22 ஜூலை 2014

மீட்பர்


ஆண்டு 1925. அந்தக் குடும்பமும், அக்குடும்பத்தின் உற்றார் உறவினர்களும், அந்தக் கோயிலில் கூடியிருந்தனர். திருமணமாகி பல ஆண்டுகள் கடந்தும், அந்தத் தம்பதியினருக்குக் குழந்தை இல்லை. எனவே இறைவனை வேண்டிக் கொண்டனர். இறைவனே, எங்களுக்குக் குழந்தை பாக்கியத்தை அருளுங்கள். எங்கள் குலம் தழைக்கக் கருணை காட்டுங்கள். முதல் குழந்தை பிறந்து, அதுவும் பெண்ணாகப் பிறந்தால், அக்குழந்தையை உனக்கே அர்ப்பணிக்கிறோம். இறைவா, எங்களுக்குக் குழந்தை கொடு.


     அத்தம்பதியினருக்கு முதல் குழந்தையாய் ஒரு பெண் குழந்தை. அடுத்த ஆண்டே அடுத்த குழந்தை. ஆண்டுகள் பல கடந்த நிலையில், தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக, பருவமெய்திய, தங்களது மகளை, கோயிலுக்கே அர்ப்பணிக்க வந்திருக்கிறார்கள். அதற்காகத்தான் இந்தக் கூட்டம்.

     மேள தாளங்கள் முழங்க, அக்கோயில் பூசாரி, அப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுகிறார். பூசாரி கட்டினால் கடவுளே கட்டியதாக அர்த்தம். இதன் பெயர்தான் பொட்டு கட்டுதல்.

     நண்பர்களே, இனி இப்பெண் கோயிலுக்குச் சொந்தம். கோயிலுக்கு மட்டுமல்ல, கோயில் நிர்வாகிகளுக்கும், செல்வந்தர்களுக்கும் சொந்தம்.

    
தேவதாசி - உண்மையான பழைய படம்
பகலில் பூசை நேரங்களில் இறைவனுக்கு முன் இவர்கள் நாட்டியமாடுவார்கள். இரவிலோ வசதி படைத்தவர்களின் விளையாட்டுப் பொம்மைகள் இவர்கள். இவர்களுக்குக் குழந்தைகள் பிறக்கும், ஆனால் தந்தை யாரென்று தாய்க்குக் கூடத்தெரியாது. இறைவனின் குழந்தைகள்.

      இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் பெண்ணாகப் பிறந்தால், அவர்களும் தாயின் வழியில்தான் வாழ்ந்தாக வேண்டும். இவர்கள்தான் தேவதாசிகள். இவர்கள் ஒருபோதும் விதவையாக மாட்டார்கள். இவர்கள் நித்ய சுமங்கலிகள்.

     இறைவனின் பெயரால் இந்த இழிநிலை. பெற்றோர்களின் அறியாமையினால், கல்வி கற்காமையினால், கோழி, ஆடு, மாடுகளைப் போல், பெண்கள் நேர்ந்துவிடப் படுவதும், செல்வந்தர்களின் போகப் பொருளாய் மாறி, இவர்கள் தவித்த தவிப்பும், அனுபவித்த கொடுமையும், பல நூறு ஆண்டுகளாய், நமது புண்ணிய பூமியில், தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. மீட்பர் ஒருவர் வரும்வரை. ஒரு பெண் மீட்பர்.

     சென்னை மாகாண சட்டசபையின் மேலவைத் துணைத் தலைவரான, அப்பெண் மீட்பர், 1927 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் நாள், தேவதாசி முறை ஒழிப்பிற்கான தீர்மாணத்தை முன் மொழிந்தார்.

      அறிவு ஜீவிகள் கொதித்து எழுந்தனர். நாட்டியக் கலையே அழிந்து போகும் அபாயம் வந்து விட்டது. கலை காப்பாற்றப்பட வேண்டாமா? இந்த அநீதியைத் தடுப்பார் யாருமில்லையா? இறைவன் முன் நடைபெறும் நாட்டியம் நின்றால், இறைவன் தன் நெற்றிக் கண்ணைத் திறந்துவிட மாட்டானா? என பலவாறு பிதற்றினர்.

     பெண்களை இழிவு படுத்தித்தான், அவர்களின் பெண்மையைச் சுறையாடித்தான், பரத நாட்டியக் கலையை வளர்க்க வேண்டும் என்றால், காப்பாற்ற வேண்டும் என்றால், அந்தக் கலையே தேவையில்லை என முழங்கினார் அம்மீட்பர்.

     மீட்பருக்கு ஆதரவாக மகாத்மா காந்தி குரல் கொடுத்தார். பெரியாரோ பொங்கி எழுந்தார். தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை எதிர்ப்போரைப் பார்த்து சவால் விட்டார், தேவதாசி முறை தொடர வேண்டும் என்று, கொந்தளிக்கிறீர்களே, கொக்கரிக்கிறீர்களே, உங்கள் வீட்டுப் பெண்களைப் பொட்டுக் கட்டி அனுப்பத் தயாரா?

     ஒரு நாளா, இரண்டு நாளா, இரண்டு ஆண்டுகாலப் போராட்டம். மீட்பரின் அயரா உழைப்பு, தளராத போராட்டம் இறுதியில் வெற்றி பெற்றே விட்டது. 1929 ஆம் ஆண்ட பிப்ரவரி மாதத்தில், தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேறியது.

      இன்று நம் குடும்பப் பெண்கள், கோயிலுக்கு நேர்ந்துவிடப் படாமல், செல்வந்தர்களின் படுக்கை அறையை அலங்கரிக்காமல், ஆசிரியைகளாய், பொறியாளர்களாய், மருத்துவர்களாய், விஞ்ஞானிகளாய், விண்வெளி வீரர்களாய் உலகை வலம் வருகிறார்களே, இதற்குக் காரணம் அம் மீட்பரல்லவா?

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்
அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்

என்று பாரதி பாடுவாரே, அந்தப் புதுமைப் பெண் அல்லவா இவர். அவர்தான்

மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி.

     புதுக்கோட்டை மாநகர் ஈன்றெடுத்த புரட்சிப் பெண் இவர். 1885 ஆம் ஆண்டு ஜுலை 30 இல் பிறந்தார். திண்ணைப் பள்ளியில் தொடக்கக் கல்வி. வீட்டில் இருந்தபடியே பதினோராம் வகுப்பு.

    
சிறு வயதில் முத்துலட்சுமி (தரையில் அமர்ந்திருப்பவர்)
புதுக்கோட்டை அரசினர் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த முதல் பெண் இவர். 1907 இல் சென்னை மருந்துவக் கல்லூரியில் நுழைந்து, 1912 இல் மருத்துவராய் வெளிவந்தவர் இவர்.

இந்தியாவிலேயே டாக்டர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி.

     டாக்டர் சுந்தர ரெட்டி என்பாரை மணந்ததால் முத்துலட்சுமி ரெட்டி ஆனார்.

      நண்பர்களே, பெண் குழந்தைகளுக்கு எட்டு வயதிலேயே திருமணம். பத்து வயதிலேயே விதவைக் கோலம். பருவம் எய்தும் முன்னரே, மொட்டுக்கள் கருகும் பரிதாப நிலை. இதுதான் அன்றைய நிலை. சட்டசபையில் சாரதா சட்டத்தை முன்மொழிந்து, பெண்களைக் குழந்தைத் திருமணம் என்னும் கொடுமையில் இருந்து, காப்பாற்றியவரும் இந்த முத்துலட்சுமி அவர்கள்தான்.    
அவ்வை இல்லப் பணியாளர்களுடன்
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, ஆதரவற்ற பெண்களுக்கான அவ்வை இல்லம், குழந்தைகள் பாதுகாப்பு இல்லம், இவையெல்லாம் முத்துலட்சமி ரெட்டியின் அயரா உழைப்பால் உதயம் கண்டவையாகும்.

     நண்பர்களே, முத்துலட்சுமி அம்மையார்ரின் முயற்சியால் உருவான குழந்தைகள் பாதுகாப்பு இல்லம்தான், இன்று உருமாறி, குற்றம் புரிந்த சிறுவர்கள், எதிர்காலத்தல் திருந்தி வாழ வழி செய்யும், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளாகக் காட்சியளிக்கின்றன.

     மகாத்மா காந்தி அவர்கள், ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியபோது, சற்றும் தயங்காமல், மேலவைத் துணைத் தலைவர் பதவியை உதறித் தள்ளிய வீரப் பெண்மணி முத்துலட்சுமி ரெட்டி.

     நம் குலப் பெண்களை, சகோதரிகளை மொபெரும் இழி நிலையில் இருந்து மீட்ட, காத்த முத்துலட்சுமி அம்மையார், கண்மூடி ஓய்வெடுக்கத் தொடங்கிய நாள் இன்று.

ஜுலை 22, 1968.

போற்றி போற்றிஓர் ஆயிரம் போற்றி, நின்
பொன்ன டிக்குபல் லாயிரம் போற்றிகாண்.
சேற்றி லேபுதி தாக முளைத்ததோர்
செய்ய தாமரைத் தேமலர் போலொளி
தோற்றி நின்றனை பாரத நாட்டிலே
துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை
சாற்றி வந்தனை மாதரசே எங்கள்
சாதி செய்த தவப்பயன் வாழி நீ.

                               - மகாகவி பாரதி


85 கருத்துகள்:

 1. தனக்கு உரிமை இல்லாமல் இருக்க ஒரு குழந்தையைப் பெற்று என்ன ஆக்கப் போகிறது? பாவம் இதுபோன்ற பெண்கள்.

  //உங்கள் வீட்டுப் பெண்களைப் பொட்டுக் கட்டி அனுப்பத் தயாரா? //

  அது!

  ஒரு சிறந்த பெண்மணியைப் பற்றி, நம் சமூகம் இது போன்றவர்களை மறக்காமல் இருக்கப் பதிவிட்ட நீங்கள் வாழ்க. சிறந்த பதிவு. எதிலிருந்து பதிவு தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்து எழுதி உள்ளதும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 2. பயனுடைய நினைவூட்டல். பாராட்டுகள் ஐயா.

  பதிலளிநீக்கு
 3. பெண்மணியைப் பற்றிய பதிவுக்கு பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 4. ஆகா ... ஆகா
  எங்க ஊர் நட்சத்திரம் உங்கள் பதிவில் அருமை தோழர்...
  வாழ்த்துக்கள்
  http://www.malartharu.org/2012/12/blog-post_5724.html

  பதிலளிநீக்கு
 5. வாக்கு நான்கு
  http://www.malartharu.org/2012/12/blog-post_5724.html

  பதிலளிநீக்கு
 6. தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேறும் வரை போராடி ஜெயித்த பெண்களின் மீட்பரைப் பற்றிய உங்கள் பதிவுக்கு பாராட்டுகள் !
  த ம 2

  பதிலளிநீக்கு
 7. மாலை வந்து படிக்கிறேன் ஐயா.

  பதிலளிநீக்கு
 8. முதலில் உங்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த நன்றிகள்! இப்படிப்பட்ட உயரிய பெண்மணி பற்றி பதிவு எழுதியதற்கு! இவரது பெயரில் சென்னையில் சாலையே இருக்கின்றது அடையாரில். இப்போது , சமூகம் முன்னேறி இருக்கும் இந்தக் கால கட்டத்தில் பலாத்காரத்திற்கு உள்ளாகும் பெண்கள் தற்கொலை என்று தேடும்போது, அந்தக் காலத்திலேயே, சமூகம் மிகக் குறுகிய மனதுடையதாக இருந்த அந்தக் காலத்திலேயே தேவதாசிச் சட்டம் ஒழியும் வரை போராடி வெற்றி கொண்ட இந்த மாமணியை போற்றத்தான் வேண்டும்!

  நிலக்கிழார்களும், கோயில் நிர்வாகிகளும், ஏன் பூசாரிகளும் கூட பெண்களை தாச்iகளாக வைத்திருந்த கால்ம் உண்டு.....என்ன ஒரு அக்கிரமம்....
  அருமையான பதிவு நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அக்காலப் பெண்களின் பாதுகாவலராக விளங்கிய அம்மையாரின் துணிச்சல் பாராட்டுக்கு உரியது ஐயா
   எத்துனை தடைகள் வந்தாலும் தயங்கேன் என்று எதிர்த்து நின்று
   வெற்றி பெற்றதன் பயனை இக்காலப் பெண்கள் அனுபவித்து வருகின்றனர்.
   நன்றி நண்பரே

   நீக்கு
 9. பொக்கிசமான படங்கள்... சிறப்பான பகிர்வு ஐயா... நன்றி...

  பதிலளிநீக்கு
 10. ராக்டர் முத்து லட்சுமி ரெட்டி அவர்களின் தந்தை பெயர் நாராயண சுவாமி அய்யர் ! புதுக்கொட்டை மன்னர் கல்லூரியில் முதலவராக இருந்தார் ! அவருடைய முதல் மனைவி இறந்ததும் இரண்டாவதாக இசை வேளாளர் குலத்தை செர்ந்த சந்திரம்ம என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் ! இந்த தமபதி களூக்கு முத்து லட்சுமி,ராமசாமி என்று இரண்டு குழந்தைகள் பிறந்தன !
  முத்து லட்சுமி மருத்துவரானர் ! ராமசாமிக்கு ஒரு மகன்பிறந்தான் ! முதுலட்சுமிக்கு தாயுமானவன் என்ற மகன் பிறந்தான்! தாயுமானவன் மருத்துவரானன் ! ராமசாமியின் மகன்மீதுமுத்துலட்சுமிக்குபாசமதிகம் ! அவனை சென்னைக்கு கொண்டுவந்து கிறித்துவ கல்லூரியில் படிக்க வைத்தார் ! அதே கல்லூரியில் அவன் ஆசிரியரக பணியாற்றினான் ! பின்னர் திரப்படங்களில் நடிக்க அரம்பித்து ஜெமினி கணெசன் ஆனான்! தகவலுக்காக. ---காஸ்யபன்>

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி திரு காஷ்யபன் அவர்களே! டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் தம்பி மகன்தான் ஜெமினிகணேசன் என்பது எனக்கு இதுவரை தெரியாது.

   நீக்கு
  2. காஷ்யபன் ஐயா சொல்லியிருப்பது முற்றிலும் புதிய தகவல். நன்றி ஐயா.

   நீக்கு
 11. அந்த அம்மையாரைப் பற்றி அறியா திருந்தேனே மிக்க நன்றி சகோ! இவர் யாவரும் அறிய வேண்டிய பெண் மணி யல்லவா? மிக்க நன்றி சகோ ! தொடர வாழ்த்துக்கள்.....!

  பதிலளிநீக்கு
 12. அம்மையாரைப்பற்றி மேலும் பல புதுத்தகவல்களைத்தந்தமைக்கு மிக்க நன்றிகள் ஐயா. சிறப்பான பகிர்வுகளை தந்துக்கொண்டிருப்பதற்காக வாழ்த்துக்கள் பல.

  பதிலளிநீக்கு
 13. சிறந்த நினைவூட்டல். அம்மையார் பற்றி தெரியும். தேவதாசி முறையை ஒழிச்சவர்ன்னும் தெரியும். ஆனா, அதுக்கு பின் இவ்வளவு நடந்திருக்குன்னு இன்னிக்குதான் தெரிந்துக்கொண்டேன். ப்கிர்வுக்கு நன்றி சகோ!

  பதிலளிநீக்கு
 14. வணக்கம்
  யாரும் தொட அஞ்சும் கட்டுரை...இன்னும் விரிவாக எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். மருத்துவர் முத்துலட்சுமி போன்று இன்னொரு வீர மங்கையும் குறிப்பிடத் தகுந்தவர் ருக்மணிதேவி அருண்டேல் இவர் பணியும் அளப்பறியது.

  ஐயா, (உண்மையான) புகைப்படம் எங்கிருந்து கிடைக்கப்பெற்றீர்கள் உங்கள் கடின உழைப்பை போற்ற வார்த்தைகள் இல்லை.

  அன்புடன்,
  இரா. சரவணன்

  பதிலளிநீக்கு
 15. சிறந்த பதிவு. பதிவுக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 16. சிறந்த ஆய்வுக் கண்ணோட்டம்
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 17. "பொட்டு கட்டுதல்" உண்மையான அர்த்தத்தை தெரிந்து கொண்டேன்.

  அம்மையாரைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.

  ஒவ்வொரு படங்களை பார்க்கும்போது, இந்த பதிவிற்காக உங்களின் உழைப்பு தெரிகிறது.
  வாழ்த்துக்கள் ஜெயக்குமார் சார்

  பதிலளிநீக்கு
 18. அருமை! அரிய வரலாறு பலரும் அறியாத வரலாறு! தங்கள் பதிவு
  ஒவ்வொன்றும் பாதுகாக்கப்பட வேண்டுயவை! அனைத்தையும் தொகுத்து நூலாக வெளியிடுங்கள்! நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா
   தங்களின் வருகை மிக்க மகிழ்வினை அளிக்கின்றது ஐயா

   நீக்கு
 19. வணக்கம் ஐயா!

  எத்தனை அரிய அருமையான விடயத்தை இங்கு பதிவிட்டுள்ளீர்கள்!..

  நெஞ்சம் நிறைக்கிறதையா உங்கள் ஆற்றல்!
  சிறந்த தேடல், அரிதான படங்கள் அனைத்தும் மிகச் சிறப்பு!

  இனிய நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த சட்டம் யாருடைய. ஆட்சியில் நிறவேற்ற பட்டது

   நீக்கு
  2. இந்த சட்டம் யாருடைய. ஆட்சியில் நிறவேற்ற பட்டது

   நீக்கு
 20. நல்ல மீட்பர் பற்றிய பகிர்வுக்கு நன்றி! ஒரு தகவலுக்காக ஒரு செய்தியை இங்கே தருகிறேன். நான் எந்த கட்சியையும் சாராதவன். இதில் அரசியல் ஏதும் இல்லை.
  த.ம.10

  // நடிகர் ஜெமினி கணேசனின் 90-வது பிறந்தநாள் விழா, சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், ஜெமினி கணேசனின் வாழ்க்கை வரலாறு குறித்த குறுந்தகடை இயக்குனர் கே.பாலசந்தரும், வரலாற்று புத்தகத்தின் முதல் பிரதியினை கவிஞர் வாலி, வைரமுத்து ஆகியோரும் முதலமைச்சர் கருணாநிதியிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள். நிகழ்ச்சியில் அவர் பேசியது:

  …. …. …. …. ….
  ஆக, முத்துலெட்சுமி ரெட்டி இசை வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். புதுக்கோட்டை மருத்துவமனையில் டாக்டராகப் பணிபுரிந்த சுந்தர ரெட்டி என்பவரைக் காதலித்து மணந்தார். சாதி, மொழி வேறுபாடு கடந்து அவர்களின் திருமணம் நடைபெற்றது. ஆகவே, அந்த கலப்பு திருமணத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் சமுதாய சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட்டார்கள்.

  இன்னும் சொல்லப் போனால், சென்னை மருத்துவ கல்லூரியில் முதல் முதலாக டாக்டராகப் படித்த ஒரு பெண்மணி முத்துலெட்சுமி ரெட்டி. அதனால்தான், மேலவை உறுப்பினராக இருந்து அவர் ஆற்றிய பணியை எடுத்துக்காட்ட, விளக்கிக் காட்ட மேலவையிலும், பேரவையிலும் அவருடைய திருவுருவப்படத்தை இந்த அரசு வைத்து பெருமைப்படுத்தியிருக்கிறது என்பதை நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

  சென்னை மாகாண சட்டசபையில் 1929-ல் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துலெட்சுமி ரெட்டி, ``பொட்டுக் கட்டும்'' வழக்கத்தை - அதாவது தேவதாசி முறையை அகற்ற வேண்டும், ஒழிக்க வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்தினார். இது காமராஜர் அரங்கம். இந்த அரங்கத்தில் அவருடைய குருநாதர் சத்தியமூர்த்தியைப் பற்றி நினைவூட்டுவதைப் பற்றி தவறில்லை.

  தீரர் சத்திய மூர்த்தி, என்னதான் காங்கிரஸ் தியாகி ஆக இருந்தாலும்கூட, அவர் சனாதன கொடுமைக்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டவர்தான். ஒரு சட்டத்தை தமிழக சட்டசபையிலே கொண்டு வந்தபோது - தேவதாசிகளை ஒழிக்க வேண்டும். பெண்களுக்கு பொட்டுக்கட்டி அவர்களை கேவலப்படுத்துவது என்பது முறையல்ல, ஆகவே, அந்தப் பொட்டுக்கட்டும் வழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று சட்டம் வந்தபோது - ஒருவர் எழுந்து ``இல்லை, இல்லை. அந்த வழக்கம் இருப்பது நல்லது, அது தொடர வேண்டும், ஏனென்றால் காளைகள் வெறித்தால் சாந்தப்படுத்தும் சமுதாயம் அந்தப் பெண்கள் சமுதாயம்தான், எனவே, பொட்டுக்கட்டும் வழக்கம், தேவதாசி முறை தொடர்ந்து அனுமதிக்கப்பட வேண்டும்'' என்று சொன்னார். அவர்தான் தீரர் சத்தியமூர்த்தி என்று கூறுவார்கள்.

  அதை எதிர்த்து ஒரு பெண் குரல் கிளம்பியது. அந்தப் பெண் குரல்தான் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் குரல். பெண்கள் சமுதாயம் காளைகள் வெறித்தால் சாந்தப்படுத்துகின்ற சமுதாயம் என்றால், அப்படிப்பட்ட பெண்களை உங்களுடைய வீட்டிலிருந்து அனுப்புங்கள் பார்க்கலாம் என்று முத்துலெட்சுமி ரெட்டி சிம்மக்குரல் கொடுத்து முழங்கினார் - முழங்கினார். மன்னிக்க வேண்டும் - ஒரு வரலாற்று உண்மையை எடுத்துச் சொல்லும்போது, அதிலே பிசிறு வரக்கூடாது. அதிலே குறைபாடு வரக்கூடாது என்பதற்காக உண்மையை அப்பட்டமாக அப்படியே சொல்கிறேன். அந்த முத்துலெட்சுமி ரெட்டிதான் இந்தியப் பூபாகத்தில் அன்றைக்கு புரட்சிகரமான மங்கையாக விளங்கி - அப்படி விளங்கிய காரணத்தால் இந்த இயக்கத்தின் ஆட்சி நடைபெறும்போது, அவருடைய திருவுருவப்படத்தை நாங்கள் சட்டமன்ற மேலவை யிலும், பேரவையிலும் வைத்து கௌரவப்படுத்தி யிருக்கிறோம். //

  நன்றி: http://andhimazhai.com/news/view/seo-title-12461.html
  Posted : திங்கட்கிழமை, நவம்பர் 22 , 2010 09:28:03 IST -

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் நீண்டு கருத்துரை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் ஐயா.
   புதிதாக ஒரு பதிவே எழுதும் அளவிற்கு செய்திகளை வாரி வழங்கி இருக்கிறீர்கள் ஐயா
   தீரர் சந்தியமூர்த்தி பொட்டுக் கட்டும் வழக்கும் தொடர வாதாடினார் என்பது இதுவரை அறியாத செய்தி ஐயா.
   மிக்க நன்றி ஐயா

   நீக்கு
 21. முத்துலட்சுமி அம்மையார் அவர்களைப் பற்றிய விவரமான
  பதிவில் மனம் நெகிழ்ந்தது. கண்கள் கசிந்தன.
  மகத்தான சாதனையாளர்.. வாழ்க அவரது புகழ்...

  பதிலளிநீக்கு
 22. மிகச்சிறந்த ஒரு புரட்சிப்பெண்மணியான முத்துலக்ஷ்மி ரெட்டி அவர்களின் வரலாற்றினை இன்று அவர் மறைந்த தினத்தினில் நினைவு கூர்ந்து எழுதியுள்ளதற்கு மிக்க நன்றி, ஐயா.

  பதிலளிநீக்கு
 23. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரை நினைவுகூர்ந்து பகிரப்பட்ட தகவல்கள் அனைத்தும் சிறப்பு! ஓர் வீரப் பெண்மணியைப் பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 24. ஒரு பதிவில் பல செய்திகளைக் கொடுப்பதும் வாசகர்களே. சில பல நல்ல செய்திகளைக் கண்டு கொள்ளாமல் போவதும் வாசகர்களே. கருத்தாடல்களும் செய்திகளும் நிறைந்திருந்த பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவினில் விடுபட்டச் செய்திகளை எல்லாம் கண்முன் கொணர்ந்து கொட்டும், மூத்த பதிவர்களின் அன்புள்ளம் கண்டு நெகிழ்ந்து போயிருக்கிறேன் ஐயா
   மிக்க நன்றி

   நீக்கு
 25. வழக்கம்போல மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! அதுவும் ஒரு உயர்ந்த பெண்மணியைப்பற்றி மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்! இந்த போற்றுதலுக்குரிய பெண்மணியைப்பற்றி ஏற்கனவே அறிந்திருக்கும் தகவல்கள் தாம் என்றாலும் அவர் மறைந்த நாளிற்கு அவரைப்பற்றி எழுதி சிறப்பு செய்த பெருமை உங்களுக்கு மட்டுமே உரியது!

  உங்களின் தமிழ்த்தொண்டிற்கு என் ம்னங்கனிந்த பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 26. பெயரில்லா22 ஜூலை, 2014

  முகநூலில் யாரோ இவர் சரிதை எழுதியிருந்தனர். விருப்பம் போட்டேன் (.may be that is you)
  இப்போது இற்கு அருமை...அருமை...
  தொடரட்டும் பணி.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்:

  பதிலளிநீக்கு
 27. வெகு அருமையான பதிவு திரு ஜெயக்குமார். எங்கள் புக்கக வழி தாத்தாவும் ,திருமதி முத்துலட்சுமி ரெட்டியும் சேர்ந்து அபயநிலையம் ஒன்றை சென்னை மயிலையில் ஆரம்பித்தார்கள். இன்னும் நடந்துகொண்டிருக்கிறதா தெரியவில்லை. வீரத்துக்கும் வாக்குவன்மைக்கும் புகழ் பெற்றவர்.அவரைக் குறித்துப் பதிவு எழுதிய உங்களுக்கு மிக நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருமதி முத்துலட்சுமி அம்மையாருடன் தொடர்புடைய குடும்பம் தங்களுடையது என்பதை என்னும் பொழுதே, உள்ளம் மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடுகிறது சகோதரியாரே
   கொடுத்து வைத்தவர் தாங்கள்
   நன்றி சகோதரியாரே

   நீக்கு
 28. வணக்கம்
  ஐயா
  அறியாத தகவலை அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல.. மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்
  பகிர்வுக்கு நன்றி
  த.ம11வது வாக்கு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 29. மீட்பர்கள் எப்பொழுதும் வந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 30. அண்ணா
  நம்ம ஊரு பெருமையை பேசியிருக்கீங்க:)
  படங்கள் அருமை அண்ணா , பதிவை போலவே! பயனுள்ள பகிர்வு அண்ணா! தம 12

  பதிலளிநீக்கு
 31. அன்பின் ஜெயக் குமார் - மீட்பர் அழைப்பு - பதிவு அருமையிலும் அருமை. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள் பலப் பல இப்பதிவின் மூலமாகத் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கொடுத்தமைக்கு தங்களுக்கு மனமார்ந்த நன்றி. நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 32. முத்துலட்சுமி அம்மையாரைப்பற்றியும் அவர் செய்த மாபெரும் சேவையைப்பற்றியும் அருமையாக சொன்னீர்கள்.

  //நம் குலப் பெண்களை, சகோதரிகளை மொபெரும் இழி நிலையில் இருந்து மீட்ட, காத்த முத்துலட்சுமி அம்மையார், கண்மூடி ஓய்வெடுக்கத் தொடங்கிய நாள் இன்று.//
  அவர் நினைவு தினத்தையும் மிக அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.
  மீட்பர் தலைப்பே மிக அருமை.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 33. வணக்கம்!

  சதியால் வளர்ந்திட்ட சாத்திரப் பேயை
  மதியால் விரட்டிய மங்கை! - புதியதோர்
  பாரைப் படைத்தவர்! ஒண்முத்து லட்சுமியார்
  சீரை உரைத்தீர் செழித்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 34. ஒரு மாபெரும் வரலாற்றை அறியப்படுத்திய கரந்தையார் ஐயா அவர்களுக்கு நன்றியும்
  திருமதி முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களுக்கு எனது அஞ்சலியையும் தெரிவிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 35. இன்றைய தலைமுறைப் பெண்கள் கட்டாயமாகத் தெரிந்துகொள்ளவேண்டிய சாதனைப் பெண்மணியை அழகுபட எடுத்துரைத்தீர்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
 36. மீட்பர் ஒரு சிலரே அதில் தலைசிறந்தவர் டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார்.அவரைப்பற்றி தாங்கள் வழங்கியிருக்கும் செய்தி ஒரு பொக்கிசம். வாழ்க அம்மையார் வளர்க பெண் தொண்டு.மிக்க நன்றி.தொடரட்டும் தங்களின் தேடல்கள் .....வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 37. அருமையான பதிவு.
  டாக்டர் முத்துலெட்சுமி அம்மையாரைப் பற்றி இன்று அறிந்து கொண்டேன் ஜெயக்குமார் ஐயா. நன்றி.

  பதிலளிநீக்கு
 38. " தேவதாசி முறை தொடர வேண்டும் என்று, கொந்தளிக்கிறீர்களே, கொக்கரிக்கிறீர்களே, உங்கள் வீட்டுப் பெண்களைப் பொட்டுக் கட்டி அனுப்பத் தயாரா? "

  எவ்வளவு உஸ்ணமான, உண்மையான வார்த்தைகள் ?! அன்றைய சமூக சூழலில் இப்படிப்பட்ட வார்த்தைகளை உதிர்க்க எவ்வளவு நெஞ்சுரம் வேண்டும் ?

  முத்துலட்சுமி அம்மையார் நிச்சயமாய் புனிதமான மீட்பர்தான்.

  இவர்களை பற்றிய வரலாறெல்லாம் சரியாக சொல்லப்படாததும் இன்றைய சமூக சீரழிவுகளுக்கு ஒரு காரணம். தங்கள் தளம் அந்த குறையை போக்கும் கருவூலம்.

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
 39. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : இனியா அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : இனியா

  வலைச்சர தள இணைப்பு : ஆலயம் தொழுவது சாலவும் நன்று

  பதிலளிநீக்கு
 40. தேவதாசி நாட்டியம் ஆடும் புகைப்படத்தில் அந்த பெண்ணின் முகத்தில் தெரியும் வலியும் வேதனையைப் பாருங்கள். ஆயிரம் கட்டுரைக்கும் சமம்.
  நிறைவான கட்டுரை. வாழ்த்துகள் அய்யா!.

  பதிலளிநீக்கு
 41. தோழர் கரந்தை ஜெயக்குமார்..

  அய்யா தி. தமிழ் இளங்கோ எழுதியிருப்பது முற்றிலும் உண்மை. சத்திய மூர்த்தி காளை வெறிப்பது மட்டுமல்ல பெண்கள் மேலுலகம் செல்ல இது தான் வழி என்றார். எங்கள் சமூகப் பெண்கள் பலர் மேலுலகம் சென்று விட்டனர் இனி உங்கள் சமூக பெண்களை மேலுலகம் சொர்க்க லோகம் அனுப்பி வையுங்கள்.. உங்கள் சமூக பெண்களுக்கு பொட்டு கட்டுங்கள் என்று கூறினார்.

  அம்மா முத்துலெட்சுமி அவர்கள் சட்டசபை உரைகள் ஒரு தொகுப்பாக உள்ளது எந்த நூலகத்தில் படித்தேன் என்று நியாபகம் இல்லை.. கன்னிமாராவில் இருக்கும் வாய்ப்புகள் அதிகம்.. அந்த புத்தகத்தை மீள் பதிவிட வேண்டும் என்று இப்பொழுது தோன்றுகிறது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முத்துலட்சுமி அவர்களின் சட்டசபை உரைகளை மீள் பதிவிடுங்கள் நண்பரே
   இன்றைய உலகினர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
   நன்றி நண்பரே

   நீக்கு
 42. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, இன்றைய நாகரீக [?] உலகில் வாழும் அனைவரும் இந்தப் பதிவினைப் படித்த பிறகாவது தங்களை உணர்ந்து தங்கள் வாழ்க்கை முறையை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறேன். டாக்டர் முத்துலெட்சுமி அம்மையாரின் அயராத உழைப்பிற்கு தலைவணங்குகிறேன். தங்களின் தகவல்களை திரட்டும் திறமைக்கும் அதனை பக்குவமாக பதிவிடும் பண்பிற்கும் பாராட்டுகள் பல பல. நன்றி.

  பதிலளிநீக்கு
 43. பெயரில்லா29 ஜூலை, 2014

  hi sir atfirst i ask sry for the late. wat a fantastic episode that has been given by u. now only i known about the history of the call girls.In this time i remembered Badmashree Dr.Kamalahasan mile stone words AANATHAIGAL ANAIVARUM KADUVULIN KULANTHAIGAL ENDRAL KANDIPAGA VENDUM KADAVULUKUM KUDUMBA KATTUPAADU. Thank u sir.....
  P.Rajadurai.

  பதிலளிநீக்கு
 44. கிடைத்தற்கரிய படங்களுடன் மிக அருமையான கட்டுரை. பகிர்வுக்கு என் நன்றி ஜெயகுமார்.

  பதிலளிநீக்கு
 45. முத்துலட்சுமி ரெட்டி சட்டமன்றத்தில் மசோதா கொண்டு வந்தது உண்மை. ஆனால் அந்த மசோதா கொண்டு வர வேண்டி போராடியவர் பலர். அவர்களில் முதன்மையானவர் மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார். தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என முதலில் மேடை ஏறி பேசிய வீரத்தமிழச்சி அவரேயாவார். அவருடைய தொடர் போராட்டத்தை கண்டு பெரியார் திருவிக ஆகியோர் இந்த மசோதா கொண்டு வர வலியுறுத்தினர். அதன் பின்னர் தான் முத்துலட்சுமி ரெட்டி சட்டமன்றத்தில் இந்த மசோதா கொண்டு வந்தார். எனவே ஒரு கருத்தை பதிவிடும் போது தெளிவான வரலாற்றை கூறவும்.

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு