வீட்டில் கழிவறை வசதிகூடக் கிடையாது. இயற்கை
அழைக்கும் பொழுதெல்லாம், பகலானாலும் சரி, நடு இரவானாலும் சரி, தெருவினைக் கடந்து,
பொது இடத்திற்குத்தான் சென்றாக வேண்டும்.
வீட்டிற்கு அருகிலேயே, வீட்டினை ஒட்டியபடி
இருந்த ஒரு சிற்றிடம் விற்பனைக்கு வந்தது.
ஒரு நாள் வீட்டிற்கு வந்த தன் மகனிடம்,
தயங்கித் தயங்கிக் கேட்டார்.
நீ
கழிப்பறைக்கு இடம் வாங்க வேண்டும் என்கிறாய். ஊரில் உள்ளவன் நான் பங்களா வாங்கிவிட்டதாக
சொல்லுவான். அப்படியே சிலர் பத்திரிக்கைகளிலும் எழுதுவார்கள். அதெல்லாம் வேண்டாம்
போ.
தன் தாய்க்கு கழிவறை வசதிக்காக, இடம் வாங்கித்
தர மறுத்தவர், தமிழகத்தின் முதல்வர் என்றால் நம்ப முடிகிறதா?
நம்பித்தான் ஆக வேண்டும்.
கர்மவீரர் காமராசரின் இல்லத்தில் இன்றும்
கூட கழிவறை கிடையாது.
தமிழகத்தில் நடைபெறும் கல்வியியல்
நிகழ்ச்சிகளில், கடவுள் வாழ்த்து சொல்வதை நிறுத்திவிட்டு, காமராஜருக்கு வாழ்த்துச்
சொல்லுவதுதான் முறை என்று
கூறிக் கூறி மகிழ்வார் தந்தைப் பெரியார்.
ஆனால் காமராசர் இல்லத்தில் நுழைந்த நொடி
முதல், நாங்கள் அனுபவித்தது என்னவோ, வேதனை வேதனை சொல்லொன்னா வேதனைதான்.
நண்பர்களே, கும்பகோணத்தில் இருக்கும் கணித
மேதை சீனிவாச இராமானுஜனின் இல்லத்திற்குப் பலமுறை சென்றிருக்கிறேன். சென்னை
தியாகராய நகரில் இருக்கும், எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு இல்லத்திற்கும்
சென்றிருக்கிறேன். இலண்டனில் இருக்கும் காரல் மார்க்ஸ் அவர்களின் இல்லத்தை பல
முறை, இணைய வழி கண்டிருக்கிறேன்.
நான் பார்த்த நினைவு இல்லங்கள் அனைத்தும்,
அம்மாமனிதர்கள் வாழ்ந்த காலத்தில், என்ன நிலையில் இருந்ததோ, அதே நிலையிலேயே,
இன்றும் பராமரிக்கப் படுகின்றன.
அப்பொழுதுதான் அந்த இல்லங்களுக்குள்
நுழைந்ததும், அம்மாமனிதர்கள் வாழ்ந்த காலத்தின், கால எல்லைக்குள், நம்மால் நுழைய
முடியும், அக்காலத்தில் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை, மனக் கண்ணால் கண்டு மெய்
சிலிர்க்க இயலும்.
காமராசர் இல்லத்தில் நுழைந்து, வீட்டினுள்
பாதம் பதித்த அடுத்த நொடி பாதம் சில்லிட்டது. விலை உயர்ந்த கற்களால் புதுப்பிக்கப்
பட்ட தளம் எங்களைப் பார்த்துச் சிரித்தது.
ஏழைமகன் ஏழையென
இன்னமுதே நீ பிறந்தாய்
நிமிர்ந்தால்
தலையிடிக்கும்
நிற்பதற்கே இடமிருக்கும்
அமைவான
ஓர்குடிலில்
ஐயா நீ வந்துதித்தாய்
என்று பாடி,
காமராசரின் குடும்ப நிலையினைக் கண்முன்னே கொண்டு வந்து காட்சிக்கு வைப்பார்
கவியரசு கண்ணதாசன்.
அந்த ஏழைப் பங்காளனின் வீட்டின் தரையில்,
இன்று விலை உயர்ந்த கற்கள்.
அறையின் மையப் பகுதியில் கர்மவீரரின்
மார்பளவுச் சிலை. சுவற்றில் காமராசரின் அரிய புகைப் படங்கள்.
காமராசர் இல்லத்தின் காப்பாளராக நியமிக்கப்
பட்டிருந்த அலுவலரைப் பார்த்தோம்.
நாங்கள் தஞ்சையில் இருந்து வருகிறோம்.
அனைவருமே ஆசிரியர்கள். காமராசர் அவர்களின் இல்லத்திற்கு வருவது இதுவே முதல் முறை.
தஞ்சை சென்றதும், எங்கள் மாணவர்களுக்கு
காமராசர் இல்லத்தினைப் பற்றியும், காமராசர் பற்றியும் அவசியம் கூறியாக வேண்டும்.
வார்த்தைகளால் கூறுவதை விட, காட்சிகளாகக் காட்டினால், மிகுந்த பயனுடையதாக
இருக்கும். எனவே சில புகைப் படங்களை எடுக்க விரும்புகிறோம். புகைப் படம் எடுக்கலாமா?
இல்லக் காப்பாளர், எங்களை ஓர் அலட்சியப்
பார்வை பார்த்தபடி, பேரறிஞர் அண்ணா அவர்கள் கரம் நீட்டிக் காட்டுவாரே, அதைப் போல்
தன் கரம் நீட்டி, சுவற்றினைக் காட்டினார்.
புகைப் படம்
எடுக்கக்
கூடாது
அதிர்ச்சி அடைந்துதான் போனோம். கணிதமேதை
சீனிவாச இராமானுஜன் இல்லத்திலும், எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்திலும், மதுரை காந்தி அருங்காட்சியகத்திலும்,
புகைப் படங்களை, கை வலிக்க வலிக்க எடுத்து மகிழ்ந்த தருணங்கள், நினைவில் தோன்றி
மறைந்தன.
நமது நாட்டின் ஈடு இணையற்ற சொத்து, நம்
காமராசர். பள்ளி சென்ற, செல்கின்ற, செல்லப் போகின்ற அனைவருமே, நெஞ்சில் ஏந்திப்
போற்ற வேண்டிய கல்விக் கடவுளை, நாம் அனைவருக்கும் பொதுவானவரை, புகைப்படம் எடுக்கக்
கூடாது என்கிறீர்களே. பிறகு எப்படி மாணவர்களிடம், வருங்காலத் தலைமுறையிடம் இவரைக்
கொண்டு போய் சேர்ப்பது என்றோம்.
இல்லக் காப்பளரின் கண்களில் ஒருவித வெறுப்புணர்ச்சி
வெளிப்படையாகவே தெரிந்தது. இதுவரை இந்த விட்டிற்கு எவ்வளவோ பேர்
வந்திருக்கிறார்கள், இதுவரை அவர்கள் யாருமே கேட்காத கேள்விகளைக் கேட்கிறீர்களே.
இங்கு புகைப்படம் எடுக்கக் கூடாது அவ்வளவுதான்.
இனி இவரிடம் பேசிப் பலனில்லை என்பது
புரிந்து விட்டது. கடைசியாக ஒரே ஒரு கேள்வியைக் கேட்டேன்.
தங்களின்
பெயரைத் தெரிந்து கொள்ளலாமா?
இலட்சுமணன்.
இலட்சுமணன் என்றாலே, தன்னலம் துறந்து, தன்
உறவுக்காக, தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணிக்கும் உயர்ந்த உள்ளத்தின்
பெயர் என்றுதான் இவ்வளவு நாள் எண்ணியிருந்தேன்.
என் எண்ணம் தவறென்று புரிந்தது.
காமராசரின் இல்லத்தின் மைய அறையை ஒட்டி,
மேலும் இரு சிறு அறைகள். அவற்றின் சுவர்களில் மேலும் புகைப் படங்கள். கர்ம வீரர்
பயன் படுத்திய உடைகள், பொருட்கள்.
ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் ஓர் உடையைப்
பார்த்ததும், கண்கள் கலங்குவதைத் தடுக்க முடியவில்லை.
காமராசருக்காகத் தைக்கப் பெற்று, காமராசர்
அணியாத, இன்னும் சரியாகச் சொல்வதானால், காமராசர் அணிய மறுத்த உடை.
கோட், பேண்ட்.
கர்ம வீரர் ஒருமுறை ரஷ்யாவிற்குச் சென்று
வந்தாரல்லவா. அந்த வெளிநாட்டுப் பயணத்திற்காகத் தயாரான உடை அது. கதர் தவிர வேறு
துணியினை, என் வாழ்நாளில், என் கரங்களால் கூட தொடேன் என்று மறுத்து, ரஷ்யாவின்
கடும் குளிரையும் பொருட்படுத்தாது, கதருக்குப் பெருமை சேர்த்தவர் அல்லவா காமராசர்.
காமராசரின் விரல் கூட படாத உடை,. இதோ
கண்ணாடிப் பெட்டிக்குள் உறங்கிக் கொண்டிருக்கிறது.
மாடியில் காமராசர் படித்த நூல்கள், சிறு
வயதில் பயன்படுத்திய கட்டில்.
காமராசர் இல்லத்தில் நாங்கள் இருந்தபோது,
மிதமான கூட்டம் இருந்தது. எங்களைத் தவிர, இருபதிற்கும் மேற்பட்டோர் காமராசர்
இல்லத்தினைக் காண வந்திருந்தனர்.
நாங்கள், இரு சிறு அறைகளுக்குச் சென்ற
போதும், மாடிக்குச் சென்றபோதும், இல்லக் காப்பாளர், எங்களின் நிழல் போல் ஒட்டிக்
கொண்டே வந்தார்.
நாங்கள் அவரில்லாத நேரத்தில் புகைப் படம்
எடுத்து விட்டால், அது மிகப் பெரிய குற்றமாகி விடுமல்லவா?
உடல் நலம் குன்றியிருந்த தன் தாயைப்
பார்ப்பதற்காக, காமராசர் வருகிறார். வீடு முழுவதும் உறவினர் கூட்டம். தரையில்,
பாயில் காமராசரின் தாய் கண் மூடிப் படுத்திருக்கிறார்.
காமராசரைக் கண்டதும், முகமெல்லாம் மகிழ்ச்சி
பொங்க வரவேற்ற, காமராசரின் சகோதரியார் நாகம்மாள், உறவினர் கூட்டத்தைப் பிளந்து
கொண்டு, தாயருகே சென்று, காதருகே குனிகிறார்.
அம்மா, அண்ணன்
வந்திருக்கு.
தாயார் கண் திறந்து, தன் அன்பு மகனைக்
காண்கிறார். பொக்கை வாய் மெதுவாக, மிக மெதுவாக விரிந்து, மகிழ்ச்சியில் மலர்கிறது.
வாப்பா
காமராசர் தன் தாயருகே, தரையில் அமருகிறார்.
தாயின் கரம் பற்றி, மெதுவாய் வருடிக் கொடுக்கிறார். சிறிது நேரம் கழித்து, வரட்டுமா
என்றார்.
ஒரு வாய்
சாப்பிட்டு விட்டுப் போப்பா,
அதெல்லாம்
வேண்டாம், போகிற வழியில் சாப்பிட்டுக்கிறேன் என்று கூறி எழுந்த காமராசர், தன் தாயின்
முகத்தைப் பார்க்கிறார்.
தாயின் கண்களில் இருந்து, மெதுவாய்
வெளிப்பட்ட கண்ணீர், கண்ணங்களின் வழியே வழிந்தோடுகிறது.
சரி சரி,
சாப்பாட்டை எடுத்து வை.
அடுக்களைக்குப்
போய் சாப்பிடப்பா.
காமராசர் அடுக்களைக்குள் நுழைய, நாகம்மை
உணவு பரிமாறுகிறார். நின்றபடியே, பெயருக்குச் சாப்பிட்டுவிட்டு, வெளியே வருகிறார்.
நான் போயிட்டு
வரட்டுமா
மகராசனா
போயிட்டு வாப்பா
சிவகாமி
அம்மையார் வாழ்த்தி வழியனுப்புகிறார்.
காரில் ஏறி அமர்ந்த காமராசர் அமைதியாய்,
சிந்தனை வயப்பட்டவராய் அமர்ந்திருக்க, அருகில் அமர்ந்திருந்த திரு பழ.நெடுமாறன்,
மெதுவாய், தயங்கித் தயங்கிக் கேட்கிறார்.
ஐயா, தாங்கள்
வீட்டில் சாப்பிட்டு, எவ்வளவு காலம் ஆகியிருக்கும்.
என்ன ஒரு 25
அல்லது 30 வருடம் இருக்கும்.
பழ.நெடுமாறன் பேச்சற்று உறைந்து போகிறார்.
இவர்தான் காமராசர்.
நண்பர்களே, எனக்கு ஓர் ஆசை. காமராசர்
நின்றபடியே சாப்பிட்ட அடுக்களையைக் காண வேண்டும் என்று.
சுற்றிச் சுற்றிப் பார்த்தேன்.
அடுக்களையையே காணோம்.
எங்கள் பின்னாலேயே, நிழல் போல் ஒட்டிக்
கொண்டிருந்த திரு லட்சுமணன் அவர்களிடம் கேட்டேன், வீட்டின் அடுப்படி எங்கிருக்கிறது?
அதெல்லாம்
எனக்குத் தெரியாது
கேட்டு முடிப்பதற்குள், சுவற்றில் அடித்த
பந்து போல், வார்த்தைகள் வந்து விழுந்தன.
ஓர் அறையின் கதவு பூட்டியிருந்த்து.
இது என்ன அறை?
அதெல்லாம்
எனக்குத் தெரியாது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், கும்பகோணத்தில்
உள்ள கணிதமேதை சீனிவாச இராமானுஜனின் இல்லத்திற்கு சென்று வந்த நினைவு, நெஞ்சில்
சுழன்று சுழன்று அடித்தது.
காமராசரின் இல்லம் போலவே, இராமானுஜனின்
வீட்டிலும், வீட்டின் மையப் பகுதியில், இராமானுஜனின் மார்பளவு சிலை. சிலையின்
அருகில் அமர்ந்து, நானும் என் மனைவியும், வேண்டிய அளவு புகைப் படங்கள் எடுத்துக்
கொண்டோம்.
இராமானுஜன் வீட்டின் சமையலறை, அன்று இருந்த
நிலையில், இன்றும் அப்படியே பராமரிக்கப்
படுகிறது.
ஆனால், காமராசரின் இல்லத்திலோ அடுக்களை
காணாமல் போய்விட்டது.
மகிழ்ச்சியாக உள்ளே நுழைந்தவர்கள்,
வேதனைகளைச் சுமந்தவாறு வெளியே வந்தோம்.
காமராசரின் இல்லத்திற்கு வெளியே, வீட்டின்
படிக்கட்டில் நின்றவாறு, நண்பரை தெருவில் நின்றவாறு புகைப்படம் எடுக்கச் சொன்னேன்.
இல்லக் காப்பாளர் ஓடோடி வந்து தடுத்தார்.
வீட்டின் வாசலுக்கு நேராக நின்று
புகைப்படம் எடுக்கக் கூடாது. அப்படி எடுத்தால், வீட்டினுள் இருக்கும் காமராசர்
சிலையும் படத்தில் பதிவாகிவிடும். காமராசரின் சிலை படத்தில் விழக் கூடாது.
நீங்கள் வேண்டுமானால். இதே இடத்தில் நின்று
கொள்ளுங்கள், ஆனால் புகைப்படம் எடுப்பவர், வீட்டின் வலது ஓரத்தில் நின்றபடி,
காமராசர் சிலை தெரியாமல் படம் எடுக்கலாம்.
காமராசர் சிலைக்கு மட்டும் காது கேட்கும்
சக்தி இருந்திருக்குமானால், உங்களை எல்லாம் படிக்க வைத்த, எனக்கா, இந்த நிலை என்று
வாய் விட்டுக் கதறியிருக்கும்.
புகைப்படம் எடுப்பதால், சுவற்றில் இருக்கும் படங்கள் எந்நாளும் சேதமடையாது
என்பது அனைவரும் அறிந்ததே. தமிழக அரசு இப்படியானதொரு உத்தரவினை நிச்சயம்
பிறப்பித்திருக்காது என்பதும் உறுதி.
காமராசரின் இல்லத்திற்கு, காமராசரின் அருமையினை,
தன்னலமற்ற தொண்டினை அறிந்த, உணர்ந்த, மனிதர் ஒருவரை, காப்பாளராக நியமிக்க வேண்டும்
என்பதே, ஒரு முன்னாள் மாணவனாக, இந்நாள் ஆசிரியராக, எந்நாளும் கட்சி வேறுபாடுகளைக்
கடந்த, சாதி, மத, இன உணர்வுகளைத் துறந்த இந்த எளியேனின் விருப்பாகும்.
பல்லாண்டு
பல்லாண்டு
பல்லாயிரத்
தாண்டு
பலகோடி
நூறாயிரம்
செவ்வாட்சி
தான் தந்த
தமிழ்
மன்னா உன்
திருவடியே
திருக்காப்பு....
கரியமா
மலைபோல் மேனி
கருணையே
கமலச் செங்கண்
அருளிலேவிளைந்த
சொற்கள்
அகமெல்லாம்
தேச பக்தி
இருளிலே
விளக்கை ஏற்றி
இளமைக்குத்
தமிழ்ப்பால் தந்த
திருவுளம்
நிறைந்த செல்வா
தெய்வமாய்
நிற்கின்றா யே.
-
கவியரசு கண்ணதாசன்
எப்போது நினைத்தாலும் கண்கள் கலங்கும் சூழ்நிலை ஐயா!..
பதிலளிநீக்குநானும் விருது நகரில் காமராஜரின் இல்லத்திற்கு சென்றிருக்கின்றேன்..
நிலைப்படியைத் தாண்டி உள்ளே நுழையும் போதே என்னையும் அறியாமல் கண்கலங்கி அழுதேன்..
நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி விட்டு - சற்று நேரம் அமர்ந்திருந்தேன்..
அப்படியொரு மாமனிதர் மீண்டும் பிறக்க இன்னும் எத்தனை காலங்கள் ஆகுமோ!..
என்றென்றும் காமராஜரின் புகழ் நின்று வாழும்!..
அப்படி ஒரு மாமனிதர் இனி பிறப்பதற்கு வாய்ப்பே இல்லை ஐயா
நீக்குகாமராசர் நினைவினைப் போற்றுவோம்
நன்றி ஐயா
அருமையான பதிவு
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குNegilndu vitten
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குவணக்கம் சகோ,
பதிலளிநீக்குபதிவினை படிக்கும் போதே கண்கள் கசிவதைத் தடுக்க இயலவில்லை,
இவர் போல் இனி வருவாரா?
அவரே வந்தால் தான் உண்டு,
அருமையான ஆனித்தரமான உங்கள் வார்த்தைகள் நிறைவேறனும்.
நன்றி.
நன்றி சகோதரியாரே
நீக்குநெகிழ்ச்சியான பகிர்வு ஐயா புகைப்படம் எடுக்கும் அனுமதி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். இப்படி ஒரு வெள்ளாந்தி மனிதரை இனி எப்போது காண்போம்!!!!!
பதிலளிநீக்குஇனி காண்பதற்கு வாய்ப்பே இல்லை நண்பரே
நீக்குநன்றி
அருமை தெரியாதவரைக் காப்பாளராக வைப்பது தவறு..
பதிலளிநீக்குஉண்மைதான் சகோதரியாரே
நீக்குகழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பார்கள்
நன்றி சகோதரியாரே
தூங்குபவரை எழுப்பிடலாம் ஆனால்
பதிலளிநீக்குதூங்குவதுபோல நடிப்பவரை?!
நன்றி அய்யா.
எழுக்க இயலாதுதான் நண்பரே
நீக்குநன்றி
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
அறியாத தகவலை தங்களின் பதிவுவழி அறிந்தேன் அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இதுபோன்ற மனிதர்களையும் அரசையும்தான் குறை சொல்ல வேண்டும். காமாரஜரைப் போல, கக்கனைப் போல மனிதர்களை இனி பார்ப்போமா?
பதிலளிநீக்குஇனி பார்க்க இயலாதுதான் நண்பரே
நீக்குநன்றி நண்பரே
கண்கள் பனிக்கின்றன. எம் தலைவருக்கு மனமார்ந்த அஞ்சலி
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குகாமராஜர் ஆட்சி அமைப்போம் என்பவர்களின் பார்வையில் இந்தப் பதிவு தெரிய வேண்டும்.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குகாமராஜர் என்கிற மாமனிதரை ஒரு அடைப்புக்குள் அடைத்துவைத்து மட்டுமே பார்க்கிற கோரத்தின் விளைவுதான் இப்படியெல்லாமுமாய் ஆகிப்போதல்/
பதிலளிநீக்குஉண்மைதான் நண்பரே
நீக்குநன்றி
தமிழக அரசின் கவனத்திற்கு கண்டிப்பாக இதை கொண்டு செல்ல வேண்டும் ஐயா...
பதிலளிநீக்குஉண்மைதான் ஐயா
நீக்குஅரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லத்தான் வேண்டும்
நன்றி
வேதனை அளிக்கும் பதிவு. அருமை தெரியா மனிதர்கள்.
பதிலளிநீக்குஅருமை அறியா மனிதர்கள்தான்
நீக்குநன்றி சகோதரியாரே
இந்தப் பதிவை பத்திரிக்கைகளில் பிரசுரிக்க முடியுமா பாருங்கள். . எனக்குப் படிக்கும் போது கோபம் வருகிறது.
பதிலளிநீக்குமுயற்சிக்கின்றேன் ஐயா
நீக்குநன்றி
முயல்கிறேன் என்பதே சரி. முயற்சிக்கிறேன் என்பது பிழை.
நீக்கு"குற்றம் கண்டு பிடித்துப் பெயர் வாங்குவதற் கென்றே உள்ள" சிலருள் நானும் ஒருவன். :-)
தமிழக அரசு மட்டுமல்ல இந்த உலகமே ஆள்பவர்கள் எல்லாரும் காமராசரைப் பற்றி அறிய வேண்டும். தமிழக அரசின் கண்களில் கண்டிப்பாக இது பட வேண்டும்.....நாம் நல்ல தலைவர்களின் ஆட்சியில் இருக்க முடியாமல் போய்விட்டதே என்ற ஆதங்கம் வருகின்றது....என்ன செய்ய..
பதிலளிநீக்குவேதனைதான் மிஞ்சுகிறது நண்பரே
நீக்குநன்றி
வேண்டுமென்றே கர்ம வீரரை இருட்டடிப்பு செய்கிறார்களோ ?
பதிலளிநீக்குஅப்படித்தான் எண்ண வேண்டியுள்ளது நண்பரே
நீக்குநன்றி
நீங்கள் எண்ணியது சரி. பெண்பார்க்கும்போது, பெண்கள் பக்கத்தில் அழகானவர்களை இருக்கச் சொல்ல மாட்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபோல், காமராஜர் வாழ்ந்த இடம், அவர் எளிமை இவைகளை மக்கள் மனதில் மீண்டும் மீண்டும் பதியவைத்தால், இப்போதுள்ள அரசியல்வாதிகளின் அவல நிலை பல்லிளிக்கும். அதனால் இருக்கலாம்.
நீக்குசமுதாயத்தைப் புரட்டிப் போட்டவர்களில், பெரியார், காமராஜர், போன்றவர்களுக்குப் பெரும்பங்கு இருக்கிறது. மனிதன் தரம் தான் முக்கியம், இனம், ஜாதி, மதம் முக்கியமல்ல என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்களில் கக்கன், ஜீவா, வ.வு.சி போன்ற பல பெரியார்கள் உண்டு.
உண்மையில் பழமையை அதன் தன்மை மாறாமல் பொக்கிடமாய் பாதுகாப்பதை விட்டு மெருகேற்றி பயனில்லை. அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
பதிலளிநீக்குநன்றி சகோதரியாரே
நீக்குசில நேரங்களில் பெரும் இடங்களில் இப்படி நேர்வதுண்டு
பதிலளிநீக்குஎத்தனை பெரிய (பெரும் தலைவர்) வாழ்ந்த இடத்தில் எத்தனை சிறிய ....
உண்மைதான் நண்பரே
நீக்குஎனக்கு இப்படித்தான் தோன்றுகிறது..
பதிலளிநீக்குதன் தாய்க்கு கழிவறை வசதிக்காக, இடம் வாங்கித் தர க்கூட வேண்டாம் ஒரு பொதுக கழிவறையைக் கூட கட்ட மறுத்தவர், தமிழகத்தின் முதல்வராக இருந்து என்ன பயன்.????
இல்லை நண்பரே தங்களின் கருத்தில் இருந்து மாறுபடுகிறேன்
நீக்குதெருவில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தனித் தனி குடி நீர் இணைப்புகள் வரும் வரை, தன் இல்லத்திற்கு என்று தனி குடி நீர் இணைப்பு வேண்டாம் என்று, அவருக்குத் தெரியாமல் தரப்பட்ட இணைப்பைபும் துண்டித்தவர்தான் காமராசர்.
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எளிமையான வாழ்க்கை நடத்திய தலைவர் காமராஜருக்கு ஆடம்பரமான நினைவிடம் போலிருக்கிறது. போட்டோ எடுக்கக் கூட அனுமதி இல்லை என்பது நகைப்பாக இருக்கிறது. அந்த காப்பாளருக்கு காமராஜர் வாழ்க்கை வரலாறு தெரிந்திருக்குமோ என்னவோ? நீங்கள் சொல்வது போல வேதனையான விஷயம்தான்.
பதிலளிநீக்குத.ம.13
உண்மைதான் ஐயா
நீக்குவேதனைதான் மிஞ்சியது
நன்றி ஐயா
அழகிய புகைப்படங்களுடன் உங்கள் பதிவு இருக்கும்! ஆனால் புகைப்படம் எடுக்க தடுத்துவிட்டார்கள் என்பதும் காப்பாளரின் கடுமையான சொற்களும் உங்கள் மனதை புண்படுத்தியதோடு எங்களையும் நோக வைத்துவிட்டது!
பதிலளிநீக்குஆமாம் நண்பரே
நீக்குநன்றி
சில காப்பாளர்கள் சில நேரங்களில் நாய் போன்றுதான் நடந்துக் கொள்கின்றனர்.
பதிலளிநீக்குவேதனையான ஒன்று!. காமராஜரை நினைத்து மனதை தேற்றிக் கொள்ளவேண்டியதுதான் அய்யா!.
உண்மைதான் ஐயா
நீக்குகல்விக் கண் திறந்த காமராசரை நினைத்து மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்
நன்றி ஐயா
தமிழகம் ஏன் இன்று இவ்வளவு வேதனை நிலையில் உள்ளது ?
பதிலளிநீக்குஇவ்வேதனை தொடரக் கூடாது என்பதே நம் விருப்பம்
நீக்குநன்றி நண்பரே
காமராசரின் இல்லம் இப்படியா என்ற ஆச்சரியம் மேலோங்கி நிற்கிறது. என்ன வேதனை..
பதிலளிநீக்குஎன்ன கொடுமை...
தன்னலமற்ற தலைவரின் நினைவு இல்லமா?
பிறந்த நாள் கொண்டாடும் இத்தருணத்தில் இக்கால அரசியல்வாதிகள்
கையில் சிக்கி தவிக்கிறமு அவரின் இல்லம்.
நெஞ்சம் பதைபதைக்கிறது.
இதை தமிழனுக்கு உணர்த்தியதை கண்டு இந்நிலை வேறு யாருக்கும் வரக்கூடாது.
இனி வரலாற்றில் தொடரக்கூடாது என நல்லதை நினைப்போம்.
இனியாவது உள்ளது உள்ளபடியே காண முடியுமா???
இனியாவது உள்ளது உள்ளபடியே காணமுடியும்
நீக்குஎன்று எதிர்பார்ப்போம் ஐயா
நன்றி
உண்மையில் பதிவு வேதனையைத்தான் தருகிறது அண்ணா! அந்த நினைவு இல்லம் கர்ம வீரரை போற்ற அமைக்கப்பட்டதா? இல்லை அவர் புகழை யாரும் அறியாவண்ணம் போர்த்திவைக்க அமைக்கப்பட்டதா? என்னவோ போங்க! காமராஜரின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என சூளுரைக்கும் காங்கிரஸ்காரர்களும் இதை பற்றி அக்கறை கொள்ளப்போவதில்லை.
பதிலளிநீக்குஉண்மைதான் சகோதரியாரே
நீக்குநன்றி
இன்றைய அரசியலில் அவர் போல ஒருவர் கிடைக்க மாட்டார்
பதிலளிநீக்குநிச்சயமாக ஐயா
நீக்குநன்றி
மிகச்சிறந்த மனிதரைப் பற்றிய நெகிழ்ச்சியான பதிவு
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குபதிவைப் படிக்கும்போது அவமானத்தால் குறுகிப் போனேன்.
பதிலளிநீக்குநாம் எங்கே போகிறோம்?
தவறான பாதையில்
நீக்குவேகமாய் பயணிக்கிறோம் ஐயா
நன்றி
அவர் சொன்னபடி, பதிவினை படிக்கும் போதே கண்கள் கசிவதைத் தடுக்க இயலவில்லை. சிறந்த பதிவு.
பதிலளிநீக்கு-புளோரிடாவில் இருந்து
ஆரூர் பாஸ்கர்
நன்றி நண்பரே
நீக்குஐயா
பதிலளிநீக்குதங்கள் கட்டுரை படித்து ரொம்ப வேதனையாக இருந்தது.
ஒரு மனிதன், காசு சேர்க்காமல் கல்வி கொடுத்து மக்களை வாழ்வித்தவன் அவரது இல்லத்தில் ஒரு முள்செடி.. பேர் இலக்குவனாம்... வெட்கக்கேடு... இவனெல்லாம் இந்த வரவில்லை என்று யார் அடித்தார்கள்... இந்த வேதனை ஒரு பக்கம் இருக்க இப்போது புதிதாய் நம் நாட்டாராய் இருந்த காமராஜரை நாடாராக்கி ஜாதிக்குள் கொண்டு சேர்த்து விட்டார்களே என்ற வேதனை மறுபக்கம்.....
நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்த மாமனிதர்களை
நீக்குஒரு சாதி வளையத்திற்குள் அடைக்கும் கொடுமை
இங்கு மட்டும்தான் சாத்தியம் நண்பரே
நன்றி
காமராஜர் இல்லம் சென்றபோது தாங்கள் பெற்ற அனுபவத்தை நாங்களும் பெற்றோம். வேதனையாக இருந்தது. பொறுப்பானவர்கள் பொறுப்பாக நடந்துகொள்ளும்போதுதான் சமூகம் மேம்பாடு அடையும். இவரைப் போன்ற தலைவர்கள் கிடைக்க நாம் பல்லாண்டுகள் காத்திருக்க வேண்டும்.
பதிலளிநீக்குபல்லாண்டுகள் காத்திருந்தாலும் கிடைக்க இயலாத தலைவர் அல்லவா
நீக்குநன்றி ஐயா
காமராசர் இல்லத்தில் வேதனைமிகு நிமிடங்கள் =
பதிலளிநீக்குகாமராசரின் இல்லத்திற்கு, காமராசரின் அருமையினை, தன்னலமற்ற தொண்டினை அறிந்த, உணர்ந்த, மனிதர் ஒருவரை, காப்பாளராக நியமிக்க வேண்டும் என்பதே, ஒரு முன்னாள் மாணவனாக, இந்நாள் ஆசிரியராக, எந்நாளும் கட்சி வேறுபாடுகளைக் கடந்த, சாதி, மத, இன உணர்வுகளைத் துறந்த இந்த எளியேனின் விருப்பாகும். = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு கரந்தை ஜெயக்குமார்
தங்களின் வருகைக்கும் பகிர்விற்கும் மிக்க நன்றி ஐயா
நீக்குகரந்தையார் அவர்களுக்கு,
பதிலளிநீக்குஅருமையான தகவல்களுடனான அற்புத பதிவு.
இலட்சுமணன் என்றாலே, தன்னலம் துறந்து, தன் உறவுக்காக, தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணிக்கும் உயர்ந்த உள்ளத்தின் பெயர் என்றுதான் இவ்வளவு நாள் எண்ணியிருந்தேன்.
என் எண்ணம் தவறென்று புரிந்தது.
என்று சொல்லும் நீங்கள் அந்த காவலரின் பொறுப்புணர்வையும் கொஞ்சம் பாராட்டலாமே? அவரின் கடமையைத்தானே செய்திருக்கின்றார், காசு வாங்கிக்கொண்டு கடமை தவறாதவறை அவரும் இலட்சுமணனே.
எனினும் விதிகள் தளர்த்தபட்டால் நம் மக்கள் தொட்டுபார்க்க துவங்கி, பின்னர் சுரண்டிபார்க்க முற்பட்டு,அதனால் எஞ்சி இருக்கும் இந்த அறிய பொருட்கள் பின்னர் வரும் சந்ததியினர் அறிய முடியாததாகிபோகவும் வாய்ப்புகள் அதிகம்.
உங்கள் ஆதங்கம் புரிகிறது, வரலாறு தெரிந்த காப்பாளரை நியமிக்கவேண்டும் என்ற உங்கள் வேண்டுகோள் முற்றிலும் சரியே.
நல்ல பதிவு.
நன்றி
கோ
புகைப்படம் எடுக்க அனுமதியில்லை எனில் அவர் அவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொண்டதில் தவறேதும் இல்லை நண்பரே.
நீக்குஆனால் அவரின் பேச்சு , நடத்தை, வீட்டிற்கு வெளியில் நின்று படமெடுக்க முயன்றபோது கூட, காமராசர் சிலை அப்படத்தில விழும் என்று கூறி தடுத்ததைத்தான் ஜீரனிக்க இயலவில்லை நண்பரே
வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே
காரணம் தெரியாத சில நடைமுறைகள் ஒழிக்கப் படவேண்டும்.
பதிலளிநீக்குஉணர்வு பூர்வமானபதிவு
மிக அருமை .மிக்க நன்றி.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஉங்கள் பயணங்களும் அனுபவங்களும் எங்களுக்கு வரம்.
பதிலளிநீக்குஉங்கள் எழுத்தின் சுவை காலம் வென்றது.
கர்மவீரர் இல்லத்தில் இருப்துபோன்ற உணர்வே.
நன்றி.
நன்றி நண்பரே
நீக்குசொல்லி மாளாதே தோழர். நெசத்துக்கும் பெருந்தலைவர் அவர்
பதிலளிநீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குதேடற்கரிய தகவல்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
‘ஊற்று’ இற்கு உச்சரிப்பு ‘OOTRU’ சரியா?
கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் பதிலளிக்கலாம்.
https://ial2.wordpress.com/2015/07/25/70/
வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா
நீக்குஅறிவிலிகள் - வேறென்ன சொல்வது?
பதிலளிநீக்குஒரு அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கான உதாரணம்
Very very nice sir
பதிலளிநீக்கு