20 ஏப்ரல் 2016

காளையார் கோயில்



ஆண்டு 1772. ஜுன் மாதம் 26 ஆம் நாள்.

         காளையார் கோயில். காளேசன் ஆலயம்.

         அதிகாலை நேரம். பட்டு வேட்டி பளபளக்க மன்னர். அருகிலேயே இளைய ராணி. கோயிலுக்கு வெளியே, கட்டுக்கு அடங்காத கூட்டம். இறைவனைத் தரிசிக்க வந்திருக்கும், மன்னரைத் தரிசிக்க.

     இறைவனுக்கு கற்பூர ஆராதனை காட்டப் படுகிறது. மன்னர் இரு கரம் குவித்து, கண்களை மூடி, ஆண்டவனை மனதார வணங்கிக் கொண்டிருக்கிறார்.

     திடீரென்று ஆலயத்திற்கு வெளியில், ஓர் பலத்த வெடிச் சத்தம். மக்களின் கூக்குரல். துப்பாக்கிக் குண்டுகளின் தொடர் முழக்கம்.

     விழி மூடி, இறைவனை மனதார வணங்கிக் கொண்டிருந்த மன்னரின் கண்கள், வியப்புடன் வாயிலை நோக்குகின்றன. இறைவனை நோக்கிக் குவிந்திருந்த கரங்கள் கீழிறங்குகின்றன. வலது கை, இடையில் இருந்த வாளை உருவுகிறது.

     உருவிய வாளுடன், நெஞ்சம் நிமிர்த்தி, சிங்கம் போல், கோயிலுக்கு வெளியே வருகிறார் மன்னர். அவரைப் பின் தொடர்ந்து இளையராணியும் வருகிறார்.

     கோயிலுக்கு வெளியே, ஆங்கிலேயர்களின் வெறிக் கூட்ட்ம் ஒன்று, பொது மக்களை, காக்கைக் குருவிகளைச் சுடுவது போல், சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறது.

     மன்னர் உருவிய வாளுடன், வேங்கையென, வெள்ளையரை நோக்கிப் பாய்கிறார். மன்னரின் வாள் சுழன்ற திசையெல்லாம், ஆங்கிலேயர்களின் தலைகள் அறுபட்டு, தரையில் விழுந்து உருண்டோடுகின்றன. மன்னரின் மெய்க் காவல் படையினர் ஒரு பக்கம் சுழன்று, சுழன்று தாக்க, காளையார் கோயில் மக்களும், கையில் கிடைத்த பொருள்களை எல்லாம் எடுத்து, ஆங்கிலேயர்களைத் தாக்கத் தொடங்கினர்.

     நேரே நின்று போராடி, மன்னரை வீழ்த்த முடியாது என்பது மெல்ல மெல்ல உறைக்கிறது, அந்த ஆங்கிலேயத் தளபதி பான் ஜோருக்கு.

       மெல்ல மெல்ல பின்வாங்கி, யாரும் அறியா வண்ணம் ஒரு பெரும் மரத்தின் பின் மறைகிறான். மரத்தின் பின் ஒளிந்தபடியே, திருட்டுத்தனமாய், துப்பாக்கியை நீட்டி, மன்னரைக் குறி பார்க்கிறான். ஆள் காட்டி விரல், விசையினை அழுத்துகிறது. அடுத்த நொடி, துப்பாக்கியில் இருந்து, குண்டு சீறிப் பாய்கிறது.

     வீரப் போரிடும் மன்னரைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த இளைய ராணி, அப்பொழுதுதான் கவனித்தார்.

மரத்தின் பின்னால் இருந்து, ஒரு துப்பாக்கி,

மன்னரையல்லவா குறி பார்க்கிறது.

மன்னா...

    ஒரு நொடி, ஒரே ஒரு நொடி கூட, தாமதிக்காமல், துப்பாக்கியில் இருந்து, புறப்பட்ட குண்டு, மன்னரைத் தொடும் முன், பாய்ந்து சென்று, மன்னரை மார்போடு கட்டித் தழுவுகிறார். சீறி வந்த குண்டு, இளைய ராணியின் முதுகைத் துளையிட, மன்னரைத் தழுவியபடியே, சரிகிறார்.

      மன்னரைக் காப்பாற்றி விட்டோம், காப்பாற்றி விட்டோம், அது போதும் என்ற நிம்மதி கண்களில் தெரிய, மெல்ல மெல்ல சரிகிறார்.

கவுரி....

      மன்னர் இளைய ராணியைத் தாங்கிப் பிடிக்கிறார். கோபத்தில் சிவந்திருந்த கண்கள், குண்டு வந்த திசையினைத் தேடுகின்றன.

      பான் ஜோரின் துப்பாக்கியில் இருந்து, சீறி வந்த மற்றொரு குண்டு, மன்னரின் மார்பைத் துளைக்கிறது.

     மன்னரும், இளைய ராணியும், ஒருவரை ஒருவர் தழுவிய படியே, மண்ணில் சாய்கின்றனர். இருவரின் இரத்தமும, ஒன்றிணைந்து, கோயிலின் திசையில் இறைவனைத் தேடி ஓடுகிறது.

     இந்திய வரலாற்றில், ஆங்கிலேயர்களை வீறு கொண்டு எதிர்த்து, களம் கண்டு போரிட்டு, மரணத்தைத் தழுவிய  முதல் மன்னர் இவர்தான்.


சிவகங்கைச் சீமையின்
மன்னர்
முத்து வடுக நாதர்.

------

      

சித்திரைத் திங்கள் முதல் நாள்.

      ஏப்ரல் திங்கள் 14 ஆம் நாள் வியாழக் கிழமை.

      மன்னர் முத்து வடுக நாதர் மற்றும் இளைய ராணி கௌரி நாச்சியார்,  குருதி வழிந்தோடிய மண்ணில், குருதி வழிந்தோடி, பூமியை நனைத்த அதே இடத்தில், மெய்சிலிர்க்க நின்றோம்.

      நண்பர்கள் திரு வெ.சரவணன், திரு க.பால்ராஜ், திரு பி.சேகர், திரு பா.கண்ணன் மற்றும் நான் என ஐவர், குருதி வழிந்தோடிய தடம் தெரிகிறதா? என தரையினைப் பார்த்தவாறே பேச்சின்றி நின்றோம்.

     அப்பழுக்கற்ற வீரம்

      தன்னலமறியா தியாகம்

     சுதந்திரத் தாகம்.

     எந்த மரத்தின் பின் ஒளிந்து நின்று, நயவஞ்சகமாய் மன்னரைக் கொன்றிருப்பான், அந்த ஆங்கிலேயத் தளபதி என நாற்புறமும் பார்த்தோம்.

     கால ஓட்டத்தில் அந்த மரம் கரைந்து போயிருக்க வேண்டும்.

    எங்கு பார்த்தாலும் கடைகள், கட்டிடங்கள், தார்ச் சாலைகள்.

    மன்னரின் மூச்சு நின்ற இடத்தில், எங்களின் மூச்சு, வெகு வேகமாய் வெளி வந்து உள்ளே போகிறது.

      மனக் கண்ணில், மன்னர் வீரப் போர் புரிந்த காட்சி, திரைப் படம் போல் ஓடிக் கொண்டே இருக்கிறது.

       பல நிமிடங்கள் கடந்த நிலையில், மெதுவாய் இயல்பு நிலைக்குத் திரும்பி, அருகில் இருந்த கடைக்குச் சென்று, கடைக்காரரிடம் கேட்டோம்,

       மன்னரின் சமாதி எங்கிருக்கிறது?

    கோயிலுக்கு நேர் எதிரே செல்லும் சாலையில் சென்று, வலது புறம் திரும்பிச் செல்லுங்கள் என்றார்.

     மண்ணைக் காக்க உயிர் துறந்த, வீர மன்னரின் உடல், மண்ணுக்குள் உறங்கும் இடம் தேடிச் சென்றோம்.

    சில நிமிடப் பயணம்தான்.

    இதோ, மன்னர் முத்து வடுகநாதர், கௌரி நாச்சியார் மீளாத் துயில் கொள்ளும் புனித இடம்.

      மன்னரின் சமாதியை நெருங்க நெருங்க, ஓர் துற் நாற்றம் வேகமாய் காற்றில் கலந்து, பறந்து வந்து மூக்கை பிடிக்க வைத்தது.

     திகைத்துத்தான் போய்விட்டோம்.

    மன்னா, மண்ணின் மானம் காக்க, உயிர் துறந்த மன்னா, உனக்கா இந்த நிலை.

     






தன் உடலின் குருதி அனைத்தும் மண்ணில் பரவ, வீர மரணம் எய்திய
மன்னர் முத்துவடுக நாதர்
கல்லறையின் முன்
கழிவு நீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடும் காட்சி
கண்டு துடித்துத்தான் போய்விட்டோம்.

     மன்னா, உனக்கா இந்த இழி நிலை.

     நண்பர்களே, சுதந்திர தாகம் கொண்டு, உயிர் நீத்த முதல் மன்னரின் கல்லறை, போற்றுவார் இன்றியும், புரப்பார் இன்றியும் சொடி கொடிகள் மண்டிக் கிடக்கும் காட்சி இதயத்தைப் பிளப்பதாக இருக்கிறது.


      நமக்காக வாழ்ந்த, நமக்காகப் போராடிய, நமக்காக வீர மரணம் எய்திய தன்னலமற்ற மன்னருக்கு, நாம் காட்டும் நன்றிக் கடன் இதுதானா?

40 கருத்துகள்:

  1. >>> நமக்காக வாழ்ந்த, நமக்காகப் போராடிய, நமக்காக வீர மரணம் எய்திய தன்னலமற்ற மன்னருக்கு, நாம் காட்டும் நன்றிக் கடன் இதுதானா?...<<<

    பதிவின் கடைசியில் படங்கள் அதிர்ச்சியடையச் செய்து விட்டன..

    தமிழர்கள் அல்லவா!.. தருக்கித் திரிவதற்கே நேரம் போதாது!..

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் நண்பரே தியாகிகளை நம்நாடு மறப்பதில் முதலிடம் பெற்று வருகின்றது வேதனைக்குறியதுதான் தங்களது எழுத்தில் மீண்டுமொரு முறை அறிந்தேன் மன்னர் முத்து வடுகநாதரைப்பற்றி...
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  3. அதிர்ச்சி அளித்தாலும் தமிழ்நாட்டில் இப்படித்தானே நடக்கும் என்னும் ஆற்றாமையும் பொங்குகிறது. இதைப் பார்த்த பின்னராவது கொஞ்சம் சுத்தம் என்பதைக் கடைப்பிடிக்க வேண்டும். அருமையான பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. கொடுமை! கொடுமை!இதைவிட வேறு எதுவுமில்லை!

    பதிலளிநீக்கு
  5. வருத்தமாயிருக்கிறது நண்பரே..வரளாற்றுச்சுவடுகளில் வீரம்,தியாகம்,என பல இடங்கள் இருக்கிறது காளையார் கோவிலுக்கு...அதன் ரதத்தின் கதை உணர்ச்சிமயமானது..பராமரித்தல் சரியில்லை என்பது நம் சாபக்கேடு..தான்.

    பதிலளிநீக்கு
  6. அற்புத பதிவு.சித்திரை திங்கள் முதல்நாள் தங்களுடன் பயணிக்க முடியவில்லையே என்ற மனநெருடலுடன் இருந்தேன் அது இன்று கட்டுரையின் வாயிலாக நிரைவேறியது மிக்க மகிழ்ச்சி.ஆனால் நம் முன்னோரின் பெருமையை தியாகத்தை நாம் மறக்கும்போது மனம் வலிக்கிறது இதன் போக்கு சுயநலம் பெருகிவிட்டதயே காட்டுகிறது.உலகம் உள்ளவரை மன்னரின் புகழ் மறையாது.மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. கஷ்டமாகத்தான் இருக்கிறது!

    தம +1

    பதிலளிநீக்கு
  8. தியாகிகளை மறப்பது சுலபமான
    ஒன்று நம் மக்களுக்கு...
    பட்டம்தான் கண்ணுக்கு தெரியும்
    அதை ஏற்றி விட்ட நூல்
    தெரியாது என்பர்....
    ஆனால் நம் மக்களுக்கு அந்த
    பட்டம் கூட தெரியாது...

    அது போல தான் இந்த
    தியாகியும் தெரியவில்லை...
    தியாகமும் தெரியவில்லை...

    பதிலளிநீக்கு
  9. அருமையான பதிவு நண்பரே!
    நாம் நமது வரலாற்றை நம் மக்களுக்கு சொல்லாததால் வந்த சிக்கல் இது. இன்னும் மெக்காலே எழுதிய ஆங்கிலேயருக்கு சாதகமான வரலாற்றைத்தான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறோம். சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகளைக் கடந்தும் நமகேற்ற வரலாற்றை நம்மால் கொண்டுவர முடியவில்லை. பின் எப்படி நமக்காக உயிர்விட்ட தியாகிகளைப் பற்றி தெரியும்.
    த ம +1

    பதிலளிநீக்கு
  10. நாம் தூக்கி வைத்து கொண்டாட மறந்து போன எத்தனையோ விஷயங்களில் இதுவும் ஒன்றாகவே/

    பதிலளிநீக்கு
  11. உங்களின் ஆதங்கம் மிகவும் நியாயமானதே !மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை உடன் எடுக்கவேண்டும் !

    பதிலளிநீக்கு
  12. மனதைத் தொடும் வர்ணனை. ராஐராஐ சோழனின் சமாதியின் நிலமையும் இதுபோலதான் என அறிந்தேன். முடிந்தால் பார்த்துவிட்டுச் சொல்லவும்.

    பதிலளிநீக்கு
  13. பதிவின் கடைசியில் படங்கள் அதிர்ச்சியடையச் செய்து விட்டன..

    பதிலளிநீக்கு
  14. பல நல்ல உள்ளங்கள் தம் உயிரையே தியாகம் செய்து பெற்ற சுதந்திர நாடு இன்று இருக்கும் நிலை!

    பதிலளிநீக்கு
  15. காளையார் கோயில் சென்றுள்ளேன். ஆனால் நீங்கள் கூறிய இடங்களைப் பார்க்கவில்லை. அந்தத் தியாகபூமிக்கு அவசியம் ஒருமுறை செல்வேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  16. காளையார் கோயில் தகவலும்
    மன்னர் முத்து வடுக நாதர் வரலாறும்
    மறக்க இயலாத ஒன்று!

    உங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்!
    http://www.ypvnpubs.com/2016/04/blog-post_18.html

    பதிலளிநீக்கு
  17. நாம் கொண்டாட வேண்டிய வரலாறுகளில் பல மறந்து நம் தலைமுறைக்கே தெரியாமல் இருந்தவை அடுத்த தலைமுறைக்கு எப்படித் தெரியும்...இப்போது உங்கள் பதிவு மூலம் தெரிந்து கொண்டோம். பதிய வேண்டியது அப்போதுதான் அடுத்த தலைமுறையும் வாசித்துத் தெரிந்து கொள்ளும். அருமையான பதிவு நண்பரே!/சகோ

    பதிலளிநீக்கு
  18. வரலாற்று நினைவுகளை வலைப்பதிவில் படம் பிடித்துக் காட்டுவதில் வல்லவர் நீங்கள்.

    பதிலளிநீக்கு
  19. எழுத்துக்கள் உணர்த்த முடியாததைப் பதிவின் படங்கள் தெரிவிக்கின்றன.

    பதிலளிநீக்கு
  20. எத்தனை மகத்தான மனிதருக்கு இன்று கைமாறு தூர்நாற்றம்தானா?? மனசு இறுதிப்பகுதியில் கவலையுற்றது!

    பதிலளிநீக்கு
  21. உண்மைதான் நண்பரே தியாகிகளை மறப்பதில் நம் மக்களுக்கு முதலிடம் தர வேண்டும்

    பதிலளிநீக்கு
  22. உண்மைதான் நண்பரே தியாகிகளை மறப்பதில் நம் மக்களுக்கு முதலிடம் தர வேண்டும்

    பதிலளிநீக்கு
  23. மன்னர் முத்துவடுக நாதர், கெளரி நாச்சியார் தியாகம் பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன். இவர்களின் சமாதி இன்றிருக்கும் நிலை பற்றியறிய வேதனை தான் மிஞ்சியது. வரலாற்றுச் சிறப்புப் பெற்ற இடங்களைச் சுற்றி வேலி போட்டாவது பேணிக்காக்க வேண்டியது நம் அரசின் தலையாயக் கடமையல்லவா? நம் மக்களுக்கும் இது பற்றிய விழிப்புணர்வு என்று வருமோ தெரியவில்லை. நல்லதொரு பதிவுக்கு சகோதரருக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  24. வெள்ளையர்களை எதிர்த்து உயிர் நீத்த உத்தமர்கள் இராணியும், முத்துவடுகநாதர் மன்னனின் தியாகத்தையும் படிக்கையில் வருங்காலத்தில் தமிழகத்தை ஆளப்போகும் நடிகர்களுக்கு கொடி பிடிக்கும் கூட்டத்திற்காக தங்கள் உயிரை ஈந்தார்கள் என்று மனம் சொல்லொண்ணா வருத்தம் கொள்கிறது! காளையார் கோவிலில் பல நடிகர்களுக்கு மன்றம் இருக்கும் அவ்வளவு ஏன் இப்போது தமிழகத்தின் அடுத்த முதல்வராக அறிவிக்கப்பட்டிருக்கும் தெளிவாக நாலு வார்த்தை பேச இயலாத நடிகர் கட்சியினருக்கு கட்சி அலுவலகமே இருக்க வேண்டும். தங்கள் ஊரின் தியாகளின் சமாதியை சுத்தமாக வைத்துக்கொள்ளத் தெரியாதா இவர்களுக்கு?சொந்த ஊரே இப்படி இருக்கும் போது தமிழ்நாட்டை எப்படி மேன்மை நிலைக்கு கொண்டு வருவார்கள். கடந்த 47 வருடங்களாக தமிழகத்தில் மட்டும் இதே நிலைதான் இதை எண்ணி சோகிக்கத்தான் முடிகிறது. மற்றொன்று கட்டுரை ஆரம்பத்தில் கோவிலின் கோபுரங்கள் கருப்பு வெள்ளையில் எவ்வளவு வசீகரமாக உள்ளது...இப்போது உள்ள வண்ணப்பூச்சில் அந்த வசீகரிக்கும் கலை இல்லையே...கலையறிவு, சுற்றுப்புற தூய்மை, நிர்வாகத்திறமை, கண்ணியம் இவைகள் தமிழகத்திலிருந்து காணாமல் போய் வெகு ஆண்டுகள் ஆகின்றன!
    மிகுந்த வருத்தத்துடன்,
    மும்பை இரா. சரவணன்

    பதிலளிநீக்கு
  25. காளையார் கோயில். காளேசன் ஆலயம் பழைய படம் மிக அழகு.

    முத்துவடுகநாதர் சமாதி பார்த்தது இல்லை.
    நாட்டுக்கு உழைத்த மன்னரின் இருப்பிடத்தை சுத்தமாக பராமரிக்கவில்லை என்பதை பார்க்கும் போது வருத்தமாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் கரந்தை மைந்தா !

    வீரனின் கல்லறை
    விளக்கின்றி இருப்பது எல்லா இடத்தும் உண்டு
    ஆனாலும் முதலில் வீரமரணம் அடைந்த மன்னன் சமாதி
    இவ்வாறு இருப்பது அவர் தியாகத்தைக் கொச்சைப் படுத்தும் செயல் உரியவர்கள் கவனம் செலுத்தட்டும் !

    பதிலளிநீக்கு
  27. உங்களைப் போலவே அந்த இடத்தில் நானும் நெக்குருகி நின்றேன் பல வருடங்களுக்குமுன். நாடு காத்த மன்னனின் கல்லறையைக் கூட பராமரிக்க இயலாத நிலை மிக துரதிர்ஷ்டமானது.

    பதிலளிநீக்கு
  28. நன்றி நண்பரே !
    அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்று செய்தி !

    தாங்கள் தெரிவித்த விதமும் புகைப்படங்களும் அருமை !

    Sithayan Sivakumar, Madurai-7

    பதிலளிநீக்கு
  29. சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம் என்ன என்பதை அறியாத அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் வாழும் தற்காலச் சூழலில் தியாகிகளின் நினைவிடங்கள் இப்படிச் சீரழிந்து கிடப்பதில் வியப்பில்லை.

    பதிலளிநீக்கு
  30. சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகம் என்ன என்பதை அறியாத அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் வாழும் தற்காலச் சூழலில் தியாகிகளின் நினைவிடங்கள் இப்படிச் சீரழிந்து கிடப்பதில் வியப்பில்லை.

    பதிலளிநீக்கு
  31. மும்பை சரவணன் கருத்தை வழிமொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  32. மும்பை சரவணன் கருத்தை வழிமொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  33. வர்ணனை அருமை. இறுதியில் வேதனை

    பதிலளிநீக்கு
  34. ஒரு காட்சி,ஒரு நிகழ்வு பார்ப்பவர்கள் மனதில் பலவிதமான உண்ர்வுகளைத் ற்றுவிக்கின்ற்ன.அதை எழுத்தில் கொண்டுவருவது ஒரு கலை.தங்கள்து விள்க்கம் அற்புதம்.

    பதிலளிநீக்கு
  35. ஆஹா முன்பு வேலுநாச்சியார் பதிவு,, இப்போ நேரிலே சென்றுவிட்டீர்களா?? சமாதியாவது கொஞ்சம் இருக்கே,, நாம் இப்படித் தான்,,

    பதிலளிநீக்கு
  36. நல்ல தகவல் சகோதரா.
    மிக்க நன்றி
    மகளிடம் இலண்டனுக்குச் சென்று வந்ததால் கருத்திடத் தாமதம்.
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  37. வருத்தமான விஷயம்... ஏதோ வருடம் ஒருமுறை சுத்தம் செய்து நினைவு நாள் கொண்டாடி வருகிறார்கள்... அந்தளவில் சந்தோஷமே.

    பதிலளிநீக்கு
  38. நாட்டுக்காக நமது மக்களுக்காக உயிரையே தியாகம் செய்தவர்களுக்கு சிறிது நேரம் சிறிது பணம் செலவழிக்க முடியாதவர்களை நினைக்கும்போது நெஞ்சம் கொதிக்கிறது......உடுவை

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு