14 செப்டம்பர் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 8

           

 எனது தாத்தா குடும்பத்தினர், சிறு வயது முதலே என் நலனில், அதிக அக்கறை கொண்டு உதவி வருபவர்கள். அவர்கள் மட்டும் என்னைக் கைத் தூக்கி விடாமல் இருந்திருப்பார்களேயானால், நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது.


     என் ஆசை தாத்தா, என் மேல் பாச மழை பொழிந்த தாத்தா, இன்று இல்லை. அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு, நெய் பந்தம் பிடிக்கக் கூட வழியில்லாமல் போய்விட்டதே.

      மனம் கலங்கியவாறு அமர்ந்தேன்.

      எனது தாத்தாவினை நினைக்க நினைக்க அழுகை பீறிட்டுக் கிளம்பியது. எவ்வளவு நேரம் அழுதிருப்பேன் என்று தெரியவில்லை.

       அழுதேன், அழுதேன் அன்றிரவு முழுவதும் அழுதேன்.
---
    

சில நாட்கள் கடந்த நிலையில், ஒரு வழியாக எனது பாடங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.

      நியூயார்க்கில் நான் கவனித்த சில செய்திகளை, சில நடைமுறைகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

        அமெரிக்க மக்கள், பெண்கள் தொடர்பான நடைமுறைகளில், நம்மைவிட முற்போக்கான சிந்தனை உடையவர்கள். ஒரு முறை என்னுடைய தொலைபேசி இணைப்பில், இன்னொரு இணைப்பின் குறுக்கீடு வருவதை அறிந்து, அதனைச் சரி செய்ய புகார் செய்திருந்தேன்.

      தொலை பேசி இணைப்பைச் சரிசெய்ய லைன் மேனை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால் வந்தது லைன் மேன் அல்ல, லைன் உமன்.

     நமது ஆணாதிக்க சமுதாயத்தில் பெண்கள் பலாத்காரத்திற்கு உட்படும் பொழுது, அதற்குக் காரணமான ஆண்களை விட்டு விட்டு, பாதிக்கப் பட்டப் பெண்களையே, தவறாகப் பேசுவோம். ஆனால் இதற்கு மாறாக பெண்ணுரிமைப் பாதுகாப்பில், அமெரிக்காவின் சட்ட அமைப்பு, உலகமே வியக்கும் வகையில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

    எந்தவொரு செயலானாலும், அதற்கு உரியவரைப் பாராட்டும் உயரியப் பண்பைப் பெற்றவர்கள் அமெரிக்கர்கள்.

      ஒரு பேரூந்தில் பயணம் செய்தால்கூட, பயணத்தின் நிறைவில், ஓட்டுநரையோ அல்லது நடத்துநரையோ பார்த்து, மகம் மலர நன்றி கூறிவிட்டுத்தான் பேருந்தில் இருந்து இறங்குவார்கள்.

     அமெரிக்கா என்றாலே, நமக்கு என்ன நினைவிற்கு வரும். வானுயர்ந்த கட்டிடங்கள், பறவைகள் போல் பறக்கும் விமானங்கள், கணினி மயமான நிர்வாகம் இவைதானே நினைவிற்கு வரும்.

        ஆனால் அமெரிக்காவிற்கு, இன்னொரு முகம் இருப்பதையும் சில மாதங்களிலேயே தெரிந்து கொண்டேன். அதிலும் நியூயார்க்கிற்கு என்றே சில தனித் தன்மைகள் உண்டு.

     அமெரிக்காவின் பிற பகுதிகளில் இருந்து வரும், அமெரிக்கர்களுக்கே, நியூயார்க்கின் தனித் தன்மை வியப்பளிக்கும் என்றால், என் நிலையினை நினைத்துப் பாருங்கள்.

     ஒரு நாள் பல்கலைக் கழக மின்னஞ்சல் வழி, ஓர் அழைப்பு வந்தது.

     அடுத்த வாரம் வெள்ளிக் கிழமை, மாலை 6.00 மணி அளவில், எனது சமூகவியல் துறையின், அந்த ஆண்டிற்கான, முதல் கூட்டம் நடைபெறும். அனைவரும் வருக, வருக என்று அழைத்தது அந்த மின்னஞ்சல் அழைப்பு.

      முதல் கூட்டம் என்றால் என்ன, எதற்கு என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

       முதல் கூட்டம் எதற்குத் தெரியுமா?

குடிக்க …….  குடிக்க ……..  குடிக்க………..

                                                 தொடர்ந்து பேசுவேன்