17 பிப்ரவரி 2019

வண்ணங்கள்




     அது ஒரு குளிரூட்டப்பட்ட அறை

     நடுவில் ஒரு சொகுசு இருக்கை

     பார்த்தாலே நாவில் உமிழ் நீரை ஊற வைக்கும் உணவு வகைகள்

     ஒரே ஒரு சிவப்பு விளக்கு


     ஒரு மனிதனை அவ்வறையில் தனியே அமர வைக்கிறார்கள்

     அங்கிருந்த மனதிற்குப் பிடித்த, உணவு வகைகளை, ஒரு கை பார்த்தபடி, மகிழ்வாகத்தான் அமர்ந்திருந்தான்,

      ஒரு மணி நேரம் கடந்த நிலையில், அம்மனிதனுக்கள் எதோ ஒரு மாற்றம்.

      இனம் புரியாத ஓர் உணர்வு, அவன் உடலெங்கும் பரவத் தொடங்கியது.

      இரண்டே இரண்டு மணி நேரங்கள் கடந்த நிலையில், மன அமைதியை இழந்து தவிக்கத் தொடங்கினான்.

      முற்றாக ஒரு நாள் கழிந்த நிலையில், அம் மனிதன், முழுப் பைத்தியமானான்.

     உண்மை

     எந்தவொரு மனிதனாலும், சிவப்பு விளக்கின் ஒளியில் தொடர்ந்து அமர்ந்திருக்க முடியாது.

     சிவப்பு ஒளியின் தன்மை அப்படிப்பட்டது

     பல நாடுகளில் குற்றவாளிகளிடமிருந்து உண்மையை வரவழைக்க, சிவப்பு ஒளி மழையில் பல மணி நேரம் குளிக்க வைக்கும் முறையினைத்தான் கையாளுகிறார்கள்.

     ஒரு அடி அடிக்காமல், ஒரு மிரட்டு மிரட்டாமல், அத்துணை உண்மைகளையும் கொட்ட வைக்க, சிவப்பு விளக்கால் முடியும்.

     சிவப்பு ஆபத்து

     சிவப்பு வண்ணத்தினையும், பச்சை வண்ணத்தினையும், வெகு தொலைவில் இருந்தும் தெளிவாகப் பார்க்க முடியும்

     இதனால்தான் சிவப்பு விளக்கும், பச்சை விளக்கும் போக்குவரத்தினைச் சீரமைக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

     சிவப்பு, பச்சை இருக்கட்டும், சிறிது நேரம் கருப்பு, வெள்ளை பற்றிப் பேசுவோம்.

     வெள்ளையும், கருப்பும் நிறங்களே அல்ல என்பது, தங்களுக்குத் தெரியுமா?

     வெள்ளையை நீக்கிவிட்டால் கிடைப்பது கருப்பு

     எல்லா நிறங்களையும் உள்ளடக்கிய, ஒரு பொருளை, ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சுழற்றும்பொழுது, வெள்ளை மட்டுமே தெரியும், கவனித்திருக்கிறீர்களா?

     இதற்குக் காரணம் என்ன தெரியுமா?

      அனைத்து நிறங்களின் கூட்டுக் கலவைதான் வெள்ளை.

     கருப்பு நம்மைப் பொறுத்தவரை, துக்கத்தின் அடையாளம்

     ஆனால் ஆங்கிலேயர்களுக்கோ, கருப்பு உரிமையின் அடையாளம், அதிகாரத்தின் அடையாளம்.

      அதனால்தான் நீதிமன்ற உடையாக கருப்பை வைத்தனர்.

      வண்ணங்கள்

      பிறந்த மூன்று மாதக் குழந்தையால், மூன்றே மூன்று வண்ணங்களைத்தான் அடையாளம் காண முடியும்.

      சிவப்பு, மஞ்சள், ஊதா

      பொதுவாகவே, சின்னஞ்சிறு குழந்தைகளும், பெண்களும் அதிகம் விரும்பும் நிறங்கள் எவை தெரியுமா?

      பிங்க், வெளிர் ஊதா

      இந்நிறங்களை உடைய, உடைகளை அணியும்பொழுது, இவர்களுக்கு, ஒரு புது தெம்பு, புத்துணர்வு, புது நம்பிக்கை ஏற்படுவதை ஆய்வுகள் உணர்த்துகின்றன.

      நாம், நம் வீடுகளுக்கு வண்ணம் பூசும் பொழுது, கூடுதல் கவனத்தோடு, வண்ணங்களைத் தேர்வு செய்ய வேண்டும்.

      வெளிர் பச்சை போன்ற நடுநிலையான வண்ணங்கள் கண்களை உறுத்தாமல், இதமாகக் காட்சியளிக்கும் தன்மை வாய்ந்தவை.

      சிவப்பு, மஞ்சள் நிறங்களை முழுமையாக வண்ணம் பூசக் கூடாது, தேவைப்படும் இடங்களில், ஆங்காங்கே, தேவைக்குத் தகுந்தாற்போல் பயன்படுத்த வேண்டும்.

      வீடுகளுக்கு வண்ணம் பூசும் பொழுது, அடர் நிறங்களைப் பயன்படுத்தவே கூடாது.

      இந்நிறங்கள், வீட்டில் வசிப்போரிடம், எதிர்மறை எண்ணங்களையும், ஒரு வித எரிச்சல் உணர்வையும் ஏற்படுத்தும் குணம் வாய்ந்தவை.

      வண்ணங்கள்

      அண்மைக் காலங்களில் வாஸ்து, வாஸ்து என எதற்கெடுத்தாலும் வாஸ்து முன் வந்து நிற்கிறது

      வாஸ்து நாள் பார்த்துப் பணிகளைத் தொடங்குவது

      வாஸ்துபடி வீட்டை வடிவமைப்பது

      வீடு கட்டி முடிந்ததும், வாஸ்து வண்ணங்களால், வீட்டைக் குளிப்பாட்டுவது.

      வாஸ்து, வாஸ்து

      வாஸ்து வண்ணங்கள்

     

வாஸ்து வண்ணங்கள் என்றப் பெயரினையும் தகுதியினையும் பெற்று, இன்று வீட்டுச் சுவர்களில் நீக்கமற நிறைந்திருக்கும், வண்ணங்கள் யாவும், சூடான நிறங்கள் எனப் பெயர் பெற்றவை.

     அதாவது இவ்வண்ணங்கள், சூரிய ஒளியை எதிரொலித்து, சுற்றுச் சுழலை, கூடுதல் வெப்பமாக்கும் தன்மை வாய்ந்தவை.

     மற்ற வண்ணங்களைவிட, வாஸ்து வண்ணங்கள், சுற்றுப் புறங்களின் வெப்பநிலையை, எட்டு டிகிரி அளவிற்கு அதிகப் படுத்தும் வல்லமை பெற்றவை.

      பிரச்சினைகளைப் பேரம் பேசி விலைக்கு வாங்குவது என்பது இதுதானோ?

      வண்ணங்கள்

     இம்மனிதர் பேசப் பேச, அரங்கு முழுவதும் நிரம்பி வழிந்தோர் அனைவரும் வியந்துபோய்தான் அமர்ந்திருந்தனர்.

     

வண்ணங்களுக்குப் பின் இத்துணை தகவல்கள் ஒளிந்திருக்கின்றனவா என மலைத்துப் போனோம்.

    


இவர் திரையில் ஒரு படத்தை வண்ணத்தில் காட்டினார்.

     அடுத்த நொடி அதே படத்தை கருப்பு வெள்ளையில் காட்டினார்

      வண்ணங்களால் மனதிற்கு மகிழ்வை கொடுத்த ஒரு படம், அடுத்த நொடி, கருப்பு வெள்ளைக்கு மாறும் பொழுது, நமது மனம் மகிழ்வில் இருந்து, இனம் புரியா சோகத்திற்குத் தாவுவதை நேரிடையாய் உணர்த்தினார்.


சிக்கனக் கட்டுமானத்துறை வல்லுநர்
பொறியாளர் எஸ்.இராஜேந்திரன் அவர்கள்

  ண்    ங்    ள்

என்னும் தலைப்பில்
கடந்த 10.2.2019 ஞாயிறு மாலை நிகழ்த்திய
ஏடகம்
ஞாயிறு முற்றம்
பொழிவில்தான்
வண்ணங்களின் குணாதிசயங்களை உணர்ந்தேன்.


பொழிவிற்குத் தலைமையேற்ற
தஞ்சாவூர், மன்னர் சரபோசி அரசு கல்லூரியின்
தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்
முனைவர் சோ.கண்ணதாசன் அவர்கள்
சங்க இலக்கியங்களில் வண்ணங்கள் என்ற சொல்லுக்கு  ஒலி, என்ற பொருளுண்டு என்பதை பகிர்ந்து கொண்டார்.


ஏடகம் அமைப்பின் சுவடியியல் மாணவர்
திரு கி.அருண் மொழித்தேவன் அவர்கள்
நன்றி கூற விழா இனிது நிறைவுற்றது.


முன்னதாக விழாவிற்கு வந்திருந்தோரை,
ஏடகம் அமைப்பின் சுவடியியல் மாணவி
திருமதி வி.சண்முகவள்ளி அவர்கள்
வரவேற்றார்.


ஏடகச் செயலாளர்
பா.விஜி அவர்கள்
விழா நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.

திங்கள்தோறும் பொழிவு
பொழிவிற்குப் பொழிவு மெருகு
என மாதந்தோறும்
புதுப் புதுப் பொருண்மைகளில்
பொழிவுகளை
அருவிகளாய் ஆர்ப்பரிக்கச் செய்யும்
ஏடகம் நிறுவுநர்'

திரு மணி.மாறன் அவர்களின்
முயற்சி போற்றுதலுக்கு உரியது.

போற்றுவோம், வாழ்த்துவோம்