ஆனால், பன்னிரெண்டாம் வகுப்போடு, இவருக்கும்,
படிப்புக்குமான பந்தம் முடிந்து போனது.
காரணம் சூழல்.
குடும்பச் சூழல்.
படித்தது போதும், வேலைக்குப் போ, என வறுமை இவரை
விரட்டியது, பள்ளியை விட்டுத் துரத்தியது.
வேலைக்குப் போனார்.
உழைத்தார்
வறுமையை விரட்டினார்.
பள்ளிக்குத்தான் செல்லவில்லையே தவிர, இவர் ஒரு
போதும் படிப்பதை நிறுத்தவேயில்லை.
எல்லாப் பிரச்சினைகளைத் தாண்டியும்
எது என்னை மூச்சுவிடச் செய்து
கொண்டிருக்கிறது
எந்த சந்தேகமும் வேண்டாம்
வாசிப்பு மட்டுமே என்னை வசிக்க
வைத்திருக்கிறது.
வாசிப்பை நேசிப்பவர், ஏடெடுத்து எழுதத் தொடங்கினால்,
வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை இனிக்கத்தானே செய்யும்.
ஒரு ரோஜாக்
குவியலாய்
தாதி
தந்த நொடிகள்
தேவ கணம்
……..
மடக்கியிருந்த
சிறுவிரல்
நீவி
சுண்டுவிரல்
கொடுக்க
பற்றிக்
கொண்ட
பரவசம்
மோன நிலை
……
முதல் மழலை.
தாயின் கருவறையில் இருந்து வெளிவந்து, இவர்தம்
குவிந்த கரங்களில், சுருண்டு படுத்து, கண் திறந்து, சுண்டு விரல் பற்றி, மகிழ்ந்த நிமிடங்கள்,
கனவுலகில், நம்மைச் சஞ்சரிக்கச் செய்யும் வல்லமை வாய்ந்தவை.
பல்லாண்டுகள் கடும் தவம் புரிந்து,
கடவுளை கண்முன் வரவழைத்து, வேண்டும் வரங்களைப் பெற்ற தேவர்கள், அசுரர்கள் பற்றிப் பல
கதைகளைப் படித்திருப்போம்.
ஆனால், இறைவனே இவர் முன் தோன்றி, வரம் ஒன்று
கேட்ட கவிதையினைப் படித்தால் வியந்து போவீர்கள்.
கடவுள்
என் வீட்டுக்கு
காலையிலேயே
வந்துவிட்டார்.
இன்று முழுவதும்
உன்னோடிருக்கிறேன்
சரியா? என்றார்.
வேலையிருக்கிறது போகிறேனென்றேன்
நானும் என்றவன்
வண்டியில் அமர்ந்து கொண்டான்.
ஆயிரம் சந்தேகங்கள் கேட்டிருப்பான்
கூகுளில் பாதியும் – படித்ததில்
பாதியும் தெரிந்ததைச் சொன்னேன்.
துணிக் கடைகளில் ஏனித்தனை கூட்டம்?
அம்மணம் மறைக்க ….
வெடிகள் வெடிப்பது அத்தனை அவசியமா…..?
எமனின் வேலையை கொஞ்சம் குறைக்க.
பேருந்தில் ஏனடா இத்தனை கூட்டம்?
நாட்டில் நதிகள் மட்டும்தான் ஓடாது.
மனிதனைத்தானே படைத்தேன்
இவையெல்லாம் யாராலென்றான்
நாங்கள் தானென்றேன்
முழுவதுமாய் உன்னோடிருந்திருக்கிறேன்
வரமொன்று தா என்றான்
கேள் என்றேன்
அலைபேசி வேண்டுகிறான்
அவனை வெறுங்கையோடே
அனுப்பிவிட்டேன்.
வேலைக்குப் போகும் தற்கால பெண்களின்
நிலை பற்றி, முகத்தில் அறைந்தாற் போல், எடுத்து வைத்து, அவ்வரிகளிலேயே, நம்மை நெடுநேரம்
நிற்க வைக்கிறார்.
ஒற்றை
நாள்
தற்செயல்
விடுப்பவளுக்கு..
கண்ணாடி
பார்த்து
நிறம்
மாறிய முடி
பார்த்து
நெட்டுயிர்க்க…..
பள்ளிப்
பிள்ளைகள் வருவாரே
பலகாரம்
ஏதேனும் செய்ய ….
தள்ளிப்போன
தாய்வீடு பேச….
ஆயுளின்
நாள் தேடும்
வேலையுண்டு
அவளுக்கு…
இந்த
விடுப்பும் கூட
தற் செயல்
விடுப்புதான்…..
வளர்ச்சி எழும் பெயரில், நாம்
மறந்துபோன, நம்மையும் அறியாமல் துறந்தே போன, செயல்களை, சிறு குறு வரிகளில், குறுவாளாய்
எடுத்து வீசுகிறார்.
பால்கார
வீடென அறியப்படும் ….
மத்துகள் சுழல
மாடுகள் உரச
குழலூதும்
கண்ணன்
பானையுருட்டி
படத்திலிருப்பான்
ஊதுபத்திப் புகையில் …..
சீம்பால்
கிடைக்குமென
சிறுவர்கள்
கூட்டமே
காத்திருக்கும் …..
எப்போதும்
நெய்யுருக்கும்
முறுகலில்
காற்றும் கனிந்திருக்கும் …
தலைமுறைகள்
மாற்றத்தில்
மாடுகளும்
மனிதர்களும்
வெளியேறிப் போனார்கள்…
இழுத்துக் கிடந்த
கிழவி
புதைத்து
இரண்டாம் நாள் …
பத்திரமாய்
எடுத்து வைக்கிறார்கள்
பாக்கெட் பால்…
அறிவியல் வளர்ந்து பயனென்ன, மக்கள்
வளரவில்லையே, பொது வெளியில் ஒழுக்கம் தழைக்கவில்லையே, என்னும் ஆதங்கத்தையும் வேதனையோடு
எடுத்து முன் வைக்கிறார்.
சற்றே
வளைந்த
நான்கு
சக்கர வாகனமொன்றில்
குவிந்து
கிடக்கிறது
நீர்
தெளித்த சத்துக்குடி குறுமலை.
வியர்வை
காய்ந்த
ஆடைகளுடன்
பிழிந்து
நிரப்பி
கையளிக்கிறாள்…
தாகத்துக்குச்
சிலரும்…
மோகத்துக்குச்
சிலரும்…
மொய்த்துக்
கிடக்கிறது
பெரு
வனத்துக்கான விதைகள் ….
நண்பர்களே, இனிப்பையும், இவ்வுலக அவலங்களையும்,
ஒன்றாய் குழைத்து, எழுத்துக்களால் கோர்த்து, கவிதையாய் வார்த்தெடுத்து, பக்கத்துக்குப்
பக்கம் விருந்தளிக்கும், இக் கவி யார் தெரியுமா?
நூற்றுக் கணக்கான கவிதைகள், இவர் விரல் நுனியில் காத்திருக்க, சிலவற்றை மட்டும்,
இரு நூல்களாய் இறக்கி வைத்திருக்கிறார்.
நாமும் நமது பிள்ளைகளின் பிறந்த நாளுக்கு, ஆண்டு
தோறும், ஏதாவது பரிசுகளை வழங்கிக் கொண்டேதான் இருக்கிறோம்.
ஆனால், அவையெல்லாம், நம் பணத்தால் பெறுவது.
ஆனால் இவரோ, தன் மகளுக்கு, அதிலும் சின்னவளுக்கு,
தன் எழுத்தை ஒன்று சேர்த்து, அதில் தன் பாசத்தை, நேசத்தை சேர்த்துக் குழைத்து, நூலாக்கி
பரிசளித்திருக்கிறார்.
சின்னவள்
தந்தை எழுதியதை, தாயின் முன்னிலையில், சின்னவளே
வெளியிட, அவரது அக்காள், முதல் பிரதியினைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
தந்தையின் மனம் குளிர, தாயின் அகம் மலர, பிள்ளைகள்
குதூகலிக்க, வீட்டிற்குள்ளேய, ஒரு புத்தக வெளியீட்டு விழா அரங்கேறியிருக்கிறது.
என்னைக்
கேட்டால், புத்தக வெளியீட்டு விழாக்களிலேயே, மிகச் சிறந்த புத்தக வெளியீட்டு விழா,
இதுதான் என்பேன்.
இவரது இரண்டாவது நூல் என்ன தெரியுமா?
ஆயிரமாயிரமாய், இலட்ச இலட்சமாய்,
கோடிக் கோடியாய் சம்பாதித்து, நட்சத்திர விடுதியில், குளிரூட்டப்பட்ட அறையில், சொகுசு
இருக்கையில் அமர்ந்து, பணியாளர் பணிவோடு பரிமாற, தவறியும் விரல் படாமல், முள் முனையில்
கொத்தி எடுத்து, அமிர்தத்தையே உண்டாலும், தாயின் அன்பு கலந்த, தாயின் வேர்வையில் நனைந்த,
ஒரு பிடி, ஒரே ஒரு பிடி, பழையச் சோற்றுக்கு ஈடாகுமா.
வார்த்தைகளாலேயே விருந்து படைக்கிறார் இவர்.
ஒரு பட்ட மிளகாய்
உப்புச் சட்டி
கழுவிய தண்ணீர் …..
ஒடிந்து விழுந்த
முருங்கையின் கீரையில் ….
என் பட்டினி
கொன்றவளே …
எப்போதும்
பசியள்ளித்
தின்றவளே….
இக்கவிதையினை முழுவதுமாய் எடுத்து
வைத்துப் பரிமாற மனமில்லை, நூலெடுத்துப் படித்துப் பாருங்கள், என் உணர்வு உங்களையும்
வந்தடையும். நிச்சயமாய் சில நிமிடம், அடுத்த பக்கத்தைப் புரட்ட கை எழாமல், அமைதியாய்
அமர்ந்திருப்பீர்.
ஒரு பட்டமிளகாயும், கொஞ்சம் உப்பும்
கவிஞரின் இரண்டாவது நூல்.
இந்நூலினையும், நான்கு சுவர்களுக்குள்
வெளியிட்டிருக்கிறார்.
கவிஞர் மீரா. செல்வக்குமார்.
நான்
வார்த்தைகளின் கஞ்சன்
என் எழுத்துக்கள்
என் விரல்வழிப்
பிரசவங்கள்
….
கவருமாயின்
கரம்
குலுக்குங்கள்
புரியவில்லை
எனில்
ஒரு புன்னகையோடு
போய்
விடுங்கள் …
இல்லை
இது
கவிதைதானென்றால்….
சொல்லிவிட்டுப்
போங்கள்….
சொல்லிவிட்டுப் போகத்தான் வந்திருக்கிறேன்
நண்பரே.
அடுத்த நூல் வெளியீட்டு விழாவிற்குப், புதுகையின்
எல்லை தாண்டி, எங்களையும் அழையுங்கள்.
ஒரு பட்டமிளகாயும், கொஞ்சம் உப்பும்
காலைப் பொழுதில், பழைய சாதத்தில், சிறிது உப்பிட்டு,
மோர் கலந்து பிசைந்து, ஒரு கைப் பிடி, அகழ்ந்து எடுத்து, வாயில் இட்டு, மெல்ல மெல்ல
மென்று சுவைத்தபடியே, பட்ட மிளகாயை ஒரு கடி, கடித்துப் பாருங்களேன், சுள்ளென்று உறைக்கும்.
கவிஞரின் நூலும் அப்படித்தான், பக்கத்துக்குப்
பக்கம், சுள்ளென்று சுவை கூட்டுகிறது.
ஒரு பட்டமிளகாயும் கொஞ்சம் உப்பும்.
வாழ்த்துக்கள் நண்பரே.