திருவிளையாடல்.
திருவிளையாடல் படம் பார்த்தவர்களின் நினைவில், இன்றும் தேங்கி நிற்கும் ஒரு காட்சி இருக்கிறது என்றால் அது சிவாஜி மற்றும் நாகேஷ் இருவரும் உணர்வுப்பூர்வமாக, சிவனாகவும் தருமியாகவும் நடித்த காட்சியாகத்தான் இருக்கும்.
அக்காட்சியின் தொடர் வசனத்தைப் போன்ற, கவிதை
ஒன்றினைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அன்பிற்கு அவன்
ஆளுமைக்கு நான்.
இயல்புக்கு அவன்
இம்சைக்கு நான்.
உண்மைக்கு அவன்
ஊக்கத்திற்கு நான்.
காயத்திற்கு அவன்
மருந்திற்கு நான்.
அகமாய் அவன்
மெய்யாய் நான்.
காதலாய் அவன்
ஊடலாய் நான்.
சண்டையாய் அவன்
சமாதானமாய் நான்.
தூரமாய் அவன்
நெருக்கமாய் நான்.
ஒலியாய் அவன்
மொழியாய் நான்.
இருளாய் அவன்
நிலவாய் நான்.
உடலாய் அவன்
உயிராய் நான்.
இதயமும்
துடிப்புமாய்
அவனும் நானும்.
படிக்கப் படிக்க மனம் மகிழ்ந்து போனது. வார்த்தைகளை
அழகாய் எடுத்து, எழிலுறக் கோர்த்திருக்கிறார். படிக்கும்பொழுதே நம் நெஞ்சுக்கு நெருக்கமாய்
வந்து அமர்கிறது இக்கவிதை.
தனிமை மட்டுமே
மனிதனின்
ரகசியமற்ற பிம்பம்
என்கிறார்
இக்கவிஞர். யோசித்துப் பார்த்தால் உண்மைதான் என்பது புரிகிறது.
போலியான புன்னகை
போலியான அழுகை
சில நேரங்களில்
போலியான வாழ்க்கைப் பயணம்
போலியான புன்னகையையும், அழுகையையும் நிச்சயம்
நாம் ஒவ்வொருவரும், நம் வாழ்வில் பலமுறை சந்தித்திருப்போம். போலி என்று உணர்ந்தும்
இருப்போம், என்ன செய்வது? நட்பாயிற்றே, உறவாயிற்றே என கண்டும் காணாதது போல், உணர்ந்தும்
உணராததுபோல் கடந்து சென்றிருப்போம்.
மண வாழ்ககை என்பது சின்னஞ்சிறு ஊடல்களால் நிரம்பியதுதானே. சிறிது நேர அல்லது சில நாள் ஊடலையும், பின் இயல்பாய்,
இன்னும் அதிக அன்போடு, கூடுதல் மகிழ்வோடு இணைதலையும் இவர் சொல்லும் அழகே அழகு.
அவன் அவளின்
ஒரு சின்ன
சண்டைக்குப் பிறகு …
காலை தேநீர்
அவனைச்
சத்தமில்லாமல்
எழுப்புகிறது …
காலைச் சிற்றுண்டி
மேசையில்
ஆறத் தயாராக உள்ளது …
அலுவலகம் செல்கிறேன் என்ற
அவனின் சொல்லுக்கு
அவளிடம் பார்வை மட்டுமே பதிலாகிறது
…
நடுநடுவே வரும்
அலைபேசி அழைப்புகள்
அன்று இல்லை…
அவனின் சமாதானப்
போராட்டத்தில்
அடுத்த முயற்சி
மாலை நேர
இரு சக்கரப் பயணம் …
இரு பக்கம் கால்கள் போடாமல்
ஒரு பக்கமாய்
அமர்கிறாள் …
தோள்களைப்
பிடிக்காமல்
கம்பிகளைக்
கெட்டியாய்
பிடித்துக் கொள்கிறாள் …
இருவருக்கும் இடையே
உள்ள இடைவெளியில்
சிட்டுக்குருவி ஒன்று
பறந்து போகிறது …
திடீரென குறுக்கே வரும் நாயைக் கண்டு
பார்த்துங்க
என்ற
அவளின் ஒற்றைச் சொல்
உடைத்தெறிந்தது விட்டது
மொத்த ஊடலையும்..
மெல்ல மெல்ல மீண்டு
எழுகிறது பேரன்பின்
மொத்த நேசமும் .
கிளைகள் பல விரித்து, அடர்ந்து, படர்ந்து ,விரிந்து,
அகன்று நின்றிருக்கும் மரங்களில், மாலை நேரத்தில், கூடு திரும்பும் பறவைகளின் ஒலி கேட்டு
மகிழ்ந்திருப்போம். அந்தப் பறவைகளின் சப்தத்திற்கானக் காரணத்தை இவர் கூறும்போது நமக்கு,
ஆகா, இப்படியும் ஒரு காரணம் இருக்கிறதா என்றும் வியப்புதான் ஏற்படுகிறது,
சந்திரன் மெல்ல
மெல்ல மேலே வர
சூரியன் மெல்ல
மெல்ல அடிவானில் மறைய
மரக்கிளைகளில்
பறவைகளுக்குள்
ஒரே சப்தம்
யார்
கூடு
எதுவென்று
…
ஆட்டோகிராப் திரைப்படப் பாடலைப் போலவே, நினைவலைகளில்
மூழ்கிய ஒரு கவிதை இவரது எழுதுகோல் வழி, வழிந்து, வெள்ளைத் தாள்களை நனைத்திருக்கிறது.
முதன் முதலாக
என்னைக் கடந்த
நிழல் …
முதன் முதலாக
என்னை வருடிய
சுவாசம் …
முதன் முதலாக
என்னைத் திருடிய
இதயம் …
முதன் முதலாக
என்னைக் கவர்ந்த
கண்கள் …
முதன் முதலாக
என்னை ஈர்த்த
பார்வை …
முதன் முதலாக
நான் தேடிய
தாய் மடி …
முதன் முதலாக
எனக்காக நீ
பேசிய குரல் …
முதன் முதலாக
நான் நேசித்த
உள்ளம் …
முதன் முதலாக
சந்தித்த நாள் …
முதன் முதலாக
சாய்ந்த தோள் …
முதன் முதலாக
இணைந்த
கைகள் …
முதன் முதலாக
சந்தித்த பிரிவு …
முதன் முதலாக
உனக்காகச்
சிந்தியக் கண்ணீர்
முதன் முதலாக
முதன் முதலாக
என்றுமே
முதலும் நீ …
முடிவிலா
காதலும் நீ..
ஹைக்கூ என்னும் கவி வடிவம் கூட இவருக்கு எளிதாய்,
இயல்பாய் வருகிறது. பேருந்து நிலையங்களிலும், பொது இடங்களிலும், சிறுவர்கள், சிறுமியர்கள்,
பூ விற்பதை நாம் பார்த்திருப்போம், இவரும் பார்த்திருக்கிறார்.
மலர்ந்த பூக்கள்
விற்பனை …
மலராத மொட்டின்
கைகளால் …
இவர் கவிஞர் மட்டுமல்ல, காவல் துறை உதவி ஆய்வாளரும்
ஆவார். தற்பொழுது, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பதவிக்கானப் போட்டித் தேர்வினையும்
எழுதி வாகை சூடி பதவி உயர்விற்காகக் காத்திருக்கிறார்.
காவல்துறையில் ஒரு கவிதாயினி.
இவர் திரைப்படி நடிகர், இயக்குநர் திரு பார்த்திபன், பாடலாசிரியர் கவிஞர் பா.விஜய் இருவர் முன்னிலையிலும், ஒளித்துளிகளின் கூடல் என்னும் தனது முதல்
கவிதை நூலை வெளியிட்டவர்.
தமிழ்ச்
சுடர் விருது, மகாகவி பாரதியார் விருது, இளம் சாதனையாளர் விருது, எழுத்துலகின் இளம்
பரிதி முதலான விருதுகளுக்குச் சொந்தக்காரர்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, கவிஞர் புலமைப்பித்தன் அவர்களால், என் மகளே என அழைத்துப் பாராட்டப்பெற்றவர்.
என் மகளே,
நீ
மாபெரும் கவிதாயினியாக
தூங்குகிற
தமிழ்ச் சமுதாயத்தை
துயில்
எழுப்புவாயாக.
அன்புடன்
புலமைப்பித்தன்.
இவர்தான்
எழுத்துலகின் இளம்பரிதி
கவிஞர் தஞ்சை சுஜாதா
இவரது
கவிநூல்
அன்புச்
சகோதரிக்கு வாழ்த்துகள்
மின்னஞ்சல்
sujamicrobio@gmail.com