07 ஏப்ரல் 2016

டாப் ஸ்டேசன்

   

கடந்த ஆண்டு 2015, மே மாதம் 17ஆம் நாள். டெம்போ டிராவலர் வேன், வளைந்து நெளிந்து, மெல்ல மெல்ல, மலைப் பாதையில் மேலே மேலே ஏறிச் சென்று கொண்டிருக்கிறது.

    இரு புறமும் தேயிலைத் தோட்டங்கள். பிற்பகலிலேயே எங்கும் இருள் சூழ்ந்த தோற்றம். வானில் இருந்து அவ்வப்போது கீழிறங்கும் மழைத் துளிகள்.

      ஆடைகளை ஊடுருவி, உடலைச் சில்லிடச் செய்யும் குளிர்.

     குளிரால் உடல் சில்லிட்டாலும், மனமெங்கும் மகிழ்ச்சி அலை பரவிக் கொண்டே இருக்கிறது. டெம்போ வேன் மெல்ல மெல்ல மேலே மேலே ஏறிக் கொண்டே இருக்கிறது.

      வேனுக்குள் யார் தெரியுமா?

      வேறு யார் நங்கள்தான். நானும் எனது குடும்பமும். எனது நண்பர் திரு க.பால்ராஜ் மற்றும் நண்பரும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி ஆசிரியருமான திரு ஜி.விஜயக்குமாரும் அவர்தம் குடும்பத்தினரும் மேலும் எனது மைத்துனர் மற்றும் மைத்துனி.

      மொத்தம் 11 பேர் மகிழ்வோடு பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

     ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் குடும்பத்தோடும் ,நண்பர்களின் குடும்பத்தோடும் இணைந்து ஓர் சுற்றுலா செல்வது வழக்கம்.

      இம்முறை கொடைக்கானலுக்குச் செல்லத்தான் திட்டமிட்டுக் கிளம்பினோம். ஆனாலும் தஞ்சையில் இருந்து கிளம்பியதில் இருந்தே மழை. கோடை மழை. விடுவதாய் தெரியவில்லை.

      திருச்சியில் மழை. வழியெங்கும் மழை. திண்டுக்கல் வந்த பிறகும் மழை விடுவதாகத் தெரியவில்லை.

      திருச்சியைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது அலைபேசியில் அழைத்த, நண்பரும் உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன் அவர்கள், கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் மலைச் சரிவு ஏற்பட்டுள்ளதாக, தொலைக் காட்சியில் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கவனமாகச் செல்லுங்கள் என்றார்.

      இரவு 12.00 மணியளவில், திண்டுக்கல்லில், ஒரு தேநீர் கடையில் தேநீர் அருந்தினோம்.

     அங்கிருந்தோரை விசாரித்தோம். கொடைக் கானலிலும் கடும் மழையும், பல இடங்களிலும் நிலச் சரிவும் தொடர்வதாகச் சொன்னார்கள்.

    மலை மேல் ஏறி, கடும் மழையில் நனைந்தவாரே ஊர் சுற்றுவது சரிபடுமா என்று யோசித்தோம்.

    வேன் ஓட்டுநர் மூணாறு போகலாமே என்றார். ஒரே நிமிடம்தான். மூணாறு செல்வதென்று முடிவெடுத்தோம்.

     இதோ மூணாற்றின் மலைப் பாதையில் எழில் கொஞ்சும் இயற்கையை ரசித்தவாறு சென்று கொண்டிருக்கிறோம்.

    


டாடா டீ அருங்காட்சியகம், தேவிக் குளம், மாட்டுப் பட்டி அணை, ரோஜா தோட்டம் எனப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தோம்.

      இறுதியாய் மலையின் விளிம்பினை நோக்கி, ஓங்கி உயர்ந்த மலையின் உச்சியை நோக்கிப் பயணித்தோம்.

       பிற்பகல் 1.00 மணி. டேனியல் உணவு விடுதியின் எதிரே வேன் நின்றது. அப்பகுதி எங்கும் வாகனங்கள்.

       இதற்கு மேல் வண்டியில் செல்வதற்குப் பாதை கிடையாது. மதிய உணவினை இந்த உணவு விடுதியிலேயே சாப்பிடுங்கள். ஏனெனில் இப்பகுதியில் இதுதான் கடைசி உணவு விடுதி. நீங்கள் இப்பகுதியைப் பார்த்துத் திரும்ப, எப்படியும் மூன்று மணி நேரமாகும் என்றார் வேன் ஓட்டுநர்.

இதுதான்
டாப் ஸ்டேசன்.

     கடல் மட்டத்தில் இருந்து 1700 மீட்டர் உயரமான மலை இது. அதாவது சுமார் 5500 அடி உயரம்.

     கண்ணன் தேவன் மலையில் உற்பத்தி செய்யப்படும், தேயிலை ,இங்கிருந்துதான், இம்மலை உச்சியில் இருந்துதான், மடுப்பட்டி ரயில்வே ஸ்டேசன் மற்றும் கொட்டகுடி வழியாக, போடி நாயக்கனூருக்கும், அங்கிருந்து இந்தியா முழுமைக்கும், இலண்டனுக்கும் அனுப்பப் பட்டுள்ளது.

        மலை உச்சியில் இருந்து எப்படி அனுப்யி இருப்பார்கள். வியப்பாக இருக்கிறது அல்லவா.

      ரோப் கார் என்று அழைப்போம் அல்லவா? பழனி மலையில் இருக்கிறதல்லவா? அதுபோன்ற ரோப் கார் மூலம் தேயிலையானது அனுப்பப் பட்டு வந்துள்ளது.

       இந்த ரோப் பார் ரயில் நிலையத்தின் மிச்சம், இன்றும் இங்குள்ளதைப் பார்க்கலாம்.

       மிகவும் உயரமான இடத்தில் அமைந்திருந்த ரயில் நிலையம் என்பதால், இவ்விடம் டாப் ஸ்டேசன் என்று அழைக்கப் படலாயிற்று.

       டேனியல் உணவு விடுதியில் மதிய உணவினை சாப்பிட்டுவிட்டு, மெதுவாக நடக்கத் தொடங்கினோம்.

      சில்லிட்ட காற்று இதமாய் வீச, அவ்வப்போது பனித் துளிகளும், சிறு சிறு தூறலாய் வானில் இருந்து கீழிறங்கி, உடலினைத் தழுவ, மெதுவாய் நடந்தோம். வழியெங்கும் சிறு சிறு கடைகள்.

       சுமார் அரை கிலோ மீட்டர் நடந்திருப்போம்.

       இதோ வான் சுரங்கம்.

      

டாப் ஸ்டேசனின் நுழைவு வாயிலை, வான் சுரங்கம் என்றுதான் அழைக்கிறார்கள்.

      இதோ வான் சுரங்கம் என்று அழைக்கப்படும் நுழைவு வாயில். அதன் அருகிலேயே நுழைவுச் சீட்டு வழங்கு மையம்.

     நுழைவுச் சீட்டினைப் பெற்றுக் கொண்டு உள்ளே நுழைந்தோம். கீழ் நோக்கியப் படிக்கட்டுகள். படிக்கட்டுகள் என்று கூறமுடியாது. மலைப் பகுதியானது கீழிறங்க, கீழிறங்க, மலையின் சரிவினை வெட்டி ,வெட்டி படி போன்ற அமைப்பினை ஏற்படுத்தி இருந்தார்கள்.

      குறுகலான படிக்கட்டுகள். கீழிறங்கினோம். திரும்பிய திசையெங்கும் மலைகள். மலைகளைத் தழுவிச் செல்லும் மேகக் கூட்டங்கள்.

      திடீரென்று ஒரே நொடியில், நாட்டினை விட்டு அகன்று, அடர்ந்த கானகத்தில் நுழைந்த உணர்வு.

       அமைதி. அமைதி.

       அமைதி என்றால் அபபடி ஒரு அமைதி. இதுநாள் வரை அனுபவித்திராத ஓர் அமைதி. கூட்டம் கூட்டமாய் படியில் இறங்குபவர்கள், மற்றும் ஏறி வருபவர்களின் பெரு மூச்சு கூட, பெரும் காற்றாய் காதில் வந்து மோதும் ஓசையினைக் கேட்டவாறு இறங்குகிறோம்.

        

பாதி தூரம் படிக்கட்டுக்களில் இறங்கிய நிலையில், மேற்கூரையுடன் கூடிய ஓர் ஓய்வெடுக்கும் இடம். இங்கிருந்து பார்த்தோம், சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலையில், டாப் ஸ்டேசனின் நிறைவுப் பகுதி, மேகக் கூட்டங்களுக்கு இடையில், சின்னஞ்  சிறிதாய் காட்சி அளித்தது.

         என் மனைவியும், நண்பர் திரு விஜயகுமார் அவர்களின் மனைவியும், இனி எங்களால் நடக்க இயலாது, என்று கூறி அங்கேயே அமர்ந்து கொண்டனர்.

     நாங்கள் மெதுவாய், தொடர்ந்து நடக்கத் தொடங்கினோம்.    
நடக்க நடக்க பாதை குறுகலாகிக் கொண்டே சென்றது. அதிக பட்ட அகலமே இருபது அடிதான் இருக்கும்.

    பாதையின் இரு புறமும், 5000 அடி ஆழ கிடு கிடு பள்ளத்தாக்கு.

    மேகக் கூட்டங்கள் எங்களைத் தழுவிச் சென்றன.

     திரும்பும் திசையெங்கும் மலைத் தொடர்கள்.

     ஒரு நிமிடம் நம் கண்ணில் படும் மலைகள், அடுத்த நொடி காணாமல் போகும் அதிசயத்தை இங்குதான் கண்டோம்.

      ஒரு நிமிடம் மலை தெரியும், அடுத்த நிமிடம் மேகக் கூட்டங்களின், வெண் பனி மேகங்கள், முற்றாய் மலையினை மறைத்துவிடும் அதிசயம் கண்ணெதிரே அரங்கேறிக் கொண்டிருந்தது.

      நடந்தோம் நடந்தோம், தொடர்ந்து நடந்தோம். மேகக் கூட்டங்களை, கைகளால் பிடிக்க முயன்றவாறு நடந்தோம்.

       இதோ டாப் ஸ்டேசனின் விளிம்புப் பகுதி.

      நடை பாதை இத்துடன் முற்றாய் முடிந்து விட்டது.

    


சவுக்குக் கழிகளால் ஆன சிறு தடுப்பு அவ்வளவுதான். விளிம்பில் நின்று பார்த்தால், முப்புறமும் பாதாளம்.

      வானின் உச்சியில் நிற்பது போன்ற ஓர் உணர்வு

      உண்மையிலேயே இது வான் சுரங்கம்தான்.

     நண்பர்களே, உலக அளவில் ஆயிரக் கணக்கான கோடிகளை, சில நாட்களிலேயே குவித்த டைடானிக் படம் பார்த்திருப்பீர்கள்.

    

இரவு நேரத்தில், நிலா வெளிச்சத்தில், டைடானிக் கப்பலின் முன் விளிம்பில், காதலர் இருவரும், ஒருவராய் இணைந்து, கைகளை இரு புறமும் நீட்டி, பறவைகள் சிறகு விரித்துப் பறக்கத் தயாராவதைப் போல், நிற்க, கப்பல், காற்றினையும், கடல் அலைகளையும் கிழித்துக் கொண்டு முன்னேறும் அற்புதக் காட்சியினை மறந்திருக்க மாட்டீர்கள்.

       அதே நிலையில், மலையின் விளிம்பில், காற்றும் மேகமும் மலையினை கிழித்தவாறு செல்ல, இருபுறமும் கைகளை நீட்டி நின்றோம்.

       தரையில் இருந்து, மெல்ல மெல்ல மேலெம்பிப் பறப்பதைப் போன்ற ஓர் உணர்வு.

      நண்பர்களே,வாய்ப்புக் கிடைக்கும் பொழுது, அவசியம் மூணாறுக்கு ஒரு முறை சென்று வாருங்கள்.

     இயற்கையின் அழகை, மலைகளின் எழிலை, வானில் இருந்து பூந்தென்றலாய், இருகரம் நீட்டி, கீழிறங்கும் மழையின் அரவணைப்பை, இதமான குளிரை, மேகக் கூட்டங்களின் அன்பான தழுவலை அனுபவித்துத்தான் பாருங்களேன்.

   

52 கருத்துகள்:

 1. நேர்முக வர்ணனையுடன் கூடிய
  சுற்றுலாத் தலத்தின் இனிய அறிமுகம்..

  இந்த இடத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன்..
  ஆயினும் இந்த வர்ணனை அருமை..

  அங்கே சென்று வர எண்ணமுண்டு..

  பார்க்கலாம்.. காலம் கை கொடுக்கும்!..

  பதிலளிநீக்கு
 2. 2005-ல் நானும் எனது மகளும் சென்று வந்தோம் நண்பரே தங்களது வர்ணனையில் நனைந்து மீண்டும் மூணாறு சென்று வந்த உணர்வு பகிர்வுக்கு நன்றி
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
 3. எனக்கும் பறக்க வேண்டும் போலிருக்கிறது ,படங்களைப் பார்க்கையில் :)

  பதிலளிநீக்கு
 4. அற்புதமான அனுபவமாக இருந்திருக்கும். திண்டுக்கல்லில் தனபாலன் அவர்களைப் பார்த்திருக்கலாமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திண்டுக்கல்லை அடையும் பொழுது இரவு 12மணியாகிவிட்டது அதனால் அவரோடு தொடர்வு கொள்ளவில்லை நண்பரே
   நன்றி

   நீக்கு
 5. ஆஹா! இதைப் படித்தபின்னும் டாப் ஸ்டேஷன் போகவில்லை என்றால்...என்னை... :)
  அழகான படங்கள்! ரசனையான பகிர்வு! நன்றி அண்ணா

  பதிலளிநீக்கு
 6. மூணாறு போகும் ஆசையைத்தூண்டும் அருமையான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 7. அருமை. மேகக்கூட்டத்தில் மீன் பிடித்தது சுகமா அன்பரே ??

  பதிலளிநீக்கு
 8. அருமையான பதிவு.1974ல் புதுமண்த் தம்பதிகளாக மூணாரும் தெக்கடியும் சென்று வந்தொம்.மலரும் நினைவுகளாக உங்கள் பதிவு இருந்தது.வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. மிக அருமை.மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 10. நண்பரே புகைப்படங்கள் வழி
  எங்களையும் சுற்றுலாவுக்கு
  கூட்டி சென்றீர்.....
  அருமையான பதிவு நண்பரே....

  தாங்கள் விரும்பினால் எம்
  தளத்தில் கருத்துரை இடுங்கள் நண்பரே....
  http://ajaisunilkarjoseph.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் தளத்திற்கு அவசியம் வருகிறேன்நண்பரே
   நன்றி

   நீக்கு
 11. ஏற்கனவே இங்கு சென்றிருக்கிறேன். தங்கள் பதிவின் மூலம் மீண்டும் ஒருமுறை சென்று வந்தேன். அருமையான பயணப் பதிவு!
  த ம 4

  பதிலளிநீக்கு
 12. இந்த ஆண்டு எங்கு செல்லத்திட்டம்? பெங்களூர் வரலாமே .நான் மூணாறு சென்றதில்லை. உங்கள் வர்ணனை நான் எவ்வளவு மிஸ் செய்திருக்கிறேன் என்பதைக் காட்டுகிறது வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனது மகள் +1 இல் இருந்து இவ்வாண்டு +2 செல்கிறார் ஐயா
   எனவே,அவருக்கு அடுத்த ஆண்டிற்கான வகுப்புகள் இப்பொழுதே தொடங்கி விட்டது .
   ஆகையால் இவ்வாண்டுப் பயணம் சந்தேகம்தான் ஐயா
   அழைப்பிற்கு நன்றி ஐயா

   நீக்கு
 13. மேகங்களுக்கிடையே, மேலே எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மிகவும் அருமையாக உள்ளன. அனைவரும் செல்லவேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கிவிட்டது தங்களது பதிவு. நன்றி.

  பதிலளிநீக்கு
 14. அருமையான வர்ணனை. போய்ப் பார்க்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டுகிறது.

  பதிலளிநீக்கு
 15. வாவ்... அழகான வர்ணனை அங்கு போகணுமின்னு ஆசையை கிளப்பிருச்சு ஐயா....

  பதிலளிநீக்கு
 16. மூணாறு போகும் ஆசையைத்தூண்டும் அருமையான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 17. நடுக்காட்டிலே
  நட்ட நடு இரவிலே
  நடந்து சென்ற பாதை
  நின்று போன அனுபவம்
  பண்ணைக் காட்டுக்குச் சென்ற போது இருந்தது.
  இதுவோ
  வான் வழிச் செல்லும் வீதி
  வாழ்வின் பல
  உண்மைகளைச் சொல்லும் சேதி .

  வர்ணனைகளும் உரிய படங்களும் அருமை.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 18. இது வரை கேள்விப்பட்டதில்லை தெரியவைத்ததிற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 19. இனிமையான இது போன்ற பயணங்கள் இன்னும் அமைந்திட வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 20. மரியாதைக்குரிய ஐயா,வணக்கம்.தங்களது பதிவுகள் ஒவ்வொன்றும் தமிழுக்கு மெருகூட்டுகின்றன.தங்களது தமிழ்ப்பணி தொடர வணங்கி வாழ்த்துகிறேன்.
  அன்பன்,
  C.பரமேஸ்வரன், 9585600733
  அரசுப் பேருந்து ஓட்டுநர்,
  சத்தியமங்கலம்,
  ஈரோடு மாவட்டம்.

  பதிலளிநீக்கு
 21. படித்தால் பயண ஆசை பற்றிக் கொள்கிறது...

  பதிலளிநீக்கு
 22. ஏற்கனவே நாங்கள் சென்றிருக்கின்றோம்...நண்பரே! அருமையான இடம். நிழற் படங்களில் அந்த மேகமூட்டம் முன்னில் நீங்கள் குழுவினர் நிற்பதும், கை விரித்து நிற்பதும் அருமையான படங்கள். மிக அழகான படங்கள். ஏதோ மேக உலகில் இருப்பது போன்ற ஒரு உணர்வைத் தருகிறது. அது வேறு உலகம் போன்ற ஒரு உணர்வையும் தருகிறது. அட்டகாசமான படங்கள் அவை இரண்டும். அழகாக எடுக்கப்பட்டுள்ளன. எடுத்தவருக்குப் பாராட்டுகள்! மீண்டும் இந்த இடத்திற்குத் தங்கள் வர்ணணை மூலம் அழைத்துச் சென்றதற்கு மிக்க நன்றி!!

  பதிலளிநீக்கு
 23. தாங்கும் வசதிகள் எப்படி ...?
  மிக அருமையான பதிவு தோழர்
  தம +

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மூணாறு முழுக்க விடுதிகள் இருக்கின்றன நண்பரே
   விடுதி வாடகை மட்டும் சற்றுக் கூடுதல்

   நீக்கு
 24. Dear KJ,
  A Lively tour. A lovable block. It is very glad to read.

  பதிலளிநீக்கு

 25. மிக நன்று அருமை.

  மிக்க நன்றி சகோதரா
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 26. இனிய நினைவுகள்,,, பார்க்கனும்,,
  புகைப்படங்கள் அருமை,, நாளுக்கு நாள் எழுத்தில் வசீகரிக்க ஆரம்பித்து விட்டீர்கள்,,,
  தொடருங்கள் சகோ,,

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு