30 ஜூலை 2014

கல்பனா தத்

         

ஆண்டு 1940. தேசியக் கவி இரவீந்திரநாத் தாகூரின் உள்ளத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது. மீண்டும், மீண்டும் அக்கடிதத்தை வாசிக்கிறார். எவ்வளவு மகிழ்ச்சியான செய்தியைச் சுமந்து வந்திருக்கிறது இக்கடிதம். உடனே பதில் கடிதம் எழுதுகிறார்.

     உனது கடிதம் கண்டு மகிழ்ச்சியடைகின்றேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு நீ விடுதலை பெற்றிருக்கிறாய். நாள்தோறும் அமைதியும், ஆக்கமும் பெற்று வளர்வாயாக. நமது நாட்டில் இன்னும் எத்தனையோ காரியங்கள் நடைபெற இருக்கின்றன. அவற்றிற்குக் கலவரம் அடையாமல்  இருக்க, ஒழுங்கிய பயின்ற திண்ணிய மனது தேவை. நீ பெற்ற துன்பமயமான அனுபவம், உனது வாழ்க்கைக்குப் பூரணப் பொலியை அளிக்கட்டும். எனது ஆசீர்வாதம் இதுவே.


ஆண்ட்ரூஸ்
தாகூர் மட்டுமல்ல, ஆங்கிலேயப் பாதிரியாரும், கல்வியாளரும், சமூகச் சிந்தனையாளருமான ஆண்ட்ரூசும், அதே நபருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

     முந்திய பிறவியில் நீ எனக்கு மகளாய் இருந்தாய் என்று எண்ணத் தோன்றுகிறது. நான் முதுமை அடைந்திருக்கும் இப்போது, என் மகள், என் செல்ல மகள், திரும்பவும் என்னிடம் வந்து விட்டாள். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், இந்தக் கிழவனை நினைப்பதற்கு மறந்துவிடாதே.

     
ஆண்ட்ரூசும் தாகூரும்
நண்பர்களே, படிக்கும்போதே நெஞ்சம் நெகிழ்கிறதல்லவா? தேசியக் கவியின் அன்பிற்கும், ஆண்ட்ரூசின் பாசத்திற்கும் உரிய, அப்பெண்ணை நினைக்கையில், மனதில் ஒரு மூலையில், மெதுவாய் ஒரு சிறிய பொறாமை கூட எட்டிப் பார்க்கிறதல்லவா?

      மாபெரும் பெரியவர்கள் இருவரின் அன்பைப் பெற, அப்பெண் என்ன செய்திருப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா? அப்பெண் அவ்விருவருக்கும் ஒன்றும் செய்யவில்லை. அப்பெண் செய்ததெல்லாம் நாட்டிற்காக, நம் தாய் நாட்டிற்காக.

     அப்படி என்ன செய்துவிட்டார் என்று கேட்கிறீர்களா? துப்பாக்கித் தூக்கினார். பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல், அடுப்பூதிக் கொண்டிருந்த காலத்தில், நாட்டிற்காகத் துப்பாக்கித் தூக்கினார். வீட்டிலேயே வெடிகுண்டு தயாரித்தார்.

     நண்பர்களே, இவர்தான் கல்பனா தத்.

கல்பனா தத்
ஆங்கிலேயர்களால் மட்டும்தான் ஆயுதம் ஏந்த முடியுமா? அந்த ஆயுதங்களால் இந்தியர்களை மட்டும்தான் சுட்டு வீழ்த்த முடியுமா?

      ஆங்கிலேயர்களின் ஆயுதங்களை எடுத்து, ஆங்கிலேயர்களையே சுட்டால்?

     இன்றைய வங்க தேசத்தின், துறைமுக நகரங்களில் ஒன்றுதான் சிட்டகாங். ஆங்கிலேயர்கள், தங்களின் மிகப் பெரிய ஆயுதக் கிடங்கை, இங்குதான் அமைத்திருந்தார்கள். இங்கிருந்துதான், இந்தியாவின் பல பகுதிகளுக்கும், ஆயுதங்கள் அனுப்பப் பட்டன. இந்த ஆயுதங்களைக் கொண்டுதான், ஆங்கிலேய இராணுவமும், காவல் துறையும், இந்தியர்களை வேட்டையாடியது.

சூர்யா சென்
சூர்யா சென்
இந்த ஆயுதக் கிடங்கையே கைப்பற்றினால்? சூர்யா சென் தலைமையிலான, இந்துஸ்தான் குடியரசு இராணுவம் இப்படித்தான் யோசித்தது. திட்டமிட்டது. மொத்தம் 150 இளைஞர்கள்.

     1930, ஏப்ரல் 19.

     ஒரு பிரிவினர் ஆயுதக் கிடங்கை முற்றுகையிட்டனர்.

     ஒரு பிரிவினர் தொலைத் தொடர்பு நிலையத்தைக் கைப் பற்றினர்.

     ஒரு பிரிவினர் துறைமுகப் பகுதியைச் சுற்றி வளைத்தனர்.

     ஒரு பிரிவினர், ரயில்வே தண்டவாளங்களைத் தகர்த்து, போக்குவரத்தை நிறுத்தினர்.

      நான்கு செயல்களும், முற்றுகைகளும், தாக்குதல்களும் ஒரே நேரத்தில். பத்தே நிமிடம். சிட்டகாங் ஆயுதக் கிடங்கு கைப் பற்றப்பட்டது. அள்ள அள்ள ஆயுதங்கள். துப்பாக்கிகள், தோட்டாக்கள், பிஸ்டல்கள், ரைபிள்கள், மிசின் கன் துப்பாக்கிகள், என அனைத்தையும் அள்ளிக் கொண்டனர். இறுதியில் ஆயுதக் கிடங்கையே கொளுத்தினர்.

     ஆங்கில இராணுவம் சற்று தாமதமாகத்தான் விழித்தெழுந்தது. ஆங்கில இராணுவத்தின் கூர்க்கா படை, புரட்சி வீரர்களைத் தாக்கியது. கூர்க்கா படையினர் 50 பேர் பலி. புரட்சிப் படையினர் 30 பேர் பலி.

    

சற்றேரக்குறைய மூன்று ஆண்டுகள், 1933 பிப்ரவரி 16 வரை, தாக்குதலும், எதிர்தாக்குதலும் தொடர்ந்தது. இரு தரப்பிலும் மரணங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தது.

      சொற்ப எண்ணிக்கையில் புரட்சிப் படையினர். அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாய் ஆங்கிலேய இராணுவம். நாளுக்கு நாள் புதிய புதிய வீரர்களை, அதிக எண்ணிக்கையில் களமிறக்கிக் கொண்டேயிருந்தது.

       பாவம் எத்தனை நாள்தான் புரட்சி வீரர்கள் தாக்கு பிடிப்பார்கள். முடிவில் சூர்யா சென்னும் மற்ற புரட்சி வீரர்களும் கைது செய்யப் பட்டனர். விசாரனை நடந்தது.

      1934 சனவரி 11 இல், சிட்டகாங் மத்திய சிறையில், சூர்யா சென்னும், தாரகேஸ்வரி தஸ்தகீரும் தூக்கில் இடப் பட்டனர்.


     
சூர்யா சென் தூக்கில் இடப்பட்ட இடம்
இவர்களோடு கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கும், முதலில் மரண தண்டனைதான் விதிக்கப் பட்டது. பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டது. அப்பெண் அந்தமான சிறைக்கு அனுப்பப் பட்டார். அப்பொழுது அப்பெண்ணின் வயது 16.

      நண்பர்களே, இவர்தான், இப்பெண்தான் கல்பனா தத்.

     

சிட்டகாங்கில் பிறந்தவர். கல்கத்தா பெதூனே கல்லூரியில் பி.எஸ்ஸி., படித்துக் கொண்டிருந்தபோது, சூர்யா சென்னின் அறிமுகம் ஏற்பட்டது.


      பகலில் கல்லூரி, இரவில் புரட்சிப் பணி.

      படித்தவர் அல்லவா சமையல் செய்வதைப் போல், வீட்டிலேயே வெடிகுண்டு சமைப்பதைக் கற்றுத் தேறினார். இவர் வீட்டில் இருந்து, நாள்தோறும் வெடிகுண்டு தயாராகி, வெளியே வந்துகொண்டேயிருந்தது.

      இதோ, அந்தமான் சிறையில். அனைத்துக் கொடுமைகளையும் இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டார். எனது தாய் நாட்டிற்காக, இதையும் ஏற்பேன்,  இதற்கு மேலும் இன்னல்கள் வந்தாலும் ஏற்பேன்.

    
மகாத்மா காந்தி, ஆண்ட்ரூஸ் ,தாகூர் சந்திப்பு
மகாத்மா காந்தி, அந்தமான் சிறைக்கே வந்து, கல்பனா தத்தைச் சந்தித்தார். அடுத்து கவர்னரைச் சந்தித்தார்.

கல்பனா தத்தை விடுதலை செய்யுங்கள்.

      தேவியக் கவி இரவீந்திரநாத் தாகூரும் கவர்னரைச் சந்தித்தார்.

கல்பனா தத்தை விடுதலை செய்யுங்கள்.

     யார் வேண்டி என்ன பயன்? அசைந்து கொடுக்கவில்லை ஆங்கிலேய அரசு. ஆறு ஆண்டு சிறை வாழ்க்கைக்குப் பிறகே கல்பனா தத் விடுதலை செய்யப் பட்டார்.

கல்பனா தத்.
கல்பனா தத்
கல்பனா தத்

     சிட்டகாங்கின் ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கும் மந்திரச் சொல்லாய் மாறிப் போனார்.