21 மே 2015

ஒளி பிறக்கட்டும்


சந்தித்தாக வேண்டியதை எதிர்கொள்பவனை நான் நேசிக்கிறேன்
வெற்றிகரமாக அடிவைத்து சந்தோஷமான இதயத்துடன்
தினசரி சண்டையில் பயமின்றி சண்டையிடுபவன் அவன்.

பொறாமை இல்லை, மனிதரிடம் நம்பிக்கை இழப்பதில்லை
எப்போதும் சிறப்பாக செயல்படுவான்.
தன்னைவிடக் கீழானவர்களைக் கண்டு அவன் புலம்புவதில்லை.
புன்னகையுடன், நம்பிக்கையான வார்த்தைகளுடன்
போராடும் ஒவ்வொருவனுக்கும் உற்சாகமூட்டுவான்.

அவன் உன்னதமானவன்
உன்னதமான வாழ்வினால் விதியை வென்றவன்.
-          சாரா கே.போல்டன்


சார், நல்லா இருக்கீங்களா. நாளை நித்யாவிற்கு வளைகாப்பு.

     கடந்த ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில், ஓர் நாள், அலைபேசி அழைத்த போது, வகுப்பில் இருந்தேன்.

     வகுப்பறைக்கு வெளியே வந்து, அலைபேசியின் திரையினை வருடி, காதருகே கொண்டு சென்ற பொழுது, வெளிப்பட்ட வார்த்தைகளில் மகிழ்ச்சியும், நட்பும், குழைந்து இணைந்து இன்பத் தேனாய் செவிகளில் பாய்ந்தன.

     நண்பர்களே, அழைத்தவர் யார் தெரியுமா?


     தஞ்சாவூர், சுவாமிமலை முருகன் சந்நிதியில், ஒளிமயமான வாழ்விற்காக, இருளில் இணைந்த இந்த நல் உள்ளங்களை, உங்களுக்கு  முன்னரே அறிமுகப்படுத்தி இருக்கிறேன். நினைவிருக்கிறதா?

ஆம், அவர்களேதான்
வெற்றிவேல் முருகன் – நித்யா
தம்பதியினர்

     பிறவி முதல் விழிகள் பார்க்கும் சக்தியினை இழந்தபோதும், மூலையில் முடங்கி விடாமல், விதி விதி என்கிறார்களே, அந்த விதியினையும் வெல்லும், உத்வேகத்துடன் அயராமல் உழைத்து, விரல்களால் தடவித் தடவி, ஒவ்வொரு எழுத்துக்களாகப் படித்து, உயர்ந்து, அமெரிக்காவின், நியூயார்க் நகரில், சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர் இந்த வெற்றி வேல் முருகன்.

     நித்யா மட்டும் சளைத்தவரா என்ன? புறக் கண் போனால் என்ன, அகக் கண் இருக்கிறது, உள்ளத்தில் உறுதி இருக்கிறது, மனதில் நம்பிக்கை இருக்கிறது என தளராது படித்து, எம்.ஏ,. பி.எட்., பட்டம் பெற்றவர்.

     மகத்தான இவ்விருவரின் இல்லற வாழ்வின் பயனாய், நித்யாவிற்கு வளை காப்பு.

     என்னையும் ஒரு நண்பனாய் ஏற்று, மகிழ்வான செய்தியை, என்னிடமும் பகிர்ந்து மகிழ வேண்டும் என்று எண்ணி, அழைத்த வெற்றி வேல் முருகனின் நட்புக் குரல் கேட்டு, நெகிழ்ந்து போய்விட்டேன் நண்பர்களே, நெகிழ்ந்து போய்விட்டேன்.

     கடந்த 9.4.2015 வியாழக் கிழமையன்று, தம்பதியினர் இருவரும், தஞ்சை இரும்புத் தலை என்னும் கவின் மிகு சிற்றூருக்கு வந்திருந்தனர். நித்யாவின் சொந்த ஊர் இது.

      உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியரும், நண்பருமான திரு வெ.சரவணன் அவர்களிடம், இத் தகவலை தெரிவித்த போது, நானும் வருகிறேன் என்றார்.

     அன்று மாலையே, இருவரும், இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டோம். இரும்புத் தலை சென்றடைந்தோம்.

     அன்றலர்ந்த மலர்களென, வெற்றி வேல் முருகனும், நித்யாவும் எங்களை வரவேற்றனர்.
     

நீண்ட நேரம் மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தோம்.

     நண்பர் வெற்றி வேல் முருகன் அவர்கள், கணினியைப் பயன் படுத்துவதில் வல்லவர். இதன் விளைவு என்ன தெரியுமா?

     பெங்களூருவில் உள்ள சிஸ்கோ (SISCO) என்னும் நிறுவனத்தில், திட்ட ஒருங்கிணைப்பாளர்  (Project coordinator) பணிக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

     சமூகவியலில் டாக்டர் பட்டம் பெற்றவருக்கு, கணினித் துறையில் வேலை வாய்ப்பு.

     இன்னும் சில தினங்களில், பெங்களூரு பயணப்பட இருப்பதாகத் தெரிவித்தார்.

     பெங்களூருவில் வீடு பார்த்து விட்டீர்களா எனக் கேட்டேன்.

      எனது இக் கேள்விக்கு, அவர் கூறிய பதிலைக் கேட்டு அசந்து போய்விட்டேன், நண்பர்களே, அசந்து போய்விட்டேன்.

      தற்சமயம் சிஸ்கோ நிறுவனம் வழங்கும் விடுதியில், தனியொருவனாகத் தங்கப் போகிறேன். மூன்று அல்லது நான்கு மாதங்கள் பணியாற்றி, பெங்களூருவில், வாடகை வீட்டிற்குத் தேவைப்படும், முன் பணத்தை, சேமித்த பிறகுதான், என் மனைவியை அழைத்துச் செல்லப் போகிறேன்
     

நண்பர்களே, நாம் அனைவருமே எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள்தான். நாம் அனைவருமே ஏதோ ஒரு நூலினையோ அல்லது செய்தித் தாட்களையோ, தினம் தினம், ஒரு சில நிமிடங்களாவது படித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

       ஆனால் நம்மில் எவ்வளவு பேர் எழுதுகிறோம். எழுதுவது என்றால் ஏதோ ஓர் தயக்கம், உடனே வந்து ஒட்டிக் கொள்கிறது. கடிதம் எழுதும் பழக்கம் கூட, ஏறக்குறைய, இன்று இல்லாமலேயே போய்விட்டது

      வெற்றிவேல் முருகன், தினமும் எழுதிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆமாம் எழுதிக் கொண்டிருக்கிறார். கணினியில் எழுதிக் கொண்டிருக்கிறார்.

     என்ன எழுதிக் கொண்டிருக்கிறார் தெரியுமா? தனது வாழ்க்கை வரலாற்றினை எழுதிக் கொண்டிருக்கிறார். தான் பிறந்தது, தன்னை முதன் முதலாய் உணர்ந்தது, தவழ்ந்தது, படித்தது, அமெரிக்கா நோக்கிப் பறந்தது என அனைத்தையுமே எழுத்தில் வடித்துக் கொண்டிருக்கிறார்.

    தற்சமயம் நூறு பக்கங்களையும் தாண்டி, எழுதிக் கொண்டிருப்பதாகக் கூறினார். எங்களுக்குப் பேசவோ, பாராட்டவோ வார்த்தைகளே வெளிவரவில்லை. மகிழ்ச்சியில் பேச்சற்று அமர்ந்திருந்தோம்.

     ஜெயக்குமார் சார், நான் எழுதி முடித்ததும், PDF ஃபைல் ஆக உங்களுக்கு, மின்னஞ்சலில் அனுப்புகிறேன். நீங்கள் உங்கள் வலைப் பூவில், எனது எழுத்துக்களையும் பதிவு செய்யுங்கள். நண்பர்கள் படிக்கட்டும்.

     நண்பர் வெற்றிவேல் முருகனின் எழுத்துக்களை இணைய ஊடகத்தில் ஏற்ற, எனக்கோர் வாய்ப்பு. இதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு?

காத்திருக்கிறேன் நண்பரே.

     தன் மனைவி நித்யாவிற்கு, கடலூரில் உள்ள ஒரு மகப்பேறு பெண் மருத்துவரிடம், தொடர்ந்து ஆலோசனைகள் பெற்று வருவதாகக் கூறினார்.

     வெற்றிவேல் முருகனின் சகோதரியும், பிறவி முதலே, இவ்வுலகினைக் காணும் வாய்ப்பு இல்லாதவர்தான். ஆனால் இவரது குழந்தைகள் இன்று ஓடி, ஆடி விளையாடிக் கொண்டிருக்கின்றனர்,

     தனது தங்கை கருவுற்றது முதல், தொடர்ந்து கவனித்து, கண்காணித்து, ஆலோசனைகள் வழங்கி, குழந்தைகள். ஒளி படைத்த விழிகளுடன் இவ்வுலகினைக் காண, வழி வகுத்த, அதே மருத்துவர்தான், நித்யாவிற்கும் இன்று ஆலோசனைகளை வழங்கி கவனித்து வருகிறார்.

    தங்களுக்குப் பிறக்க இருக்கும், குழந்தையினைப் பற்றிப் பேசப் பேச, இருவரது முகங்களிலும் ஓர் ஒளி, ஓர் மகிழ்ச்சி, ஓர் எதிர்பார்ப்பு, ஓர் நம்பிக்கை.

நண்பர்களே,
வெற்றிவேல் முருகன் – நித்யா
தம்பதியினரின்
மழலை

நாளை,
இவ்வுலகினைக்
கண்ணாரக் காணவும்
தன் பெற்றோர்களை
கண்ணேபோல் போற்றிக் காக்கவும்
வேண்டுவோம்., வாழ்த்துவோம்

---------------------------------------


நண்பர்களே,

நலம்தானே. குடும்பத்தோடு ஒரு சிறு சுற்றுலா சென்று வந்தமையால், கடந்த சில நாட்களாக, வலையின் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க இயலவில்லை. அதனால் நண்பர்களின் எழுத்துக்களை, சுவாசிக்க இயலாத நிலை. தற்போது வீடு திரும்பிவிட்டேன். இனி நாளை முதல், நாள்தோறும் வலையின் வாசம்தான்.

என்றென்றும் அன்புடன்,
கரந்தை ஜெயக்குமார்