சுவடி
ஓலைச் சுவடி
பனை ஓலைகளைத் தேவையான அளவில் கத்தரித்து, வெயிலில்
உலர்த்த வேண்டும்.
நன்றாகக் காய்ந்த பலை ஓலைகளை, தண்ணீரில் இட்டு,
நன்கு வேக வைக்க வேண்டும்.
ஏடுகள் நீரில் கொதிக்கக் கொதிக்க, அதன் விரைப்புத்
தன்மை நீங்கி, மிருதுவாகி, நெகிழ்வுத் தன்மையினைப் பெறும்.
மீண்டும் ஏடுகளைக் காய வைக்க வேண்டும்
காய்ந்த பிறகு, சங்கு அல்லது மழுமழுப்பானக் கல்
கொண்டு நன்றாகத் தேய்க்க வேண்டும்.
இதனால் ஏட்டில் ஒரு புதிய பளபளப்புத் தோன்றும்.
நேராகத் தகடுபோல் நிற்கும்.
பனை ஓலை தயார்.
எழுத்துக்களைச் சுமக்க பனை ஓலை தயார்.
---
தொடக்க காலத்தில், கல், களிமண்,
பலகை, உலோகத் தகடு, துணி, இலை, மரப்பலகை, தோல் போன்றவைகள்தான் எழுது பொருளாக, நம் முன்னோர்களால்
பயன்படுத்தப்பட்டன.
ஆனாலும் இலக்கியங்களை, பெரும் காப்பியங்களை கல்லிலோ,
களி மண்ணிலோ, தோலிலோ பதிக்க இயலாததால், இவையெல்லாம், வாய்மொழி இலக்கியங்களாகவே காலம்
தோறும் தொடர்ந்தன.
பழங்கால ஆசிரியர், தான் இயற்றிய நூலையோ, தன்
ஆசிரியரிடம் அவர் கற்று வந்த நூலையோ, மனதில் நிறுத்தி, மனப்பாடம் செய்து, தன் மாணவர்களுக்கு,
வாய்மொழியாகவே பாடம் சொல்லுவார்.
மாணவர்களும் மனப்பாடம் செய்து, பிறருக்குப் பரப்புவர்.
இப்படித்தான் நம் இலக்கியங்கள் மெல்ல மெல்லப்
பரவின.
நக்கீரர் செய்த களவில் உரையை
– தம் மகனார்
கீரங் கொற்றனாருக்கு உரைத்தார்
– கீரம்கொற்றனார்
தேனூர் கிழாருக்கு உரைத்தார்.
என்னும்
வரிகள் இதனையே உறுதி செய்கின்றன.
பெரும் காப்பியங்களைக் கல்லில் வடிக்க வழியில்லை.
வாய்மொழியாகவே எத்துணை காலம்தான் தொடர்வது?
வேறு வழியே இல்லையா? என ஆராய்ந்த மனிதன், பனையோலையைக்
கண்டு பிடித்தான்.
ஓலைச் சுவடி பிறந்தது.
பனை ஓலை எழுது பொருளாய், ஓலைச் சுவடியாய், எப்பொழுது,
எக்காலத்து, முதன் முதலில் பயன்பாட்டிற்கு வந்தது, என்பது இன்று வரை, நாம் அறியா இரகசியம்.
ஓலைச் சுவடிகள்
எனவே, மற்ற பகுதிகளை விட, தமிழகத்தில் ஓலைச்
சுவடிகள் பல்கிப் பெருகின.
மிகப் பெரும் நூலையும், ஒரே கட்டாய் கட்டி, எளிதில்,
ஓரிடத்தில் இருந்து, வேறிடத்திற்கு எடுத்துச் செல்லவும் முடிந்ததால், சுவடிகள் பெருகி
மலை மலையாய் குவிந்தன.
ஆம், இலக்கியங்கள், இலக்கணங்கள், சோதிட நூல்கள்,
வான நூல்கள், சித்த மருத்துவ நூல்கள் என, நம் முன்னோர் ஓலைச் சுவடிகளில் எழுதிக் குவித்தவை
ஏராளம், ஏராளம்.
பிற்காலத்தில், மக்களின் மூட நம்பிக்கைகளால்,
போகி என்னும் பெயரில், நெருப்பில் கருகியும், ஆற்று நீரில் மூழ்கி மூச்சுத் திணறியும்
மறைந்த சுவடிகளும் ஏராளம், ஏராளம்.
இருப்பினும், இன்னும், இன்றும், சுவடிகள் மீதமிருக்கத்தான்
செய்கின்றன.
கன்னியாகுமாரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில்,
பலரது வீடுகளின் பரண்களில், மீளா உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் சுவடிகள் எவ்வளவு தெரியுமா?
சொன்னால் நம்ப மாட்டீர்கள்
ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் மூன்று இலட்சம்,
ஆம் மூன்று இலட்சம் சுவடிகள் முடங்கிக் கிடக்கின்றன.
ஆம், இலட்சக் கணக்கில் சுவடிகள் இருக்கின்றன.
இதுவரை வெளிவராத இலக்கியங்கள், மருத்துவ முறைகள்
எனப் பல்வகைப் பொக்கிசங்கள், இச்சுவடிகளில் புதையுண்டு கிடக்கின்றன.
சுவடிகளில் மூழ்கி முத்தெடுத்து, முத்துக்களையும்
பவளங்களையும் வெளிக் கொணர்வதற்குத்தான் ஆளில்லை.
என்ன? சுவடியைப் பார்த்துப் படித்து செய்திகளைக்
கூற ஆளில்லையா? என நீங்கள் வியப்பது புரிகிறது.
ஆள் இல்லை
ஆளே இல்லை.
வேதனை அல்லவா.
இதுவரை, இதுநாள் வரை நம்மிடம் இலட்சக் கணக்கில்
குவிந்திருக்கும் சுவடிகளைப் படித்துப் படியெடுத்து, பதிப்பித்து வெளி வந்திருக்கும்
நூல்களின் சதவீதம் என்ன தெரியுமா?
வெறும் ஒன்பது சதவீதம்.
அவ்வளவுதான்
மீட்பர் யாருமின்றி சுவடிகள் ஏங்கித் தவித்துக்
காத்துக் கிடக்கின்றன.
சென்னையில், மத்திய நிறுவனத்தின் சித்த மருத்துவக்
கல்லூரியில், எட்டாயிரம், சித்த மருத்துவச் சுவடிகள், நான்கு சுவர்களுக்குள் கூனிக்
குறுகிக் கிடக்கின்றன.
குளிரூட்டப்பட்ட அறை
மேசை, இருக்கை வசதி
மாதம் 35,000 ஊதியம்
மத்திய அரசின் பணி
அதுவும் நிரந்தரப் பணி
வேலை, சுவடிகளில் உள்ளதைப் படித்து நகலெடுத்துப்
பதிப்பிக்க வேண்டும்.
கடந்த நான்கு வருடங்களாக, ஒருவர் கூட கிடைக்காமல்,
இச்சுவடிகள் எல்லாம், இன்று வரை அனாதைகளாய் அழுதுகொண்டே இருக்கின்றன.
வேலை இல்லா திண்டாட்டம் ஒரு புறம்
வேலைக்கு ஆளே இல்லாத திண்டாட்டம் மறுபுறம்
எவ்வளவு முரண் பட்ட நாட்டில் நாம் வாழ்ந்து வருகிறோம்,
பார்த்தீர்களா?
இதைவிட வேதனை, கொடுமை என்ன தெரியுமா?
நம் நாட்டில் இருக்கும் பல மருத்துவச் சுவடிகள்,
விமானம் ஏறிப் பறந்து சென்றுவிட்டதுதான்.
பல வெளி நாடுகள், நம் தமிழ்ச் சுவடிகளைப் படித்து,
அதன்படி மருந்துகள் தயாரித்து, அவர்களது கண்டுபிடிப்புபோல், நம்மிடையே விற்று.,காசு
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நம் பாட்டன் வீட்டுச் சொத்து என்பதுகூடத் தெரியாமல்,
நாம் பெருந்தொகையைக் கொட்டிக் கொடுத்து, மருந்துகளை வாங்கி, அயல் நாட்டவர்களைச் செல்வந்தர்களாக்கி
வருகிறோம்.
சென்னையில் அமைந்திருக்கும் உலகத் தமிழாராய்ச்சி
நிறுவனம், இந்நிலையினை மாற்றப் பல்வேறு முயற்சிகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது.
இந்நிறுவனத்தின் முக்கிய முயற்சி
ஏடு படிக்கக் கற்றுத் தருதல்
சுவடியியல் பட்டயப் படிப்பு
மிகவும் குறைந்த கட்டணம்
தேர்ச்சி பெற்றவுடன் உடனடி வேலை வாய்ப்பு
பலர் சேருகிறார்கள்
படிக்கிறார்கள்
தேர்வு எழுதுகிறார்கள், நல்ல மதிப்பெண்ணும் பெறுகிறார்கள்
ஆனாலும், தேர்ச்சி பெறாமல் இருக்கிறார்கள்.
காரணம், பாடதிட்டத்தின் நிறைவுப் பகுதியாய்,
ஒவ்வொரு மாணவரும், ஏதேனும் ஒரு சுவடிக் கட்டைத் தேர்ந்தெடுத்து, படித்து நகலெடுத்து,
தனியொரு நூலாகப் பதிப்பித்துத் தரவேண்டும்.
கடந்த நான்கு வருடங்களாக, மாணவர்களால், ஒரு நூல்கூட
பதிப்பிக்கப் பெறவில்லை.
முக்கால் கிணறு தாண்டியவர்கள், முழுக் கிணற்றையும்
தாண்ட மறுக்கிறார்கள்.
சுவடியியல் வேலை வாய்ப்பு வா, வா என இருகரம்
நீட்டி அழைக்கிறது.
நம் இளைஞர்களோ, அலைபேசியின் ஒலி வாங்கியைக் காதுகளில்
சொருகிய படி, அலைபேசியையே உலகாய் எண்ணி வலம் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.
--
ஏடகம்
ஏடு + அகம்
இந்நிலையைப் போக்க, இந்த இழிநிலையை அகற்ற எண்ணிய
ஏடகம், இன்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துடன், கரம் கோர்த்து, களத்தில் இறங்கி இருக்கிறது.
திரு மணி.மாறன்
ஏடகம்
அமைப்பின் நிறுவுநர்
ஓலைச்
சுவடி படித்தலில், தமிழகத்தின் தலை சிறந்த வித்தகர்.
இவர்,
தஞ்சை, சரசுவதி மகால் நூலகத்தின்
தமிழ்ப்
பண்டிதர்
தன் பணிச் சுமையைக்
கொஞ்சமும் பொருட்படுத்தாது,
சுவடி காக்கப்
புறப்பட்டிருக்கிறார்.
கடந்த பல வருடங்களாகவே, மாலை நேரங்களில், ஆர்வத்துடன்
வருவோர்க்கு, கட்டணம் ஏதுமின்றி, சுவடி படிக்கும் பயிற்சியினை வழங்கி வருகிறார்.
தற்போது, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல்
படிப்பை, தனது ஏடகம், நிறுவனத்தின் மூலம், குறைந்த கட்டணத்தில், பட்டயப் படிப்பாக வழங்க,
ஒப்புதல் பெற்றிருக்கிறார்.
கடந்த 26.1.2019 சனிக் கிழமை மாலை,
தமிழ்ச்
சுவடியியல் மற்றும் பதிப்பியல்
பட்டய
வகுப்பின்
தொடக்க
விழா
நடைபெற்றது.
நாம் மேலே கண்ட, சுவடியியல் தகவல்கள்
அனைத்தும், இத்தொடக்க விழாவில், நான் காதாரக் கேட்டவற்றின் சில துளிகள்தான்.
முதுமுனைவர்
குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள்
இவ்விழாவிற்குத் தலைமையேற்று
தலைமையுரை ஆற்றினார்.
தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி மண்டல
தமிழ் வளர்ச்சித் துறை
துணை இயக்குநர்
திரு
க.பொ.இராசேந்திரன் அவர்களும்,
சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன
உதவிப் பேராசிரியர்
முனைவர்
சு.தாமரைப் பாண்டியன் அவர்களும்
வாழ்த்துரை வழங்கினர்.
இவ்விழாவின் போது, தமிழ்ச் சுவடியியல் மற்றும்
பதிப்பியல் பட்டயப் படிப்பில், சேர்ந்துள்ள 30 மாணவர்களுக்கு, பாட நூல்கள் வழங்கப்பட்டன.
மாணவர்கள் மட்டுமின்றி, முனைவர் பட்டம் பெற்ற,
பேராசிரியர்களும், இப்பட்டயப் படிப்பில், தங்களை இணைத்துக் கொண்ட காட்சியினைக் கண்ணாரக்
கண்டபோது, முடங்கிக் கிடக்கும், சுவடியியல் படிப்பு, புத்துணர்வு பெறும், புத்துயிர்
பெறும், புதுப்புது நூல்கள், பதிப்பிக்கப் பெற்று, தமிழ் மொழி மேலும் வளம் பெறும் என்னும்
நம்பிக்கை பிறக்கத்தான் செய்தது.
ஏடகப் பொருளாளர்
திருமதி
கோ.ஜெயலட்சுமி அவர்கள்
நன்றி கூற, தொடக்க விழா இனிது நிறைவுற்றது.
தஞ்சாவூர், பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
தமிழ்த்துறைத் தலைவர்
முனைவர்
க.ஆனந்தி அவர்கள்,
விழா நிகழ்வுகளைப் பாங்குற தொகுத்து வழங்கினார்.
முன்னதாக,
விழாவிற்கு வந்திருந்தோரை
ஏடகம் நிறுவுநர்
திரு
மணி.மாறன் அவர்கள்
வரவேற்றார்.
இன்றைய
சுயநல உலகில்,
தனக்கென்ன
கிடைக்கும்,
தன் குடும்பத்திற்கு
என்ன சேர்க்கலாம்,
என்று
எண்ணாது,
சுயநலம்
துறந்து,
தமிழ்நலம்
நாடி,
தமிழ்ச்
சுவடியியல் பட்டய வகுப்பைத்
தொடங்கி
இருக்கும்,
திரு மணி.மாறன் அவர்களின்
முயற்சியைப்
போற்றுவதும்,
வாழ்த்துவதும்
என்றென்றும்
உறுதுணையாய் நிற்பதும்
தமிழராகிய
நம் கடமையாகும்.
துணை நிற்போம், தோள் கொடுப்போம்..