01 ஜூலை 2015

வெட்டுடைய காளி

     

ஆண்டு 1772. அது ஒரு அடர்ந்த காட்டுப் பகுதி. காட்டுப் பகுதியில், மரங்களுக்கு இடையே புகுந்து, மேடு பள்ளங்களை, ஒரே பாய்ச்சலில் தாண்டித் தாண்டி, அக் குதிரை வேகமாய், வெகு வேகமாய் பறந்து கொண்டிருக்கிறது.

         தாயே, சிவகங்கைச் சீமை வெள்ளையர் வசமாகிவிட்டது. நமக்கு விருப்பாட்சிதான் பாதுகாப்பான இடம். அங்கு செல்லுங்கள்.வெள்ளையர்கள் தங்களைத் தேடிக் கண்டுபிடித்து, தீர்த்துக் கண்ட பல குழுக்களை, பல்வேறு இடங்களுக்கும் அனுப்பியுள்ளனர். உடனே புறப்படுங்கள்.

     அமைச்சரின் குரல் காதுகளில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.

     எனது கணவரை, இந்த வெள்ளைக் காரப் பாவிகள், நய வஞ்சகமாக, மறைந்து நின்று சுட்டுக் கொன்று விட்டனர். என்னையும் கொல்லத் துடிக்கின்றனர். பழி வாங்கியாக வேண்டும், படை திரட்டியாக வேண்டும், இழந்த மண்ணை மீட்டாக வேண்டும். அதுவரை பதுங்கித்தான் ஆக வேண்டும்.


    குதிரையின் மேல் வேலு நாச்சியார். கோபம் கொப்பளிக்கும் கண்களுடன், எரிமலையாய் குமுறும் மனதுடன், காட்டுப் பகுதியில், தனித்துப் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

      அரியாக் குறிச்சி ஐயனார் கோயிலைக் கடக்கும் போதுதான் கோயில் தூணில் சாய்ந்தபடி, அழுது வீங்கிய முகத்துடன் அமர்ந்திருந்த அந்த உருவத்தை வேலு நாச்சியார் கவனித்தார்.

    உடையாள் அல்லவா? இங்கே ஏன் அமர்ந்திருக்கிறார் என எண்ணியபடியே குதிரையை நிறுத்தினார்.

     குதிரையின் குளம்படி ஓசை கேட்டு, சுய நினைவிற்கு வந்த உடையாள், வேலு நாச்சியாரைக் கண்டதும் பதறி எழுந்தார்.

தாயே, உங்களுக்கா இந்த நிலை எனக் கதறியவர்

தாயே, அந்தப் பக்கம் போகாதீர்கள், அங்கே வெள்ளையர்கள் பலர், தங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். இதோ இந்தப் பக்கம் செல்லுங்கள் என்றார்.

     உடையாள் காட்டிய திசையில், வேலு நாச்சியாரின் குதிரை பறந்து சென்று மறைந்த, சில நிமிடங்களில், ஏழெட்டுக் குதிரைகள் அவ்விடம் வந்தன, ஒரு வெள்ளைக் காரனும் சில அடியாட்களும்.

பெண்ணே, இந்தப் பக்கம் வேலு நாச்சியாரைப் பார்த்தாயா?

பார்த்தேன்

என்ன, என்ன பார்த்தாயா? அவர் எந்தப் பக்கம் சென்றார். சீக்கிரம் சொல்.

சொல்ல முடியாது

அடுத்த நொடி, உடையாளின் கன்னத்தில், இடியென ஓர் அடி விழுந்தது. மறு நொடி கன்னம் வீங்கத் தொடங்கியது.

ஒழுங்காகச் சொல்லிவிடு, மறுத்தால், உன் உடலில் உயிர் இருக்காது.

சொல்ல முடியாது

இருவர் குதிரையில் இருந்து கீழே குதித்தனர். ஒருவன் உடையாளின் முடியைப் பிடித்து தர தரவென இழுத்துக் கீழே தள்ளினான். மற்றொருவன் ஓங்கி உடையாளின் வயிற்றில் மிதித்தான்.

சொல்ல முடியாது

மீண்டும் பலம் கொண்ட மட்டும், வயிற்றில் உதைத்தான். உடையாள் தரையில் விழுந்த மீனாய் துடித்தாள்.

சொல்ல முடியாது

ஒருவன் வாளை உருவினான், ஓங்கினான், அவனைப் பார்த்து, அந்த வேதனையிலும் உடையாள் சிரித்தாள்

சொல்ல முடியாது

வேகமாய் வாள் கீழே இறங்கியது. ஒரே நொடி, ஒரே வெட்டு உடையாளின் தலை, உடலை விட்டுத் தனியே மண்ணில் உருண்டோடியது.


     உடையாளின் குருதி, அரியாக் குறிச்சி மண்ணில் வெள்ளமாய் ஓடி, பின் வேகம் குறைந்து, பூமிக்குள் விதையாய், வீரத்தின் வித்தாய், தியாகத்தின் திருவுருவாய் மெல்ல மெல்ல இறங்கியது.

     சரியாக எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில், பெரும் படை திரட்டிப் போரிட்டு, இழந்த சிவகங்கைச் சீமையினை மீட்டெடுத்த வீர மங்கை வேலு நாச்சியார், உடையாளின் குருதி வழிந்த இடத்தில், உடையாளுக்கு ஓர் ஆலயம் எழுப்பி, தன் வைரத் தாலியை முதல் காணிக்கையாக்கினார்.

    

ஒப்பற்ற ஓர் உயர்ந்த, உன்னத தியாகத்தின் நினைவுச் சின்னம் அரியாக் குறிச்சி கோயில்.

வெட்டுடையார் காளியம்மன் கோயில்

     கடந்த மே மாதம் 6 ஆம் நாள். உடையாளின் குருதி படிந்த மண்ணில், ஈடில்லா தியாகச் சிகரத்தின், தலை உருண்ட மண்ணில், என் காலடியை எடுத்து வைத்த போது, உடலும் உள்ளமும் ஒரு சேர சிலிர்த்தது.

     ஓர் உயிரைக் காக்கத், தன் உயிரையே காணிக்கையாக்க எவ்வளவு மனத் துணிச்சல் வேண்டும். இத்தகைய மனத் துணிச்சலைப் பெற, எத்தகைய எல்லையற்ற அன்பு உடையவராய் இருத்தல் வேண்டும்.
    

இவை எல்லாமும் உடையவராய் இருந்த, உடையாளின் கோயில் இதோ, கண்முன்னே கம்பீரமாய் காட்சி தருகிறது. இரு கரம் நீட்டி, அன்போடு வா வா என்று அழைக்கின்றது.

     காலடி எடுத்து வைத்து, உள்ளே நுழைகின்றேன். மனதில் ஓர் இனம் புரியாத உணர்ச்சி பரவுகிறது.

     கோயிலின் கருவறையில் சிலையாய், வெட்டுடைய காளியாய் உடையாள். கண்கள் கலங்க இரு கரம் கூப்புகின்றேன்.

தாயே, நின்னைச் சரணடைந்தேன்.

     உடையாளுக்குக் கோயில் எழுப்பி, காணிக்கையாய், வேலு நாச்சியார் வழங்கிய, அவரது வைரத் தாலி, இன்றும், இக்கோயிலில் போற்றிப் பாதுகாக்கப் பெற்று வருகிறது.

     வெள்ளையரின் வாளுக்கு இறையாகும் முன், உடையாள் அமர்ந்திருந்த அய்யனார் கோயிலும், உடையாளின் கோயிலும், ஒன்றை ஒன்று பார்த்தபடி, எதிரெதிராய், ஒரே இடத்தில், ஒரே சுற்றுச் சுவருக்குள்.

      மெதுவாய் சுய நினைவு பெற்று, கோயிலுக்குள் வலம் வந்த பொழுதுதான், உடையாள் கோயிலின் பின்புறத்தில், அக் காட்சியைக் கண்டு திடுக்கிட்டேன்.

     இரண்டு சுத்தியல்கள், இரண்டிற்கும் மேற்பட்ட கூர்மையான உளிகள், உணவுத் தட்டினும் சிறிய, வட்ட வடிவிலான, இரும்பினால் ஆன, இரண்டு பலி பீடங்கள். இவற்றைச் சுற்றிலும், குவியல் குவியலாய், இரண்டு இரண்டாய் வெட்டப் பெற்ற, ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நாணயங்கள்.

    ஒன்றுமே புரியவில்லை எனக்கு.

    அருகில் இருந்த உள்ளூர் பெரியவர் ஒருவரிடம், எதற்காகக் காசுகளை வெட்டிப் போட்டிருக்கிறார்கள் எனக் கேட்டேன்.

    பெரியவர் சொன்ன பதிலைக் கேட்டவுடன், அடேய், பாவிகளா என்று கத்த வேண்டும் போல் இருந்தது.

யாரேனும் நமக்கு வேண்டாதவர்கள், நமக்குப் பிடிக்காதவர்கள் இருந்தால், அவர்கள் அழிய வேண்டும், அவர்கள் குடும்பமே மண்ணோடு மண்ணாக மக்கி நசிந்து போக வேண்டும் என்று இறைவியிடம் வேண்டிக் காசுகளை வெட்டிப் போடுவார்கள் என்றார்.

     குவியல் குவியலாய் வெட்டிப் போடப் பட்டிருந்த காசுகளைப் பார்த்தேன். ஒவ்வொரு காசும், மனிதர்களின் விகார மனத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

     உடையாளின் ஒப்பற்ற, உன்னத, உயரிய தியாகத்தைப் போற்றும் வகையில் எழுப்பப்பெற்ற கோயிலானது, இன்று வஞ்சக மனதும், அடுத்தவர் மகிழ்வுடன் வாழ்வதைக் காண சகிக்காத பொறாமை உள்ளமும் படைத்த, விலங்கினும் கீழான மனிதர்களின் வழிபாட்டுத் தளமாக உருமாற்றம் பெற்றிருப்பது, மனதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

     மீண்டும் குவியல் குவியலாய் வெட்டி வீசப் பட்டிருந்த காசுகளைப் பார்த்தேன். வெட்டப் பட்ட காசுகளுக்கு இடையில், வெட்டுண்ட இதயத்துடன், கலங்கிய கண்களுடனும் உடையாளின் முகம் தெரிந்தது.

ஓர்  உயிரைக் காக்க,
என் உயிரையே கொடுத்தவள் நான் 
இன்று
என்னிடமே,
அடுத்தவர் வாழ்வை அழிக்க வேண்டுகிறீர்களே,
இது நியாயமா?



60 கருத்துகள்:

  1. இது நியாயமே இல்லை... இதை விட களங்கம் வேறுமில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீராத களங்கம்தான் ஐயா
      நன்றி

      நீக்கு
    2. உன்மையான நியாயம் இருந்தால் மட்டும் தான் அம்மா காளி தண்டிபார்கள் .

      நீக்கு
  2. /யாரேனும் நமக்கு வேண்டாதவர்கள், நமக்குப் பிடிக்காதவர்கள் இருந்தால், அவர்கள் அழிய வேண்டும், அவர்கள் குடும்பமே மண்ணோடு மண்ணாக மக்கி நசிந்து போக வேண்டும் என்று இறைவியிடம் வேண்டிக் காசுகளை வெட்டிப் போடுவார்கள்//

    அடப் பாவிங்களா! இது என்ன கொடுமைடா சாமி...இதை எல்லாம் நம் மக்கள் ஏன் எதிர்ப்பதில்லை? அரசும் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை..இது மூட நம்பிக்கைகள், அராஜகச் செயல்களை ஒடுக்க வேண்டாமோ...மனித நேயம் அருகி வருவது பற்றி பேசி அதை வளர்க்கப் பேசும் வேளையில் இப்படியுமா....வேதனை மிக்க ஒன்று...

    பதிலளிநீக்கு
  3. good Question, But No Answer to your Question now from our world

    பதிலளிநீக்கு
  4. கோயில் வரலாற்றையே மாற்றிவிட்டிருக்கிறார்களே! இக்கோயில் குறித்து நானும் கேள்விப்பட்டு இருக்கின்றேன்! ஒருமுறை சென்றுவர ஆசை உள்ளது பார்ப்போம்!

    பதிலளிநீக்கு
  5. வெட்டுடையார் காளியைப் பற்றி - வீரமங்கை வேலுநாச்சியார் பற்றிய பதிவினில் எழுதியிருக்கின்றீர்கள்..

    வீரம் செறிந்த அந்த மண்ணில் தங்களைக் கண்டதும் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  6. உடையாளின் வீரத்தையும் கேள்வி பட்டிருக்கிறேன். வெட்டுடைய காளியை பற்றியும் தெரியும். ஆனால், இரண்டுமே ஒன்றுதான் என்பதை தங்களின் பதிவை பார்த்தப் பின்தான் தெரிந்து கொண்டேன். கண்களை கசிய பதிவு நண்பரே!
    த ம 5

    பதிலளிநீக்கு
  7. கண்களை கசிய வைத்த பதிவு நண்பரே!

    பதிலளிநீக்கு
  8. வேண்டுதலுக்காக அடையாளங்கள் விட்டுச்செல்லும் இடம் அது. அடையாளங்களை வெளிக்காட்டது இம்மாதிரி வேண்டுதல்கள் எல்லாக் கோவில்களிலும் இருந்தாலும் வெளிப்படையாய்த் தெரிவதில்லை.

    பதிலளிநீக்கு
  9. உடையாளின் குருதி, அரியாக் குறிச்சி மண்ணில் வெள்ளமாய் ஓடி, பின் வேகம் குறைந்து, பூமிக்குள் விதையாய், வீரத்தின் வித்தாய், தியாகத்தின் திருவுருவாய் மெல்ல மெல்ல இறங்கியது.

    இந்த வரி என் நெஞ்சை நெகிழ வைத்தது
    சும்மா வரவில்லை சுதந்திரம்
    அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  10. 'கோயிலில் காசு வெட்டிப் போட்டுவிடு’ என்ற சொல்வழக்கைக் கேட்டிருக்கிறேன்.

    உடையாளின் வீரச் சரித்திரத்தைத் தங்களின் பதிவின் வாயிலாகவே தங்களுக்கே உரிய எழுத்து நடையில் இன்றே அறிந்தேன்.

    அருமை.


    நன்றி

    பதிலளிநீக்கு
  11. இந்நிகழ்வினைப் பற்றிப் படித்திருக்கிறேன். பதிவின் பிற்பகுதி வேதனையான விஷயம். மனித மனதின் விகாரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!

    பதிலளிநீக்கு
  12. மக்கள் அல்ல இவர்கள்;மாக்கள்.எவ்வளவு உயரிய இடத்தைக் கீழ்த்தர ஆசைக்குப் பயன்படுத்துகிறார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உயர்ந்த இடத்தை தாழ்ந்த எண்ணத்திற்குப் பயன்படுத்துகிறார்கள் ஐயா
      நன்றி

      நீக்கு
  13. வெட்டுடைய காளி – பற்றி அறியச் செய்த ஆசிரியருக்கு நன்றி.

    த.ம.9

    பதிலளிநீக்கு
  14. வெட்டுடையார் காளியம்மன் கோயில் பற்றிய
    சுவையான பதிவைப் படித்தேன்.
    சிறந்த பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  15. வணக்கம் சகோ,
    தங்கள் வீரமங்கை வேலுநாச்சியார் பதிவில் படித்துள்ளேன்,
    இங்கே இப்ப படிக்கும் போது புதிது போல் உள்ளது, இது தான் தங்கள் திறம், அருமை, தங்கள் நடையே அழகு தான், உண்மை வெறும் புகழ்ச்சியில்லை, தொடருங்கள்,
    நன்றி.

    பதிலளிநீக்கு
  16. என்ன கொடுமை! இப்படியும் மனித உள்ளங்களா!

    பதிலளிநீக்கு
  17. உணர்வுபூர்வமாக தொடங்கிய பதிவு வேதனையில் முடிந்து விட்டது. மனிதன் மனதில் வன்மம் மேலோங்கும் போது அவன் மிருகமாகிறான். அதனால்தான் அடுத்தவர் அழிய வேண்டுமென்பதையே வேண்டுதலாக்குகிறான்.

    இப்படிப் பட்ட நடைமுறையை அக்கோயில் நிர்வாகம் தடை செய்திட வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே
      இதுபோன்ற நடைமுறைகளை தடைசெய்திடத்தான் வேண்டும்
      நன்றி

      நீக்கு
  18. வணக்கம்
    ஐயா
    நெஞ்சை உறைய வைத்த தகவல்.... பகிர்வுக்கு நன்றி ஐயாத.ம 11
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  19. உங்கள் பதிவின் கடைசி பாராவை கல்வெட்டாய் அங்கே செதுக்கி வைக்க வேண்டும் .படித்தாலாவது திருந்துவார்களா :)

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் நண்பரே !

    வாசிக்கும் போதே இனம்புரியாத உணர்வு எனக்கு ஏற்படும் போது அந்த இடத்தை நேரில் பார்த்த தங்களுக்கு எவ்வாறு இருந்திருக்கும் ...?
    அங்கே காசுவேட்டுவதுபோல் நான் இன்னோர் இடத்தையும் கண்டேன் 2011 இல் இந்தியா வந்தபொழுது பொள்ளாச்சிக்குப் பக்கம் மாசாணி அம்மன் கோவிலில் செத்தல் மிளகாய் அரைக்கிறார்கள் அதை ஏன் என்று கேட்டேன் உங்களுக்குக் கிடைத்த அதே பதில் வந்தது ....ம்ம் ஒரு நாள் பிடிக்காத கடவுளுக்கும் அரைப்பாங்க..................................... மிளகாய் ! ஹா ஹா ஹா

    அருமை தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் ஒரு நாள் பிடிக்காத அல்லது வேண்டுதலை நிறைவேற்றாக கடவுளுக்கும் அரைக்கத்தான் போகிறார்கள்
      நன்றி நண்பரே

      நீக்கு
  21. தமிழ்மணம் கூடுதல் ஒரு வாக்கு

    பதிலளிநீக்கு
  22. வெட்டுடைய காளியைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். இக்கோயிலுக்குச் சென்றதில்லை. தங்கள் பதிவு அங்கு செல்லும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. நன்றி.

    பதிலளிநீக்கு
  23. அன்றைய வீர வரலாறுகளையும், இன்றைய மாறுபட்ட சூழ்நிலைகளையும் யோசித்து, வியக்கும்படி ஒப்பிட்டு எழுதியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  24. ஒரு வீர மங்கையின் கதை படித்துக் கொண்டே வரும்போது இக்கால மாக்களின் போக்கினை படித்து வருத்தம் தான் மிஞ்சியது......

    த.ம. 15

    பதிலளிநீக்கு
  25. ஆமாம் ஐயா... வெட்டுடைய காளி (கொல்லங்குடி) கோவிலில் காசு வெட்டித்தான் போடுகிறார்கள்... உங்களுக்கு அதிர்ச்சி... ஆனால் இது இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  26. வீரம் சுமந்த வெட்டுடைய காளிகளின் தியாகங்களைப்போல் இன்றும் பல விஷயங்கள் திரித்துத்தான் பார்க்கப்படுகின்றன/

    பதிலளிநீக்கு
  27. பெயரில்லா04 ஜூலை, 2015

    மிக நன்று .
    தகவல்களிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  28. வீர மங்கை வேலு நாச்சியார்,வரலாறு அருமை.

    தகவலுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  29. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    வெட்டுடைய காளி கோவிலில் நடைபெறும் காசு வெட்டி போடும் பழக்கத்தின் மூலம் நம் சமூகத்தின் பொறாமை குணம் வெளிப்படுகிறது. பரந்த மனப்பான்மை பல மடங்கு பெருக வேண்டும்.

    பதிலளிநீக்கு
  30. வேலு நாச்சியார் நெஞ்சில் நிறைந்து விழிகளில் நீரை வரவழைக்கின்றார் உடுவை

    பதிலளிநீக்கு
  31. இங்ஙே
    கருத்துகள்முழுமையாகசரியாக இல்லைமனிதர்களை
    குறைகூறியிருப்பவர்கள்
    கருத்தினைஉள்வாங்ஙவில்லை

    கடன் வாங்கியவன் கொடுக்கவில்லை, கடன் கொடுத்தவன் கொடுத்த கடனை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்த முடியவில்லை. இந்தச் சூழ்நிலையில் கடன் கொடுத்தவன் அரியாகுறிச்சியில் உலகைக் காக்கும் நீதிபதியான வெட்டுடைய காளியின் சந்நிதியில் வந்து முறையிட்டு வருந்திக் காசு வெட்டிப் போட்டு விட்டுப் போய்விட்டான் என்றால், வெட்டுடைய காளி முறையாகக் கடனை வசூலித்துக் கொடுப்பாள். நியாயமான காரணங்களுக்காகக் காசு வெட்டிப்போட்டால் அன்னை பராசக்தி காளியாகவே பழிவாங்குவாள். வம்புக்கே வந்து வருத்திப் பயமுறுத்தும் தெம்புள்ளார் செய்துவரும் தீங்குகளை - அம்பிகைமுன் சொல்லிமனம் கொதித்துத் துட்டொன்றைவெட்டிவிடக் கல்லி எடுப்பாள்வேர் களைந்து, என்று வெட்டுடையாள் வீரசக்கரம் என்ற நூல் போற்றுகிறது. அன்னையை வழிபட்டவர்களுக்கு மட்டுமல்லாமல் தங்கள் வீட்டிலிருந்தே அன்னையை நினைத்து காசு முடிந்து வைப்பவர்களுக்கும் தீராத நோய் தீருகிறது. கணவன் உயிர்பிழைக்க மாங்கல்யம் நிலைக்கிறது. வீட்டில் விளையாட வைக்கும் வெட்டுடைய காளி அந்த வீட்டில் தானும் குழந்தையாய் தங்கிருந்து தழைக்கச் செய்கிறாள். நீதிமன்ற வழக்குகளில் நீதிபதிகளின் ஆணையின்படி அன்னையின் சந்நிதியில் சத்தியம் செய்து முடிவு காண்பதுண்டு.

    தனிவழிக்குத் துணையிருக்கும் தாயாகவும், சத்தியத்தை காக்கும் சங்கரியாகவும் காளிதேவி கருணை செய்கிறாள். குறிப்பிட்ட சில கொடுமைக்காரர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் அன்னையிடம் முறையிட்டவர்கள் விரைவில் நல்வாழ்வு பெறுவதும், திருட்டுக் கொடுத்தவர்கள் பொருட்கள் தானே திரும்பி வருவதும் இந்த ஆலயத்தில் நாள்தோறும் நடக்கின்றன. அன்னையின் சந்நிதிக்குப் பின்புறமுள்ள சிறிய பீடத்தில் வெட்டிப் போடப்பட்ட காசுகள் எண்ண முடியாதவை. ஒரு கூண்டுக்குள் நிறைந்து கிடக்கும் காசுகளைத் தொடுவதற்கே மக்கள் அஞ்சுகிறார்கள். தாங்க முடியாத அளவுக்குத்தொல்லை கொடுக்கும் எதிரிகளுக்காக யாராவது காசு வெட்டிப் போட்டால் அந்தக் கொடியவர்கள் உயிரை இழக்கிறார்கள். வறுமை மாறவும் தொழில் வளமுறவும் செய்யும் அன்னை, கொடியவர்களை வதைத்துக் கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய்த் காட்சியளிக்கிறாள். இங்கே பொய்யாகச் சத்தியம் செய்தவர்கள் பிழைத்ததாகச் சரித்திரம் இல்லை. உலகத்திலேயே பெரிய நீதிமன்றம் அரியாகுறிச்சியில் இருக்கின்றது. இந்த நீதிமன்றத்தில் நீதிபதி அன்னை வெட்டுடைய காளி. மற்ற நீதிமன்ற தீர்ப்புகளை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யலாம். இந்த நீதிபதியின் தீர்ப்புக்கு மேல் யாரும் தீர்ப்புச் சொல்ல முடியாது. இவள் ஏழைகளுக்காக இரங்கி வந்து இலவச நீதிமன்றம் நடத்தும் ஏந்திழை. சில சமயங்களில் நீதியை நிதி அசைத்து விடக் காணுகிறோம். இவள் சந்நிதியில் நிதியும் நீதியும் கைகட்டி நிற்கின்றன. பரிகாரம் கேட்டு நிற்பவரும், பலன் கிடைத்தும் காணிக்கை செலுத்துபவருமாக இவள் சந்நிதி எப்பொழுதும் நிறைந்துள்ளது.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு