25 ஜூன் 2015

ஜோதிராவ் புலே


ஓ, இறைவனே. உன்னுடைய உண்மையான மதத்தை எங்களுக்குக் கற்றுக் கொடு. அதன்படியே வாழ, நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஒருவர்தான் உயர்ந்தவர் மற்றவர்கள் ஒன்றுமில்லாதவர்கள் என்பதாக இருக்கும் மதத்தை, இந்த பூமியை விட்டே அகற்றிவிடு. அப்படியொரு மதத்தைப் பெருமையாகக் கருதும் போக்கையும் அகற்றிவிடு.


     நண்பர்களே, இன்றைய காலகட்டத்திற்குக் கூட பொருத்தமாக இருக்கும், இக்கடிதம் எழுதப்பட்ட ஆண்டு என்ன தெரியுமா? 1855. நம்ப முடியவில்லைதானே? நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் உண்மை.

     இன்றைக்கு 160 ஆண்டுகளுக்கு முன், இக்கடிதத்தை எழுதியவர் ஒரு பெண். பெயர் முக்தா பாய். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த, தீண்டத் தகாத சமூகத்தைச் சார்ந்தவர்.

     இதுபோன்று ஒரு கடிதத்தை எழுத, அதுவும் அக்காலத்தில் எழுத, எவ்வளவு துணிச்சல் தேவை.

    இலட்சக் கணக்கான, பிற தாழ்த்தப் பட்ட, தீண்டத் தகாத வகுப்பினைச் சேர்ந்த மக்களுக்குக் கிடைக்காத, கிட்டாத அறிவும், தெளிவான பார்வையும், போராட்ட குணமும், முக்தா பாய்க்குக் கிடைக்கக் காரணம், அவர் படித்த பள்ளியும், அதனை நடத்தியவரும்தான்.


அவர்தான்
ஜோதிராவ் புலே.

     ஜோதிராவ் புலே 1827 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் நாள், மகாராஷ்டிராவின், புனேயில் பிறந்தவர். இவரது தந்தை கோவிந்த ராவ்.

      கோவிந்த ராவும் அவரது சகோதரர்களும் மலர் வியாபாரம் செய்து வந்தமையால், புலே என்னும் பெயர் அவர்களோடு ஒட்டிக் கொண்டது.

     ஜோதிராவ் ஒரு வயதிலேயே தாயை இழந்தார். தொடக்கக் கல்வியை மட்டும் பயின்று, தந்தையின் கடைக்கு வேலைக்கு வந்து விட்டார். பதிமூன்று வயதிற்குள் திருமணமும் முடிந்து விட்டது.

      ஜோதிராவின் உடல் கடையில் வேலை பார்த்தாலும், உள்ளமோ கல்வியைத் தேடி பூ போல் வாடியது.

     ஜோதிராவின் கற்கும் ஆர்வத்தை உணர்ந்த, அவரது தந்தையின் நண்பர்கள் இருவர், உதவிட முன் வந்தனர்.

     ஒருவர் முஸ்லிம், மற்றொருவர் கிறித்தவர்.

     ஜோதிராவ் 1841 இல் புனேயில் உள்ள ஸ்காட்டிஸ் உயர் நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.

     1847 இல் புலே படிப்பை முடித்தபோது, ஒரு திடமான முடிவில் இருந்தார்.

எக்காரணம் கொண்டும் அரசு வேலைக்குச் செல்லக் கூடாது.

     சிறு வயது முதலே, மனிதர்களை மனிதர்களாக வாழ விடாத, சாதிய ஒடுக்கு முறைகளைக் கண்டும், அதனால் மனம் நொந்தும் வாழ்ந்தவர்தான் புலே.

     சமூகத்தில் ஒரு பிரிவினர் உயர் நிலையிலும், மற்ற பிரிவினர் கீழ் நிலையிலும் இருப்பதற்கான சித்தாந்த விளக்கத்தை, நியாயத்தை, சாதியம் அளிப்பதை கண் கூடாகக் கண்டார்.

     இந்நிலையினை எப்படி மாற்றுவது என்று சிந்தித்தார். செழிப்பான, பண பலம் மிக்க, படைபலம் மிக்க, உயர் சாதியினருடன், ஒன்றுமற்ற, நிராதரவான, தாழ்த்தப் பட்ட மக்களால் எப்படி போரிட முடியும். போரிடுவது என்றால், எந்த ஆயுதத்தைப் பயன் படுத்தி போரிடுவது என ஆழ்ந்து ஆராய்ந்தார்.

     முடிவில் ஜோதிராவ் புலே, ஓர் வலிமைமிகு பேராயுதத்தைக் கண்டு பிடித்தார்.
கல்வி.

     கல்வி இல்லை என்றால் அறிவு இல்லை. அறிவு இல்லை என்றால் ஒழுக்கம் இல்லை. ஒழுக்கம் இல்லை என்றால் ஊக்கம் இல்லை. ஊக்கம் இல்லை என்றால் ஆக்கம் இல்லை. எனவே கல்வி இன்மையே, இந்த சீர்கேட்டிற்குக் காரணம் என உணர்ந்தார்.


தான் செய்ய நினைத்ததை முதலில் தன் வீட்டில் இருந்தே தொடங்கினார். தன் மனைவி சாவித்திரி பாய்க்கு, தானே ஆசிரியராய் இருந்து கல்வி கற்பித்தார்.

    

1851 இல் பெண்களுக்கான ஒரு பள்ளியைத் தோற்றுவித்தார். கணவன், மனைவி இருவருமே பள்ளியை நடத்தினர். மேலும் இரு பள்ளிகளைத் தொடங்கினார்.

     பள்ளிகள் பலவற்றைத் தொடர்ந்து தொடங்கிய போதிலும், புலேயின் மனம் அமைதியின்றித் தவித்துக் கொண்டே இருந்தது.

    பெருமளவிலான பெண்கள் கல்வி அறிவு அற்றவர்களாக இருக்கும் பொழுது, ஒரு சில பள்ளிகளால், எந்தவொரு பெரிய மாற்றத்தினையும் கொண்டு வர இயலாது என்பதை உணர்ந்திருந்தார்.

     படிப்பறிவற்றவர்கள் பெருகியிருப்பதற்கு யார் காரணம்? பள்ளிகளை அதிகரிப்பது எப்படி? எப்படி அப்பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடம் அளிப்பது? கேள்விகள் தொடர்ந்து எழுந்த போதிலும், விடைகளையும் கண்டு பிடித்தார். அரசாங்கத்தின் முன் வேண்டுகோளாய் வைத்தார்.

     குறைந்தது 12 வயது வரையிலாவது, ஆரம்பக் கல்வி கட்டாயமாக்கப் பட வேண்டும்.

     தனியார் கல்வித் திட்டத்தை கடுமையாக எதிர்த்த புலே, நீண்ட காலத்திற்கு கல்வி அமைப்பு முழுவதும் அரசாங்கத்தின் வசமே இருக்க வேண்டும் என்றார்.

     மக்கள் மொழியில் அவர்களுக்குப் பயன்படும் வகையில் பாடத் திட்டங்கள் இருக்க வேண்டும்.

     எண், எழுத்து இரண்டையும் எழுத, படிக்க பழக்க வேண்டும். கணக்கு, பொது வரலாறு, பொது புவியியல், இலக்கணம் ஆகியவற்றில் தொடக்க நிலை அறிவினை அனைவரும் பெற்றாக வேண்டும்.

     மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், ஒரு பிரிவினரை ஒடுக்கும் வழக்கம் இன்றும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. தீண்டாமை இன்னும் ஒழிந்தபாடில்லை.

     கல்வி அறிவு அனைவருக்கும் கிடைத்து விடவில்லை. பெண்கள் இன்னும் சமத்துவத்தை எட்டிப் பிடிக்க வில்லை.

     புலே இன்றும் தேவைப்படுகிறார்.

     தாழ்த்தப் பட்டவர்கள் மட்டுமல்ல, ஒடுக்கப் பட்டோரின் விடுதலையை, இலட்சியமாகக் கொண்ட ஒவ்வொருவரும், ஏந்த வேண்டிய ஆயுதங்கள் என மூன்றினை, புலே குறிப்பிடுகிறார்.

அதிகாரம், கல்வி, அறிவியல்

     நண்பர்களே, மூன்று ஆயுதங்களையும் ஏந்திப் போராடுவதே, ஜோதிராவ் புலே அவர்களுக்குச் செலுத்தப்படும் உண்மை அஞ்சலியாகும்.





       

68 கருத்துகள்:

  1. ஜோதிராவ் புலேயைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். தங்களது இப்பதிவு மூலமாக அவரைப் பற்றி அறிந்துகொண்டேன். ஒரு பொருண்மையைப் பற்றி பரந்துபட்ட பகிர்வினைத் தரும் தங்களது முயற்சி வெல்ல எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    கல்வியின் முக்கியத்துவத்தையும் நம் சமூகத்தில் நிறைந்திருக்கும் ஏற்றத் தாழ்வுகளை சீரமைக்கும் கல்வியே என்று ஒரு நூற்றாண்டுக்கும் முன்பே சிந்தித்து செயல்பட்ட உயர்ந்த உள்ளத்தினைக் கொண்ட ஜோதிராவ் புலே அவர்களைப் பற்றி படிக்கும் பொழுதே உணர்ச்சி பெருகுகிறது. வாழ்க அவர் புகழ். வளர்க இவரைப் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளை அறிமுகப்படுத்தும் தங்களின் தொண்டு.

    பதிலளிநீக்கு
  3. அறிந்திடாத மனிதர்! வரலாற்றில் வரவேண்டியவர்! ஆனால் அவர் வரலாறே இன்றுதானே தங்களால் தெரிகிறது!

    பதிலளிநீக்கு
  4. ஜோதிராவ் புலே அவர்களின் சிறப்பை உங்கள் பகிர்வு மூலம் அறிந்தேன் ஐயா... நன்றி...

    பதிலளிநீக்கு
  5. சீரிய பணிகளைச் செய்த ஜோதிராவ் ஃபூலே.... இன்றைக்கும் இவர் போன்றவர்கள் தேவை.

    பதிலளிநீக்கு
  6. அருமையான பதிவு. கல்வி அனைவருக்கும் தேவை தான். ஆனாலும் கல்வி ஒன்றே அனைவரையும் பண்படுத்தவில்லை என்பதும் உண்மையே! கசக்கும் உண்மை! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று கல்வி அனைவரையும் பண்படுத்தவில்லை என்பது உண்மைதான் சகோதரியாரே
      அது கல்வியின் குற்றமல்ல
      இன்றைய கல்வி முறையின் குற்றம்
      மதிப்பெண் பெறுதலே கல்வியின் இலட்சியம் என்றாகிப் போன
      இன்றைய சூழ்நிலையின் குற்றம்
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  7. அண்ணல் அம்பேத்கருக்கு
    குருவாகத் திகழ்ந்தவர்
    "தலித்" என்ற சொல்லிற்கு சொந்தக்காரர். வரலாற்றில் எழுதப்படாத புரட்சியாளரை பதிவுசெய்தமைக்காக
    நன்றியை
    தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. இதுபோன்ற பலரின் சிறப்புக்களைத் தங்கள் பதிவின் மூலம் அவ்வப்போது தெரிந்துகொள்ள முடிவதில் மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  9. ஜோதிராவ் புலே இன்றே தெரிந்துகொண்டேன் புரட்சியாளரைப் பற்றி. பகிர்வுக்கு நன்றிங்க சகோ.

    பதிலளிநீக்கு
  10. சிறந்த பல மனிதர்களைப் பற்றி அறியத்தரும் உங்களைப் பாராட்ட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. wonderfull introduction of jothi rao.while one group of intelectuals try to bring the people to wisdom and experience the divinity in them another stronger group dominates and try to keep the people in darkness.This goes on since ages.
    well done Mr.Jayakumar

    பதிலளிநீக்கு
  12. நல்லவர் ஒருவர் பற்றி ஒரு நல்ல பதிவு.

    நன்றி

    பதிலளிநீக்கு
  13. அறிந்திராத ஓர் மனிதரை பற்றி அருமையான தகவல் பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  14. அறிந்திராத மனிதர், வணங்கப்ட வேண்டியவர், தங்கள் பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. அருமையான மனிதர் பற்றி அருமையான பதிவு...

    பதிலளிநீக்கு
  16. உயர்ந்த மனம் படைத்த ஜோதிராவ் புலே அவர்களைப் பற்றி இன்று தான் அறிகின்றேன்..ஜோதிராவ் புலே அவர்களும் அவரது மனைவி சாவித்திரி அவர்களும் சமூகத்துக்கு ஆற்றிய தொண்டு மகத்தானது..

    இப்படிப்பட்ட மகான்களால் சமுதாயம் கல்வி பெற்றது..

    நல்லோர் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும்..

    பதிலளிநீக்கு
  17. தமிழகத்தைப் பொருத்தவரையில் இரண்டுவிதமான ஒடுக்குமுறை இருக்கிறது ஒன்று சாதி ரீதியிலான ஒடுக்குமுறை இரண்டாவது மொழி ரீதியிலான ஒடுக்குமுறை இந்த ஒடுக்குமுறைகளை ஒழித்தாலே சமத்துவம் நிற்கும் .... பூலே போன்றோர் இன்று வீட்டுக்கு வீடு தேவையையாய் இருக்குக்கின்றார்கள் என்பது உண்மையே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூலே போன்றோர் இன்று வீட்டுக்கு வீடு தேவையையாய் இருக்குக்கின்றார்கள் என்பது உண்மையே....
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  18. இன்றைக்கும் அந்த நிலை நிடிக்கிறது.வலைப் பதிவுகளில் நான் பலமுறை எழுதி இருக்கிறேன் உயர்வுதாழ்வைப் போக்கும் சிந்தனைகள் சிறு வயதிலேயே விதைக்கப் படவேண்டும் பள்ளியில் படிக்கும் போதே சமத்துவம் உணர்த்தப் பட வேண்டும் ஜோதி ராவ் பற்றி இப்போதுதான் அறிகிறேன் அடையாளப் படுத்தி பதிவிட்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று பள்ளிகள் என்பதே மதிப்பெண் பெறும் தொழிற்சாலைகள் என்றல்லவா ஆகிவிட்டது
      நன்றி ஐயா

      நீக்கு
  19. அறியாத மனிதரை அறியத் தந்தீர்கள் ஐயா...
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. கல்வியை தனியார் மயமாக்கும் அரசுகள் பூலேயின் சிந்தனையை கடைபிடிக்குமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசு நிச்சயம் கடைபிடிக்காது நண்பரே
      ஆனாலும் இன்றைகு 160 ஆண்டுகளுக்கு முன்னரே உணர்ந்து கூறியிருக்கிறாரே இம் மாமனிதர்
      போற்றுதலுக்கு உரியவர்
      நன்றி நண்பரே

      நீக்கு
  21. ஜோதிராவ் பூலே பற்றிய சிறப்பன பகிர்வு.நன்றி

    பதிலளிநீக்கு
  22. கல்வி -ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும் ஒரு சிறந்த வழி. பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  23. அய்யா ஒரு பதிவுக்குள் அடங்கிவிடக்கூடிய வாழ்வா அது ...
    நீண்ட நாட்களுக்கு முன்னர் ஒரு ஐரோப்பியர் உங்கள் நாட்டில் இரண்டு பெரும் ஆளுமைகள் உண்டு என்றால் அது ஜோதிராவும் பெரியாரும் மட்டுமே என்று சொன்னதில் இருந்து தேடினேன்.
    நிலவன் அண்ணாத்தே இரவல் தந்த பேரா. அருணின் புத்தகத்தில் இருந்தது வெளிச்சத்தின் முகவரி...
    நான் டிராப்ட்டில் வைத்திருக்கிறேன் பின்னர் வெளியிட..
    இருப்பினும் உங்களைப் போன்ற முன்னோடிப் பதிவர்கள் மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய கடமை இருக்கிறது..
    நானும் வருகிறேன் பின்னால் ..
    மனம் நெகிழவைத்த பதிவு
    வாழ்த்துக்கள்
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பதிவினையும் வெளியிடுங்கள் நண்பரே
      நன்றி

      நீக்கு
  24. இவரை தெரியாமல் இன்று வரை இருந்திருக்கிறேன், இப்பேர்ப்பட்டப் பெரியோரைத் தேடிப் பதிவுகளில் நாங்களும் அறியத் தருவதற்கு நன்றி அண்ணா

    பதிலளிநீக்கு
  25. வணக்கம் ஐயா !

    வரலாற்று நாயகர்களின் வாழ்க்கையினை எங்குதான் தேடித் பெறுகிறீர்களோ தெரியவில்லை ஆனால் அறியாத எங்களுக்கும் தங்கள் பதிவின் மூலம் அறியக் கிடைத்தது நாங்கள் செய்த தவமே

    தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
    தமிழ்மணம் +1

    பதிலளிநீக்கு
  26. நல்லோர்களையும் சமூகத்திற்கும் நாட்டுக்கும் உழைத்தவர்களை அனைவரும் அறியச் செய்யும் தங்கள் பணி மகத்தானது. இவர்களெல்லாம் வரலாற்றுப் பாடத்தில் இடம் பெறவில்லையே.அரசு கவனிக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  27. ஜோதிராவ் பற்றி இப்போதுதான் அறிகின்றோம்....இப்படிப்பட்ட மாமனிதரைப் பற்றி அறியத்தந்தமைக்கு உங்களுக்கு பாராட்டுகள், எங்கள் மனமார்ந்த நன்றிகள்..

    //கல்வி இல்லை என்றால் அறிவு இல்லை. அறிவு இல்லை என்றால் ஒழுக்கம் இல்லை. ஒழுக்கம் இல்லை என்றால் ஊக்கம் இல்லை. ஊக்கம் இல்லை என்றால் ஆக்கம் இல்லை. எனவே கல்வி இன்மையே, இந்த சீர்கேட்டிற்குக் காரணம் என உணர்ந்தார்.// அருமை அருமையான வார்த்தைகள்.....

    பதிலளிநீக்கு
  28. 1847 இல் புலே படிப்பை முடித்தபோது, ஒரு திடமான முடிவில் இருந்தார்.
    ''எக்காரணம் கொண்டும் அரசு வேலைக்குச் செல்லக் கூடாது.''
    அப்போதே என்ன தெளிவு அய்யா! என்னையெல்லாம் நினைத்துக் கொள்ளும்போது ஆற்றாமைதான் வருகிறது. அருமையான தொகுப்பு.
    அய்யா...அடுத்த புத்தகம் தயாராகி விட்டது என்று நினைக்கிறேன். விரைவில் வெளியிடத் தயாராகுங்கள்... நன்றி வாழ்த்துகள் த.ம.கூ.1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுக்கோட்டையின் நடைபெற இருக்கும்
      பதிவர் சந்திப்பிற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன் ஐயா
      நன்றி

      நீக்கு
  29. பெயரில்லா26 ஜூன், 2015

    புத்தம் புதிய தகவல் அதாவது முன்பு தெரியாதது.
    மிகுந்த நன்றி.
    பயனுடைத்து.

    பதிலளிநீக்கு
  30. அன்புள்ள ஜெயக்குமார்..

    வணக்கம். இன்றைக்குப் பலர் ஆசிரியர்களாகப் புறத்தளவில் பணிபுரிகிறார்கள். அகத்தளவில் அவர்கள் மாறுபட்டிருக்கிறார்கள் பாடம் எடுப்பதை வேண்டா வெறுப்பாக எடுக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் ஓர் ஆசிரியன் என்ன செய்யவேண்டும் பாடம் நடத்துவதோடு என்பதை நீங்கள் உறுதி செய்திருக்கிறீர்கள். உண்மையான ஆசிரியனின் உள்ளம் இந்தப் பதிவில் தெளிவாகிறது. உங்களைப் போன்றோரின் இத்தகைய பயனாக பதிவுகளால் இச்சமூகம் உண்மையான கல்வியை எட்டும் சமூகமாக மாறிவிடும் என்பது திண்ணம். மனமார்ந்த வாழ்த்துக்கள். இன்னொன்றும் குறிப்பிடவேண்டும் ஒவ்வொரு மனிதனுக்கு ஒவ்வொரு திறனைக் கடவுள் வழங்கியிருக்கிறார். ஆனால் நான் ம்ட்டுமே அறிவாளி. உங்களுக்கு எல்லர்ம் என்ன தெரியும் என்கிற மனோபாவத்தில் இன்றும் பேசிக்கொண்டு அலைபவர்களைக் கண்ணுற்றுப் பரிதாபப் பட்டிருக்கிறேன். தன் திறனையும் பயனாக்குவதில்தான் கற்ற கல்வியின் சத்தியம் வெளிப்படுகிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் நீண்ட கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா
      என்றும் வேண்டும் இந்த அன்பு

      நீக்கு
  31. ஜோதிராவ் பூலே பற்றிய சிறப்பான பகிர்வு. இவரது பெயரைக் கேள்விப்பட்டிருந்தாலும், இத்தனை விரிவாக உங்கள் பதிவில் தான் படித்தேன். தான் படித்ததுடன் நில்லாமல், தன் மனைவியையும் படிக்க வைத்து பெண்கல்விக்கும் சிறந்த பங்காற்றிய இவரைப் பற்றிய இந்தப் பதிவு சிறப்பாக இருக்கிறது.
    பல நல்லவர்களை பற்றிய பதிவுகளை வெளியிடும் உங்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  32. நான் அறியாத பெரும் மனிதரை தங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். நன்றி நண்பரே!
    த ம 17

    பதிலளிநீக்கு
  33. பதிவு மிக அருமை. சாவித்திரி புலே படம் தாங்கிய அஞ்சல் தலையும் வெளியாகி உள்ளது.

    பதிலளிநீக்கு
  34. சிறந்த பதிவு. மகாத்மா ஜோதிபா பூலே தோன்றிய மராத்திய மண்ணில்தான் இரண்டு மாதங்கள் முன்பு அண்ணல் அம்பேத்கர் பற்றிய பாடலை அலைபேசி ரிங் டோனாக வைத்திருந்த காரணத்தால் ஒரு வாலிபன் கொடூரமாக கொல்லப்பட்ட நிகழ்வும் நடந்தது.

    பெரியார், ஜோதிபா பூலே, நாராயண குரு போல பலர் இன்று தேவைப்படுகின்றனர்.

    பதிலளிநீக்கு
  35. அருமையான பதிவு ...எமது வாழ்த்துக்கள்
    உடுவை

    பதிலளிநீக்கு
  36. ஜோதிராவ் புலே. அறிய வேண்டியதும் அறியாத்துமான தகவல். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு