27 செப்டம்பர் 2016

புதிய கல்விக் கொள்கை - சில கருத்துக்கள்




கடந்த 22 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றி வருபவன் நான். இன்றைய பள்ளிக் கல்வி முறையானது, மதிப்பெண்களை மட்டுமே மையப் படுத்திய கல்வி முறையாக மாறிவிட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

   படிப்பு என்பதே வேலை வாய்ப்பிற்காகத்தான் என்று எண்ணி, மதிப்பெண்களை மட்டுமே நாடிச் செல்லும் மாணவர்கள், தங்கள் வாழ்வியலை, வாழ்வின் மேன்மையை உணராதவர்களாகவே மாறிப் போகிறார்கள்.




இன்று விவாகரத்து வேண்டி, நீதி மன்றத்தை நாடுவோர் மெத்தப் படித்தவர்கள் மட்டுமே. ஏனென்றால் இவர்கள் கற்ற கல்வி, ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தலில் கிடைக்கும் மகிழ்வினைப் போதிக்கவில்லை. அனுசரித்து நடந்து கொள்வதால் ஏற்படும் குடும்ப மேன்மையினைப் போதிக்கவில்லை. இதனால் தங்கள் சுய நலனையே பெரிதும் விருமபுகிறவர்களாய் இவர்கள் மாறிப் போகிறார்கள்.

    இதன் மற்றொரு பக்க விளைவாய் கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து போய்விட்டன. தாத்தா, பாட்டிகள் எல்லாம் இன்று தூரத்து உறவுகளாக மாறிப் போய்விட்டார்கள்.

   கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்பவர்களாய் இருப்பதால், தங்கள் பிள்ளைகளைக் கூட சரிவர கவனிக்காமல் ஊதியத்தைத்தேடி ஓடுவதிலேயே, தங்களின் பொன்னான நேரத்தைச் செலவிடுகிறார்கள்.

       பணம் பெருகிக் கொண்டிருக்கிறது. குடும்ப உறவுகளோ குறைந்து கொண்டே இருக்கிறன. குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள, நல்லவற்றைப் போதிக்க, குட்டிக் குட்டிக் கதைகளைச் கூறி நல்வழிப்படுத்த வீட்டில் தாத்தாக்கள் இல்லை, பாட்டிகள் இல்லை.

    இதன் பயனாய் ஒன்றாம் வகுப்பிற்கு முன்பே, யு.கே.ஜி வந்தது. பின் எல்.கே.ஜி., வந்தது. பின் தொடர்ந்தே பிரி கே.ஜி.,யும் வந்தது. இன்று டே கேர் (Day Care) பள்ளிகளும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன, பெருகிக் கொண்டே இருக்கின்றன.

     இந்நிலை மாற வேண்டும், மாறியே ஆக வேண்டும். இந்தியா வல்லரசாக மாறிப் பயனில்லை, இந்தியா நல்லரசாக மாற வேண்டும். இதற்கான வித்து பள்ளிகளில்தான் விதைக்கப்பட வேண்டும்.

      தரமான கல்வி. அனைவருக்கும் பொதுவானக் கல்வி. மதிப்பெண்களை மட்டுமே துரத்தாத கல்வி, இதுவே இன்றைய தேவை.

புதிய கல்விக் கொள்கை 2016

   பயனுள்ள கருத்துக்கள் பலவற்றை உள்ளடக்கியதாக இருப்பினும், சில கருத்துக்களில், சில முடிவுகளில் மாற்றம் வேண்டும் என்பதே என் போன்றோரின் விருப்பமாக, எதிர்பார்ப்பாக உள்ளது,

      கொள்கை வடிவமைப்பின் தொடக்கமே, பள்ளிக்கு முந்தையக் கல்வியில்தான் தொடங்குகின்றது.


4 முதல் 5 வயதிற்குள்ளான குழந்தைகளுக்கான பள்ளிக்கு முந்தைய கல்வித் திட்டம் செயற்படுத்தப்படும் என்றும், இவர்களுக்கென்று ஒரு கல்வித் திட்டம் உருவாக்கப் பெற்று பாடப் பொருட்கள் உருவாக்கப்படும் 4.1(2) என்று அறிவிக்கிறது.

     கல்வித் துறையில் உலகிலேயே சிறந்து விளங்கும் நாடான, பின்லாந்தில், ஆறு வயதில்தான் கிண்டர் கார்ட்டன் பள்ளிகளில் சேர்க்கவே முடியும்.

     ஆனால் நம் நாட்டில், ஓடி ஆடி மகிழ்ந்திருக்க வேண்டிய மழலைகளை 4 வயதிலேயே பள்ளி என்னும் வேலிக்குள் அடைப்பது, சரியானச் செயலாகத் தோன்றவில்லை.




குழந்தைத் தொழிலாளர்கள், பள்ளி விட்டுவிடுபவர்கள் ஆகியோரின் வசதிக்காக, முழு நேரமும் இருக்க அவசியமான முறையான பள்ளிகளில் சேராமல் படிக்க, திறந்த அமைப்புப் பள்ளிகளின் வசதிகள் விரிவாக்கப்படும் என ( 4.4(6) ) அறிக்கை எடுத்தியம்புகிறது.

      படிக்கும் வயதில் வேலைக்குச் செல்லும், குழந்தைத் தொழிலாளர்களை மீட்டெடுத்து கல்வி புகட்டுவது அரசின் கடமையல்லவா. அரசே குழந்தைத் தொழிலாளர்கள் முறையினை ஊக்குவிக்கலாமா?

      கல்வி என்பது வாழ்க்கையைக் கட்டியெழுப்புகிற, மனிதரை உருவாக்குகிற, பண்பு நலன்களை உடையதாக இருக்க வேண்டும் என்ற விவேகானந்தரின் வரிகளை மேற்கோள் காட்டுகிற அறிக்கை, ஒரு சில பக்கங்கள் கடந்த நிலையில்,

ஆசிரமப் பள்ளிகளுக்கும் அருகிலுள்ள உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள் ஆகியவற்றிற்கிடையே தொடர்புகளை எற்படுத்தி, அதிகப் பயனைப் பெற இணைதிறம் உருவாக்கவும், இரண்டுக்கும் இடையே வழி நடத்துதலும் ஆலோசனைகளும் பெறுவதற்கான வழிகளும் கண்டறியப்படும் ( 4.6(4) ) எனக் கூறுகிறது.

      மாணவர்கள் பள்ளிக்குச் செல்வது அறிவியலையும், வாழ்வியலையும் கற்பதற்கா அல்லது அறிவியலுக்கு நேர் எதிராய் விளங்கும் ஆன்மீகக் கருத்துக்களைக் கற்பதற்கா என்னும் வினா, நெஞ்சில் முள்ளாய் குத்துகின்றது.

     தொடக்கக் கல்வி வரை மட்டுமே தாய் மொழியில் கல்வி என்று கூறுகின்ற அறிக்கை, இந்திய மொழிகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் சமஸ்கிருத மொழியின் சிறப்பு முக்கியத்துவத்தையும், நாட்டின் பண்பாட்டு ஒற்றுமைக்கு அதன் தனித்துவமிக்க பங்களிப்பையும் கணக்கில் கொண்டு, பள்ளி மற்றும் பல்கலைக் கழகங்களில் சமஸ்கிருதம் பயிற்றுவிக்க ஏதுவான வசதிகள் தங்கு தடையின்றி வழங்கப்படும் (4.11(5) ) என்று அறிவிக்கின்றது.

     அநேகமாக முழு அறிக்கையிலும் சமஸ்கிருதம் பற்றிப் பேசும் இப்பகுதியில் மட்டுமே, தங்கு தடையின்றி வழங்கப்படும் என்ற உறுதி மொழியும் சேர்ந்தே வருகிறது.

       சமஸ்கிருதத்திற்கு மட்டும் தங்கு தடையின்றி ஏதுவான வசதிகள். வேதனைதான் மிஞ்சுகிறது.


அரசு முயற்சிகளுக்கு உதவும் வகையில் தொண்டுள்ளம் படைத்தோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் போன்ற தனிப்பட்டோரின் கல்வி முதலீடுகள் ஊக்குவிக்கப்படும். வரிச் சலுகை மற்றும் கட்டமைப்பு வரையறையில் கல்வியைச் சேர்ப்பது போன்ற சலுகைகள் அளித்து தனிப்பட்டோரின் கல்வி முதலீட்டை அரசு ( 4.21(2) ) அதிகரிக்கும்.

மேலும், ( 4.21(5) )பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கான தற்போதுள்ள, கல்விக் கடன் திட்டத்தை மேலும் செம்மைப் படுத்த, இத்திட்டத்தில் மாற்றம் செய்து, குறைந்த வட்டி, திரும்பிச் செலுத்த தற்போதுள்ள ஓராண்டிலிருந்து இரண்டு ஆண்டு உயர் கால அவகாசம் போன்ற ஒத்திசைவான தளர்ச்சி மிக்க வசதிகள் செய்து தரப்படும்.

        ஒரு அரசின் கடமை தன் மக்களுக்குக் கல்வியை, தாராளமாய், இலவசமாய் வழங்குவதுதானே தவிர, தனியார் மயத்தை ஊக்குவிப்பது பெரிதும் பாதகமல்லவா.

       படித்த பிறகும் உரிய வேலை வாய்ப்பின்றி, தகுந்த ஊதியமும் இனறி அல்லல்படும் மாணவர்களை, படிக்கும் காலத்திலேயே கடனாளியாகவும் மாற்றுதல் தகுமா.


       வரைவு தேசியக் கல்விக் கொள்கை பாராட்டத் தகுந்த பல செய்திகளை, நற் திட்டங்களை உள்ளடக்கியதாக இருப்பினும், ஆங்காங்கே சில திட்டங்கள், சில முன் வரைவுகள் மனதை வருத்தத்தான் செய்கின்றன.


--------------------
கல்வி டுடே
இருமொழி மாத இதழில் எனது கட்டுரை





36 கருத்துகள்:

  1. மிக ஆழமான அழகான பதிவு..இன்னும் இதைப்பற்றி எழுதுங்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
  2. வெகுநாட்களாக இந்த பொருள் விவாத்திலேயே இருக்கிறது. இப்போது முன்னேற்றம் உள்ளதாக அறிகிறேன். அதற்கு இதைப்போன்ற கட்டுரைகள்தாம் காரணம். அரசு உத்தரவு போடுகிறது. இருப்பினும்...சுணக்கம் எங்கு? யாரால் என்று தெரியவில்லை?
    -மும்பை சரவணன்

    பதிலளிநீக்கு
  3. படித்தேன், பின்னர் வருகிறேன். :)

    பதிலளிநீக்கு
  4. மிகவும் தேவையான பதிவு சகோ.

    பதிலளிநீக்கு
  5. உங்கள் ஆதங்கம் புரிகிறது. நீங்கள் கூறியிருப்பது உண்மைதான். இப்போதெல்லாம் வெறும் மதிப்பெண்களைப் போட்டு எல்லோரையும் 90% மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களாக ஆக்கியிருக்கிறது இப்போதைய கல்வி. அவர்களில் எத்தனை சதவிகிதம் 'Employable' என்று பார்த்தீர்களானால், வெகு குறைவாகவே இருக்கும். யார் வேண்டுமானாலும் பொறியியல் படிப்பு மற்றும் professional படிப்புகளைப் படிக்கலாம் என்று ஆகிவிட்டது. நாம் உயரியதாக எண்ணிக்கொண்டிருக்கிற ஐ.ஐ.டி கூட, உலகில் 50 சிறந்த institutionல் ஒன்றாக இல்லை.

    இரண்டு அரசுகளும் எதுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதற்குக் கொடுப்பதில்லை. அரசியல்வாதிகளையும் குறைசொல்லிப் பயனில்லை. கல்விக்கண் திறந்த காமராஜரையே நமக்கு வேண்டியதில்லை என்று தூக்கி எறிந்தவர்களல்லவா நாம்.

    பதிலளிநீக்கு

  6. \/ மாணவர்கள் பள்ளிக்குச் செல்வது அறிவியலையும், வாழ்வியலையும் கற்பதற்கா அல்லது அறிவியலுக்கு நேர் எதிராய் விளங்கும் ஆன்மீகக் கருத்துக்களைக் கற்பதற்கா என்னும் வினா, நெஞ்சில் முள்ளாய் குத்துகின்றது./இத்திட்டத்தைக் கொண்டுவரும் அரசு கல்விக் கொள்கை மூலமும் தங்களது ஹிந்துத்துவா கொள்கைகளைப் பரப்ப முயல்கிறது. ஆங்கிலத்தில் சொல்வது நினைவுக்கு வருகிறது WE ONLY GET WHAT WE DESERVE இம்மாதிரி அரசை நாம் தேர்ந்தெடுத்திருக்கிறோமே

    பதிலளிநீக்கு
  7. அருமையான தேவையான கட்டுரை.
    கட்டுரை மாத இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. கல்விடுடே இதழில் புதியக் கல்விக்கொள்கை தொடர்பான கட்டுரை பிரமாதம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. நியாயமான கருத்துகளுடன் கூடிய கட்டுரை..

    இடையூறுகள் பலவற்றைத் தாண்டி வந்த கல்வி மீண்டும் இடர்பாடுகளுக்குள் சிக்கிக் கொள்ளுமோ?.. என்றிருக்கின்றது..

    பதிலளிநீக்கு
  10. ஆசிரியர் என்ற நிலையில் நீங்கள் இன்னும் ஆழமாகப் புரிந்து பகிர்ந்துள்ள விதம் எங்களுக்கு இருந்த பல ஐயங்களைத் தெளிவுபடுத்தியது. கல்வி டுடேயில் பதிவு கண்டு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  11. உங்களின் கருத்துக்களோடு நானும் ஒத்துப்போகிறேன். நிறைய மாற்றங்கள் செய்யவேண்டும். இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள். நண்பரே!
    த ம 1

    பதிலளிநீக்கு
  12. நம்மை யார் ஆள்வது என்பதை தீர்மானிக்கும் உரிமை நமக்கு இருக்கிறது.
    நமக்கு என்ன வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிக்கிறார்கள்.
    நாம் நம் கடமையில் தவறும் போது,நமக்கு வேண்டியவையும் தவறாகவே தீர்மானிக்கப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  13. சமஸ்கிருதம் என்பது கட்டாயத் திணிப்பாக தரப்படுகிறதா? விரும்பினால் தேர்வு செய்யும் முறையா? இந்தியா முழுவதும் ஒரே மாதிரி கல்வி முறை அமுலுக்கு வருகிறதா? இதிலும், தனியார் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன், சிபிஎஸ்ஈ, கேந்த்ரியா வித்யாலயா போன்ற வித்தியாசங்கள் இருக்குமே.. அங்கெல்லாம் எப்படி? ஆன்மிகக் கருத்துகளைத் தெரிந்து கொள்வதால் தவறில்லை என்று நினைக்கிறேன். ஆன்மிகம் தவறான ஒழுக்கத்தைப் போதிப்பதில்லை. முன்பெல்லாம் நல்லொழுக்க வகுப்புகள் என்று ஒரு வகுப்பு இருக்கும். இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  14. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    இன்றைய கல்வி முறை குறித்து ஏற்கனவே நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மேலும் மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் கல்வித் திட்டம் வராதா? என்கிற ஏக்கம் மட்டும் நம்மை வாட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  15. கல்வியில் காவிக் கொள்கையை திணிப்பது தவறு !

    பதிலளிநீக்கு
  16. மிகச் சுருக்கமாத் தான் ஆயினும்
    மிக மிக அருமையாக நேர்மையாக
    தங்கள் கருத்தினைப் பதிவு செய்த விதம்
    மனம் கவர்ந்தது
    கல்வித்துறை சாராத என்போன்றோர்க்கு
    இது போன்ற கட்டுரைகளே அதன்
    சாதகப் பாதக அம்சங்களைப்
    புரிந்து கொள்ள அதிகம் உதவுகிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. அருமையான விடயங்களைத் தாங்கிய அற்புதமான விபரம் நண்பரே
    கல்வி டுடே வாழ்த்துகள் தொடரட்டும்....

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் !
    நல்ல சிந்தனை உண்மையான தேடல்கள்
    பின்லாந்துக் கல்வி முறையைச் சொன்னால்
    தனியார் கல்வி நிறுவனங்கள் போர்க்கொடி தூக்குமே !

    தொடர்ந்து எழுதுங்கள் மாற்றங்கள் மலரட்டும் நன்றி

    தம +1

    பதிலளிநீக்கு
  19. எதிரான எல்லா கருத்துகளையும் ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டி எதிர்க்கவேண்டும். தொடர்ந்து எழுதுங்கள்!

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் !
    நல்ல சிந்தனை உண்மையான தேடல்கள்
    பின்லாந்துக் கல்வி முறையைச் சொன்னால்
    தனியார் கல்வி நிறுவனங்கள் போர்க்கொடி தூக்குமே !

    தொடர்ந்து எழுதுங்கள் மாற்றங்கள் மலரட்டும் நன்றி SIR

    பதிலளிநீக்கு
  21. கல்வித்துறை சார்ந்த தங்களைப் போலும் சான்றோர் கருத்திட வேண்டிய பல எதிர்அம்சங்கள் “புதிய கல்விக்கொள்கை”யில் உள்ளன. தாங்கள் இது குறித்து எழுதியது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், மிகச் சுருக்கமாக இருப்பதாகத் தோன்றுகிறது. மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை, அவசரநிலைக் காலத்தில் இந்திரா அம்மையார் பொதுப்பட்டியலுக்கு மாற்றினார். இப்போது மோடி அதை மத்தியப் பட்டியலுக்குக் கொண்டு போகும் முயற்சி அவர்களின் “ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே மதம், ஒரே தலைமை” எனும் உலகத்தில் இருக்க முடியாத ஆசைக்குத் துணைபோவதாய் இருப்பதே பெரும் ஆபத்து என்பது எனது கருத்து. தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் கட்டுரைகள் வலையுலகையும் தாண்டி, ஊடகங்களிலும் சான்றோர் மத்தியிலும் செல்லவேண்டியதும் அவசியம். தொடருங்கள்.தம6

    பதிலளிநீக்கு
  22. இதுபோன்ற கருத்துக்களை அரசு கவனத்தில் கொண்டு சிறந்த கல்விக் கொள்கைகள் உருவானால் நன்று.

    பதிலளிநீக்கு
  23. இதுபோன்ற கருத்துக்களை அரசு கவனத்தில் கொண்டு சிறந்த கல்விக் கொள்கைகள் உருவானால் நன்று.

    பதிலளிநீக்கு
  24. நல்லதொரு பகிர்வு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  25. திணிக்கப்பட்டால் சரியல்ல. தேர்ந்தெடுக்கும் உரிமை இருந்தால் நல்லது. மட்டுமல்ல கல்வி இலவசமாக்கப்பட வேண்டும். நாட்டின் கடைக்கோடி குழந்தை மற்றும் சமுதாயத்தின் அடித்தட்டுக் குழந்தையின் வாழ்வும் உயர்ந்திட நல்ல தரமான, சமமான கல்வி வழங்கப்பட வேண்டும். வாழ்வை உயர்த்தும் கல்விமுறை வர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  26. நல்ல கட்டுரை.குறைகள் களையப் பட்டு அறிஞர்களின் ஆலோசனைகளைப் பெற்று சிறந்த கல்வி முறையை உருவாக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  27. புதிய கல்விக்கொள்கை பற்றிய கட்டுரை மிக அருமை.நன்றி.

    பதிலளிநீக்கு
  28. புதிய கல்விக்கொள்கை பற்றிய கட்டுரை மிக அருமை.நன்றி.

    பதிலளிநீக்கு
  29. அருமையான சிந்தனை
    வரவேற்கிறேன்

    பதிலளிநீக்கு
  30. அசத்தலான அலசல்!

    முன்பெல்லாம் சகோதரர் ஸ்ரீராம் சொல்வது போல நல்லொழுக்க வகுப்புகள் இருந்தன. இப்போதெல்லாம் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. மாற்றங்களை யார் கொணர்வது? அரசை எதிர்பார்க்காமல் நல்லாசிரியர்களே தகுந்த மாற்ற‌ங்களை ஏற்படுத்துதல் வேண்டும். ஒரு புத்தகத்தில் ஒரு கிராமப் பள்ளி ஆசிரியர் மாணவர்களுக்கு செடிகள் வளர்ப்பதைப்பற்றியும் பறவைகளை வளர்ப்பது பற்றியும் சொல்லிக்கொடுத்து சின்னஞ்சிறுவர்களுக்கு காருண்யத்தைக்கற்பித்தது பற்றி அறிந்து ஆச்சரியப்பட்டேன். இந்த மாதிரி நல்லாசிரியர்கள் அங்கங்கே இருந்து கொண்டு தானிருக்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
  31. அருமையான பகிர்வு ஐயா...
    மிக விரிவாக எழுதியிருக்கிறீர்கள்....
    இன்னும் எழுதுங்கள் ஐயா..

    பதிலளிநீக்கு
  32. இனிப்பு பூசப்பட்ட அந்த விஷ உருண்டையை இன்னும் கொஞ்சம் விரிவாகப் புட்டுப்புட்டு வையுங்கள் அய்யா! நம் ஆசிரிய, மாணவ, பெற்றோர் பெருமக்களுக்குத் தெரிய வேண்டும்.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு