31 அக்டோபர் 2016

வடவாறு


       முப்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஓர் விடுமுறை நாள்.

       தஞ்சாவூர், கரந்தை, வடவாற்றின் பாலத்தின், அகன்ற கைப் பிடிச் சுவற்றில் ஏறி நிற்கின்றேன்.

      சற்றே தலை குனிந்து பார்க்கின்றேன். ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு நொடி தயங்கினேன், ஒரே ஒரு நொடிதான், அடுத்த நொடி, ஆற்றிற்குள் பாய்ந்தேன்.


      தண்ணீரில் விழுந்த வேகத்தில், தண்ணீரைக் கிழித்துக் கொண்டு வெகுவேகமாய் உள்ளே, உள்ளே சென்றேன். மூக்கில் தண்ணீர் புகுந்து திக்குமுக்காடிப் போகிறேன்.

      கால் தண்ணீருக்கு அடியில் தரைப் பகுதியைத் தொடுகிறது. மெதுவாக காலைத் தரையில் உந்தி, மெல்ல மெல்ல மேலே வருகிறேன்.

     தலை மெல்ல தண்ணீர் பரப்பிற்கும் மேலே வருகிறது. வேகமாய் மூச்சு விடுகிறேன். ஒரு நொடிதான், தண்ணீர் வெகுவேகமாய் என்னை உள்ளே இழுக்கிறது.

     நீரில் மூழ்கி உள்ளே சென்ற நான், மீண்டும் காலைத் தரையில் ஊன்றி, உந்தி எழும்பி மேலே வருகிறேன், வந்த வேகத்தில் மீண்டும் உள்ளே செல்கிறேன்.

     வாய் வழியே ஆற்று நீர் வெகுவேகமாய் உள்ளே சென்று கொண்டிருக்கிறது. வாயோ அணிச்சைச் செயலாய் தண்ணீரைக் குடித்த வண்ணம் இருக்கிறது. ஆற்று நீரைக் குடிப்பதை உணர்ந்த பிறகும், தண்ணீர் குடிப்பதை நிறுத்த, வாயை மூட வேண்டும் என்ற எண்ணம் கூடத் தோன்றாமல், உடலோடு சேர்ந்து, மனமும் மரத்துப் போய்விட்டது,

     ஆற்றின் நீரைக் குடித்தபடி மேலே வருவதும், பின் மூழ்குவதுமாய் ஒரு சில நிமிடங்கள் கரைகின்றன.

         ஆற்றின் கரையில் நின்றபடி, என் நிலையினைக் கவனித்த, என் நண்பன் இராசேந்திரன், வேகமாய் ஆற்றில் குதித்து, வெகு லாவகமாய் நீத்தி, என் பின் புறம் வருகின்றான்.

        நான் தண்ணீர் மட்டத்திற்கும் மேலே, மேலெழுந்து வரும் பொழுது, என் முதுகில் வை வைத்து, எவ்வளவு வேகமாய் முடியுமோ, அவ்வளவு வேகமாய் ஒரு தள்ளு தள்ளுகிறான்.

        அவன் தள்ளிய அழுத்தமான தள்ளலில், தண்ணீர் மட்டத்தின் மேல், தலை கவிழ்ந்து, முன்புறம் கவிழ்ந்து படுத்த நிலைக்கு வந்த நான், திடீரென்று சுய நினைவை அடைந்தவனாய், இரு கைகளையும் மாற்றி மாற்றி முன் புறம் கொண்டு வந்து, மெதுவாய் நீச்சல் அடிக்கத் தொடங்குகிறேன்.

       நண்பன் இராசேந்திரன் என் பின்புறம் தொடர்ந்து வந்து, மேலும் இரு முறை என்னை முன்னோக்கித் தள்ள, வாயைத் திறந்த படி, மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க, ஆற்றின் கரையில் கால் பதித்து மெல்ல எழுந்து நிற்கின்றேன்

      உடம்பின் படபடப்பு அடங்கவே வெகு நேரமாகிறது.

      போன உயிர் திரும்பி வந்தது.

வடவாறு, சில நாட்களுக்கு முன், எடுத்தப் படம்

புதிதாய் நீச்சல் கற்றுக் கொண்ட தொடக்க காலம் அது. ஆற்றின் பாலத்தில் இருந்து குதித்துத்தான் பார்ப்போமோ என்ற ஆசையில், குதித்தபோது, வேகமாய் தண்ணீரில் விழுந்த அதிர்ச்சியில், நீச்சல் அடிக்க வேண்டும் என்பதையே முற்றாய் மறந்து போய்விட்டேன்.

      அன்று என் உயிரைக் காப்பாற்றியவன் என் நண்பன் இராசேந்திரன்.

      கால ஓட்டத்தில், என் உயிர் காத்த நண்பன் இராசேந்திரனைச் சந்தித்து, இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது.

       என்றாவது ஒரு நாள் சந்திப்போம் என்ற நம்பிக்கை மட்டும் மனதில் உறுதியாய் இருக்கிறது.

      கரந்தையின் வடவாறு, நான் ஆசிரியராய் பணியாற்றும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியை, ஒட்டி, உரசியபடிச் செல்லும் வடவாறு, ஒவ்வொரு நாளும், இந்நினைவை எனக்குள் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது,

       அன்று மூழ்கியிருந்தால், இன்று வாழ்வில் எதிர் நீச்சல் போடும் வாய்ப்பு இயலாமல் போயிருக்கும்.

      மாநிலம், நாடு என்ற எல்லைகளைக் கடந்து இன்று பெற்றிருக்கும் எண்ணற்ற இணைய வழி உறவுகளின், வலை உலகத் தோழமைகளின் பாசமிகு வார்த்தைகளைப் படிக்காமலேயே, நேசமிகுச் சொற்களைக் கேட்காமலேயே, என் நாடித் துடிப்பு ஒடுங்கியிருக்கும்.


       இராசேந்திரா, என் நண்பா, உன்னை ஒரு நாள் சந்திக்க வேண்டும், மீண்டும் ஒரு முறை நன்றி சொல்ல.  

-----


சகோதரி தேனம்மை லட்சுமணன் அவர்களின்
வலைப் பூவின்
பகுதியில் இடம் பெற்ற, என் இளமைக் கால அனுபவப் பகிர்வு.
நன்றி சகோதரியாரே

31 கருத்துகள்:

 1. அங்கேயும் படித்தேன்.

  தம +1

  பதிலளிநீக்கு
 2. பயமுறுத்தும் அனுபவம்தான். எப்படி மறக்க இயலும்?

  படத்தைப் பார்த்ததும் கமல் ஹாசனின் படம் மகா'நதி ஞாபகம் வந்துவிட்டது. அதே இடம்தானோ?

  பதிலளிநீக்கு
 3. நல்ல பதிவு .
  அனுபவம் என்பது தனி உரிமை.
  நீரில் மூழ்கிவிடுவோமோ என்று பதட்டப்பட்டு நடுநடுங்கி பின்
  உயிர்த்தெழும் அனுபவம் மறக்கக்கூடியதல்ல.
  சுமார் 10 அடி உயரத்திலிருந்து கிணற்றில் விழுந்தது .நாவல் மரத்தின் உச்சிக்கிளை முறிந்து
  கீழே கிளையொடு விழுகையில் கீழ்க்கிளையில் மாட்டிக்கொண்டு தப்பித்தது போன்ற அனுபவங்கள் எனக்கும் உண்டு.
  முதிர்ந்த பருவத்தில் அண்டார்க்டிகாவில் பனிப்பிளவில் விழுந்தது கூட இயற்கைதந்த அனுபவம் தான்.

  பதிலளிநீக்கு
 4. என் இனிய நண்பர் ஜெயக்குமார் அவர்களுக்கு,
  பதிவினைப் படித்தவுடன் எனக்கும் அந்த அருமையான மனிதரை சந்தித்து நன்றி சொல்லவேண்டும் என்ற ஆவல் அதிகரித்து விட்டது. அவர் அவ்வாறு செய்யாவிட்டால் இத்துணை அருமையான நண்பரும் அற்புதமான வழிகாட்டியும் எங்களுக்கு கிடைக்காமல் திண்டாடியிருப்போம்.

  பதிலளிநீக்கு
 5. அங்கும் படித்தேன் நண்பரே தங்களது நண்பர் திரு. இராஜேந்திரன் நி்ச்சயம் ஒருநாள் சந்திப்பார்
  எனக்கும் சிறுவயதில் நிச்சல் அடித்த நினைவுகள் வந்தது.
  த.ம.2

  பதிலளிநீக்கு
 6. அருமையான படம். எண்ணத்திற்கு வலிமையுண்டு. காலம் ஒரு பாலம். இருவரும் சந்திக்கும் நாள், எனக்கும் திருநாளே.

  பதிலளிநீக்கு
 7. விரைவில் காப்பாற்றிய நண்பர் இராசேந்திரனை கண்டறிந்து அவருடன் பேசி அதையும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 8. அங்கும் படித்தேன் ஐயா...
  உங்கள் உயிர்காத்த தோழரை விரைவில் சந்திப்பீர்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 9. எனக்கும் செத்து பிழைத்த அனுபவம் உண்டு ,நான் குதித்தது பெரிய கேணியில் !உங்களை போன்றே நானும் என்னைக் காப்ற்றிபாய நண்பன் திருஞானத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன் :)

  பதிலளிநீக்கு
 10. நெகிழ்ச்சியான எழுத்துக்கள் தங்களுடையவை..

  அதிலும் அன்பு நண்பருக்கான தேடல்.. காத்திருப்பு.. அற்புதம்!..

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
 11. நெகிழ்ச்சியான பால்ய நினைவு...

  வாழிய

  இரா.பூபாலன்
  www.raboobalan.blogspot.in

  பதிலளிநீக்கு
 12. உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. அதை உங்கள் நண்பர் ராசேந்திரன் நிரூபித்து விட்டார் தேனம்மையின் பதிவிலும் வாசித்தேன்

  பதிலளிநீக்கு
 13. திகிலுடனே படித்தேன். முடிச்சதும் தான் நிம்மதி. அதுக்கப்புறமா கவனமா இருந்திருப்பீங்க. உங்க நண்பருக்குப் பாராட்டுகள், வாழ்த்துகள். எங்கிருந்தாலும் வாழ்க!

  பதிலளிநீக்கு
 14. நாங்களும் சொல்ல வேண்டும் நன்றிகள் அந்த இராசேந்திரனுக்கு.

  பதிலளிநீக்கு
 15. அங்கு கண்டேன். இங்கும் கண்டேன். மறக்கமுடியாத அனுபவ்ம்.

  பதிலளிநீக்கு
 16. அடிக்கடி நினைவில் உருளும்
  அந்த நிகழ்வை
  அந்த இராசேந்திரனை
  நினைவூட்டிய பதிவு இது!

  பதிலளிநீக்கு
 17. கனமான சில பட்டறிவுகள்தான் நம்முள்
  திடமான திறன்களை வளர்த்தெடுக்கும்.
  வாய்ப்பளித்த நண்பரை விரைவில்
  சந்திக்கும வாய்ப்பு வரும்.

  பதிலளிநீக்கு
 18. சிறப்பு!!

  எனக்கும் இந்த அனுபவம் உண்டு ஆனால் கடலில் இதுல எனக்கு நீச்சலும் தெரியாது
  நான் இருந்தது ஒரு சின்ன தீவில் அங்கு எதாவது அவசரம் என்றால் ஒரு சின்ன கப்பல்-லில் (ferry) மருத்துவர் ஒவ்வொரு தீவாக வலம் வருவாரு அவரை பொய் பாக்க வேண்டிவரும்.

  என் நண்பருக்கு உடல் நலக்குறைவு காரணமாக அவரை அழைத்துக்கொண்டு ferry நிற்கும் இடத்திற்கு போனேன். நண்பரை மெதுவாக கப்பலில் ஏற்றி விட்டு நான் ஏறும்போது கப்பலுக்கும் கரைக்கும் இடையில் விழுந்துட்டேன். அது ஒரு சின்ன கப்பல் வந்து போற இடம்தான் ஆனாலும் 15m ஆழம் உள்ளது.

  நல்ல வேலை மாலுமி சமயோசிதனமாக இயந்திரத்தின் துடிப்பை நிறுத்தினார் இல்லையென்றால் அன்றே முடிந்திருக்கும் என் ஜீவன்
  அதோடு ஒரு நீளமான கம்பியை இறக்கி அதனை பிடித்து நான் மேலே வருவதற்கு உதவி செய்தார்.
  மேல வந்த பிறகும் ஒரு வாரத்திற்கு கமல் மாதிரி கடல் என்றால் பயம் , கப்பல் என்றாலும் பயம் னு ஒரே பயமாவே இருந்தது.

  அதனால உங்களோட எண்ணவோட்டம் என்னவாக இருந்திருக்கும்னு என்னால உணர முடியுது.

  உங்களை காப்பாற்றிய நண்பரை நீங்கள் கூடிய விரைவில் சந்திக்க இறைவனை வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
 19. உயிர் காத்த நண்பரை நீங்கள் சந்தித்து நன்றி சொல்லும் போது மறக்காமல் நாங்களும் நன்றி சொன்னதாகச் சொல்லுங்கள். மறக்க முடியாத மலரும் நினைவுகள்!

  பதிலளிநீக்கு
 20. திகில் அனுபவம் ஆண்டவனுக்கும் நண்பருக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 21. உணர்வுபூர்வமான, உள்ளத்தை உலுக்கும் பதிவு.

  உங்களுக்கு தைரியம் கொஞ்சம் கூடுதலாக இருப்பதால்தானோ என்னவோ,இலக்கிய கடலிலும் லாவகமாக நீந்தி வாசகர்களின் ஆழ் மனதில் வட்டமடிக்கின்றீர்கள்.

  தங்கள் நண்பர் ராஜேந்திரன் கூடிய விரைவில் உங்களை சந்திக்கவேண்டும் என்பது என் அவா.

  நன்றி

  கோ


  பதிலளிநீக்கு
 22. வடவாறு பொன்னியின் செல்வனில் படித்தக ஞாபகம்

  பதிலளிநீக்கு
 23. கட்டாயம் உங்கள் நண்பனை சந்திப்பீர்கள்

  பதிலளிநீக்கு
 24. தங்கள்ளுக்கும் தங்கள் நிணைவுகள் அழிவதில்லை அய்யா....

  பதிலளிநீக்கு
 25. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 26. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 27. தங்கள் நினைவுகள் அழிவதில்லை அய்யா....

  பதிலளிநீக்கு
 28. மறக்க முடியாத நினைவுகள்தான்! தங்கள் ஆருயிர்க்காத்த நண்பரைச் சந்திப்பீர்கள் நண்பரே!

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு