27 ஜனவரி 2018

முதுகுன்றனார்     ஆண்டு 1957,

     தஞ்சாவூர், பூண்டி புட்பம் கல்லூரி

     ஒரு கிராமத்துச் சிறுவன், தன் தந்தையுடன் அலுவலகத்தில் காத்திருக்கிறான்.

      திருவையாறு, சீனிவாசராகவா உயர்நிலைப் பள்ளியில், பள்ளி இறுதி வகுப்பை முடித்தவன். பூண்டி கல்லூரியில், புதுமுக வகுப்பில் சேருவதற்காகக் காத்திருக்கிறான்.

       அலுவலர் ஒருவர், இம்மாணவனது, மதிப்பெண் சான்றிதழை வாங்கிப் பார்த்துவிட்டு, முகம் சுழித்து, இந்த மார்க்குக்கு இங்கே இடம் கிடையாது என்கிறார்.

        தந்தையோ, அலுவலரிடம் கெஞ்சுகிறார், என் மகனைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என மன்றாடுகிறார்.

        முடியாது  உறுதியாய் மறுத்துவிடுகிறார் அலுவலர்.

        சிறிது நேரம் யோசித்த தந்தை, தன் மகனைப் பார்த்தார்.

வாடா, இந்த காலேஜ் இப்ப வந்ததுதாண்டா. இது வராததற்கு முன்பிருந்தவன் எல்லாம், செத்தா போயிட்டான். ஏர் இருக்கு, கலப்பை இருக்கு. நீ நல்ல மனுசனா பிழைச்சுக்கலாம்டா. கவலைப் படாதே வா.


      தந்தை பேசிக்கொண்டிருக்கும் பொழுதே, அவ்வழியாக வந்த கல்லூரி முதல்வர், என்ன என்று விசாரிக்கிறார்.

இவன் என் பிள்ளை. ரொம்ப கயிட்டப்பட்டு, இவனைப் பள்ளிக் கூடத்தில படிக்க வைத்தேன். அவங்களும் பாஸ் என்று சொல்லிட்டாங்க, சர்டிபிகேட்டும் கொடுத்துட்டாங்க.

ஆனா இவனை, இந்த காலேஜில சேர்த்துக்க மாட்டேங்குறாங்க.

இது என்ன நியாயம்? இவன்தான் பாஸ் பண்ணிட்டானே.

       ஒரு கணம் சிந்தித்த முதல்வர், கிராமத்துக் கலையுடன் நிற்கும் தந்தையையும், மகனையும் பார்க்கிறார்.

என்னோடு வாருங்கள், நான் சேர்த்து விடுகிறேன்.

------      திருவையாறு, அரசர் கல்லூரி.

      காவிரி ஆற்றின் வட கரையில் அமைந்திருக்கும் எழில் மிகு கல்லூரி.

      இலக்கிய மன்ற விழா.

      கல்லூரி விழாக் கோலத்தில் காட்சியளிக்கிறது.

      இதோ விழா தொடங்கிவிட்டது.

     விழாவிற்காக அழைக்கப்பட்ட சிறப்பு அழைப்பாளர், ஒலிப் பெருக்கியின் முன் நின்று தன் உரையினைத் தொடங்குகிறார்.

காவிரித் தாய்க்கு என் முதல் வணக்கம்.

      மேடையில் வீற்றிருந்தோருக்கும் எதிரே அமர்ந்திருந்த மாணவ, மாணவிகளுக்கும் ஒன்றும் புரியவில்லை.

       அவரே தொடர்ந்தார்.

நான் இக்கல்லூரியின் முன்னாள் மாணவன். நான்காண்டுகள் இதே கல்லூரியில் படித்தவன். நான்காண்டுகளும் என் உயிரைக் காத்தது இந்தக் காவிரிதான்.

ஆம், இந்தக் காவிரி ஆற்று நீரைப் பருகிப் பருகித்தான் என் உடல் வளர்த்தேன், என் உயிர் காத்தேன்.

      விழா அரங்கே கலங்கித்தான் போய்விட்டது.

------

     புல் அறுத்து, கால் ரூயாய்க்கு விற்று, கால் படி அரிசி வாங்கி, உணவளித்து, பள்ளியில் தன் மகனைப் படிக்க வைத்த, இவரது தாய், தன் தாலியை விற்றுத்தான், தன் மகனுக்குக் கல்லூரிக் கட்டணத்தைக் கட்டினார்.

      ஏழ்மை என்றால் அப்படி ஒரு ஏழ்மை.

      ஏழ்மையைச் சற்றும் பொருட்படுத்தாமல் படித்தார்.

      உண்ண உணவில்லா விட்டாலும், பசியோடு படித்தார்.

      திருவையாற்றின், காவிரி நீரையே உணவாய் உண்டு படித்தார்.

      புலவர் பட்டமும் பெற்றார்.

      ஆறாண்டுகள் ஒரு பள்ளியில் தமிழாசிரியராயப் பணியாற்றினார்.

      பின்னர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், கரந்தைப் புலவர் கல்லூரியில், பேராசிரியராய் நுழைந்து, துணை முதல்வராய், முதல்வராய் உயர்ந்தார்.

-----

     பெருத்த உருவம், கருத்த நிறம். வெள்ளை முழுக்கை சட்டை, வெள்ளை வேட்டி, தோளில் நீண்ட சால்வையுடன், கையில் தோல் பையுடனும், நெஞ்சம் நிமிர்த்தி, நேர் கொண்ட பார்வையோடு, சிங்கம் போல் தலை நிமிர்த்தி, இவர் நடந்து செல்வதை, சிறு வயதிலேயே கண்டு வியந்திருக்கிறேன்.

       எதிரில் இவர் நடந்து வருவதைக் கண்டாலே, என்னையும் அறியாமல், ஓரமாய் ஒதுங்கி நின்று, ரசித்திருக்கிறேன்.

       ஆனாலும், 1990 ஆம் ஆண்டுதான், முதன் முதலில், நேர் எதிரில் நின்று, இவரோடு பேசும் வாய்ப்பு கிடைத்தது.

        பேசியபோதுதான், இவரது குழந்தை மனமும், தமிழ் உள்ளமும் புரிந்தது.

        ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை, ஏழாண்டுகள் நான் படித்த வளாகத்திலேயே, எனக்கு வேலையும் கிடைத்தது.

        1990 ஆம் ஆண்டு, பணியாளராக, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் உள்ளே நுழைந்தேன்.

        என்ன பணி தெரியுமா?

       கல்லூரி அலுவலகத்தில் எழுத்தர் பணி.

       ஆம். கரந்தைப் புலவர் கல்லூரியாக இருந்து, பின்னர் தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி எனப் பெயர் மாற்றம் பெற்றக் கல்லூரியில், இரண்டு ஆண்டுகள் எழுத்தராகப் பணியாற்றியிருக்கிறேன்.

         ஊதியம் என்பது  இல்லாமலேயே, இரண்டாண்டுகள் உழைத்திருக்கிறேன்.

          அப்பொழுது இவர்தான் கல்லூரி முதல்வர்.

          ஏதோ, ஒரு கடிதம் ஒன்றை எழுதி எடுத்துச் சென்றேன். நன்றாக நினைவிருக்கிறது.

          அக்கடிதத்தில், கல்லூரியின் பெயரை, தமிவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி என எழுதியிருந்தேன்.

         படித்துப் பார்த்தவர் சிரித்தார்.

போச்சுடா, உனக்கும், இந்த ழ, ல தகராறா? தமிழ் ததிகினத்தோம் போடுதே என்று கூறி, தமிவேள் என்று எழுதியிருந்ததை, தமிவேள் என்று திருத்திக் கொடுத்தார்.

தமிழ்ச் சங்கத்துக்கு வந்திருக்க, தமிழை ஒழுங்காய் எழுது.

         அன்று முதல், இவரிடம் செல்வதென்றால், எழுதியிருப்பதை, ஒரு முறைக்கு, இருமுறை சரிபார்த்துக் கொண்டுதான் செல்வேன்.         

         போகப் போகத்தான் தெரிந்தது, பழகுதற்கு எத்துணை இனிமையான மனிதர் என்பது புரிந்தது.

           இவர் எதைப் பற்றிப் பேசினாலும், நேரம் போவது தெரியாமல் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

          இவர் கரந்தையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுதே, தனியாய், தமிழ்க் கல்லூரி ஒன்றினையும் நிறுவியப் பெருமைக்கு உரியவர்.

நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி.

          இதுமட்டுமல்ல இவர் தமிழியக்கத் தலைவரும் ஆவார்.

---

பேசாப் பொருளைப் பேசநான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்கநான் துணிந்தேன்

என்னும் பாவேந்தரின் வரிகளுக்கு ஏற்ப, இதுநாள் வரை பேசாப் பொருளை எல்லாம் பேசிப் பேசி, கேட்காத வரத்தை எல்லாம் போராடிப் போராடிப் பெற்றவர்.

தஞ்சையிலே மலையில்லை ஆனால் எங்கள்
   தங்கருஞ்சீர் தமிழ்மேதை திருமுது குன்றம்
நெஞ்சுநிமிர் கோயிலுண்டு, களம் புகுந்து
    நேருக்கு நேர்தமிழின் பகைஎ எதிர்க்கும்
விஞ்சுபுகழ் தமிழ்அரிமா, வாய்தி றந்தால்
     வெற்றியன்றித் தமிழுக்கு வேறங் கில்லை
அஞ்சாத இடிமுழக்கத் தமிழின் மேகம்
      அவரன்பில் நான்குளியா நாட்கள் கொஞ்சம்

என முழங்கும் கவிஞர் பொன்னியின் செல்வனின் கவி வரிகளில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் உண்மை, உண்மை.

         இவர், தான் போராடியக் களங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றத் தமிழ் மறவர்.

       1976 முதல 1979 வரை மூன்றாண்டுகள், சென்னைப் பல்கலைக் கழகப் பேரவை உறுப்பினராய் செம்மாந்தப் பணியாற்றியவர்.

          முன்றே ஆண்டுகளுக்குள், 39 தீர்மானங்களைக் கொண்டு வந்து, பல்கலைக் கழகத்தையே திக்குமுக்காடச் செய்து, சளைக்காமல் போராடி வென்றி பெற்றவர்.சென்னைப் பல்கலைக் கழக இலட்சினையில் (LOGO)
அதுநாள் வரை இடம் பெற்றிருந்த
Doctrina Vim Promovet Insitam
என்னும் இலத்தீன் மொழித் தொடரோடு,
கற்றனைத் தூறும் அறிவும் ஆற்றலும்
என்னும், சீர் மிகுத் தமிழ்த் தொடர் இடம் பெற,
முழு முதற் காரணமானவர்.

          நண்பர்களே, நம்மில் அநேகர், சென்னைப் பல்கலைக் கழகத்தில்தான் படித்திருப்போம். பட்டமும் பெற்றிருப்போம்.

           அக்காலத்தில், நமக்கு வழங்கப் பெற்ற, பட்டச் சான்றிதழ்களில் இடம் பெற்றுள்ள வார்த்தைகள் அனைத்தும், ஆங்கிலத்தில் மட்டுமே இடம் பெற்றிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

        தமிழகப் பல்கலைக் கழகங்களில், ஆங்கிலத்தில் பட்டச் சான்றிதழா எனக் கொதித்தெழுந்துத் தீர்மானங்கள் கொண்டு வந்து, பலவாறுப் போராடிப் போராடி, ஆங்கிலத்துடன், அருந் தமிழுக்கும் இடம் பெற்றுத் தந்தவர் இவர்.

        இதுமட்டுமல்ல, பட்டச் சான்றிதழ்களில் துணை வேந்தரும், பதிவாளரும் தமிழிலேயேக் கையெழுத்திட வேண்டும் எனப் போராடியும் வெற்றி பெற்றவர் இவர்.

தமிழ்ச் சான்றோர் விருது,
தமிழவேள் உமாமகேசுவரனார் விருது,
குறள் நெறிக் காவலர்,
தமிழ்ப் பேரவைச் செம்மல்,
மாமன்னன் இராசராசன் விருது,
உலகப் பெருந்தமிழர்
முதலியப் பல விருதுகளுக்குச் சொந்தக்காரர்.

கண்ணகி சிலம்பீந்த காரணம்,
என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம்,
மரூஉ மொழிகளும் வழூஉ மொழிகளும்,
சிந்தனைச் சுடர்,
தமிழ்க் குன்றம்,
தமிழவேள் உமாமகேசுவரனாரும் நாவலர் நாட்டாரையாவும்,
கனவும் கற்பனையும்
முதலான நூல்களின் ஆசிரியர்.

சாகும் போதும் தமிழ்ப் படித்துச் சாக வேண்டும்
என்தன் சாம்பல் தமிழ் மணந்து வேக வேணடும்
என்னும் வரிகளின் வழி வாழ்ந்து, மறைந்தவர்.

       2010 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள், இவர் மீளாத் துயிலுறங்க இமைகளை மூடியபோது, தமிழுலகே கண்ணீர் கடலில் மூழ்கித்தான் போனது.

பெருந்தமிழர் முதுகுன்ற னாரை
     பெறற்கரிய தமிழ்மண்ணின் பிறப்பை
கரந்தையிலே விளைந்ததமிழ் முத்தை
     கரைஅறியாத் தமிழ்வெள்ளப் பெருக்கை
அருந்தமிழின் பேராற்றல் வடிவை
     அலைவெடிக்கும் செந்தமிழின் முழக்கை
பரந்தவெளிக் காற்றினிலே விட்டோம் ….
      பாழ்பட்டோம் நெருப்பின்வாய் பட்டோம்.
                               உணர்ச்சிக் கவிஞர் காசி.ஆனந்தன்


இவர்தான்
முதுகுன்றன்
உலகப் பெருந்தமிழர்
பேராசிரியர் பி.விருத்தாசலனார்

முதுகுன்றனாரின்
நினைவினைப் போற்றுவோம்.