08 மே 2014

பிள்ளைப் பிடிக்கப் போறீங்களா..

அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கியொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
                           - மகாகவி பாரதி

     ஆசிரியர்களுக்கு என்ன குறைச்சல், கை நிறைய சம்பளம், காலாண்டு தேர்வு முடிந்தால் பத்து நாட்கள் விடுமுறை, அரையாண்டுத் தேர்வு முடிந்தால் பத்து நாட்கள் விடுமுறை, முழு ஆண்டுத் தேர்வு முடிந்தால் ஒன்றரை மாத விடுமுறை. கொடுத்து வைத்தவர்களய்யா.


       பொதுமக்கள் பலருக்கும் இன்றைய ஆசிரியர்களின் உண்மை நிலை தெரியவில்லை.

      நண்பர்களே, ஆசிரியர் பணி என்பது, தற்பொழுது கடினமானப் பணியாகிவிட்டது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்குப் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் இருக்கிறார்களே, நான் உட்பட, அவர்கள் அனைவருமே, மிகவும் பாவப்பட்ட ஜென்மங்கள் என்றுதான் கூற வேண்டும்.

      நண்பர்களே, நாமெல்லாம் மாணவர்களாய் பயின்றபோது, ஆசிரியர்களுக்குப் பயந்தோம், உரிய மரியாதையினைக் கொடுத்தோம், அதனால்தான் இன்று ஒரு நல்ல நிலையில் இருக்கிறோம்.

      வகுப்பறையில் ஆசிரியர் கொலை. கல்லூரி முதல்வரை மாணவர்கள் வெட்டிச் சாய்த்தனர். நம் நெஞ்சைப் பதறச் செய்த செய்திகள் இவை.

      தற்பொழுது மாணவ, மாணவியரிடம் ஒழுக்கக் கேடு அதிகரித்து விட்டது. ஆசிரியர்களால் அவர்களை, ஒரு எல்லைக்கு மேல் கண்டிக்க இயலவில்லை. காரணம், மாணவனை அடித்தால் குற்றம். அடித்தால் மட்டுமல்ல, மாணவனின் மனம் நோகுமாறு பேசுவது கூட தண்டனைக்கு உரிய குற்றம்.

      மாணவன் விரும்பினால் ஆசிரியர் மேல் குற்றம் சாட்டலாம். என் வகுப்பு மாணவி ஒருவர், ஒரு ஆசிரியையிடம், டீச்சர், படி படி என்று வற்புறுத்திக் கொண்டே இருந்தீர்களேயானால், உங்கள் பெயரினை எழுதி வைத்துவிட்டு, ஹாக்கி அறையில் தூக்குப் போட்டுக் கொள்வேன். பாவம் ஆசிரியர்கள். இதுதான் இன்றைய யதார்த்த நிலை.

     காலாண்டு, அரையாண்டு விடுமுறை எல்லாம், இந்தக் கால ஆசிரியர்களுக்குக் கிடையாது. சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தியாக வேண்டும். பள்ளிக் கூடம் மாலை 4.20 மணிக்கு நிறைவு பெற்றாலும், மாலை 6.00 மணி வரை வகுப்புகள் நடத்தியாக வேண்டும். பள்ளியின் தேர்ச்சி சதவிகிதத்தை உயர்த்தியாக வேண்டும், அல்லது தேர்ச்சி சதவிகிதத்தைத் தக்க வைத்துக் கொண்டாக வேண்டும். தினந்தோறும் போராட்டம்தான்.

     நண்பர்களே, பத்தாம் வகுப்புத் தேர்வுகள், கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி நிறைவுற்றன. அடுத்த நாளில் இருந்தே தொடங்கிய, விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்ரல் 22 வரை நடைபெற்றது. இடையில் வந்த ஞாயிற்றுக் கிழமைகளில், பாராளுமன்றத் தேர்தலுக்கான சிறப்பு வகுப்புகள். ஆக விடுமுறையே இல்லை. ஏப்ரல் 23 ஆம் தேதி,  தேர்தல் பணிக்கான ஆணையினைப் பெற்றுக் கொண்டு, வாக்குச் சாவடி நோக்கிப் பயணித்தோம்.

     நண்பர்களே, நான், தஞ்சாவூர், ஒரத்தநாடு சட்ட மன்றத் தொகுதிக்கு உட்பட்ட, பணிகொண்டான் விடுதி என்னும் சிற்றூரில் அமைந்திருந்த வாக்குச் சாவடியில், வாக்குச் சாவடி முதன்மை அலுவலராக நியமிக்கப் பட்டிருந்தேன்.

      என்னைத் தவிர, அவ்வாக்குச் சாவடிக்கு நியமிக்கப் பட்டிருந்த மூவரும் ஆசிரியைகள். வாக்குப் பதிவு நல்ல முறையில் அமைதியாக நடைபெற்றது. ஆசிரியைகள் மூவரும் சிறப்பாகப் பணியாற்றினார்கள்.அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் திரு செந்தில் என்பவர் ஓர் இளைஞர். தேர்வு எழுதித் தேர்வானவர். நட்புடன் பழகி, வேண்டிய உதவிகளை, இன்முகத்துடன் செய்து கொடுத்தார்.

      வாக்குப் பதிவு முடிந்து, வாக்குப் பதிவு இயந்திரத்தினைப் பெற, மண்டல அலுவலர், எங்கள் வாக்குச் சாவடிக்கு வந்த பொழுது, இரவு மணி 2.00.

     ஆசிரியைகள் மூவரும் தஞ்சை திரும்பியாக வேண்டும். இரவு 2.00 மணிக்கு ஏது பேரூந்து. நான் இரு சக்கர வாகனத்தில் சென்றிருந்ததால், எனக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் ஆசிரியைகளை பத்திரமாக அனுப்பியாக வேண்டுமே.

       மண்டல அலுவலரின் வாகனத்திலேயே அடுத்த வாக்குச் சாவடி வரை மூவரும் சென்றனர். நான் பின் தொடர்ந்தேன். திருவோணம் என்னும் ஊரின் பள்ளி அது. அப்பள்ளியில் நான்கு வாக்குச் சாவடிகள். இரவு மணி 2.30

     ஐந்தாறு கார்கள், காவல் துறை வாகனங்கள், ஜீப்புகள் என அப்பகுதியே திருவிழா போல் காட்சியளித்தது. மாருதி காருடன் நின்றிருந்த ஒருவரை அணுகி, தஞ்சைக்குச் செல்கிறீர்களா? என்றேன்.

ஆமாம் தஞ்சைக்குத்தான் செல்கிறேன் என்றார்.

இந்த மூன்று ஆசிரியைகளும் தஞ்சை சென்றாக வேண்டும். தஞ்சை வரை, இவர்களையும் தங்கள் காரில் அழைத்துச் செல்லலாமா? என்றேன்

சற்றும் தயங்காது, அதற்கென்ன அழைத்துச் செல்கிறேன் என்றார்.

       அவருக்கு நன்றி கூறி, ஆசிரியைகள் மூவரையும், காரில் அனுப்பி விட்டு, அங்கிருந்து 20 கிமீ தொலைவில் உள்ள கந்தர்வக் கோட்டைக்கு வந்து, அங்கிருந்து, புதுக்கோட்டை தஞ்சை சாலையில் 20 கிமீ பயணித்து, வீட்டிற்கு வந்தபொழுது ,அதிகாலை மணி 4.30.

       மூன்று நாட்கள் மட்டுமே ஓய்வு, 28.4.2014 முதல் பள்ளி அலுவல்.

      நண்பர்களே, உண்மைதான் 28.4.2014 திங்கட் கிழமை முதல் அனைத்து ஆசிரிய ஆசிரியைகளும், தினமும் பள்ளிக்குச் சென்று வருகிறோம். விடுமுறை என்பது மாணவர்களுக்கு மட்டும்தான் ஆசிரியர்களுக்கு அல்ல.

     ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களின், முழு ஆண்டுத் தேர்வு விடைத் தாட்களைத் திருத்தி ஆக வேண்டும், தேர்வு முடிவுகளை அறிவித்தாக வேண்டும்.

      மாணவர்களின் தேர்வு முடிவுகளை வெளியிட்ட பின்னர்தான், எங்களின் முக்கியப் பணியே தொடங்குகிறது. என்ன நண்பர்களே புரியவில்லையா? அடுத்தக் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை.

      நாமெல்லாம் சிறுவர்களாக இருந்த பொழுது, பள்ளி நேரம் தவிர, மற்ற நேரங்களில், தெருவில் விளையாடுவோமே நினைவிருக்கிறதா நண்பர்களே.

     பளிங்கு, பம்பரம், கிட்டிப் பில், பட்டம், கபடி, கிரிக்கெட் என விளையாட்டுகளுக்கு ஒரு முடிவே கிடையாது. ஒரு தெருவிற்கு முப்பது நாற்பது சிறுவர்கள் இருப்பார்கள். அனைவரும் தெருவில்தான் இருப்பார்கள். தெருவே அதகளப்படும்.

     ஆனால் இன்று வீட்டிற்கு ஒரு சிறுவன், அதிகமானால் இரண்டு பேர். அவர்களும் வீட்டை விட்டு வெளியே வருவதேயில்லை. தொலைக் காட்சியே சரணம் என்று முடங்கி விடுகிறார்கள். இன்று பல மாணவர்களுக்குத், தங்கள் தெருவில் இருக்கும் மற்ற மாணவர்கள் யார் என்பது கூடத் தெரியாது.

     நண்பர்களே, சொல்ல வந்த செய்தியை விட்டு விட்டேன். அதாவது நாம் சிறுவர்களாக இருந்த பொழுது, நம்மைப் போன்ற சிறுவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் அன்று இருந்த பள்ளிகளின் எண்ணிக்கையோ குறைவு.

      இன்றைய நிலை என்ன? இன்று பள்ளிகளின் எண்ணிக்கை மிக மிக அதிகம். ஆனால் மாணவர்களின் எண்ணிக்கையோ மிக மிகக் குறைவு.

      அனைத்துப் பள்ளிகளிலும் போதிய எண்ணிக்கையில் மாணவர்களைச் சேர்த்தாக வேண்டும். அப்பொழுதுதான் ஆசிரியர்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். மாணவர்களை சேர்ப்பதற்கு பள்ளிகள் ஒன்றொடு ஒன்ற போட்டிப் போடும் நிலை. ஆறாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர். 9மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்.

     நண்பர்களே, பள்ளிகளில் இன்று ஆசிரியர்கள் இருக்கிறார்கள். மாணவர்கள்தான் குறைவு. தேர்தல் நேரத்தில், வேட்பாளர்கள், வீடு வீடாகச் சென்று ஓட்டுக் கேட்பார்கள் அல்லவா? அதைப் போலத்தான் நாங்களும், கையில் எமது பள்ளி குறித்த நோட்டீசுகளை எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு கிராமம் கிராமமாக, ஒவ்வொரு தெருத் தெருவாக, ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று வருகிறோம். தங்கள் பிள்ளைகளை எங்கள் பள்ளிக்கு அனுப்புங்கள் என வேண்டி வருகிறோம்.நண்பர்களே, யாருமே செய்யாத செயலை நாங்கள் செய்திருக்கிறோம். ஆம் நண்பர்களே, மாணவர்களின் வசதிக்காக, ஆசிரியர்களான நாங்கள் அனைவரும் சேர்ந்து, மாதத் தவணையில், ஒரு பெரிய வேன் வாங்கியிருக்கிறோம். ஓட்டுநர் ஊதியம், மாதாந்திரத் தவணைக் கட்டணம் மற்றும் இதரச் செலவினங்கள், என அனைத்தையும் நாங்களே செலுத்தி வருகிறோம். ஆசிரிய ஆசிரியைகள் அனைவரும், அலுவலகத்தார் உட்பட, அனைவரும் தங்களது மாத ஊதியத்தில் இருந்து, ஆயிரம் ரூபாயினை இதற்காக மனமுவந்து வழங்கி வருகிறார்கள்.

       பேரூந்து வசதி அதிகம் இல்லாதப் பகுதிகளுக்கு இந்த வேன் தினமும், காலை மாலை இரு வேளைகளிலும் செல்லும். கரந்தையில் இருந்து புறப்பட்டு, பள்ளியக்கிரகாரம், மணலூர், குளமங்களம், கூடலூர், குருங்களுர் வரை தினமும் 50 கிலோ மீட்டர் இவ் வேன் சென்று வருகிறது. மாணவர்களிடம் இருந்து கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை, முற்றிலும் இலவசம்.

     கடந்த 30.4.2014 அன்று தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு கடைசி அலுவல் நாள். எனவே கரந்தையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்குச் செல்வது என்று முடிவு செய்தோம்.

     ஏற்கனவே, எம் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று, 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்பு பயின்று, 6 ஆம் வகுப்பிற்கும், 9 ஆம் வகுப்பிற்கும் செல்ல இருக்கும் மாணவர்களின், வீட்டு விலாசங்களைப் பெற்று, அவர்களின் விட்டிற்கும் சென்று, எங்கள் பள்ளிக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்த வண்ணம் உள்ளனர்.

     எம் பள்ளியின் தலைமையாசிரியர் திரு வெ.சரவணன், உதவித் தலைமையாசிரியர் திரு அ.சதாசிவம், திரு ஜி.விஜயக்குமார், திரு எஸ்.சரவணன், திரு டி.பாபு, திரு ஜி.குமார், திரு ஜெ.கிருஷ்ணமோகன், திரு எஸ்.தனபால் மற்றும் நான் என ஒன்பது பேரும் ஒரு குழுவாகப் புறப்பட்டோம்.

     கரந்தை நகராட்சி நடுநிலைப் பள்ளி, பால சரசுவதி தொடக்கப் பள்ளி, பாரத் தொடக்கப் பள்ளி, கிருஷ்ணம் பப்ளிக் பள்ளி, வெண்ணாற்றங்கரை ஜவகர் தொடக்கப் பள்ளி, பள்ளியக்கிரகாரம் அரசு நடு நிலைப் பள்ளி என ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று, அப்பள்ளியின் தலைமையாசிரியையைச் சந்தித்துப் பேசினோம்.


    
பின்னர் பள்ளியக்கிரகாரம் செல்வம் தேநீர் விடுதியில், தேநீர் அருந்தியவாறு சிறிது ஓய்வெடுத்தோம்.


     பிறகு பள்ளியக்கிரகாரத்தில் இருந்து ஐந்து கிமீ தொலைவிலுள்ள, வயலூர் என்னும் சிற்றூரில் உள்ள நல்லாயன் நடுநிலைப் பள்ளிக்குச் சென்றோம். நண்பகல் 12.30 மணியாகிவிட்டது. வெயிலோ அனலாய் தகித்தது.

     ஒரு மரத்தின் நிழலில் அனைவரும் கூடி, அடுத்து எங்கு செல்வது என்பது குறித்துப் பேசினோம். தலைமையாசிரியர் கூறினார், கரந்தையில் ஜைன இலவச நடுநிலைப் பள்ளிக்குச் செல்லாமல் வந்து விட்டோம், அப் பள்ளிக்குச் செல்வோம்.

     நண்பர்களே, பள்ளியின் பெயரைக் கேட்டவுடன், மனதில் ஓர் ஆயிரம் மகிழ்ச்சி மின்னல்கள். தகிக்கும் வெயில், குளிர் நிலவாய் மாறியது. ஆம் நண்பர்களே, உங்களின் ஊகம் சரிதான். நான் பயின்ற பள்ளி. இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை நான் பயின்ற பள்ளி.ஜைன இலவச நடுநிலைப் பள்ளியின் முன், இரு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு இறங்கிப், பள்ளிக்குள் நுழைந்தோம்.

     பள்ளித் தலைமையாசிரியை மகிழ்வோடு எங்களை வரவேற்றார். அவருடன் பல நிமிடங்கள் பேசி முடித்த பின், பள்ளிக்குள் சென்று பார்க்க வேண்டுமே என்றேன். தாராளமாகப் பாருங்கள் என்றார். நான் பயின்ற பள்ளி இது. நாற்பதாண்டுகளுக்குப் பின், முதல் தடவையாக இன்றுதான் வருகிறேன் என்றேன். தலைமையாசிரியையின் முகத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகியது.

     பள்ளிக்குள் சென்றோம். ஆசிரியைகள் அனைவரும் வரவேற்றனர். அன்று மாலை, அப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற இருந்தது. எனவே எங்கெங்கும் வண்ண வண்ணக் கொடிகள். மாணவர்கள் சூழ்ந்து கொண்டனர். வணக்கம் ஐயா, வணக்கம் ஐயா எனச், சிறுவர் சிறுமியரின் குரல்கள் எங்களை வரவேற்றன.

     மாணவர்களே, உங்களைப் போல் சிறுவனாய், நான் பயின்ற பள்ளி இது. நாற்பதாண்டுகளுக்குப் பின், இப்பொழுதுதான் வருகிறேன். இன்று நான் ஒரு ஆசிரியர். இப் பள்ளியில் பயின்றதால், எனக்குக் கிடைத்தப் பதவி இது. நீங்கள் அனைவரும் நல்ல முறையில் பயின்று, உயர் நிலையினை அடைந்து, உங்களது பெற்றோருக்கும், நீங்கள் பயின்ற இப்பள்ளிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றேன்.

      நிச்சயமாகப் பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்ப்போம் என மாணவர்கள் அனைவரும் இணைந்து, ஒரே குரலில் உற்சாகமாய் உறுதியளித்தனர்.

      ஜைன இலவச நடுநிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்டு, திரும்பும் வழியில், நண்பர் ஒருவர் எதிரில் வந்தார்,

ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வருகிறீர்களே, எதுவும் விசேசமா?

இல்லை நண்பரே, மாணவர் சேர்க்கைக்காக, ஒவ்வொரு பள்ளியாகச் சென்று வருகிறோம்.

ஓ, பிள்ளைப் பிடிக்கப் போறீங்களா..


                              


     

66 கருத்துகள்:

 1. பெயரில்லா08 மே, 2014

  வணக்கம்
  ஐயா.

  நல்ல முயற்சி... நல்ல சமுக விழிப்புணர்வு.. மாணவர்கள்தான் எதிர்கால தூண்கள்
  தங்களுக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுக்கள் ஐயா...உலகம் ஆயிரம் பேசும் நல்லதை எடுப்போம் தீயதை விடுவோம்...தொடருங்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் ஆறுதல் வார்த்தைகளுக்கும் நன்றி நண்பரே

   நீக்கு
 2. வணக்கம்
  த.ம 1வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும்
  தங்களைப் போன்ற ஆசிரியர்களின்
  பணி குறித்து அறிய வற்றி இருந்த
  மாணவர்களின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை
  கொஞ்சம் துளிர்விடத் துவங்குகிறது
  பதிவாக்கி அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
  சக ஆசிரியர் பெருமக்களுக்கும் எங்கள்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. தன்னலம் கருதாது செய்யும் உங்களின் தொண்டு போற்றத் தக்கது!
  த ம 2

  பதிலளிநீக்கு
 5. //நாமெல்லாம் மாணவர்களாய் பயின்றபோது, ஆசிரியர்களுக்குப் பயந்தோம், உரிய மரியாதையினைக் கொடுத்தோம், அதனால்தான் இன்று ஒரு நல்ல நிலையில் இருக்கிறோம்.//

  அத்துடன் பொறுப்புடன் கல்வியைக் கற்றுக் கொண்டோம். நல்லறிவினைப் பெற்றுக் கொண்டோம்.

  இன்றைக்கு நான் நேரிய நல்லறங்களுடனும் நல்ல பழக்க வழக்கங்களுடனும் இருக்கின்றேன் என்றால் - அதற்கு முழுமுதற்காரணாம் எமக்கு முன்னோடிகளான ஆசிரியப் பெருமக்களே!..

  அனைத்திற்கும் முன்னுதாரணமாக - தாங்கள் மேற்கொண்டிருக்கும் நற்பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்..

  பதிலளிநீக்கு
 6. //ஆனால் இன்று வீட்டிற்கு ஒரு சிறுவன், அதிகமானால் இரண்டு பேர். அவர்களும் வீட்டை விட்டு வெளியே வருவதேயில்லை. தொலைக் காட்சியே சரணம் என்று முடங்கி விடுகிறார்கள். இன்று பல மாணவர்களுக்குத், தங்கள் தெருவில் இருக்கும் மற்ற மாணவர்கள் யார் என்பது கூடத் தெரியாது///

  உண்மை! யதார்த்தமாக ஆசிரியர் படும் அல்லல்களை விளக்கிய விதம் அருமை! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 7. நிதர்சனமாக சூழலை விளக்கும்
  அரிய பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 8. ஆசிரியரின் சிரமங்களை அழகாக கூறியுள்ளீர்கள் .படித்த பள்ளிக்குச் செல்வது பால்யங்களின் புதையல்களை மீட்டெடுக்கும் மகிழ்வான நிலை.நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 9. ஓய்வின்றி உழைக்கும் ஆசிரியர்களாக மட்டும் இன்றி மாதம் மாதம்
  ஊதியத்தில் இருந்து ஒரு பங்கைத் (1000ரூபா )தியாகம் செய்தும் கல்வி கற்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகக் காணப்படுவதும் வரும் மாணவர்களின் மனம் போல் இசைந்து கல்வி கற்பிக்க வேண்டும் என்ற சட்ட திட்டங்களை எல்லாம் பின்பற்றித் தான் ஆக வேண்டும் என்ற இந்த நிலையைப் பார்க்கும் போது மனதிற்குக் வருத்தமாகவே உள்ளது சகோதரா .ஆசிரியையிடம் நான் தூக்குப் போட்டு விடுவேன் என்று ஒரு மாணவி இவ்வளவு துணிச்சலாக மெருட்டுவதை நான் இப்போது தான் அறிகின்றேன் உண்மையிலும் புதிய சட்ட திட்டங்கள் ஒட்டு மொத்தமாக மாணவர்கள் நலன் குறித்தே இருப்பது வருத்தம் அளிக்கிறது .தங்களின் கடின உழைப்பிற்கு என்றுமே நற் பலன் கிட்டிட வாழ்த்துக்கள் சகோதரா .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆசிரியர்கள் மாணவர்களை அணுசரித்துப் போக வேண்டிய சூழ்நிலை இன்று.
   வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரியாரே

   நீக்கு
 10. ஆசிரியர்களுக்கு ஏது ஓய்வு? பள்ளி கரந்தையிலா? வீடும் அங்கேதானா? அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளோடு போட்டி போட வேண்டியிருக்கிறது. அதற்கு உங்களைப் போன்றோரின் உழைப்பு நிச்சயம் பலன் தரும். உங்கள் செலவில் மாணவர்களுக்கு வேன் வங்கித் தந்திருப்பது பாராட்டுக்குரிய செயல். எவ்வளவு பேர்கள் தங்கள் வேலைகளை இப்படி அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்கிறார்கள்?

  வாழ்த்துகள். நிறைய பிள்ளைகளைப் 'பிடித்து' உங்கள் பள்ளி நல்ல வகையில் முன்னேற 'எங்கள்' வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே, பள்ளி கரந்தையில், நான் இருப்பதோ, தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு எதிரில், நான் தற்போது பணியாற்றும், இதே உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவனாய் படித்தவன் நான்.
   படித்த பள்ளியிலேயே ஆசிரியர் பணி.
   வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

   நீக்கு
 11. உங்களையும் உங்கள் பள்ளி ஆசிரியர் குழுவினரையும் வாழ்த்தி
  வணங்குகிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா

   நீக்கு
 12. // நண்பர்களே, நாமெல்லாம் மாணவர்களாய் பயின்றபோது, ஆசிரியர்களுக்குப் பயந்தோம், உரிய மரியாதையினைக் கொடுத்தோம், அதனால்தான் இன்று ஒரு நல்ல நிலையில் இருக்கிறோம்.//

  உண்மைதான் அய்யா! இன்று நான் நல்ல நிலையில் இருப்பதறகு எனக்கு பாடம் சொல்லித் தந்த ஆசிரியர்கள்தான் காரணம் அய்யா!

  ஆசிரியர்கள் படும்பாடு, ஆசிரியர் – மாணவர் உறவின் அன்றைய இன்ரைய நிலைமை இவற்றை விரிவாகச் சொன்னீர்கள்.

  //பேரூந்து வசதி அதிகம் இல்லாதப் பகுதிகளுக்கு இந்த வேன் தினமும், காலை மாலை இரு வேளைகளிலும் செல்லும். கரந்தையில் இருந்து புறப்பட்டு, பள்ளியக்கிரகாரம், மணலூர், குளமங்களம், கூடலூர், குருங்களுர் வரை தினமும் 50 கிலோ மீட்டர் இவ் வேன் சென்று வருகிறது. மாணவர்களிடம் இருந்து கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை, முற்றிலும் இலவசம்.//

  ஏழை மாணவ்ச்ர்களுக்கு இலவச கல்வி தரமாட்டோம் என்று சொல்லும் தருமபிரபுகள் நிறைந்த இந்தநாட்டில் இப்படி ஒரு இலவச சேவை தரும் உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்! இறையருள் உங்கள் அனைவருக்கும் கிடைக்கும்!

  நீங்கள் படித்த கரந்தை ஜைன இலவச நடுநிலைப் பள்ளியின் உங்களது நினைவுகள் உங்களுக்குள் இருக்கும் சொல்ல முடியாத ஒரு பரவசத்தை வெளிக்காட்டியது.
  நன்றி!
  த.ம.7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படித்த பள்ளிக்குள் நுழையும் இன்பத்திற்கு ஈடு இணை ஏது ஐயா.
   வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா

   நீக்கு
 13. பிள்ளை பிடிக்கப் போறீங்களா என்ற சொற்றொடரில் எவ்வளவு யதார்த்தங்கள் உள்ளன என்பதை அனுபவிப்பவர்களே உணர முடியும். காலம் மாற மாற, அறிவியல் வளர்ச்சி உலகில் மாணவர்களை சேர்க்கைக்காகத் தேடி செல்வது என்பது விந்தையானதே. படிப்பு என்பது வணிக மயமாகிவிட்ட இச்சூழலில் தங்கள் குழுவினர் மேற்கொண்டுள்ள முயற்சி பாராட்டத்தக்கது. தவணை முறையில் பேருந்து வாங்கி நிர்வகிப்பது என்பது போற்றத்தக்க முயற்சியாகும். பிறருக்கு முன்மாதிரியாகத் தங்கள் பள்ளி திகழ்வதறிந்து மகிழ்ச்சி. தொடரட்டும் தங்களின் பணி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாணவர் சேர்க்கைக்கு என்று ஆசிரியர்கள் செல்வது வியப்பாகத் தோன்றலாம் ஐயா, ஆனால் அதுதான் உண்மை. இலட்சக் கணக்கில், பணம் செலுத்தி தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க, முதல் நாள் முதலே, பள்ளிக் கூடத்தில் வாசலில் தவமிருக்கும் பெற்றோர்கள் ஒரு புறம்.
   மறுபுறம் மாணவர்களின் எண்ணிக்கை போதிய எண்ணிக்கையில் இல்லாததால் திண்டாடும் பள்ளிகள் மறுபுறம்.
   இதுதான் இன்றைய யதார்த்தம் ஐயா
   வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா

   நீக்கு
 14. ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம்! வேலை குறைவு என்றெல்லாம் எல்லோரும் சொன்னாலும் அவர்களின் பணிச்சுமை அதிகம்! சில மாதங்கள் பெற்றோர் ஆசிரியர்கழக நிதி உதவி மூலம் அரசுப்பள்ளியில் ஆசிரியராகவும் நான் பணி ஆற்றி இருப்பதால் இதை நேரடியாக உணர்ந்தவன். பன்னிரண்டு வருட காலம் டியுசன் எடுத்த அனுபவமும் ஆசிரியர்களின் கஷ்டத்தை அறிய உதவியது. அரசுப்பள்ளி என்றாலே இப்போது வேப்பங்காயாக கசப்பதால் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. கடைசி வரிகள் பிள்ளை பிடிக்க போறீங்களா? மனதை வலிக்க செய்தது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையிலேயே ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகம்தான் ஐயா.
   பணி செய்வதில்தான் பல்வேறு துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. ஆசிரியராய் பணியாற்றியவர் நீங்கள், தங்களுக்குத் தெரியாதது அல்ல.
   இலட்சக் கணக்கில் பணம் கட்டி, பிள்ளைகளைச் சேர்ப்பதைப் பெற்றோர்கள் கௌரவமாக நினைக்கிறார்கள்.
   வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

   நீக்கு
 15. மிக அருமையான செயல். உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே

   நீக்கு
 16. கற்க கசடறக் கற்பவை கற்றபின்
  நிற்க அதற்குத் தக.

  என்ற குறளுக்குத் தக்கவாறு வாழுகிறீர்கள்.
  வாழ்க உங்களின் சிறந்த தொண்டு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே

   நீக்கு
 17. இன்றைய ஆசிரியர்களின் உலகத்தை அழகாக எடுத்துரைத்தீர்கள் ஐயா.
  அன்றெல்லாம் பெற்றோர்கள் தம் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கும்போது ஆசிரியர்களிடம்,

  என் பிள்ளையை கண்ணு, காது, மூக்கை மட்டும் விட்டுவிட்டு எங்கே வேண்டுமானலும் அடிங்க என் பிள்ளை ஒழுக்கமா வந்தா போதும் என்பார்கள்.

  இன்று ஒரே பிள்ளையைப் பெற்றுவைத்திருக்கும் பெற்றோர் அப்படி சொல்வார்கள் என எதிர்பார்க்கமுடியாதுதான். இருந்தாலும்.

  தன் பிள்ளைகளுக்கு மதிப்பெண், நல்ல வேலை போதும் என்று எண்ணும் பெற்றோர்களால் இன்றைய கல்லூரிகள் எல்லாம் வேலைவாய்ப்பு அலுவலகங்களாக மாறிவிட்டன.

  இன்றைய பெற்றோர் கல்லூரியில் தம் பிள்ளைகைளை சேர்க்கும்போது ப்ளேஸ்மென்ட் எப்படி என் பிள்ளைக்கு நல்ல வேலையா வாங்கித் தந்துடுவீங்களா? என்று கேட்கிறார்கள்.

  இன்றைய கல்வி உலகம் நிறையவே மாறிவிட்டது என்பதை தங்கள் பதிவின் வழி நன்கு உணர்ந்துகொள்ளமுடிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படிப்பதே சம்பாதிப்பதற்குத்தான் என்றல்லவா ஆகிவிட்டது.
   வருகைக்கும் நீண்டு கருத்துரைக்கும், வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

   நீக்கு
 18. நிகண்டுவில் இக்கட்டுரையினை இணைத்துள்ளேன் ஐயா
  தங்களின் சீரிய பணி தொடரட்டும்

  பதிலளிநீக்கு
 19. மிக அருமையான பதிவு.ஆசிரியர்களின் நிலைப்பாட்டை விளக்கும் அற்புதப்படைப்பு.ஆசிரியர் மாணவர்களை செதுக்கும் சிற்பி.இன்றைய நிலை மண் செங்கற்களை கையில் ஏந்திய நிலை.பத்திறமாக காப்பது ஆசிரியரின் கடமை.நன்றி.

  பதிலளிநீக்கு
 20. தன் நலம் பேனாது மாணவர்கள்/மாணவிகள் நலம் காக்கும் உங்களைப்போன்றோரின் ஆர்ப்பணிப்பு சேவைதான் இன்னும் ஆசியர் தொழிலுக்கு பெருமை சேர்க்கின்றது. கல்லாதோரின் கடிவாக்கு காதில் வாங்காமல் தங்களின் பாதையில் தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 21. உங்களை சந்திக்கும் நாளை (18.05.2014) ஆவலுடன் எதிர்ப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஐயா...

  வாழ்த்துக்கள் பல...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களைச் சந்திக்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் ஐயா
   நன்றி

   நீக்கு
 22. சென்னையில் என் வீட்டின் அருகில் உள்ள ஆங்கில வழி கல்வி பள்ளியில் LKG சீட் விலை 90000. இங்கு சீட் பெற கார்கள் அணிவகுத்து நிற்கின்றது.உடலை கெடுக்கும்சாராயம் இருந்த இடத்திலிருந்தே விற்கலாம். உடலுக்கு நல்லது செய்யும் மோர் தெரு தெருவாத்தான் போய் விற்கனும். பணி சிறக்க வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 23. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, புள்ள புடிக்க போறீங்களா? ஆமாம். நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பீ... என்ற திரைப்பட பாடலின் வரிகளுக்கு ஏற்ப பிள்ளைகளை பிடிப்பது மட்டுமே எங்கள் வேலையல்ல., அவர்களை நல்ல பிள்ளைகளாகவும் வல்லவர்களாகவும் மாற்றி நாளை இந்த உலகில் வாழவும் கற்றுக்கொடுக்கின்ற இனம்தான் எங்கள் ஆசிரியர் இனம் என்பதை சொல்லும்பொழுதே எங்கள் அனைவருக்கும் ஒரு இனமறியாத பெருமை ஏற்படுவதை நாங்கள் மட்டுமே அனுபவிக்க முடியும். அது மட்டுமின்றி எந்த ஊர் சென்றாலும் அங்கு என்னுடைய மாணவர் இருக்கிறார் என்பதை ஒரு சிறு குழந்தைப் போன்று சொல்லி மகிழும் இனமும் எங்கள் இனம்தான். ஆசிரியர் பணியானது எப்படி ஒரு தாய் தன் குழந்தை எவ்வளவு தொந்தரவினை அளித்தாலும் ஒரு கணம் மட்டுமே கடிந்து பேசி பிறகு அரவணைத்து கொள்வாரோ அதனை ஒத்தது என்றால் அது மிகை ஆகாது. எங்களின் ஒரே பெருமை எங்களின் மாணவர்களின் வளர்ச்சியை அன்னாந்து பார்த்து மகிழ்ச்சியடைவது மட்டுமே. வாழ்க ஆசிரியர் பணி, வளர்க அவர்களது பெருமை. நண்பருக்கு வாழ்த்துக்கள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாங்கள் சொல்வது உண்மைதான் நண்பரே. எவ்விடம் சென்றாலும் நமது பழைய மாணவர்களைக் காணும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு நிகரேது. அதுவும் அவர்களை நல்ல நிலையில் காணும் போது ஏற்படுகிறதே, ஓர் மகிழ்ச்சி, அதற்கு இணையான மகிழ்ச்சி இவ்வுலகில் ஏதுமில்லை
   வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

   நீக்கு
 24. அய்யா வணக்கம். பணிகொண்டான்விடுதியில் தேர்தல் பணிமுடித்து, நீங்கள் வந்து சேர்ந்த திருவோணம் பள்ளிதான் நான் பள்ளியிறுதி வகுப்புப் படித்த அரசுப்பள்ளி. உங்களைப்போலவே நானும் பழைய நினைவுகளில் ஆழ்ந்துபோகச் செய்துவிட்டீர்கள்... நாம் “பிள்ளை பிடிப்பதோடு“ நிறுத்திவிட்டீர்களே! பிடித்துவந்த பிள்ளைகளைப் பத்தாண்டுகளாக நாம் பாடுபட்டுப் படிக்கவைத்து முதல்மதிப்பெண் எடுக்க வைத்தால் அவர்களை மட்டும் 11ஆம்வகுப்புக்குப் ”பிடித்துக் கொண்டு” போய், “12ஆம்வகுப்பில் மாவட்ட முதலிடம்“ காட்டும் மெட்ரிக் மேநிபள்ளி நிர்வாகம் பற்றி அடுத்து எழுதுங்கள் அய்யா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பத்தாம் வகுப்பில் 450 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு மட்டுமே, சேர்க்கை வழங்கி, நூறு சதவீத தேர்ச்சி காட்டும் பள்ளிகள், நிறைய இருக்கின்றன ஐயா, நாமெல்லாம், தேர்வில் பலமுறை தோல்வியுற்று தட்டுத்தடுமாறி, வருபவர்களுக்கு சேர்க்கை வழங்கி அவர்கள் தேர்வில் வெற்றி பெற பாடுபட்டு வருகிறோம் ஐயா
   இதில் கிடைக்கிற நிம்மதியே அலாதியானதுதான்
   வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

   நீக்கு
 25. என் தாயும் ஒரு ஆசிரியை என்பதால் கஷ்டங்கள் புரிகிறது. தங்களின் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி நண்பரே

   நீக்கு
 26. பள்ளிகளில் இன்று ஆசிரியர்கள் இருக்கிறார்கள். மாணவர்கள்தான் குறைவு. தேர்தல் நேரத்தில், வேட்பாளர்கள், வீடு வீடாகச் சென்று ஓட்டுக் கேட்பார்கள் அல்லவா? அதைப் போலத்தான் நாங்களும், கையில் எமது பள்ளி குறித்த நோட்டீசுகளை எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு கிராமம் கிராமமாக, ஒவ்வொரு தெருத் தெருவாக, ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று வருகிறோம். தங்கள் பிள்ளைகளை எங்கள் பள்ளிக்கு அனுப்புங்கள் என வேண்டி வருகிறோம்.//

  நல்லதொரு இடுகை நண்பரே! ஆசிரியர்களின் இன்றைய அவஸ்த்தையை மிகத் தெளிவாக எடுத்துரைத்த விதம் அருமை! நான் ஒரு சான்றிதழ் பெறுவதற்காக நான் பயின்ற துவக்கப் பள்ளிக்குச் சென்ற போது ஏற்பட்ட அனுபவத்தை உங்களதுஇந்த இடுகை அசை போட வைத்தது!

  மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க மகிழ்ச்சி நண்பரே
   நாம் பயின்ற பள்ளிக்குச் சென்று வருவதற்கு இணையான இன்பம்தான் ஏது
   வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே

   நீக்கு
 27. வணக்கம் ஜெயக்குயம்ர் சார்.
  உம்மையில் இப்படியும் ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்று நினைத்து பெருமைப் படுகிறேன்.

  உங்களின் முயற்சிக்கும், செயலுக்கும் கண்டிப்பாக வெற்றி நிச்சயம்.

  வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்களது சமுதாயப்பணி.

  பதிலளிநீக்கு
 28. உங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கும் உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.....
  அரசு பள்ளிக்காக தங்களது சொந்த செலவில் வேன் வாங்கிய நல்”ஆசிரியர்கள்”
  http://www.asiriyarkudumbam.blogspot.in/2014/05/blog-post_385.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்திற்கும், பதிவினை தங்கள் வலையில் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி நண்பரே.
   மின்னஞ்சல் மூலம் தங்கள் பதிவுகளைப் பெறுவதற்கு, பதிவு செய்துள்ளேன் நண்பரே
   இனி தொடர்வேன்

   நீக்கு
 29. உங்கள் பணியில் இருக்கும் சிரமங்களை சொல்லி இருப்பது நன்று. ஒவ்வொரு பணியிலும் பிரச்சனைகள். அந்த பணியில் இல்லாதவர்கள் “உங்களுக்கென்ன பிரச்சனை இல்லாத வேலை என்று சொல்லிவிடுவார்கள். இருப்பவருக்குத் தானே உண்மை தெரியும்.

  பள்ளி மாணவர்களுக்கு வாகனம் வாங்கி இலவசமாக பள்ளிக்கு அழைத்து வரும் செயல் மிக நல்ல ஒன்று. பாராட்டுகள்.

  கடைசி வரி..... :(((((

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடைசி வரி வேதனைமிகு வரி ஐயா
   இன்று ஆசிரியர் பணிக்கான அங்கீகாரம் குறைந்து கொண்டே வருகின்றது என்பதுதான் உண்மை ஐயா
   வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா

   நீக்கு
 30. LOT of information is new.. Here in Bangalore I have seen teachers from private colleges going around all states to canvass for their colleges. For every student admitted through their efforts they get a hefty amount as commission ( MY tamil software is giving me problems.)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கல்லூரியில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு, கமிஷன் பெறுவது என்பது , நிறைய இடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது ஐயா
   பள்ளி அளவில் மாணவர்களைச் சேர்ப்பது இன்று கடினமான பணியாகிவிட்டது ஐயா
   மிக்க நன்றி ஐயா

   நீக்கு
 31. தங்களின் பணிசிறக்க வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 32. அன்பின் ஜெயக்குமார்

  ஆசிரியப் பணியே அறப்பணி
  அத்ற்கே உனை அர்ப்பணி

  என்ற நல்ல கருத்துகளை வேத வாக்காகக் கருதும் ஆசிரியப் பெருமக்களுக்குப் பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 33. தொடக்க பள்ளி ஆசிரியர்களை மனதில் கொண்டு, பொதுவாக ஆசிரியர்கள் என்றால் அதிக விடுமுறை கொண்டாடுகிறவர்கள் என்ற கருத்து நிலவுகிறது.. ஆசிரியர் பணிக்கு நிகர் ஏதுமில்லை..

  நாம் பயின்ற பள்ளிக்கு பலவருடம் கழித்து செல்வதே ஒரு நெகிழ்வான தருணம்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரியாரே

   நீக்கு
 34. எத்தனை இடர்பாடுகள் இருந்தாலும் கல்விக்கண் திறக்கும் உங்கள் பணியைப் போல சீரிய பணி வேறெதுவும் இல்லை, ஐயா! உங்கள் அல்லல்களை மீறி மாணவர்கள் படித்துத் தேறும் போது ஏற்படும் மனமகிழ்வு உங்கள் உடல் வருத்தங்களை போக்கிவிடும். அந்தக் கணங்களை நினைத்துக் கொள்ளுங்கள். உடல் அயர்வு ஓடிவிடும்.
  உங்கள் நல்ல பணி தொடரட்டும். எங்களைப் போன்ற பெற்றோர்களின் ஆசிகள் என்றும் உங்களுக்கு உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் சகோதரியாரே
   மாணவர்கள் படித்துத் தேறும்போது ஏற்படும் மனமகிழ்வுக்கு எல்லைதான் ஏது
   வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரியாரே

   நீக்கு
 35. // மாணவர்களின் வசதிக்காக, ஆசிரியர்களான நாங்கள் அனைவரும் சேர்ந்து, மாதத் தவனையில், ஒரு பெரிய வேன் வாங்கியிருக்கிறோம். ஓட்டுநர் ஊதியம், மாதாந்திரத் தவனைக் கட்டணம் மற்றும் இதரச் செலவினங்கள், என அனைத்தையும் நாங்களே செலுத்தி வருகிறோம். ஆசிரிய ஆசிரியைகள் அனைவரும், அலுவலகத்தார் உட்பட, அனைவரும் தங்களது மாத ஊதியத்தில் இருந்து, ஆயிரம் ரூபாயினை இதற்காக மனமுவந்து வழங்கி வருகிறார்கள்.//

  மேற்கண்ட தகவலைப் படித்தபோது உங்கள் எல்லோரையும் நேரில் வந்து. பாராட்டவேண்டும் என்றே தோன்றியது. சென்னை போன்ற இடங்களில் மாணவர்களிடம் பேருந்துக்கென பணத்தை கொள்ளை கொள்ளையாய் வசூலிக்கும்போது,நீங்கள் மாணவர்களிடம் இருந்து கட்டணம் எதுவும் வசூலிக்காமல் முற்றிலும் இலவசமாக பள்ளிக்கு அழைத்து வந்து கல்வி கற்பிப்பதைப் பார்க்கும்போது இது நம் நாட்டில்தான் நடக்கிறதா என்ற ஐயம் ஏற்பட்டது.

  உங்களைப்போன்றோர் இன்னும் பல்கிப்பெருக்கவேண்டும் என்றும் உங்களுக்கு அரசு உதவவேண்டும் என வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 36. ஆகா எத்துனை வசதிகளை மாணவர்களுக்கு தருகிறீர்கள்.
  மாதம் ஆயிரம் ருபாய் சொந்த செலவில் வேன்...
  பிரச்சாரம்.(புள்ளைபிடிக்கும் பயணம்)
  கொஞ்சம் கடினமாக இருந்தாலும் செய்யுங்கள் ...
  சமயத்தில் எனக்கு 2019க்குள் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டாலும் ஆச்யர்யம் இல்லை என்று தோன்றுகிறது..)

  பதிலளிநீக்கு
 37. உங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கும் உங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 38. பெயரில்லா18 மே, 2014

  நாற்பதாண்டுக்குமுன் படித்த பள்ளியில் ஆசிரியராக நுழைந்தபோது என்பதை படித்தபாேது, அந்த உணர்வு எத்தகையதாக இருக்கும் என எண்ணிப்பார்த்தேன் ஐயா. நெஞ்சில் ஈரம் கொண்ட ஒவ்வொருவருக்கும், அந்த உணர்வு, நிச்சயம், கண்களை குளமாக்கி விடும். அந்த பள்ளிக்குழந்தைகள் மத்தியில் தாங்கள் பேசியதை படித்தபோது, உண்மையிலேயே, மகிழ்ந்தேன் ஐயா.
  பள்ளிக்காக, ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் சேர்ந்து வேன் வாங்கியிருக்கிறோம் என்பது நல்ல முயற்சி ஐயா. இந்த நாட்டில் இன்னமும் பெய்து கொண்டிருக்கும் மழையெல்லாம், உங்களைப் பாேன்றவர்களின் பணி்க்காகவே என்று உறுதியாக நம்புகிறேன் ஐயா.

  பதிலளிநீக்கு
 39. தங்களின் தன்னலமில்லாத பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 40. வணக்கம் சகோ
  இண்றைய வலைச்சரத்திற்கு வந்தமைக்கு நன்றி..கிளம்பிட்டீங்களா விழாவிற்கு..

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு