கருமைஉரு, வெண்மைப்
பல், நரைத்ததலை குறைமீசை
கறையற்ற செம்மைமனம்,
புன்சிரிப்பு எளிமை நிலை
பிறைகருத்த
பெருநெற்றி அதில் மணக்கும் நறுஞ்சாந்தம்
மறைவல்ல ஒளிமுகத்திற்
கொப்புமையும் இலையன்றோ
-
சி.அரசப்பன்
ஆண்டு 1948. தஞ்சாவூர்,
கரந்தைத் தமிழ்ச் சங்கம். சிங்கம் போல் கம்பீர நடை நடந்து, செம்மாந்தக் குரலில்,
சங்க இலக்கிய, இலக்கணங்களை, நகைச்சுவை என்னும் நறுந்தேன் கலந்து, மாணவர்கள்
மயங்கும் வகையில், எடுத்தியம்பும் ஆற்றல் பெற்ற, அப்பேராசிரியரின் கால்களில் ஓர்
தளர்ச்சி.
மருத்துவம் பார்த்தும்
பலனில்லை. நாளாக, நாளாக நிற்கக் கூட இயலாத நிலை.
கால்கள் நடக்க மறுத்து
ஒத்துழையாமை இயக்கம் புரிகின்றன. ஆனால் இதயமோ சங்கம், சங்கம் என்றே துடிக்கிறது.
சங்கத்திற்குச் சென்றாக
வேண்டும். கரந்தைப் புலவர் கல்லூரி மாணவர்களுக்குப் பாடம் நடத்தியாக வேண்டும்.
கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு
எதிரிலேயே ஒரு வீடு பார்த்துக் குடியேறினார்.
நாற்காலி ஒன்றில், நான்கு
சக்கரங்களைப் பொறுத்தச் செய்து, தள்ளு வண்டி ஒன்றினைத் தயாரிக்கச் செய்தார்.
பேராசிரியரின் வீட்டில் விஷ்ணு
என்னும் வைணவ மாணவர் ஒருவரும் தங்கியிருந்தார். படிக்க வேண்டும், வசதியில்லை,
வழியும் இல்லை என்று வந்த மாணவருக்கு, தன் வீட்டிலேயே இடமும், உணவும் கொடுத்து
ஆதரித்து வந்தார்.
விஷ்ணு என்னும் அம்மாணவர்,
தினமும், பேராசிரியரை நாற்காலியில் அமர வைத்து, சங்கத்திற்கு வண்டியைத் தள்ளிக் கொண்டே
வருவார்.
கல்லூரி வகுப்பறையின்
நிலைக் கதவினை ஒட்டி, வண்டியை நிறுத்துவார். பேராசிரியர் வண்டியில் இருந்தவாறே
பாடம் நடத்துவார்.
ஒருசில ஆண்டுகளில்
பேராசிரியரின் உடல் நிலையானது, மேலும் தளர்வுறவே, நாற்காலியில் கூட அமர இயலாத
நிலை.
ஒரு நாள் பேராசிரியரைக் காண வந்த
அவரது தமையனார், தாங்கள் இனி நமது சொந்த ஊரான மோகனூருக்கே வந்து விட வேண்டும் என
மன்றாடினார்.
பேராசிரியரிடமிருந்து மௌனமே
பதிலாய் வந்தது. அருகில் இருந்த அவரது மகன், தனது சிற்றப்பாவைப் பார்த்துக்
கூறினார், கரந்தைத் தமிழ்ச் சங்கம் மோகனூருக்கு வந்தால்தான், அப்பா அங்கு
வருவார்கள்.
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்
முதற்றலைவர் தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களின் மேல் கொண்ட நட்பால்,
பாசத்தால், தனது வாழ்வின் கடைசி நாள், கடைசி நிமிடம், கடைசி நொடி வரை பேராசிரியர்,
கரந்தையை விட்டு அகலாதிருந்தார்.
உடல், பொருள், ஆவி
அனைத்தையும் கரந்தைக்கே ஈந்த, இப்பெருமகனார் யார் தெரியுமா?
வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே
மன்னியமூ வேந்தர்தம் மடிவளர்ந்த
மகளே
தேனார்ந்த தீஞ்சுனைசால் திருமாலின் குன்றம்
தென்குமரி யாயிடைநற் செங்கோல்கொள்
செல்வி
கானார்ந்த தேனே, கற்கண்டே, நற்கனியே
கண்ணே, கண்மணியே, அக்கட்புலம்சேர் தேவி
ஆயாத நூற்கடலை அளித்தருளும் அமிழ்தே
அம்மே நின்
சீர்முழுதும்அறைதல்யார்க் கெளிதே?
என்று தமிழ்த் தாய்க்கு வாழ்த்துப் பாடலை இயற்றிய பெருமைக்கு உரியவர்,
கரந்தைக் கவியரசு
அரங்க. வேங்கடாசலம் பிள்ளை.
நண்பர்களே, கரந்தைக்
கவியரசின் காலடித் தடம் பதிந்த மண்ணில், இன்று என் வாழ்வு நகர்ந்து
கொண்டிருக்கிறது. அவர் சுவாசித்தக் காற்றை, நாள்தோறும் சுவாசித்தே, என் இதயம்
இயங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் என்ன வேண்டும் எனக்கு.
என் உள்ளத்தே ஓர் ஆசை.
பேராசை என்று கூடச் சொல்லலாம்.
கவியரசரின் வாழ்வை, எழுத்தாக்கி,
வெள்ளைத் தாளில் இறக்கி வைக்க வேண்டும், பின் அச்சேற்றி நூலாக்கி, தமிழன்னைக்கு
அமுதாய், தமிழமுதாய்ப் படைக்க வேண்டும்.
ஓராண்டிற்கு முன், அண்ணாமலைப்
பல்கலைக் கழகப் பேராசிரியர் கவிஞர், எழுத்தாளர் ஹரணி உருவில், ஓர்
வாய்ப்பு, அலைபேசி வழி வந்து, என் செவியினைத் தட்டியது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
இந்திய ஆய்வியல் துறை,
மலாயாப் பல்கலைக் கழகம்
கலைஞன் பதிப்பகம்
சென்னை
மூன்றும் இணைந்து, நூல் வெளியிடும் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளன. வாழ்ந்த,
வாழுகின்ற தமிழறிஞர்களைப் பற்றி எழுத வேண்டும், எழுதுகிறீர்களா? என்றார்.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ஜெயக்குமாரா?
என்று வந்த வாய்ப்பை விடாது பற்றிக் கொண்டேன்.
கரந்தைக் கவியரசரின் வாழ்வுதனை
நூலாய் எழுதிக் கொடுத்துவிட்டுக் காத்திருந்தேன்.
காலம் கனிந்தது, கவியரசரின்
நூலும் வெளி வந்தது.
நூல்களின் வெளியீட்டு விழா
என்றால், ஏதோ ஒன்று, இரண்டு அல்ல.
இப்பூமிப் பந்தின், எம்
மூலையிலும் இதுவரை நிகழ்ந்திராத, ஓர் நிகழ்வு, ஓர் அற்புதம், ஓர் சாதனை,
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அரங்கேறியிருக்கிறது.
கின்னஸ் சாதனை விழா
351 நூல்களின் வெளியீட்டு விழா
ஒரே மேடையில், ஒரே நேரத்தில்
நினைக்கவே நெஞ்சம் இனிக்கிறதல்லவா.
சாஸ்திரி அரங்கம்
குளிர்மை வசதி செய்யப்பெற்ற மிகப் பெரிய அரங்கம். அரங்கமே நிரம்பி வழிந்தது.
மேடையின் பின்புறத்தில், 351
நூல்களின் முகப்புப் படத்தினையும் தாங்கிய மிகப் பெரிய பதாகை.
கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
விழா மேடையில் மனைவியுடன் |
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்
தமிழியல் துறைத் தலைவர் முனைவர் அரங்க.பாரி அவர்களின் ஒரு வருட அயரா
உழைப்பின் பயன் இவ்விழா.
மலாயாப் பல்கலைக் கழகத்திற்கும்
நூல்களை அழகுற அச்சிட்டு
சாதனை படைத்திருக்கும்
கலைஞன் பதிப்பகத்திற்கும்
எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அலைபேசி வழி அழைத்து, இந்நூல்
உருவாக்கம் பெற, வழி காட்டிய, கவிஞர் ஹரணி அவர்களுக்கு நன்றி கூற வார்த்தைகள்
இன்றித் தவிக்கின்றேன்.