14 ஆகஸ்ட் 2014

கரந்தை காந்தி


வாழ்கநீ எம்மான், இந்த
     வையத்து நாட்டி லெல்லாந்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
      விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர்
     பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
     மகாத்மாநீ வாழ்க வாழ்க
                          - மகாகவி பாரதி

     நண்பர்களே, நம் பாரதத் திருநாடானது, தனது 68 வது சுதந்திர தின விழாவினைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட ஒரு தியாகி, கரந்தை காந்தி அவர்களைத் தங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க விரும்புகிறேன்.


     ச.அ.சாம்பசிவம் பிள்ளை அவர்கள். ஆங்கிலேயர்கள் காலத்திலேயே பொறியியல் பட்டம் பெற்று, பொதுப் பணித் துறையில் பொறியாளராகப் பணியாற்றியவர்.

தமிழவேள் உமாமகேசுவரனார்
நண்பர்களே, இவர் யார் தெரியுமா? தஞ்சாவூர், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராய் அமர்ந்து, முப்பதாண்டுகள் ஒப்பிலாப் பணியாற்றிய, தமிழவேள் உமாமகேசுவரனாரின் மைத்துனர்.

    சாம்பசிவம் அவர்கள் சேலம், திருச்சி முதலிய நகரங்களின் பணியாற்றியவர். திருச்சியில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுது, இவர் உள்ளத்தில் ஓர் உறுத்தல் நிரந்தரமாய் குடியேறியது.

     நம்மை அடிமைப் படுத்தி அரசாளும், ஆங்கிலேயர்களின் கீழ் சேவகம் செய்வதா? என்ற ஓர் எண்ணம், சாம்பசிவம் பிள்ளை அவர்களின் உள்ளத்தில், வேர் விட்டு வளரத் தொடங்கியது.

பெருங்கொலை வழியாம் போர்வழி யிகழ்ந்தாய்
     அதனிலுந் திறன்பெரி துடைத்தாம்
அருங்கலை வாணர் மெய்த்தொண்டர் தங்கள்
     அறவழி யென்றுநீ யறிந்தாய்
நெருங்கிய பயன்சேர் ஒத்துழை யாமை
     நெறியினால் இந்தியா விற்கு
வருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்து
     வையகம் வாழ்கநல் லறத்தே
                           - மகாகவி பாரதி

        மகாத்மா காந்தி அவர்கள் 1920 ஆம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தை அறிவிக்கிறார்.
    

நாளிதழ்களில் செய்தியைப் படித்த சாம்பசிவம் பிள்ளையின் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. இதுநாள் வரை, அவர் உள்ளத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த கேள்விகளுக்கு, இதோ விடை. இதற்குத்தானே ஆசைப் பட்டாய் சாம்பசிவா, என தன்னைத் தானே பாராட்டிக் கொண்டார்.

     நண்பர்களே, அன்றே தன் பொறியாளர் பணியினைத் துறந்தார். பொறியாளர் பணியினை மட்டுமல்ல, அதுநாள் வரை பத்திரமாய் பாதுகாத்து வந்த, அனைத்துக் கல்விச் சான்றிதழ்களையும், கிழித்துக் காற்றில் பறக்க விட்டார்.

       காற்றில் பறந்த சான்றிதழ்களின் ஒவ்வொரு துண்டும், சுதந்திரப் புறா பறப்பதைப் போல் தோன்றியது. அக்கணமே, இந்தியாவே சுதந்திரம் பெற்றுவிட்டதைப் போல் ஓர் உணர்வு. நடக்கத் தொடங்கினார். திருச்சியில் இருந்து நடந்தார், நடந்தார், நடந்து, தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் காலடி எடுத்து வைத்ததும்தான், நடையை நிறுத்தி ஓய்வெடுத்தார்.

     அன்று முதல், கரந்தைத் தமிழ்ச் சங்கமே, இவரது இல்லமாய் மாறியது.

     தமிழ்த் தலமாம் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், கருவறையாம், தமிழ்ப் பெருமன்றத்தை, சிலப்பதிகாரத்தில், மாதவி நடனமாடிய மேடையைப் போலவே, அதே அளவினதாய், பாங்குற, எழிலுற கட்டியெழுப்பியவர் இவர்தான்.

     நண்பர்களே, கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்வி நிலையங்களுக்கும், விளையாட்டுத் திடலுக்கும் இடையே ஓர் ஆறு ஓடுகிறது. இவ்வாற்றின் பெயர் வடவாறு.

     வடவாற்றினைக் கடந்திட, இரு நீண்ட இரும்புக் கயிறுகளை வரவழைத்து, அழகியதோர் தொங்கு பாலத்தை அமைத்துக் கொடுத்தவரும் இவர்தான்.

     கரந்தையைச் சுற்றியுள்ள பகுதிகளில், மிகவும் தாழ்த்தப் பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்குத் தினமும் செல்வார். அங்குள்ள சிறுவர்களை எல்லாம், அழைத்துக் கொண்டு வெண்ணாறு சென்று, அவர்களைக் குளிப்பாட்டி, தலைக்கு எண்ணெய் தடவி, தலைச் சீவி விடுவார். சுத்தமாய் இருப்பது, தாம் இருக்கும் இடத்தில் தூய்மையைப் பேணிப் பாதுகாப்பது பற்றி அவர்களுக்குப் போதிப்பார். ஒரு நாள், இரு நாள் அல்ல. நாள்தோறும் அவர் ஆற்றிய பணி இது. அந்நாளில் மிகவும் மகத்தான் பணி இது. மிகவும் தாழ்த்தப் பட்டவர்கள் வசிக்கும் தெருக்களில் காலடி எடுத்து வைப்பதே மிகவும் பாபகரமான செயலாய் கருதப் பட்ட அக்காலத்தில், இத்தகு பணியினைச் செய்ய எத்தனை நெஞ்சுரம் வேண்டும். அதனைத்தான் இவர் செய்தார்.

     மதுரை.

     காந்தியின் வாழ்விலும், தோற்றத்திலும் மாற்றத்தைக் கொடுத்த ஊர் மதுரை. மேல் அங்கியைக் கழற்றி எறிந்து  விட்டு, அரை ஆடை உடுத்தி, ஆண்டியின் கோலத்தில், அவர் ஐக்கியமடைந்தது மதுரையில்தான்.

     மதுரையில் காந்தி, தன் மேலாடையைத் துறந்ததும். கரந்தையில் சாம்பசிவமும், தன் மேலாடையைத் துறந்தார்.

     இறுதிவரை இடுப்பில் ஒரு வேட்டி, மேலே ஒரு சிறு துண்டு.
    

கரந்தையிலும், தஞ்சையின் பிற பகுதிகளிலும், நாள்தோறும் ஒரு பகுதியில், சிறு கூட்டம் ஒன்றினைக் கூட்டி, ஆங்கிலேயர்களைச் சாடுவார். வெள்ளையனே வெளியேறு என வீர முழக்கமிடுவார்.

      கரந்தையில் ஆறு மாதம், சிறையில் ஆறுமாதம் என இவர்தம் வாழ்வு கழிந்தது. சாம்பசிவம் என்னும் பெயர் மெல்ல, மெல்ல மறைந்தது. கரந்தை காந்தி, கரந்தை காந்தி என்னும் பெயரே, இவர்தம் பெயராய் நிலைத்தது.

சுதந்திரத் திருநாளாம்
இந் நன்நாளில்,

பொறியாளர் பதவியைத்
துச்சமெனத் தூக்கி எறிந்த

சுதந்திரப் போராட்ட வீர்ர்

கரந்தை காந்தி
சாம்பசிவம் பிள்ளை
அவர்களைப்

போற்றி

வணங்குவோம்.