24 அக்டோபர் 2016

விபுலாநந்தரின் அடிச்சுவடுகளில் ஓர் பயணம்



தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
    சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு

என, ஊதியம் எப்பொழுது கிடைக்கும், ஊதியக்குழு எப்பொழுது அமையும், அகவிலைப் படி எப்பொழுது உயரும், வீடு வாங்குவது எப்பொழுது, அருமையாய் ஓர் மகிழ்வுந்து வாங்குவது எப்பொழுது என, சுய நலன் ஒன்றினையே, பெரிதும் போற்றி வாழும் மனிதர்களுக்கு இடையில், இவர் ஒரு ஆலமரமாய் பரந்து, விரிந்து, உயர்ந்து, தனித்து நிற்கிறார்.


     பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து கொண்டே இருக்கிறார், நூற்றுக்கும் அதிகமான தமிழறிஞர்களை நேரில் சென்று கண்டு, செய்திகளைத் திரட்டிக் கொண்டே இருக்கிறார்.

    மக்கள் மறந்து போன, செய்திகளைக் கிளறி முத்தெடுத்து விருந்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

     மறைந்த பழம்பெரும் தமிழறிஞர்களின் இல்லங்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களது வாரிசுகளிடம் பக்குவமாய் பேசி, அவர்களின் வீட்டுப் பரண்களில், காகிதப் குப்பைகளுக்குள், புத்தகக் கட்டுகளுக்குள் ஒளிந்திருக்கும், பல ஆவணங்களை, கடிதங்களை மீட்டெடுத்து இணையத்தில் ஏற்றி உயிரூட்டி வருகிறார்.

      இவர் அரசுப் பள்ளிகளில் மட்டுமே படித்தவர். தமிழில் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர் எனத் தொடர்ந்து படித்து முனைவர் பட்டமும் பெற்றவர்.

     முனைவர் பட்டத்திற்காக இவர் ஆராய்ந்தது பாரதிதாசன் பரம்பரையை.

    அச்சக ஆற்றுப்படை, மாணவராற்றுப்படை, பாரதிதாசன் பரம்பரை என இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.

      வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கை கொண்ட சோழபுரத்தை அடுத்துள்ள, இடைக்கட்டு என்னும் சிற்றூரில் பிறந்து, இன்று உலகறிந்த ஆய்வாளராய், தமிழறிஞராய் உயர்ந்து நிற்கிறார்.


இவர்தான்,
முனைவர் மு.இளங்கோவன்

பண்ணாராய்ச்சி வித்தகர்
குடந்தை
ப.சுந்தரேசனார்
அவர்களைப் பற்றி,
ஆவணப் படம் எடுத்து,
அகிலம் முழுதும் உலாவ விட்டவர்.


தற்பொழுது,
இசைத் தமிழின் இலங்கை முகமாகிய
தவத்திரு விபுலாநந்த அடிகளாரின்
அடிச் சுவற்றின் வழி, ஓர் அற்புதப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

விபுலாநந்தர்
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவராய் அமர்ந்து,
ஒப்பிலாப் பணிகள் பல ஆற்றிய
தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் அவர்களின்
ஆருயிர் நண்பர்.

என்னை இப்பணியில் பெரிதும் ஊக்கிய, கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழவேள் திரு த.வே.உமாமகேசுவரம் பிள்ளை யவர்கள், இதன் நிறைவு பேற்றினைக் காணுமுன் பிரிந்து சென்றமையினை நினைக்கும்போது, என்னுள்ளம் பெரிதும் துயருறுகின்றது. அவர்களது அன்புக்குறிய நிலையமாகிய, இத்தமிழ்ப்பெரு மன்றத்திலும், இதனைச் சார்ந்திருக்கும் அகத்தியர் திருமடத்திலும் இருந்து, இந்நூலினை எழுதி முடித்தமை, அவர்களது பிரிவினால் எய்திய  மனத்துயரினை ஓரளவிற்கு நீக்கிவிட்டது என்று மனம் நெகிழ்ந்து எழுதி,


உலகு போற்றும்
இசைத் தமிழ் இலக்கண நூலாகிய
யாழ் நூலினை
கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கே உரிமையாக்கிய
பெரு வள்ளல்
சுவாமி விபுலாநந்த அடிகள்.

      நட்பின் பெருந்தக்க யாவுள என்னும் ஓர் உயரியச் சொற்றொடருக்கு உயிர் கொடுத்த, உன்னத மனிதர், தவத்திரு சுவாமி விபுலாநந்தரின் வாழ்வியலை, ஆவணப் படமாய் எடுத்து, இவ்வுலகை வலம் வரச் செய்ய வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன், தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் அலையாய் அலைகிறார் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள்.

      தமிழகத்தில் மட்டுமல்ல, வானூர்தி ஏறிப் பறந்து, இலங்கையிலும் தன் தேடலைத் தொடர்கிறார் இவர்.

இசைத் தமிழ் அறிஞர்
விபுலாநந்தர்
ஆவணப் படத்தின் தொடக்க விழா
கடந்த 6.10.2016 வியாழன் அன்று புதுச்சேரியில் நடைபெற்றது.


புதுச்சேரி உயர் கல்வித் துறை அமைச்சர்
மாண்புமிகு இரா.கமலக் கண்ணன் அவர்கள்
ஆவணப் படத்தினைத் தொடங்கி வைத்தார்.

       வெள்ளை நிற மல்லிகையோ எனத் தொடங்கும் விபுலாநந்தரின் பாடல், உயிர் பெற்று, உருவம் பெற்று, கண்ணுகு இனிய, செவிக்கு இனிய காணொளியாய், ஆவணப் படத்தின் ஓர் முன்னோட்டமாய் வெளிவந்துள்ளது.





பாடலும், பாடல் வரிகளின் இனிமையும், தேர்ந்த இசையும், காட்சிப் படுத்தியப் பாங்கும், நம்மைக் காணொளியில் கரைந்து போகத்தான் செய்கிறன.

      ஆவணப் படத்தின் முன்னோட்டமே இப்படியென்றால், முழு ஆவணப் படம் எப்படி இருக்கும் என்பதை எண்ணி, எண்ணி மனம், இப்பொழுதே ஏங்கத்தான் செய்கிறது.


                   நண்பர்களே இதோ அந்தக் காணொளி




தமிழறிஞர் முனைவர் மு.இளங்கோவன் அவர்களின்
பெரு முயற்சியைப் பாராட்டுவோம்

விபுலாநந்தரை மீட்டெடுக்கும்
இவர்தம் இமாலய முயற்சி
வெற்றிபெற வாழ்த்துவோம்.


வாழி தமிழர் வளர்புகழால் ஞாலமெலாம்
ஏழிசைதேர் யாழ்நூ லிசைபரப்பி – வாழியரோ
வித்தகனார் எங்கள் விபுலாநந் தப்பெயர்கொள்
அந்தனார் தாளெம் அரண்.

-    பேராசிரியர் க.வெள்ளைவாரணனார்

23 கருத்துகள்:

  1. அழகும்,அறிவுமான பதிவு....
    வாழ்த்துகள் நண்பரே

    பதிலளிநீக்கு
  2. முனைவர் திரு. மு.இளங்கோவன் அவர்களின் தமிழ்த்தொண்டு இன்னும் விரிவடையட்டும்....
    காணொளியின் பாடல் அருமை நண்பரே
    த.ம.2

    பதிலளிநீக்கு
  3. உள்ளக் கமலமதில் பூத்த மலர் வேண்டுவது ...இனிமையான பாடலை ரசித்தேன் :)

    பதிலளிநீக்கு
  4. முனைவர் மு.இளங்கோவன் அவர்களைின் இலங்கைப் பயணத்தில் ஏதோ ஒரு வகையில் உதவியவன் என்ற வகையில் அவரின் பெருந்தொண்டுக்கு எனது சிறு துளி வாழ்த்துகள் இளங்கோவனாரே.

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் நண்பரே!
    அற்புதமானப் பதிவு.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் .

    அறிய வேண்டிய ஆளுமை பற்றிய பதிவு.

    த ம

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  7. மிக அரிய முயற்சி! அறியத் தந்தீர்கள். முனைவருக்கு வாழ்த்துக்கள்!
    த ம 6

    பதிலளிநீக்கு
  8. அன்புள்ள ஜெயக்குமார்..

    வணக்கம். அன்பு இளவல் மு.இளங்கோவன் அவர்களின் தமிழ்ப்பணி உலகளாவியது. செய்துகொண்டேயிருக்கிறார். தனி மனித முயற்சி. நிறைய பொருட்செலவுகளைப் பொருட்படுத்தாமல் இயங்கிக்கொண்டேயிருக்கிறார். அவரின் பணிகள் தமிழ் வரலாற்றின் சிறப்பான பக்கங்கள். இன்னும் அவர் உயர்வார். மனம் நிறை வாழ்த்துகள். மேலும் இதுபோன்ற தமிழ்ப்பணிகளை அடையாளம் கண்டு மனமுவந்து பாராட்டும் தங்களின் தமிழுள்ளம் என்றும் நினைத்து போற்றுதலுக்குரியது. தங்களையும் மனம்நிறைந்து பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  9. முனைவர் திரு. மு.இளங்கோவன் அவர்களை டெல்லி தமிழ் சங்கத்தில் பார்த்து உரையாடினோம். தன் தாயுடன் வந்து இருந்தார். எல்லோரும் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அவர் தமிழக அரசு விருது பெற்றமைக்கு பாராட்டு விழா அது.

    அவரின் தமிழ்ப்பணி தொடர வாழ்த்துக்கள்.
    பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. பாடலும், பாடல் வரிகளின் இனிமையும், தேர்ந்த இசையும், காட்சிப் படுத்தியப் பாங்கும், நம்மைக் காணொளியில் கரைந்து போகத்தான் செய்கிறன.//

    நீங்கள் சொன்னது உண்மை பாடல் அருமை.
    இறைவன் வேண்டுவது நம் வெள்ளை உள்ளத்தைதான்.
    பாட்டு வரிகளும், பாடியவரும் இசையும் அருமை.

    பதிலளிநீக்கு
  11. உத்தமனாகிய இறைவன் வேண்டுவது வெள்ளை உள்ளத்தையே!..

    கூப்பிய கைக் காந்தளை அவன் மலரடியில் சமர்ப்பிப்போம்!..

    வண்ணமிகு தமிழ் வாழ்க!..

    பதிலளிநீக்கு
  12. உலகெங்கும் தமிழை உறைப்பாக உணர்த்திய
    விபுலாநந்தரைப் (இலங்கை, மட்டக்களப்பு) பற்றி ஆய்வு செய்ய முயலும்
    "தமிழறிஞர் முனைவர் மு.இளங்கோவன் அவர்களின்
    பெரு முயற்சியைப் பாராட்டுவோம்" என்றிருக்காமல் - அவரது
    முயற்சி வெற்றி பெற எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்! - அவரது
    முயற்சி வெற்றி பெற வாழ்த்துவோம்!

    பதிலளிநீக்கு
  13. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
    முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களின் ஆவணப்படத்தினை தங்கள் மூலம் பார்த்தவன் என்ற முறையிலும் அவரைப் பற்றிய பல செய்திகளை என்னிடம் தாங்கள் கூறிய வகையிலும் அன்னாரின் உயர்ந்த செயல்பாடுகளை நான் அறிந்திருக்கிறேன். தற்பொழுது தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் சிறிது காலம் தங்கி யாழ் நூல் படைப்பித்த உயர்ந்த உள்ளம் கொண்ட விபுலானந்த அடிகளார் பற்றிய ஆவணப் படத்தினை எடுத்து வரும் முனைவர் மு.இளங்கோவன் அய்யா அவர்களின் அயராத, தன்னலமற்ற உழைப்பினை போற்றுவது தமிழர்கள் அனைவரின் கடமையாகும்.

    பதிலளிநீக்கு
  14. முனைவர் இளங்கோவன் ஐயாவைப் பற்றியும் அவருடைய பணிகளைப் பற்றியும் அறிவேன். நல்ல தமிழறிஞர். வரலாற்று ஆர்வலர். பொக்கிஷங்களைத் தேடித் தரும் அரிய மனிதர். அவரது பணிகளைப் பகிர்ந்த வகையில் நீங்கள் எங்களுடைய மனதில் இன்னும் உயர்ந்த இடத்தில் தற்போது. வாழ்த்துகள் அவருககு. பகிர்ந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  15. விபுலாநந்தரை மீட்டெடுக்கும்
    இவர்தம் இமாலய முயற்சி
    வெற்றிபெற வாழ்த்துவோம்.//
    அருமை...
    இந்தக் காணொளியை நாளை எனது முகநூல் வலையில் ஏற்றிவிடுவீர்களா?.
    அன்று அப்பா தந்து நான் மனப் பாடம் செய்தது.
    இன்று இது மீட்டல்.
    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  16. விபுலாநந்தா கேள்விப்பட்ட பெயர். மேலும் அறியத்தந்தமைக்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு
  17. முனைவர் இளங்கோவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்/

    பதிலளிநீக்கு
  18. இனிய தீபாவளி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  19. அனைவரையும் அறிந்து கொண்டேன்.. நன்றி!..

    பதிலளிநீக்கு
  20. அருமையான அறிமுகம், முனைவரைப் பற்றியும் அவரது தமிழ்த்தொண்டு பற்றியும் அறிந்து கொண்டோம். அவரது ஆராய்ச்சிகள் விரிவடைய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு