14 ஏப்ரல் 2016

வள்ளல்

   
 ஆண்டு 1901.

     நகர் முழுவதும் மகிழ்ச்சி அலை பரவிக் கொண்டிருக்கிறது.

     ஊரெங்கும் ஒரே பேச்சு,

     மன்னர் வந்திருக்கிறார்.

     மக்கள் ஒவ்வொருவரும், மற்றவர்களிடம் இதே செய்தியை மகிழ்வோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.

     மன்னர் நம் ஊருக்கு வந்திருக்கிறார்.

    தொலைவில் நின்றாவது மன்ன திருமுகத்தைப் பார்த்தாக வேண்டும். அவர்தம் காந்தக் குரலினைக் கேட்டாக வேண்டும். மக்கள் ஆசைப் படுகின்றனர்.

      மன்னர்

      சிறந்த கல்விமான்.

      தமிழாய்ந்த பெருமகன்.

      சொற்பொழிவாற்றுவதில் வித்தகர்

     ஊர் பெரியவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து சென்று, மன்னரைப் பார்க்கிறார்கள். ஒரு வேண்டுகோளினையும் முன் வைக்கிறார்கள்.


     தங்களைக் கண்ணாரக் காண வேண்டும், தங்களின் சொற்பொழிவினைக் காதாரக் கேட்க வேண்டும், வாழும் காலம் வரை இதை மனம் குளிர எண்ணி எண்ணி மகிழ வேண்டும் என்று மக்கள் காத்திருக்கின்றனர்.

      மன்னரும் தன் இசைவினைத் தெரிவித்தார்.

      செய்தி நகர் முழுவதும் சூறாவளியாய் இறக்கைக் கட்டிப் பரவுகிறது.

      இன்னும் இரண்டு நாளில், மன்னர் சொற்பொழிவாற்ற இருக்கிறார். நகரே ஒன்று திரண்டாக வேண்டும்.
---

      மாளிகையில், தன் அறையில், மன்னர் உலாவிக் கொண்டிருக்கிறார். மனதிற்குள்ளாகவே சொற்பொழிவிற்கானச் செய்திகளை, ஒவ்வொன்றாய் அடுக்கிக் கொண்டே இருக்கிறார்.

      சில நிமிடங்கள் கடந்த நிலையில், மன்னரின் முகத்தில் ஓர் சிந்தனை, வந்து அமர்ந்ததை முகம் தெளிவாய் காட்டுகிறது.

      யாரங்கே

      பணியாளரை அழைக்கிறார்.

      அடுத்த நொடி பணியாளர், பணிவுடன் வந்து நிற்கிறார்.

      மேசையில் இருந்து ஒரு துண்டுத் தாளினை எடுத்து, இரு வரிகளை எழுதுகிறார்.

      இந்த இரண்டு புத்தகங்களும் எனக்கு இப்பொழுதே வேண்டும். இவ்வூர் பெருமக்கள் யாரிடமிருந்தாவது, உடனே வாங்கி வாருங்கள்.

      மாளிகையில் இருந்து பணியாளர்கள் பலர், நகரின் நாலா திசைகளிலும் பிரிந்து சென்றனர்.

      அன்று மாலையே பணியாளரை அழைத்தார் மன்னர்.

மன்னிக்க வேண்டும் மன்னா, தாங்கள் வேண்டிய இரு புத்தகங்களும், இதுவரை கிடைக்கவில்லை. இன்னும் சிலரைப் பார்க்க வேண்டியிருக்கிறது. எப்படியும் நாளை கிடைத்து விடும்.

    மன்னரின் விழிகள் வியப்பால் விரிகின்றன.

    சரி, நாளை எப்படியும் வாங்கி வாருங்கள்.

    மறுநாள் மாலை, பணியாளர், மன்னர் முன் தலை குனிந்து நிற்கிறார்.

    மன்னிக்க வேண்டும் மன்னா, இவ்வூரில் உள்ள படித்தவர்கள் அனைவரிடமும் விசாரித்து விட்டோம். யாரிடமும் தாங்கள் கேட்ட புத்தகம் இல்லை.

என்ன, என்ன யாரிடமும் இல்லையா?

    நேற்று வியப்பை வெளிப்படுத்திய விழிகள் ,இன்று வேதனைச் சிந்துகின்றன.

   


நாளை, நான் நிகழ்த்த இருக்கினற சொற்பொழிவின்போது, மேற்கோள்களைக் காட்டிப் பேச, புத்தகங்களைக் கேட்டால், படித்தவர்கள் அனைவரும் இல்லை என்கிறார்களே,

    தமிழின் நிலை இப்படியா தாழ்ந்து போக வேண்டும்

    தமிழன் பிற மொழி மோகத்தில், இப்படியா வீழ்ந்து போக வேண்டும்

    வேதனை, வேதனை

    சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த, இந் நகரில் வள்ளுவரையும், கம்பரையும் படிப்பார் யாருமில்லையா? வெட்கம், வெட்கம்

    மன்னரின் உள்ளம் வேதனையில் குமுறுகிறது.

     தாயே, அன்னைத் தமிழே, உலகின் முதல் மொழியே, உனக்கா இந்நிலை.

     ஐயகோ, என் செய்வேன்.

    மன்னருக்கு வேதனையில் நெஞ்சம் வெடித்துவிடும் போலிருந்தது. மெதுவாய் இருக்கையில் அமர்கிறார்.

     முகத்தில் சிந்தனை ரேகைகள் வெகுவேகமாய் பரவுகின்றன.

     ஏதாவது செய்தாக வேண்டும்

     இந்த இழிநிலையைப் போக்கியாக வேண்டும்.

     மின்னலாய் வெட்டுகிறது ஓர் எண்ணம்.

    அடுத்த நொடி, மன்னரின் முகம் மெதுவாய் மலர்கிறது.

    இருக்கையை விட்டு வேகமாய் எழுகிறார்.

    யாரங்கே

---

     நண்பர்களே, ஒரு நகர் முழுவதும் சல்லடை போட்டுச் சலித்தும், திருக்குறளும், கம்பராமாயணமும், ஒரு பிரதி கூடக் கிடைக்கவில்லை, கிடைக்கவே இல்லை என்பது வியப்பைத் தருகிறது அல்லவா.

    ஆயினும் உண்மை.

    நூறாண்டுகளுக்கு முன் நம் நாட்டின் உண்மை நிலை இதுதான்.

    மன்னர் திருக்குறளையும், கம்பராமாயணத்தையும் வலை வீசித் தேடிய நகரம் எது தெரியுமா?

   சொன்னால் நம்ப மாட்டீர்கள்.

   சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த நகரம்.


ம து ரை.

   என்ன? ,எனன? மதுரையிலா திருக்குறளும், கம்பராமாயணமும் கிடைக்கவில்லை.

     ஆம், மதுரையில்தான் கிடைக்கவில்லை.

     உண்மை.

     வரலாற்றின் பக்கங்களில் பதிவு செய்யப் பெற்ற உண்மை.

     மன்னர் மட்டும் மதுரைக்கு வராமல் இருந்திருப்பாரேயானால்?

     வள்ளுவரையும் ,கம்பரையும் தேடாமல் இருந்திருப்பாரேயானால்?

     நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது.

     நம்மைப் போலவே நெஞ்சம் நடுங்கிய மன்னர், அன்று என்ன செய்தார் தெரியுமா?

     சங்கம் ஒன்றைத் தோற்றுவித்தார்.

     தமிழ்ச் சங்கம் ஒன்றினைத் தோற்றுவித்தார்.

    முதல், இடை, கடைச் சங்கங்களுக்குப் பின், அடுத்த நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்தார்.

1901 ஆம் ஆண்டு செப்டம்பர் 14.

மதுரைத் தமிழ்ச் சங்கம்
தோற்றம் பெற்றது.

தமிழ் எழுச்சி பெற்றது.

தமிழ் முழக்கம் வளர்ச்சி பெற்றது

தமிழகத்தின் மூலை, முடுக்குகளில் எல்லாம்
தமிழ் உணர்வு கிளர்ச்சி பெற்று எழுந்தது.

இம்மன்னர் யார் தெரியுமா?

தாம்வேறு, தமிழ்வேறு என்று எண்ணாது தமிழின்றி
தான் இல்லை என நினைந்து தமிழ்த்
தொண்டாற்றுவதே தனது வாழ்நாட் கடமை
என்றுஎண்ணி செயல்பட்ட
இம்மன்னர் யார் தெரியுமா?
இவர்தான்


தமிழை, தமிழ் உணர்வை மீட்டெடுத்த
இம் மன்னர்
இராமநாதபுர அரசர்

வள்ளல் பாண்டித்துரை தேவர்
வள்ளல் பாண்டித்துரை தேவர்
பிறந்த
150 வது ஆண்டு இவ்வாண்டு.

வள்ளலின் நினைவினைப் போற்றுவோம்
வள்ளல் காட்டிய வழி நடப்போம்.