14 மே 2014

நூற்றாண்டுத் தனிமை


ஆண்டு 1965. மாதம் ஜனவரி. ஓட்டு மொத்தக் குடும்பமும், விடுமுறையினைக் கழிக்க, அகாபுல்கோ என்னும் ஊருக்குப் பயணித்துக் கொண்டிருந்தது. குடும்பத் தலைவர் வாகனத்தை ஓட்டிச் செல்ல, அருகில் மனைவி, பின் இருக்கைகளில், அவர்களது இரு மகன்கள்.

    எத்தனை நாளாய் திட்டமிட்டப் பயணம். இன்றுதான் கைகூடியிருகிறது. மகன்கள் இருவரும் மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தனர். தாயும் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டே வருகிறார். ஆனால் தந்தையின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறார்.

       கைகளும், கால்களும் அணிச்சை செயலாய் வாகனத்தை இயக்குகின்றன. இன்று நேற்றல்ல, இந்த சிந்தனை, அவஸ்த்தை, வேதனை எல்லாம். ஒன்றல்ல, இரண்டல்ல, இருபது ஆண்டுகாலமாய் அவஸ்த்தையும், வேதனையும், இருபத்து நான்கு மணி நேரமும் அவரை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.


     அவரது உள்ளத்தில் எத்தனையோ நினைவுகள், அனுபவங்கள் ஒவ்வொன்றாய் வந்து சென்ற வண்ணம் உள்ளன. கோரமான படுகொலைகள், சர்வாதிகார ஆட்சியின் அவல நிலை, கொத்து கொத்தாய் மனிதரை அள்ளிச் செல்லும் கொடு நோய்கள், இரக்கமற்ற மனிதர்கள் என அவரது உள்ளத்தில் அடுக்கடுக்காய் அனுபவங்கள், கொதித்துக் கொண்டிருக்கின்றன.

          தான் கண்டதை, கேட்டதை, பார்த்ததை, அனுபவித்ததை, ஒவ்வொரு எழுத்தாக, ஒவ்வொரு வார்த்தையாக, ஒவ்வொரு வாக்கியமாக, வெள்ளைத் தாளில் இறக்கி வைக்க மனம் துடிக்கின்றது.

     ஆனால் மனதில் இருப்பது எழுத்தில் இறங்க மறுக்கிறது. இருபது ஆண்டுகளாக இந்த வேதனை வாட்டி எடுக்கிறது. இதுவரை இவர் எழுதிய ஒன்றிரண்டு புத்தகங்கள், எதுவும் அதிக அளவில் விற்பனையாகவில்லை. அச்சு வாசனை குறையாமல் பதிப்பகத்தில் பாதுகாப்பாகவே இருக்கிறன.

     ஆனால் அவருக்கு ஒன்று மட்டும் தெளிவாய் தெரிந்தது. தான் பிறந்ததே, இருபது ஆண்டுகளாய் உள்ளத்தில் கரு கொண்டிருக்கும், எண்ணங்களை எழுத்தில் வடிப்பதற்குத்தான் என்பது மட்டும் புரிந்தது.

     அவர் விரும்பும் தொனி, அவர் விரும்பும் குரல், இவை இரண்டு மட்டும்தான் இன்னும் பிடிபடாமலே இருக்கிறது.

     வாகனம் போய்க் கொண்டே இருந்தது. ஒரு திருப்பத்தில், ஒரு மூதாட்டி, எதிரில் வரும் வண்டியை கவனிக்காமல், சாலையைக் கடக்க முயல்வதைக் கண்டு, அவரது ஐம்புலன்களும் சுய நினைவிற்கு வருகின்றன. கைகள் வாகனத்தைத் திருப்ப, கால் அவரை அறியாமலேயே, பிரேக்கை அழுத்துகிறது.

     ஒரு நொடி, அம்மூதாட்டியைப் பார்க்கிறார். மனதில் திடீரென்று ஓராயிரம் மின்னல்கள் தோன்றி மறைகின்றன, அவர் தேடிய தொனி, அவர் தேடிய குரல், இதோ கிடைத்து விட்டது. இருபது ஆண்டுகால குழப்பம், வேதனை, அவஸ்த்தை, அந்த ஒரு நொடியில் கரைந்து காணாமல் போனது. மனதை மூடியிருந்த கரு மேகங்கள் விலகின. கனவு நகரமான மகோண்டா மனத்திரையில், பளிச்சென தெளிவாய் தெரிந்தது.

       ஒரே ஒரு நொடியில், உள்ளத்தில் எண்ணற்ற மாற்றங்கள். அடுத்த நொடி வாகனத்தைத் வந்த வழியே திருப்பினார். மனைவியும் மகன்களும் ஏதும் புரியாமல் விழித்தனர். வீட்டிற்கு வந்து  சேர்ந்தார். தொந்தரவு செய்ய வேண்டாம். எழுதப் போகிறேன்.

     தன் அறைக்குள் போய் எழுத உட்கார்ந்தார். வெளியே வரவேயில்லை. அறையை விட்டு வெளியே வராமல், எழுதினார், எழுதினார், எழுதிக் கொண்டே இருந்தார்.

      நண்பர்களே, சொன்னால் நம்ப மாட்டீர்கள், ஒன்றல்ல, இரண்டல்ல, பதினெட்டு மாதங்கள் எழுதிக் கொண்டே இருந்தார்.

     ஒரு நாளைக்கு ஆறு பாக்கெட் சிகரெட். கத்தை கத்தையாய் தாட்கள், கொடுத்துக் கொண்டே இருந்தார் அவர் மனைவி.

     கையில் இருந்த கொஞ்சப் பணமும், சில நாட்களில் கரைந்தது. சாப்பாட்டுக்குக் கூட வழியில்லை. அவரின் மனைவி முதலில், வாகனத்தை விற்றார். பின்னர் வீட்டிலுள்ள பொருட்கள், ஒவ்வொன்றாக, அடகு கடைக்குப் போய் ஓய்வெடுக்கத் தொடங்கின.

      விரைவிலேயே, வீட்டில் இனி விற்பதற்கோ, அடகு வைப்பதற்கோ ஒன்றுமில்லை என்னும் நிலைமை. அறையை விட்டு, வெளியில் வராமலேயே, எழுதிக் கொண்டே இருக்கிறாராமே? எழுதட்டும், ஒரு புதிய காவியம் உருவாகட்டும். அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவத் தொடங்கினர். தாராளமாய் கடன் வழங்கினர், பணமாய் கொடுத்தனர், பொருட்களாய் வழங்கினர்.

     நண்பர்களே, கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு, தனது புது நாவலின், முதல் மூன்று அத்தியாயங்களை, தனது நண்பரான, கார்லோஸ் ஃப்வெண்டோஸுக்கு அனுப்பினார்.

கார்லோஸ் ஃப்வெண்டோஸ்




ஒரு மகத்தான நாவலின், முதல் பதினெட்டுப் பக்கங்களை இப்போதுதான் படித்தேன். அந்த நண்பர்தான், முதன் முதலில் உலகிற்கு அறிவித்தார்.

      இன்னும் பெயர் கூட வைக்கப்படாத அந்த நாவலுக்கு, எதிர்பார்ப்பு கூடிக்கொண்டே சென்றது.

      ஆசிரியரோ அறையைவிட்டு வெளியே வராமல் எழுதிக் கொண்டே இருந்தார். எழுதியதை அடித்து விட்டு மீண்டும், மீண்டும் எழுதினார். ஒவ்வொரு எழுத்தாக, ஒவ்வொரு வார்த்தையாக, ஒவ்வொரு வாக்கியமாக, பார்த்துப் பார்த்துக் கோர்த்து, மெருகேற்றிக் கொண்டே இருந்தார்.

    Before reaching the final line, he had already understood that he would never leave that room, ………………………………………………. Because races condemned to one hundred years of solitude did not have a second opportunity on earth.

      நண்பர்களே, நாவலின் கடைசி பக்கத்தில்தான், அதன் கடைசி வரியில்தான், அந்த நாவலுக்கானத் தலைப்பையே கண்டு பிடித்தார்.

One Hundred Years of Solitude

      மொத்த நாவலையும் எழுதி முடித்து, அவர் அறையை விட்டு வெளியே வந்தபொழுது, அவரது கையில் 1,300 பக்கங்கள். வாய் முழுவதும் நிகோடின் கறை. பத்தாயிரம் டாலர் கடன்.



நண்பர்களே, 1967 ஆம் ஆண்டு நூற்றாண்டுத் தனிமை நூலாய் வெளிவந்தது. ஒரு சில வாரங்களிலேயே 10,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. ஒவ்வொரு வாரமும் அந்நூல் மறுபதிப்பு செய்யப் பட்டுக் கொண்டே இருந்தது. அச்சிட அச்சிட நூல்கள் விற்றுக் கொண்டே இருந்தன. மூன்றே ஆண்டுகளில் ஐந்து இலட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்தது. இன்று வரை நாற்பதிற்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. நான்கு சர்வதேசப் பரிசுகள்.

முத்தாய்ப்பாய், 1982 இல் நோபல் பரிசு.

நண்பர்களே,
இவர்தான்
காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ்.

- -
      1928 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் நாள், வட கொலம்பியாவின் அரகாடக்கா (Aracataca)  என்னும் ஊரில் பிறந்தவர் மார்குவேஸ். தாய் வழிப் பாட்டனார் வீட்டில் வளர்ந்த மார்குவேஸுக்கு, எல்லாமே அவரது தாத்தாவும் பாட்டியும்தான். மார்குவேஸின் நாடி நரம்புகளிலும், உடலின் ஒவ்வொரு அணுவிலும் நீக்கமற கலந்திருப்பர் அவரது பாட்டிதான்.

             பாட்டியிடம் கதை கேட்டே வளர்ந்தவர் மார்குவேஸ். இவரது பாட்டி சொல்லும் கதைகள் எல்லாம் அதீத மாயங்களாகவும் அற்புதமாகவும் இருக்கும், ஆனால் மிக இயல்பாக இருக்கும். அதைவிட முக்கியம் என்னவெனில், அக்கதைகளைக் கூறும்போது இருக்கும் அவரது முகபாவம். தன் முகபாவத்தை அவர் மாற்றிக் கொள்ளவே மாட்டார். அனைவரும் அதைக் கண்டு ஆச்சரியப் படுவார்கள். இந்த பாவத்தை நம்பாமல்தான், மார்குவேஸ் ஆரம்பத்தில் எழுதினார். பாட்டியின் பாவத்தை, உறுதியான முகத்துடன், இவரே நம்பி, அதை அவர் பாட்டி கூறியபடியே எழுத்தாக மாற்றினார். நூற்றாண்டுத் தனிமையை பாட்டியின் பாவத்தில், தொனியில்தான் படைத்தார். இந்தத் தொனியின் பெயர்தான், இந்தப் பாவத்தின் பெயர்தான் மேஜிகல் ரியலிசம்.

     மேஜிகல் ரியலிசம் என்பது, வாழ்வை நடப்புகளை, வேறொரு வகையில் பார்க்க முயற்சிப்பது. ஒரு செயல், யதார்த்தமாகத் தரும் பொருள் அல்லது அர்த்தம், மேஜிகல் ரியலிச அணுகு முறையால் முற்றிலும் வேறாக அமைந்திருக்கக் கூடும்.

     இரண்டு குழந்தைகள் பந்தை வீசி விளையாடுகின்றன. ஒரு முறை அந்தப் பந்து, திடீரென்று மல்லிகை மலர்களாக மாறி அடுத்த குழந்தை மேல் விழுகிறது.

      உடனே நாம் என்ன நினைப்போம்? அதிசயம், மாயம் என்போம். இந்த அதிசயம் என்ற உணர்வு, நமது வழக்கமான யதார்த்த மொழியில் குறிக்கப் படுவதாகும்.

     ஆனால் கதையில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்து, குழந்தை அதனை இயல்பாக எடுத்துக் கொண்டால்?

     பந்தை வீசும் குழந்தையின் அன்பு, கனிவு, பாசம் அத்தனையும் கலந்து, அவர் வீசும் பந்து, மல்லிகை மலர்களாக மாறக்கூடாதா?

     நண்பர்களே, மேஜிகல் ரியலிசம் இங்கேதான் தொடங்குகிறது. யதார்தத்தின் கட்டுக் கோப்பான எல்லைகளை மீறி, ஒரு அனுபவத்தை சாத்தியப் படுத்துவதுதான் மேஜிகல் ரியலிசம்.

     மார்குவேஸின் வாழ்க்கையில் நடைபெற்ற இரு நிகழ்வுகள், அவரின் வாழ்க்கைப் பாதையினையே, அடியோடு புரட்டிப்போட்டு, எழுதுகோலை எடுத்து, அவரின் விரல்களிடையேச் சொருகின.



 முதலாவது அவர் படித்த ஒரு புத்தகம். போர்ஹே மொழிபெயர்த்த, காஃப்காவின், தி மெட்டமார்ஃபசிஸ் என்னும் நாவலைப் படிக்கத் தொடங்கியவுடன், அவரது தலையெழுத்தே மாறிப் போனது.

     இலக்கியம் என்பது நேரடியான கதை சொல்லும் முறை மற்றும் வழக்கமானக் கருவைக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்பதை அப்புத்தகம் அவருக்கு உணர்த்தியது.

     As Gregor Samasa awoke that morning from uneasy dreams, he found himself transformed into a gigantic insect ……………. அந்நூலின் முதல் வரி இப்படித்தான் தொடங்கும். இதுபோல் எல்லாம் எழுதலாம் என்று எனக்கு அதுவரைத் தெரியவில்லை. தெரிந்திருக்குமானால், நான் எப்பொழுதோ எழுதத் தொடங்கி இருப்பேன
    


இரண்டாம் நிகழ்வு. ஒரு நாள் மார்குவேஸும் அவரது தாயாரும், தாய் வழி வீட்டை விற்பதற்காக அரகாடக்கா என்னும் ஊருக்குச் சென்றனர். அந்த வீட்டில்தான் மார்குவேஸின் இளமைக் காலம் கழிந்திருந்தது. அந்த பாழடைந்த வீடு, அவருக்குள் பழைய நினைவுகளை உசுப்பி விட்டது. அந்த நகரமே, காலத்தால் துளியும் மாறாது, அப்படியே உறைந்து போயிருப்பதுபோல் காட்சியளித்தது.

     இப்பயணத்தின் விளைவுதான், மார்குவேஸின் கதைகளில் உருவான கனவு நகரம் மகோண்டா.

நூற்றாண்டுத் தனிமை

     தென் அமெரிக்க நகரமான மகோண்டா, இந்த நாவலில்தான் அற்புதமாக வெளிப்படுகிறது. மகோண்டா நகரத்தில் வாழும், ஒரு குடும்பத்தின் ஐந்து தலைமுறைக் கதைதான் நூற்றாண்டுத் தனிமை.

     அக்குடும்பத்தின் உயர்வு, தாழ்வு, வலி, வேதனை, மகிழச்சி, துக்கம், என பல்வேறு உணர்வுகளையும், சம்பவங்களையும் ஓவியம் போல தீட்டிக் கொண்டே செல்வார் மார்குவேஸ்.

     காலமும், மொழியும் பின்னிப் பிணைந்து வித்தியாசமான கதை சொல்லும் பாணியும், தொனியும், வாசகர்களை, இதுவரை அறியாத, அனுபவித்திராத வேறொரு உலகிற்கு அழைத்துச் செல்லும்.

1982 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் நாள்,
நூற்றாண்டுத் தனிமை
நாவலுக்கு, இலக்கியத்திற்கான
நோபல் பரிசு
வழங்கப் பட்டது.
நோபல் பரிசினைப் பெற்றுக் கொண்ட மார்குவேஸ் பேசுவதைக் கேளுங்கள்.

    

ஒடுக்குமுறைகள் மற்றும் சூறையாடல்களுடன் நாங்கள் வாழ்வை நடத்துகிறோம். வெள்ளமோ, பிளேக்கோ, பஞ்சமோ, பேரழிவோ, நூற்றாண்டுகளாக நடந்து வரும் போர்களோ, மரணத்தைவிட வாழ்வின் மேல் எங்களுக்கு உள்ள ஆர்வத்தைக் குறைக்கவில்லை, இந்த ஆர்வம் பன்மடங்கு பெருகிக் கொண்ட இருக்கிறது.

     ஒவ்வோர் ஆண்டும் மரண அளவுக்கு மேல் 74 மில்லியன் புதிய குழந்தைகள் பிறக்கின்றன. இது மேலும் பன்மடங்காகும்.  இந்த எண்ணிக்கை நியூயார்க்கின் மக்கள் தொகையை விட ஏழு மடங்கு அதிகம். இந்தக் குழந்தைகள், லத்தீன் அமெரிக்கா உள்பட, பல வறுமையான நாடுகளிலேயே பிறக்கின்றன. ஆனால் செல்வம் மிகுந்த நாடுகளோ, இன்று இருப்பது போல் நூறு மடங்கு உயிரினங்களை, எப்போதோ தப்பித் தவறி இங்கே மூச்சு விட்ட உயிரினங்கள் வரை அத்தனையையும் அழிக்கும் பேராற்றலைச் சேமித்திருக்கின்றன.

     இன்று போல் ஒரு நாள், எனது தலைவர் ஃபாக்னர் சொன்னார். மனிதனின் அழிவை என்னால் ஏற்க முடியாது. முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர் எற்க மறுத்தப் பேரழிவு, மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து, முதன் முறையாக, இன்று ஒரு விஞ்ஞான சாத்தியமாகிவிட்டது என்பதை நான் உணரவில்லை என்றால், இந்த இடத்தில் நிற்கவே எனக்குத் தகுதியில்லை.

     மனிதன் வாழ்ந்த காலமெல்லாம் பெருங்கற்பனையாக இருந்திருக்கக் கூடிய ஒன்று, இன்று சாத்தியம் என்று ஆன பிறகு, எதையும் நம்பக்கூடிய கதைகளை உருவாக்கும் நாங்கள், மாற்று எதிர் பெருங் கற்பனையை உருவாக்க நேரம் இன்னும் முடிந்து விடவில்லை என்று நம்பவே விரும்புகிறோம்.

     யாரும் அடுத்தவர் எப்படி மரணம் அடைய வேண்டும் என்று முடிவு செய்ய முடியாத, அன்பு உண்மையாக இருக்கக் கூடிய, மகிழ்ச்சி சாத்தியமாகக் கூடிய, ஒரு நுற்றாண்டாகத் தனிமையை அனுபவிக்கும் இனங்கள், இறுதியாகவும் எப்போதுமாகவும் உலகில் இரண்டாம் முறை வாழும் ஒரு பெருங் கற்பனையைப் படைக்கவே விரும்புகிறோம்.

      லத்தீன் அமெரிக்காவை உலக இலக்கிய வரைபடத்தில் முக்கிய இடத்தில் வைத்த பெருமைக்கு உரிய காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ், எழுதுவதை நிறுத்தி, எழுதுகோலை மூடிவைத்த நாள், கடந்த மாதம் ஏப்ரல் 17. ஆம் அன்றுதான் இரத்தப் புற்று நோய் அவரை வேறொரு மாய உலகிற்குக் கதை எழுத அழைத்துச் சென்றது.



எழுத்தில் உச்சம் தொட்ட

காபிரியேல் கார்ஸியா மார்குவேஸைப் போற்றுவோம்.

45 கருத்துகள்:

  1. படித்திருக்கிறேன் இவரது வரலாற்றை! பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. ஒரு புகழ்பெற்ற மனிதரைப் பற்றி சொல்லும்போது எப்படித் தொடங்கவேண்டும் என்பதை உங்களிடம் இருந்துதான் கற்றுக் கொள்ளவேண்டும். அற்புதமான நடையில் கடைசி வரை சுவாரசியமாக ஒரு இலக்கியப் பெருந்தகையை அறிமுகப் படுத்தியது மிகவும் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மிக்க மகிழ்வினை அளிக்கின்றன ஐயா
      நன்றி

      நீக்கு
  3. இருபது ஆண்டுகால குழப்பம், வேதனை, அவஸ்த்தை, அந்த ஒரு நொடியில் கரைந்து காணாமல் போனது//ஆஹா

    பதிலளிநீக்கு
  4. மேஜிகல் ரியலிசம் என்று புதுமையாய் எழுதியதுதான்இவர் புகழ் உச்சிக்கு செல்ல காரணமாய் இருக்க வேண்டும் !
    நல்ல அறிமுகம் கொடுத்து உள்ளீர்கள் !வாழ்த்துக்கள் !
    த ம 3

    பதிலளிநீக்கு
  5. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, ஒரு அருமையான படைப்பாளியை மிகவும் அழகாகவும் மனதினை ஈர்க்கும் வண்ணமும் பதிவு செய்ததற்கு வாழ்த்துக்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா14 மே, 2014

    ''..எழுத்தில் உச்சம் தொட்ட
    காபிரியேல் கார்ஸியா மார்குவேஸைப் போற்றுவோம்....''
    ஒவ்வோருவர் வாழ்வு அனூபவங்களும் நமக்கும் ஒரு படிப்பினையே
    இனிய நன்றி இனிய பதிவிற்கு..
    அன்புடன் வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே

      நீக்கு
  7. இதன் தமிழாக்கம் தான் இம்மாத வீதி கூட்டத்தில் விமர்சிக்கப்பட்டது .நான் படிக்க விரும்பும் நூல்களில் ஒன்றாகிவிட்டது நீங்களும் கூறிய உடன் .நன்றி சகோ

    பதிலளிநீக்கு
  8. சொன்னதும் சொல்லிச் சென்றவிதமும்
    மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. ஒரு புகழ் பெற்ற எழுத்தாளரை நீங்கள் அறிமுகப் படுத்தியவிதம் மிக மிக அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. அன்பரே ! "எதார்த்தத்தின் கட்டுக்கோப்பான எல்லைகளை மீறி ஒரு அனுபவத்தை சாத்தியப்படுத்துவது தான் மாஜிகல் ரியலிசம் " ! மிக அற்புதமான வரையறை ! வாழ்த்துக்கள் !---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகையும் வாழ்த்தும் மிக்க மகிழ்வினை அளிக்கின்றன ஐயா நன்றி

      நீக்கு
  11. ஒரு சிறப்பை படிப்படியாக அருமையாக சொல்லி உள்ளீர்கள் ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா

      நீக்கு
  12. தலைப்பைப் பார்த்தவுடன் இவரைப் பற்றித் தாங்கள் எழுதியிருப்பீர்கள் என்ற நிலையில் அவரது நூலின் தலைப்பின் தமிழ் மொழிபெயர்ப்பு உணர்த்தியது. நான் நினைத்தது சரியாகவே இருந்தது. பாட்டி சொன்ன கதையில் வளர்ந்த அபூர்வ மனிதரைப் பற்றித் தாங்கள் பகிர்ந்த விதம் மிகவும் அருமை. காபோ என்று அழைக்கப்படும் காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ் தன் எழுத்தின்மூலமாக இன்னும் வாழ்கிறார். இவரைப் பற்றி பீடல் காஸ்ட்ரோ 9.5.2007இல் எழுதிய கடிதத்திலிருந்து: "It has been said that the masterpiece which made author Gabriel Garcia Marquez famous, One Hundred Years of Solitude, required him to write fifty pages for each that was printed..... " (Battle of Ideas: Fidel Reflects, Fidel Castro, New Century Book House, Chennai, 2007, p.79) சிறப்பான பதிவிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா
      ஃபிடல் காஸ்ட்ரோ நூல் அறிமுகத்திற்கு நன்றி ஐயா
      வாங்கிப் படிக்கின்றேன்

      நீக்கு
  13. நாவலின் கடைசிப் பக்கத்தில் - அதன் கடைசி வரியில் - அந்த நாவலுக்கானத் தலைப்பைக் கண்டு பிடித்த சுவாரஸ்யம்.

    புகழ் பெற்ற எழுத்தாளர் மார்குவேஸ் அவர்களின் சிறப்பை - தங்களின் தனித்துவமான கைவண்ணத்தில் சொல்லிச் சென்றது அருமை!..

    பதிலளிநீக்கு
  14. ,
    இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற நூற்றாண்டுத் தனிமை
    நாவல் பற்றிய வரலாற்றுப்பகிர்வுகளுக்கு நன்றிகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே

      நீக்கு
  15. அருமையான இப் பகிர்வுக்குப் என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே

      நீக்கு
  16. அருமை...அருமை...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. அன்புள்ள ஜெயக்குமார்

    கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணன் உதயசூரியன் அவர்களால் கேபிரியலை வாசிக்கும் வாய்ப்புக்கிட்டியது. அழகாக எழுதியிருக்கிறிர்கள். நல்ல பதிவு,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா

      நீக்கு
  18. மிக அருமையான பகிர்வு.மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  19. மிக அருமையான பதிவு
    உங்கள் எழுத்து செறிவும் செழுமையும் மேம்பாட்டுக் கொண்டே வருகிறது...

    பதிலளிநீக்கு
  20. டி.என்.முரளிதரன் சார் சொல்வது சரி தான். எவ்வாறு தொடங்குவது என்பதை உங்களிடம் கற்க வேண்டும் சார் .புகழ் பெற்ற எழுத்தாளரை நாங்கள் அறிந்து கொள்ள வைத்தமைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முரளிதரன் ஐயா அவர்களுக்கும், தங்களுக்கும் என்மீது உள்ள அன்பின் வெளிப்பாடு கண்டு மகிழ்ந்தேன் நண்பரே
      வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி

      நீக்கு
  21. நான் அவரது எழுத்தைப் படித்ததில்லைஎன்ன வோ ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது “வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை புத்தி உள்ள மனிதர் எல்லாம் வெற்றி பெற்றதில்லை “ sometimes something clicks and you are on the top. சுவையாகப் பகிர்ந்ததற்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  22. காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ் பற்றி நான் அறிந்ததில்லை. அவர் எழுதிய One Hundred Years of Solitude – என்ற நூலினைப் பற்றிய உங்கள்து நூல் அறிமுகம் மூலம் அவரைப் பற்றி அறிந்து கொண்டேன். இந்த நூலின் தமிழாக்கம் புத்தகமாக வெளிவந்துள்ளது என்பதை M.கீதாவின் கருத்துரையால் தெரிந்து கொண்டேன். தமிழில் வெளியிட்ட பதிப்பகம் பற்றி தெரியப் படுத்தவும். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலச்சுவடு பதிப்பகம்
      தனிமையின் நூறு ஆண்டுகள்
      என்னும் தலைப்பில், இந்நூலின் தமிழ்ப் பதிப்பினை
      வெளியிட்டுள்ளது ஐயா
      வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா

      நீக்கு
  23. ஒரு அழகு, ஒரு அழகை அழகு படுத்திவிட்டது
    Killergee
    www.Killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
  24. எனக்கு புதியதாய் ஒரு அறிமுகம். ஆங்கிலத்தில் படிக்க முயற்சிக்கிறேன். எங்கள் நூலகத்தில் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  25. தேர்தல் நேரத்து தொலைகாட்சி ஈர்ப்பினால் இரண்டு நாள் தாமதமாகப் படித்தேன் உங்களின் அழகிய பதிவை. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  26. காபிரியேல் கார்ஸியா மார்குவேஸ் பற்றிய தகவல் அருமை! புதிதுதான்! அருமையான நடை!

    பகிர்வுக்கு மிக்க நன்றி! நண்பரே!

    பதிலளிநீக்கு
  27. பெயரில்லா18 மே, 2014


    நுாற்றாண்டுத்தனிமை என்ற மார்குவேஸ் பற்றிய பதிவு அருமை ஐயா. பத்திரிகைகள் கூட இந்த அளவுக்கு மார்குவேஸ் பற்றிய விரிவான கட்டுரை வெளியிடவில்லை. தங்கள் பதிவு, தமிழ் கூறும் நல்லுலகுக்கு மார்குவேஸ் பற்றி அறியாதவர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை, ஐயா

    பதிலளிநீக்கு
  28. பெயரில்லா25 மே, 2014

    வணக்கம்
    ஐயா.

    என்ன ஐயா எழுத்தா... சொற்கோர்வைகள் அவரின் வாழ்க்கை வரலாறு மிக அற்புதாமாக சொல்லியுள்ளீர்கள் தங்களின் ஒவ்வொரு கட்டுரையும் மிகவும் இரசித்துப்படிப்பேன் ஐயா. அதில் இதுவும் ஒன்று.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு