11 அக்டோபர் 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 11


           

 நண்பர்களே, அமெரிக்காவின், நியூயார்க் நகரில் கால் பதித்து, ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. முதற் பருவம் நிறைவடைந்து விட்டது.

     இரண்டாம் பருவ வகுப்புகள் மகிழ்ச்சியாகவும், விறுவிறுப்பாகவும் விரைந்து சென்று கொண்டிருந்தன, இவ்விடத்தில் அமெரிக்கக் கல்வி முறை குறித்து சிறிது நேரம் பேச விரும்புகிறேன்.


      அமெரிக்கக் கல்வி நிறுவனங்களில் வகுப்புகள் விவாதங்களாகவே நடைபெறும். ஒரு குறிப்பிட்ட வகுப்பிற்கு வரையறுக்கப்பட்டப் பாடங்களை ஆசிரியர்களோடு சேர்ந்து, மாணவர்களும் படித்து விட்டே வகுப்பிற்கு வருவார்கள்.

      வகுப்பு துவங்கிய உடன், ஆசிரியர் சில குறிப்பிட்ட உட் கருத்துக்களை முன் வைப்பார். அதன் பிறகு மாணவர்கள் அவற்றை விவாதிப்பார்கள்.

       அவ்வாறு விவாதிக்கும் பொழுது, மாணவர்கள் முன்பே படித்து, குறித்து வைத்திருக்கும், முக்கியப் பகுதியை விவாதத்திற்குக் கொண்டு வருவார்கள்.

       பல நேரங்களில் மாணவர்களின் கருத்துக்கள், பேராசிரியரின் கருத்துக்களுக்கு முரணானதாகவும் அமையும். பேராசிரியர்களும் அதனை நிராகரிக்காமல் ஏற்றுக் கொள்வார்கள்.

        முதற் பருவம் முடிவதற்குள்ளாகவே, நான் மடி கணினியைத் திறம்பட பயன்படுத்துவதில் தேறிவிட்டேன்.


நான் KURZWEIL 1000 என்ற மென் பொருளைப் பயன்படுத்துகிறேன். அதனைக் கொண்டு, நான் படிக்கும் பொழுதே, முக்கியமானப் பகுதிகளை குறித்து வைத்துக் கொள்வேன்.

       வகுப்பறை விவாதத்தின் பொழுது, மற்ற மாணவர்கள், தங்கள் புத்தகத்தைப் புரட்டி, அவர்கள் குறித்து வைத்துள்ள செய்திகளைத் தேடி, அச்செய்தி பற்றிப் பேசுவதற்கு முன்பே, நான் என்னுடைய வாதங்களை முன் வைப்பேன்.

     அதன் விளைவு, நான் புத்தகங்களை கூர்ந்து படிப்பவன் என்ற பெயரைப் பெற்றேன்.

     வகுப்புகள் இல்லாத நாட்களில் கூட, காலை முதல் இரவு ஒன்பது மணி வரை, பல்கலைக் கழக கணினி வளாகத்திலேயே, என் நேரத்தினைச் செலவிட்டேன். இதன் விளைவாய் கடுமையாக உழைப்பவன் என்ற பெயரினையும் பெற்றேன்.

      மேலும் பல்கலைக் கழகத்தின் அனைத்துக் காவலர்களும், அறிந்த முகமாகவும், மாறிவிட்டேன்.

      வகுப்பறையில் மட்டும் படிக்கவில்லை. களப் பணி செய்தும் கற்றேன்.

      களப் பணியா என நீங்கள் வியப்பது புரிகிறது. ஆம் நண்பர்களே, களப் பணிதான்.

     பேராசிரியர் டேரி வில்லியம்ஸ் அவர்கள், சமூகத்தின் நடத்தைகளை நேரடியாகக் களப் பணி செய்து அறிவதற்கு எங்களைத் தயார் படுத்தினார்.

      நானும் வெண்டியும் சேர்ந்து களப் பணியில் இறங்கினோம். களப் பணி எதனைப் பற்றியது தெரியுமா?

      
ஆப்பிரிக்க, அமெரிக்க இனத்தவரிடைய 19709 மற்றும் 1980 களில், வெள்ளை இனத்தவரின் சுரண்டலுக்கு எதிராக,ஏற்பட்ட எழுச்சியின் விளைவாகத் தோன்றிய, ஹிப்பாப் என்ற, ஒரு ராப் இசையினை வாசிக்கும், வளரும் கலைஞர்கள் சந்திக்கும் இடர்பாடுகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.

     களப் பணியின் விளைவாக மூன்று முக்கியமான உண்மைகள் புரிந்தன.

     முதலாவது, வறுமை என்பது வளரும் நாடுகளுக்கு மட்டுமே உரியது என்பது தவறான மூட நம்பிக்கை என்பதை உணர்ந்தோம்.

    வட அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் கூட, சிறுபான்மையினர் மற்றும் அயல் நாடுகளில் இருந்து குடி பெயர்ந்தோர் கடுமையான வறுமையில் வாடுவது தெரிய வந்தது.

      இரண்டாவதாக, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் வறியவர்களுக்கு இடையே, நிறைய ஒற்றுமைகள் உள்ளதை உணர முடிந்தது.

       மூன்றாவதாக, சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அமெரிக்கர்கள், தங்களது நிலையினைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளதை அறிய முடிந்தது. அது மட்டுமன்றி மற்றவர்களுக்கு உதவ முன்வரும், முதலாவது நபர்களாக இவர்கள்தான் இருக்கின்றனர்.

         களப் பணி முடிந்தது. இரண்டாம் பருவமும் முடிவடையும் தருணமும் நெருங்கியது.

      என் மனதில் ஓர் ஆசை மெல்ல, மெல்ல கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

      இந்தியாவிற்குத் திரும்ப வேண்டும். உறவுகளுடன் பேசி மகிழ வேண்டும் என்ற ஆசை மெல்ல, மெல்ல வளரத் தொடங்கியது.

     மூன்று மாதங்கள் இந்தியாவில், தமிழ் நாட்டில், தருமபுரியில் அதுவும் கோட்டப் பட்டியில், என் கோட்டப் பட்டியில். நினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்கத் தொடங்கியது.

      தாய் நாடு திரும்புவது என்று முடிவு செய்துவிட்டேன்.

     உடனே ஒரு கவலையும் வந்தது. நியூயார்க்கில் தங்கியிருக்கும் வீட்டின் வாடகை நினைவிற்கு வந்தது.

      மூன்று மாதம் பிறந்த வீட்டில் இருந்தாலும், நியூயார்க் வீட்டிற்கு வாடகை கொடுத்தாக வேண்டுமே என்ற கவலை வந்தது.

     என் கவலையை உணர்ந்த வெண்டி, ஒரு அருமையான யோசனை கூறினாள்.

     அமெரிக்காவில், மிகவும் குறுகிய காலத்திற்குக் கூட, நமது வீட்டை வாடகைக்கு விடலாம் என்றார். உடனே விளம்பரம் கொடுத்தேன். சட்டத்துறை மாணவர் ஒருவர் வந்தார். அவரிடம் என் வீட்டை, மூன்று மாதங்களுக்கு மட்டும் வாடகைக்கு விட்டு விட்டு இந்தியாவிற்குப் பறந்தேன்.

     இந்தியாவில் மூன்று மாதங்கள் சென்றதே தெரியவில்லை. தமிழ் நாட்டில் இருந்த நாட்களில், ஒரு பத்து நாள் பயணமாக தாய்லாந்து சென்று வந்தேன்.

     தாய்லாந்தில் இவனுக்கு என்ன வேலை என்று எண்ணுகிறீர்களா?

    தாய்லாந்தில் பத்து நாள் மாநாடு. சமூக நீதி மற்றும் ஆளுமை என்னும் தலைப்பிலான மாநாடு. போர்டு நிறுவனம் எனக்கான அனைத்துச் செலவினங்களையும் ஏற்றுக் கொண்டது.

    பிறகென்ன பறந்தேன். மாநாட்டில் கலந்து கொண்டேன்.

    மூன்று மாத விடுமுறைக்குப் பின், ஆகஸ்ட் 23 ஆம் நாள், மீண்டும் அமெரிக்கா புறப்பட்டேன்.

     நவம்பர் மாதம் வந்தது. தேர்வும் வந்தது. கணினியிலேயே தேர்வு எழுதினேன்.

     ஒரு செய்தி தெரியுமா?, தேர்வு எழுதிய மாணவர்களிலேயே அதிக மதிப்பெண்கள் பெற்றது நான்தான்.

     

மூன்றாம் பருவம் நிறைவடையும் தருவாயில், லகுவார்டியா கம்யூனிட்டி கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் எங்களது வகுப்பினைப் பார்வையிட வந்தார்.

     வகுப்பில் நடைபெற்ற விவாதங்களைக் கண்டு மகிழந்த அப்பேராசிரியர், வகுப்பு முடிந்ததும், என்னைத் தனியாக அழைத்து, ஒரு கேள்வி கேட்டார்.

எனது கல்லூரியில், துணைப் பேராசிரியராகப் பணியாற்ற வருமாறு தங்களை அழைக்கிறேன், வருகிறீர்களா?

                                                 தொடர்ந்து பேசுவேன்

 




28 கருத்துகள்:

  1. வெற்றிவேல் முருகன் அவர்களது சாதனை மைல் கற்களும் அவர் மூலம் அறியவரும் செய்திகளும் அபாரம்...அருமை...வாழ்த்துக்கள்...

    மன்னுடை மன்றத்து ஓலை தூக்கினும்
    மன்னிய அவையிடை வல்லுறு போழ்தினும்
    தன்னுடை ஆற்றல் உணரார் இடையினும்
    தன்னைப் புகழ்தலும் தகும் புலவோர்க்கே.....
    என, என்னுடைய தமிழாசிரியர் எப்போதோ வகுப்பில் சொல்லக் கேட்ட நினைவு!

    உங்களுக்கு என் அன்பு நன்றியும், வாழ்த்துக்களும் உரித்தாகிறது அய்யா

    எஸ் வி வேணுகோபாலன்

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள் வெற்றிவேல் முருகனுக்கு. கடுமையான உழைப்பு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. நண்பர் வெற்றிவேல் முருகனின் செயல் வியப்பாக இருக்கின்றது தொடர்ந்து வருகிறேன்
    த.ம.2

    பதிலளிநீக்கு
  4. KURZWEIL 1000 மென்பொருளில் தமிழை பயன்படுத்த இயலுமா? எனது நண்பர் தமிழுக்குரிய மென்பொருளை, பார்வைதிறன் / அற்ற குன்றியவர்களுக்காக வடிவமைக்கிறார். தயவுசெய்து கேட்டுப் பகிருங்கள்

    பதிலளிநீக்கு
  5. சாதனை வரலாறு.
    தொடர்கிறேன்.
    தம (வழக்கம்போல) +1

    பதிலளிநீக்கு
  6. சுவாரசியமாக செல்கிறது.
    தொடர்கிறேன்.
    த ம +1

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துக்கள் பேராசிரியர் வெற்றி வேல் முருகன் அவர்களுக்கு,கிட்டத்தட்ட நெக்குருக வைக்கும் பதிவு,,,/

    பதிலளிநீக்கு
  8. ஒவ்வொரு முறையும் இவரைப்பற்றி வாசிக்கும் போது மேலும் மேலும் ஆச்சரியப்பட வைக்கிறார்

    பதிலளிநீக்கு
  9. கேட்டார் பிணிக்கும் தகையவாய் முருகன் பேசுகிறார்

    வேட்ப மொழியும் சொல்லால் எங்களுக்குத் தருகிறீர்கள்.

    தொடர்க இப்பணி கரந்தையாரே.

    த ம

    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. தொடர்ந்து ஆச்சரியம்....

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. #மற்றவர்களுக்கு உதவ முன்வரும், முதலாவது நபர்களாக இவர்கள்தான் இருக்கின்றனர்.#
    இங்கேயுள்ள சிறுபான்மையினரிடம் இந்த குணம் கூட இல்லையே :)

    பதிலளிநீக்கு
  12. அருமையான பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  13. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    அயரா உழைப்பினை பயன்படுத்தி அயல் நாட்டவரை அசத்தும் அன்பர் வெற்றி வேல் முருகன் அவர்களின் சாதனைகள் அற்புதமானவை. அவற்றை அழகுற நல் நடையுடன் பதிவிட்டு வரும் தங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.

    பதிலளிநீக்கு
  14. அசாத்திய உழைப்பு! சாதனை!!! வாழ்த்துகள் வெற்றிவேல் முருகன்!!!

    பதிலளிநீக்கு
  15. அவரது உழைப்பும், மன உறுதியும் ஒவ்வொரு நிலையிலும் முன்னுக்கு அவரை எடுத்துச் செல்வதை அறியமுடிகிறது.

    பதிலளிநீக்கு
  16. மெய் வருத்தக் கூலி தரும் என்னும் குறள் கருத்துக்கு வெற்றிவேல் முருகனே சாட்சி.

    பதிலளிநீக்கு
  17. கடுமையான உழைப்பும் தூரநோக்கு சிந்தனையும் வெற்றிவேல் முருகனுக்குஇன்னும் பல கதவுகள் திறக்கும் .தொடர்கின்றேன் ஐயா!

    பதிலளிநீக்கு
  18. சாதனை வரலாறு.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. வெற்றிவேல் முருகன் அவர்களின் சாதனைகள் வியக்க வைக்கின்றன. தொடருங்கள். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. இந்த தொடரின் படிக்காமல் விட்டுப் போன இந்த பதிவினை இப்போதுதான் படித்தேன். தொடர்கின்றேன்.

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு