06 மே 2015

நீதியின் குரல்


ஆண்டு 2005. மே மாதத்தில் ஓர் நாள். நானும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் இன்றைய தலைமையாசிரியரும், நண்பருமான திரு வெ.சரவணன் அவர்களும்,  உதவித் தலைமையாசிரியர் நண்பர்  திரு அ.சதாசிவம் அவர்களும் அதிகாலையில் தஞ்சையில் இருந்து புறப்பட்டு, திருச்சி வழியாக, திண்டுக்கல்லைக் கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

     கரந்தைத் தமிழ்ச் சங்க, மகிழ்வுந்து ஓட்டுநரும், நண்பருமான திரு ரமேஷ், ஒரே சீரான வேகத்தில், மகிழ்வுந்தினை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

ஜெயக்குமார், நாளை காலை 9.00 மணிக்கு, கொடைரோடு ஜங்ஷனில் உங்களுக்காகக் காத்திருப்பேன், வாருங்கள்

     நேற்று கேட்ட வார்த்தைகள், காதுகளில், ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. மணியைப் பார்த்தேன். மணி 8.30

     ரமேஷ், சரியான பாதையில்தான் செல்கிறோமா? யாரிடமாவது, கொடை ரோடு ஜங்ஷனுக்குப் போகிற வழியைக் கேளேன் என்கிறேன்.

கவலைப் படாதீர்கள், எனக்குப் பாதை தெரியும்.

வந்துவிட்டீர்களா?

      அலைபேசி வழி அழைப்பு வந்து கொண்டே இருக்கிறது.

இதோ, வந்து விட்டோம் சார். இன்னும் பத்தே நிமிடத்தில் அங்கிருப்போம்.

      ஒவ்வொரு முறையும் இதே பதிலைக் கூறுகிறேன்.

      சரியான பாதையில்தான் செல்கிறோமா? வண்டியை நிறுத்தி, யாரிடமாவது கேளேன்?

கவலைப் படாதீர்கள். சரியான பாதையில்தான் செல்கிறோம்.

       ஒவ்வொரு முறையும், எனக்கும் இதே பதில்தான் கிடைக்கிறது.


      மணி 9.20 மகிழ்வுந்து கொடைக்கானல் அடிவாரத்தைச் சென்றடைந்தது.

      சார், நாங்கள் வந்துவிட்டோம், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?

ரயில்வே ஷ்டேசனில், ஒரு இன்டிகா காரில் காத்திருக்கிறேன்.

      எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாற்புறமும் பார்க்கிறேன். ரயில் நிலையம் இருப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை.

      சார், நாங்கள் கொடைக்கானல் அடிவாரத்தில் நிற்கிறோம்.

      அடுத்த நொடி, தீபாவளிக்கு வாங்கிய, பத்தாயிரம் வாலா சரவெடி, வெடிப்பதைப் போல், சரமாரியாக வார்த்தைகள், படபடவென்று, அலை பேசி வழி, வெடித்துச் சிதறுகின்றன.

என்ன ஜெயக்குமார், கொடை ரோடு ஜங்ஷனுக்கு வாருங்கள் என்றால், கொடைக்கானல் அடிவாரத்தில் நிற்கிறேன் என்கிறீர்களே?

     அலைபேசியில் அசடு வழிவதைத் தவிர வேறு வழியில்லை எனக்கு.

      ஓட்டுநர் ரமேஷ், பாதை தெரியும், தெரியும் என்று, மீண்டும் மீண்டும் கூறி, யாரையுமே விசாரிக்காமல் வந்தவர், இப்பொழுது முழித்துக் கொண்டு நிற்கிறார்.

     அருகிலிருந்த கடைக்காரரிடம், கொடை ரோடு ஜங்ஷன் எங்கிருக்கிறது என்று விசாரித்தோம்.

      எங்களை மேலும், கீழுமாய் ஒரு மாதிரிப் பார்த்தவர், இங்கிருந்து 40 கிமீ தொலைவில் இருக்கின்றது என்று கூறி, நாங்கள் வந்த வழியையே காட்டினார்.

      வந்த வழியாகவே திரும்பப் பயணித்தோம்.

      அலைபேசியை எடுத்தேன்.

சார், மன்னிக்கவும். இன்னும் இருபதே நிமிடங்களில் வந்து விடுவோம்.

நேரம் ஆகிக் கொண்டிருக்கிறது. சீக்கிரம் வாருங்கள் என்றார்.

      மகிழ்வுந்து, விமானமாய் மாறி பறக்கத் தொடங்கியது. இருபதே நிமிடங்களில் 40 கி.மீ தொலைவினைக் கடந்தோம்.

     கொடை ரோடு ஜங்ஷன்.

     வெகுவேகமாய் வந்து, கிறீச்சிட்டு நின்ற வண்டியில் இருந்து, இறங்கிய எங்களின் முகங்களைப் பார்த்தவருக்கு, ஏதோ பரிதாபம் தோன்றியிருக்க வேண்டும்.

     நேரமாகிவிட்டது வாருங்கள் புறப்படுவோம்.

     மதுரை அங்கிருந்து 20 கி.மீ.

     மதுரை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள், எங்கள் மகிழ்வுந்து சீறிப் பாய்ந்து நுழைந்த போது, மணி காலை 10.20.

கொடை ரோடு ஜங்ஷனில் இருந்து எங்களுடன் வந்தவர்,
சென்னை உயர் நீதி மன்றத்தின்
மூத்த வழக்கறிஞர்
திருமிகு ஆர்.சிங்காரவேலன்

     ஒவ்வொரு ஆண்டும், கோடை விடுமுறையின் போது, சில நாட்கள் மட்டுமே உயர் நீதி மன்றம் இயங்கும்.

    அன்று உயர்நீதி மன்றத்திற்கு அலுவல் நாள். எங்கள் பள்ளி தொடர்பாக, ஓர் முக்கிய நீதி மன்ற ஆணையினைப் பெறவே, அன்று நீதி மன்றம் நாடி வந்தோம்.

     மதுரை உயர் நீதி மன்றத்தில், எங்கள் பள்ளி வழக்கு, விசாரணைக்கு வந்த பொழுது, பத்தே பத்து நிமிடங்கள், வாதங்களை, ஆங்கிலத்தில், அருவியெனக் கொட்டி, எம் பள்ளிக்கு ஆதரவான ஆணையினைப் பெற்றுக் கொடுத்தார்.

     வந்த வேலை இனிதே நினைவுற்ற மகிழ்ச்சியில், உயர் நீதி மன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டு, மீண்டும் கொடைக்கானல் அடிவாரம் நோக்கிப் பயணித்தோம். போகும் வழியில் வாடிப் பட்டி கோயிலுக்குச் சென்றோம்.

      நண்பர்களே, மீண்டும் கொடைக்கானல் அடிவாரத்திற்கு ஏன் செல்ல வேண்டும். புரியவில்லைதானே.

     வழக்கறிஞர் வசிப்பது சென்னையில். ஆனால் இவரின் சொந்த ஊர், திருச்சிக்கு அருகில் உள்ள துறையூர். இவரது தந்தையும் ஒரு வழக்கறிஞர்.

     ஒவ்வொரு முறையும், மதுரை உயர்நீதி மன்றம் வரும் பொழுது, சென்னையில் இருந்து ஆர்.பி.என் பேரூந்தில் புறப்பட்டு, அதிகாலை பெரம்பலூர் வந்திறங்கி, அங்கிருந்து துறையூர் சென்று, துறையூரில் இருந்து மதுரைக்கு வருவார்.

         அவ்வாண்டில் சில நாட்களை குடும்பத்துடன், கொடைக்கானலில் கழிக்க ஏற்பாடு செய்திருந்தார். வழக்கறிஞரின் குடும்பத்தினர், அவரது தம்பி குடும்பத்தினர் மற்றும் அவரது தந்தையுடன் கொடைக்கானல் சென்றிருந்தார்.

       கொடைக்கானலில் அவரை நிம்மதியாய் இருக்கவிடாமல் குறுக்கிட்டதும் நாங்கள்தான், அவரது ஓய்வைக் கெடுத்ததும் நாங்கள்தான்.

      நாங்கள் வேண்டிக் கொண்டதால், அவசர நிலைமை கருதி, எங்களுக்கு உதவுவதற்காக, தனது குடும்பத்தினரை கொடைக்கானலில் விட்டுவிட்டு, அங்கிருந்து வாடகைக் கார் எடுத்துக் கொண்டு வந்து, எங்களுக்காக, எங்களை நீண்ட தூரம் அலைய விட வேண்டாமே என்பதற்காக, கொடை ரோடு ஜங்ஷனுக்கு வந்திருந்தார்.

      நாங்கள்தான் பாதை விசாரிக்காமல், கொடை ரோடு ஜங்ஷனுக்குப் பதில், கொடை ரோடிற்கே சென்று, தேவையில்லா தாமதத்தை உருவாக்கி விட்டோம்.

      மாலை கொடைக்கானல் அடிவாரத்திற்குச் சென்ற பொழுது, அவரது குடும்பத்தினர், ஒரு வேனில், மலையில் இருந்து கீழிறங்கி, எங்களுக்காகக் காத்திருந்தனர்.

     வழக்கறிஞர் அவர்களோடு புறப்பட்டுச் சென்றார். வழக்கறிஞர் வேனில் ஏறும்போது, அவரது மனைவி, எங்களைப் பார்த்தார் பாருங்கள் ஒரு பார்வை, வருடம் முழுவதும் சென்னை, மதுரை, புது தில்லி என, கோர்ட், கோர்ட்டாக அழைந்து கொண்டே இருக்கிறாரே, ஒரு இரண்டு நாட்களுக்கு ஓய்வு கொடுப்போம் என்று, கொடைக்கானலுக்கு அழைத்து வந்தால், இங்கும் வந்து, ஓய்வைக் கெடுத்து விட்டீர்களே

     கோபப் பார்வையின் அர்த்தம் புரிந்தது. எங்களுக்கு வேறு வழியில்லை, பார்த்தும் பார்க்காதது போல், வேறு பக்கம் திரும்பிக் கொண்டோம்.

    வழக்கறிஞருக்கும் எங்களுக்கும் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலான தொடர்பு. வழக்கறிஞர், கட்சிக்காரர் என்பதையும் தாண்டிய ஓர் நட்பு.

     ஒவ்வொரு முறை பள்ளி தொடர்பான வழக்கு வரும் பொழுதும், காலை 8.00 மணிக்கு துறையூர் செல்வோம். சென்னையில் இருந்து வந்து, தயாராக கிளம்பி இருப்பார்.

     காரில் அமர்ந்ததும், 500 பக்கங்களுக்கு மேல் இருக்கும், சுலோக புத்தகத்தை படிக்கத் தொடங்குவார். மதுரை வரும் வரை தலை நிமிர்ந்துகூட பார்க்க மாட்டார். ஒவ்வொரு சுலோகமாக, அவரது உதடுகள் முனுமுனுத்துக் கொண்டே இருக்கும்.

     விராலி மலையைக் கடக்கும் பொழுது, யாரோ இவரது தோளைத் தட்டி கூப்பிட்டதைப் போல் தலை நிமிர்வார்.

      விராலிமலையின் உச்சியில் அமர்ந்திருக்கும் முருகனை, கண் மூடி வணங்குவார். மீண்டும் தலையைக் கவிழ்த்தார் என்றால், மதுரை உயர் நீதி மன்ற வளாகம் வந்ததும்தான் தலை நிமிர்வார்.

      இவரைப் போன்ற ஒரு ஆன்மீக வாதியை, பக்திமானை நான் இதுவரை கண்டதே இல்லை. தனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்பதற்காக, கடவுளை  நாடி ஓடுபவர்களே அதிக எண்ணிக்கையில் இருக்கும், இக்கால கட்டத்தில் இவர் வித்தியாசமானவர்.

      ஒரு முறை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று இறைவியை தரிசித்துவிட்டு, வெளியே வரும் பொழுது கூறினார், இதுவரை தெய்வத்திடம், எனக்காகவோ, என் குடும்பத்திற்காகவோ எதையுமே யாசித்ததில்லை.

      ஐந்தாண்டுகளுக்கு முன், ஒரு நாள் இரவு வழக்கறிஞரைத் தொடர்பு கொண்டேன்.

    சார், நமது பள்ளி வழக்கு நாளைக்கு வருகிறது என்றேன்.

     ஏனோ சிறிது நேரம் யோசித்தவர், சரி நாளை காலை பெரம்பலூர் வந்து விடுங்கள் என்றார்.

     நானும் நண்பர் சரவணனும், அதிகாலை 5.00 மணிக்கு, பெரம்பலூர், நாலு ரோட்டுச் சந்திப்பில் காத்திருந்தோம்.

     சிறிது நேரத்தில், சென்னையில் இருந்து வரும் ஆர்.பி.என் பேரூந்து வந்து நின்றது. மிகவும் சோர்வடைந்த நிலையில், வழக்கறிஞர், பேரூந்தில் இருந்து இறங்கினார்.

    மகிழ்வுந்தில் அமரவே, துறையூர் நோக்கி, மகிழ்வுந்து புறப்பட்டது. எனக்கு உடல்நிலை சரியில்லை, ஜெயக்குமார். நேற்று தொலைபேசியில் அழைத்தீர்களா, அதுதான் கிளம்பி விட்டேன் என்றார்.

    துறையூர் சென்றதும், அவரால் வண்டியில் இருந்து இறங்கக் கூட இயலவில்லை. உடல் அனல் போல் கொதித்தது.

     சிறிது ஓய்வெடுத்தால் சரியாகிவிடும். 8.00 மணிக்கு மதுரைக்குக் கிளம்புவோம் என்றார்.

     தனது உடல்நிலை மிகவும் தளர்ந்திருந்த நிலையில் கூட, அதுவும் நடக்க இயலாத நிலையில் கூட, தன்னை நம்பி வந்தவர்களுக்காக, வாதிட வேண்டும், வாதிட்டு வெற்றி தேடித் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவரின் தொழில் பக்தி அத்தகையது.
 எங்களுக்குத்தான் மனமில்லை. நேற்று அலைபேசியில் பேசும் பொழுது, உடல் நிலை சரியில்லை என்று கூறி இருப்பீர்களேயானால், அழைத்தே இருக்க மாட்டோம்.

இன்று மதுரைக்குச் செல்ல வேண்டாம். ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என, நாங்களே மிகவும் கட்டாயப் படுத்தி, துறையூரிலேயே விட்டு விட்டு, தஞ்சைக்கு திரும்பினோம்.

     வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலன் அவர்களின் உடலில் ஓடுவது உதிரமல்ல. நாடி, நரம்பு, தசை, உதிரம் அனைத்திலும் கலந்து ஓடிக் கொண்டிருப்பது சட்ட விதிகளும், தன்னலமற்ற சேவை மனப்பான்மையும்தான்.

நீதியும், ஆன்மீகமும் இவரது இரு கண்கள்.

     சில மாதங்களுக்கு முன், ஒரு ஞாயிற்றுக் கிழமை சென்னை சென்றேன். ஞாயிற்றுக் கிழமையான போதிலும், அலுவலகத்தில் இருந்தார்.

    கரந்தை மாமனிதர்கள் என்னும் எனது நூலினைக் கொடுத்தேன். மகிழ்வுடன் பெற்றுக் கொண்டவர், இன்று நான் காரில் வரவில்லை. எனவே சிறிது நேரம் இருங்கள், நானும் வருகிறேன். என்னை வீட்டில் விட்டுவிடுங்கள் என்றார்.

     வரவேற்பறையில் அமர்ந்த சில நிமிடங்களில் என்னை அழைத்தார்.

     ஜெயக்குமார்

    சார், இதோ வருகிறேன்.

     அவரது அறைக்குள் நுழைந்தேன்.

     உங்கள் புத்தகத்தை வாசித்து முடித்து விட்டேன். அருமையான புத்தகம். கண்ணகி கோயிலைத் தேடி, தேடி அலைந்த, கோவிந்தராசனாரின் கதையைப் படிக்கப் படிக்க, என் கண்ணில், கண்ணீரே வந்து விட்டது என்றார்.

     முப்பத்தி ஆறு பக்கங்களை உடைய ஒரு நூலை, ஒரு சில நிமிடங்களிலேயே, முழுவதுமாய் படித்து முடித்து விட்டார்.

      வியந்து போய் நின்றேன்.

     மிக, மிக வேகமாகப் படிக்கும் ஆற்றல் உடையவர் இவர். எவ்வளவு வேகமாய் படித்தாலும்,. ஒவ்வொரு சிறு வார்த்தையினையும் மனதில் பதிய வைத்துக் கொள்ளும் திறமை உடையவர். அதன் பிறகு எத்தனை ஆண்டுகள் ஆனாலும், தேவைப்படும் பொழுது, அத்துனை வரிகளையும், அப்படியே திரும்பக் கூறும் நினைவாற்றல் கைவரப் பெற்றவர்.

      நண்பர்களே, இதற்குக் காரணம், தனது ஆன்மீக பலத்தால், மனதினை, என்றென்றும் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பதுதான் என எண்ணுகின்றேன்.

     கடந்த 25.4.2015 சனிக் கிழமை மாலை, என் அழைபேசி அழைத்தது. மறு முனையில் வழக்கறிஞர்.

    ஜெயக்குமார், நாளை காலை தஞ்சாவூர் வருகிறேன்.

    மறு நாள் ஞாயிற்றுக் கிழமை காலை 11.00 மணி. தஞ்சாவூர் தெற்கு ரோட்டரி சங்க விழா அரங்கு.

     கரந்தைக் கலைக் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோ.சண்முகம், கரந்தைத் தமிழ்ச் சங்க நிறைவேற்றுக் கழக உறுப்பினர் திரு ஆ.சோ.தியாகராசன், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு வெ.சரவணன், உதவித் தலைமையாசிரியர் திரு அ.சதாசிவம், தமிழாசிரியர் திரு ம.மணியரசு மற்றும் நான் என ஒரு கூட்டமே ஆஜரானோம்.

பணி நீக்கப் பட்ட முழு நேர தற்காலிக எல்.ஐ.சி பணியாளர்கள் நல சங்கம்.

     எல்.ஐ.சி நிறுவனமானது, தமிழகத்தைச் சேர்ந்த இரண்டாயிரம் பேர் உட்பட, நாடு முழுவதும், பத்தாயிரம், மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலையினைச் சேர்ந்த, முழு நேர தற்காலிக ஊழியர்களை, கடந்த 1992 ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்திருக்கிறது.

     பத்தாயிரம் பேருக்கு ஒரே நாளில், வேலை பறிபோன சோகம் அரங்கேறியிருக்கிறது. பாதிக்கப் பட்டவர்களின் சார்பாக, நீதி மன்றத்தில் வாதாடியவர், நமது வழக்கறிஞர் திருமிகு ஆர்.சிங்காரவேலன் அவர்கள்.

     நண்பர்களே, ஒன்றல்ல, இரண்டல்ல, விக்கிரமாதித்தன் கதைபோல், கடந்த 25 ஆண்டுகால தொடர் போராட்டம், இப்பொழுதுதான் வெற்றி பெற்றிருக்கிறது.

    தமிழக உயர் நீதிமன்றம், பெங்களூரு உயர் நீதி மன்றம், புது தில்லி உயர் நீதி மன்றம் என பல உயர் நீதிமன்றங்களைக் கடந்த வழக்கானது, உச்ச நீதிமன்றத்தில் அடைக்கலம் புகுந்திருக்கிறது.

    பல நாள், பல மணி நேரம், தொடர்ந்து, அயராமல் ஓங்கி ஒலித்திருக்கின்றது இவரின் குரல். நீதியின் குரல், நேர்மையின் குரல். முடிவு உச்ச நீதி மன்றத்திலும் வெற்றி.

      தொழிலாளர்கள் பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். நிரந்தரப் பணியாளர்களாகப் பணியமர்த்தப் பட வேண்டும். அன்று முதல் இன்று வரை பணியில் இருந்ததாகக் கருதி, ஊதியத்தினைக் கணக்கிட்டு, நிலுவைத் தொகையினை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

     இருபத்தைந்து ஆண்டுகாலமும், தொழிலாளர்களுக்காக, அசராமல் போராடியவர் திருமிகு ஆர்.சிங்காரவேலன்.

     வழக்கறிஞரை வாழ்த்துவதற்குத்தான், நன்றி கூறுவதற்குத்தான் இன்று விழா.


     
வழக்கு மாபெரும் வெற்றி. ஆனாலும் வெற்றி பெற்றவர்களுக்கு இடையே ஓர் சோகம், இழையோடுவதை உணர முடிந்தது.

      நீதி மன்றப் போராட்டம் நடைபெற்ற, இந்த இருபத்தைந்து ஆண்டுகளில், ஆயிரக் கணக்கானோர், ஓய்வு பெறும் வயதினைக் கடந்து விட்டார்கள்.

     நூற்றுக் கணக்கானோர் மண்ணோடு மண்ணாக மக்கிப் போய்விட்டார்கள். ஆம் நண்பர்களே, வேலை இழந்தவர்களில், நூற்றுக் கணக்கானோர், இவ் வெற்றியினைக் கொண்டாட, இன்று இவ்வுலகில் இல்லை.

    கூட்டத்தில் இருந்த ஒரு பெரியவர் கூறினார். எனக்கு திருமண வயதையும் கடந்த மூன்று பெண்கள் உள்ளனர். மூவரையும் எப்படி கரை சேர்க்கப் போகிறேனோ என, இத்தனை ஆண்டுகளாகக் கலங்கிக் கொண்டிருந்தேன். இன்று சிங்காரவேலன் உதவியால், கடவுள் கண் திறந்து விட்டார். மூன்று பெண்களையும் திருமணம் செய்து கொடுத்துவிடுவேன். இனி இந்த வக்கீல் சிங்காரவேலன்தான் எங்கள் குடும்பத்திற்குக் கடவுள்.

     நெகிழ்ந்து போய்விட்டேன் நண்பர்களே, நெகிழ்ந்து போய்விட்டேன்.

    


வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலன் பத்தாயிரம் வீடுகளில் விளக்கேற்றி வைத்திருக்கிறார். பத்தாயிரம் குடும்பங்கள் மறு வாழ்வு பெற்றிருக்கின்றன. புனர் ஜென்மம் அடைந்திருக்கிறன.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
தர்மம் மறுபடியும் வெல்லும்         
என்னும் பழமொழி, மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப் பட்டிருக்கிறது.

    வழக்கறிஞர் திருமிகு ஆர்.சிங்காரவேலன் போன்ற, தன்னலமற்ற, நீதிமான்கள் இருக்கும் வரை தர்மம் நிலைக்கும், தர்மம் வெல்லும், தர்மமே வெல்லும்.


வழக்கறிஞரைப் போற்றுவோம்.