30 அக்டோபர் 2015

சிகரத்தை நோக்கி


     நண்பர்களே, அரசு ஊழியர்கள் அனைவருமே ஏதேனும் ஒரு காப்பீட்டுத் திட்டத்தில் நிச்சயமாக இணைந்திருப்பார்கள். பலரோ ஒன்றுக்கும் மேற்பட்ட காப்பீட்டுத் திட்டங்களில் இணைந்திருப்பார்கள்.

      அரசு ஊழியர் அல்லாதவர்களில் பெரும்பாலானர்கள், நிச்சயமாக காப்பீட்டுத் திட்டங்களில் இணைந்தே இருப்பார்கள்.

              குடும்பத்தினை மையமாக்க் கொண்ட வாழ்வினை வாழ்ந்து வருபவர்கள் அல்லவா நாம். எனவே காப்பீட்டுத் திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.


        காப்பீட்டுத் திட்டங்களில் இணைந்திருந்தாலும், காப்பீட்டு நிறுவனத்தைப் பற்றிய செய்திகளை, சில நாட்களுக்கு முன்பு வரை, அறியாதவனாகவே, இருந்துள்ளேன் என்பதுதான் உண்மை.

        இந்தியாவில் முதன் முதலாக, காப்பீட்டு நிறுவனம் மூச்சு விடத் தொடங்கியது எப்போது தெரியுமா?

       1818 இல்.

       ஓரியண்டல் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி.

       இந்நிறுவனம் கால் பதித்த முதல் இடம் கல்கத்தா.

       ஆனாலும் இந்நிறுவனம், மூச்சு விடத் தொடங்கிய, 16 ஆண்டுகளிலேயே, அதாவது 1834 லேயே திவாலாகிப் போனது.

       பிறகு 1871 இல் பாம்பே மியூச்சுவல் என்ற நிறுவனமும், 1874 இல் ஓரியண்டல் நிறுவனமும் ( இது வேறு ஓரியண்டல்), 1897 இல் எம்பயர் ஆஃப் இந்தியா நிறுவனமும் ஒவ்வொன்றாக தலை தூக்கின.

             ஆனாலும் 1907 இல்தான் பொது இன்சூரன்ஸ் தொழில் செய்ய, மெர்கண்டைல் இன்சூரன்ஸ் கம்பெனி உருவானது.

      நண்பர்களே, இவை எல்லாமே ஐரோப்பியக் கம்பெனிகள்.

       இதில் கொடுமை என்ன தெரியுமா? இந்நிறுவனங்கள் தொடங்கப் பெற்றது என்னவோ இந்தியாவாக இருந்த போதிலும், இவை தொடங்கப் பெற்றது இந்தியர்களுக்காகவே அல்ல.

        இந்தியாவில் இருக்கும் ஐரோப்பியர்களுக்காக மட்டுமே, இந்நிறுவனங்கள் அவதாரம் எடுத்தன.

       பிறகுதான் மெல்ல மெல்ல, இந்திய முதலாளிகள், இந்தியர்களுக்கான காப்பீட்டு நிறுவனங்களைத் தொடங்கினர்.

        ஆனால் இந்திய முதலாளிகளின் திட்டம் வேறாக இருந்தது. இந்திய முதலாளிகள் யார் யாரெல்லாம் காப்பீட்டு நிறுவனங்களைத் தொடங்கினார்களோ, அவர்கள் அனைவரும், தவறாது வங்கிகளையும் தொடங்கினார்கள்.

      எதற்குத் தெரியுமா?

       இன்சூரன்ஸ் வணிகம் என்பது, அடிப்படையில் நீண்டகால சேமிப்பைத் திரட்டுகின்ற ஒரு வணிகம்.

       இவர்கள் தங்களது கை காசினை பைசா செலவழிக்காமல், இந்தியர்களின் நீண்ட கால சேமிப்பினை மூலதனமாகக் கொண்டு, தங்களுக்கே தங்களுக்கான, புத்தம் புது தொழில்களைத் தொடங்க விரும்பினர்.

          எனவே மூலதனம் திரட்டுவதற்காக காப்பீட்டு நிறுவனங்களைத் தொடங்கினர்.

           மூலதனத்தை முதலீடு செய்ய வங்கிகளையும் தொடங்கினர்.

          இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், வெளி நாட்டு நிறுவனங்கள் எல்லாம், கொஞ்சம் கொஞ்சமாக மூட்டை, முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு வெளியேறின.

    இந்திய முதலாளிகள் தனிக் காட்டு ராஜாவாக மாறினர்.

    ஊழியர்களின் துயரம் அதிகரித்தது. முறையான பணி நேரம் கிடையாது. முறையான பணி விதிமுறைகள் கிடையாது அடக்கு முறையே முதலாளிகளின் தாரக மந்திரமாக மாறிப் போனது.

     விளைவு ஊழியர்கள் கொந்தளிக்கத் தொடங்கினர்.

      பொறுத்தது போதும், இனி பொங்கி எழுவோம் என்று எண்ணி, 1945 இல், வங்காள இன்சூரன்ஸ் அலுவலர் சங்கம், தன் நெஞ்சம் நிமிர்த்தி உதயமானது.

      பின், மெல்ல மெல்ல, இந்தியா முழுவதும் ஊழியர் சங்கங்கள் பல்கிப் பெருகத் தொடங்கின.

      1951 இல் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள், பம்பாயில் ஒன்று கூடி, பெருங் குரலெடுத்து, ஒரே குரலாய், ஒருமித்த குரலாய், உலகே அதிர, ஓங்கி முழங்கினர்.

       இன்சூரன்ஸ் துறையினை தேசிய மயமாக்கு.

       போராட்டம் தொடங்கியது, தொடர்ந்தது.

       1956, சனவரி 19இல் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் தேசிய மயமாக்கப் பட்டது.

        நண்பர்களே, உங்களின் குழப்பம் புரிகிறது. என்னடா இவன் திடீரென்று, காப்பீட்டுத் துறையைப் பற்றிப் பேசுகிறானே என, நீங்கள் வியந்து நோக்குவது புரிகிறது.

        ஒரு நூலினைப் படித்தேன். படிக்கப் படிக்க, பக்கத்துக்குப் பக்கம், காப்பீட்டுக் கழக ஊழியர்களின் போராட்ட வரலாறு, நெஞ்சை நெகிழச் செய்தது.சிகரத்தை நோக்கிய பயணத்திலிருந்து சில துளிகள் .......
வேலூர் கோட்டத்தின் 25 ஆண்டுகள் – ஒரு அனுபவப் பகிர்வு.

      வேலூர் என்றவுடன் புரிந்து விட்டதா நண்பர்களே.


வலைப் பூவின், பதிவர்

தோழர் எஸ். இராமன் அவர்களின்

அயரா உழைப்பில்,
உருவும், உயிரும் பெற்று
நூல் வடிவில் காட்சி தருகிறது
காப்பீட்டுக் கழக ஊழியர்களின்
கம்பீர வரலாறு.

     வரலாற்றின் பல நிகழ்வுகள் இந்நூலில் அருமையாக தொகுக்கப் பெற்றுள்ளன.

     பூக்களைத் தொடுக்கின்ற, இணைக்கின்ற நார் போன்று, மக்களை நெருங்குகின்ற, நேசிக்கின்ற தொழிற் சங்க அணுகுமுறை எவ்வாறு பரிணமித்து வளர்ந்துள்ளது என்பதை அழகாக விளக்குகிறது இந்நூல்.

     கொள்கை அளவில், ஊழியர்களின் கடமை என்ன, அவர்களின் சிந்தனை எவ்வாறு இருக்க வேண்டும், அவர்களின் சமுதாயப் பார்வை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை எல்லாம், ஊழியர்களுக்குச் சுட்டிக் காட்டும், தோழமை மிகுந்த வழிகாட்டி இந்நூல்.கடந்த 11.10.2015 அன்று புதுகையில் நடைபெற்ற,
பதிவர் சந்திப்புத் திருவிழாவில்தான்
தோழர் எஸ்.இராமன் அவர்களை,
முதன் முதலாக நேரில் கண்டேன்.

      நெடுநாள் பழகிய ஓர் உணர்வு. தினம், தினம் அவர்தம் உள்ளத்து உணர்வுகளை, வலையில் வாசிப்பதால் ஏற்பட்ட மன நெகிழ்வு.

       காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இவர்.

வலியோர்சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம்எனும் நினைவா?

உலகாள உனதுதாய்மிக
உயிர்வதை யடைகிறாள்
உதவாதினி ஒரு தாமதம்
உடன விழி தமிழா

என முழங்கும் பாவேந்தரின் பாடல் வரிகளுக்கு எற்ப, சிறுமை கண்டவிடத்து பொங்கி எழும் போராட்ட குணம் மிகுந்தவர். ஆனாலும் சிரித்த முகம். தோழமை பாராட்டும் கண்கள். தேனினும் இனிய மென்மையான சொற்களுக்குச் சொந்தக்காரர்.

     சிறிது நேரம்தான் பேச முடிந்தது எனினும், வாழும் காலம் வரை, தோளில் கைபோட்டு, தோழமையுடன் உலா வரும் நட்பினை உணர முடிந்தது.

சிகரத்தை நோக்கிய பயணத்திலிருந்து சில துளிகள் .....

சந்தித்த சிறிது நேரத்தில், தோழர் அன்பளிப்பாய் வழங்கிய பெட்டகம்.

     வாசித்து மலைத்துப் போனேன். இத்துனைச் செய்திகளைத் திரட்ட, எவ்வளவு உழைத்திருக்க வேண்டும், எத்துனை நாள் கண் விழித்திருக்க வேண்டும், எத்துனை நாள் விடுமுறையின்றி, ஓய்வின்றி அலைந்திருக்க வேண்டும். பக்கத்திற்குப் பக்கம் தோழரின் உழைப்பு, முகம் காட்டுகிறது.

      நண்பர்களே, நான் பார்த்த, படித்த மற்ற நூல்களுக்கும், இந்நூலிற்கும், ஒரு வேறுபாட்டை, வித்தியாசத்தை உணர்ந்தேன். மீண்டும் மீண்டும் புரட்டிப் புரட்டிப் பார்த்தேன்.

     இந்நூலில் விலை என்ற வார்த்தையே இல்லை.

     காப்பீட்டுக் கழக ஊழியர்களையும் தாண்டி, பொது மக்களையும், இந்நூல் சென்று சேர வேண்டும் என்பதே, இந்த எளியேனின் விருப்பமாகும்.

தோழர் எஸ்.இராமன் அவர்கள்
பாராட்டிற்கு உரியவர்.


தோழரும், தோழரது இயக்கமும்
சிகரத்தைத் தொட,
சிகரத்தைத் தாண்டியும், தன் எல்லைகளைப் பரப்ப
வாழ்த்துவோம், பாராட்டுவோம்.