11 ஜனவரி 2018

தமிழைத் துறக்காத துறவி     ஆண்டு 1931.

     அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.

     26 எண் அறை.

     நேரம் காலை மணி 11.05

     பேராசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

     பேராசிரியர்தான்.

     ஆனாலும் துறவிகளுக்கு உரிய உடையினை அணிந்திருக்கிறார்.

     குரலோ காந்தக் குரல்

     மாணவர்கள் அனைவரும், பேராசிரியரின் தெள்ளத் தெளிந்த நீரோடை போன்ற உரையில், சொக்கிப் போய் அமர்ந்திருக்கிறார்கள்.

     பணியாளர் ஒருவர், மெல்ல வகுப்பறையினை எட்டிப் பார்க்கிறார்.


     பேராசிரியரோ மாணவர்களைப் பார்த்துப் பேசிக் கொண்டே இருக்கிறார்.

      சற்றுத் தயங்கிய பணியாளர், வேறு வழியின்றி குறுக்கிடுகிறார்,

சுவாமி, தங்களைக் காணத் துணை வேந்தர் வந்திருக்கிறார். தங்களின் அறையில் காத்திருக்கிறார்.

      குரல் கேட்டுத், தன் உரையினை நிறுத்தியப் பேராசிரியர், மெல்லத் திரும்பி வாயிலை நோக்குகிறார்.

       பணியாளரைப் பார்க்கிறார்.

      ஒரு நொடி கூட யோசிக்காமல், சற்றும் தயங்காமல் கூறினார்.

சுவாமி ஜி, வகுப்பறையில் இருக்கிறார். மணி 12.01 ற்குத் துணை வேந்தரைச் சந்திப்பார்.

     அவ்வளவுதான்.

     அடுத்த நொடி, மாணவர்களை நோக்கித் தன் உரையினைத் தொடருகிறார்.

     பணியாளர் விக்கித்துப் போய் நிற்கிறார்.

     பேராசிரியர் பாடம் நடத்திக் கொண்டே இருக்கிறார். துணை வேந்தரோ காத்துக் கொண்டே இருக்கிறார்.

      12.00 மணிக்கு வகுப்பு நிறைவுற்றதும், தன் அறைக்குச் சென்று துணை வேந்தருக்கு, வணக்கம் கூறி வரவேற்கிறார்.

நாளை காலை, நம் பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

தெரியுமே, தகவல் கிடைத்ததே.

நாளைய கூட்டத்தில், நம் அரசர் மிகவும் விரும்பி, ஒரு தீர்மானத்தைக் கொண்டு வர இருக்கிறார். அந்தத் தீர்மானத்தைத் தாங்கள் எதிர்க்காமல், ஆதரிக்க வேண்டும். தீர்மானம் வெற்றி பெற உதவ வேண்டும். இதற்காகவே யான், தங்களைக் காண வந்தேன்.

       பேராசிரியரின் கண்கள், துணை வேந்தரின் கண்களை நேருக்கு நேராய் சந்திக்கின்றன.

சுவாமிஜி தன் மனச் சான்றின்படியே நடப்பார். அதற்கு எதிராக ஏதேனும் நடைபெறுமானால், அவர் தன் பையினை எடுத்துக் கொண்டு வெளியேறி விடுவார்.

     மறு நாள் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அரசர் மிகவும் விரும்பிய தீர்மானம் முன் மொழியப் பட்டது. அனைவரும் தீர்மானத்தை ஆதரித்தனர்.

      சுவாமிஜி ஒருவர் மட்டும, தீர்மானத்தை எதிர்த்துப் பேசினார்.

      தீர்மானம் தோற்றுப் போனது.

      சுவாமிஜியின் எண்ணத்திற்கு எதிராக, எதனையும் செய்ய மறுத்தார் அரசர்.

      சுவாமிஜி அப்பேர்ப்பட்டவர்.

இவர்தான்
பிரபோத சைதந்யர்

இயற்பெயர்
மயில் வாகனம்.

இலங்கையின் காரைத் தீவில் 1892 இல் பிறந்தவர்.

     இராமகிருட்டிண மடத்தில் இணைந்து, துறவறம் மேற்கொண்டபோது, இவரது வாழ்வு மட்டமல்ல, இவரது இயற்பெயரும், புனைப் பெயரும் மாறியது.

என்னை இப்பணியில் பெரிதும் ஊக்கிய, கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் திரு த,.வே.உமாமகேசுவரம் பிள்ளையவர்கள், இதன் நிறைவுப் பேற்றினைக் காணும் முன், பிரிந்து சென்றமையினை நினைக்கும்போது, என்னுள்ளம் பெரிதும் துயறுருகின்றது. அவர்களது அன்புக்குரிய நிலையமாகிய, இத் தமிழ்ப் பெருமன்றத்திலும், இதனைச் சார்ந்திருக்கும் அகத்தியர் திருமடத்திலும் இருந்து, இந்நூலினை எழுதி முடித்தமை, அவர்களது பிரிவினால் எய்திய, மனத் துயரினை ஓரளவிற்கு நீக்கி விட்டது என்று எழுதி மனம் நெகிழ்ந்தவர்.


உலகு போற்றும்
இசைத் தமிழ் இலக்கண நூலாகிய
யாழ் நூலினை
இயற்றி
கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கே
உரிமையாக்கிய பெரு வள்ளல்
இவர்தான்
சுவாமி விபுலாநந்த அடிகள்.
----
      இன்றைக்கு எழுபது ஆண்டுகளுக்கு முன், இசையோடு இசையாய் இணைந்து விட்ட, சுவாமி விபுலாநந்தரை, மீண்டும், இம்மண்ணில் உலாவ விட்டிருக்கிறார், இந்த செம்மொழி இளம் அறிஞர்.

விபுலாநந்த அடிகளார் ஆவணப் படம்


சுடுமண் சிற்பக் கலைஞர்
வில்லியனூர் கி.முனுசாமி
அவர்களின் அற்புதக் கைவண்ணத்தில்,
சுடுமண் குவியலானது,
கொஞ்சம் கொஞ்சமாய்
உரு பெற்று
சுவாமி விபுலாநந்தராய்
உயிர் பெறும்
காட்சியில் இருந்து, ஆவணப் படம் தொடங்குகிறது.

     தொடக்கமே சொல்லிவிடுகிறது, இது வெறும பொழுது போக்குப் படமல்ல என்பதை.

       இலங்கை, மட்டக் களப்பிற்கு அருகில் இருக்கும், விபுலாநந்தர் பிறந்த மண்ணான காரைத் தீவிற்கும், அவர் பயின்ற கல்வி நிறுவனங்களுக்கும், நம்மை கரம் பற்றி அழைத்துச் செல்கிறார், இந்த ஆவணப் பட இயக்குநர்.

        காரைத் தீவிலிருந்து காட்சிகள் வெகுவேகமாய் நகருகின்றன.

       ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து, திரைப்படம் போல் நகரும் காட்சிகள். பின்னனியில் மிதமாய் ஒலிக்கும் புல்லாங்குழல் இன்னிசை, நம்மை படத்தோடு முழுமையாய் மூழ்க்ச் செய்து விடுகிறது.

        முதுமையின் உச்சத்தில் வாழ்ந்து வரும், விபுலாநந்தரின் தங்கை மகனார் திரு பூ.கணேசன் அவர்களும், தங்கை மகளார் கண்ணம்மா அக்கா அவர்களும், தங்களின் தாய் மாமன் பற்றி, நா தழுதழுக்கப் பேசுவதைப் பார்க்கும் பொழுது, நம் நெஞ்சம் நெகிழ்ந்து கரைந்து போகிறது.

      

புகைப் படங்களில் மட்டுமே இதுவரை பார்த்து வந்த, சுவாமி விபுலாநந்தரை, அவர்தம் தமக்கை மகன் உருவில் கண்டபோது, வியந்துதான் போனேன்.

        இரத்த உறவுதான் எனினும், உருவ ஒற்றுமை, நாம் இதுவரை நேரில் காணாத சுவாமி விபுலாநந்தரை, நம் கண்முன் கொண்டு வந்து காட்டுகிறது.

        நம்மையும் அறியாமல், நம் கரம் மேலெழுந்து வணங்குகிறது.

        கண்ணம்மா

        சுவாமி விபுலாநந்தரை இந்த தமிழ் மண்ணுக்கு ஈந்து மகிழ்ந்த தாய்.

        விபுலாநந்தர் தன் தாயிடத்து அன்பு மிகுதி உடையவர்.

       இதனால், இவ்வுலவில் தான் காணும் பெண்கள் அனைவரையும், தன் தாயாகக் கண்டவர், கண்ணம்மாவாகக் கண்டவர்.

       கண்ணம்மா, கண்ணம்மா என்றே அனைவரையும் அழைத்து மகிழ்ந்தவர்.

      

விபுலாநந்தரின் தங்கை மகளின் பெயர் கோமேதக வள்ளி. ஆயினும் விபுலாநந்தர் இவரைக் கண்ணம்மா, கண்ணம்மா என்று அழைத்து, அழைத்து, இவரது பெயரே, இன்று கண்ணம்மா அக்காவாக மாறிவிட்டது என்பதை அறியும் பொழுது, நம் கண்கள் கலங்கித்தான் போகின்றன.

        விபுலாநந்தர்

        இலங்கை அரசானது, விபுலாநந்தர் நினைவு நாளை, தமிழ் மொழி தினமாக, அறிவித்து, போற்றிக் கொண்டாடி வருவதை அறியும் பொழுது, நம் மனம் மகிழ்ச்சியில் விம்மத்தான் செய்கிறது.


சுவாமி விபுலாநந்த அடிகள்
ஆன்மீகத் துறவி
துறவிதான் எனினும்
தமிழைத் துறக்காத துறவி
தமிழுக்கு என்றே வாழ்ந்த துறவி

தமிழ் இசைக்கு இலக்கணம் கண்ட துறவி
-----

      இடைக்கட்டு என்னும் சிற்றூரில் பிறந்து, புதுச்சேரியில் புகுந்து, உலகெங்கும் பறந்து, நாம் மறந்து போனத் தமிழறிஞர்களை, கால ஓட்டத்தில் கரைந்து போன, ஆவணங்களை, எல்லாம் மீண்டும் எழுந்து உலகை வலம் வரச் செய்யும் ஆற்றலாளரும்,

      தன் குடும்பம் மறந்து, சுற்றம் துறந்து, ஈட்டிய செல்வம் இழந்து, ஆவணப் படம் எழுத்து, பழந்தமிழர் இசையினை, இசை விற்பன்னர்களை, உலகு முழுவதும் உலாவ விடும் வித்தகருமான


முனைவர் மு,இளங்கோவன் அவர்கள்


இலங்கைக்குப் பலமுறை பறந்து, பறந்து,
தமிழ் நாடெங்கும், சற்றும் சளைக்காமல் அலைந்து, அலைந்து,
சுவாமி விபுலாநந்த அடிகளார் ஆவணப் படத்திற்கு
குரல் கொடுத்து, உரு கொடுத்து, உயிர் கொடுத்து,

இம்மண்ணிற்கு
சுவாமி விபுலாநந்தரை
மீட்டுக் கொடுத்திருக்கிறார்.

முனைவர் மு.இளங்கோவன்
அவர்களின் பணி
போற்றுதலுக்கு உரியது, வணங்குதலுக்கு உரியது.

போற்றுவோம்,   வணங்குவோம்,   வாழ்த்துவோம்


ஆங்கிலமும் ஆரியமும் நன்கே அறிந்திருந்தும்
பாங்கிருக்கும் பைந்தமிழ்க்கே தன்வாழ்வை ஓங்கிருக்கச்
செய்விபு லானந்த செம்மைத் துறவியினைக்
கைகுவித்து வாழ்த்தும் என்வாய்

-    பாரதிதாசன்
-    ------------------

கரந்தையில்
விபுலாநந்தர் ஆவணப் படம் வெளியீடு

     புதுச்சேரி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா மற்றும் அமெரிக்கா எனப் பலநாடுகளில் வெளியீட்டு விழா கண்ட
சுவாமி விபுலாநந்த அடிகளார் ஆவணப் படம்
கடந்த 8.1.2018 திங்கட்கிழமை மாலை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் வெளியிடப் பெற்றது.

       


உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியர் திரு வெ.சரவணன் அவர்கள் தலைமையில், திருவையாறு அரசர் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் சண்முக.செல்வகணபதி அவர்கள் ஆவணப் படத்தினை வெளியிட, முதல் பிரதியினை, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழக, உதவிப் பதிவாளர் (ஓய்வு) முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.


        இவ்விழாவில், ஆவணப் பட இயக்குநர் முனைவர் மு.இளங்கோவன், கரந்தைத் தமிழ்ச் சங்க நிறைவேற்றுக் கழக உறுப்பினர் திரு ஆ.சோ.தியாகராசன், திருவையாறு புலவர் தங்க.கலியமூர்த்தி, நாட்டார் கல்லூரிச் செயலாளர் புலவர் இரா.கலியபெருமாள், புலவர் ம.கந்தசாமி, திருவையாறு புலவர் செல்வராசு, பூதலூர் கவிஞர் முத்தமிழ் விரும்பி, நந்தித் தொலைக் காட்சி திரு செல்லதுரை, திரு ரவி தமிழ்வாணன், திரு தஞ்சை செல்வம், புலவர் துரை.நடராசனார், ஓவியர் திரு சுந்தர.கோவிந்தராசன், ஆடுதுறை திரு டி.கோபால் மற்றும் உமாமகேசுவர மேனிலைப் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.

30 கருத்துகள்:

 1. விபுலானந்த அடிகளார் புகழ் வாழ்க..

  பதிலளிநீக்கு
 2. கரந்தையில் நடைபெற்ற விபுலாநந்தர் ஆவணப் படம் வெளியீடு பற்றிய நிகழ்ச்சுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. இவ்விழாவில் கலந்துகொள்ளும் அரிய வாய்ப்பினைத் தந்த உங்களுக்கும், நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்கிறேன். விழா நிகழ்வினையும், ஆவணப்படத்தைப் பற்றியும் பகிர்ந்துள்ள விதம் மிகவும் அருமை.

  பதிலளிநீக்கு
 4. ஆவணப்படத்தை யூட்யூபில் பதிவேற்றினா லிங்க் கொடுங்கண்ணா.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் நண்பரே ஏற்கனவே இது குறித்து எழுதி இருந்தீர்கள் வாழ்க முனைவர் மு. இளங்கோவன் அவர் தம்தொண்டு.

  பதிலளிநீக்கு
 6. விபுலானந்த அடிகளாரைப் பற்றி இவ்வளவு விஷயங்களையும் பதிவில் கொண்டு வரச் செய்த முயற்சிக்குப் பாராட்டுக்கள் .

  பதிலளிநீக்கு
 7. விபுலாநந்தர் பற்றிய கல்லூரி சம்பவம் எஹ்க்கோ படித்த நினைவு ஆவணப்பாம் எடுத்து உலகறியச் செய்வது சிறந்த பணி வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 8. விபுலானந்த அடிகள் பற்றிய தகவல்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. அரிய தகவல்களுடன்....

  சிறப்பான பகிர்வு...

  பதிலளிநீக்கு
 10. சிலம்பில் ஒரு துறவியைக் கண்டோம்.இலங்கை தந்த இத் துறவி அரசர் கண்டு அஞ்சுமளவுக்கு நெறி காத்தவர் என்பதை ஆவணப்படம்த ந்ததை,யாமும் தெளியும் வண்ணம் கட்டுரையாக்கிக் கொடுத்தமைக்கு நன்றி!மிழ் செழிக்க தக்கதோர் பணி!

  பதிலளிநீக்கு
 11. பாராட்டுகள். அரிய தகவல்கள்.
  தம +1

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் சகோதரரே!

  அறிந்திட வேண்டிய பல அரிய தகவல்கள்!
  பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 13. விபுலானந்தரின் தமிழ்ப்பணிகள் வியப்பூட்டுவதாய் உள்ளன. ஆவணப் படத்தைத் தயாரித்து வெளியிட்டுள்ள முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் நம் வணக்கத்திற்கும் வாழ்த்துக்கும் உரியவர்.
  அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் அடிகளாரின் சிலை உள்ளதா?

  பதிலளிநீக்கு
 14. விபுலானந்த அடிகளைப் பற்றித் தாங்கள் முன்னரே இங்கு கொடுத்ததுண்டு இல்லையா? இப்போது ஆவணப்படம் பற்றியதகவல்களும் அறிகிறோம். முனைவர் இளங்கோவன் அவர்களுக்கும் வாழ்த்துகள்!

  தகவல் பகிர்விற்கு மிக்க நன்றி நண்பரே/சகோ

  பதிலளிநீக்கு
 15. அரிதான தகவல்களைத் தெரிந்து கொண்டேன்! அன்பு நன்றி!!

  பதிலளிநீக்கு
 16. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, சுவாமி விபுலாநந்தர் அவர்களைப் பற்றிய அருமையான செய்திகளை அரும்பாடுபட்டு அதிகப் பணம் செலவிட்டு ஆவணப்படமாக உருவாக்கிய முனைவர் திரு மு.இளங்கோவன் அவர்களை பல்லாயிரம் தடவைகள் பாராட்டினாலும் போதாது. அது மட்டுமில்லாமல் சுவாமி விபுலாநந்தர் அவர்கள் தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்திலேயே முழுமையாக தங்கியிருந்து உமாமகேசுவரனாரின் வேண்டுகோளுக்கு இணங்கி யாழ் நூல் இயற்றிய இடத்திலேயே காணொளி குறுந் தகடு வெளியிடப்ட்டது மிகப் பொருத்தமாக அமைந்தது. தாங்கள் பதிவிட்ட விதம் மிக அற்புதம்.

  பதிலளிநீக்கு
 17. முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் பாராட்டுக்குரியவர்.

  தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 18. வாழ்க அவர் புகழ்!

  பதிலளிநீக்கு
 19. சுவாமி விபுலானந்தர் இலங்கையில் மிக பிரபல்யம்...

  பதிலளிநீக்கு
 20. மிக நல்ல பதிவு! விபுலாநந்தரின் ஆவணப்படத்துக்கு சிறப்புச் சேர்க்கும் அறிமுகம்! மிக்க நன்றி! தமிழறிஞர்கள் என்றாலே நமக்குத் தமிழ்நாட்டு அறிஞர்கள்தாம் நினைவுக்கு வருகிறார்கள். ஆனால், தமிழுக்குப் பெருமை சேர்த்த, அரும் தொண்டாற்றிய எத்தனையோ அறிஞர்கள் இலங்கையிலும் உண்டு. அவர்களுள் தலைமையானவர் விபுலாநந்த அடிகள். இந்த 21ஆம் நூற்றாண்டிலும் அன்னாரின் புகழ் மணக்கப் பெருமுயற்சி படைத்த ஐயா முனைவர்.மு.இளங்கோவன் அவர்களுக்கும் இது பற்றி அறியத் தந்த கரந்தையார் ஐயாவுக்கும் நனி நன்றி!

  பதிலளிநீக்கு
 21. மிகவும் அருமையான தகவல்கள் .நான் அறியாதவையும் .பகிர்வுக்கு மிக நன்றி அண்ணா

  பதிலளிநீக்கு
 22. விபுலானந்த அடிகள் பற்றிய அரிய தகவல்களை பதிவிட்டுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 23. ஆவணப்படம் பற்றிய தகவல் அருமை ஐயா. விபுலானந்தர் இலக்கியப்பணி என்றும் வாழும்.

  பதிலளிநீக்கு
 24. வணக்கம் !

  பங்கயம் பூத்துக் கங்கை
  ....பசுமையும் கொள்ளல் போல!
  மங்கலம் பெருகி மக்கள்
  ....மகிழ்வினால் நிறைந்து துள்ள !
  எங்கிலும் அமைதி வேண்டி
  ...இறைஞ்சிடும் எல்லோர் வாழ்வும்
  பொங்கலாம் இந்நாள் தொட்டுப்
  ...பொலிவுற வாழ்த்து கின்றேன் !

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் !

  பதிலளிநீக்கு
 25. வணக்கம் ஐயா!

  அன்பும் அருளும் அகத்துக்குள் பொங்கட்டும்!

  இன்பத் தமிழ்போல் இனித்து!

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், சுற்றம், நண்பர்கள் அனைவருக்கும்
  இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 26. அருமையான அவசியமான பதிவு
  இன்னொரு செய்தி ..
  பதிவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக ஆகிவிட்டீர்கள்
  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 27. தமிழறிஞர்கள் சார்ந்த அரிய தகவல்களை அள்ளித் தருகிறீர்கள். தொடரட்டும் தங்கள் பணி

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு