தமிழா நாம் பேசுவது
தமிழா தமிழா?
தமிழா நாம் பேசுவது
தமிழா?
அன்னையை நம் வாயால்
அம்மே என்று அழைத்தோம்
அப்பாவை நாமும் அப்பே
என்று அழைத்தோம்
அன்பு உறவுகளை அம்யு என்று அழைத்தோம்
அழகுத் தமிழ்ச் சொல்லை
அடியோடு ஒழித்தோம் – தமிழா
மனைவியை நாமும் மெய்ம்மா
என்று அழைத்தோம்
மாண்புடைத் தமிழை
மறந்தே சிதைத்தோம் – இரவில்
நாமும் ஞா என்று அழைத்தோம்
- இனிப்பை அச்சோ
என்று இனிக்காமல்
அழைத்தோம்.
நண்பனை நாமும் தபே
என்று அழைத்தோம்
ஐயா என்ற சொல்லிருக்க
செயா என்று அழைத்தோம்.
தமிழா இப்படி நாம்
பேசுவது தமிழா?
தமிழா இப்படி நாம்
பேசுவது தமிழா?
தமிழ் மொழியில் ஆங்கிலக் கலப்பு அதிகரிப்பது
கண்டு வருந்தி, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்
அவர்களால் இயற்றப்பட்டப் பாடலை, புஷ்பவனம்
குப்புசாமி அவர்களின் குரலில் நாம் கேட்டிருப்போம்.
அப்பாடலையே இவர், சிறிது மாற்றிப் பாடியிருக்கிறார்.
ஆனால், இப்பாடலில், நாம் கேட்ட ஆங்கிலச் சொற்கள்
இல்லை.
அதற்குப் பதிலாக, அம்மே, அப்பே, அம்யு, மெய்ம்மா, ஞா என்ற சொற்கள் வருகின்றன.
தமிழில் கலந்த இச்சொற்கள் எல்லாம், எந்த மொழிச்
சொற்கள்.
இவையெல்லாம் பர்மிய மொழிச் சொற்கள்.
தமிழ் நாட்டுத் தமிழர்கள், தமிழில் ஆங்கில மொழிச்
சொற்களைக் கலந்து பேசுவதைப் போல, மியான்மர் நாட்டுத் தமிழர்களும், தங்கள் தாய் மொழியாம்
தமிழ் மொழியில், பர்மிய மொழிச் சொற்களைக் கலந்து பேசி வருவதைக் கண்டு வருந்திய இக்கவிஞர்,
மியான்மர் நாட்டின், மேட்டுச் சிவன் ஆலய மண்டபத்தில்,
கடந்த 27.4.2024 அன்று நடைபெற்ற, கலைஞர் நூற்றாண்டு
விழாவில், பர்மியத் தமிழர்களிடையே, இப்படித்தான் பாடி, தன் வேதனையை வெளிப்படுத்தினார்.
இவர் இன்றைய மியான்மரில், அன்றைய பர்மாவில் பிறந்தவர்.
1826 – 1840 கால கட்டத்தில், தமிழகத்தில் ஏற்பட்ட
பஞ்சத்தின் காரணமாக, பெரும் எண்ணிக்கையிலானத் தமிழர்கள், பர்மாவில் குடியேறியதை நாம்
அறிவோம்.
இவரது முன்னோர்களும், இப்படிச் சென்றவர்கள்தான்.
இவர் 1956 ஆம் ஆண்டு பர்மாவில் பிறந்தவர்.
இவர் தொடக்கக் கல்வியின், முதல் இரண்டு ஆண்டுகளை
பர்மாவில் படித்தவர்.
இவர் படித்த பள்ளியின் பெயர் என்ன தெரியுமா?
கர்மவீரர்
காமராசர் பள்ளி.
இவர் குடும்பம் வசித்ததோ, டல்லா கம்மாகசி.
இவர் படித்த பள்ளிக் கூடம் இருந்ததோ, யாங்கூன் நகரில் 56 ஆம் கல்லில், அதாவது
56 ஆவது தெருவில்.
பள்ளிக்கும் இவர் வசித்த ஊருக்கும் இடையே ஒரு
ஆறு.
ஐராவதி.
வற்றாத ஜீவ நதி.
தினம், தினம் சம்மான் என்று பர்மிய மக்களால் அழைக்கப்படும் படகில் பயணித்து, ஐராவதியைக்
கடந்துதான், இரண்டு வருட பள்ளிப் படிப்பைப் படித்தார்.
ஒருமுறை ஐராவதியில் தவறி விழுந்து, மூச்சுத்
திணறி, மயிரிழையில் படகோட்டி கலியன்காரன்
என்பவரால் காப்பாற்றப் பட்டிருக்கிறார்.
இவர் பிறப்பதற்கு முன்பே, 1950 இல் மியான்மரில்
ஒரு பெரும் அரசியல் மாற்றம்.
மியான்மர்
நாட்டு மக்களைத் தவிர, மற்ற நாட்டு மக்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது. இதனை ஏற்றுக்
கொண்டால் இங்கு வாழலாம், இல்லையேல் கிளம்பலாம்.
தெளிவாக, உறுதியாக அறிவித்தது மியான்மர் அரசு.
அன்றைய இந்தியப் பிரதமர் திரு லால் பகதூர் சாஸ்திரி, மியான்மர் அரசுடன்
பேசினார், ஓர் ஒப்பந்தம் செய்தார்.
இந்த ஒப்பந்தத்தின் விளைவாக 1963 ஆம் ஆண்டு முதல்
1972 ஆம் ஆண்டு வரை, கப்பல்கள் மூலம் பர்மியத் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் தாயகம்
திரும்பினர்.
அப்படித் திரும்பியவர்களுள் இவரும் ஒருவர்.
எட்டு வயது சிறுவனாக தஞ்சாவூரை வந்தடைந்தார்.
அன்று முதல் தஞ்சாவூர் இவரது வாழ்விடமாக மாறிப்போனது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பர்மாவில் இருந்து வந்த
இவரது உறவினர் ஒருவர், இவரது இல்லம் தேடி வந்தபோதுதான், இவரது உறவினர்கள் பலர் இன்றும்
மியான்மரில் இருக்கிறார்கள் என்பதையே இவர் உணர்ந்தார்.
அன்று முதல் மியான்மர் செல்ல வேண்டும் உறவுகளைப்
பார்க்க வேண்டும் என்ற ஆவல் இவர் உள்ளத்துள் எழுந்து, இவரைத் தூங்க விடாமல் செய்திருக்கிறது.
இவ்வாண்டு மார்ச் மாதம் மியான்மர் புறப்பட்டார்.
பை நிறைய புத்தகங்களோடு.
பள்ளிக்கூடத் தமிழ்ப் பாடப் புத்தகங்களோடு.
---
தமிழர் அறநெறிக் கழகம்.
மியான்மர் நாட்டில் கடந்த 45 வருடங்களாக அயராது
செயல்பட்டு வரும் தமிழ் அமைப்பு.
பாட்டன்
தமிழை வீட்டில் பேசு.
இதுவே தமிழர் அறநெறிக் கழகத்தின் ஒற்றை முழக்கம்,
இலட்சியம்.
ஏறத்தாழ 12 இலட்சம் தமிழர்கள் வசிக்கும் மியான்மரில்
தமிழ் மொழி அழிந்து விடாமல் காப்பதற்காகத் தோன்றிய அமைப்புதான் தமிழர் அறநெறிக் கழகம்.
இவ்வமைப்பு கடந்த 45 வருடங்களாக, இருபதுக்கும்
மேற்பட்ட தமிழ்ப் பள்ளிக் கூடங்களை நிறுவி நடத்தி வருகிறது.
மியான்மரில் தமிழ் மங்காது காத்து வருகிறது.
இவர்களுக்கு ஒரு பெரும் குறை.
தமிழ்ப் பாடநூல்கள் இல்லாத குறை.
இதை உணர்ந்த, இக்கவிஞர், பர்மியத் தமிழ்ப் பள்ளிகளின்
தேவையை, தஞ்சாவூர் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் நல்லாசிரியர் புலவர் மா.கோபால கிருட்டினன் அவர்களிடம் தெரிவித்தார்.
இச்செய்தியினை, வாசகர் வட்டத் தலைவர், ஆசிரியர்
மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர், நல்லாசிரியர்
சிகரம் சதீஷ்குமார் அவர்களிடம் தெரிவித்தார். அவரோ, இச் செய்தியினை உடனடியாக, தமிழகப்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் கொண்டு சென்றார்.
மாண்புமிகு
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் விரைந்து செயல்பட்டு, மியான்மர் அறநெறிக்
கழகத்தின் தேவையை, கோரிக்கையினை, மாண்புமிகு
தமிழக முதல்வரிடம் முன்வைத்தார்.
சற்றும் தயங்காது, அடுத்த நொடி உத்தரவு பறந்தது.
தமிழ்நாட்டு
பாடநூல் கழகம் நான்காம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாட நூல்களை
உடனே வழங்கியது.
புலவர் மா.கோபாலகிருட்டினன், தமிழர் அறநெறிக் கழக மக்கள் நலத் தொடர்பாளர் திரு கோ.க.சந்திரசேகரன், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், கவிஞர் க.பஞ்சாட்சரம் |
ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர், நல்லாசிரியர் சிகரம் சதீஷ் குமார் அவர்களுடன் மியான்மர் திரு கோ.க.சந்திரசேகரன் |
மியான்மர் தமிழர் அறநெறிக் கழகம் தமிழ்ப் பாடநூல்களைக்
கண்டு மகிழ்ந்தது, நெகிழ்ந்தது.
மியான்மருக்கு தமிழ்ப் பாட நூல்களை சுகமான சுமையாக
எடுத்துச் சென்றதையும், மியான்மரில் உறவுகளோடும், நண்பர்களோடும் அளவாவி மகிழ்ந்ததையும்,
மியான்மர் தமிழ் மக்களின் பழக்க வழங்கங்கள், உணவு முறைகள், வழிபாடுகள், திருவிழாக்கள்
என ஒன்று விடாமல் எழுதி, ஒரு நூலாக்கி வெளியிட்டிருக்கிறார் இவர்.
மியான்மரில் பெரும்பாலானோர் எளிய வாழ்க்கையினையே
வாழ்கின்றனர். இன்றும் கிராமங்களில் குடிநீர், மின்சாரம் போன்ற வசதிகள் கிடையாது. இக்கிராமங்களில்
வாழும் வசதிபடைத்தவர்கள், வசதியற்றவர்கள் என அனைவரும், ஆறு மாதங்கள் பெய்கின்ற அடைமழை
நீரை நம்பியே இருக்கின்றனர்.
நீரைக் குளங்களில் சேமித்து வைத்து, அந்நீரையே
ஆண்டு முழுவதும் குளிப்பதற்குப் பயன்படுத்துகின்றனர்.
பெரிய பெரிய பீங்கான் பானைகளில் மழைநீரை சேமித்து
வைத்து, கோடை காலம் முழுவதும் குடி நீராகப் பயன்படுத்துகின்றனர்.
பெரும்பாலும் இன்றும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையினையே
வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறாக, புத்தகம் முழுவதும், எண்ணற்ற செய்திகளை
வாரி வழங்கி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்.
இவர் கவிதை நடையில் திருக்குறளுக்கு உரை வழங்கிய
பெருமைக்கு உரியவர்.
நாள்தோறும் அலைபேசி வழியாக, தன் குரல் பதிவாக,
திருக்குறளை வழங்கி வருபவர்.
இவர்தான்
ஐந்தெழுத்தான்
கவிஞர் பர்மா க.பஞ்சாட்சரம்.
இவரது
நூல்
(மீப்யா)
பத்திக்கூடு என்றால் கலங்கரை விளக்கம்.
புலவர் மா.கோபாலகிருட்டினன், கவிஞர் க.பஞ்சாட்சரம் மற்றும் நான் |
இந்நூல், எளிய தமிழில் விறுவிறுப்பான நடையில், ஒரு நாவலை வாசிக்கின்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
படித்துப் பாருங்கள்.
வீட்டில் இருந்தபடியே, பர்மாவை முழுதாய் சுற்றிப்
பார்த்த ஓர் உணர்வினைப் பெறுவீர்கள்.
தொடர்பிற்கு
கவிஞர் பர்மா க.பஞ்சாட்சரம்
98940 58661