18 ஜனவரி 2018

இந்திர விழா     பொங்கல்.

     பொங்கல் விழாவானது, இன்று தமிழர் திருநாளாகவும், திராவிடர் திருநாளாகவும் போற்றிப் புகழப் படுவதை நாம் அறிவோம்.

      ஆனால், கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை பொங்கல் என்ற வார்த்தையே, தமிழில் பயன்பாட்டில் இல்லை என்பது நம்மில் எத்துணை பேருக்குத் தெரியும்.

      ஆம், கி.பி. இரண்டாம் நூற்றாண்டில்தான், பொங்கல் என்ற சொல்லே, முதன் முதலாக, ஒரு காப்பியத்தில் காணக் கிடைக்கிறது.

      அப்படியானால், அதற்கு முன், பொங்கலே கொண்டாடப் படவில்லையா, எனும் கேள்வி எழுகிறதல்லவா?

      கொண்டாடி இருக்கிறார்கள்.

      ஊரே ஒன்றாய், ஓரிடத்தில் கூடி, கொண்டாடி இருக்கிறார்கள். ஆனால் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு பெயர்களில், இத்திருநாளைக் கொண்டாடி இருக்கிறார்கள்.

      உழவர் திருநாளாக,
       தை நீராடலாக,
       தைப் பூச விழாவாக
      பெயர் மாறி, மாறி கொண்டாடப் பெற்ற விழா, இறுதியில் இந்திர விழா என்னும் பெயரைப் பெற்றிருக்கிறது.

வெற்றி வேல் மன்னர்கு உற்றதை ஒழிக்க என,
தேவர் கோமான் ஏவலின் போந்த
காவல் பூதத்துக் கடை கெழு பீடிகை
புழுக்கலும், நோலையும், விழுககு உடை மடையும்
பூவும், புகையும் பொங்கலும் சொரிந்து

     கி.பி.இரண்டாம் நூற்றாண்டில், சமணத் துறவி இளங்கோ அடிகள் இயற்றிய, சிலப்பதிகாரத்தில், புகார் காண்டத்தில், இந்திர விழா, ஊர் எடுத்த காதையில்தான் முதன் முதலாக, பொங்கல் என்னும் வார்த்தை முன் வந்து நிற்கிறது.

      பொங்கல் என்னும் வார்த்தை, வந்த போதிலும், இப்பாடல் குறிக்கும் விழாவின் பெயரோ இந்திர விழாவாகும்.

       நண்பர்களே, இன்று அரசு ஆணை என்பது நாம் அனைவரும் அறிந்த சொல்லாகும். நமது செயற்பாடுகளை இன்று, அரசாணை கட்டுப் படுத்துகிறது அல்லது நெறிப் படுத்துகிறது.

      

ஆனால், உலகிலேயே, ஒரு விழாவினைக் கொண்டாட, எப்படிக் கொண்டாட வேண்டும் என்று வழிகாட்ட, ஒரு அரசாணை பிறப்பிக்கப் பட்டு, அவ்விழா அரசு விழாவாகவே கொண்டாடப்பட்டும் இருக்கிறது என்றால், அது இந்த இந்திர விழாவிற்காகத்தான் இருக்கும்.

விழவுமலி மூதூர் வீதியும், மன்றமும்
பழமணல் மாற்றுமின், புதுமணல் புரப்புமின்
நுதல் வழி நாட்டத்து இறையோன முதலாப்
பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
ஆற்றி மரபின் அறிந்தோர் செய்யுமின்.

ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்
பட்டிமண்டபத்து பாங்கறிந்து ஏறுமின்
பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும
செய்யமும் காமுஞ் செய்யாது அகலுமின்

     மணிமேகலை விழாவறைக் காதையில், தெள்ளத் தெளிவாய் இந்த அரசாணையானது விளக்கப் பெற்றிருக்கிறது.

பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமுஞ் செய்யாது அகலுமின்

      சமய வாதிகளே, ஒன்று கூடி பட்டிமன்றம் நடத்துங்கள். ஆனால் மாற்றுக் கருத்துகளால், சச்சரவு தோன்றுமாயின், கலகம் செய்யாது, அவ்விடத்தை விட்டு உடனே அகலுங்கள் என அறிவுறுத்துகிறது, இந்த அரசாணை.

      படிக்கப் படிக்க வியப்புதான் தோன்றுகிறது.


மதுக்குலாம அலங்கல் மாலை
மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்

பொங்கல் விழாவினை, பொங்கல் விழாவாகவே குறிப்பிடும் சொல்லாட்சி, கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு உதயம் கண்ட, சீவக சிந்தாமணியில் இடம் பிடித்திருக்கின்றது.

       இதன் பின்னர்தான், பொங்கல் விழாவானது, பொங்கல் விழா என்னும் பெயரிலேயே, உலா வரத் தொடங்கியிருக்கிறது.

       பொங்கல்

       பொங்கல் விழாவானது, அண்மைக் காலம் வரை, ஊரே ஓரிடத்தில் திரண்டு, வரிசை வரிசையாய் பொங்கல் பானைகளை வைத்து, பொங்கும் பொங்கலாக, சமுதாய விழாவாகத்தான் அரங்கேறியிருக்கிறது.

      இன்றோ வீட்டிற்குள் சுருங்கி விட்டது.

போகிப் பொங்கல்
பொங்கல்
மாட்டுப் பொங்கல்
காணும் பொங்கல்
சிறு வீட்டுப் பொங்கல்
என இவ்விழா, ஐந்து நாள் விழாவாகும்.

       ஆனால் இன்று காணும் பொங்கல் கன்னிப் பொங்கலாகிவிட்டது. சிறு வீட்டுப் பொங்கலோ காணாமலேயே போய்விட்டது.

       உற்றார், உறவினர், நண்பர்களை அவர்தம் இல்லம் சென்று, கண்டு மகிழும் நாளே காணும் பொங்கலாகும். இப்பொங்கல் கன்னிப் பொங்கலாய் உருமாறி விட்டது.

       சிறுவர், சிறுமியர் பலர் ஒன்று சேர்ந்து, கோலாட்டம் ஆடியபடி, கும்மி ஆடியபடி, வீடு வீடாகச் சென்று, அரிசி, வெல்லம் , காய், கனிகள் பெற்று வந்து, ஓரிடத்தில் அமர்ந்து, தாங்களே பொங்கல் பொங்கி, மகிழும் நாளே, சிறு வீட்டுப் பொங்கலாகும்.

        இவ்விழாவின் நோக்கமே, சின்னஞ் சிறுவர்களை, அவர்கள் பெரியவர்களானதும், பொங்கல் திருநாளை அவர்களாகவே, கொண்டாடிடத் தயார் படுத்துவதேயாகும்.

         இன்று சில கிராமங்களைத் தவிர, ஏனைய இடங்களில், இந்தச் சிறு வீட்டுப் பொங்கல் இல்லாமலே போய்விட்டது.

---

      நண்பர்களே, சுமார் ஒரு மணிநேரம், இவ்வுலகை மறந்துதான் அமர்ந்திருந்தேன். மடை திறந்த வெள்ளம் போன்ற சொற்பொழிவு.

தமிழர் பண்பாட்டில் தைப் பொங்கல்

      அரசு அலுவலர் ஒருவரிடமிருந்து, இதுபோன்ற, தங்கு தடையற்ற நீரோடை போன்று, பயணிக்கும் பொழிவை எதிர் பார்க்கவே இல்லை.

       இவர் முதுநிலை வருவாய் ஆய்வாளர்.

       வருவாய் துறையில் இருந்தும், வருவாயைப் பற்றிச் சிறிதும் கவலைப் படாமல், செந்தமிழின் வருவாயைத் தேடித் தேடிப் பருகி மகிழ்பவர்.

       வித்தியாசமான மனிதர்.

       பெயர் கூட, வித்தியாசமானப் பெயர்தான்.

       இதுவரை நான் கேள்விப்பட்டிராதப் பெயர்.

திரு எஸ்.சமத்துவராஜன் சம்பத்

      இவரது தந்தை, கம்யூனிசக் கொள்கைகளில் பெரு நாட்டம் உடையவர். பாப்பா உமாநாத் போன்ற முதுபெரும் இயக்கத் தோழர்களுடன் நெருங்கிப் பழகியவர்.

      எனவே, தனது கொள்கையினை, சமத்துவத்தை, தன் மகனுக்குப் பெயராய் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்.


திரு எஸ்.சமத்துவராஜன் சம்பத்

தன் தந்தையின் வழியில், தடம் மாறாமல் பயணிப்பவர்.

போற்றுதலுக்கும், வாழ்த்துதலுக்கும் உரியவர்.

---

      கடந்த 14.1.2018 ஞாயிறு மாலை, பொங்கல் திருநாளன்று, ஏடகம் அமைப்பின் ஞாயிறு முற்றம், சொற்பொழிவில்தான்,. திரு எஸ்.சமத்துவராஜன் சம்பத் அவர்களை முதன் முதலாய் பார்த்து, அவர்தம் உரையினைக் கேட்டு மகிழும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.      
பொங்கல் திருநாளாக இருந்த போதிலும், விழா அரங்கு, நிரம்பித்தான் போனது.


இதற்குக் காரணம்
ஏடகம் அமைப்பின் நிறுவுநர்
திரு மணி.மாறன்

      ஒவ்வொரு மாதமும், இரண்டாம் ஞாயிறு மாலை, பழந்தமிழரின் தொன்மையினை, மேன்மையினை, நாகரிகத்தை உணர்த்தும் வகையில், சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்து, அரங்கேற்றி வருகிறார்.

திரு மணி.மாறன் அவர்களின்
தொண்டு தொடர வாழ்த்துவோம்.