19 பிப்ரவரி 2017

தங்கக் கவிஞர்
அப்பாவை நினைத்தபடி
வாசல் படியில்
அமர்ந்திருந்தேன்
என்
பிள்ளைகளின் வருகைக்காக.

இப்படித்தான், இக்கவிஞர் தன் கவிதையை நிறைவு செய்கிறார்.

     இதிலென்ன இருக்கிறது, நாம் அனைவருமே, நம் பிள்ளைகளின் வருகைக்காக, அது பள்ளியோ, கல்லூரியோ, அல்லது அலுவலகமோ, தினசரி காத்துக் கிடப்பவர்கள்தானே என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா.


     ஆனால் இந்தக் காத்திருத்தல் வேறுவிதமானது. இவர் தன் தந்தையின் நினைவலைகளை மனம் மகிழ, படிப்போர் மனம் நெகிழ, எடுத்துச் சொல்வதில் இருக்கிறது இன்பம்.

     பண்டிகைகள் வரும் பொழுதெல்லாம் அப்பாவுக்கு ஏற்படும் குதூகலங்களைச் சொல்லும் கவிஞர், உறவுகளைக் காணும் ஆர்வம், உடனமர்ந்து உண்ணும் பாசம், பிள்ளைகளின் பெருமையினை எண்ணி எண்ணி மனதில் கொள்ளும் கர்வம், என நேர்த்தியாக மிக நேர்த்தியாக, வரிசைப் படுத்திக் கொண்டே சென்று, இறுதியில், கவிதையினை நிறைவு செய்தும் அழகே அழகு. வாழ்வு என்றால் இதுதானே.

ஒவ்வொரு
பண்டிகையிலும்
அப்பா
குதூகலமாய் இருப்பார்.

தனித்தனி
கூடுகளிலிருப்பவர்கள்
தாய்க் கூட்டிற்கு
வருவதை எதிர்பார்த்து
வாஞ்சையோடு
வாசலில் நிற்பார்.

ஒன்றாய் அமர்ந்து
உண்ணும்போது
உற்சாகமாயிருப்பார்.

பிள்ளைகள்
புத்தாடை அணிந்து
பவனி வருவதை
பெருமையோடு பார்ப்பார்.

குடும்ப மாநாட்டுத்
தலைமையேற்று
குழந்தையைப் போல்
துள்ளுவார்.

சாதாரண நகைச்சுவைக்கும்
சத்தம் போட்டுச் சிரிப்பார்.

பெரிய குறும்புகளைக்கூட
பொறுமையோடு ரசிப்பார்.

கார் வாங்கிய
சேதி சொன்னால்
கர்வத்தோடு
அம்மாவைப் பார்ப்பார்.

பாசத்தில் நனைத்த
வார்த்தைகளால்
பக்குவமாய் அறிவுரைப்பார்.

இந்த நாள்
நீளாதா என்று ஏங்குவார்.

அடுத்த பண்டிகை வரை
அந்த நாளைப் பற்றியே
அம்மாவிடம் பேசுவார்.

அப்பாவை நினைத்தபடி
வாசல்படியில்
அமர்ந்திருந்தேன் –
என்
பிள்ளைகளின் வருகைக்காக.

     நெஞ்சம் நெகிழ்கிறதல்லவா, கண்களின் ஓரம் புதிதாய் ஓர் ஈரம் மெல்ல வந்து எட்டிப் பார்க்கிறது அல்லவா. மனதை வளைத்துப் போடும் எழுத்துக்களை வரிசையாய் கோர்ப்பதில் வல்லவர் இவர்.


உன்
அடையாளங்கள்
கேட்டார்கள்.

என்ன சொல்ல?

சுருட்டை முடியையா …
சுயநலத்தையா.

உயரமாய் வளர்ந்ததையா ….
உடனிருந்து கெடுத்ததையா.

செந்நிறம் என்பதையா ….
செய்நன்றி மறந்ததையா.

வசீகரப் சிரிப்பையா ….
வக்கிர புத்தியையா

எதைச் சொல்ல …?

அகத்தின் அசிங்கம்
முகத்தில் தெரியுமா …?

        பாசத்தை, நேசத்தை மட்டுமல்ல, உடனிருந்து கெடுத்தவர்களைக் கூட, தன் கவிச் சொற்கொண்டு, எழுத்தோவியமாய் இவர் வடித்தெடுக்கும் பாங்கு அலாதியானது.

எதிரிகள் தோண்டிய
எழ முடியாத பள்ளத்தில்
விழுந்திடுவேனென்று
வீணர்கள் கணித்தார்கள்.

இருப்பதையெல்லாம்
இழந்திடுவேன்
அடையாளம் தெரியாமல்
அழிந்திடுவேனென்று
அனுமானித்தார்கள்.

வெளிச்ச வீதிகளில்
வலம் வர முடியாமல்
இருட்டுக்குள் கறுப்பைப் போல்
ஒழிந்திடுவேனென்று
ஊருக்குச் சொன்னார்கள்.

இடையறாத
இடிகளுக்கிடையிலும்
மீண்டும்
மழையைப் போல்

பொழிந்திடுவேனென்று
புரிந்தவர்கள் நின்றார்கள்.

புரிந்தவர்களோடு
கழிக்கின்றேன்
பொழுதுகளை.

வாழ்வியலை உணர்ந்தவர், உடன் இருப்பவர்களை அறிந்தவர் இவர், என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன இவர்தம் எழுத்துக்கள்.

கவிதை எழுதுவீங்களாமே

என்னைப் பற்றியும்
எழுதுவீங்களா ……

வாரம் இருமுறை
என் வாகனத்துக்கு
பெட்ரோல் நிரப்பும் பெண்
கேட்டாள்.

எழுதலாம் ……

பள்ளிச் சீருடை
நிறத்திலேயே
ஒரு
பணிச் சீருடை.

புத்தகப் பை
தாங்கும் தோளில்
ஒரு
பணப்பை.

மேயும்
கண்களைத்
தவிர்த்தபடி வேலைக் கவனம்.

வகுப்பறையில்
அமர வைக்கத் தவறி
நெருப்பறையில்
நிற்க வைத்த
வறுமை.

எழுதிக் கொண்டிருக்கும் போதே
அலங்காரமற்ற
அவளிடம் போய்
அடைக்கலமானது
என் கவிதை.

       படிக்கப் படிக்க இவர்தம் உள்ளம் உணர்ந்து, இவர்தம் ஈர நெஞ்சம் அறிந்து, நம் மனதும், இவர்கவியில் அடைக்கலமாகித்தான் போகிறது.

தேவாலயக்
கற்கண்டோ

பள்ளிவாசல்
சர்க்கரையோ

பெருமாள் கோயில்
பொங்கலோ

எதுவென்றாலும்
இனிப்பாய் இருக்கிறது

அதில்
அன்பைக் கலந்தால்
அமுதமாகிறது.

மதத்தைக் கலந்தால்
விஷமாகிறது.

      மதத்தின் பிடியில் சிக்கிய, இன்றைய ஆன்மீகத்தின் யதார்த்த நிலைமையினை, எளிமையாய், அதே நேரத்தில் வலிமையாய் சொல்வதில் வித்தகர் இவர்.

  சட்டென்று பற்றிக் கொள்ளும் காட்டுத் தீயைப்போல், வாசகனுக்குள் நெருப்பைத் தூவவும், வெளிச்சத்தை வீசவும் தேவையான ஒரு அனல் சக்தி இவர்தம் கவிதைகளுக்குள் ஒளிந்திருக்கிறது.

    இவர் எப்பொழுது, எப்படிக் கவிதை எழுதுவார் தெரியுமா?

    இதோ அவரே கூறுகிறார் கேளுங்கள்.

பெரும்பாலான இரவுகள் உறக்கமற்றதாய் இருந்து விடுகின்றன. சில இரவுகளில் இமைகள் மூடியபடி இருக்கும், மனசு திறந்து கிடக்கும். அன்றைய நாளின் நிகழ்வோ, மகிழ்வோ, கவலையோ, படித்ததோ, பாதித்ததோ, எதுவோ, கவிதைகளாய் கிளர்ந்து மனசை மூடிக் கொள்ளும். அப்போதே விழிகள் திறந்து கொள்ளும்.

       அப்படியாக எழுதப் பட்ட பல கவிதைகளை இவர் இத்தொகுப்பில் சேர்த்துள்ளார்.

       இது மட்டுமல்ல, இன்னும் எழுத நினைத்து எழுதப்படாத பல நூறுக் கவிதைகள், இவர் முன் அணிவகுத்து நிற்கின்றன, எழுதுகோலைத் திறக்க மாட்டாரா, ஏட்டில் இறக்கி வைக்க மாட்டாரா என்னும் ஏக்கத்தோடு ஏங்கி நிற்கின்றன.


என் பண்டிகையின் நாட் குறிப்பிலிருந்து ……

இரண்டாம் பதிப்பு கண்டு கவிஞரின் நூல்.

இவர்தான்,
தங்கத்தைத் தன் பெயரிலேயே இணைத்துக் கொண்டு,
முகமும் அகமும் மலர, தன் வசீகரப் புன்னகையால்
நட்பு பாராட்டும்


கவிஞர் தங்கம் மூர்த்தி.

     தங்கம் மூர்த்தியின் வார்த்தைகளுக்குள் வாழ்க்கை இருக்கிறது, பெருமூச்சு இருக்கிறது, காதலியின் கண்ணீர் துளி இருக்கிறது. மரணத்தின் பதைப்பு இருக்கிறது. அவலங்களை எதிர்கொள்ளும் நகைப்பு இருக்கிறது என்பார் கவிஞர் சிற்பி.

    எவரையும் நகலெடுக்காத தனிப் பார்வை. வாழ்கையை அதன் இருளகற்றி விளக்கமுறக் காட்டும் அறிவுப் புலம். வாசிக்க இனிமை நலம் காட்டும் புதுமொழி, எளிமை, எள்ளல், தோழமை, நயம்பட உரைக்கும் விமர்சனம் ஆகியவற்றால் தமிழ் உலகு புறக்கணிக்க முடியாத புதுக் கவியாக வருகிறார் என வியந்து போற்றுவார் கவிஞர் பாலா.

கவிஞர் பாலா அவர்களுக்குத்தான்
இப்போதும் ……

தன் நூலினை எப்போதும் போல்,
இப்போதும்
கவிஞர் பாலாவிற்கே
படைத்துள்ளார் இவர்.

என் பண்டிகையின் நாட் குறிப்பிலிருந்து ……

என் உள்ளம் கவர்ந்த கவிப் பெட்டகம்.

வெளியீடு,
அகரம்,
மனை எண்.1,
நிர்மலா நகர், தஞ்சாவூர் -734 கருத்துகள்:

 1. வித்தக கவிஞருக்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 2. nalla irukku. thanks.If He send his book to me I am also ready to give my values on it. always with love: Kavignar Thanigai.

  பதிலளிநீக்கு
 3. கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களை தங்கள் எழுத்தில் கண்ட விதம் அருமையாக இருந்தது. சிறப்பான மேற்கோள்களைத் தந்து அவருடைய சிறப்பை பகிர்ந்துள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 4. எழுதிய கவிதைகள் நன்றாக இருக்கின்றன.

  "அகத்தின் அசிங்கம் முகத்தில் தெரியுமா …?" - சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்தது.

  பதிலளிநீக்கு
 5. உண்மையான மதிப்பீடு ஐயா

  பதிலளிநீக்கு
 6. கவிதைகள் அருமை!

  அகத்தின் அசிங்கம் முகத்தில் தெரியுமா?" அட!! உண்மைதான் என்று சொல்லத் தோன்றி சிந்திக்க வைத்த வரிகள்!!!

  நல்ல மேற்கோள்களுடனான மதிப்பீடு நண்பரே!/சகோ!

  பதிலளிநீக்கு
 7. எடுத்துச் சொல்லியிருக்கும் கவிதைகள் ஒவ்வொன்றும் மிக மிகச் சிறப்பு. முழுப் புத்தகத்தையும் படிக்க ஆவல் வருகிறது. மிக ரசித்தேன்.

  தம +1

  பதிலளிநீக்கு
 8. அறியாத கவிஞர், அறியத் தந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. புதுக்கோட்டை மாநாட்டில் தங்கம் மூர்த்தி அவர்களை சந்தித்தேன். அதற்கு முன்பே அவரது கவிதைகளை சந்தித்திருக்கிறேன். தமிழின் இன்றைய சிறந்த கவிஞர்களில் அவரும் ஒருவர் என்று பதிவு செய்வதில் பெருமையடைகிறேன்.

  - இராய செல்லப்பா நியூஜெர்சி.

  பதிலளிநீக்கு
 10. #மதத்தைக் கலந்தால்விஷமாகிறது#
  உண்மையான வார்த்தை அய்யா ,ரசித்தேன் :)

  பதிலளிநீக்கு
 11. தங்கம் மூர்த்தி அவர்களை வலைப் பதிவர் திருவிழாவில் சந்தித்தேன்.அருமையான தமிழில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.அவரது சிறப்புகளை முத்துநிலவன் ஐயா மற்றும் கஸ்தூரிரங்கன் அவர்களின் மூலம் தெரிந்து கொண்டேன். தங்கள் பதிவின் மூலம் அவரது கவித்திறனை அறிந்து மகிழ்ந்தேன்.

  பதிலளிநீக்கு
 12. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  புதுகை தந்த சொக்க தங்கம் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் நம்முடைய வாழ்க்கையை நகல் எடுத்து கவிதை எழுதி விட்டாரோ என்று எண்ணும் வகையில் அனைவருடைய மனதிலும் உள்ள ஏக்கங்களையும் அடைந்த துரோகங்களையும் சமூகத்தின் மீதான பார்வைகளையும் கவிதைகளில் வார்த்துள்ளார். அவருடைய கவிதைகளை தங்களின் வசீகர நடையில் படிக்கும் பொழுது மேலும் அழகாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 13. "பள்ளிச் சீருடை
  நிறத்திலேயே
  ஒரு
  பணிச் சீருடை.

  புத்தகப் பை
  தாங்கும் தோளில்
  ஒரு
  பணப்பை.

  மேயும்
  கண்களைத்
  தவிர்த்தபடி வேலைக் கவனம்.

  வகுப்பறையில்
  அமர வைக்கத் தவறி
  நெருப்பறையில்
  நிற்க வைத்த
  வறுமை." என்ற
  கவிதைக்காரரைப் பாராட்டுவோம் - அவர்
  பாடிய கருப்பொருளுக்காக...
  தங்கள் அருமையான அறிமுகத்தை வரவேற்கிறேன்!
  நன்றி!

  பதிலளிநீக்கு
 14. சிறப்பான தொகுப்பு என நீங்கள் கொடுத்த சில கவிதைகளில் இருந்து தெரிகிறது. நன்றி.....

  பதிலளிநீக்கு
 15. சிறப்பான தொகுப்பு என நீங்கள் கொடுத்த சில கவிதைகளில் இருந்து தெரிகிறது. நன்றி.....

  பதிலளிநீக்கு
 16. தேவாலயக்
  கற்கண்டோ

  பள்ளிவாசல்
  சர்க்கரையோ

  பெருமாள் கோயில்
  பொங்கலோ

  எதுவென்றாலும்
  இனிப்பாய் இருக்கிறது

  அதில்
  அன்பைக் கலந்தால்
  அமுதமாகிறது.

  மதத்தைக் கலந்தால்
  விஷமாகிறது.//

  அருமையான கவிதை.
  தங்கம் மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  அறிய தந்த உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 17. எடுத்துக்காட்டியிருக்கும் கவிதைகள் அருமை. அப்பா கவிதை என்னைக் கவர்ந்தது. வாசிக்கத் தூண்டும் விமர்சனத்துக்குப் பாராட்டுகள்! நூலாசிரியருக்கு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 18. நல்வ எடுத்துக்காட்டுகளுடன் எழுதப்பட்ட வரிகள்
  இருவருக்கும் வாழ்த்துகள்.
  தமிழ் மணம் 8
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 19. அருமையான தொகுப்பு.கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  தனக்கே உரிய தமிழ் நடையில் விமரிசித்த ஜெயக்குமார் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 20. //தேவாலயக்
  கற்கண்டோ
  பள்ளிவாசல்
  சர்க்கரையோ

  பெருமாள் கோயில்
  பொங்கலோ

  எதுவென்றாலும்
  இனிப்பாய் இருக்கிறது

  அதில்
  அன்பைக் கலந்தால்
  அமுதமாகிறது.

  மதத்தைக் கலந்தால்
  விஷமாகிறது.//
  மிகவும் அருமை! உங்களின் நூல் விமர்சனம் அதையும்விட இனிமை!

  பதிலளிநீக்கு
 21. அருமை.
  வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 22. உண்மை வெறும் புகழ்ச்சியில்லை - இன்றைய தமிழ்க் கவிஞர்களில் மிகச்சிறந்தோர் வரிசையில் வந்திருப்பவர் தங்கம் மூர்த்தி. அவரது கவிதையை உங்கள் பாணியில் மதிப்பீடு செய்தமைக்கு நன்றியும் பாராட்டுகளும் அய்யா.
  உங்கள் பாணி என்று நான்சொல்வது - ஒரு செய்தியைச் செய்தியாகவே சொல்லிவிடாமல், வாசிக்கத் தூண்டும் வகையில் நாடக பாணியில் சொல்வது. இது படிப்போரை மறக்கவிடாமல் செய்துவிடும் அரிய பாணி! தொடருங்கள்! தங்கம் மூர்த்தியின் அடுத்த தொகுப்புகளை உங்களுக்கு அனுப்பச் சொல்கிறேன். அவற்றையும் மதிப்பீடு செய்ய வேண்டுகிறேன். நன்றியும் வணக்கமும்.

  பதிலளிநீக்கு
 23. எங்கள் எழுச்சிக் கவிஞருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே. தங்களின் விமர்சனம் மிக அருமை மனம் நிறைந்த பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 24. எங்கள் எழுச்சிக் கவிஞருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே. தங்களின் விமர்சனம் மிக அருமை மனம் நிறைந்த பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 25. எங்கள் எழுச்சிக் கவிஞருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே. தங்களின் விமர்சனம் மிக அருமை மனம் நிறைந்த பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 26. தங்கக் கவிஞர்.வாழ்க பல்லாண்டு !

  பதிலளிநீக்கு
 27. கவியோவியங்கள் வரையும் புதுகைக் கவிஞர் தங்கம் மூர்த்தி ஐயாவிற்கு வாழ்த்துகள்.

  “தேவதைகளால் தேடப்படுபவன்” மற்றும் “அந்த வானவில்லுக்கு எட்டு நிறங்கள்” என அவரது படைப்புகள்
  இரண்டும் வாசித்து மகிழ்ந்தேன். தற்போது தங்களின் நூலாய்வு, இந்த நூலையும் வாசிக்கத் தூண்டுகின்றது. அழகு நடையில் எளிய மதிப்பீடு.
  நன்றியும் பாராட்டுகளும் ஐயா.

  பா.தென்றல்,
  காரைக்குடி.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு