02 மார்ச் 2021

மறதியில் கரையாத நாள்கள்


என் கரந்தை நாள்களில்

மறதியில் கரையாத நாள்களில்

அதுவும் ஒன்று.

ஆயிரம் ஆயிரம் மாணவர்கள்

ஏதன்சு ஞானியின்

இளவல் முகம் பார்க்க,

ஈரோட்டு புத்தன்

விழிகளை தரிசிக்க,

சுதந்திரச் சிந்தனையாளனின்

சொற்களைக் கேட்க . . .

புரட்சிக் கவிஞரின்

தேனருவில் ஆடிக் களிக்க…

பூகம்பப் பாட்டுக்காரனின்

பூபாள வரிகள் கேட்க

உணர்ச்சிப் பிழம்புகளாகத்

திரண்டார்கள்.

     இரு சூரியர்கள், ஒரு வானில், ஒரு பொழுதில் வந்ததுபோல், மேடையில் தந்தைப் பெரியாரும், புரட்சிக் கவிஞரும் தோற்றம் கொடுத்தனர்.

     பாவேந்தர் பேச எழுந்தார்.

     இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழுக்குத் தலைவன் இல்லை.

     இதோ, தலைவன்.

     உங்கள் கண் முன்னால்.

     இவர் கையில் ஆயுதமாக உங்களை ஒப்படையுங்கள்.

     நீங்கள் விரும்பும் தமிழ் மீளும், தமிழ் நாடு வாழும்.

     முண்டங்களாய், முட்டாள்களாய் இதுவரை இருந்தது போதும்,

     இன்னும் அப்படி இருக்க வேண்டுமா?

     உங்களுக்குள் இருக்கும் தமிழனை, மதங்கள், சமயங்கள், வேதங்கள், வியாக்யானங்கள் எல்லாம் அழுத்தி, அழுத்தி அவமானச் சேற்றில் புதைத்து விட்டன.

     உங்களுக்குள் இருக்கும் தமிழனை, உங்கள் சாதிகளே வீழ்த்திவிட்டன.

     முதலியாரில் இருந்து நாயுடு, நாட்டாரில் இருந்து வன்னியர், படையாச்சியில் இருந்து தமிழனை விடுதலை செய்ய, தமிழனுக்குச் சுயமரியாதையை மீட்டுத்தர, இவரை விட்டால் நாதியுண்டா?

     அன்று புரட்சிக் கவிஞர் பேசிய பேச்சில் வெளிப்பட்ட கருத்துகள், இன்றும் இவர் உள்ளிலிருந்து புறப்பட்டுப் போகாமல், பத்திரமாய் பசுமரத்தாணியாய் பதிந்து கிடக்கிறன.

     பாவேந்தரை முதன் முதலாய், நேரில் பார்த்த நினைவுகளை, நினைத்துப் பார்க்கிறார்.

புரட்சிக் கவிஞருக்குப் பக்கத்தில் இரு

புரட்சிக் கவிஞர் தேவை தெரிந்து நிறைவு செய்

     கரந்தையில், கரந்தைப் புலவர் கல்லூரி மாணவராய் இவர் இருந்தபோது, பேராசிரியர் ந.இராமநாதனார் இவருக்கு இட்ட உத்தரவு, இன்றும் இவர் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

     பக்கத்திலேயே, பாரதிதாசனுக்குப் மிகமிகப் பக்கத்திலேயே நின்றார்.

     பேசினார்.

     கைகளால் தொடவில்லை.

     கண்களால் அடிக்கடித் தொடாமல் இருக்க, இவரால் முடியவில்லை.

     காந்த அலைகள் அடிப்பதுபோல், அவரிடமிருந்து பரவி வந்த, கவிதை அலைகள் இவர் மீது அடித்தன.

     அவருக்குப் பழங்கள் பிழிந்து, பருகச் சாறு தந்தார்.

     புகைக்கச் சுருட்டுகள் தேவை என்றபோது, கட்டு கட்டாய் அவர்முன் காணிக்கை வைத்தார்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில், தமிழ்ப் பெருமன்ற மேடையில், பாவேந்தர் ஆற்றியப் பொழிவில், இவர் மயங்கித்தான் போனார்.

     இவரே எழுதுகிறார்.

     தமிழ்ச் சிறுத்தை ஒலி பெருக்கி முன் வந்து நின்றது.

ஆற்றொழுக்கா

இல்லை

கடல் கொந்தளிப்பு.

அரிமா நோக்கா?

இல்லை

வேங்கைப் பாய்ச்சல்.

அவர் பேச்சில்

சுருங்கச் சொல்லல்  இல்லை

சூடாய் சொல்லல் இருந்தது.

விளங்க வைத்தல் இருந்தது

அதைவிட

வினாவ வைத்தல் இருந்தது.

நன்மொழி புணர்தல்

இருந்தது

அதைவிட

வன்மொழி தெறித்தல் மிகுந்தது.

விழுமிய பயத்தல் இருந்தது

அதைவிட

வேட்டைப் பாய்ச்சல் இருந்தது.

உத்திகளுக்கெல்லாம்

புதிய புத்தி இருந்தது.

ஆம், கரந்தையில்

மையம் கொண்டிருந்த

கவிதைப் புயல்

மேகம்

மின்னியது

இடித்தது

தமிழ் மழை பொழிந்தது.

     கரந்தையில் பாவேந்தரைக் கண்ட நாள் முதல், அருகிருந்துப் பேசி, பணிவிடைகள் செய்து, அவர்தம் தமிழ் மழையில் நனைந்தநாள் முதல், இவர் உள்ளம், பாவேந்தருக்கு அடிமையாகிப் போனது.

     இவர் மாணவராக இருக்கும் பொழுதே, மீண்டும், 1959 இல் கோடை கொப்பளிக்கும் சித்திரைத் திங்களில், தஞ்சைக்கு வந்தார் புரட்சிக் கவிஞர்.

     தமிழகப் புலவர் குழு, தஞ்சைப் பெருநகரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வரவேற்பை, அவருக்காக இயற்றியது.

     அன்று கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில்தான், புலவர் குழுவிற்குப் பெருஞ்சோறும், பீடுமிகு வரவேற்பும்.

வடவாற்றின் அலைகளில்

துள்ளலோசைக் கலிப்பாக்கள்.

சங்க வளாகத்து மரங்களின்

கிளைகளிடையே  இலைகளிடையே

வரவேற்கும் காற்றின் உதடுகளில்

தப்பாத செப்பலோசை வெண்பாக்கள்.

ஆசிரியர்கள் மாணவர்கள்

ஆர்வலர்கள் எல்லாம்

சங்கம் புனைந்து வைத்த

அகவலோசை ஆசிரியப்பாக்கள்.

தூங்கலோசை வஞ்சிப்பாக்கள் மட்டும்

விடுமுறை போட்டுவிட்டு எங்கேயோ

தூரத்தில் போய்விட்டன.

     கரந்தையில் மாணவராய் இருந்தவர், ஈரோட்டுப் பள்ளியில் ஆசிரியராய் அமர்ந்தபோதும், பாவேந்தரே, இவர் உள்ளம் முழுதும் நிறைந்திருந்தார்.

     புரட்சிக் கவிஞர் வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே, ஆண்டுதோறும் அவருக்குப் பிறந்தநாள் விழா எடுத்தார்.

     அதுமட்டுமல்ல, தமிழ் நாட்டிலேயே முதன் முதலாய், பாரதிதாசன் இலக்கியங்களைப் பட்டிமண்டபப் பொருளாக்கி, மேடையேற்றினார்.

     அதுநாள் வரை, கம்பனில், சேக்கிழாரில், வள்ளுவரில், இளங்கோவில் பட்டிமண்டபம் பாங்குற நடத்தி வந்தவர்களை, கேட்டு வந்தவர்களை, திகைப்பும் வியப்பும் அடையச் செய்தார்.

     புரட்சிக் கவிஞர் கவிதைகளில் விஞ்சி நிற்பது காதலா? வீரமா?

     நடுவராக இவர்.

     இரண்டு அணிகளிலும், புலமைமிக்கத் தமிழ்ப் பேராசிரியர்கள்.

     நிரம்பி வழியும் அரங்குகள்.

     காதல் கவிதைகள் கேட்டு கண்ணம் சிவந்தனர்.

     கண்களின் ஆழத்தில் கனவுகள் திறந்தனர்.

     வீரக் கவிதைகளின் வெப்பம் தாக்கிக் கொப்பளித்துப் போயினர்.

     வீரத் தோள்கள் உயர்த்தித் தமிழ்ப் பகைக்கு அறைகூவல் விடுத்தனர்.

     பாரதிதாசன் பாடல்களை அதுநாள்வரை அறியாதவர்கள், அறிந்து விருப்பம் கொண்டிருந்தவர்கள், வெறுப்பு கொண்டிருந்தவர்கள் எனப் பல தரப்பட்டவர்களும் விரும்பி, விரும்பி பாரதிதாசன் பாடல்களைச் சுவைத்தனர்.

     பக்திப் பனுவல்களில், காப்பியக் கதைகளில், உள்ளம் தோய்ந்தவர்களும், பாரதிதாசன் கவியுள்ளம் கண்டு கிறங்கிப் போனார்கள்.

     பட்டிமண்டபங்கள் தொடர்ந்தன.

     இவரும் பாவேந்தரின் பாசப் பிடியில் கட்டுண்டு கலந்து போனார்.

     இவர் ஒருமுறை, சென்னை, தியாகராய நகரில் இருந்த, பாவேந்தரின் இல்லத்திற்குச் சென்றார்.

     வயிற்றிலோ பசி உரத்துக் குரல் கொடுத்தது.

     உணவு நேரமோ கடந்து விட்டது.

     திடீரென்று ஒரு வீட்டில், உணவை எதிர்பார்க்கக் கூடாது, வீட்டார்க்குத் தொல்லை தரக் கூடாது என்ற எண்ணம் இவருக்கு.

     வீட்டின் வெளிப்புறத்திலே புரட்சிக் கவிஞர்.

     முகம் மலர வரவேற்றார்.

     கை பெட்டியை வீட்டிற்குள் வைத்தவர், நான் ஏதாவது விடுதியில் உணவருந்திவிட்டு வந்து விடுகிறேன் என்றார்.

     ஏம்பா, சுத்த இவனா இருக்கிறே, உள்ளே போய் சாப்பிடு.

     பரவாயில்லை. நான் கடையில் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுகிறேன்.

     கடையிலே சாப்பிடப் போறதுன்னா, உன் பெட்டியையும் எடுத்துக்கிட்டுப் போ, போய்ச் சேரு.

     பாவேந்தரின் அன்புச் சீற்றம் கண்டு அடங்கித்தான் போனார்.

     1965 ஆம் ஆண்டில், நெஞ்சில் நிழல் என்னும் புதினத்தை இவர் எழுதி, பாவேந்தரிடம் காட்டியபோது, சற்றும் தயங்காது, உடனே கிளம்பு என இவரை பாரி நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

     இதை வெளியிடுங்கள் எனக் கட்டளையிட்டார்.

     பாரி பதிப்பக உரிமையாளர், மிக இளையவராக, மிக, மிக இளைத்தவராக இருந்த, இவர் மீது பார்வையைப் படர விட்டார்.

    ஆள் இப்படி இருக்கிறதா நினைக்க வேண்டியதில்லை.

    ரொம்ப கீர்த்தியுள்ளவர்.

     இன்னும் பெரிசா வளர்வார்.

     நெஞ்சின் நிழல் நூலாய் வெளிவந்தது.

     பாவேந்தரின் வாக்கும் பலித்தது.

     கவிஞரின் அன்பை, அரவணைப்பை பெற்ற இவர், தனது புதினத்தை கவிஞருக்கே படையலாக்கி, பின்வரும் பாட்டு வரிகளால், அதனை நாட்டி வைத்தார்.

உறவானார், ஒளியானார்

உணர்வானார், என் நெஞ்சம்

மறவாத உருவானார்

மாண்புயர்ந்த பாவேந்தர்

இறவாத மலரடிக்கே

இந்நூலைப் படைப்பதனால்

பிறந்தபயன் பிறந்திட

பேருவகை அடைகிறேன்.

     பாவேந்தரின் மாறா அன்பைப் பெற்ற இவர் யார் தெரியுமா?

பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்

பழகியுள்ளேன்.

மலைகளோடு உறவு கொண்ட

நாட்கள் அவை.

கடல்களோடு கைகோர்த்துக் கொண்ட

நாட்கள் அவை.

 

எனக்கு எழுதிய மடல்களில்

அவர் விரல்களில்

ஊறித் ததும்பிய நிலவின்

ஈரம் இருந்தது.

 

அவருடனான

முதல் சந்திப்பின் பாச முத்தம்

என்  கடைசி மூச்சிலும்

கமழந்து கொண்டிருக்கும்.

 

இது

போதாதா-

நான் வாழ்ந்திருக்கிறேன் – வாழ்கிறேன்

வாழ்வேன் என்பதை உலகுக்குச் சொல்ல

ஆம், இவர்

பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள் பழகியவர்.

இவர்

திருவள்ளுவர், இளங்கோ, கம்பர், பாரதி, பாரதிதாசன்

என்று தொடரும் – சுடரும்

தனித்துவக் கவித்துவ உச்சங்களின்

தொடர்ச்சியாக

இன்று

நம்மிடையே வாழ்பவர்.

முழுப்பாட்டும் சுவைப்பாட்டே வாழ்க தோழர்

முன்தோன்றும் காலமிவர் காலமாகும்

எனக் கவியரசு கண்ணதாசனால் பாராட்டப்பட்டவர்.

மகாகவி பாரதிக்குப் பிறகு தமிழ்க் கவிதை அவ்வளவாக வளர்ந்து விடவில்லை என்றுதான், நான் கருதிக் கொண்டிருந்தேன். இவரைப் படித்தபிறகு என் கருத்தை மாற்றிக் கொண்டேன்.

என்று எழுத்தாளர் ஜெயகாந்தனால் போற்றப் பெற்றவர்.


நாட்டின் நிலைகாட்டி

நல்லத் தமிழ் திறன்காட்டி

நீட்டோலை வாசிக்கும்

நீடுபுகழ் இளங்கவிஞர்

நல்லிளைஞர் உற்சாக

மிகுதியுடன் இன்று கவிஎழுதி

இணையின்றிப் பாடுகிறார்.

மன்றில் மக்களெல்லாம்

சுவைத்து மகிழ்கின்றனர்.

என்றன் இளவல் ஈரோடு தமிழன்பன்

நன்று வாழியவே நாட்டில்

என்று முத்தமிழ் வித்தகர் கலைஞர் அவர்களால் வாழ்த்தப் பெற்றவர்.



மகாகவி ஈரோடு தமிழன்பன்

இவரது நினைவுக் கிடங்கில் இருந்த

பாரதிதாச நினைவுகளை

பாட்டு இடையிட்ட உரைநடைக் காப்பியமாய்

ஏட்டில் இறக்கி வைத்திருக்கிறார்.



பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்

மகாகவியின்

எண்பத்தேழாவது பிறந்த நாளில்

மலர்ந்த படைப்பு.

 

பாரதியார், பாரதிதாசன்

வழியொற்றிய

அடுத்த சகாப்தத்தின்

தலைமைக் கவிஞராக

இன்று நம்மிடையே வாழும்

மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள்

இன்னும் ஒரு நூறாண்டு

வாழ்க, வாழ்க

என வாழ்த்துவோம்.