14 ஏப்ரல் 2018

ஆகாய கங்கை
     பல கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டம்.

     பூமி வெறும் கட்டாந்தரையாய், நீரின்றி, மரமின்றி, உயிர்களுமின்றி காட்சியளித்த காலம்.

     விண்ணில் இருந்து புறப்பட்ட வால் நட்சத்திரங்கள், பூமியைத் தங்கள் இலக்காய் கொணடு தாக்கத் தொடங்கின.

     ஒவ்வொரு நிமிடமும் இருபதிற்கும் மேற்பட்ட வால் நட்சத்திரங்கள், பூமியில் மோதி, பூமியையே அதிரவைத்தன.


      வால் நட்சத்திரங்கள் பனிக் கட்டியின் உருவில் நீரைச் சுமந்து வருபவை.

      ஒவ்வொரு சிறு வால் நட்சத்திரமும், இருபதிலிருந்து நாற்பது டன் எடையுடைய, நீரினைச் சுமந்து வந்து பூமியில் மோதுகின்றன.

       பூமி முதன் முதலாய் நீரின் சுவையை உணர்கிறது.

       பூமி மெல்ல மெல்ல வெள்ளக் காடாய் மாறுகிறது.

       பல மில்லியன் வருடங்களுக்கு முன், வால் நட்சத்திரங்களின் இடையறாதத் தாக்குதல்களால், விண்ணில் இருந்து வந்த நீர், பூமியைச் சூழத் தொடங்கியது.

       ஆழி சூழ் உலகு தோன்றியது

       சொடி கொடிகள் தோன்றித் தழைத்தன.

       உயிர் தோன்றியது, பரிணமித்தது, பல்கிப் பெருகியது.

       இன்றும்கூட. பூமியில் உயிர்களும், தண்ணீரும் உருவாவதற்கு அடிப்டையானப் பொருட்கள், பூமிக்கு வெளியில் இருந்து, வால் நட்சத்திரங்களின் மூலம் பூமிக்கு வந்திருக்கலாம் என்ற ஒரு விவாதம் அறிவியலாளர்களிடையே உள்ளது.
----
    

பகீரதன் என்பவன் தவம் செய்து, ஆகாயத்தில் இருந்த கங்கையை பூமிக்குக் கொண்டு வந்தான் என்ற ஒரு கதை, நம் புராணங்களில் உண்டு.
 
      கங்கையானது மலையில் தோன்றி, மெல்லக் கீழிறங்கி, சம வெளியில் ஓடும், நதியாகும்.

      விண்ணில் இருந்துதான் பூமிக்கு நீர் வந்தது என்னும் கருத்தினைக் கொண்டிருந்த நம் முன்னோர், இக்கருத்தினைத்தான், ஆகாய கங்கையாக, ஆகாயத்தில் இருந்து இறங்கிய கங்கையை, சிவன் தன் முடியில் தாங்கி, பூமிக்குக் கொடுத்ததாக உருவகம் செய்து காட்சிப்படுத்தி உள்ளனர்.

      நம் முன்னோர்களின் அறிவியல் சிந்தனையின் வெளிப்பாடே, குறியீடே, நடராசரும், கங்காதரர் உருவங்களுமாகும்.

---
     சூறைக் காற்று

     மேலை நாட்டினர், சூறைக் காற்றை டொர்னொடா என்று அழைப்பர்.

      பொதுவாக இவ்வகை மேகங்கள் வங்காள விரிகுடாவில் தோன்றுகின்றன.

      குளிர்ந்த காற்றும், மேகமும் சந்திக்கும்போது, வெப்பக் காற்றாக மாறி பூமியில் இருந்து, சூழன்று மேலெழும்பி, சூறைக் காற்றாய் சூழலத் தொடங்கும்.

       இவை இருபது கி.மீ உயரமும், அடர்த்தியும் கொண்டவை.

       இந்தவகைக் சூறைக் காற்று கடலில் தோன்றுமானால், கடலில் உள்ள மீன்களை எல்லாம், வாரி எடுத்து, தூக்கிச் சென்று, தன் வழுவினை இழக்கும்போது, நிலப் பரப்பில் மீன் மழையைப்  பெய்விக்கும்.

      நிலப் பகுதியில் இந்த சூறைக் காற்றுத் தொடங்குமானால், நிலத்தில் இருக்கும் பொருட்களை எல்லாம், மேலே தூக்கிச் சென்று, வெகு தொலைவு கடந்த பின், கீழே வீசும் தன்மை வாய்ந்தது.

      நம் நாட்டைப் பொறுத்தவரை, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், ஒரிசா, பீகார் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற பகுதிகளில் இந்த சூறைக் காற்று தோன்றுவதுண்டு.

      வங்காள மக்கள், சூறைக் காற்றை பைசாகி மாதப் பேரழிவு என்று அழைக்கின்றார்கள்.

       வட கிழக்கு மாநிலங்களில், இந்தச் சூறைக் காற்றை, யானையின் துதிக்கை என்று அழைக்கின்றனர்.

---
      


     
       காரானை

       காரானை எனில் முகில், யானை என்பது பொருளாகும்.

       காரானை விடங்கன் என்ற இறைவடிவம், திருவொற்றியூர் கல்வெட்டில் காணப்படுகிறது.

       ஒற்றைக் காலில், ஒரு பீடித்தில் சமச்சீராக  நிற்க, அவருக்கு வலப் பக்கம் பிரம்ம மூர்த்தியும், இடப் பக்கம் விஷ்ணுவும் இணைந்து தோன்றும் காட்சியே, ஏக பாத மூர்த்தி எனப்படும்.,

        இதன் வடிவம், பூமிக்கும் ஆகாயத்திற்கும் தூணாக காட்சியளிப்பதாகும்.

        காரானை  விடங்கரின் வடிவமும், ஏகபாத மூர்த்தி என்பதும், அறிவியலின் அடிப்படையில் சூறைக் காற்றுடன் தொடர்புடையதாகும்.

         காரானை

         காரானை என்பது மேகத்தின் ஒரு வடிவம்.

         காரானை என்பதனை, கடலில் இருந்து நீரினை உறிஞ்சும் மேகம் என, இலங்கையின் வட்டாரச் சொல்லாக, தமிழ் லெக்ஸிகன் பொருள் கூறுகிறது.

        காரானை

        கார் + யானை

        நீரை உறிஞ்சும் துதிக்கை போன்ற அமைப்பு.

       வடமொழியின் இதனை ஹத்தி நாரா (யானை மூக்கு) என்கின்றனர்.

       யானையின் துதிக் கையினையும், சூறைக் காற்றையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

      நம் முன்னோரின் அறிவியல் பார்வை புரியும்.

---
    

பல்வேறு சூறைக் காற்றுகளை, பல்வேறு யானைகளின் துதிக் கைகளுடன் ஒப்பிட்டுக் காட்டும் படம், ஒவ்வொன்றாய் திரையில் தோன்ற, வியந்துபோய் அமர்ந்திருந்தேன்.

      நம் முன்னோரின் ஒவ்வொரு சொல்லிலும், செயலிலும் ஆழப் புதைந்துள்ளது அறிவியலே என்பது தெரிந்தது.

      அறிவியலுக்கு உவமை காட்ட, துணைக்கு அழைக்கப்பட்ட உருவங்கள் நிலைத்து, தொடர்ந்து முன்னிறுத்தப்பட்டு, அவ்வுருவங்கள் உணர்த்த வந்த அறிவியல் கருத்துக்கள் மெல்ல மெல்ல மறக்கடிக்கப் பட்டிருக்கின்றன என்பது தெள்ளத் தெளிவாய் புரிந்தது.

      காலத்தின் கோலம் நிஜத்தை விட்டுவிட்டு, நிழல்களை வணங்கிக் கொண்டிருக்கிறோம்.

சிற்பங்கள் காட்டும் அறிவியல்

     சிறப்பானதொரு பொழிவினை வழங்கி. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் மெய் மறக்கச் செய்தவர், ஒரு தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர்.

      பள்ளி நேரம் போக இவரது வேலையே, தேடல்தான்.

      தஞ்சை மாவட்டத்தில் இருபதிற்கும் மேற்பட்ட புதிய கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்திருக்கிறார்.

      மன்னரும் மற்போரும், தஞ்சையில் சமணம் என்னும் இரு நூல்களின் ஆசிரியர்.

உன் நண்பன் யார் என்று சொல்
நீ யார் என்று சொல்கிறேன்
என்ற ஒரு சொல்லாடல் உண்டல்லவா?

      இதன் விளக்கம் இவர்தான்.

      நண்பர்களே, நீங்கள் நினைப்பது சரியானதுதான்.

       சமணம் என்று சொன்ன பொழுதே, பௌத்தத்தில் பெரு நாட்டமுடைய அன்பர், தங்கள் நினைவில் வந்திருப்பார்.

       ஆம், இவர், தாங்கள் நன்கு அறிந்த முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின், கெழுதகை நண்பர்.

       தேடல் என்பதை மையமாக வைத்துக் கொண்டு, இவர் பௌத்தத்தைத் தேட, இவரது நண்பரோ சமணத்தைத் தேடுகிறார்.


தில்லை கோ.கோவிந்தராஜன்

       இவரது தந்தை, தன் தந்தையின் பெயரினையே, தன் மகனுக்குச் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்.

        தாத்தாவும் கோவிந்தராஜன்

        பெயரனும் கோவிந்தராஜன்

        இவரது பெயருக்கு முன்னால், நெஞ்சம் நிமிர்த்தி நிற்கும், தில்லை என்பது, இவரது ஊர் பெயராகத்தான் இருக்க வேண்டும் என இதுநாள் வரை  நினைத்திருந்தேன்.

        தில்லையம்மன்

        இவரது குல தெய்வம் தில்லையம்மன்.

        தன் குலதெய்வத்தின் பெயரில், பாதியைத் தன்னோடு இணைத்துக் கொண்டவர் இவர்.

        ஆயினும் முழுமையான அறிவியல் பார்வைக்குச் சொந்தக்காரர்.

        பல வருடங்ளாக, முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின் மூலமாக, இவரை நான் அறிவேன்.

          ஆனாலும் இன்றுதான் இவரது பொழிவினைக் கேட்பதற்கான வாய்ப்பு கிட்டியது.

           தன்னிலை மறந்து, பொழிவில் கரைந்து போனேன் என்பதுதான் உண்மை.
---

     
      
        ஏடகம்

      ஞாயிறு முற்றம் சொற்பொழிவு

      கடந்த 8.4.2018 ஞாயிறன்று நடைபெற்ற, ஏடகச் சொற்பொழிவில்தான், தில்லையாரின், அறிவியல் மொழியைக் கேட்டேன்.

     பொழிவு முடிந்து, ஒளிப் படக்காட்சி நிறைவுற்று, அரங்கில் ஒளி வெள்ளம் பாய்ந்தபோது, ஒவ்வொருவர் உள்ளத்திலும், புது வெளிச்சம் புகுந்திருப்பதை உணர முடிந்தது.

     

முன்னதாக, விழாவிற்கு வந்திருந்தோரை, சுவடியியல் மாணவி செல்வி ஆர்.நிஷா அவர்கள் வரவேற்றார்.

      

முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள், நிகழ்விற்குத் தலைமையேற்று, தலைமையுரையாற்றி, தில்லையாரின், தேடலை மனம் மகிழ்ந்து பாராட்டினார்.

       

தமிழ்ப் பல்கலைக் கழக, ஓலைச் சுவடித்துறை, முனைவர் பட்ட மாணவர், திரு செ.சிபிவெங்கட்ராமன் அவர்கள் நன்றி கூற விழா இனிது நிறைவுற்றது.

      

செல்வி எஸ்.அபிநயா அவர்கள் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.

       திடீர் காய்ச்சலால் அவதியுற்றபோதும், சோர்வினை அகத்திலேயே அடைத்து வைத்துவிட்டு, முகத்தில் புன்னகை தவழ, வழக்கம் போலவே, தன் மாணவர்களை முன்னிறுத்தி, திறம்பட விழாவினை நடத்திய


ஏடகம் அமைப்பின் நிறுவுநர்
திரு மணி.மாறன் அவர்களின்
பணி போற்றுதலுக்கு உரியது.