நல்லாரைக் காண்பதுவும் நன்றே, நலம்மிக்க
நல்லார்சொல் கேட்பது வும்நன்றே – நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே, அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று
நண்பர்களே, ஔவையின் அமுத வரிகளில்,
எளிமையும், இனிமையும், பொருள் வளமையும் நிறைந்த, இப்பாடலைப் பலமுறைப் படித்துப்
படித்து, நீங்கள் நிச்சயம் பரவசப்பட்டிருப்பீர்கள். இப்பாடலின் பொருளினை
நேரிடையாய் உணர்ந்து, அனுபவிக்கும் ஓர் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
கடந்த 14.2.14 முதல் 23.2.14 வரை பத்து நாட்கள்,
தஞ்சையில் ரோட்டரி புத்தகக் கண்காட்சி நடைபெற்றதைத் தாங்கள் நன்கறிவீர்கள்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தமிழறிஞரின் சொற்பொழிவு இனிதாய் அரங்கேறியது.
ஓலைச் சுவடி வடிவில் சிதறிக் கிடந்த
பழங்கால இலக்கண, இலக்கியங்களை மீட்டு, அச்சு வடிவில் வழங்கி, அவை இறந்துபடாது,
காத்த பெருமைக்கு உரிய தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின், 160 வது பிறந்த
நாள் 19.2.2014 ஆகும்.
புத்தகக் கண்காட்சியின் அன்றைய நிகழ்வு
உ.வே.சா அவர்களின் பிறந்த நாள் விழாவாகவே நடத்தப் பெற்றது.
சமயம் கடந்த உ.வே.சா- வின் தமிழ்ப் பணிகள்
என்னும்
தலைப்பில்
அன்று
மேடையேறி முழங்கியவர் யார் தெரியுமா?
கவிஞர்
முத்து நிலவன் அவர்கள்தான்.
http://valarumkavithai.blogspot.com/
35 ஆண்டுகால அரசுப் பணியில் எவ்வளவு
சேர்த்திருப்பார் என்று எண்ணுகிறீர்கள்?
15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களையும், எண்ணற்ற தமிழ் உள்ளங்களின் நட்பினையும்
சேமித்து, பத்திரமாய் பாதுகாத்து வருகிறார்.
அன்று மாலை 6.00 மணியளவில், தஞ்சை புதிய
பேரூந்து நிலையத்தில், கவிஞரை வரவேற்றேன். இருவரும் இரு சக்கர வாகனத்தில், புத்தகக்
கண்காட்சி நடைபெறும் இடத்திற்குச் சென்றோம்.
முனைவர்
பா.ஜம்புலிங்கம் அவர்கள்
சோழ
நாட்டில் பௌத்தம்
முனைவர்
பா.ஜம்புலிங்கம்
http://drbjambulingam.blogspot.com/
காத்திருந்தார்.
இருபதாண்டுகால நண்பர். உழைப்பின் உறைவிடம்.
தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், தட்டச்சராய் நுழைந்து, பணியோடு கல்வியிலும் உயர்ந்து,
முனைவர் பட்டம் பெற்றவர். ஆறு நூல்களின் ஆசிரியர். தமிழ்ப் புலமை மிக்கவர்.
தமிழ்ப் புலமைக்கு நிகராக ஆங்கிலப்
புலமையினையும் வளர்த்துக் கொண்டவர். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் நற்புலமை பெற்ற
மனிதர்கள், அருகி வரும் இக்காலத்தில், இருமொழிகளிலும் உயர்ந்து நிற்பவர்.
கடின உழைப்பு என்றால் என்ன என்பதை இவரிடம்
நாம் கற்றுக் கொள்ளலாம். சோழ நாட்டில் பௌத்தத்தின் அடிச்சுவடுகளைத் தேடித் தேடி,
அயராது, தளராது பயணித்துக் கொண்டே இருப்பவர். இவரால் உலகின் கவனத்திற்கும்,
பார்வைக்கும் வந்த பௌத்தச் சிற்பங்கள் ஏராளம், ஏராளம்.
நண்பர்களே, இவரை அலைபேசியில் அழைத்து,
பேரூந்தே சென்றறியாத ஓர் ஊரில், ஓர் இடத்தில், ஒரு சிலையினைக் கண்டேன், அச்சிலை
புத்தர் சிலை போலத்தான் தெரிகிறது என்று சொல்வீர்களேயானால், அடுத்த நாள்
அவ்விடத்தில் இருப்பார். பேரூந்து இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன.
மிதிவண்டியில் செல்வார். அதுவுமில்லாவிட்டால், நடந்தும் செல்வார். அச்சிலையைக்
காணாமல் வீடு திரும்ப மாட்டார்.
இவர்தான், எனது வலையுலக குருநாதர். நான்
வலைப் பூ தொடங்கியதற்கே, காரணகர்த்தா இவர்தான். இவரின் நட்பினைப் பெறாதிருந்தால்,
வலையுலக உறவுகளே இல்லாத, தனியனாய், வீட்டில் முடங்கிப் போயிருப்பேன்.
கவிஞர் முத்து நிலவன் அவர்களும், முனைவர்
பா.ஜம்புலிங்கம் அவர்களும் முதன் முதலாய் சந்தித்தனர். இனிமையான உரையாடல் தொடர்ந்தது.
வாயை மூடி, காதுகளைத் திறந்து வைத்துக் கொண்டேன்.
சிறிது நேரத்தில் அழைப்பு வரவே, கவிஞர்
மேடையேறினார். நாங்கள் முதல் வரிசையில் அமர்ந்தோம். கவிஞரின் பேச்சு, வந்திருந்த
அனைவரையும் கட்டிப் போட்டது.
ஒருமுறை உ.சே.சா அவர்கள் இராமநாதபுரம்
சென்றார். பாண்டித்துரைத் தேவரோடு ஒரு மாதம் தங்கியிருந்தார். காலையிலும்,
மாலையிலும் பாண்டித்துரைத் தேவரைச் சந்தித்து உரையாடினார். என்னுடைய தாயார்
இறந்துபோன துக்கத்தைச் சம்பிரதாயமாக விசாரிக்க வந்தீர்கள். உங்களோடு சல்லாபம்
செய்து கொண்டிருப்பதில் என் அன்னை இறந்து போன துக்கமே மாறிவிட்டது. என்னுடைய
தாயார் மிகச் சிறந்தவர். அவர் வாழ்ந்திருந்தக் காலத்திலும் எனக்கு எத்தனையோ
நன்மைகளைச் செய்தார்கள். இறந்தபிறகும் உங்களை எல்லாம் வரும்படி செய்து எனக்குத்
தமிழின்பம் உண்டாகச் செய்தார்கள் என்று பாண்டித்துரைத் தேவர் உள்ளம் உருகிப்
பேசினார்.
ஒரு நாள் பாண்டித்துரைத் தேவர் அரசராகிய
பாஸ்கர சேதுபதியைப் பார்க்கப் போனார். மன்னரைப் பார்த்து விட்டு உ.வே.சா அவர்களைக்
காண வந்தார். உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றினைச் சொல்ல வந்திருக்கிறேன் என்றார்.
ஏதாவது புதிய நூலைப் பதிப்பிக்க
வேண்டுமென்று சொல்லப் போகிறீர்களா என உ.வே.சா கேட்டார்.
ஒரு நூல் அல்ல, பல நூல்களை நீங்கள்
பதிப்பிக்கலாம். அந்த அளவுக்குச் செல்வம் அளிக்குமாறு ஒரு கிராமத்தையே, உங்கள்
பெயரில் எழுதிவைக்க மகாராஜா நினைக்கிறார் என்றார்.
அடுத்த நாள் மகாராஜாவைச் சந்தித்தார். பாண்டித்துரைத்
தேவர் அவர்கள், மகாராஜா சொல்லி அனுப்பிய செய்தியைத் தெரிவித்தார். அதன் மூலம் தங்களுக்கு
என்பால் எவ்வளவு அன்பும், நம்பிக்கையும் இருக்கின்றன என்பதை உணர்ந்து கொண்டேன்.
எனக்கு இப்போது குறை ஒன்றும் இல்லை. ஆண்டவர் திருவருளால் கல்லூரியில் சம்பளம் வருகிறது.
தாங்கள் வழங்குவதை ஏற்க மறுக்கிறேன் என எண்ணக் கூடாது. நான் தமிழ் நூல்களை ஆய்ந்து
பதிப்பு செய்தே வாழ விரும்புகிறேன். இக்கிராமத்தை ஏற்றால், என் மீதமுள்ள வாழ்வு ,
கணக்கு பிள்ளைப் பணியிலேயே கழிந்து விடும் என்றார்.
இதுதான் உ.வே.சா அவர்களின் தமிழுள்ளம்.
தாயுள்ளம். உ.வே.சா., நேசித்தது தமிழை மட்டும்தான் பொருளையல்ல என்பதை, கவிஞர்
எடுத்துரைத்தது, அனைவரின் உள்ளங்களையும் புரட்டிப் போட்டது.
கவிஞர் முத்து நிலவன் அவர்கள் பொழிவினை
நிறைவு செய்தபோதுதான், அருகில் வந்தவரைக் கவனித்தேன்.
http://thanjavur14.blogspot.com/
என்னும்
ஆன்மீக வலைத் தளத்திற்குச் சொந்தக்காரரான
திருமிகு
துரை.செல்வராஜ்.
வாருங்கள், வாருங்கள் எனக் கைகளைப் பற்றிக்
கொண்டேன். நினைவலைகள் பின்னோக்கிப் பயணிக்கத் தொடங்கின.
நான் ஆசிரியராகப் பணியாற்றும், உமாமகேசுவர
மேனிலைப் பள்ளிக்கு அருகில், ஸ்ரீ விஷ்னு நெட் கபே என்னும்
பெயரில், சில ஆண்டுகளுக்கு முன், கணினியகம் ஒன்றினை நடத்தி வந்தார்.
நான் எனது எம்.ஃபில்., ஆய்வுப்
படிப்பிற்காக, கணித மேதை சீனிவாச இராமானுஜன் அவர்களைப் பற்றிய, தகவல்களைத்
திரட்டத் தொடங்கிய பொழுது, எனக்குப் பேருதவி புரிந்தவர் இவர்தான்.
அவ்வமயம் என்னிடம் கணினி இல்லை. கணினி
மையங்களில் அமர்ந்து, இணையத்தைப் பயன்படுத்தவது எப்படி என்பதைக் கூட அறியாதவனாய்,
நான் இருந்த காலம் அது.
கணித மேதை இராமானுஜன் பற்றிய
பல செய்திகளை, ஆவணங்களை மிகவும் பொறுமையுடனும், ஆர்வத்துடனும், எனக்குத் திரட்டிக்
கொடுத்தவர் இவர்.
ஆனால் நண்பர்களே, நான் எனது
எம்.ஃபில்., படிப்பினை நிறைவு செய்வதற்கு முன்னமே, இவர் குவைத் சென்று விட்டார்.
என் மனதில் ஒரு குற்ற உணர்ச்சி இன்றும் இருந்து கொண்டேயிருக்கிறது. கணித மேதை
சீனிவாச இராமானுஜன் ஆய்வேட்டினை, நூலாக வெளிக் கொணர்ந்த பொழுது, நன்றியுரையில்,
இவரது பெயரினை, எப்படியோ சேர்க்காமல் விட்டுவிட்டேன். எப்படி மறந்தேன் என்பது
இன்று வரை புரியவில்லை.
எனவே, கிடைத்த இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி,
திரு துரை.செல்வராஜ் அவர்களிடம் மன்னிப்புக் கோருவதோடு, என் மனமார்ந்த
நன்றியினையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தங்களின் பேருதவிக்கு நன்றி
ஐயா.
கடந்த வருடத்தில் ஓர் நாள்,
வலைப் பூவில், நண்பர்களின் வலையினைப் படித்துக் கொண்டு வந்த பொழுது, எதிர்பாராத
விதமாக, வலையில், தஞ்சையம்பதி என்னும் தளத்தில், இவரின் அன்பு முகத்தினைக்
கண்டேன். வியப்பு அடங்கவிலை. நன்றாக கண்களைக் கசக்கிக் கொண்டு, மீண்டும், மீண்டும்
பார்த்து உறுதி செய்து கொண்டேன்.
எங்களது நட்பில், மறுமலர்ச்சியும்,
உறவில் தொடர்ச்சியும் ஏற்பட்ட நான் அன்றுதான்.
படத்தில் பார்ப்பதற்கு
வேண்டுமானால், இவர் தடித்த உருவம் உடையவராகத் தெரியலாம். உண்மையில் மிகவும் இளகிய
மனதினர்.
நண்பர்களே, சே குவேரா
வாழ்கிறார் என்னும் பெயரில், ஒரு பதிவினை, என் வலையில், பகிர்ந்தது உங்களுக்கு
நினைவிருக்கும். சே குவேரா பற்றிய பதிவினை, பதிவிட்ட அன்று இரவு 10.30 மணி அளவில்,
என் அலைபேசி அழைத்தது. மறுமுனையில், குவைத்தில் இருந்து தஞ்சையம்பதி.
திரு துரை.செல்வராஜ் அவர்களால்
பேசவே இயலவில்லை. எப்படி சார், சே குவேராவால் இப்படிப்பட்ட ஒரு வாழ்கையை, இவ்வுலகிற்காக
அர்ப்பணிக்க முடிந்தது என தழுதழுக்கிறார். குரல் விம்மி விம்மி உடைகிறது.
அத்தருணத்தில்தான் உணர்ந்தேன், இவரின் குழந்தை உள்ளத்தை.
என்னால் அன்றிரவு உறங்கவே முடியவில்லை.
ஒரு சந்தேகம் என் மனதினை வாட்டி எடுத்தது. இவ்வளவு இரக்க குணமும், குழந்தை
உள்ளமும் கொண்டவரால், எப்படி தன் குடும்பத்தைப் பிரிந்து, குவைத்தில் தனியொருவராக
வாழ முடிகிறது? பதிலும், கேள்வியில் இருந்தே கிடைத்தது. தன் குடும்பத்தினர் மீது
கொண்ட அளவற்ற பாசமும், தன் குழந்தைகள் நிம்மதியாக எதிர்கால வாழ்வை, வாழ வேண்டுமே
என்ற தணியாத ஏக்கமே, இவரது குவைத் வாழ்விற்குக் காரணம் என்பது புரிந்தது.
தனது அன்பு மகளின் திருமணத்திற்காக,
ஒரு வார விடுப்பில் தஞ்சைக்கு வந்தவர், நட்புணர்வின் மிகுதியால், என்னையும் காண வந்ததை
எண்ணி எண்ணி மகிழ்ந்தேன்.
தஞ்சையம்பதியின் அன்பு மகளின் திருமணம் வாழ்த்துவோம் நண்பர்களே |
நண்பர்களே, தஞ்சையம்பதியும்,
சோழ நாட்டு பௌத்தமும், புதுக்கோட்டையின் வளரும் கவிதையோடு, ஒன்றாய் சங்கமித்தக்
காட்சியைக் கண்டும், உரைத்த சொற்களைக் கேட்டும், கரைந்தது இக் கரந்தை.
புதன் கிழமையன்று நடைபெற்ற, இச்சந்திப்பின் நினைவலைகளில் மூழ்கித் திளைத்திருந்த எனக்கு, மேலும் ஓர் நல்லாரைக் காணும் வாய்ப்பு சனிக்கிழமை கிட்டியது.
வாசிப்பிற்கும், நேசிப்பிற்கும் உரியதாய்,
பல்லாயிரக் கணக்கான உள்ளங்களிலும், இல்லங்களிலும்
நம்பிக்கைச் சுடறேற்றிவரும்
நமது நம்பிக்கை
திங்களிதழின் ஆசிரியர்
கலைமாமணி மரபின்
மைந்தன் முத்தையா
http://marabinmaindanmuthiah.blogspot.com/
அவர்களைச் சந்தித்தேன்.
நண்பர்களே, வலைப் பூவின் வழியாகத்தான்
இவரது தொடர்பினைப் பெற்றேன் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எனது வலைப் பூவில் வெளிவந்த கணித மேதை
சீனிவாச இராமானுஜன் வாழ்க்கை வரலாற்றுத் தொடரானது, நமது நம்பிக்கை இதழில் கடந்த
ஓராட்டிற்கும் மேலாக, தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. வலைப் பூவின் மகிமை
அப்படிப் பட்டது. வலையில் வந்ததை, அச்சு இதழுக்குக் கொண்டு சேர்த்தவர் மரபின்
மைந்தன் அவர்கள்.
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் இன்றையப் பொருளாளரும், ஓய்வு பெற்ற
ஆசிரியரும், இன்னும் சொல்லப்போனால், எனது ஆசிரியருமான திரு கே.இராசமன்னார்
அவர்களுடன் சென்று மரபின் மைந்தன் அவர்களைச் சந்தித்தேன்.
திரு கே.இராசமன்னார் அவர்கள்,
நான் பத்தாம் வகுப்பு பயின்ற போது, எனது வரலாற்று ஆசிரியர். உலக வரலாற்றை, விரல்
நுனியில் எப்பொழுதும் பத்திரமாய் பாதுகாக்கும் உயர்ந்த மனிதர். வாசிப்பு என்பதை
உயிர் மூச்சாய் நேசிப்பவர். நமது நம்பிக்கை திங்களிதழின் வாசகர்.
மரபின் மைந்தன் முத்தையா
அவர்கள் தஞ்சைக்கு வந்திருக்கிறார் என நான் கூறியபோது, அவரைப் பார்க்க வேண்டும்,
பேச வேண்டும் எனக் கூறினார். மரபின் மைந்தன் அவர்களை, அலைபேசியில் தொடர்பு கொண்டு,
எனது ஆசிரியர் தங்களைக் காண ஆர்வமாயிருக்கிறார் என்று தெரிவித்த பொழுது,
சற்றும் தயங்காமல், அழைத்து வாருங்கள் என்றார்.
அன்று மாலை, புத்தக அரங்கில்,
வாழ்வை
வாசிப்போம்
என்னும் தலைப்பில், மரபின் மைந்தர் சொற்பெருக்காற்றினார்.
ஊர் எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம் என்று பேர்இட்டு
சூரைஅங் காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே
என்று பாடுவார் திருமூலர். மனிதனுக்கு உயிர் இருக்கும் வரைதான் பெயரிட்டு
அழைப்பர். சுவாசிக்க மறந்த, மறு நொடி பிணம் என்றே பெயரிட்டு அழைப்பர். எனவே
சுவாசிக்கும் போதே, வாழ்வை வாசிப்போம்.
வாழ்கையை வாசிக்க, மனித உறவை
நேசிக்க வேண்டும்.
தமிழ் நாட்டிலே சில இடங்களில் ஓர் பழக்கம் இன்றும்
இருக்கிறது. உப்பு ஜவுளி என்று பெயர். அதாவது ஒரு வீட்டில், திருமணம் நடைபெறப்
போகிறது எனில், அதற்கு முன்னரே, உற்றார் உறவினர் அனைவரையும் அழைத்துக் கொண்டு, ஒரு
கடைக்குச் சென்று உப்பு வாங்குவார்கள். பின்னர் ஜவுளிக் கடைக்குச் சென்று
மணமக்களுக்கு உடைகள் வாங்குவார்கள். இதற்குத் தான் உப்பு ஜவுளி என்று பெயர்.
நண்பர்களே, இதன் பொருள் என்ன தெரியுமா?
திருமணத்திற்குத் தேவையான, உப்பு முதல் ஜவுளி வரை, அனைத்துச் செயல்களையும், உறவினரோடு
இணைந்தே செய்ததாகப் பொருளாகும். வாழ்வை வாசிப்பது என்பது இதுதான்.
விழாவில் மட்டுமல்ல,
துக்கங்களில் கூட வாழ்வை வாசித்த இனம் தமிழினம். ஒரு இளம் குடும்பத் தலைவர்
இறந்துவிட்டார் எனில், அவ்வீட்டில், உறவினர்கள் அனைவரும், சூழ்ந்திருக்கும்
சபையின் நடுவில், இறந்தவரின் தாயார், ஒரு சொம்பை வைப்பார்கள். அனைவரும் பார்த்துக்
கொண்டிருக்க, ஒரு மகிழம்பூவை எடுத்து, கரம் உயர்த்திக் அனைவருக்கும் தெரியும்படி
காட்டி, அச் சொம்பில் போடுவார். மூன்று முறை கரம் உயர்த்தி மகிழம் பூக்களைக்
காட்டி, சொம்பிற்கும் போடுவார். இதன் பொருள் என்ன தெரியுமா?
பார்த்தது கோடி
பட்டது கோடி
கிடைத்தது அனுபவம்
எனப் பாடுவார் கண்ணதாசன். நம் தமிழ்ச் சமூகம் பட்டறிவால், அனுபவத்தால், உயர்ந்த,
முதிர்ந்த செயல்பாடுகளைத் தன்னகத்தே கொண்ட, உயரிய இனம் என்பதற்கு இச்சடங்கு ஓர்
எடுத்துக் காட்டு.
மூன்று மகிழம் பூக்களை,
சொம்பிற்குள் போட்டால், இறந்தவரின் மனைவி, தற்சமயம் மூன்று மாதம் கர்ப்பமாக
இருக்கிறார் என்று பொருள். ஐந்து மகிழம் பூக்களைப் போட்டால் ஐந்து மாத கர்ப்பம்
என்று பொருள்.
குடும்பத் தலைவர் இறந்த பல
மாதங்கள் கழித்து, அவரின் மனைவியை, யாரும் புறம் பேசக் கூடாதல்லவா? பெண்மையின்
பெருமையைக் காக்க, போற்றத் தோன்றிய சடங்குகள் இவை. தமிழர்கள் வாழ்வை வாசித்தவர்கள்
என்றார்.
நண்பர்களே, மரபின் மைந்தன் அவர்கள்
பேசப் பேச, நாமும் வாழ்வை வாசிக்க வேண்டும். உறவுகளை நேசிக்க வேண்டும் என்ற ஓர்
எண்ணம் உள்ளத்தில் வேர் பரப்பி, கிளை விரித்து பரவுகிறது.
நண்பர்களே, புத்தகத் திருவிழாவின்
நிறைவு நாளான, 23.2.2014 ஞாயிற்றுக் கிழமை, காலை அலைபேசி அழைத்தது. மறு முனையில்
தென்றல் தவழ்ந்து வந்தது.
தேங்கிய குட்டையல்ல
துள்ளும் அருவி
பாய்ந்தோடும் ஆறு
அள்ளிச் செல்வேன் அனைத்தையும்....
தென்றலாய் தொடங்கி, தேவைபெனில் பெரும் சுழற் காற்றாய் மையம் கொள்ளவும்
தயார், என, இலக்கிய வானில், தனக்கென ஒரு இடத்தினைப் பிடித்தவரும், உயர்
சிந்தனைகளும், சமூகக் கவலையும், துயரம் துடைக்கும் தன்னம்பிக்கையும் கொண்ட கவிஞர்,
வேலு நாச்சியாரின் விழுது,
கவிஞர் கீதா அவர்கள்
தென்றல்
http://velunatchiyar.blogspot.com/
பேசினார்.
நான் தஞ்சைக்கு
வந்திருக்கிறேன். மதியம் புத்தகக் கண்காட்சிக்கு வருகிறேன். உங்களைச் சந்திக்க
வேண்டுமே என்றார்.
சகோதரியார் கவிஞர் மு.கீதா அவர்கள்,
விழி தூவிய
விதைகள்
என்னும், தனது கவிதை நூலினை வழங்கினார்.
டீச்சர்..
எனக்குப் பிறந்த நாள் என
மழலை கொடுத்த இனிப்பை
மாணவிகளுக்கு ஊட்ட
பிறந்தன எனக்கு
நாற்பது குழந்தைகள்..
---
ஏன் படிக்கல?
கலங்கிய சிறுமியை
ஏன்டாம்மா? என்னாச்சு
சாப்டியா?
தலைவருடி இதமான வார்த்தைகளால்
பதமாய் மனம் வருட
விழி மேகம் மடை திறக்க
சாப்டல டீச்சர் .... பசிக்குது...
கவிஞராய் மட்டுமல்ல, நல்லாசிரியராய்,
மழலைகளின் உள்ளத்தில், விதைகளைத் தூவி, நல் விருட்சங்களாய் வார்த்தெடுக்கும்,
வளர்த்தெடுக்கும் கவிஞர் மு.கீதா அவர்களின், எண்ணங்கள், பெண்ணியச் சிந்தனைகள்
எல்லாம், எழுத்துக்கள்ய், வார்த்தைகளாய், வரிகளாய், கவிதை மொழிகளாய்,
பக்கத்துக்குப் பக்கம் ததும்பி வழிகின்றன.
நண்பர்களே, நீங்களே
கூறுங்களேன், வலையுலக உறவுகளை, நல்லாரைச் சந்தித்த இவ்வாரம், நட்பு வாரம்தானே.
ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை
இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே
- வெற்றி
வேற்கை
-------------------------------
100வது பதிவு
நண்பர்களே, வணக்கம். நலம்தானே,
எனது 100வது பதிவு இப்பதிவு. இரண்டரை
ஆண்டுகளுக்கு முன், விளையாட்டாய் வலையில் நுழைந்த நான், இன்று நூறாவது பதிவினை
எட்டிப் பிடித்திருக்கின்றேன்.
நண்பர்களே, மனம் மழுவதும் மகிழ்ச்சியால்
நிரம்பி வழிகின்றது. காரணம் நீங்கள்தான்.
ஆமாம் நண்பர்களே, உங்களின் உணர்வுமிகு கருத்துரைகளும்,
உற்சாக வார்த்தைகளும், ஊக்கச் சொற்களும், இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த
எளியேன்பால், தாங்கள் காட்டிவரும் மாறா அன்புமே இதற்குக் காரணம்.
நன்றி நண்பர்களே
என்றும் வேண்டும் இந்த அன்பு.
என்றென்றும்
நட்புடன்,
கரந்தை
ஜெயக்குமார்
100 வது பதிவு - மிகவும் சிறப்பு ஐயா... மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள் பல... நன்றி...
பதிலளிநீக்குஉ.வே.சா அவர்களைப் பற்றி எங்களது நடுவர் பேசியது மனத்தைக் கவர்ந்தது... தஞ்சையம்பதி திரு. துரை.செல்வராஜ் ஐயா அவர்களின் சந்திப்பு நெகிழ வைத்தது...
உப்பு ஜவுளி, மகிழம்பூ தகவல்கள் அறியாதவை... கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா அவர்களுக்கும் நன்றி... வாழ்த்துக்கள்...
முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களையும் சந்திக்க வேண்டும் எனும் ஆவல் எழுகிறது... தேர்வு நாட்கள் முடிந்தவுடன் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன்... முத்து நிலவன் ஐயா - சரி தானே...?
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா.
நீக்குதங்களை நேரில் காண, அதுவும் புதுக் கோட்டையில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குவலையுலக உறவுகளை மேடை ஏற்றும் நல்ல காரியமும் செய்கிறீர்கள் போலிருக்கிறதே !வாழ்க உங்களின் தமிழ்த் தொண்டு !
த ம 1
நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்..
பதிலளிநீக்குதஞ்சையம்பதியின் அன்பு மகளின் திருமணம்
வாழத்துகள்...
மகிழம்பூக்களாய் சுகந்தம் வீசி விகசித்து
மனம் மகிழ்விக்கும் பெரியோர் கேண்மை ...!
நன்றி சகோதரியாரே
நீக்குஅன்பின் ஜெயக்குமார் - 100 வது ப்திவினிற்குப் பாராட்டுகள் -
பதிலளிநீக்குபதிவிபைப் பொறுமையாகப் படித்து, உள் வாங்கி, பிற்கு மறுமொழி இடுகிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
தமிழ் உள்ளங்களை ஒருமித்துச் சேர்த்து தந்த பாணியும் பக்குவமும்
பதிலளிநீக்கு" பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நான்கும் கலந்துனக்கு நான் தருவேன் "
என்று வழங்கிய சொல் அமுதத்தை
நினைவு கூரச் செய்தது.
தஞ்சை வரும்போது உங்களை சந்திக்க வேண்டும்.
சுப்பு தாத்தா.
தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா
நீக்கு100-வது பதிவு... மனம் நிறைந்த வாழ்த்துகள் கரந்தை ஜெயக்குமார் ஐயா.....
பதிலளிநீக்குபதிவுலகம் நமக்கு நிறைய நண்பர்களை பெற்று தந்து கொண்டே இருக்கிறது. அடுத்த தமிழகப் பயணத்தில் உங்களைச் சந்திக்க வேண்டும் - இம்முறை வந்த போது தஞ்சை-கரந்தை வழியே மயிலாடுதுறை சென்றேன். ஆனால் நேரமின்மை காரணமாக தஞ்சையில் யாரையும் பார்க்க முடியவில்லை......
தாங்கள் கரந்தை வழி சென்றது தெரியாமல் போய்விட்டதே ஐயா.
நீக்குதெரிந்திருந்தால் செல்லும் வழியிலாவது தங்களைச் சந்தித்திருப்பேன். மீண்டும் தமிழகம் வரும்பொழுது அவசியம் தெரியப்படுத்துங்கள் ஐயா.
தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கின்றேன்
நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் .
பதிலளிநீக்குவிரைவில் ஆயிரத்தை எட்ட Best of luck.
உங்களின் நூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்... நட்புக்களை சந்தித்ததை விட வேறு சுகம் என்ன இருக்க முடியும்....
பதிலளிநீக்குஉண்மை சகோதரியாரே
நீக்குநட்பின் பெருந்தக்க யாவுள
நன்றி சகோதரியாரே
வாழ்க தமிழ்!வளர்க தமிழ் உள்ளம்! வாழ்க வளர்க உங்களின் தமிழ்த்தொண்டு.உங்களின் நூறாவது பதிவு மிகவும் சிறப்பு சிறக்க வாழ்த்துக்கள்.நட்பு வட்டங்களை ஒருங்கினைத்து நட்பை வெளிப்படுதுவதில் உங்களுக்கு நிகர் யார் உளர்.வாழ்க வளர்க உங்களது வலைப்பூ உலகம். மிக்க நன்றி.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குதங்களின் நூறாவது பதிவிற்கு வாழ்த்து! பதிவை இரண்டாகப் பிரித்து
பதிலளிநீக்குபோட்டிருக்கலாம்! இது அவசர உலகம்! தவறாக, கருத வேண்டாம்!
வாழ்த்திற்கு நன்றி ஐயா.
நீக்குதாங்கள் கூறுவது உண்மைதான் ஐயா
இனி நிச்சயம் தங்களின் கருத்தினைப் பின்பற்றுவேன் ஐயா
நன்றி ஐயா
தங்களின் நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்..
பதிலளிநீக்குதஞ்சையம்பதியின் அன்பு மகளின் திருமணத்திற்கு நல்வாழத்துகள்...
பதிவுக்கு நன்றிகள்.
நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! உ.வே சா. அவர்களைப் பற்றி மிக ஆனந்தமாகப் படித்தேன். திறமையும் அனுபவமும் வாய்ந்த பெரியவர்களை எங்களுக்கு அறிமுகப் படுத்தி அழகாக எழுதியுள்ளீர்கள்...
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்கு100வது பதிவிற்கு வாழ்த்துக்கள் ஐயா! வலையுலகில் சிறந்து விளங்கும் நண்பர்களின் குணாதிசயங்களை பகிர்ந்து அவர்களை அறிமுகம் செய்வித்தமை அழகு! நன்றி!
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குநல்லாரைக் காண்பதுவும் நன்றே
பதிலளிநீக்குதிரு கரந்தை ஜெயக்குமார் அவர்களின் 100வது பதிவு.
தமிழுக்கு உழைத்தவர்கள், உழைப்பவர்கள், நண்பர்கள் பற்றிய அருமையான பதிவு.
எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு கரந்தை ஜெயக்குமார்
தங்களின் வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி ஐயா
நீக்குதங்களின் வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி ஐயா
நீக்குஅன்புள்ள ஜெயக்குமார்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள். 100 வது பதிவிற்கு.
இன்னும் பல் நுர்று பதிவுகளைத் தொடர்ந்திட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தங்களின் சந்திப்பு சுவையானது.
வாழ்த்திற்கு நன்றி ஐயா.
நீக்குபார்த்ததை எல்லாம் எழுதுங்கள், கேட்டதை எல்லாம் எழுதுங்கள் என்று கூறினீர்களே, அதைத்தான் ஐயா வேத வாக்காக கொண்டு செயல்பட்டு வருகின்றேன்.
மிக்க நன்றி ஐயா
நூறாவது பதிவை ஒரு மறக்க முடியாத பதிவாக வெளியிட்டுவிட்டீர்கள். பொருத்தமான ஒரு தலைப்பையும் கொடுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவிரைவில் 1000மாவது பதிவை வெளியிட வாழ்த்துக்கள் நண்பரே,
அருமையான செய்திகள் ,தரமான பதிவுகள் கொண்டுள்ள உங்களின் சிறப்பான பணிக்கும் 100ஆவது பதிவு 1000 பதிவுகளுக்கும் மேலும் வளர என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.மலரும் நினைவுகளாய் அன்று உங்களையும்,தொழியையும் சந்தித்த நினைவலைகள் மனக்கண்முன் நிழலாடுகின்றது.தமிழாய்ந்தவர்களோடு என்னை சந்தித்ததையும் இணைத்து என்னை மேன்மை படுத்தியமைக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குதமிழாய்ந்தவர்களோடு ஒரு கவிதாயினியையும் சந்தித்த பெருமை எனக்கு கிட்டியது என்பதுதான் உண்மை சகோதரியாரே.
நீக்குதங்களின் கவிதைகள் ஒவ்வொன்றும் வாழ்வியல் யதார்த்தங்கள்.
தங்களைச் சந்தித்ததில் மிக்க அடைந்தேன்
நன்றி சகோதரியாரே
அன்புடையீர்..
பதிலளிநீக்குஇன்று வெள்ளிக் கிழமை.. வாரந்தோறும் இன்று ஒருநாள் மட்டும் இரண்டு ஷிப்ட். இப்போது தான் முடித்து விட்டு வந்தேன்.. கணினியைத் திறந்து - தங்களது பதிவைத் தேடினால் –
நூறாவது பதிவு!.. நல்வாழ்த்துக்கள்..
இன்னும் பல நூறு ஆயிரமாக பல்கிப் பெருகிட வேண்டுகின்றேன்.. உங்கள் பதிவினை எதிர் பார்த்திருக்கும் அன்பருக்குள் எளியேனும் ஒருவன்..
அதனுள் – புத்தகத் திருவிழாவில் நாம் சந்தித்த நிகழ்வினைப் பதிவு செய்து நெகிழச் செய்து விட்டீர்கள்..
நினைவு கூர்தல். அது வாழையடி வாழையாக வரும் தமிழ்ப் பண்பாட்டினுள் தலையாயது..
பதிவினுள் தாங்கள் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் கண் முன்னே நிழலாடுகின்றன. கண்கள் கசிகின்றன.. மேலும் தட்டச்சு செய்ய முடியவில்லை..
இந்த அன்பும் ஆதரவும் என்றும் நிலைக்கட்டும்.. நன்றி.. நன்றி..
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், தங்களை வலைப் பூவில் பார்த்த நாளில் இருந்தே, தங்களுக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டேனே என்ற ஓர் உணர்ச்சி என்னை உறுத்திக் கொண்ட இருந்தது. அதனை இறக்கி வைக்க இப்பொழுதுதான் வாய்ப்பு கிடைத்தது ஐயா.
நீக்குஇந்த அன்புடன் ஆதரவும் இருவருக்குள்ளும் என்றென்றும் நிலைத்திருக்கும் ஐயா
நன்றி
தங்களது 100 – ஆவது பதிவிற்கு எனது வாழ்த்துக்கள்! 100 ஆவது பதிவின் சிறப்புச் செய்தியாக கவிஞர் முத்து நிலவன், முனைவர் பா.ஜம்புலிங்கம், தஞ்சையம்பதி துரை.செல்வராஜ், மரபின் மைந்தன் முத்தையா மற்றும் கவிஞர் மு.கீதா – ஆகிய அனைவர் பற்றியும் ஒரே பதிவில் பாராட்டிப் பேசியமைக்கு நன்றி!
பதிலளிநீக்குஆன்மீக உள்ளத்திலும் ஒரு புரட்சிமலர் உள்ளிருப்பதை, ” எப்படி சார், சே குவேராவால் இப்படிப்பட்ட ஒரு வாழ்கையை,
இவ்வுலகிற்காக அர்ப்பணிக்க முடிந்தது ” என்ற தஞ்சையம்பதி துரை.செல்வராஜ் வார்த்தைகளில் தெரிந்து கொள்ள முடிந்தது. காரணம், உங்கள் எழுத்துக்கள்தான்!
த.ம.7
ஆன்மீக உலகில் புரட்சி மலர்
நீக்குஇதைவிட சிறப்பான வார்த்தைகளால் திரு துரை.செல்வராஜ் அவர்களை வேறுயாராலும் குறிப்பிட முடியாது ஐயா.
உண்மையான வார்த்தைகள்
அந்த வார்த்தையின் ஒவ்வொரு எழுத்திற்கும் உண்மையான சொந்தக்காரர் அவர்.
நன்றி ஐயா
1993 முதல் இன்று வரை களப்பணி முடிந்தபின் நான் செய்யும் முதல் பணி களப்பணியின்போது உதவியவர்களுக்கு ஒரு நன்றிக்கடிதம் எழுதுவது- நான் சந்தித்த நபர்களிடம் பெரும்பாலும் நான் எழுதிய அஞ்சலட்டையாவது இருக்கும். உங்களது இப்பதிவைப் பார்த்தபின் எனக்கு அவர்களின் நினைவுகள் வந்துவிட்டன. நினைவுகூர்தல் என்ற நிலையிலும் நட்பைப் பகிர்ந்துகொள்ளும் நிலையிலும் தங்களுக்கு ஈடு தாங்கள்தான். உங்கள் எழுத்துக்களில் உணர்வுகளைக் காணமுடிகிறது. மென்மேலும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும், தமிழ்கூர் நல்லுலகிற்கு நம்மால் ஆன பங்களிப்பை செய்யவேண்டும் என்ற என் அவா தங்களின் என்னைப் பற்றிய பகிர்வு மூலம் மேம்படுகிறது. தங்களுக்கும், வலைப்பூ நண்பர்களுக்கும் என் வணக்கங்களும் நன்றிகளும்.
பதிலளிநீக்குஐயா , தாங்கள் எனக்கு ஒரு வழிகாட்டி.
நீக்குதாங்கள் இல்லையேல், வலையில், இணையத்தில் இன்று நான் இல்லை.
திரு ஹரணி அவர்களும், தாங்களுமே
நான் இணையத்தில் இன்று நிலைத்திருக்கக் காரணம்.
உங்களை மறந்தால், நான் என்னையே மறந்தவனாவேன்.
நன்றி ஐயா
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குதமிழ் அறிஞர்கள் நீங்கள் கொண்ட பற்றை தெள்ளத் தெளிவாக உரைக்கிறது பதிவு.
நீக்கு100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா.
நீக்குஅரசுப் பொதுத் தேர்வின். ஓயாத பணிகளுக்கு இடையிலும்
இணையத்திற்கும் நேரம் ஒதுக்கும் தங்களின்
மனமும் குணமும் மிகுந்த வியப்பினைஅளிக்கின்றன ஐயா.
மிக்க நன்றி ஐயா
நல்லாரைக் கண்பது மட்டுமா நன்று...?
பதிலளிநீக்குஅவர்களை ஞாபகப்படுத்தி எழுதுவதைப் படிப்பதும் நன்றென்பதை உங்களின் பதிவின் மூலம் கண்டேன் ஐயா. நன்றி.
100 வது பதிவக்கு வாழ்த்துக்கள்.
அய்யா வணக்கம். தங்களோடு சிறிது நேரம் பேசியவர்களே தங்களை மறக்க மாட்டார்கள். நான் புதுக்கோட்டையிலும், தஞ்சையிலுமாக இருமுறை சந்தித்து, பேசி, உங்கள் வீட்டில் வணக்கத்திற்குரிய தங்களின் பெற்றோரைக் கண்டு, பேசி மகிழ்ந்து, தங்களின் அன்புத் துணைவியாரின் அருமையான விருந்தை உண்டு... வந்திருக்கிறேன். எப்படி அய்யா மறக்க முடியும்? அதுவும் தங்களின் நூறாவது பதிவில் இதைப் பதிவுசெய்து படித்த யாரும் மறக்க இயலாதபடி செய்துவிட்டீர்கள்... நண்பர்களே நண்பர்களே எனும் உங்கள் குரலுடன் படித்துப் பார்க்கும்போது, இன்னும் நெகிழ்வாய் இருக்கிறது. அய்யா ஜம்புலிங்கம் அவர்களையும், அய்யா துரை.செல்வராஜ அவர்களையும் சந்தித்ததும் இன்னும் நினைவிலாடுகிறது. தங்களின் பதிவுகள் வர வர வரலாற்றுப் பதிவுகளாகி வருகின்றன... நன்றியும் வணக்கமும் அ்ய்யா.
பதிலளிநீக்குதங்களின் வார்த்தைகள் மிகுந்த மகிழ்வினை அளிக்கின்றன ஐயா.
நீக்குதங்களைப் போன்றவர்களுடன பழகுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த வலைப் பூவிற்கு நன்றி கூறுகின்றேன் ஐயா.
தனது நூறாவது படத்திற்கு எம்.ஜி.ஆர். எடுத்துக்கொண்ட முயற்சியை விடவும் அதிக முயற்சியை எடுத்துக்கொண்டு உங்கள் நூறாவது பதிவைச் செதுக்கியிருக்கிறீர்கள். நன்றி மறப்பது நன்றன்று -காலத்தால் செய்த உதவி - இவற்றின் பொருளை உங்கள் நண்பர்கள் இனி மறக்கவே மாட்டார்கள். முத்துநிலவனும், ஜம்புலிங்கமும், துரை செல்வராஜும், மரபின் மைந்தரும், 'வேலுநாச்சியார்' கீதாவும் நமது வலைப்பூக்களில் நெருங்கிச் சொந்தம் கொண்டாடும் நன்நெஞ்சங்கள் அன்றோ! அவர்கள் அனைவரையும் ஒருசேரக் கண்டு நட்பாடும் பெரும்பேறு தங்களுக்கு மட்டும் கிடைத்ததே என்று எண்ணும்போது பொறாமைப்படுவதன்றி என் செய்வேன்! - இராய செல்லப்பா
பதிலளிநீக்குவலைப் பூ ஏற்படுத்தித் தந்த உறவுகளைப் போற்றுவதைவிட வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும் ஐயா.
நீக்குவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா
100வது பகிர்வு மிகவும் சிறப்பான பகிர்வு ஐயா...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
நன்றி நண்பரே
நீக்குநூறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் அண்ணா!
பதிலளிநீக்குஇதுவரை எந்த பதிவையும் போகிறபோக்கில் எழுதியதில்லை நீங்கள்!
நல்லார் எல்லோரையும் ஒரு சேரப்பார்ப்பது உண்மையிலேயே அருமையான வைப்பு , அதை பதிவாய் படிக்கத்தந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா!
நன்றி சகோதரியாரே
நீக்குதங்களின் 100 ஆவது பதிவு மனம் கவர்ந்த பதிவாகிவிட்டது. ஏராளமான கருத்துகள்! அருமையான பதிவிற்கு நன்றி ஐயா!
பதிலளிநீக்குவாழ்வை வாசிக்கும் உறவுகளை நேசிக்கும் அருமைப் பதிவு கண்டேன்.
பதிலளிநீக்குமகிழ்ந்தேன்.
100வது பதிவிற்கு இனிய வாழ்த்து.
மணமக்களிற்கும் இனிய வாழ்த்து.
நேரமிருக்கும் போது தங்கள் பழைய பதிவுகள் பார்ப்பேன்.
வேதா. இலங்காதிலகம்.
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே
நீக்குவணக்கம் ஐயா
பதிலளிநீக்குமுதலில் நூறாவது பதிவிற்கு வாழ்த்துகள். இந்த வாரம் உங்களுக்கு இனிமையான வாரமாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி. நண்பர்கள் வருகை உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருப்பது பதிவில் பளிச்சிடுகிறது. கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா ஐயா அவர்களைத் தவிர அனைவரும் நான் அறிந்தவர்கள் அவரது வலைப்பக்கங்களை வாசிக்கிறேன். இப்படிப்பட்ட தமிழறிஞர்களின் வருகை எனக்கு நிகழ்ந்தது போல் ஒரு உணர்வை இப்பதிவு ஏற்படுத்துயுள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றிகள் ஐயா..
நன்றி நண்பரே
நீக்குநட்பு என்றாலே மகிழ்ச்சிதானே
வலைப்பூவில் பதிவுகளை வாசிப்பதோடு மட்டுமல்லாது பதிவர்களின் நட்பையும் பெற்றுக் கொண்டு அதை தக்க வைத்துக் கொள்ளவும் உங்களால் மட்டுமே முடியு ம் உங்கள் அன்பும் பண்பும் நட்புகளைக்கட்டிப்போடும். நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள். எண்ணிக்கை ஒரு குறியீடே. என்ன எழுதுகிறீர்கள் எப்படி எழுதுகிறீர்கள் என்பதே முக்கியம். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா
நீக்கு100 வது பதிவக்கு வாழ்த்துக்கள் ஐயா .மூத்த்வ்ர்க்ளின் சந்திப்புப்பகிர்வு அருமை ஐயா.
பதிலளிநீக்குஓம் ஸ்ரீமுருகன் துணை
பதிலளிநீக்குவணக்கம் ஐயா!
உங்களின் இந்தப்பதிவு வெறும் வார்த்தைகளாக இல்லாமல், உள்ளம் மகிழும் உறவோடு காலத்தை பகிர்ந்துக்கொண்டதுபோல் உள்ளது. நன்றி. வாழ்க வளமுடன்
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா
நீக்குஅய்யா உங்களின் நூறாவது பதிவிற்கு எனது இரண்டாவது வாழ்த்துகள். தங்களின் “இரோம் சர்மிளா“ பற்றிய பதிவை, “ஊடறு“ பெண்ணிய மின்னிதழில் மறுபதிவு செய்திருக்கிறார்கள். பார்த்தீர்களா? -இணைப்ப-
பதிலளிநீக்குhttp://www.oodaru.com/?p=7208#more-7208 தங்கள் பணிகள் தொடரட்டும்.
தங்களின் கருத்துரையினைக் கண்டபிறகுதான் ஊடறு தளத்திற்குச் சென்று பார்த்தேன் ஐயா. மகிழ்ச்சியாக இருந்தது.
நீக்குஇரண்டாம் வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி ஐயா
என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, தங்களின் நூறாவது பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த தஞ்சை மண்ணிற்கு பெருமையே விருந்தோம்பலும் உபசரிப்பும்தான். அதை தாங்கள் செவ்வனே செய்து இந்த மண்ணின் மைந்தன் என்பதை நிரூபித்து காட்டி பெருமை சேர்த்துள்ளீர்கள். அது மட்டுமல்லாமல் நன்றி மறக்காத உள்ளம் தங்களது என்பதையும் வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்து மனம் மகிழ வைத்தமைக்கு மிகவும் நன்றி.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குமுதலில் வாழ்த்துக்கள் ஐயா!
பதிலளிநீக்குவலையுலகம் தந்த நட்புக்கள் அனைத்தும் முத்துக்கள் தான்!
உங்கள் பதிவு எப்போதும் எனக்குள் ஒரு உந்துதலை தமிழ் மீதான பற்றை அதிகரிக்க செய்யும்.....
சே குவேரா பற்றிய உங்கள் பதிவு என்னை மிகவும் நெகிழ்த்தியது!!!
தொடருங்கள் உங்கள் தமிழ் பணியை தொய்வில்லாது!!
வாழ்த்துக்கள் நூறாவது பதிவிற்கு.திரு முத்து நிலவன் அவர்கள் என் போன்றோர்களுக்கு அறிவொளி மூலமாக அறிமுகமானாவர்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குவாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அன்புச் சகோதரனே தங்களின் அருமையான
பதிலளிநீக்குஇந்த நூறாவது பகிர்வு மென்மேலும் இமையம் தொட்டுச் சிறந்து விளங்கிட என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .
நன்றி சகோதரியாரே
நீக்கு100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநல்லோர் சந்திப்பு மிக அருமை.
தொடர வேண்டும் இன்னும் பல நல்லோர் சந்திப்புகள்.
பதிவுகள் மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்.
நன்றி சகோதரியாரே
நீக்குவலை இருக்கும் வரை நல்லோர் சந்திப்புகளும் தொடந்து கொண்டே இருக்கும் சகோதரியாரே
தாமதமாக வந்ததறுகு மன்னிக்கவும்!
பதிலளிநீக்கு100 வது பதிவு! ஆகா வாழ்த்துக்கள்! கிரிக்கெட்டில் சதம் அடித்தால் எழுந்து கரகோஷம் செய்வது போல தங்கள் சதத்திற்கு எங்கள் அனைவரது கரகொஷம்! பதிவுலகம் நமக்கு மிக நல்ல அன்பர்களாகிய நண்பர்களைப் பெற்றுத் தந்திருக்கிறது! தங்கள் பதிவர்களின் சந்திப்பு மிக்க மகிழ்சி அளிக்கின்றது! இது போன்று நாமும் சந்திப்போம் என்று நம்புகின்றோம்!
தங்கள் சாதனை இன்னும் வளர எங்கள் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்!
நிச்சயம் நமது சந்திப்பு ஒரு நாள் நடந்தே தீரும் நண்பரே
நீக்குநன்றி
நட்புள்ளங்கள் சந்தித்து மகிழ்ந்ததெல்லாம் பதிவாய் படிக்க மனதில் இனிமை சூழ்ந்தது!
பதிலளிநீக்கு100 ஆவது பதிவிற்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்! நூறு ஆயிரமாய் பல்கிப் பெருக, தமிழ் மணக்க மணக்க தொடர்ந்து விருந்தளிக்க இனிய நல்வாழ்த்துக்கள்!!
மிக்க நன்றி சகோதரியாரே
நீக்கு100 வது பதிவிற்கு என் வாழ்த்துக்கள் ..!
பதிலளிநீக்குமேலும் மேலும் வளரவும் இனிய பதிவுகளை படைக்கவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!
வலைதள உறவுகளை சந்தித்த சம்பவங்களும் உரையாடல்களும் மனதை நெகிழ வைத்தன. நன்றி...!
அனைவரையும் நாங்களும் சந்தித்த மாதிரி இருந்தது அய்யா,
பதிலளிநீக்குநல்ல பதிவு வாழ்த்துக்கள்
நூறாவது பதிவிற்காக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஒரு பதிவு சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக எவ்வளவு உழைக்கிறீர்கள் என்பது ஆச்சரியப்பட வைக்கிறது
இன்னும் பல நூறு பதிவுகளுடன் இணையம் சிறக்க வலம்வர வாழத்துகிறேன்