04 ஆகஸ்ட் 2014

கொள்ளிடத்தின் நடுவில்

     

நண்பர்களே, நம் ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் குல தெய்வம் என்று ஒரு தெய்வம் இருக்கும். குல தெய்வம் என்பது பெரும்பாலும், ஊருக்கு வெளியில் இருக்கும் காவல் தெய்வமாகவே இருக்கும்.

     எங்கள் குடும்பத்தின் குல தெய்வம் போல், உங்களுக்கு அமைந்திருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஆம் நண்பர்களே, எங்கள் குல தெய்வம், ஊருக்கு வெளியில் மட்டுமல்ல, ஆற்றிற்கு நடுவில் அமைந்துள்ளது.

     தீவு என்ற சொல்லை நாம் நன்கறிவோம். நாற்புறமும் கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி தீவு எனப்படும். எங்கள் குல தெய்வம் இருக்கும் இடமும், ஒரு தீவுதான். ஆனால் கடலால் அல்ல, ஆற்றினால் நாற்புறமும் சூழப்பட்ட, அதுவும் கொள்ளிடம் ஆற்றினால் நாற்புறமும் சுற்றி வளைக்கப்பட்ட, ஒரு சிறு நிலப் பரப்பில், ஒரு திட்டில் எங்கள் குல தெய்வம்  கோயில் கொண்டுள்ளது.


     கொள்ளிடம் ஆற்றைத் தாங்கள் பார்த்திருப்பீர்கள். தங்களின் பயணத்தின் போது பலமுறை கடந்து சென்றிருப்பீர்கள்.

     கொள்ளிடம் ஆற்றினைத் தாங்கள் முன்னமே பார்த்திருந்தால், கொள்ளிடம் ஆற்றின் அகலம் தங்களை நிச்சயம் வியப்பில் ஆழ்த்தியிருக்கும். பல இடங்களில் இரண்டு கிலோ மீட்டருக்கும் மேல் அகலம் கொண்ட ஓர் பெரிய ஆறு அது.

     இத்தகைய கொள்ளிடம் ஆற்றின் நடுத் திட்டில்தான் எங்கள் குல தெய்வத்தின் கோயில் அமைந்துள்ளது. வருடத்திற்கு ஒரு முறையேனும், இக்கோயிலுக்குச் சென்று வருவது வழக்கம்.

     கடந்த 29.7.2014 செவ்வாய்க் கிழமையன்று, குல தெய்வம் கோயிலுக்குச் செல்ல குடும்பத்துடன் ஆயத்தமானேன்.

     இப்பூமிப் பந்தின் மூலை முடுக்கெல்லாம், பரந்து விரிந்து, அங்கு இங்கு எனாதபடி, எங்கும் வியாபித்திருக்கும், வலைப் பூ என்னும் அற்புத உறவால், சகோதர பாசத்தால், ஒன்றிணைந்தவர்கள் அல்லவா நாம். இப்பூமியிலேயே பெரிய குடும்பம், நம் வலைப் பூ குடும்பமல்லவா.

    இவ்வாண்டு, வலைப் பூ உறவுகளான, தங்களையும், குல தெய்வம் கோயிலுக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். வாருங்கள் நண்பர்களே. இதோ மகிழ்வுந்து தயாராய் காத்திருக்கிறது. வாருங்கள், வந்து அமருங்கள், சேர்ந்து பயணிப்போம்.

      தஞ்சையில் இருந்து புறப்பட்டு, கும்பகோணம் சாலையில் சென்று கொண்டிருக்கிறோம். இதோ அய்யம்பேட்டை, இடதுபுறமாகத் திரும்புவோமா, இதோ கணபதி அக்ரஹாரம். வலது புறம் திரும்பிப் பயணிப்போம். கவித் தலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இதோ சருக்கை என்றும் சிற்றூர். இடது புறம் திரும்புவோமா?

     சிறிது தூரத்திலேயே ஒரு வாய்க்கால் குறுக்கிடுகிறது. வாய்க்காலின் பழுதுபட்ட பாலம் நம்மை வரவேற்கிறது. பாலத்தில் மகிழ்வுந்து செல்ல இயலாது. இதோ பாலத்தை ஒட்டி, ஒரு சரிவான பாதை, மகிழ்வுந்து வாய்க்காலில் இறங்கிக் கரையேறுகிறது. வாய்க்காலில் தண்ணீர் இல்லை. தண்ணீர் இருந்தால், இறங்கிப் பழுதடைந்த பாலத்தில நடக்க வேண்டியதுதான்.

என் மனைவி, மகள், மகன்

இதோ கொள்ளிடம் ஆற்றின் தென் கரை. இதற்கு மேல் மகிழ்வுந்தில் செய்ய இயலாது. இறங்குங்கள். நடந்துதான் சென்றாக வேண்டும்.

        


(படத்தில் தெரியும் சக்கரச் சுவடுகள் டிராக்டருடையவை,
டிராக்டரால் மட்டுமே இம்மணலில் பயணிக்க இயலும்)
 நண்பர்களே, இவ்விடம் எப்படி இருக்கிறது பார்த்தீர்களா? சென்னை மெரீனா கடற்கரையில் நிற்பதுபோல் ஓர் உணர்வு ஏற்படுகிறதல்லவா? எதிரில் கடல்தான் இல்லை. எங்கு பார்த்தாலும் மணல், மணல், மணல் மட்டும்தான். ஒரு சிறு பாலைவனம் போல் தெரிகிறதா?

     எதிரே பாருங்கள், ஒரு கிலோ மீட்டர் தொலையில், ஒரு திட்டு தெரிகிறதல்லவா? மரங்களால் சூழப்பட்ட வனப்பகுதிபோல் தெரிகிறதே, அப்பகுதியை நோக்கி நடப்போமா?

     நடப்பதற்குச் சற்று சிரமமாகத்தான் இருக்கும். கால்கள் மணலில் புதையும். காலணிகளை அணிந்து கொண்டு நடப்பது கடினமாக இருக்கிறதல்லவா? அதற்காக காலணிகளைக் கழட்டிவிட வேண்டாம், வெயிலால் மணல் கொதிக்கும், காலினைப் பொசுக்கும்.

         எனது மகன் தற்பொழுது பி.சி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சிறுவனாய் இருந்தபொழுது, முடி எடுக்க இங்கு வந்தோம். கொள்ளிடத்தின் ஒரு பகுதியில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்த்து. இடுப்பளவு ஆழம்.

     என் மகனைத் தூக்கி, எனது தோளில் உட்கார வைத்துக் கொண்டு, ஆற்றினைக் கடந்த நினைவலைகள் நெஞ்சில் மோதுகின்றன.
    
கீழ இராமநல்லூர் சிற்றூரின் நுழைவு வாயில்


இன்று ஆற்றில் தண்ணீர் இல்லை. வெறும் மணல்தான். இதோ திட்டை நெருங்கி விட்டோம். அதோ ஒரு பாதை தெரிகிறது பாருங்கள். அதன் வழியாகத்தான் சென்றாக வேண்டும், வாருங்கள்.

     நண்பர்களே, நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. கோயில் இங்குதான் இருக்கிறதா? என்றுதானே கேட்கிறீர்கள். கோயில் இந்தத் திட்டில் இல்லை. இத் திட்டினைக் கடந்து, மீண்டும் கொள்ளிடம் ஆற்று மணலில் நடந்தால், அடுத்ததாக ஒரு திட்டு வரும், கோயில் அங்குதான் இருக்கிறது.

      சரி, அப்படினாயால் இந்த திட்டில் என்ன இருக்கிறது?


இந்தத் திட்டின் பெயர் கீழ இராம நல்லூர் என்பதாகும். இதற்குள் ஒரு சிற்றூர் உள்ளது. சிற்றூரிலும் மிகச் சிறிய சிற்றூர். மொத்தமே இரண்டே இரண்டுத் தெருக்கள்தான். சுமார் ஐம்பது அல்லது அறுபது வீடுகள் இருக்கும். இரண்டுத் தெருக்களைச் சுற்றிலும் காடுதான்.


     இங்கு வசிப்பவர்கள், எந்தவொரு சிறு பொருள் வாங்க வேண்டும் என்றாலும், மளிகையோ, அவசரத்திற்கு மருந்தோ, பகலோ, இரவோ, ஒரு கீலோ மீட்டருக்கும் மேல், ஆற்று மணலைக் கடந்து, நடந்து சென்றுதான் வந்தாக வேண்டும். சின்னஞ்சிறு குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதென்றாலும், இவ்வாற்று மணலைக் கடந்துதான் தினமும் சென்றாக வேண்டும். கடினமாக வாழ்க்கைதான்.

     கொள்ளிடம் ஆற்றில் தண்ணீரோ, வெள்ளப் பெருக்கோ ஏற்பட்டால், இவர்கள் இத்திட்டிலேயே சிறைக் கைதிகளைப் போல் இருக்க வேண்டியதுதான், அல்லது படகில் மிதந்துதான் கரையேற முடியும்.
    
குல தெய்வம் இருக்கும் திட்டு



இரு தெருக்களையும் கடந்து விட்டோம். வாருங்கள் மீண்டும் கொள்ளிட அற்று மணலில் நடப்போம். அதோ தெரிகிறது பாருங்கள், ஒரு திட்டு, அதற்குள்தான் எங்கள் குல தெய்வத்தின் கோயில் இருக்கிறது. இதோ ஒரு பாதை, திட்டின் மேல் நோக்கிப் போகிறதல்லவா, வாருங்கள் இப்பாதையில் செல்வோம். அதோ தூரத்தில் கோயில் தெரிகிறதே.
    
குல தெய்வம் கோயிலுக்கான நுழைவு பாதை


சிறு கோயில்தான். ஆனால் கோயில் கதவுகள் பூட்டியல்லவா இருக்கின்றன. இன்னும் சிறிது நேரத்தில் கோயில் பூசாரி வந்து விடுவார். அதுவரை, இத்திட்டினைச் சுற்றிப் பார்ப்போமா?

       நண்பர்களே, இக்கோயிலில் குடிகொண்டிருக்கும் தெய்வம், அருள்மிகு அரியதங்கம், கூத்தாயி உடனுறை அப்பாலிக் கூத்தர் என்பதாகும். இக்கோயிலின் எதிரில் இடது புறத்தில், கருப்புசாமி, வலது புறத்தில் மதுரை வீரன். கோயிலுக்கும் பக்கத்தில் பாப்பாத்தி அம்மன்.



    

கருப்பு சாமி

மதுரை வீரன்

பாப்பாத்தி அம்மன்

உணவுக் கூடம்

கருப்பு சாமியின் முன்தான் கிடா வெட்டுவார்கள்.அதோ ஓடு வேய்ந்த, நாற்புறமும் திறந்துள்ள, நீண்ட கட்டிடம் தெரிகிறதல்லவா? இவ்விடம் சாப்பாட்டுக் கூடமாகும். கிடா வெட்டி முடிந்ததும், இங்குதான் விருந்து நடைபெறும்.

     அரை கிலோ மீட்டர் அளவிற்கு நீண்ட திட்டு இது. இத்திட்டில் இக்கோயில் தவிர வேறு எதுவும் இல்லை  ஓங்கி உயர்ந்த மரங்கள், கருவேல மரங்கள், முற் புதற்கள் நிறைந்த காடுதான்.
    


கொள்ளிடத்தின் வட வரை இங்கிருந்து தெரிகிறது பாருங்கள். அக்கரையினை அடைய , மீண்டும் ஒரு கிலோ மீட்டர் நடக்க வேண்டும்.

     இதோ பூசாரி வந்துவிட்டார். கோயில் கதவுகள் திறக்கப் பட்டுவிட்டன. இதோ அரியதங்கம் ஒரு புறமும், கூத்தாயி மறுபுறமும் நிற்க, நடுவில் அப்பாலிக் கூத்தர்.

     என்ன நண்பர்களே, இப்பயணம் இனிமையானதாக, புதிய அனுபவமாக அமைந்ததா? வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது, மீண்டும் மணலில் இறங்கி, வந்த வழியே நடபோமா, வாருங்கள்.

      வெயிலையும் பொருட்படுத்தாது, ஒரு வழியாக நடந்து கரையேறிவிட்டோம். இதோ மகிழ்வுந்து. நண்பர்களே, நாம் விடபெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. என் மனைவி, இங்கிருந்து புறப்பட்டு, பட்டீசுவரம் கோயிலுக்கும், அடுத்ததாக மயிலாடுதுறையை அடுத்துள்ள வைத்தீசுவரன் கோயிலுக்கும் சென்றே ஆக வேண்டும் என வற்புறுத்துகிறார்.

     என் உள்ளத்திலும் ஓர் ஆசை, மெதுவாய் தலையை நீட்டிப் எட்டிப் பார்க்கிறது. கை நீட்டி ஓர் காட்சியினைக் காட்டுகிறது.

     ஆயிரம் ஆயிரம் யானைகள் அணிவகுத்து வரும் அற்புதக் காட்சி ஒரு புறமும், ஆயிரம் ஆயிரம் போர்க் கப்பல்கள் அணிவகுத்துச் செல்லும் வியப்புமிகு காட்சி மறுபுறமும் கண்ணில் விரிகிறது. இதோ பட்டத்து யானையின் மீது, கம்பீரமாய், சோழ மாமன்ன்ன், கடாரம் கொண்டான் இராஜேந்திர சோழன்.

      சோழ மாமன்ன்ன் இராஜேந்திர சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுப்பிய கற்றளி, பிரகதீசுவரர் ஆலயம், நெஞ்சம் நிமிர்த்தி, இளமை மாறாமல், நிற்கிறது. நம்மை வா, வா என அழைக்கின்றது.

     வைத்தீசுவரன் கோயிலுக்குச் சென்று விட்டு, கங்கை கொண்ட சோழபுரத்திற்கு, இன்றே சென்றாக வேண்டும் என மனது துடியாய்த் துடிக்கிறது. இதோ புறப்பட்டு விட்டோம்.

      நன்றி நண்பர்களே. மீண்டும் அடுத்தப் பதிவில், கங்கை கொண்ட சோழபுரத்தில் சந்திப்போமா.


     

77 கருத்துகள்:

  1. நேரில் ஆலயம் சென்று தரிசித்த உணர்வு..

    அருமையான படங்கள்.சிறப்பான பகிர்வுகள்.பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா உங்களுடைய. இந்த சீரீய பணிக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்ள் மற்றும் வாழ்த்துக்கள். ஏனெனில் எங்களுக்கும் திரு அறியதங்கம் நாச்சியார் தான் குடியசாமி ஆகும். விரைவில் உங்களை நேரில் சந்திக்கிறேன்.நன்றி.தொடர்புக்கு 9791797575 8825744456

      நீக்கு
  2. உங்களுடனேயே நாங்களும் பயணித்தோம். பயணிப்போம். ராம நல்லூர் மக்கள் ஆற்றைக் கடக்க சிரமப்படக் கூடாது என்றுதான் இப்போதெல்லாம் தண்ணீர் கரை புரளுவதில்லை போலும்! புகைப்படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மற்ற ஆறுகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடும் போது, கொள்ளிடத்தில், ஒரு பகுதியில் மட்டுமே தண்ணீர் ஓடும், மற்ற ஆறுகளில் தண்ணீர்இல்லை என்றால், கொள்ளிடத்தில் த்ண்ணீருக்கே வழியில்லை.
      தண்ணீர் இல்லாத ஆறு வருத்தத்தைத் தான் தருகிறது நண்பரே
      நன்றி

      நீக்கு
  3. உணர்ச்சிமிக்க வர்ணனைகளுடன் அழகான படங்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. அன்பு நண்பரே
    நீங்கள் எழுதியதைப் படித்ததும் நான் அங்கு சென்று இரண்டொரு நாளாவது அமைதியோடு இருந்து விட்டு வர வேண்டும் போல உணர்வு ஏற்படுகிறது. உண்மையிலேயே அதைப் படிக்கையில் அங்கு சென்றது போலவே உணர்வு இருந்தது.
    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காற்றின் ஓசை தவிர வேறு சத்தங்கள் இல்லாத அமைதியான இடம் ஐயா
      நன்றி ஐயா

      நீக்கு
  5. Nice narration. Let your Family Deity bless you all.

    பதிலளிநீக்கு
  6. ஸ்ரீராம் சொன்னது போல நாங்களும் உடன் வந்த உணர்வு உண்டானது.
    எதையும் சிறப்பாக சொல்லும் வல்லமை உங்களுக்கு இருக்கிறது

    பதிலளிநீக்கு
  7. எங்களது சொந்த ஊரும் எனது அம்மாவின் ஊரும் கொள்ளிடக் கரைகளில்தான் உள்ளன. கொள்ளிடம் என்றாலே இயற்கை அழகு கொஞ்சும் தெள்ளிய ஊற்று நீர் எப்போதும் ஓடும் அகலமான ஆறுதான் நினைவுக்கு வரும். தண்ணீர் குறைவான நாட்களில் ஆற்றின் சுடு மணலில் நடந்த அனுபவம் எனக்கு உண்டு. உங்கள் பயணக் கட்டுரை அந்த நாட்களை நினைவுபடுத்தியது.

    வெள்ள நாட்களில் கீழ ராம நல்லூர் மக்கள் ஊரிலேயே முடங்கிப் போய்விடுவார்கள் என்ற செய்தி முன்பு அடிக்கடி பத்திரிகைகளில் வரும். இப்போது கடந்த சில ஆண்டுகளாக ஆற்றில் தண்ணீரே இல்லை.

    குலதெய்வம் கோயிலுக்கு, அதுவும் இன்னும் அப்படியே ஊர்மணத்தோடு இருக்கும் கிராமத்திற்கு பழைய நினைவுகளோடு குடும்பத்தாருடன் சென்று வருவது ஓர் இனிய அனுபவம்தான். வலைப்பதிவர் என்பதால் வார்த்தைகளால் அழகாகச் சொல்லி விட்டீர்கள். படங்களை நான் பெரிதாக்கிப் பார்த்தேன். படங்கள் யாவும் அருமை. உங்கள் குலதெய்வம் உங்கள் குடும்பத்திற்கு அருள் புரியட்டும். ஒரு இனிய பயணத்தினை படங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!
    த.ம.3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது சொந்த ஊர் திருவையாறுதான் ஐயா
      சிறுவயதில் காவிரியாற்று மணணில் ஓடி விளையாடிய நினைவுகள் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளன ஐயா.
      தாங்களும காவிரி ஆற்று மணலையும், கொள்ளிடத்தையும் ரசித்தவர், காலார நடந்து ரசித்தவர் என்பது மிக்க மகிழ்ச்சியை அளிப்பதாக இருக்கிறது ஐயா
      நன்றி ஐயா

      நீக்கு
  8. புதுமையாகவும் த்ரில்லிங்காகவும் இருந்தது...

    பதிலளிநீக்கு
  9. இனிய தரிசனம்.

    சாதாரணமாகப் பேசிக் கொண்டு கொள்ளிட மணலில் நடந்தாற்போல் இருக்கின்றது. மண்ணின் மணம் வீசும் இனிய பதிவு.

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  10. செல்லும் இடங்கள் சிவனருகு என்றாலே
    வெல்லும் வாழ்வு விரைந்து !

    மண்ணில் இருக்கும் மகத்துவங்கள் அழகுதான் அருமையான பயணம் காணக்கிடைக்காத படங்கள்

    பகிர்வுக்கு நன்றி
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. அவ்விடத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியதாய் இருந்த புகைப்படங்கள்.நல்ல ஆவனப்பதிவு.வாழ்த்துக்கள்/

    பதிலளிநீக்கு
  12. அப்பாடா கொஞ்சம் இருங்கள் மூச்சு வாங்குகிறது இவ்வளவு தூரம் நடத்தி கூட்டி வந்துள்ளீர்களே கள் எல்லாம் வலிக்கிறது முதல்ல tea சொல்லுங்க அப்ப தான் கருத்து போடமுடியும். கொள்ளிட மணலில் உங்களுடனேயே பயணித்தது போல் ஆனந்தம் கொண்டேன். தொடர்ந்து பயணிக்கிறேன் இயற்ககை அழகும் அதற்கேப படங்கள் அபாரம் பதிவுக்கு நன்றி ! தொடர வாழ்த்துக்கள் .....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதோ தேநீர் தயாராக இருக்கிறது சகோதரியாரே
      சிறிது ஓய்வெடுங்கள்
      உடன் பயணித்தமைக்கு நன்றி சகோதரியாரே

      நீக்கு
  13. வணக்கம்
    ஐயா.

    நான் சினிமா படங்கள் வாயிலாக பத்திரிக்கைவாயிலாக இந்த இடம் பற்றி அறிந்தேன் ஆனால் கொள்ளிடம் குறித்து தங்களின் பதிவின் வழி விரிவாக அறியமுடிந்தது.மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் படங்கள் எல்லாம் அழகு..வாழ்த்துக்கள் ஐயா
    த.ம4வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  14. உங்களுக்கும் எங்களுக்கும் குலதெய்வத்தின் அருள் உண்டு.
    அருமையான காட்சி. இவ்விடமெல்லாம் நீர் நிறைந்திருப்பதை நினைக்கவே மகிழ்வாக இருக்கிறது.
    அங்கு வாழும் மக்களின் நாளாந்த சிரமங்கள் ,வேதனை தருகிறது.
    இந்த மணலை விட்டுவைத்துள்ளார்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை நண்பரே கொள்ளிடத்திலும் மணலை அள்ளிக் கொண்டுதான் இருக்கிறார்கள், இன்னும் இந்தப் பகுதிக்கு வரவில்லை அவ்வளவே. விரைவில் கொள்ளிடத்தை, தண்ணீர் மட்டுமல்ல, மணலும் இல்லா பெரு நதியாக்கி விடுவார்கள்
      நன்றி நண்பரே

      நீக்கு
  15. உங்களுடன் கூடவே பயணித்த உணர்வு..... வரண்டு கிடக்கும் கொள்ளிடம் பார்க்கும்போது மனதில் ஒரு வித வலி......

    இரண்டே இரண்டு வீதிகள் கொண்ட அந்த ஆற்றின் நடுவே இருக்கும் சிற்றூரில் தங்க ஆசை.......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வறட்சியைப் பார்க்கும்போது மனம் வலிக்கத்தான் செய்கிறது ஐயா
      நன்றி ஐயா

      நீக்கு
  16. கொள்ளிடத்தில் தண்ணீர் இல்லாவிடினும் உங்கள் குல தெய்வம் உள்ள தீவு அழகாய் உள்ளது. கொள்ளிடத்தில் தண்ணீர் ஓடும்போது அந்த தீவு இன்னும் அழகாய் இருக்கும் என நினைக்கிறேன். படங்களும் அருமை. தங்களது விளக்கங்களும் அருமை. எங்களையும் உங்கள் குலதெய்வத்தை தரிசிக்க வைத்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தண்ணீர் ஓடினால் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும் ஐயா
      நன்றி ஐயா

      நீக்கு
  17. உங்களுடன் உடன் வந்து உங்கள் குலதெய்வம் இல்லை இல்லை நம் குலதெய்வம் தரிசனம் கிடைத்து விட்டது. ராமநல்லூர் அருமையான சிற்றூர்.
    அழகான பதிவு.

    கங்கைகொண்டசோழபுரம் வா என்று அழைக்கிறது ! என்று என் பதிவில் போட்டீர்கள் பின்னூட்டம், இப்போது அங்கும் அழைத்து செல்லபோகிறீர்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் குல தெய்வம்தான் சகோதரியாரே
      நன்றி சகோதரியாரே

      நீக்கு
  18. என்ன ஒரு நேர்த்தியான பதிவு.
    எங்களையும் எவ்வளவு அழகாக உங்கள் கோவிலுக்கு கூட்டிச்சென்று வந்தீர்கள்.

    மிக்க நன்றி ஜெயக்குமார் சார்

    பதிலளிநீக்கு
  19. படிக்கும் அனைவரும் கோயிலுக்கு சென்று வந்தது போன்று இருந்தது. படிக்கும் பொழுது ஒவ்வொரு தலைமுறைக்கும் எவ்வளவு வித்தியாசமாகிவிடுகிறது என்று நினைக்கவும் வைத்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் ஐயா,
    எனக்கு நீர் நிலைகள் மீது கொள்ளை பிரியம். கரந்தையில் இருக்கும் போது மெனக்கெட்டு திருவையாறு காவேரி, திருமானுர் கொள்ளிடம் சென்று ஆற்றின் அழகை ரசித்து குளித்து வந்த அனுபவம் உண்டு.

    காவேரியும் சரி, கொள்ளிடமும் சரி கரை ஒரத்தில் வற்றாத ஜீவ நதி ஓடிக்கொண்டேயிருக்கும். அதன் அழகை ரசிப்பதே தனி ஆனந்தம். உங்கள் கட்டுரையை படித்தவுடன் காவேரி, கொள்ளிடம் நதிகள் ஞாபகம் வந்து விட்டன!

    மும்பையில் வானூயர்ந்த காங்கிரிட் கட்டிடங்களும், வாகன இரைச்சலும், அலுவலகத்தில் ஒயாத வேலைகளும் கண்டு துவண்டு போன மனத்திற்கு அருமருந்தாய் கொள்ளிடம் கட்டுரை

    மீண்டும் காவேரி, கொள்ளிடம் ஞாபகம் ........ அதான் ஆகஸ்ட் 15 ம் தேதி சொந்த மண், தஞ்சை மண் வருகிறேனே!

    அங்கு ஒரு ட்ரிப் அடித்தால்! அதுவம் நண்பர் குழாமோடு ஆனந்தத்திற்கு கேட்கவா வேண்டும்!!!!
    உங்கள் கட்டுரை உதவியால் எனக்கு ஓர் அருமையான ஒருநாள் பயணத்திட்டம் வரையறுக்கப்பட்டு விட்டது!
    (சரி, நீங்கள் குறிப்பிட்டிருக்கிற கிராமத்திற்கெல்லாம் மின்சாரம், மருத்துவம், கல்வி, வங்கி, முக்கியமாக நல்ல சாலைவசதி இவைகள் உள்ளனவா.

    எங்கோ உள்ள ஊர்களைப்பற்றி கவலைபட்டு வருகிறோம். )

    அன்பன்,
    இரா. சரவணன்
    மும்பை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீழ இராமநால்லூர் கிராமத்தில் மின் வசதி இருக்கிறது
      மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும் உள்ளது ஐயா
      மருத்துவம், கல்விமற்றும் அனைத்துத் தேவைகளுக்கும் கரை கடந்துதான் வரவேண்டும்
      மேல இராமநல்லூர் என்னும் பெயரில் இதைவிட பெரியதிட்டு ஒன்று அருகிலேயே உள்ளது ஐயா
      வாய்பிருந்தால் சென்று வருவோம்
      நன்றி நண்பரே
      ஆகஸ்ட் 15 அன்று சந்திப்போம்

      நீக்கு
  21. வணக்கம் ஐயா!

    கண்கொள்ளாக் காட்சிதனை மனக்கண்ணில் கண்டு
    ஆனந்தித்தேன் ஐயா! உங்கள் எழுத்து நடை அருமை!
    கூடவே அத்தனை இனிமையாக இயற்கையை இரசித்த வண்ணம்
    வந்தேன். அற்புதம்!

    குல தெய்வத்தின் அருள் எல்லோருக்கும் கிட்டச் செய்தீர்கள்!
    அன்பு நன்றியுடன் நல் வாழ்த்துக்களும் ஐயா!

    பதிலளிநீக்கு
  22. பெயரில்லா05 ஆகஸ்ட், 2014

    மிக நன்று குடும்பம் குலதெய்வம் அறிமுகப் படுத்திய விதம்.
    இயற்கை அழுகு.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  23. அழகான ஒரு பதிவு ஆனால் அதேசமயம் கொள்ளிடத்தின் படங்கள் மனதை வாட்டவும் செய்தன....எப்படி இருந்த நான் இப்படி ஆனேனே அறிவு கெட்ட மனிதர்களால் என்று சொல்லுவது போல...

    கொள்ளிடம், மணல்
    கொள்ளையர்களின்
    கொள் இடம் ஆனதோ!

    பகிர்வுக்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்நண்பரே
      கொள்ளிடம் ஆற்று மணல் கொள்ளை போய்க் கொண்டுதான் இருக்கிறது
      விரைவில் வறண்ட மணல் இல்லா பாலவனமாகிவிடும் ஆபத்தும் உள்ளது
      நன்றி நண்பரே

      நீக்கு
  24. அன்பின் ஜெயக்குமார் - அருமையான பதிவு - அழகான படங்கள் - குல தெய்வம் கோவிலுக்குச் சென்று கடமைகளைச் செய்து வந்தது நன்று. படிப்பவர்களை எல்லாம் உடன் அழைத்துச் சென்று தரிசனம செய்து வைத்த நற்செயலுக்குப் பாராட்டுகள் - நல்வாத்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  25. ஐயா, உங்களுடன் செய்த இந்த திருகோவில் பயனம் அருமையாக இருந்தது. அடுத்த பயனதுக்கு இப்பொழுதே தயாராக இருக்கின்றேன்.
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  26. ஒரு திரைப்படத்தை கண்ட விட்டு வெளியே வந்த உணர்வு வந்தது ஐயா தங்களின் எழுத்துநடை அருமை.
    எல்லா புகைப்படங்களையும் பார்த்துக்கொண்டே வந்தேன் எங்கே தாங்களை காணவில்லையே எனநினைக்கும்போது கடைசியாக தாங்கள், ஓ.... டைரட்டரின் பெயர் கடைசியில்தானே வரும்.. நன்றி.
    மீண்டும் சந்திப்போம் சோழபுரத்தில்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொள்ளிடம் ஆற்று மணலில் நடந்து செல்லும் பொழுதே, அலைபேசியில் படங்களை எடுத்துக் கொண்டேநடந்தேன் ஐயா
      அதனால்தான் படங்களில் நான் இல்லை.
      கோயிலுக்கு சென்றவுடன், பூசாரிக்காகக் காத்திருந்த வேளையில், என் மகன் எடுத்தப் படத்தினைத்தான் கடைசியாக பதிவிட்டிருந்தேன்
      நன்றி நண்பரே

      நீக்கு
  27. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு, உங்களுடன் 22 வருட நட்பில் இருந்த பொழுதிலும், தங்களுடன் பல நூறு கி.மீ. பயணம் செய்து பல கோவில்களுக்கு சென்று வந்த பொழுதிலும் உங்களுடைய குலதெய்வம் கோவிலுக்கு என்னால் உங்களுடன் வர இயலாமல் ஒவ்வொரு தடவையும் தடைப்பட்டு போனது எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் அந்த வருத்தத்தை உங்களுடைய இந்தப் பதிவு போக்கி விட்டது. ஆம். நேரில் சென்று வந்த உணர்வை மிக அற்புதமான தங்களின் பதிவு ஏற்படுத்தியது உண்மை. மேலும் அடுத்த வாரத்தில் கடாரம் கொண்டானை உங்களின் தனித்துவமான நடையில் படிக்க இன்றே ஆயத்தமாகி விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவரை வராவிட்டால் என்ன நண்பரே
      இனி ஒருமுறை சென்று வருவோம்
      நன்றி நண்பரே

      நீக்கு
  28. வணக்கம் சகோதரரே!
    வெயிலில் சுடுமணலில் நடந்தாலும் நீங்கள் பேசிக்கொண்டே வந்ததால் ஒன்றும் தெரியவில்லை..
    உங்களுடன் வந்ததைப் போன்றே உணரவைத்த பதிவு..நன்றி சகோதரரே

    பதிலளிநீக்கு
  29. உங்களுடன் பயணித்தது இனிய அனுபவமாக இருந்தது! புகைப்படங்களும் தமிழ்ச் செறிவோடு கட்டுரையும் அருமை!!

    பதிலளிநீக்கு
  30. வியப்பில் ஆழ்த்திய பதிவு!. தகவல்கள் சுவராசியமாக இருந்தது!.
    இத்தகை தீவு திட்டுகள் கொள்ளிடம் ஆற்றில் இருக்கிறது என்று கேள்வி பட்டு இருக்கிறேன். கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட இருக்கிறார்களே?, அதனால் இப் பகுதிக்கு எதுவும் பாதிப்பு உண்டா அய்யா?.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொள்ளிடத்தில் முழுமையும் தண்ணீர் ஓடுவதில்லை ஐயா. ஆற்றின் ஒரு பகுதியில் மட்டுமே தண்ணீர் ஓடும். மற்றைய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு அபாயம் ஏற்படும் நேரங்களில் உபரியான நீர் , கொள்ளிடத்தில் திறந்துவிடப்படும். எனவே தடுப்பணைகளினால் பாதிப்பு இருக்காது என்றே எண்ணுகின்றேன் ஐயா
      நன்றி

      நீக்கு
  31. குல தெய்வத்தை வணங்கியது நீங்கள் ,புண்ணியம் எங்களுக்கு !
    த ம +1

    பதிலளிநீக்கு
  32. குல தெய்வம் கோயில் பற்றிய
    சிறந்த கருத்துப் பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  33. என் பின்னூட்டம் காணாமல் போய் விட்டதா? இல்லை ஏற்றுக் கொள்ளப்படவில்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பின்னூட்டத்தினை ஏற்றுக் கொள்ளாதவர்கள் யாரும் இருக்கிறார்களா ஐயா.
      ஏதோ இணையத் தவறுதலாகத்தான் இருக்கும்
      தங்களின் வருகையினையும், கருத்தினையும் பெறுவதைப் பெருமையாக நினைப்பவன் ஐயா நான்

      நீக்கு
  34. இப்போது வருகிறது. தீவு என்றால் நான்கு புறமும் நீரால் சூழப் பட்டிருக்கவேண்டும். ஆனால் நீரின்றி பாலைபோல் தெரிகிறதே என்று எழுதிய நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொள்ளிடம் ஆற்றில் நீர் இல்லாத காலங்களில், மணலால் பாலைபோல் சூழப்பட்ட திட்டுதான் ஐயா இது.
      நன்றி ஐயா

      நீக்கு
  35. மிக அருமை.குலதெய்வ தரிசனம் சிறப்பு.நானும் தரிசித்து மகிழ்ந்தேன்.மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  36. ஆற்றுக்கு நடுவில் ஊர்! அதில் ஓர் கோயில்! வித்தியாசம்தான்! உடன் வந்த உணர்வை ஏற்படுத்தியது பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  37. முன்பெல்லாம் இலங்கையில் யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா -மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவராத்திரி விழா நிகழ்சிகளை வானொலியில் நேரடி அஞ்சல் செய்வார்கள் .....இவ் விரு திருத்தலங்களுக்கும் நேரிலும் சென்றிருக்கின்றேன் ...செல்ல முடியாத சந்தர்ப்பங்களில் வானொலி அஞ்சல் கேட்கும்போது திருத்தலங்ளில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும் ..இன்று உங்கள் எழுத்தாற்றலால் கொள்ளிடம் கூட்டிச் சென்று குலதெய்வத்தை தரிசிக்க வைத்துள்ளீர்கள் ...நன்றிகள் பல ....உடுவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா
      என்றும் வேண்டும் இந்த அன்பு

      நீக்கு
  38. தங்களின் குலதெய்வக் கோயில் பயணத்தில் நாங்களும் கலந்துகொண்டதுபோல இருந்தது. குலதெய்வம் கோயிலுக்குப் போவது என்பது குறைந்துவிட்ட காலகட்டத்தில் இதுபோன்ற பதிவினை இட்டு தாங்கள் அதன் முக்கியத்துவத்தை உணரவைத்துள்ளீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  39. உங்கள் பயணம் நன்றாக இருந்தது. கங்கை கொண்ட சோழபுரம் பற்றிய பத்வி எதிபார்க்கிறேன்

    பதிலளிநீக்கு
  40. அதே போல், கோவிலுக்கு உரிய கோத்ரம் மற்றும், உட்பிரிவுகளையும் கூறுங்கள் ஐயா.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு