05 நவம்பர் 2015

என்றாவது ஒரு நாள்
     1902 ஆம் ஆண்டு. ஆஸ்திரேலியா. சிட்னி. தன் பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த திருமதி இஸபெல், அம் மனிதரைத் தற்செயலாகத்தான் பார்த்தார்.

     அழுக்கேறிய கிழிந்த உடைகளுடன், முகத்தில் நீண்டு வளர்ந்திருந்த தாடி, மீசையுடன், மதுவின் வாடையுடன் அவர் மெதுவாகத் தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தார்.

      மன நிலை பிறழ்ந்தவராய், மது அருந்துவதையே, தன் வாழ் நாள் கடமையாக கடைப்பிடிப்பவர் போல், மெதுவாக ஆடி, ஆடி வந்து கொண்டிருந்தார்.

     எதிரிலே தள்ளாடியபடி வந்த அந்த மனிதர், தன்மீது மோதிவிடுவாரோ என்று எண்ணி, விலகியபோதுதான், அம்மனிதரது முகத்தைப் பார்த்தார்.


           அடுத்த நொடி அதிர்ந்து போனார்.

      உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் துடி துடித்துப் போனார்.

     அவரா இவர்?

     இஸபெல்லால் தன் கண்களையே நம்ப முடியவில்லை.

     இரு கைகளாலும், அம்மனிதரை தடுத்தி நிறுத்தி, முகத்தை உற்றுப் பார்த்தார்.

      ஆம், அவரேதான்.

     எப்பேர்ப்பட்ட மாபெரும் எழுத்தாளர், இப்படி பைத்தியம் போல் அலைகிறாரே.

     இவரது எழுத்தில் நாடே சொக்கித்தான் போனது. இவரது எழுத்தை அச்சேற்றிய பதிப்பாளர்கள், கொழுத்துப் போய், விலை உயர்ந்த கார்களில் பவனி வர, இவரோ, எழுதி எழுதிக் கொடுத்து, ஏமாந்து போய், வறுமையுடன் மல்யுத்தம் செய்தார். கவலையைப் போக்க, மதுவை நாடினார்.

        பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மனைவியோ, போதுமடா உன்னுடன் வாழ்ந்தது என்று கூறி, குழந்தைகளை அழைத்துக் கொண்டு பிரிந்து போனார். இவரோ கவலையில் தேய்ந்து, மதுவில் தோய்ந்து, தோய்ந்து , இதோ வீதியில்.

      இஸபெல் ஒரு நொடி யோசித்தார். ஒரே நொடிதான், அடுத்த நொடி, அவரது கரம் பற்றி அழைத்துச் சென்றார்.

      மனநல மருத்துவ மனையில் சேர்த்தார்.

      ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் இருபது ஆண்டுகள், ஒரு ஒப்பற்ற சிநேகிதியாய், உடன் இருந்து காத்தார். மீண்டும் புது மனிதராய் மாற்றி, எழுத்துலகில் இணைய வைத்தார்.
      

1922 ஆம் ஆண்டு, செப்டம்பர் 2 ஆம் நாள் இவர், மறைந்த போது, ஆஸ்திரேலியாவே, பெரும் சோகத்தில் மூழ்கியது. முழு அரசு மரியாதையுடன், இவரது உடல் நல்லடக்கம் செய்யப் பட்டது.

       எந்த ஒரு தனி மனிதனுக்கும் இதுவரை கிட்டாத, மரியாதை, இறுதி மரியாதை, அரசு மரியாதை இவருக்குக் கிட்டியது.

        ஆஸ்திரேலியப் பிரதமரே இவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு, சோகமே உருவார் அமர்ந்திருந்தார். ஆயிரக் கணக்கான மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.


ஒரு வெண்கலச் சிலை. இம்மாபெரும் எழுத்துலக சக்கரவர்த்தியுடன், முதுகுச் சுமையுடன் ஒரு காடுறை மனிதர் ஒரு பக்கமும், மறுபக்கம் ஒரு நாயும் நிற்பதுபோல், ஒரு வெண்கலச் சிலை. ஆஸ்திரேலிய அரசே நிறுவியது.1949 ஆம் ஆண்டு சிறப்பு அஞ்சல் தலை. 1966 இல் முதன் முறையாக, தசம எண்ணிக்கையிலான பணப் புழக்கம் அறிமுகப் படுத்தப் பட்டபோது, பத்து டாலர் மதிப்புடைய பணத்தில் இம்மனிதரது சிரித்த முகம்.

        நண்பர்களே, ஆஸ்திரேலிய அரசு போற்றிய, தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடிய, இம்மனிதர், இம்மாமனிதர், இந்த காடுறை மனிதர்களின் எழுத்துலகச் சக்கரவர்த்தி யார் தெரியுமா?


இவர்தான்
ஹென்றி லாஸன்.

-----

     மரக் கம்பளங்களாலும், பலகைகளாலும் கட்டப் பட்டிருந்த அந்த வீட்டில், இரண்டு அறைகள் இருந்தன. வீட்டின் தரை பிளவுபட்ட பலகைகளால ஆகியிருந்தது.

     மரப் பட்டைகளால் கட்டப் பட்ட சமையலறை வீட்டின் ஒரு கோடியில் அமைந்திருந்தது. அது வராந்தா உள்ளிட்ட வீட்டின் அளவை விடவும் பெரியதாக இருந்தது.

      தொடு வானத்தைக் காண இயலாதபடி, எங்கும் புதர் சூழ்ந்திருந்த குறுங்காடு அது. மலைகளோ, குன்றுகளோ இல்லாத, எங்கும் சம வெளியாய் காட்சி அளித்தது அப்பிரதேசம்.

      எங்கெங்கும் சிறுத்து திரங்கிய சுதேசி ஆப்பிள் மரங்கள் நிறைந்திருந்தன. அவற்றின் நிழலில், வேறெந்த தாவர வளர்ச்சியும் இல்லை.

     நீர் வறண்டு போன குறுகிய ஓடைப் பாதையோரம், கரும் பச்சை நிற சவுக்கு மரங்கள் சில தென்பட்டன. அக்கம் பக்கத்தில் வேறு வீடுகள் இல்லை.

     பக்கத்து வீடு, பத்தொன்பது மைலுக்கு அப்பால், பிரதான சாலையோரம் இருந்தது.

      நண்பர்களே, படிக்கப் படிக்க, காட்சி கண் முன்னே விரிகிறது அல்லவா? ஆள் அரவமற்ற காடு, மனக் கண் முன்னே காட்சி அளிக்கிறது அல்லவா?


    உண்மையில் நமக்கும் அவர்களுக்கும்தான் பெரிதாய் என்ன வித்தியாசம்? நான் ஒரு முட்டாளாக இருந்திருக்கிறேன். எனக்கே தெரிகிறது. அதற்கான பலனைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது செய்வதற்கு ஒன்றுமில்லை.

     ஒரு வேளை உணவுக்காக, அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறோம். வயதாகும் வரை ........ நம்மைப் பற்றிய சிரத்தைக் குறையும் வரை ..... உடல் அழுக்கடையும் வரை ...... இந்த ஓட்டம் தொடரும்.

     இன்னும் வயதாகும் ...... இன்னும் சிரத்தை குறையும் ..... இன்னும் அழுக்கடைவோம்.......

     இப்படியே இந்த மண்ணுக்கும், புழுதிக்கும், வெக்கைக்கும், ஈக்களுக்கும், கொசுக்களுக்கும் பழகிப் போவோம்.

     இலக்கைத் தொலைத்து, நம்பிக்கையைக் கைவிட்டு, ஒரு மாடு மாதிரி, கால் நடை வாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொள்கிறோம்.

     ஒரு நாயைப் போல், போகுமிடமெல்லாம் நம்மோடு வருகிறது, உடலின் ஒரு அங்கமாகவே மாறிவிட்ட இந்த முதுகுப் பை.

    அது இல்லாவிடில், சுமையற்ற தோள்களும், எதையோ இழந்தது போலான தவிப்பும், நம்மை இயல்பாயிருக்க விடுவதில்லை.

     நண்பர்களே, காடுகளையும், காடுறை மனிதர்களையும், காடுறை மனிதர்களின் வாழ்வியலையும், அவர்களின் இயலாமையினையும், எண்ண ஓட்டங்களையும், தமிழ் எழுத்துக்களின் வழியாகக் காட்சியாக்கி கண் முன்னே ஓட விடுகிறார் இவர்.

      படிக்கப் படிக்க மொழி பெயர்ப்புக் கதைகள் என்பதே மறந்து போய், அப்பக்கங்களில் மூழ்கி, மூச்சுத் திணறி, இவரின் எழுத்தாக்கத்தில் ஒன்றி, நம்மையே மறந்து போய் விடுவோம்.

       தமிழ் மக்களுக்குப் பரிச்சயமில்லாத, மாறுபட்டதொரு, இலக்கியப் படைப்பான, ஆஸ்திரேலியக் காடுறை மாந்தர்களையும், அவர்தம் வாழ்க்கைக் கதைகளையும், தமிழ்ப் படுத்துவதில் முழு வெற்றி பெற்றிருக்கிறார்.

சகோதரி கீதா மதிவாணன் அவர்கள்,
வலைத் தளப் பதிவர்.ஹென்றி லாஸனின்
என்றாவது ஒரு நாள்
ஆஸ்திரேலியப் புதர்காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக் கதை.

-----

     காடுகளில் வீடுகளை அமைத்துக் கொண்டு வாழ்ந்த முன்னாள் கைதிகளும், அடி மட்டத் தொழிலாளர்களும், சுரங்கக் குழிக்குள் தங்கள் அதிஷ்டத்தைத் தேடிக் கொண்டிருந்தவர்களும்தான் ஹென்றி லாஸனின் கதை மாந்தர்களான காடுறை மனிதர்கள்.

     காடுறை வாழ்க்கையின் ஆபத்துகளும், அச்சந்தரும் தனிமையும், தரிசு நிலங்களை விளைய வைக்க விவசாயிகள் பட்ட கஷ்டங்களையும், சுரங்கத் தொழிலாளர்களின் பரிதாப வாழ்க்கையையும், சுரங்க நிலங்கள் கைவிடப் படும் பொழுது, எழும் வெறுமையும், இயலாமையுமாய், அவருடைய படைப்புகள் ஒவ்வொன்றும், நம்மை முழுதாய் எழுத்துக் சுழலுக்குள், இழுத்துக் கொள்ளும் வல்லமை வாய்ந்தவை.

     மொத்தம் 22 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல்.

     ஒவ்வொரு சிறுகதையாய் படிக்கப் படிக்க, மனதில் ஓர் இனம் புரியா வெறுமை. இப்படியும் மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்களே, இதுவரை அறிந்து கொள்ளலமல் இருந்திருக்கிறோமோ என்னும் ஓர் உணர்வு உறுத்தத்தான் செய்கிறது.

      இந்நூல் எனக்கு எப்படிக் கிடைத்த்து தெரியுமா?

     கடந்த 11.10.2015 அன்று வலைப் பதிவர் சந்திப்பிற்காக, புதுகை வந்த போது கிடைத்தது.

வலைப் பூவின் பதிவர்
சகோதரி கலையரசி அவர்களைச்
சந்திக்கும் ஓர் பொன்னான வாய்ப்பு.

     என்னைப் பார்த்தவுடன், தனது பையில் இருந்து, இந்நூலினை எடுத்து, திருமதி கீதா மதிவணன் அவர்கள் தங்களுக்குத் தரச் சொன்னார் என்று கூறி கொடுத்தார்.

     ஆஸ்திரேலியாவில் இருந்து நீண்ட, கடல் தாண்டி, பறந்து,  புதுகை வந்தடைந்த, சகோதரி கீதா மதிவாணன் அவர்களின் பாசமிகு உள்ளம் கண்டு வியந்து போனேன்.

வலையுலக உறவென்பது இதுதானோ?

நன்றி சகோதரியாரே.

    சகோதரி கீதா மதிவாணன் அவர்களின் எழுத்தில், காடுறை கதைகள், ஒரு புதிய வாழ்க்கை முறையின் துவக்கத்தைக் காட்டுவதோடு, அந்த காலத்திற்கும், அக்காலச் சூழலுக்குமே நம்மை அழைத்துச் செல்கிறன.

வாழ்த்துக்கள் சகோதரியாரே.

தங்களின் எழுத்துலகப் பயணம்
தொடரவும்,
சிகரங்களைத் தொடவும்
வாழ்த்துக்கள் சகோதரியாரே.


------------127 கருத்துகள்:

 1. சோகம் ததும்பும் கதைகள் அவை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துக்கு நன்றி ஐயா.. அந்தக் காலக்கட்டத்தில் கைதிகளாய் வாழ்ந்தவர்கள் புதிய நாட்டில் தங்கள் வாழ்க்கையை முறையாக அமைத்துக்கொள்ளும்போது எழுந்த பிரச்சனைகளை மையமாய் வைத்துப் பின்னப்பட்ட கதைகள் என்பதால் சோகம் அதிகம்தான்.

   நீக்கு
 2. அருமையான மனிதரை தெரிந்து கொள்ள வாய்ப்பளித்த உகளுக்கும் சகோதரி கீதாவிற்கும் மனம் நிறைந்த நன்றி அண்ணா..

  பதிலளிநீக்கு
 3. சிறந்த ஒரு பகிர்வு. நானும் அந்தப் புத்தகத்தை வாங்க வேண்டும் என்று ஏற்கெனவே தீர்மானித்திருக்கிறேன்.
  தம +1

  பதிலளிநீக்கு
 4. just Great! each and every introduction of your pen bringhs out a great presonality/event.
  congratulation Mr.Jayakumar.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜெயக்குமார் ஐயாவின் எழுத்துகளில் உள்ள வசீகரம் எப்போதும் மலைப்பைத் தருவது உண்மையே.. கருத்துக்கு மிக்க நன்றி ஐயா.

   நீக்கு
 5. ஒரு புத்தக மதிப்புரைதான். ஆனால் தங்களது எழுத்து மூலமாக எங்களை நிகழ்விடத்திற்கே கொண்டு சென்றுவிட்டீர்கள். உரிய புகைப்படங்களைத் தெரிவு செய்து எங்களைப் பயணிக்க வைத்து நூலின் நாயகர்களைப் பற்றியும் அவர்களது வாழ்க்கையைப் பற்றியும் நல்ல அறிமுகம் தந்துள்ளீர்கள். நூலாசிரியர் அரிதின் முயன்று இந்நூலை படைத்துள்ளார். அவரது தளத்தை நான் படித்து வருகிறேன். புதுக்கோட்டையில் இவரைப் போன்ற பல நண்பர்கள் கலந்துகொண்டது மகிழ்ச்சியைத் தருகிறது. நூலாசிரியருக்கு பாராட்டுக்கள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் உயரிய கருத்துகளுக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி ஐயா.

   நீக்கு
 6. தங்களுக்கே உரிய ஒரு வித்தியாசமான பாணியில், சகோதரி கீதமஞ்சரி அவர்களது ”என்றாவது ஒருநாள்” என்ற நூலினைப் பற்றிய சுவாரஸ்யமான விமர்சனம். நானும் புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு புத்தக விற்பனையில், இந்த நூலை வாங்கி வைத்து இருக்கிறேன். நூலைப் படித்து முடித்தவுடன், என்றாவது ஒருநாள் எனது கட்டுரை வெளிவரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகவும் மகிழ்ச்சி. காத்திருக்கிறேன். மனமார்ந்த நன்றி ஐயா.

   நீக்கு
 7. எழுத்தாளர் குறித்து இதுவரை அறியாத
  விஷயங்களை அழகுபட சொல்லிச் சென்ற விதம்
  மனம் கவர்ந்தது

  கீதா மதிவாணன் அவர்கள் எனக்கும்
  அன்புப் பரிசாக கலையரசி மூலம்
  புத்தகம் கொடுத்து அனுப்பி இருந்தது
  என்றும் மறக்கமுடியாத அன்பின் வெளிப்பாடு

  முழுதும் படித்துப் பின்
  விமர்சனம் எழுத இருக்கிறேன்

  மனம் கவர்ந்த பதிவு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் விமர்சனத்தை வெகு ஆவலாய் எதிர்பார்க்கிறேன். முடியும்போது எழுதுங்கள். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ரமணி சார்.

   நீக்கு
 8. ஒரே பதிவில் இரண்டு பெரும் எழுத்தாளர்களை அறிமுகம் செய்து அசத்தி விட்டீர்கள்
  தம +

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி மது. வளரும் எழுத்தாளர்கள் என்ற பதம் சரியாக இருக்குமென்று நினைக்கிறேன் :)))

   நீக்கு
 9. #ஆஸ்திரேலியாவில் இருந்து நீண்ட, கடல் தாண்டி, பறந்து, புதுகை வந்தடைந்த, சகோதரி கீதா மதிவாணன் அவர்களின் பாசமிகு உள்ளம் கண்டு வியந்து போனேன்.#
  என்றாவது ஒரு நாள் நேரில் சந்திக்கும் வாய்ப்பு இல்லாமலா போய்விடும்:)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஜி...கண்டிப்பாக வாய்ப்பு வரும் நானும் உங்களோடு காத்திருக்கிறேன்

   நீக்கு
  2. நிச்சயமாக.. அன்பால் நிறைந்திருக்கும் வலைப்பூ உலகில் நானும் ஓர் அங்கமாக அனைவரையும் சந்திக்க ஆவலாக உள்ளேன். வாய்ப்பு அமையும்போது அவசியம் சந்திப்போம். நன்றி பகவான்ஜி.. நன்றி சுவாதி.

   நீக்கு
 10. அருமையான எழுத்தாளரை அறிந்துகொண்டேன்! அழகுப்பட தந்த தங்களுக்கும் அழகாய் மொழியாக்கம் செய்த கீதா அவர்களுக்கும் நன்றிகள்! கண்டிப்பாக படிக்க வேண்டும்! நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஸ்திரேலியாவின் ஒரு அற்புத எழுத்தாளரைப் பலரும் அறியச்செய்யவேண்டும் என்பதே என் நோக்கம். இதுபோன்ற விமர்சனங்களால் நோக்கம் நிறைவேறுவதில் மிகவும் மகிழ்ச்சி. வாய்ப்பு அமையும்போது அவசியம் வாசியுங்கள். மிக்க நன்றி.

   நீக்கு
 11. அற்புதமான பதிவு நண்பரே!
  புத்தகத்தை பற்றிய விளக்கமும் அதை எழுதிய எழுத்தாளரின் விவரமும் மொழிபெயர்த்த கீதா மதிவாணன் குறித்த அனைத்து தகவல்களும் அருமையாக தொகுத்து அளித்துள்ளீர்கள்.
  எனக்கும் புத்தகம் கிடைத்தது. இன்னும் முழுமையாக படித்து முடிக்கவில்லை. படித்து கருத்திடுகிறேன்.
  பகிர்ந்தமைக்கு நன்றி!
  த ம 8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடியும்போது வாசித்துக் கருத்திடுங்கள். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி செந்தில்.

   நீக்கு
 12. !.இஸபெல்கள் வாழட்டும்...
  2.எழுத்தாளர்களைக் கொண்டாடும் தேசம் வாழட்டும்
  3. எழுத்தாளர்களின் எழுத்தை மதித்து, அதனை அற்புத நடையில் தந்த நீங்கள் வாழ்வாங்கு வாழ்க..(படிக்க ஆவலைத்தூண்டி விட்டீர்கள்...சூர்யா வந்ததும் அந்தப் புத்தகத்தைக் கடன் கேட்பாள்...ஜாக்கிரதை...)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக அழகான கருத்துரைக்கும் வாசிக்கும் ஆர்வத்துக்கும் அன்பான நன்றி சுவாதி.

   நீக்கு
 13. மொழி பெயர்ப்பு என்பது அதுவும் வேற்று நாட்டு கதைகளை மொழி பெயர்ப்பு செய்வது என்பது அவ்வளவு சுலபமல்ல . வாழ்த்துக்கள் .
  . நீங்கள் அறிமுகப் படுத்திய விதமும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் கரந்தை ஐயா மூல எழுத்தாளரை அறிமுகப்படுத்திய விதம்தான் பதிவை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 14. என்ன ஒரு ஆழ்ந்த வரிகள்...கரந்தையாரே நான் மிகவும் ரசிக்கிறேன் உங்கள் வரிகளை...உலகக்கவிஞனை அறிமுகாப்படுத்திய(எனக்கு) உங்களுக்கும்....கீதா அவ்ர்களுக்கும் மனமார்ந்த நன்றி....
  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்களுக்கும்...நம் நண்பர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகச்சிறந்த சிறுகதைகளையும் ஏராளமான கவிதைகளையும் எழுதியுள்ள ஹென்றி லாசன் அவர்களை இப்பதிவு வாயிலாய்த் தாங்கள் அறிந்துகொண்டதற்காய் மகிழ்கிறேன். மிக்க நன்றி.

   நீக்கு
 15. புத்தக மதிப்புரையுடன் எழுத்தாளர்கள் அறிமுகம் வெகு சிறப்பு ஐயா!

  நூலைத் தேடி வாங்கிப் படித்திட வைத்துவிட்டீர்கள்!
  அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வாசிப்பார்வத்துக்கு மிக்க நன்றி தோழி. வாய்ப்பு அமையும்போது அவசியம் வாசித்துப் பாருங்கள்.

   நீக்கு
 16. என்ன ஒரு இனிய... அழகான… ஆச்சர்யம்! மொழிபெயர்ப்பாளரைக் கொண்டாடுவதை விடவும் அதை எழுதத் தூண்டிய மூலக்கதை ஆசிரியருக்கு உரிய மரியாதை தரப்படவேண்டும் என்பதில் மிகுந்த உறுதியுடையவள் நான். அந்த வகையில் எழுத்தாளர் ஹென்றி லாசன் அவர்களைப் பற்றியும் அவருக்கு பக்கபலமாய் இருந்து அவரை அவருடைய பிரச்சனைகளிலிருந்து மீட்டு ஏராளமாய் எழுதவைத்த இஸபெல் அம்மையாரைப் பெருமைப்படுத்தும் விதமாகவும் அவர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்களைச் சுவைபடப் புனைந்தமை மனம் நிறைக்கிறது. மொழிபெயர்ப்பு குறித்த தங்கள் பாராட்டும் கதைகளை வாசிக்கும்போது உண்டான அனுபவப்பகிர்வும் மேலும் எழுதும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தருகிறது. மிகுந்த நன்றி ஐயா…
  புதுகை பதிவர் விழாவின்போது தங்களுக்கு இந்த நூலை வழங்கிய கலையரசி அவர்கள் என் கணவரின் தமக்கை. அன்புக்கும் மதிப்புக்கும் உரிய அவரை என்னுடைய உடன்பிறவா தமக்கை என்று கூறிக்கொள்வதிலும் மிகுந்த பெருமை எனக்கு. என் வேண்டுகோளை ஏற்று புத்தகங்களைப் பொறுப்புடன் ஒப்படைத்த அவர்களுக்கும் இவ்வேளையில் என் இனிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மொழி பெயர்ப்புச் சிறுகதைகள் என்ற உணர்வே படிப்போர்கள் மனதில் எழாத வண்ணம், மொழிபெயர்ந்த தங்களின் எழுத்துத் திறமை போற்றுதலுக்கு உரியது சகோதரியாரே
   ஹென்றி லாஸன் என்னும் எழுத்தாளரை தங்கள் மூலம்தான் அறிந்தேன். இந்த எளியேனையும் நினைவில் கொண்டு, நூலினை வழங்கியமைக்கு நன்றி சகோதரியாரே.
   நூலினை மறக்காமல் வழங்கிய சகோதரிய கலையரசி அவர்களுக்கும் என் நன்றியறிதலைத் தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்
   நன்றி சகோதரியாரே

   நீக்கு
 17. நல்ல பதிவு நண்பரே! அறியாத மனிதரைப் பற்றி அறிந்து கொண்டோம். சகோதரி கீதாமதிவாணன் அவர்களுக்கும் வாழ்த்துகள் நன்றி தங்களுக்கும் நன்றி. உங்கள் விவரணம் அருமை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி துளசி சார்.

   நீக்கு
 18. கீதமஞ்சரி அவர்களின் தளத்தில் சில கதைகளை படித்து இருக்கிறேன்! நூல் வாங்க வேண்டும். மிக அருமையாக உங்கள் பாணியில் நூல் அறிமுகம் செய்து அசத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் கருத்துக்கும் வாசிப்பார்வத்துக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   நீக்கு
 19. நல்ல நூல் பற்றிய பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 20. லாசனின் சோக. கதையை சகோதரி.கீதா.எழுதியதை.....எங்களுக்கு உங்களுக்கே உரிய பாணியில் உன்னதமாக தந்தமைக்கு நன்றி..எப்படியெல்லாம் வாழவேண்டியவர்களின் வாழ்க்கை கண்ணீர் கதைகளாகிப் போவதை நினைக்க வேதனையாக இருக்கிறது.......உடுவை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா

   நீக்கு
  2. தங்களுடைய அழகான கருத்துரைக்கும் நூலாசிரியர் குறித்த நெகிழ்வானக் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

   நீக்கு
 21. இன்று வரை படித்ததில்லை. ஒவ்வொருவரின் விமரிசனமும் அந்தப் புத்தகத்தைப் படிக்கத் தூண்டுகிறது. அருமையான விமரிசனம். இதுவரை அறியாத ஆசிரியர் ஹென்றி லாசன் அவர்களைக் குறித்தும் விபரங்கள் கொடுத்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுடைய கருத்துக்கும் வாசிப்பார்வத்துக்கும் மிக்க நன்றி கீதா மேடம்.

   நீக்கு
 22. நல்லதொரு எழுத்து நடை..
  ஹென்றி லாசனின் வாழ்க்கையை அறிமுகம் செய்த விதம் - தனித்துவமானது..

  கீதா மதிவாணன் அவ்ர்களுக்கும் தங்களுக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா
   தஞ்சை வந்துவிட்டீர்களா ஐயா?

   நீக்கு
  2. தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

   நீக்கு
 23. வணக்கம் நண்பரே படிக்கப்படிக்க உடல் சிலிர்த்தது ஒவ்வொரு வரிகளும் அந்தை சிலிர்ப்பை எல்லோராலும் வழங்கி விடமுடியாது மீண்டும் தாங்கள் அவ்வகை உணர்வுகளை தந்தீர்கள்..
  சகோ திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கும் வாழ்த்துகள் நல்ல விடயம் தந்த தங்களுக்கு நன்றி நண்பரே

  தமிழ் மணம் 10

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 24. யார் அவர் என்றறிய முனைப்போடு படித்ததும் ஒரு பிரம்மாண்டத்தை ஹென்றி லாசனை அறிமுகம் செய்து அது அடங்குவதற்குள் கீதா அம்மாவின் பணி இது என்பதை கூறி மூச்சுமுட்ட வைத்துவிட்டீர்கள் அய்யா.... அருமை

  பதிலளிநீக்கு
 25. அன்புள்ள கரந்தையாருக்கு,

  சகோதரி கீதா மதிவாணன் அவர்கள் ஹென்றி லாஸனின் ‘என்றாவது ஒரு நாள்’ சிறுகதைகளின் தொகுப்பு பற்றி நல்ல அறிமுகம் கொடுத்தீர்கள்.

  நன்றி.
  த.ம.11  பதிலளிநீக்கு
 26. சிறப்பான பகிர்வு.கொடுத்திருக்கும் மாதிரிப்பகுதிகளே ஆவலைத் தூண்டுகின்றன

  பதிலளிநீக்கு
 27. நானும் இப்புத்தகம் பற்றிய கருத்துரை ஒன்று எழுதி இருந்தேன் இருந்தாலும் உங்களைப்போல் எழுத வில்லை. முடியவில்லை என்பதேசரி. ஒரே நூல் வித்தியாசமான அணுகல்கள். பாராட்டுக்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி.. மாறுபட்ட அணுகுமுறைகள்.. உண்மையே.. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

   நீக்கு
 28. இத்தனை சிறப்பாக உங்களால் மட்டுமே எழுத முடியும் ஐயா...

  சகோதரிக்கும் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான்.. வாசகருக்கு வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் அருமையான எழுத்து கரந்தை ஐயாவினுடையது. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி தனபாலன்.

   நீக்கு
 29. எதையும் சுவை பட சொல்வதில் வல்லவர் நீங்கள்.
  கீதா நல்ல எழுத்து திறமை உடையவர். கீதா மதிவாணன் அவர்களின் போட்டிக்காக எழுதிய கட்டுரை ஒன்று வித்தியாசமாய் அமைந்திருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் பாராட்டு கண்டு மிக்க மகிழ்ச்சி முரளிதரன். தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 30. சிறந்த ஒரு பகிர்வு. கீதா மதிவாணன் போன்ற வளரும் கலைஞரை அறிமுகம் செய்தமைக்கு நன்றி கரந்தை !!

  பதிலளிநீக்கு
 31. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  எழுத்தாற்றல் மிகுந்த ஆஸ்திரேலிய எழுத்தாளரையும் அவருடைய க்தைகளை நம் தாய்மொழியில் மிகச் சிறப்பாக மொழிப்பெயர்த்த நமது சகோதரியையும் தங்களின் எழிலார்ந்த எழுத்துகளால் பாராட்டி சீராட்டி பதிவிட்டு அறிமுகம் செய்தது அருமை.

  பதிலளிநீக்கு
 32. மிகவும் சிறப்பாய் ஆரம்பித்து... நூல் அறிமுகம் போலில்லாமல் தங்கள் பாணியில் வரலாறுகளை எழுதும் பாங்கில் அழகாய் எழுதி மிகச் சிறப்பாய் சொல்லியிருக்கீங்க... சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கரந்தை ஐயாவின் வித்தியாசமான சுவாரசியமான எழுத்தோட்டத்தைக் குறிப்பிட்டுப் பாராட்டியமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி குமார்.

   நீக்கு
 33. புத்தகம் பற்றி கோபுசார் தொடர் பதிவை வாசித்தேன் அவர் தளத்தில் முன்னர்.
  இன்னொரு பார்வை தங்களின் பகிர்வு நூல் இங்கு கிடைத்தால் வாசிக்கும் ஆசையில்! பகிர்வுக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தனிமரம் 06 நவம்பர், 2015

   வாங்கோ திரு. நேசன் அவர்களே ! வணக்கம்.

   //புத்தகம் பற்றி கோபு சார் தொடர் பதிவை வாசித்தேன் அவர் தளத்தில் முன்னர்.//

   அதனை நினைவில் வைத்து இங்கு குறிப்பிட்டுச் சொல்லி மகிழ்ந்துள்ளதற்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. அந்த விறுவிறுப்பான தொடரின் ஆரம்ப இணைப்பு: http://gopu1949.blogspot.in/2015/09/part-1-of-5.html

   நீக்கு
  2. தனிமரம் 06 நவம்பர், 2015

   //இன்னொரு பார்வையில் தங்களின் பகிர்வு நூல் இங்கு கிடைத்ததால் வாசிக்கும் ஆசையில்! பகிர்வுக்கு நன்றி ஐயா.//

   இவரும் இவர் பாணியில் நன்றாகவே எழுதியுள்ளார். இவ்வாறு மேலும் பலரும் அவரவர்கள் பாணியில் இதனைப்பற்றி சிறப்பித்து எழுத வேண்டும் என்பதே என் ஆசையும்.

   தங்களுக்கும் கரந்தையாருக்கும் என் நன்றிகள்.

   நீக்கு
  3. நண்பருக்கும், ஐயா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்து மகிழ்கின்றேன்

   நீக்கு
  4. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தனிமரம்.

   நீக்கு
  5. தங்கள் அன்புக்கு மிக்க நன்றி கோபு சார்.

   நீக்கு
 34. கீதமஞ்சரியின் காடுறை கதைகள் மிக அருமை , புத்தகத்தை வாங்கி மீண்டும் படிக்க ஆவல்.
  இந்த ஆவலை தூண்டும் விதமாய் உங்களின் அழகான விமர்சனம். உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாசிப்பார்வத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேடம். வலையில் நான்கைந்து கதைகள்தான் வெளியிட்டேன். மற்ற பதினெட்டுக் கதைகள் புதியவைதாம். உங்களுக்குப் பிடிக்கும் என்றே நினைக்கிறேன்.

   நீக்கு
 35. நீண்ட காலமாகவே நான் சிறு கதைகளோ நாவலோ படிப்பதில்லை! தங்கள் விமர்சனமும் சகோதரி கீதாமதிவாணன் அவர்கள் பால் நான் கொண்டிருக்கும் மதிப்பும் என்னையும் படிக்கத் தூண்டுகிறது! முயல்வேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமானவளாயிருப்பதில் பெருமகிழ்ச்சி. மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 36. வணக்கம்
  ஐயா
  அறியாத ஒரு எழுத்தாளரை அறிமுகம் செய்த விதம் சிறப்பு ஐயா... அத்தோமு கீதா அவர்களின் நூல் அறிமுகம் நன்று..த.ம 19

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 37. அன்புள்ள ஜெயக்குமார்..

  வணக்கம். கீத மஞ்சரி அவர்களின் மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பு குறித்த உங்கள் விமர்சனம் உணர்வுப்பூர்வமாகவும் அழகியலோடும் அமைந்திருந்தது. நான் தொடர்ந்து பார்க்கும் ஒருசில வலைப்பதிவுகளுள் கீத மஞ்சரியின் வலைப்பதிவும் ஒன்று. அவரின் பதிவிலேயே ஒருசிலவற்றைப் படித்து வியந்துபோனேன். மொழிபெயர்ப்பு என்பது எல்லோருக்கும் வருவதல்ல. ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குப் பெயர்ப்பது என்பதுதான் பல மொழிபெயர்ப்பாளர்களின் மொழிபெயர்ப்புக்களில் கண்டு வருத்தப்பட்டதுண்டு. மொழிபெயர்ப்பு என்பது மொழிமாற்றத்தோடு மூல மொழியின் அத்தனைத் தன்மைகளையும் கொண்டுவரவேண்டும. என்றாலும் முழுமையாக நூறு சதவிகிதமும் கொண்டுவரமுடியாது. இருப்பினும் 70 விழுக்காடு கொண்டுவந்தாலே முழுமையான மொழிபெயர்ப்புத்தான். கீத மஞ்சரி இவற்றின் வென்றிருக்கிறார். ஹென்றி லாசனின் உணர்வுகளைக் கேடுறாமல் மொழிபெயர்த்திருக்கிறார். நீங்கள் வாசித்துவிட்டு இயலுமாயின் எனக்குத் தாருங்கள் நானும் ஒருமுறை வாசித்துவிடுகிறேன். இதுபோன்ற மொழிபெயர்ப்புகள் தமிழில் வரவேண்டும். கீதமஞ்சரி அவர்களுக்குக் கொடுப்பினை உள்ளது. தொடர்ந்து செய்யுங்கள் சகோதரி வாழ்த்துக்கள். வாசிக்கக் காத்திருக்கிறேன். ஜெயக்குமார் உங்களின் பதிவுகண்டு பெருமையுறுகிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் ஐயா
   ஹென்றி லாஸனின் உணர்வுகளைக் கேடுறாமல் மொழிபெயர்த்திருக்கிறார். வெற்றியும் பெற்றிருக்கிறார்
   நீண்ட கருத்துரைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க
   நன்றி ஐயா

   நீக்கு
  2. என்னுடைய மொழிபெயர்ப்பு குறித்த தங்கள் கருத்து மகிழ்வுறவைக்கிறது ஹரணி சார். மேலும் தொடர்ந்து எழுதும் உத்வேகத்தைத் தருகிறது. மனம் நெகிழ்வான நன்றிகள் பல தங்களுக்கு.

   நீக்கு
 38. மரியாதைக்குரிய ஐயா,
  வணக்கம்.கணிதத்தின் ஆசிரியராக பணியாற்றும் தாங்கள் இதுபோன்ற கதைகளிலும் நாட்டம் செலுத்தியது கண்டு வியப்படைகிறேன்.பேருவகை அடைகிறேன்.தங்களது பதிவால் புத்தகத்தின் மதிப்பினை உணர்கிறேன்.அவசியம் எங்களது நூலகமான,'மாணவர் நூலகத்தில்' இடம்பெறும்..நன்றிங்க ஐயா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கரந்தை ஜெயக்குமார் ஐயாவின் விமர்சனத்தால் தங்களுடைய மாணவர் நூலகத்தில் இடம்பெறும் வாய்ப்பினை இந்நூல் அடையவிருப்பதற்காகப் பெரிதும் மகிழ்கிறேன். மனமார்ந்த நன்றி ஐயா.

   நீக்கு
 39. இருவருக்கும் இனிய வாழ்த்துகள்.
  மேலும் முன்னேறுங்கள்.

  பதிலளிநீக்கு
 40. மிகச் சிறப்பான புத்தகம் பற்றிய வாசிப்பனுபவம். கூடவே லாசன் பற்றிய விவரங்களும் தெரிந்து கொள்ள முடிந்தது.

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 41. கரந்தையாரே, உங்களின் எழுத்து நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே இருக்கிறது என்பதற்கு இந்தக் கட்டுரை மேலும் ஒரு உதாரணம். கட்டுரையின் ஆரம்பம் இது ஒரு நூல் விமர்சனம் என்பதைச் சற்றும் வெளிக்காட்டாத ஒரிஜினல் படைப்பாகவே துவங்கியது. கீதா மதிவாணன் உண்மையிலேயே பெருமைப்படவேண்டும். இத்தகைய அற்புதமான விமர்சனங்கள் - எழுத்தாளரை ஊக்குவிக்கும் விமர்சனங்கள் - உங்களைப் போன்றோரிடமிருந்தே கிடைக்க முடியும். - இராய செல்லப்பா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிகவும் பெருமைப்படுகிறேன் ஐயா.. இவ்விமர்சனத்தால் வாசக எண்ணிக்கை மிகவும் கூடியிருப்பதை உணர்கிறேன். மேலும் தொடர்ந்து எழுதும் உத்வேகத்தையும் பெற்றிருக்கிறேன். ஊக்கம் தரும் தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா.

   நீக்கு
 42. தீபாவளி வாழ்த்துக்கள்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 43. நாங்கள் அறியாத ஒரு பெரும் படைப்பாளியின் வரலாற்றினை பதிவாக தொடங்கி அவரின் பதிப்பின் தமிழாக்க விமர்சனமாய், இந்த கட்டுரையை புதுமையாக, மிக அருமையாக படைத்துள்ளீர்கள்.

  இந்த பதிவின் மூலம் ஹென்றி லாசனையும், கீதா மதிவாணன் அவர்களையும் ஒரு சேர பெருமைபடுத்தியுள்ளீர்கள். தமிழ் மொழியின் இலக்கிய வளத்துக்கு கீதா மதிவாணன் போன்றவர்களின் அரும் பணி அவசியம்.

  நன்றி
  சாமானியன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுடைய ஊக்கம் தரும் கருத்துரைக்கு மிக்க நன்றி சாமானியன். நிச்சயம் என்னால் இயன்றவரை தமிழுக்குப் பெருமை சேர்ப்பேன்.

   நீக்கு
 44. அருமையான பகிர்வு.பகிர்ந்த உங்களுக்கும் ,நூல் ஆசிரியை கீதா மதிவாணனுக்கும் நன்ரி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பித்தன் ஐயா.

   நீக்கு
 45. very good exposure of Australian national writer. thanks vanakkam

  பதிலளிநீக்கு
 46. ஹென்றி லாசனின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் எழுத்தின் தனித்துவத்தையும் சுவைபடச் சொல்லும் அறிமுகம், அவர் கதைகள் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்துவதாக உள்ளது. பின்னர் கீதா மதிவாணனின் மொழிபெயர்ப்பின் சிறப்புக்களைச் சில மேற்கோள்கள் மூலம் காட்டி விளக்கியிருப்பது சிறப்பு. அருமையான இப்பதிவின் மூலம் என்றாவது ஒரு நாள் மொழிபெயர்ப்பு நூலின் சிறப்புக்களைப் பலர் அறியச் செய்திருக்கிறீர்கள். என் புகைப்படத்தையும் வெளியிட்டிருப்பதற்கு மிகவும் நன்றி. தாமதமான வருகைக்கு மிகவும் வருந்துகிறேன். அருமையான நூல் அறிமுகத்துக்குப் பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு