03 பிப்ரவரி 2019

கங்கைக் கரையினில்




     இன்றைக்கு சற்றேறக்குறைய, ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்.

     எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம்.

     கண்ணுக்கு எட்டியவரை எங்கும், எங்கெங்கும் மக்கள் தலைகள், தலைகள்.

     ஒவ்வொருவர் கையிலும் ஆயுதங்கள்.


     கடப்பாறை

     மண்வெட்டி

     கூடைகள்.

     மன்னர் தொடங்கி வைக்க, மக்களின் கைகளில் இருந்த, ஒவ்வொரு கடப்பாறையும், வெகுவேகமாய் கீழிறங்கி, மண்ணைப் பிளக்கின்றன.

     பெரிதினும் பெரிதாய் பூமியைத் தோண்டுகிறார்கள்.

     வெளிவந்த மண் ஓரிடத்தில் கொட்டப்பட, புத்தம் புதிதாய் ஒரு மேருமலையே உருவாகிவிடுமோ, என்ற எண்ணம் ஏற்படும் வகையில், மண்மேடு உருவாகிறது.

     மாதக் கணக்கில் பணி தொடர்கிறது.

     சொன்னால் நம்பமாட்டீர்கள்                                                                                                   

     இன்றைய கணக்குப்படி, 25 கிமீ நீளமும், 5 கிமீ அகலமும் உடைய, கடலோ என வியக்கும்படியான, ஒரு பேரேரி, மனித சக்தியால் உருவாக்கப் பட்டது.

     மனிதகுல வரலாற்றில், இப்பூமிப் பந்தில், செயற்கையாய் வெட்டப்பட்ட முதல் ஏரி.

     நாற்புறமும் உயர்ந்த கரைகள்.

     நடுவில் ஓங்கி உயர்ந்த ஒரு வெற்றித் தூண்

     அதன் கீழே ஒரு தொட்டி

     கிராணைட் கல்லால் ஆன ஒரு பெருந் தொட்டி.

     மேள தாளங்கள் முழங்க, யானையின் மீது கொண்டுவரப்பட்ட, தங்கக் குடங்களில் இருந்த, புனித நீரை, மன்னர் தன் கரங்களால், தொட்டியில் ஊற்றி நிரப்புகிறார்.

     மன்னர் கையசைக்க, அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெட்டப்பட்ட வடிகாலின் வழியே, நீர் திறந்து விடப்படுகிறது.

     கொள்ளிடத்து நீர், ஏரியில் நுழைந்து, மகிழ்ந்து, துள்ளி விளையாடி, பூமியையே குளிர்விக்கிறது.

      கொள்ளிடத்து நீர் ஏரியின் மையத்தை முத்தமிட்டு, மெல்ல மெல்ல உயர்ந்து, தொட்டியில் நிரப்பப்பட்டுள்ள, புனித நீருடன் கலந்து, புனித நீருக்குப் பேரேரியை அறிமுகம் செய்து வைக்கிறது.

      புனித நீர், ஏரியெங்கும் பரவுகிறது.

      ஏரி புனிதம் பெறுகிறது

      இப்புனித நீருக்காக, இம்மன்னன் பயணித்த தொலைவு கொஞ்சமல்ல.

     ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இரண்டாயிரம் கி.மீ பயணித்திருக்கிறான்.

     சென்ற இடங்களை எல்லாம், தன் வாள் முனையால், வென்று முன்னேறி இருக்கிறான்.

      தென்னகத்தில் இருந்து புறப்பட்ட இம்மன்னன், வடபுலம் வரை சென்று, இன்றைய  கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள, திருவேணி சங்கமத்தில் இருந்து, புனித நீரை, தங்கக் குடங்களில் கொண்டு வந்தான்.

     திருவேணிச் சங்கமம் என்றவுடன் புரிந்துவிட்டதல்லவா?

     ஆம், கங்கை ஆற்று நீரைத்தான் கொண்டு வந்தான்.

     தஞ்சை அரண்மனையில் பலகாலம், கங்கை நீரைப் பாதுகாத்தான்.

      புத்தம் புது ஏரி வெட்டும் பணி முடிந்தவுடன், தஞ்சையில் இருந்து, கங்கை நீரை, ஊர்வலமாய் எடுத்துச் சென்று, பேரேரியில் கொட்டி, பேரேரியையேப் புனிதப் படுத்தினான் இம்மன்னன்.

கங்கை கொண்டான்
கடாரம் கொண்டான்
எனச் சிறப்புப் பெயர் பெற்ற
மாமன்னன் இராஜேந்திர சோழன்

     தான்  வெட்டியப் பேரேரிக்குக் கங்கையை ஒட்டியேப் பெயரும் வைத்தான்.


சோழ கங்கம்

     இதுமட்டுமா, தான் புத்தம் புதிதாய் கட்டி எழுப்பிய, தன் புதிய தலைநகருக்கும் கங்கையின் பெயரையேச் சுட்டி மகிழ்ந்தான்.


கங்கை கொண்டசோழபுரம்

     கங்கை

     இந்திய மக்கள் அனைவராலும், மொழி, மாநில பாகுபாடின்றி, புனிதமாய்ப் போற்றப்பெறும் நதி.

     தமிழகத்தின் காவிரியைக் கூட நம் மக்கள், தட்சிண கங்கை என்றுதான் அழைத்து மகிழ்கிறார்கள்.

     சங்க இலக்கியங்களான, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, பட்டிணப்பாலை, நற்றினை, பரிபாடல், அகநானூறு, புற நானூறு முதலிய நூல்களும் கங்கையின் புகழைப் பாடுகின்றன.

     கங்கை

     இமயமலைத் தொடரில், சிவலிங்க மலை என்றொரு மலை.

     இம்மலையின் உயரம் 19,630 அடி.

     இம்மலையின் அடிவாரத்தில், இயற்கையாய் அமைந்திருக்கும் குகைதான் கோமுக்.

      இந்த கோமுக் குகையினுள், எப்படியோ உள் நுழைந்து உறையும் பனி, பின் உருகி, ஒரு நதியாய் தோற்றம் பெற்று வெளிவருகிறது.

      கோமுக் குகையில், எவ்விடத்தில், எவ்விதம் இந்த நதி உருப் பெறுகிறது, உயிர் பெறுகிறது என்பது, இன்று வரை யாருக்கும் தெரியாது.

      இந்நதியின் பெயர் பாகிரதி நதி.

     சிவலிங் மலையினின்று, 200 கிமீ தொலைவில், இருக்கும் மலை நீலகண்ட சிகரம்.

     இந்த நீலகண்ட சிகரத்தில் இருந்து, உதயமாகும் நதி, அழகு நந்தா.

     சிவலிங் மலையின் பாகிரதி நதியும், நீலகண்ட சிகரத்தின் அழகு நந்தாவும், கங்கோத்ரி என்னும் இடத்தில், இணைந்து, ஒரே நதியாய் புதிய உரு பெருகின்றன.

      இவ்விடத்தில் இருந்து, இந்த நதியின் புதிய பெயர் கங்கை.

      ஆம், பாகிரதி நதியும், அழகு நந்தாவும் இணைந்து, கங்கையாய் புதுப் பெயர் பெற்று, புதுப் பொலிவும் பெற்று, சம வெளியை நோக்கிப் பாய்கிறது.

      கங்கோத்ரியில் தொடங்கும் கங்கை, உத்தரகாண்ட், உத்திரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் வழி, கம்பீர நடைபோட்டுக் கடலில் சங்கமிக்கிறது.

      கங்கை புனித நதி மட்டுமல்ல.

      பல அதிசயங்களை உள்ளடக்கிய நதி.

      பத்ரி நாத்

      இந்தியர்களின் புனிதத் தலம்.

     பத்ரி நாத்

     ஆறு மாதங்கள், இங்கிருக்கும் மலையும், கட்டிடங்களும், பனியால் முழுவதுமாய் மூடப்பட்டு, செயலிழந்து, உறைந்து கிடக்கும் பகுதி.

     மீதமுள்ள ஆறு மாதங்கள் மட்டுமே, மனிதர்களால், தங்கள் காலடித் தடங்களை இங்கு பதிக்க இயலும்.

     நீரைத் தொட்டாலே, கையெல்லாம் உறைந்து போகும்.

     ஆயினும் ஓரிடத்தில், ஓரிடத்தில் மட்டும் நான்கு ஐந்து வெந்நீர் ஊற்றுகள் மக்களின் குடிநீர் தேவைக்கும், குளியல் தேவைக்குமாய், இயற்கையாகவே அமைந்து இருக்கின்றன.

     உறைந்த பனி மலையில் வெந்நீர் ஊற்றுகள்

     பேரதிசயம் அல்லவா.

--

     கோமுக் குகையில் தொடங்கி, மேற்கு வங்காளத்தில் கடலில் கடக்கும் பகுதிவரை, எங்களைக் கைபிடித்து அழைத்துப் பறந்து, பருந்துப் பார்வை வழி, கங்கை நதி முழுவதையுமே, கண் முன்னே ஓடவிட்டார் இவர்.

     இருண்ட அறையில், விளக்குகள் வெளிச்சம் பெற்ற பிறகுதான், சுய நினைவிற்கே வந்தோம்.

     ஒளிப்படக் காட்சிகள் மூலம், கங்கையையே ஒரு அறைக்குள், முழுவதுமாய் காட்சிப்படுத்திவிட்டார் இவர்.


வரலாற்றுப் பேரறிஞர்
முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

கலைப் படைப்புகளில் கங்கை

     கங்கை நதியானது, இந்திய, தமிழக ஓவியங்களில், சிற்பங்களில் எவ்வாறு காட்சிப் படுத்தப்பட்டுள்ளது என்பதையும், ஒளிப்படக் காட்சிகளுடன் விளக்க விளக்க, செவியோடு, கண்களுக்கும் ஓர் அற்புத விருந்து கிட்டியது.

---

ஏடகம்

ஞாயிறு முற்றம் சொற்பொழிவு

     கடந்த 20.1.2019 ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்ற, கலைப் படைப்புகளில் கங்கை என்னும் இந்த ஏடகப் பொழிவு, ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்றது.


மனிதநேயப் பண்பாளர்
வழக்கறிஞர் எஸ்.எஸ்.ராஜ்குமார் அவர்கள்
இவ்விழாவிற்குத் தலைமையேற்று.


ஏடகம் முதலாம் ஆண்டு மலரினையும்,


ஏடகம் மின்னிதழையும்

வெளியிட்டுத் தலைமையுரையாற்றினார்.

     ஏடகப் பொழிவுகளை, திங்கள்தோறும் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் அல்லவா, அப்பகிர்வுகளையும், ஏடகத்தின் செயல்பாடுகளையும் இணைத்துத் தொகுத்து மலராக்கி வெளியிட்டார்கள்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்
அவர்கள் முதற்படியினைப் பெற்றுக் கொண்டார்.

     விருந்திற்கு அழைத்து, வயிரார அமுது படைத்து, ரசித்து ரசித்து, ருசித்து, ருசித்து விருந்துண்டவருக்கு, மாலை அணிவித்து, சிறப்புச் செய்து வழியனுப்பினால் எப்படியிருக்கும், அதுபோன்றச் செயலையும், அடுத்ததாகச் செய்தார்கள்.

    

ஏடக நிகழ்வுகளை ரசித்து, ரசித்து, வியந்து, வியந்து, மனமகிழ்ந்து, தங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்காக, எனக்கும் சிறப்பு செய்தார்கள்.

     ஏடக நிறுவுநருக்கு என் தனி நன்றி.


மன்னர் சரபோசி அரசு கலைக் கல்லூரி, உதவிப் பேராசிரியர்
முனைவர் வி. பாரி அவர்கள்
தன் இயல்பானப் பேச்சால்
நன்றி கூற
விழா இனிது நிறைவுற்றது.


முன்னதாக விழாவிற்கு வந்திருந்தோரை
ஏடக நிறுவுநர்
திரு மணி.மாறன் அவர்கள்
வரவேற்றார்.


சுவடியியல் மாணவி,
செல்வி இராச.பாரதி நிலா அவர்கள்
விழா நிகழ்வுகளை
அழகுற, பாங்குற, தெளிவுறத்
தொகுந்து விழாவிற்கு மெருகூட்டினார்.


பெரும் பொருட் செலவில்
ஏடகம் ஆண்டு மலரினை
வெளிக்கொணர
அயரா, தளரா முயற்சி மேற்கொண்ட
ஏடகம் நிறுவுனர்
திரு மணி.மாறன் அவர்களின்
முயற்சி
பாராட்டிற்கு உரியது.

வாழ்த்துவோம், பாராட்டுவோம்.

-----------


நண்பர்களே, வணக்கம், நலம்தானே,

     வலை உலகிற்குள் முகம் நுழைத்து, சற்றேறக்குறைய ஒரு திங்களாகிவிட்டது.

     தவிர்க்க இயலா நிலை.

     நாளை முதல், வலையுலகிற்குள் நுழைந்து, தங்களின் எண்ணங்களைச் சுமந்து வரும், பதிவுகளோடு, கரம் குலுக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறேன்.

     இனி தொடர்ந்து பதிவுகளின் வழி, உறவாடி, உரையாடி மகிழ்வேன்.

     நாளை முதல் சந்திப்போம் நண்பர்களே,

என்றென்றும் பேரன்புடன்,

கரந்தை ஜெயக்குமார்