இனியும் அமைதியாய் அமர்ந்து இருக்க முடியாது என்பது புரிந்தது. பரிகாரம் தேட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதையும் அவர் உணர்ந்திருந்தார். இருப்பினும், தனியொரு ஆளாய் என்ன செய்ய இயலும்? யோசித்தார். அவர் பெரிதும் நேசிக்கும் மகாத்மா காந்தி, தனது பொக்கைப் பல் தெரிய, மனதில் தோன்றி புன்னகைத்தார். என்ன செய்ய வேண்டும் என்பது, அடுத்த நொடியே அவருக்குத் தெளிவாய் தெரிந்தது.

     நவம்பர் 5, ஞாயிற்றுக் கிழமை. அவர் தனது அம்மாவின் அருகில் அமர்ந்து, அவரது கரங்களைப் பற்றிக் கொண்டு கூறினார், நம்முடைய நாட்டிற்காக, நான் சிலவற்றைச் செய்யப் போகிறேன். அதற்கு, எனக்கு, உன்னுடைய ஆசிர்வாதம் வேண்டும்.

     தாய் முதலில் கலக்கம் அடைந்தாலும், மனதைத் தேற்றிக் கொண்டு, மகளின் தலையில் கை வைத்து ஆசிர்வாதம் செய்தார்.

     நிரபராதிகளான பத்து பேரை, இராணுவம் கொலை செய்த அதே இடத்தில், அவர் தன்னுடைய உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
       நண்பர்களே, இந்த வீர மங்கை, இரும்புப் பெண்மணியின் பெயர் இரோம் சர்மிளா. சொன்னால் நம்ப மாட்டீர்கள், ஒரு நாள், இரு நாள் அல்ல, 2000 வது ஆண்டு தொடங்கி இன்றுவரை, கடந்த பதிமூன்று ஆண்டுகளுக்கும் மேலாக, சர்மிளாவின் உண்ணாவிரதம் தொடர்கிறது.

     சர்மிளாவின் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். மணிப்பூர் மாநில, ஆயுதப் படைக்கு அளித்துள்ள, சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும்.

     ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்த மணிப்பூர், 1947 இல், இந்தியா சுதந்திரமடைந்த பொழுது, முழு சுதந்திர அதிகாரமுள்ள மன்னர் ஆட்சியின் கீழ் வந்தது.

     1949 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் நாள், மணிப்பூர் இந்திய யூனியனில் இணைந்தது. 1972 இல் மணிப்பூர் முழு உரிமையுள்ள மாநிலமாய் மாறியது.

     அதற்கு முன்பே, தனி நாடு கேட்டும், மணிப்பூரை இரண்டு, மூன்று மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடும் பல்வேறு ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் தோன்றி, அமைதியைக் குலைத்துக் கொண்டிருந்தன.

     இதுபோதாதென்று, மணிப்பூரில் மது ஆறாய் பெருக்கெடுத்து ஓடியது. எங்கு பார்த்தாலும் மதுக் கடைகள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தப் பெண்கள் களமிறங்கினர். நிசாபந்த் என்னும் ஓர் அமைப்பு தொடங்கப் பெற்றது. பள்ளிக் கூட ஆசிரியை சத்ரிமா தான் இதன் தலைவர்.

     இரவு நேரங்களில் பெண்கள் தீபங்களுடன், மதுக் கடைகளை முற்றுகையிட்டனர். இவர்கள் விளக்கேந்திய வீராங்கனைகள் (மெய்ரபெய்பிஸ்) என அழைக்கப்பட்டார்கள்.
    


     பெண்களின் போராட்டம் ஒரு புறம். போராட்டக்காரர்களின் செயல்பாடுகள் ஒரு புறம். போராட்டக்காரர்களை அடக்குவதற்கான, காவல் துறையினரின் வேட்டை ஒரு புறம். மக்கள் நிம்மதி இழந்தனர்.

     நிலைமை மோசமாகிக் கொண்டே சென்றது. 1980 ஆம் ஆண்டு மே மாதம், மணிப்பூரின் முதன் மந்திரி தொரந்தசோசங், புரட்சி இயக்கங்களை அடங்குவதற்கு மத்திய அரசின் உதவியை நாடினார்.

     எனவே, கலகக்காரர்களையும், புரட்சிகர இயக்கங்களையும் அடக்குவதற்காக, ஒடுக்குவதற்காக, மத்திய அரசின் ஆர்ம்டு போர்சஸ் ஸ்பெஷல் பவர்ஸ் ஆக்ட் (Armed Forces Special Powers Act) AFSPA  என்னும் சட்டம் 1980 ஆம் ஆண்டு மே மாதம், மணிப்பூரில் நடைமுறைக்கு வந்தது.

     பொதுமக்களின் அமைதிக்கு அவசியம் என்று தோன்றினால், ஒருவரைப் பார்க்கும் பொழுது, அவரால் பொது அமைதி கெடும் என்று தோன்றினால், முன்னறிவிப்புக் கொடுத்த பிறகு, அவரைச் சுட்டுக் கொல்லவும், மரணம் அடையும் வரை தண்டனை கொடுக்க பலத்தைப் பயன்படுத்தவும் இராணுவத்திற்கு அனுமதி உண்டு.

      இராணுவமோ, துணை இராணுவமோ, எவ்வித உத்தரவு நகலும் இன்றி, எப்பொழுது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் சோதனை இடலாம். யாரை வேண்டுமானாலும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யலாம்.

     கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, மணிப்பூர் இந்த சட்டத்தினுடைய கெடுதலை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
    


2004 ஆம் ஆண்டு ஜுலை 11 ஆம் நாள் இரவு. கிராமத்தில் தொழிலாளர்கள் வாழ்ந்து கொண்டுள்ள குடியிருப்பில், ஒரு வீட்டின் கதவு பலமாகத் தட்டப் படுகிறது. வெளியே துப்பாக்கிகளுடன் நான்கு வீரர்கள். கதவைத் திறந்த, வயது முதிர்ந்த பெண்ணையும், அவரது மகளான மனோரமா என்பவரையும் வெளியே இழுத்துப் போட்டார்கள். அவர்களைக் காப்பாற்ற வந்த, மனோரமாவின் இரு சகோதரர்களும் அடித்து நொறுக்கப்பட்டனர்.

     அடுத்த நாள், மனோரமாவினுடைய அரை நிர்வாண உடல், சாலையில் கிடப்பதை மக்கள் பார்த்தனர். உடல் முழுவதும் கீறல்கள், பூட்ஸ் காலால் உதைத்துப் கிழிக்கப்பட்ட மார்பகங்கள், துப்பாக்கிக் குண்டு துளைக்கப் பட்ட அடையாளத்துடன் உடல் கிடந்தது.

     பெண்கள் அனைவரும் கோபம் கொண்டு பொங்கி எழுந்து தெருவிற்கு வந்தார்கள். இராணுவத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி அணிவகுப்பு நடத்தினார்கள். விசாரனை நடத்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடு என முழக்கமிட்டார்கள்.

    அணிவகுப்பு, இராணுவ முகாமை அடைந்தபோது, பெண்களின் ஆவேசம் எல்லை கடந்தது.

    

உலகமே கிடுகிடுக்க, தங்கள் ஆடைகளை எல்லாம் அவிழ்த்து எறிந்தார்கள். முழு நிர்வாணமாய நின்று, முடியும் மட்டும், ஓங்கிக் குரலெடுத்து அலறினார்கள். அனுபவிங்கடா நாய்களே ....
எங்களைக் கொல்லுங்கடா ....
எங்கள் தசைகளைக் கிழியுங்கடா ....

      மணிப்பூர் நாளிதழ்களில் மட்டுமல்ல, தேசிய நாளிதழ்களிலும் இப்போராட்டம், படங்களுடன் வெளிவந்து, பார்த்தவர்களையும்  படித்தவர்களையும் வெட்கித் தலைகுனிய வைத்தது.

     எதிர்ப்பு சூறாவளியாய் சுழன்று அடித்தது. மனித உரிமை மீறல்கள், தேசிய ஊடகங்களில் நாடு முழுவதும் விவாதிக்கப் பட்டன.

     அன்றைய மத்திய அமைச்சர், இராணுவத்தினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், பெண்களுக்கு எதிராக, எந்த நடவடிக்கை எடுக்க வேண்டி வந்தாலும், இனி பெண் அதிகாரிகளே முன்னிலை வகிப்பார்கள் என்றும் உறுதியளித்தார்.

     மனோரமா சம்பவத்தை விசாரிக்க, மாநில அரசானது, நீதிபதி உபேந்திராவினுடைய தலைமையில் ஒரு குழுவையும் அமைத்தது.

     நிர்வாணப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய மெய்ரபெய்பிஸி (விளக்கேந்திய வீராங்கனைகள்) அமைப்பைச் சார்ந்த, லொய் தாம் இபிடோம்பி தேவி கூறுவதைக் கேளுங்கள்.

    அப்பொழுது தோன்றியிருந்த பகை, எங்களுக்கு ஏற்படும் அவமானத்தைக் கூட சாதாரணமாக்கி விட்டது. தேவைப்பட்டால் நாங்கள் இறக்கவோ, தற்கொலை செய்து கொள்ளக் கூட ஆலோசனை செய்திருந்தோம்.

     எங்களுடைய மக்களைக் காப்பாற்ற வேண்டாமா.... எங்களில் யாருக்கும் ஆயுதப் போராளிகளுடன் ஒரு தொடர்பும் இல்லை. ஆயுதப் போராளிகளுடைய அமைப்பிற்கும், இராணுவத்திற்கும் இடையிலான சண்டையில், நிரபராதிகளுடைய உயிரைக் காப்பாற்றுவதும், எங்களுடைய குழந்தைகளைப் பாதுகாப்பதும்தான் எங்கள் இலட்சியம்.

     பெண்களைப் பொறுத்தவரை அது கொஞ்சம் அதிகப்படியானதென்று தெரியும். மனோரமாவிற்கு நடத்தப்பட்ட கொடுமையைப் பற்றி நினைக்கும் பொழுது உண்டான கோபம், பட்டாளக்காரர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்னும் கோபம் மட்டுமே எங்களிடம் இருந்தது. ஆனால் அன்று அப்படிப்பட்ட போராட்டத்தை நடத்தியும், இராணுவ அதிகாரத்தில் எந்தவொரு மாற்றமும் உண்டாகவில்லை. இருந்தாலும் அந்தப் போராட்ட குணத்தை சாகும் வரை கைவிட மாட்டோம்.

     கணவர்களையும், குழந்தைகளையும் இழக்கின்ற கொடுமைகளை, எங்களுடைய உயிரைப் பறிகொடுக்கின்ற, சித்திரவதை செய்யப்பட்டு, கற்பழிக்கப்பட்டு எங்கள் பெண்கள் அனுபவிக்கின்ற கொடுமைகளை, பயங்கரத்தை... ஒரு நாள் யாராவது கவனிப்பார்கள். மணிப்பூரினுடைய வேதனையை புரிந்து கொள்வார்கள்.

      நண்பர்களே, இதற்கு மேல் படிக்கவோ, எழுதவோ, தட்டச்சு செய்யவோ கைகள் மறுக்கின்றன. என்ன உலகம் இது என்ற ஓர் வெறுப்பு தோன்றுகிறது. ஆனாலும் இந்த உலகத்தில்தான் நாமும் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது. இதுதான் மணிப்பூர்.

      நண்பர்களே, இப்பொழுது புரிகிறதா, இரோம் சர்மிளா அவர்களின் உண்ணாவிரதத்திற்காக காரணம்.

    பலமுறை சிறை, பல முறை விடுதலை, மீண்டும் சிறை. பலனில்லை.  உண்ணாவிரதத்தைக் கைவிடவே இல்லை. சிறைச் சாலையிலுள்ள மருத்துவ மனைக்குக் கொண்டுபோய், மூக்கு வழியாக இரைப்பைக்கு குழாய் சொருகி, அதன் வழியாக, திரவ வடிவிலான ஆகாரத்தை உள்ளே செலுத்தினார்கள்.

     இலட்சியத்தை அடைவதற்கு முன்பே இறந்துவிடக் கூடாது என்பதற்காக, சர்மிளாவும், குழாய் வழியாக ஆகாரம் செலுத்துவதை எதிர்க்காமல் இருக்கிறார். அன்று முதல் மருத்துவமனையில், பாதுகாப்பான அறையில் படுக்க வைக்கப் பட்டுள்ளார்.

     சர்மிளாவின் உதடுகளில், ஒரு சொட்டு தண்ணீர் பட்டு, ஆண்டுகள் பதிமூன்று கடந்து விட்டன. உண்ணாவிரதம் ஆண்டுக் கணக்கில் நீண்டு கொண்டே செல்வதால், சர்மிளாவின் உள் உறுப்புகள் பலமிழந்து விட்டன. உடல் மிகவும் தளர்ந்து விட்டது. மாத விலக்கு நின்று விட்டது.

     உதட்டில் தண்ணீர் படக்கூடாது என்பதற்காகப் பஞ்சின் மூலம்தான் பற்கள் சுத்தம் செய்யப் படுகின்றன. தலைமுடியை சீவுவதில்லை.

     ஒரு முறை சிறையில் சர்மிளாவைப் பார்க்க வந்த, அவரது சகோதரர் சிங்ஜித், நாமெல்லாம் இணைந்து போராடலாம். அதனால் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டு விடு என்றார்.

     என்னை உற்சாகப் படுத்துவதற்கு மட்டும் வா. என் உற்சாகத்தைக் குலைக்க இங்கு வராதே.

      சர்மிளாவின் தாய் சக்திதேவி, சர்மிளா உண்ணாவிரதம் தொடங்கிய அன்றிலிருந்து, கடந்த பதிமூன்று ஆண்டுகளாக, மகளைப் பார்க்கச் சிறைச்சாலைக்கோ, மருத்துவ மனைக்கோ செல்லவேயில்லை.
          
சர்மிளாவின் தாயார் சக்தி தேவி
நான் வந்து என்ன பயன்? என் இதயம் பலமற்றது. அவளை இந்நிலையில் பார்த்தால் என்னால் அழுகையை அடக்க முடியாது. அதனால் அவளுடைய இலட்சியம் நிறைவேறும்வரை நான் போக மாட்டேன்.

     அவள் எதிர்க்கின்ற இந்தச் சட்டத்தை, ஒரு ஐந்து நாட்களுக்காவது திரும்பப் பெற்றுக் கொண்டால், நான் அவளுக்குக் கஞ்சித் தண்ணியிணை ஊட்டி விடுவேன். அதற்குப் பிறகு அவள் இறந்தாலும் கவலையில்லை.

     நண்பர்களே, முறத்தால் புலியை விரட்டியத் தாயைப் பற்றிப் படித்திருக்கிறோம். இதோ அந்தத் தாயையும் மிஞ்சிய வீரத்தாய்

     நமக்கெல்லாம் கூட்டாளிகளும் பங்காளிகளும் வேண்டும். நாம் சாலையில் போகும்போது சுற்றிலும ஆட்கள் கூடவும், பேசவும் வேண்டும். இதெல்லாம் எனக்கு விருப்பமான காரியங்கள்தான்.

     மனம் திறந்து சிரிக்க வேண்டும். கூட்டாளிகளுடன் ஆலோசித்து தீர்மானங்கள் எடுக்க வேண்டும். இவையெல்லாம் என் மனதுக்கு பலம் சேர்க்கும் சந்தர்ப்பங்களாகும்.

      மனிதர் என்னும் நிலைக்கு நமக்கு இவையெல்லாம் தேவை. அதிலிருந்து மாறுபட்டவளல்ல நான்.

     குரூரமான சம்பவங்களைப் பார்க்கவோ, கேட்கவோ செய்யும் பொழுது, சில உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று தோன்றும்.

     ஆனால் அப்படிப்பட்ட வசதிகளை எல்லாம், இழக்கச் செய்கின்ற தனிமையில் இப்பொழுது என் வாழ்க்கை.

     தெய்வம் எனக்குக் கொடுத்துள்ள கடமையை நான் இன்னும் நிறைவேற்றாமல் இருப்பதால்தான், இன்னும் உயிருடன் இருக்கிறேன். அதை நிறைவேற்றும் வரை நான் உயிருடன் இருந்தே ஆக வேண்டும். அதற்கான சக்தியையும், தைரியத்தையும் தெய்வம் எனக்குக் கொடுத்திருக்கிறது.

     அதனால், நான் செய்கிற செயல் ஒருமுறை கூட தொந்தரவாய் எனக்குத் தோன்றவில்லை.

     மற்றவர்களைப் போல், இந்த உலகத்தில் வாழ எனக்கும் ஆசை இருக்கிறது. நானும் ஒரு மனுசிதான். மகிழ்ச்சி நிறைந்த ஓர் உலகத்தில் நானும் வாழ வேண்டும் என்று ஆசை உள்ளது.

     நண்பர்களே, சர்மிளாவின் ஆசை நிறைவேறும் நாள் எந்நாளோ?