20 ஆகஸ்ட் 2014

சங்கமம்


பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே,
பழகிக் களித்த தோழர்களே,
பறந்து செல்கின்றோம் – நாம்
பிரிந்து செல்கின்றோம்

எந்த ஊரில் எந்த நாட்டில்
என்று காண்போமோ

     நண்பர்களே, இப்பாடலைக் கேட்கும் பொழுதெல்லாம், நமது எண்ணங்கள், இறக்கைக் கட்டி, பின்னோக்கிப் பறப்பதையும், இளமைக் கால நினைவலைகளில் மூழ்கி, நிகழ் காலத்தை மறந்து, கண்ணின் விழிகளில் இருந்து, ஒரு துளி நீர் எட்டிப் பார்ப்பதையும், நாம் அனைவரும் அனுபவித்து இருக்கிறோமல்லவா.


     படித்து முடித்து, ஆண்டுகள் பல கடந்த நிலையில், நமது ஆசிரியர் ஒருவரை, எதிர்பாராமல் சந்திக்கும் பொழுது, நம் மனம் எப்படி ஆனந்தக் கூத்தாடும். ஓடிச்சென்று, ஆசிரியரின் கரம் பற்றி, சார், நான் உங்கள் மாணவன். முப்பதாண்டுகளுக்கு முன், உங்களிடம் படித்தவன் எனக் கூறி அறிமுகப் படுத்திக் கொண்டு மகிழ்வோமல்லவா.

     படிக்கும் காலத்தில், நம்மைப் பிரம்பெடுத்து விளாசித் தள்ளிய ஆசிரியர்களும் இருக்கக் கூடும். பிரம்படியால், உடம்பில் தோன்றியக் கோடுகளைத் தழும்புகளைத் தடவிக் கொண்டே, அவ்வாசிரியரை மனதால் வெறுத்துக்கூட இருப்போம்.

     நண்பர்களே, மாணவப் பருவம் முடிந்து, யதார்த்த உலகில் காலடி எடுத்து வைத்த பிறகுதான், ஓர் உண்மை பலருக்கும் புரியும். அன்று படி, படி என்று அவ்வாசிரியர் அடித்திராவிட்டால், இன்றைக்கு நாம் எப்படி இருந்திருப்போம் என்று எண்ணினாலே நெஞ்சம் நடுங்கும்.

      பழமொழி ஒன்றுண்டு. படிக்கும் காலத்தில் ஆசிரியரிடம் அடி வாங்காதவன், பிற்காலத்தில் போலிசிடம் அடிவாங்குவான் என்பார்கள். ஆசிரியர் அடித்தது, நம்மைச் செம்மைப் படுத்தத்தான், நம்மை நல்வழிப் படுத்தத்தான், என்ற உணர்வும், உண்மையுடன், பிற்காலத்தில்தான் நமக்கு உறைக்கும்.

     முப்பதாண்டுகளுக்கு முன் நம்மை அடித்த ஆசிரியரை, இன்று கண்டால், ஓடிச்சென்று, காலடியில் விழ மாட்டோமா?

     நீங்கள் அடித்த அடி ஒவ்வொன்றும், இதோ இன்று என் பெயருக்குப் பின்னால், பட்டங்களாக நீண்டிருக்கின்றன என்று சொல்லிச் சொல்லி மகிழ மாட்டோமா?

     நண்பர்களே, ஒரு ஆசிரியரை, எதிர்பாராத விதமாய் சந்தித்ததற்கே, மனம் இவ்வளவு மகிழ்ச்சியில் துள்ளுமென்றால், நமது ஆசிரியர்கள் அனைவரையும், ஓரிடத்தில் சந்தித்தால் எப்படி இருக்கும்? நினைத்தாலே நெஞ்சம் இனிக்கிறதல்லவா.

     நண்பர்களே, அத்தகைய ஓர் அற்புத வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

     நான் மாணவனாய் கல்வி பயின்ற, உமாமகேசுவர மேனிலைப் பள்ளியிலேயே, ஆசிரியராகவும் பணியாற்றக் கூடிய, ஒரு கிடைத்தற்கரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. நான் 1974 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டுவரை, ஏழாண்டுகள், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை, உமாமகேசுவர மேனிலைப் பள்ளியிலேயே கல்வி பயின்றுள்ளேன்.
    

1981 ஆம் ஆண்டிற்குப் பிறகு, என்னைப் போல், என் பள்ளியிலேயே, கல்வி பயின்ற இருவரை, இன்று நண்பர்களாய் பெற்றுள்ளேன்.  ஒருவர் மும்பை சரவணன். மும்பையில் இருந்து வெளியாகும், சுமார் இரண்டு இலட்சம் பிரதிகள் விற்பனையாகும், கால நிர்ணய், என்ற மாதாந்திர நாட் காட்டியின், தமிழ்ப் பதிப்பின் ஆசிரியர்.

     மற்றொரு நண்பர் குமார். இவர் சென்னையில், எச்.சி.எல்., நிறுவனத்தின் முதுநிலை மேலாளர்.

     நண்பர்களே, இவர்கள் இருவரையும் எனக்கு எப்படித் தெரியும் என்று கேட்கிறீர்களா? நமது வலைப் பூதான் காரணம். வலைப் பூ என்னும் உயரிய பந்தத்தால் இணைந்து நண்பர்கள் ஆனவர்கள் இவர்கள்.

     இவர்கள் இருவருக்கும் ஓர் ஆசை. ஒரு சில நண்பர்களுடன் இணைந்து, தேடினார்கள், தேடினார்கள். தம்மோடு படித்த நண்பர்கள் நாற்பது பேரை தேடித் தேடிக் கண்டுபிடித்தார்கள்.

     அடுத்துத் தங்களுக்குப் பாடம் புகட்டிய ஆசான்களைத் தேடினர். அவ்வாசிரியர் எங்கே இருக்கிறார், இவ்வாசிரியை எங்கு இருக்கிறார் எனத் தேடித் தேடி ஆசான்கள் இருபது பேரைக் கண்டுபிடித்தனர்.

     மாணவர்கள் நாற்பது பேரும், ஆசிரியர்கள் இருபது பேரும், சங்கமிக்க நாள் குறித்தனர். ஆகஸ்ட் 15. இவர்களுக்குச் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கக் கற்றுக் கொடுத்த ஆசிரியர்களைச் சந்திக்க, இவர்கள் குறித்த நாள் ஆகஸ்ட் 15.
    

மும்பை சரவணன் மும்பையில் இருந்தும், குமார் சென்னையில் இருந்தும், அலைபேசியின் குழு அழைப்பில்,  கரந்தையில் உள்ள ஓரிரு நண்பர்களுடன், விவாதித்து, விவாதித்து நிகழ்ச்சிக்கு உரு கொடுத்தனர். தஞ்சை வாழ் நண்பர்களான,      .பெட்ரோல் பங்க் சம்பத், புவி.விசு, அக்கு பஞ்சர் செந்தில், சரவணக் குமார், சுரேஷ்பாபு மற்றும் வெற்றி வீடியோஸ் வெற்றி ஆகியோர், தங்களது வேலைகளை எல்லாம் சில நாட்களுக்கு, ஒதுக்கி வைத்துவிட்டு, பம்பரமாய்ச் சுழன்று, சங்கமத்திற்கானப் பணிகளை, ஏற்பாடுகளை முன்னின்று செய்தனர்.

      அதிலும், சங்கம விழாவிற்கு வருகின்றவர்கள் எனது நண்பர்கள் அல்லவா, எனது இன்றைய வளர்ச்சிக்கு வித்திட்ட ஆசிரியர்கள் அல்லவா, எனவே இரவு விருந்து, என் பொறுப்பு, என் செலவு, அதுவே என் மகிழ்ச்சி என்று கூறி இரவு உணவுச் செலவினங்கள் அனைத்தையும், பெட்ரோல் பங்க் சம்பத் அவர்களே, தனியொருவராக ஏற்றுச் சிறப்பித்தார்.

     நானும், நண்பரும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன் அவர்களும், சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப் பட்டிருந்தோம்.
    


ஆகஸ்ட் 15. அந்நாளும் வந்தது. சங்கமத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடம், ஒரு திருமண மண்டபம். வசந்த மகால். தங்களின் வசந்தமான வாழ்விற்கு வழி கோலியவர்களை, இவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்திருந்த இடம் வசந்த மகால். என்னவொரு பொருத்தம் பாருங்கள்.

      முன்னாள் மாணர்கள் ஒவ்வொருவராய் வரத் தொடங்கினர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் இருந்தும், ஒவ்வொரு ஊரிலிருந்தும், ஒவ்வொருவராய் வரத் தொடங்கினர்.

     பள்ளியில் படித்து முப்பதாண்டுகள் கடந்து விட்டன. அன்றைய உருவம் இன்று இல்லை. காலத்தின் கோலம், ஒவ்வொருவர் தோற்றத்திலும் தெரிந்தது. நண்பர்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொண்டு, கட்டியணைத்துக் கூச்சலிட, மண்டபமே அதிர்ந்தது.

     பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், உடல் தளர்ந்திருந்தாலும், உள்ளம் தளராமல், மலர்ந்த முகத்துடன், ஒவ்வொருவராய் வர, மாணவர்கள், தங்கள் ஆசான்களின், காலைத் தொட்டு வணங்கி வரவேற்றனர்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்

என அன்பின் பெருமையை, வலிமையைப் பேசும் திருவள்ளுவரின், குறளின் பொருளை மெய்ப்பித்தனர் மாணவர்கள். ஒவ்வொருவரின் கண்களும் கலங்கித்தான் காட்சி தந்தன.
    
சங்கம விழா தொடங்கியது. முப்பை சரவணன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். பள்ளி கால நினைவலைகளில் மூழ்கி, இச்சங்கம நிகழ்ச்சி, உயிர் பெற்ற விதத்தினை துடிப்போடு விவரித்தார்.
    


பொதுப் பணித் துறையில், பொறியாளராகப் பணியாற்றும், பேச்சாற்றல் மிக்க, புவி.விசு அவர்கள், நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார்.
     

ஆசிரியர்கள் அனைவரும், ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப் பட, ஒவ்வொரு ஆசிரியருக்கும், ஒவ்வொரு மாணவர் சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார்கள்.

     இடையிடையே ஆசிரியர்கள், மாணவர்களை வாழ்த்திப் பேசினர்.

     நானும், நண்பர் வெ.சரவணன் அவர்களும் இணைந்து, கரந்தைத் தமிழ்ச் சங்க விழாக்கள் பலவற்றை நடத்தியிருக்கிறோம். விழா என்றால், தமிழ்த் தாய் வாழ்த்து, வரவேற்புரை, சிறப்புரை, நன்றியுரை, நாட்டுப் பன் என்ற வரிசையில்தான் அமையும். மேலும் விழாவின் நிறையில், ஒரே ஒருவர் மட்டுமே நன்றியுரையாற்றுவார்.

     நண்பர்களே, இச்சங்கம விழா, ஒரு வித்தியாசமான விழாவாகத்தான் நடந்தது. ஆசிரியர்கள் மாணவர்களை வாழ்த்திப் பேசினர். ஆனால் விழாவின் தொடக்கம் முதலே, பேசிய ஒவ்வொரு மாணவரின் உரையும், நன்றியுரையாகத்தான் அமைந்தது. ஒரே விழாவில் இத்தனை நன்றியுரைகளா, என வியக்கும் வண்ணம் விழா சிறப்புடன் அரங்கேறியது.

     நண்பர்களே, இன்று நான் வலைப்  பூவில் எழுதுகிறேன் என்றால், அதற்கு என் தமிழாசிரியர்கள்தான் காரணம். முக்கணிபோல், முத்தான மூன்று தமிழாசிரியர்களின் அரவணைப்பில் வளர்ந்தவன் நான். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், நூல் வெளியிடல், சங்க விழாக்களை நடத்துதல், போன்ற அனைத்து நிகழ்வுகளிலும், என் கரம் பற்றி அழைத்துச் சென்று, என்னை ஊக்கப் படுத்தியவர்கள், எனக்கு வழி காட்டியவர்கள், என்னை நெறிப்படுத்தியவர்கள், இம்மூன்று தமிழாசிரியர்கள்தான்.

     ஒருவர் புலவர் மீனா. இராமதாசு அவர்கள். இரண்டாமவர் புலவர் சிவ. திருஞானசம்பந்தம் அவர்கள். மூன்றாமவர் புலவர் கோ. பாண்டுரங்கன் அவர்கள்.

     மூவருமே முத்தமிழையும் கரைத்துக் குடித்தவர்கள். இவர்கள் வாய் திறந்தால், சங்க இலக்கியப் பாடல்கள் அருவியெனக் கொட்டும். அவ் அருவிகளின் சாரல்களில் நனைவதற்கான வாய்ப்பு எனக்குக் கிட்டியது, நான் செய்த பெரும் பேறு.

     புலவர் சிவ.திருஞான சம்பந்தம் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக இவ்விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. 
    


புலவர் மீனா.இராமதாசு அவர்கள், தனது தள்ளாத வயதிலும், நடக்கக் கூட இயலாத நிலையிலும், கோலூன்றி, சங்கம அரங்கிற்கு வருகை தந்தார். அமர்ந்து கொண்டே பேசினார். அமர்ந்து கொண்டே பேசினாலும், வெளி வந்த தமிழ் வார்த்தைகளோ, துள்ளிக் குதித்தன.

     நண்பர்களே, தமிழகத்தின் தேர்தல் ஆணையர் திரு பிரவீன் குமார் அவர்களைத் தாங்கள் நன்கறிவீர்கள். பல ஆண்டுகளுக்கு முன், இவர் மாவட்ட ஆட்சியராய், தமிழகத்தில் முதன் முதலில் பொறுப்பேற்றது தஞ்சையில்தான்.

      தமிழகத்தில், அதுவும் தஞ்சையில பணி. அவரோ வெளி மாநிலத்தைச் சார்ந்தவர். ஆகையினால் அவருக்குத் தமிழ் தெரியாது. ஆனாலும் அவர் உள்ளத்தில் தமிழ் கற்றே ஆக வேண்டும், தமிழில் பேசியே ஆக வேண்டும், என்ற ஓர் உணர்வு கொழுந்து விட்டு எரிந்தது.

     நண்பர்களே, எனது ஆசிரியர் புலவர் மீனா. இராமதாசு அவர்கள்தான், ஆறு மாதம், தினமும், ஆட்சியர் இல்லத்திற்கு, மிதி வண்டியில் சென்று, பிரவீன் குமாருக்குத் தமிழ்க் கற்றுக் கொடுத்தார்.

     தேர்தல் நேரங்களில், தொலைக் காட்சியில், தினமும், தேர்தல் ஆணையர் மழலைத் தமிழில் பேசுவதைப் பார்த்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள். சங்கத் தமிழை, மழலைத் தமிழாய் அவருக்கு ஊட்டியவர், என் ஆசான் புலவர் மீனா.இராமதாசு. என் ஆசான்தான் அவருக்கும் ஆசான்.
    

வசந்த நினைவுகளை மனதில் தேக்கி
உள்ளமெல்லாம் உவகை கொண்டாட
இனம் புரிய இன்ப அலைகள்
உடல் முழுதும் பரவி ஓட

இதோ ஓர் நன்றித் திருவிழாவில்
நெகிழ்ந்து நான் நிற்கின்றேன்

இப்படித்தான் தொடங்கினார் அருள்தாஸ் என்னும் முன்னாள் மாணவர். எனது தந்தை, கரந்தையில் ஒரு தேநீர் கடை நடத்தி வந்தார். சந்தாணம் டீ கடை என்று பெயர். பள்ளி நேரம் போக, மீதமிருக்கும் நேரமெல்லாம், எனது தந்தையின் கடையில், டீ கிளாசுகளை கழுவுவதுதான் என் வேலை. மகன் என்றும் பாராமல், என் தந்தையார் எனக்கும், நாளொன்றுக்கு ரூ.2 கூலி தருவார்.

     இக்காசினைச் சேர்த்து வைத்துதான், எனக்குத் தேவையான நோட்டுகள், மற்றும் புத்தகங்களை நானே வாங்கிக் கொள்வேன். அன்று பிறரின் எச்சில் கிளாசுகளைக் கழுவிய என் கரம், இன்று பச்சை மையினால், தினந்தோறும் கையெழுத்துப் போடுகிறது. நான் இன்று உதவி அஞ்சல் துறை கண்காணிப்பாளர்.

     டீ கிளாசுகளைக் கழுவியவன், இன்று பச்சை மையினால் கையெழுத்துப் போடும் அளவிற்கு உயர்ந்துள்ளேன் என்றால், அதற்குக் காரணம், என் அசான்களாகிய நீங்கள்தான். உங்களுக்கு நன்றி சொல்ல, வார்த்தைகள் மட்டுமல்ல, இந்த ஒரு ஜென்மமும் போதாது என்றார்.

     அரங்கே ஒரு நிமிடம் அமைதியில ஆழ்ந்தது. அடுத்த நொடி, கைத் தட்டல்களால் அரங்கு அதிர்ந்தது.

     முன்னாள் மாணவர்கள் ஒவ்வொருவரும், ஒரு கதை வைத்திருந்தனர். ஒவ்வொருவராய்ப் பேசப் பேச, அரங்கமே நெகிழ்ந்துதான் போனது.
     

நண்பர்களே, சங்கம நிகழ்ச்சி நிறைவுற்ற பிறகும் கூட, அரங்கை விட்டுக் கலைந்து செல்ல மனமின்றி ஒவ்வொருவரும் தவித்தனர். சந்தித்த, சங்கமித்த ஒரு சில மணி நேரங்களுக்குள் மீண்டும் பிரிவா? பிரிய மனமின்றித் தயங்கித் தயங்கித்தான் ஒவ்வொருவராய், ஒவ்வொருவரிடமும், பிரியா  விடை பெற்றுச் சென்றனர்.

      ஆனாலும் அனைவரின் உள்ளத்திலும் ஓர் உறுதி உரமேறியிருப்பது, தெள்ளத் தெளிவாய் தெரிந்தது. அடுத்த வருடமும் இதே நாளில் ஒன்று கூட வேண்டும். இவ்வருடத்தை விட அதிக எண்ணிக்கையில், விடுபட்ட மாணவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். இம்முறை கலந்து கொள்ள வாய்ப்பில்லாத, ஆசிரியர்களையும், எப் பாடுபட்டேனும் அரங்கிற்கு அழைத்து வர வேண்டும் என்ற உள்ளத்து உறுதியோடுதான் கலைந்து சென்றார்கள்.


--------------------------------


     

87 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா
  ஒவ்வொரு நினைவுகளும் வாசிக்கும் நெஞ்சங்களை நெருடிச் செல்லுகிறது மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் நினைவுகள் சுமந்த படங்கள் மிக அழகாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
  த.ம 1வது வாக்கு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. மிகவும் நெகிழ்வான பதிவு. நீண்ட பல வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் நான் தஞ்சை வந்து என் பள்ளியை அதாவது என்னை ஆளாக்கிய நான் படித்த பள்ளியைப் பார்த்து வந்தேன். விடுமுறை நாளில் சென்றது என் குறை. ஆனாலும் நான் பெயர் சொல்லிக் கேட்ட ஆசிரியர்கள் 99 சதவிகிதம் இப்போது இவ்வுலகில் இல்லை என்பது வருத்தத்தைத் தந்தது.

  இந்தப் பதிவு நான் எனது ஆசிரியர்களையே சந்தித்த உணர்வைத் தந்து மகிழ்வூட்டியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே அடுத்த முறை தஞ்சைப் பக்கம் வரும்பொழுது, அவசியம் என்னைத் தொலைபேசியில் அழையுங்கள். தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்
   நன்றி நண்பரே

   நீக்கு
 3. ஆஹா விழா என்றால் இதுவன்றோ விழா! படித்து சுவைத்தேன்.

  பதிலளிநீக்கு
 4. சங்கமம் – ஒரு இனிய மலரும் நினைவுகளின் கூடல். அன்றைய மாணாக்கர்களும் ஆசிரியர்களும் இன்றும் மறக்காமல் கூடியது அவர்களின் அன்பு எத்தகையது என்பதனைக் காட்டியது. ஒரு நல்லதொரு நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட முன்னாள் மாணவர் இந்நாள் ஆசிரியர் சகோதரர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி!
  த.ம.3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்களையும் அழைத்த அம்மாணவர்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும் ஐயா
   நன்றி ஐயா

   நீக்கு
 5. 1936 ல் பிறந்தவன் ! 42 ல் முதல் வகுப்பு ! 6ம் வகுப்பிலிருந்து பள்ளிக்கு கட்டணம் 7 /- ரூ. கட்டமுடியாத நிலை ! ஆசிரியர்கள் பங்கு பொட்டு கட்டுவார்கள் ! உங்கள் இடுகையைப் படித்துக்கொண்டே எனக்கு கல்விகொடுத்த அந்த புண்ணீய சீலர்களை நினைத்துக் கொண்டேன் ! மனம் நெகிழ கண்கள் கசிய ! வாழ்த்துக்கள் !---காஸ்யபன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆசிரியர்களை எண்ணினாலே மனம் மகிழ்ந்துதான் போகிறது ஐயா
   இனி அக்காலம் திரும்ப வருமா என மனம் ஏங்குகிறது
   சென்றதினி மீளாது என்பதும் புரிகிறது
   நன்றி ஐயா

   நீக்கு
 6. அன்றைக்கு ஆசிரியர் எதைச் சொன்னாலும் செய்தாலும் நல்லதுக்குத்தான் செய்வார் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் அவரிடம் தங்கள் பிள்ளைகளை அடித்து பாடம் சொல்லும்படி சொன்ன பெற்றோர்களும் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்றைய பெற்றோர், தங்கள் மகன் எதிர்காலத்தில் சிறந்த மனிதமாகத் திகழ வேண்டும் என்று விரும்பினார்கள் ஐயா. முகத்தின் கண்ணை மட்டும் விட்டுவிடடு உரித்து எடுங்கள் என்று சொல்லிய பெற்றோர்களும், அந்நாளில் இருந்தார்கள்.
   ஆனால் இன்று ஆசிரியர் அடித்தாரா, இந்த எண்ணிற்குச் சொல்லுங்கள் என்று கல்வித் துறையே விளம்பரம் செய்கிறது.
   ஆனால் ஒன்று எந்த ஆசிரியரும் வேண்டுமென்றே மாணவனை அடிப்பதில்லை. இன்று அடிப்பதே பெரும் பாவம் என்ற நிலையினை உருவாக்கிவிட்டார்கள்.
   இன்றைய பெற்றோர்கள், த்ங்கள் மகன் நன்கு சம்பாதிக்க வேண்டும் என்று மட்டுமே விரும்புகிறார்கள், அதற்காக, அம் மகனை முதல் வகுப்பு முதலே தயார் செய்கிறார்கள்,
   அதனாலதான் ஐயா இன்றைய மாணவர்கள், நிறைய சம்பாதிப்பார்கள், ஆனால் யாரையும் அனுசரித்துப் போக மாட்டார்கள்.
   நன்றி ஐயா

   நீக்கு
 7. இப்படி ஒரு சங்கமம் எனக்கும் கிடைக்காதா என்று ஏங்குகிறேன் ,மறக்க முடியாத பல நண்பர்கள் ,ஆசிரியர்களை பார்க்க நினைக்கிறேன் ..சமீபத்தில் ,பிளாக்கர் தொடங்கியதால் அறிமுகமான என் ஆசிரியர் ஒருவர் நேற்று முன் தினம் காலமான செய்தி மனதை பிசைந்து கொண்டுதான் இருக்கிறது !
  த ம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆசிரியர்களை இழத்தல் கொடுமை நண்பரே
   தங்களின் ஆசிரியரின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் நண்பரே

   நீக்கு
 8. உங்களது சங்கமத்துள் எங்களை சங்கமிக்க வைத்தமைக்கு நன்றி. இவ்வாறாக அனைவரும் ஒன்றிணைப்பது என்பதும், அதனைப் பற்றி முறையாகப் பதிவது என்பதும் மிகவும் சிரமமான காரியம். அதனை சிரமேற்கொண்டு சிறப்பாகச் செய்தமைக்குப் பாராட்டுக்கள். உங்கள் எண்ணம் போல அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக சங்கமம் அமைய வாழ்த்துக்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 9. அருமை தோழர்
  நல்ல பணி ...
  பச்சை மை கையொப்பத்தின் பின் இருந்த இரண்டு ரூபாய் அனுபவம் ஓர் நெகிழ்வு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே
   உண்மையிலேயே அனைவரும் நெகிழ்ந்துதான் போய்விட்டோம்

   நீக்கு
 10. உங்கள் நண்பர் மும்பை கால நிர்ணய் சரவணன் எனக்கும் நல்ல நண்பர். என்னிடமும் இந்த சங்கமம் பற்றிச் சொல்லியிருந்தார். சிறப்பாக நடந்தது அறிந்து மகிழ்ச்சி. நாங்களும் இது போன்ற ஒன்றை அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் நடத்த வேண்டும் என்ற ஆவல். ஆனால் வருடங்கள் தள்ளிக் கொண்டே செல்கிறது. தற்போது ஆவல் மீண்டும் பிறந்துள்ளது. நன்றி. அன்புடன் சேதுராமன் சாத்தப்பன், மும்பை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றே முயற்சியைத் தொடங்குங்கள்
   அண்ணாமலைப் பல்கலைக் கழக சங்கமத்தைச் சிறப்பாக நடத்துங்கள்
   வருகைக்கு நன்றி நண்பரே

   நீக்கு
 11. வணக்கம் சகோதரரே!
  நெகிழ்வான சங்கமம் பற்றிய நெகிழ்வான பதிவு..அருமை!
  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 12. பசுமை நிறைந்த நினைவுகளின்
  ம்லரும் நினைவுகளின் சங்கமம்
  மனதை நிறைய வைத்தது.!

  பதிலளிநீக்கு
 13. நல்ல அனுபவம். இது போன்றதொரு சங்கம நிகழ்வை கல்லூரி நண்பர்களோடு நிகழ்த்த வேண்டும் என்று ஆசைப்பட்டு கைகூடாமல் போனது. மீண்டும் அது குறித்து முயற்சிக்க தூண்டியுள்ளீர்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவசியம் முயலுங்கள் நண்பரே
   அந்த மகிழ்வையும் அனுபவித்துத்தான் பாருங்களேன்
   நன்றி நண்பரே

   நீக்கு
 14. இணையத்திற்குக் கண்டிப்பாக நன்றி சொல்லியே ஆக வேண்டும். பல நண்பர்களை இணைக்கும் "இணையம்" வாழ்க!

  அருமையான ஒரு நிகழ்வு நண்பரே!

  //இக்காசினைச் சேர்த்து வைத்துதான், எனக்குத் தேவையான நோட்டுகள், மற்றும் புத்தகங்களை நானே வாங்கிக் கொள்வேன். அன்று பிறரின் எச்சில் கிளாசுகளைக் கழுவிய என் கரம், இன்று பச்சை மையினால், தினந்தோறும் கையெழுத்துப் போடுகிறது.// அருள் தாஸ் அவர்களின் இந்த வார்த்தைகள் மனதைமிகவும் நெகிழ வைத்துவிட்டது!

  பசுமை நிறைந்த நினைவுகள் !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருள்தான் உண்மையிலேயே அரங்கில் இருந்த அனைவரையுமே நெகிழ வைத்துவிட்டார்
   நன்றி நண்பரே

   நீக்கு
 15. பசுமை நிறைந்த நினைவுகளின் இனிய சங்கமம் மனதை மகிழ வைத்தது. நெஞ்சை நெகிழ வைத்தது..

  மீனா . இராமதாசு ஐயா அவர்களையும் கோ. பாண்டுரங்கன் ஐயா அவர்களையும், அன்பு நண்பர் வெ. சரவணன் அவர்களையும் புகைப்படங்களில் கண்டதும் மனம் சிறகடித்துப் பறக்கின்றது.

  தயை கூர்ந்து அவர்களிடம் எனது அன்பினையும் வணக்கத்தையும் கூறுங்கள்..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா
   அவசியம் மூவரிடமும் தங்களின் அன்பினைச் சொல்லுகிறேன் ஐயா
   நன்றி

   நீக்கு
 16. "சங்கம நிகழ்ச்சி நிறைவுற்ற பிறகும் கூட, அரங்கை விட்டுக் கலைந்து செல்ல மனமின்றி ஒவ்வொருவரும் தவித்தனர். சந்தித்த, சங்கமித்த ஒரு சில மணி நேரங்களுக்குள் மீண்டும் பிரிவா? பிரிய மனமின்றித் தயங்கித் தயங்கித்தான் ஒவ்வொருவராய், ஒவ்வொருவரிடமும், பிரியா விடை பெற்றுச் சென்றனர்"

  நன்றி! வார்த்தை வரவில்லை!! கண்ணீர் வருகிறது!!!

  அன்புடன்,
  இரா. சரவணன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் சங்கமம் முழு வெற்றி நண்பரே
   முழு வெற்றி
   தங்களைத்தான் பாராட்டவேண்டும்
   நன்றி நண்பரே

   நீக்கு
 17. நெகிழ்ச்சியான கணங்கள்.

  சென்ற மாதம் 83-86 மாணவர்களை இதுபோல் சந்தித்தோம். ஆசிரியர்கள் எங்களுக்கும், மாணவர்களுக்கும் இனிய பொழுது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகா, மிகவும் நெகிழ்வான நிமிடங்களாக ஒவ்வொரு நிமிடமும் கரைந்திருக்கும்.
   நன்றி ஐயா

   நீக்கு
 18. பாராட்டத் தக்கநிகழ்ச்சி! உள்ளபடியே இனிமையானது! சங்கமம் அருமை!

  பதிலளிநீக்கு
 19. மகிழ்வில் சங்கமித்து இருக்கும் இத் தருணம் போல் வாழ்வில் இன்னும்
  பல பசுமையான நினைவுகளில் சங்கமித்து இருக்க என் மனமார்ந்த
  பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அன்புச் சகோதரனே !

  பதிலளிநீக்கு
 20. பெயரில்லா20 ஆகஸ்ட், 2014

  கொடுத்த வைத்தவர் .
  இனிய விழா.
  ஒரே விழாவில் இத்தனை நன்றியுரைகளா என வியக்கும் வண்ணம் விழா சிறப்புடன் அரங்கேறியது.
  மகிழ்வாக உள்ளது வாசிக்க.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையிலேயே நான் கொடுத்து வைத்தவன்தான்
   நன்றி சகோதரியாரே

   நீக்கு
 21. வணக்கம்!

  துள்ளித் திரிந்து, துணிவேந்தி, இன்பமுடன்
  பள்ளிப் படித்த பருவத்தை - அள்ளி
  அளித்துள்ள சங்கமம்! ஆனந்தப் பேறு!
  களித்துள்ளம் காணும் கனவு!

  இதுபோன்ற நிகழ்வை நான் நடத்த வேண்டும் என்று
  என் நெஞ்சம் கனவு காண்கிறது.

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடனே தங்களின் கனவினை நினைவாக்குங்கள் ஐயா
   நன்றி

   நீக்கு
 22. மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன் அய்யா, அனைவரும் பல்லாண்டுகள் வாழ்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவம்தான் நண்பரே
   நன்றி

   நீக்கு
 23. கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பது ஒரு சுகமான அனுபவம். அதை அழகாகச் சொன்னீர்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
 24. மகிழ்வான சங்கமம் பகிர்வை படிக்கும் போது விழியில் நீர்த்திரை!சந்தோஸநாட்களை எண்ணி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சங்கம விழாவில் கலந்து கொண்ட அனைவருக்குமே, தங்களைப் போல் கண்கள் கலங்கித்தான் போய்விட்டது
   நன்றி நண்பரே

   நீக்கு
 25. போற்றுதற்குரிய விஷயம் அண்ணா! அதிலும் பள்ளி நிர்வாகத்தை சிறப்பாக வாழ்த்தவேண்டும்!!

  பதிலளிநீக்கு
 26. அண்பரே – தங்கள் பங்களிப்பு ஆசான்களை சேர்ப்பதில் மிகவும் பெரிது. உங்கள் உதவி இல்லை யென்றால், எங்களால் ஒன்று சேர்த்திருக்க முடியாது.

  நாங்கள் 40 நாட்கள் பட்ட பாட்டை அருமையாக எழுத்தில் கொண்டு வந்து விட்டீர்கள்.

  மிக்க நன்றி.
  குமார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் செய்தது, உதவியே இல்லை நண்பரே
   என்னிடம் இருந்த முகவரிப் பட்டியலைத் தங்களிடம் கொடுத்தேன் அவ்வளவே.
   ஆனால் இந்நிகழ்ச்சி செயலாக்கம் பெற, தாங்களும் தங்களின் நண்பர்களும் எந்த அளவிற்கு உழைத்துள்ளீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்
   உங்களைத் தான் பாராட்ட வேண்டும்

   நீக்கு
 27. மிக அருமையானதொரு நிகழ்வு! பகிர்வுக்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 28. படிக்கும்போதே எனக்கு சிலிர்த்து விட்டதே தாங்களுக்கு எப்படி ? இருந்திருக்கும் ஒரு நிமிடம் நினைத்துப்பார்த்தேன்.

  கவிதைப்போட்டிக்கு அனுப்பிய எமது கவிதைக்கு வாருங்கள் நண்பரே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிலிர்த்துத்தான் போய்விட்டேன் நண்பரே
   இதோ தங்களின் கவிதையினைப் படிக்க வருகின்றேன்
   நண்பரே
   நன்றி

   நீக்கு
 29. நினைத்துப் பார்க்கும் போதே நெகிழ்கிறது உள்ளம்.

  அருமையான பகிர்வு ஐயா.

  பதிலளிநீக்கு
 30. அண்மையில் திருச்சியில் bhel வளாகத்தில் பள்ளியின் ஐம்பதாண்டு நிறைவு விழாவுக்கு என் மகனும் சென்றிருந்தான். அவனுக்கு lkg ஆசிரியையாயிருந்தவருடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்து அதை எல்லோரிடமும் காண்பித்து மகிழ்ந்தான். இந்த ஆசிரியைஅன்றுஇவனைப் பற்றி கணித்தது சரியாகவே இருந்திருக்கிறது. உங்கள் சங்கமம் பற்றிய பதிவின் மகிழ்ச்சி எங்களையும் தொற்றிக் கொள்கிறது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 31. மனம் இனிக்கும்,
  நெஞ்சம் நெகிழும்
  நிகழ்வு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையிலேயே நெஞ்சம் நெகிழ்ந்துதான் போய்விட்டது
   நண்பரே நன்றி

   நீக்கு
 32. மிக்க நெகிழ்வு மிக்க ப்பதிவு,வாழ்த்துக்கள்,எத்தனை பேருக்கு இம்மாதிரியான பாக்கியம் எனத்தெரியவில்லை,தன்னுடன் படித்த சக மாணவர்களையும்,கற்பித்த ஆசிரியர்களையும் அறிமுகம் செய்யும் பாக்கியம்,அது உங்களுக்கு வாய்த்திருக்கிறது,நன்றி வாழ்த்துக்கள்/

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் நண்பரே நான் மிகப் பெரிய பாக்கியசாலி
   நன்றி நண்பரே

   நீக்கு
 33. இவ்வாறான நிகழ்வுகள்
  நாளைய தலைமுறைக்கு
  நல்ல எடுத்துக்காட்டு!
  ஆசிரியர் - மாணவர் சந்திப்பு
  என்றும்
  பள்ளி வாழ்வை நினைவூட்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைவரையும் இளமைக்கால நினைவலைகளுக்கு அழைத்துச் சென்ற நிகழ்வு அது
   நன்றி நண்பரே

   நீக்கு
 34. அருமையான நிகழ்வு. என் ஆசிரியர்கள் யாரும் இப்போது உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. இம்மாதிரி ஒரு நிகழ்வை நடத்தும் அளவுக்கு சிநேகிதிகளும் இல்லை. ஆனால் பள்ளி நினைவுகள் அலை மோதும். :)))) பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 35. மகிழ்ச்சியான தருணங்கள்

  பதிலளிநீக்கு
 36. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  மாணவர் சங்கமம் நிகழ்ச்சியின் தீப்பொறிகளாக விளங்கிய மாணவ நண்பர்கள் அனைவரையும் நேரில் இருந்து வாழ்த்திய பெரும்பேறு தங்களுக்கும் எனக்கும் கிடைத்தது நினைத்து மிகவும் மகிழ்வாகவும் நெகிழ்வாகவும் இருந்தது. உண்மையில் ஆசிரியர்கள் அனைவரும் நம் இருவருக்கும் ஆசிரியர்களே என்பதும் கூடுதல் மகிழ்ச்சி. நாம் இருவரும் அந்த ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நடந்த உணர்ச்சிப் போராட்ட பெருவெள்ளத்தை அருகே இருந்து மிகவும் நெகிழ்ச்சியுடன் பார்த்தது என் நினைவை விட்டு அகலவே இல்லை. நண்பர் துரை.செல்வராஜ் அவர்கள் நமது தமிழாசிரியர்களைப் பற்றியும் என்னைப் பற்றியும் விசாரித்ததற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் என்னுடைய எம்.ஃபில்., படிப்பிற்கு பவர் பாயிண்ட் பிரசண்டேசன் முறையில் ஸ்லைடு தயார் செய்து கொடுத்து உதவியதை என்னால் மறக்க முடியாது. தங்களின் பதிவும் மிக அற்புதம்.மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்றைய சங்கம நிகழ்வு என்றென்றும் நம் நெஞ்சை விட்டு விழகாத ஓர் அறபுத நிகழ்வு என்பதில சந்தேகமில்லை. நமக்கும் ஓர் வாய்ப்பு கிட்டியதை எண்ணி எண்ணி மகிழ்கின்றேன் நண்பரே

   நீக்கு
 37. அறிவுக்கண் கொடுத்த ஆசான்களைப் போற்றும்வகையில் நீங்கள் எடுத்த விழா நெஞ்சை நெகிழவைப்பதாகும். ஒவ்வொரு பள்ளியிலும் முன்னாள் மாணவர்கள் சங்கம் இதுபோன்ற விழாக்களை ஏற்பாடு செய்யவேண்டும் என்று விரும்புகிறேன். நமது ஆசிரியர்கள் நிச்சயம் நம்மைவிடப் பத்து, பதினைந்து வருடங்கள் பெரியவர்களாகவே இருப்பார். மூத்த வயதில் அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது மரியாதையுடன் கூடிய நன்றி யுணர்வை மட்டுமே! அவர்களின் ஆசி நம்மை மேலும் உயர்த்தும் என்பது உறுதி. இதுபோன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து விவரமாகத் தந்து உலகளாவிய வாசகர்களைத் தங்களின் முன்னாள் ஆசிரியர்களுடன் உணர்வுபூர்வமாக இணையவைக்கும் உங்களின் பாதங்களை எத்தனைதரம் முத்தமிட்டாலும் தகும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் ஐயா, நமது ஆசான்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது, மகிழ்ச்சியான சொற்களையும், நம் வாழ்வினையும்தானே, தங்களால் நாங்கள் நல்வாழ்வு வாழ்கிறோம் என்று அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதில்தானே நமது மகிழ்வும் பெருமையும் அடங்கியிருக்கிறது.
   ஒரு சில நண்பர்களின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி அவ்விழா
   நன்றி ஐயா

   நீக்கு
 38. அனைவருக்கும் இந்த பாக்கியம் கிடைப்பதில்லை! நண்பர்களைக் காண்பது மட்டுமல்லாமல், ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை செலுத்தியமை வரும் தலைமுறையினருக்கும் ஒரு முன்னுதாரணமாக அமையும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள் நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த பாக்கியம் எனக்குக் கிட்டியது நண்பரே
   அவ்வகையில் நான் கொடுத்துவைத்தவன்தான்
   நன்றி நண்பரே

   நீக்கு
 39. கட்டுரையை ரசித்துப் படித்தேன். நிச்சயம் நீங்கள் அதிஷ்டசாலிதான். வரும் ஆண்டு விழா இன்னும் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்.

  நான் கற்ற பாடசாலையின் நூற்றிருபதாவது ஆண்டு விழா இந்த வருடம் நடைபெறவிருக்கிறது. செல்ல இயலவில்லை. ;(

  பதிலளிநீக்கு
 40. உயிர்த்துடிப்புள்ள ஒரு நிகழ்ச்சி பற்றிய உயிர்ததுடிப்புள்ள பதிவு!
  பகிர்விற்கு நன்றி அய்யா!

  பதிலளிநீக்கு
 41. ஆஹா... ஐயா... ஒரு மிகச் சிறந்த் விழா பற்றிய அருமையானதொரு தொகுப்பு... மாணாக்கர்கள் ஆசிரியர்கள் சந்தித்த அந்த தினம் எப்படிப்பட்ட தினமாக அமைந்திருக்கும் என்பது உங்கள் பகிர்வில் தெரிகிறது...

  பகிர்வுக்கு நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 42. நெகிழ்ச்சியான நிகழ்வு
  படங்களுடன் பகிர்ந்த விதம் அற்புதம்
  நிகழ்வுகளும் பதிவுகளும் தொடர நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா
   தங்களின் வருகை மகிழ்வினை அளிக்கின்றது

   நீக்கு
 43. படித்தேன் . நெகிழ்ந்தேன்

  பதிலளிநீக்கு
 44. பசுமை நிறைந்த நினைவுகளின் இனிய சங்கமம் விழா மிக அருமையான நெகிழ்வான நிகழ்ச்சி.
  மறக்க முடியாத நினைவுகள்.
  வாழ்த்துக்கள்.


  பதிலளிநீக்கு
 45. திருமிகு.கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு,
  வணக்கம். சங்கமம் அருமையான பதிவு. நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை... இன்னும் அது தணிவதில்லை...எண்ணங்களும் மறைவதில்லை... அந்த நாள் என்றும் ஆனந்தமே... வாழ்த்துகள்.
  நன்றி.
  -மாறாத அன்புடன்,
  மணவை ஜேம்ஸ். .

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு