28 ஆகஸ்ட் 2014

தமிழ் மண்ணின் மைந்தர்


ஆண்டு 1891. கொடைக்கானல் குன்று. அவர் ஒரு ஆங்கிலேயர். வயதோ 77. நடைப் பயிற்சி முடிந்து, தற்காலிகமாகத் தங்கியிருந்த வீட்டிற்குத் திரும்பியபோது, அவரின் உடல் நடுங்கத் தொடங்கியது. மருத்துவர் வரவழைக்கப் பட்டார். மருத்துவம் பார்த்தும் பலன்தானில்லை.

     கருணைக் கடலாம் கர்த்தரை மனதில் நினைத்து, மறை  மொழிகளால் மனதாரத் தொழுது, புண்ணியா, உன்னிடமே போதுகின்றேன் என்றார். அடுத்த நொடி, அவரது மண்ணுலக வாழ்வு நிறைவு பெற்றது.

     அந்நாள் 28.8.1891


     அவரது மனைவிக்கும், மகனுக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. கொடைக் கானல் குன்றிலிருந்து, பெரியவரின் உடலினை எப்படி அடிவாரத்திற்குக் கொண்டு செல்வது என்று அறியாது திகைத்தனர்.

     நண்பர்களே, இன்றைக்கு 120 ஆண்டுகளுக்கு முன்னர், கொடைக்கானல் குன்றுக்கு, இன்றுள்ளது போன்ற சாலை வசதிகள் ஏதும் கிடையாது.

     அம்மை நாயக்கனூர் என்னும் ஊரிலிருந்து, கடும் பாறையின் வழியே பயணித்தாக வேண்டும். செங்குத்தாக சிவந்த பாறைகளுக்கு இடையே, நெளிந்து நெளிந்து செல்லும் பாதையில், தட்டுத் தடுமாறி நடந்தே ஏறித்தான் கொடைக் கானலை அடைய முடியும்.

      நடப்பதற்கே கடினமான பாறை வழியாக, மறைந்த பெரியவரைப் பேழையில் வைத்து, பத்திரமாய் மலையின் அடிவாரத்திற்குக் கொண்டு வந்தாக வேண்டும். இப்பணி எப்படி சாத்தியமாகும் என்று எண்ணி எண்ணி கலங்கித்தான் போனார்கள்.

     மறைந்த அப்பெரியவரின் பெருமை அறிந்த மலை வாழ் மக்கள் பலர் ஒன்று திரண்டு வந்தனர், தாயே, அருந்தவ முனிவராம், இப்பெரியவரை சுமந்து செல்லும் பெருமையை, ஏழைகளாகிய எங்களுக்கு அருள வேண்டும் என்று கூறி, குழந்தையைப் போல், பேழையைத் தோளில் சுமந்து, நடக்கத் தொடங்கினர். மலையில் இருந்து இறங்கத் தொடங்கினர்.

     அலுங்காமல், குலுங்காமல் பேழையைச் சுமந்து, மலை அடிவாரத்தை வந்தடைந்தனர். பின்னர் ஒரு மாட்டு வண்டியில், பேழையை ஏற்றி, தொடர் வண்டி நிலையத்தை அடைந்தனர்.

     தொடர் வண்டியில் நெல்லை மாநகர் வரை பேழை பயணித்தது. பின்னர் பாளையங்கோட்டை தேவாலயத்தில் பேழை சிறிது ஓய்வெடுத்தது. அன்றிரவு முழுவதும், பாளையங் கோட்டை மக்கள், தொடர்ந்து வந்து, பேழையில் உறங்கும், பெரியவரை வணங்கிய வண்ணம் இருந்தனர்.

     சாலையின் இருமருங்கிலும், ஆங்காங்கு, ஆயிரக் கணக்கானப் பொது மக்கள் நின்று வணங்க, அடுத்த நாள், அப்பேழை, இடையான்குடி நோக்கித் தன் இறுதிப் பயணத்தைத் தொடங்கியது.
    

ஒன்றல்ல, இரண்டல்ல முப்பத்து மூன்று ஆண்டுகள், தான் பார்த்துப் பார்த்து, இழைத்து இழைத்து உருவாக்கிய, இடையான்குடி தேவாலயத்திலேயே, அப்பெரியவரின் உடல் நல்லடக்கம் செய்யப் பட்டது.நண்பர்களே, இப்பெரியவர் யார் தெரிகிறதா?
இவர்தான், தமிழ் மொழியின் பெருமையினை,
இவ்வுலகிற்கு அறிவித்த அருமைமிகு ஆங்கிலேயர்
அறிஞர் ராபர்ட் கால் டுவெல்.

     அயர்லாந்து தேசத்தில் பிறந்த கால்டு வெல், கடல் வழியாக சென்னையில் கால் பதித்த நாள் 8.1.1838. அப்பொழுது அவரின் வயது வெறும் 24. மூன்றாண்டுகள் சென்னையிலேயே தங்கி, அருந் தமிழின் சுவை அறிந்த அறிஞர்களிடம், தமிழமுதை அள்ளி அள்ளிப் பருகினார்.

     ஒரு நாள், தனக்கு வேண்டிய உடைகளை, தேவையானப் பொருட்களை எல்லாம், மூட்டையாய் கட்டி, கூலியாட்களின் தலையில் ஏற்றிவிட்டு, நடக்கத் தொடங்கினார்.

     நடந்தார், நடந்தார், நடந்து கொண்டே இருந்தார். காலையில் நடந்தார். மாலையில் நடந்தார். வெப்பம் மிகுந்த பிற்பகலில், மரங்கள் அடந்த தோட்டங்களில் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டு நடந்தார். தமிழகத்தையும், தமிழ் நாட்டு மக்களின் வாழ்க்கை நெறிமுறைகளையும், பழக்க வழக்கங்களையும், அணு அணுவாய் அறிந்து கொண்டு, புரிந்து கொண்டு நடந்தார்.

     தில்லை சிற்றம்பலத்தின் பழமையினையும் பெருமையினையும் கண்டு மகிழ்ந்து, மாயூரம் வந்தார். தரங்கம்பாடியில் சில காலம் தங்கினார். பின் நடந்து கும்பகோணம் வழியாகத் தஞ்சையை வந்தடைந்தார்.

     தஞ்சையில் வாழ்ந்த வேதநாயகரைக் கண்டு அளவாவினார். திருச்சி வழியாக நீலகிரி மலைக்குச் சென்றார். நீலகிரியில் சில நாள் ஓய்வு. பின் நீலகிரியில் இருந்து புறப்பட்டு, கோவை வழியாக மதுரை மாநகரை வந்தடைந்தார். மதுரையிலிருந்து, திருமங்கலம் வழியாக, திருநெல்வேலி சென்று, பாளையங்கோட்டையில் ஓய்வெடுத்து, இடையான் குடியைச் சென்றடைந்தார்.

     இடையான் குடியே இவரது இருப்பிடமாய் மாறிப் போனது. ஊற்று நீரைத் தவிர, வேற்று நீரைக் கண்டறியாத, இடையான் குடியில், ஊர் தோறும் பரந்து, படர்ந்து கிடந்த, கள்ளிச் செடிகளையும, முள்ளிச் செடிகளையும் அகற்றி, தெருக்களைத் திருத்தி அமைத்தார். ஒவ்வொரு தெருவிற்கும், ஒரு கிணறு தோண்டினார். சாலையின் இருமருங்கிலும், நிழல்தரும் மரங்களை நட்டார்.

     எண்ணும் எழுத்தும் அறியாதிருந்த அவ்வூர் சிறுவர், சிறுமியருக்கு எழுத்தறிவு புகட்டினார். பெண் மக்கள் கல்வி கற்றல் பெருந்தவறு, என்று எண்ணியிருந்த, அவ்வூர் முதியோர்களை அன்புடன் அழைத்துக் கனிவுடன் பேசி, கல்வியின் இன்றியமையாமையை விளக்கி, பெண் கல்விக்கும் வித்திட்டப் பெருமைமிகு பெருந்தகை இவர்.

     தமிழ் மொழியில் உள்ள நூல்களை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார்.

     பழந் தமிழ்ச் சொற்களைப் பழங் கன்னடச் சொற்களோடும், ஆதி ஆந்திரச் சொற்களோடும் ஒத்து நோக்கிய போதுதான், இவருக்குப் புரிந்தது, நூற்றுக் கணக்கான, சொற்களின் தாதுக்கள், மும்மொழிகளிலும் ஒன்று பட்டிருப்பது தெரிந்தது.

     மேலை நாட்டு மொழி நூல்களில் கண்ட, தெளிவான ஆராய்ச்சி முற்களைப் பின்பற்றி, தென்னிந்திய மொழிகளை துருவித் துருவி ஆராயத் தொடங்கினார்.


நண்பர்களே, ஒன்றல்ல இரண்டல்ல, பதினைந்து ஆண்டுகள் அயராது, இடைவிடாது ஆராய்ந்தார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் ஓர் ஒப்பற்ற ஆய்வு நூலை இயற்றி, தமிழ் மொழி வரலாற்றில், மாபெரும் திருப்பு முனையை ஏற்படுத்தினார்.

     சமஸ்கிருதமே அனைத்து மொழிகளுக்கும் தாய், அதுவே உயர்ந்த மொழி என்று, அந்நாள் வரை, நிலை நாட்டப் பட்டிருந்த, எண்ணத்தை உடைத்து, தூள் தூளாக்கி, தமிழே தென்னிந்திய மொழிகளின் தாய். அழகும், வளமும் நிறைந்து,  தனித்தியங்கும் வல்லமை பெற்ற செம்மொழி தமிழ் என்பதை, தக்க சான்றுகளுடன் ஆணித்தரமாக நிலை நாட்டினார்.

     திராவிடக் குடும்பத்தில் தொன்மையும், செம்மையும் வாய்ந்து விளங்கும் மொழி தமிழ் மொழியே என்பதையும் நிரூபித்தார்.

     நண்பர்களே, கால்டுவெல், வியந்து வியந்து, வியப்பின் உச்சிக்கே சென்று, பாராட்டிய செய்தி ஒன்றுண்டு தெரியுமா?

     உலகில் வேறு எந்த மொழி நூல்களிலும் காணப்படாத வகையில், பெயர்களை உயர்திணை என்றும், அஃறிணை என்றும், திராவிட இலக்கண நூலோர் வகுத்திருந்த செவ்வியல் முறை கண்டு மயங்கித்தான் போனார்.

     நான் அயர்லாந்து தேசத்தில் பிறந்தேன். ஸ்காட்லாண்டு தேசத்தில் வளர்ந்தேன். ஆங்கில நூல்களில் ஆழ்ந்தேன். ஆயினும் என் வாழ் நாளில், ஐம்பதாண்டுகட்கு மேலாகப் பாரதப் பெரு நாடும், அந்நாட்டு மக்களுமே, என் கருத்தை முற்றுங் கவர்ந்து கொண்டமையால், யான் இந்தியர்களுள் ஒருவனாயினேன்
என்று நெகிழ்ந்து கூறி, மகிழ்ந்த
அறிஞர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின்
நினைவு நாள் இன்று
28.8.2014


தமிழின் பெருமையை, தமிழ் இலக்கியங்களின் வளமையை,
தமிழனுக்கும், உலகிற்கும் உணர்த்திய
அறிஞர் ராபர்ட் கால்டுவெல் அவர்கள்
பிறந்த
200 வது ஆண்டு இவ்வாண்டு.

அறிஞர் கால்டுவெல் அவர்களின் நினைவினைப் போற்றுவோம்.


   


76 கருத்துகள்:

 1. கால்டுவெல் பெருமைகளை அவரது நினைவு நாளிலேயே படிக்கத் தந்துள்ளீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 2. நினைவு நாள் என்றால் மறைந்த நாள் என்று ஆகி விடுகிறதோ! இன்று அவர் பிறந்தநாள் அல்லவா.... நினைவைப் போற்றும் நாள் என்பதால் நினைவு நாள்! எப்படி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே, இன்று கால்டுவெல் அவர்கள் இவ்வுலக வாழ்வை நிறைவு செய்த நாள்.அவர் பிறந்தது 7.5.1814 ல் ஆகும்.

   நீக்கு
 3. அறிஞர் கால்டுவெல் பற்றிய அருமை பெருமைகளை உங்கள் பதிவு மூலம் பலரும் தெரிந்து கொள்வார்கள். சிறப்பான பகிர்வு. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 4. வியத்தகு அறிஞரைப் பற்றி விவரமான பதிவை நல்கியுள்ளீர்கள். அருமை.

  பதிலளிநீக்கு
 5. எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய அருமையான பதிவு நண்பரே! சில தகவல்கள் தெரிந்தவை என்றாலும், சில தகவல்கள் புதியவை. தெரிந்து கொண்டோம். தமிழ்மொழிக்கு, தமிழர் அல்லாத ஒருவர் பெருமை சேர்த்துள்ளார் என்றால் அந்த முதல் மனிதர் கால்ட்வெல் தான். தாங்கள் இப்போது அவரைப் பற்றி எழுதி மேலும் பெருமை சேர்த்துள்ளீர்கள்! மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே
   ஒரு ஆங்கிலேயன் வந்து சொன்ன பிறகுதான், தமிழ் மொழியின் பெருமை நம்மவர்களுக்கேப் புரிந்தது

   நீக்கு
 6. பெயரில்லா28 ஆகஸ்ட், 2014

  உரிய நாளில், உயரிய படைப்பைத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி. தொடரட்டும் உங்கள் பணிகள். வணககம். - த. உ.

  பதிலளிநீக்கு
 7. நல்ல பதிப்பு. உங்கள் பணி தொடரட்டும்
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 8. தமிழின் பெருமையை, தமிழ் இலக்கியங்களின் வளமையை, தமிழனுக்கும், உலகிற்கும் உணர்த்திய அறிஞர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் நினைவினைப் போற்றுவோம். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 9. அருமையான பதிவு. அனைவரும் அறிய வேண்டிய விஷயங்கள். தன்னலம் மறந்து நம் மொழிக்காக வாழ்ந்த பெரியவர். நன்றி.. ஐயா,. நன்றி..

  பதிலளிநீக்கு
 10. வணக்கம்
  ஐயா.

  தமிழின் பெருமையை உலகிற்கு புகட்டிய மகானை நினைவு படுத்தி எழுதிய பதிவு மிக அருமையாக உள்ளது. இவரைப்பற்றிதங்களின் பதிவு வழி அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி
  த.ம 4வது வாக்கு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 11. அறிஞர் ராபர்ட் கால் டுவெல் பற்றி
  அவராது நினைவு நாளில் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.!

  பதிலளிநீக்கு
 12. அன்பின் ஜெயக்க்குமார் - இதுவரை அறியாத பல அரிய தகவல்களை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி -

  அறிஞர் ராபர்ட் கால்டுவெல்லின் நினைவு நாளான இன்று - அவரைப் பற்றிய பதிவிட்டமை நன்று - எவ்வளவு தகவல்கள் - தேடிக் கண்டுபிடித்து ஆராய்ந்து பதிவினை உருவாக்கியமைக்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 13. வணக்கம்!
  ஆசிரியர் மற்றும் தமிழ் அன்பர்களே!!
  உங்களை இவ்வலைதலைத்தின் மூலமாகச் சந்திப்பதில் மகிழ்ச்சி!!

  திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நன்னூலை இயற்றி தமிழின் உயர்வை பிற மாநிலத்து அறிஞரும், பிற நாட்டு மொழி ஆராய்ச்சியாளர்களும் படித்து தமிழின் மேன்மையை உலகெலாம் பரவச் செய்தவர் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் அவர்கள்.

  தமிழை அணுஅணுவாக அணுகியதால் தமிழ் மேல் காதல் கொண்டு தமிழ்நாடே என் நாடு என எண்ணி தமிழ் மண்ணிலே வாழ்ந்து, தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் தொண்டு செய்து மறைந்த தமிழ் ஞானி அவர்.

  அயல்நாட்டிலிருந்து இங்கு வந்து கள்ளிக்காட்டை திருத்தியும், தெருதோறும் கிணறு வெட்டியும், மரம் வைத்தும் இவர் செய்த தொண்டை நினைத்து நாம் பிறந்த ஊர்க்கு என்ன செய்தோம் என்று கேட்டு வெட்கப்பட வைக்கும் பெருந்தகையாளர் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் அவர்கள்.
  சரியான நேரத்தில் தரமானக் கட்டுரை- எப்போதும் போல் ஆசிரியர் KJ அவர்களால்.

  தொடரட்டு்ம் தங்கள் பணி....

  வாழ்த்துக்களுடன்,

  இரா. சரவணன்

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் ஐயா!

  எத்தனை பெருமைகள் இப்படிப் புதைந்து கிடக்கின்றனவோ?
  உங்கள் அருமையான உபயோகமான முயற்சியைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை ஐயா!
  நல்ல தகவல்கள் அறிந்து கொண்டேன் இன்றும்!

  நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

  பதிலளிநீக்கு
 15. மிக அருமை.கால்டுவெல் என்ற மாமனிதரின் தமிழ்ப்பற்றும் அறியாமையை அகற்றி பெண் கல்விக்கு வித்திட்டதும் காலத்தால் அழியாதது.அய்யா அவர்களின் இருநூறாவது ளி பிறந்தநாள் இன்று கட்டுரையை வெளியிட்டு நண்பர்களை வியப்பில் ஆழ்த்திவிட்டீர்கள்.மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 16. தமிழனின் பெருமையையும் தமிழின் பெருமையையும் அதிகம் அறிந்திருக்காத அந்தக் காலத்திலேயே நம் பெருமையை உலகறியச் செய்த ராபர்ட் கால்டுவெல் பற்றி அருமையான பதிவு ஐயா !!!

  பதிலளிநீக்கு
 17. பாடப்புத்தகத்தை விட விரிவான சுவையான நடை !! அருமை அண்ணா!

  பதிலளிநீக்கு
 18. பெயரில்லா28 ஆகஸ்ட், 2014

  ''.பரதப் பெரு நாடும், அந்நாட்டு மக்களுமே, என் கருத்தை முற்றுங் கவர்ந்து கொண்டமையால், யான் இந்தியர்களுள் ஒருவனாயினேன்..''
  Great......
  மிகப் பெரிய தகவலும் - சமஸ்கிருதமே அல்ல
  தமிழே ஆதி மொழி என்றதையும் அறிந்தேன்.
  மிக்க நன்றி. இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 19. //பாரதப் பெரு நாடும், அந்நாட்டு மக்களுமே, என் கருத்தை முற்றுங் கவர்ந்து கொண்டமையால், யான் இந்தியர்களுள் ஒருவனாயினேன்..//

  மகத்தான கருத்து.. அறிஞர் ராபர்ட் கால்டுவெல் அவர்களைப் பற்றிய
  தகவல்களை அறியத் தந்தமைக்கு நன்றி.. வாழ்க நலமுடன்!..

  பதிலளிநீக்கு
 20. அறிஞர் கால்டுவெல் அவர்களின் தமிழ்த் தொண்டினை தமிழ்கூறும் நல்லுலகம் உள்ள வரையில் என்றும் மறவாது. அவரது திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் இன்றைக்கும் அவரது தமிழ்ப் பணியை பறை சாற்றும். அன்னாரது நினைவு நாளான இன்று அவரை நினைவு கூர்ந்த ஆசிரியருக்கு நன்றி!
  த.ம.6

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அறிஞர் கால்டுவெல் அவர்களின் தமிழ்த் தொண்டினை தமிழ்கூறும் நல்லுலகம் , என்றும் மறவாது போற்றக் கடமைப் பட்டுள்ளது
   நன்றி ஐயா

   நீக்கு
 21. ராபர்ட் கால்டுவல் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 22. ராபர்ட் பற்றி பல புதிய தகவல் அரிந்தேன் பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 23. சரியான தருணத்தில் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் சரியான விசயங்களை வெளியிடும் உமது செயல் கண்டு வியக்கிறேன் நண்பரே...
  வாழ்க உமது தொண்டு, உம்மால் நாங்களும் தெரிந்து கொண்டோம் நன்று.

  பதிலளிநீக்கு
 24. தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த பலரும் இன்று தமிழைக்கொலை செய்து கொண்டு, ஆங்கிலத்திலேயே பேசும் மோகத்தில் இருப்பதற்கு மத்தியில் அயல் நாட்டில் பிறந்து செந்தமிழைக்கற்றுத் தெளிந்து, ஒப்பிலக்கணம் பற்றிய ஆய்வு நூலை எழுதி தமிழ்மக்களுக்கு சமர்ப்பித்த கார்டுவெல் அவர்கள் ஒரு உயர்ந்த மனிதர்.

  அனைவரும் அவரைப்பற்றி விரிவாக அறிந்து கொள்ளச்செய்த உங்களுக்கு இனிய பாராட்டுக்களும் நல்வாழ்த்துக்களும்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழின் பெருமையும் அருமையும்
   ஒரு ஆங்கிலேயன் சொல்லித்தான்
   தமிழனுக்கேத் தெரிந்திருக்கிறது
   நன்றி சகோதரியாரே

   நீக்கு
 25. அபூர்வங்களில் ஒருவராய்/

  பதிலளிநீக்கு
 26. கார்டுவெல் பற்றி அறியாத தகவல்களை அறியத் தந்தீர்கள் ஐயா...
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 27. அருமையான பதிவு.
  நன்றி ஜெயக்குமார் ஐயா.
  த.ம. 7

  பதிலளிநீக்கு

 28. வணக்கம்!

  தன்னே ரிலாத்தமிழே தென்னகம் வாழ்ந்திட
  முன்னே பிறந்த மொழி!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு


  பதிலளிநீக்கு
 29. அரிய தகவல்களுடன் கூடிய அருமையான பதிவு! நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
 30. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  தமிழ் முனிவர் கால்டுவெல் பற்றிய செய்தியை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். தமிழ் மொழிக்கு மட்டுமல்ல தமிழர்களுக்கு தூய்மையாக வாழ வேண்டிய அவசியத்தை சொல்லிக் கொடுத்தவர், குடிநீருக்கு வழிவகுத்தவர் என்ற பல்முகங்களை பெற்ற கால்டுவெல் அவர்களின் நினைவைப் போற்றுவோம். பதிவும் இரத்தின சுருக்கமாக அருமையாக அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 31. கால்டுவெல்லைப் பற்றி அரிய, அதிகமான செய்திகள். பெருமைப்படவேண்டியவை. பெருமுயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 32. கால்டுவெல் நினைவைப் போற்றும் வகையில் அமைந்த வகையில் அமைந்த தங்களின் பதிவின் மூலம் ,கால்டுவெல் ஆற்றியுள்ள பணிகளை தெரிந்து கொண்டேன் !
  த ம 9

  பதிலளிநீக்கு
 33. தங்களுடைய பதிவுகள் அனைத்தும் பள்ளி மாணவர்கள் அவசியம் படிக்கவேண்டியவைகள். இனிமையான தமிழில் அழகுற எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  அன்புடன்
  பக்கிரிசாமி

  பதிலளிநீக்கு
 34. அற்புதமான பதிவு, அரிய தகவல்கள். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்

  பதிலளிநீக்கு
 35. உங்களால் மட்டும் எப்படிச் சகோதரா இத்தனை அருமையாக தகவல்களைச் சேகரிக்க முடிகிறது ! எந்த ஓர் ஆக்கத்தைப் படிக்கும் போதும் மனம் ஒன்றிப் படிக்க வைக்கும் சிறப்பான ஆக்கதிற்குச் சொந்தக்காரர் தாங்கள் என்றே மனம் பெருமை கொள்கிறது .வாழ்த்துக்கள் சகோதரா .மிக்க நன்றி பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
 36. சிறந்த எண்ணப்பதிவு

  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 37. விளக்கமான தெளிவான கட்டுரை - பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 38. நல்ல தகவல் பெட்டகம் தோழர்
  முகநூலில் பகிர்ந்திருக்கிறேன் ...
  தம 12

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் முகநூல் பகிர்விற்கும் நன்றி நண்பரே

   நீக்கு
 39. கால்டுவெல் அவர்கள் பிறந்த தினத்திலே அவர் பற்றி அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி. அந்நியர்கள் எம் பெருமை பற்றி அறிந்ததும் அதை வெளிப்படுத்தியமையும் மிகச் சிறப்பே.

  பதிலளிநீக்கு
 40. அறிஞர் ராபர்ட் கால் டுவெல் பற்றி தெளிவான கட்டுரை - பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 41. அருமையான பயனுள்ள பதிவு! கரும்பினை எந்த நாட்டார் சுவைத்தாலும் இனிமைதானே! அதனை சிலாகித்துதானே தீரவேண்டும்! அதுவும் தமிழ்க்கரும்பு அல்லவா நண்பரே! தொடருங்கள்! அன்புடன் எம்ஜிஆர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முன்னம் பிறந்த முதுமொழி சீராக்கி
   பொன்னாய் அளித்த புகழோனே - அன்னையாம்
   எம்தமிழ் காத்தே அகம்நிறைந்த உங்களையும்
   உம்பராய் காணும் உலகு !

   கால்டுவெல் நற்பணியை காட்டிய இப்பதிவு
   காலத்தின் மீதமர்ந்த கண் !

   நீக்கு
  2. காலத்துக்கேற்ற பதிவுகளால் கால்டுவெல் போல தாங்களும் இருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

   நீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு