15 நவம்பர் 2015

கடவுளைக் காண்பேனோ


       அபுதாபியில் இருந்து ஓர் அன்புக் கட்டளை. பாசக்கார, மீசைக்கார நண்பரிடமிருந்து ஓர் உத்தரவு.

    முன்பு ஒரு முறை கனவில் காந்தியைக் கண்டவர். இப்பொழுது கடவுளையேக் கண்டிருக்கிறார்.

கடவுளைக் கண்டேன்
தொடர் பதிவிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.


      


கடவுளைப் பற்றிய எனது எண்ணங்கள் சற்று வேறானவை. எனவே எழுதலாமா, வேண்டாமா என்ற சிந்தனைதான் முதலில் மனதில் தோன்றியது. இருப்பினும் நண்பரின் உத்தரவினை மீற இயலாதல்லவா.

     சில வருடங்களுக்கு முன்பு வரை, நானும் ஒரு தெய்வ வழிபாட்டு நெறியினைப் பின்பற்றுபவனாகவே இருந்துள்ளேன்.

     ஆனாலும் நாளடைவில், என் மனவோட்டம் மெல்ல மெல்ல மாறத்தான் தொடங்கியது. காரணம் நான் படித்த புத்தகங்கள், கண்ட காட்சிகள், எதிர்கொண்ட இன்னல்கள், சந்தித்த அனுபவங்கள்.

    பொது நலனை முன் வைத்தும், சுய நலனை முன் வைத்தும், நான் கண்ட காட்சிகள் என்னுள் மாற்றத்தை உருவாக்கின.

     உத்ரகாண்ட் மாநிலத்தில் இறைவனைத் தரிசிக்கச் சென்றவர்கள் நூற்றுக் கணக்கில், ஆயிரக் கணக்கில் பலி.

     கோயிலுக்குப் பாத யாத்திரைச் சென்றவர்கள் மீது லாரி மோதியது. பலி எண்ண்ணிக்கை 10 ஆக உயர்வு.

      பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில், நூற்றுக் கணக்கான, குழந்தைகள் உடல் கருகி இறந்த கொடுமை. என்ன பாவம் செய்தார்கள் இந்த மழலைகள்.

     இலங்கையில் ஒரு இனமே, நமது தொப்புள் கொடி உறவே, சற்றேறக்குறைய அழிக்கப் பட்டு விட்டதே. அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற, அப்பாவித் தமிழச்சிகளின் கற்பைக் காப்பாற்ற, தெய்வம் தன் சுண்டுவிரலைக் கூட அசைக்க மறுத்து, கும்பகர்ணனைப் போல் உறங்கி அல்லவா போய்விட்டது.

      இவை போன்ற எண்ணற்ற சோகங்களை, கடவுள் காப்பாற்ற மறந்த தருணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

       இவை மட்டுமல்ல நண்பர்களே, என் தினசரி வாழ்வில் நான் பார்த்துக் கொண்டிருக்கிற ஆன்மீகவாதிகள். மெல்ல மெல்ல நான் விலக இவர்களும்தான் காரணம்.

       வாரந்தோறும் கோயிலுக்குச் செல்வார்கள். பேச்செல்லாம் தெய்வ மணம் கமழும். ஆனால் செயலில் நாணயம் என்பது, ஒரு துளியும் இல்லாதவர்கள்.

     உழைப்பு என்பது சிறிதும் இன்றி, ஊதியத்தை மட்டுமே நாடும் பக்திமான்கள்.

     படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் என்று சொல்வார்களே, அதுபோன்ற ஆன்மீக வாதிகளைக் கண்டு, உள்ளம் நொந்ததுதான் மிச்சம்.

      ஆனால் இன்று இவர்களைப் போன்றவர்கள்தான் நன்றாக இருக்கிறார்கள். வஞ்சகமின்றி, உண்மையாய் உழைப்பவர்களோ, ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகி, கூனிக் குறுகி வாழ வேண்டிய துர்பாக்கிய நிலை.

     என் மகளின் இதயத்தில், துளை இருக்கிறது என்று, ஒருவர் இருவர் அல்ல, மூன்று மெத்தப் படித்த, இதய மருத்துவர்கள், மூத்த மருத்துவர்கள் சொல்ல, அவர்களின் வாக்கினை, வேத வாக்காக எடுத்துக் கொண்டு, நானும் எனது குடும்பமும் பட்ட துயர் எனக்கு மட்டும்தான் தெரியும். கடவுளுக்கு நிகரான மருத்துவர்களின், அலட்சியப் போக்கோ அல்லது வணிக நோக்கோ, நானறியேன். ஆனாலும் துயர் மட்டும் எனக்குச் சொந்தமாகிப் போனது.

       நான்காவதாய் ஒரு மருத்துவர், நேர்மையான மருத்துவர், உண்மையிலேயே தெய்வம் போல் வந்து, அறுவை சிகிச்சை அரங்கு வரை, என் மகளை அழைத்துச் சென்று விட்டு, துளையே இல்லை, வீட்டிற்குப் போங்கள் என்றாரே பார்க்கலாம். இம் மருத்துவரை, நான் மட்டும் அணுகாமல் இருந்திருந்தால், நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது.

      அலட்சியப் போக்கிற்கும, வணிக நோக்கிற்கும் உரியதா மருத்துவம். மாட மாளிகைகளோடும், அரண்மனை போன்ற மருத்துவ மனைகளோடும் இவர்களும் நன்றாகத்தானே இருக்கிறார்கள்.

      காசுள்ளவர்களைக் கண்டால், கடவுள் கூட, கண்டும் காணாதது போல், போய்விடுகிறாரே.

     கடந்த மாதம், ஏழுமலையானைத் தரிசிக்க, படியேறி நடந்தே சென்ற, எனது மைத்துனர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

   அக்டோபர் மாதம் 10ஆம் தேதி, எனது மைத்துனர், ஏழுமலையானைத் தரிசிக்க நடந்தே படியேறி இருக்கிறார். வழியில் நெஞ்சு வலி. யாரோ மருத்துவமனையில் சேர்க்க, மருத்துவமனையிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டது. இவ்வளவிற்கும் எனது மைத்துனரது வயது என்ன தெரியுமா? வெறும் 37 தான்.

    எனது மைத்துனர் இறந்து போனதை அறியாமலேதான், புதுகையில் நடைபெற்ற வலைப் பதிவர் சந்திப்புத் திருவிழாவில், குடும்பத்துடன் கலந்து கொண்டேன்.

     திருப்பதி சென்றவர், திரும்பவில்லையே என திங்கட்கிழமை தேடத் தொடங்கினோம். செவ்வாய்க் கிழமைதான், அவர் இறந்து போனதே தெரிந்தது. புதன் கிழமை இரவுதான், அவரது உடல் வீடு வந்து சேர்ந்தது.

     திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான இலவச அமரர் ஊர்தியில், எனது மைத்துனரது உடல் வீடு வந்து சேர்ந்தது. பிறகுதான் தெரிந்தது. மலை வழி நடந்து, படியேறி இறைவனைத் தரிசிக்கச் செல்வோரில், சிலர் தினமும் இறந்து கொண்டே இருக்கிறார்கள். மலை ஏறும் போது இறந்தால், அமரர் ஊர்தி இலவசம்.

     கால் வலிக்க வலிக்கப், படியேறி வரும் பக்தனுக்கு, இறைவன் கைகொடுக்காமல், அமரர் ஊர்தியை அனுப்புகிறாரே, இது நியாயமா?

என்ன நண்பர்களே, நான் சொல்வது சரிதானே.

கடவுளைக் கண்டால்

மீசைக்கார, பாசக்கார நண்பரே
இதோ உமக்காக
எனது ஆசைகளைப் பட்டியலிடுகிறேன்.
நிறைவேற்ற வேண்டியது, தங்களின் பொறுப்பு
01.    அரசு அதிரடி. சிறு குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கத் தடை. ப்ரி.கே.ஜி., எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள் இழுத்து மூடப் பட்டன. ஐந்து வயது நிறைவுற்ற பிள்ளைகளே பள்ளியில் சேர்க்கப் பெறுவர்.
02.    கல்வி கட்டாயமாக்கப் படுகிறது. பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களுக்கும், சிறுவர்களைப் பணியில் அமர்த்துவோருக்கும் ஆயுள் தண்டனை.
03.    தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் அரசுடமையாக்கப் பட்டன.
04.    இது நாள்வரை, அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயின்று, மருத்துவர் பட்டம் பெற்றவர்கள், தனியார் மருத்துவ மனைகளில் பணியாற்றத் தடை.
05.    கோயில்களில் உண்டியல்களை அகற்ற உத்தரவு.
06.    அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு தரிசன வழி, வி.ஜ.பி. தரிசன வழி போன்ற, காத்திருப்பு ஏதுமின்றி, வந்தவுடன் வணங்குவதற்கான வழிகள் தடை செய்யப் படுகின்றன. அனைவருக்கும் ஒரே தரிசனம்தான், தர்ம தரிசனம்.
07.    உண்ணும் உணவைத் தேர்ந்தெடுப்பது அவரவர் தனி உரிமை.
08.    உலகின் அனைத்து மதங்களும் போதிப்பது அன்பு ஒன்றினைத்தான். ஆனால் மோதல்களுக்கு மதங்களே காரணமாய் அமைவது வருந்துதற்கு உரியது. எனவே அரசியல் அமைப்புகள் மதம் பற்றிப் பேசுவதும்., மத அமைப்புகள் அரசியல் பற்றிப் பேசுவதும் தடை செய்யப் படுகிறது.
09.    இந்தியாவின் அனைத்து நதிகளும் தேசிய மயமாக்கப் படுகின்றன.
10.    தேர்தலில் வெற்றி பெற்றோரின், செயற்பாடுகளை ஆண்டுக்கு ஒரு முறை, மதிப்பீடு செய்து, தொடர்வதற்கோ அல்லது திரும்பப் பெறுவதற்கோ வழி வகை செய்யப் படுகிறது.
11.    வாக்குப் பதிவு கட்டாயமாக்கப் படுகிறது
12.    இருபது வயது நிரம்பிய அனைவருக்கும், ஆண், பெண் இருபாலருக்கும், மூன்றாண்டு இராணுவப் பயிற்சி கட்டாயமாக்கப் படுகிறது.
13.    ஊழலையும், வளர்ந்து வரும் இலஞ்சத்தையும் ஒழிக்கும் வகையில், அச்சிடப் பெற்ற பணம், இனி செல்லாது என்று அறிவிக்கப் படுகிறது. வங்கி அட்டை மூலமாகத்தான், இனி அனைத்து பரிமாற்றங்களும் நடைபெறும். ஒரு ரூபாய்க்கு ஒரு சாக்லெட் வாங்குவதற்கும், வங்கி அட்டையினைத்தான் பயன்படுத்தியாக வேண்டும். அதே சமயம், ஒருவர், ஒரு வங்கியில் மட்டுமே கணக்கு வைத்துக்கொள்ள அனுமதிக்கப் படுவர்.


என்ன நண்பரே, போதுமா?
நிறைவேற்றுதல் இனி தங்கள் கடன்.