22 மே 2017

சோலச்சி     மகாகவி பாரதியின் வாழ்வு பற்றியும், பாரதியின் எழுச்சி மிகு கவிதைகள் பற்றியும், பள்ளியின் தலைமையாசிரியர் திரு இக்னேசியஸ், உள்ளத்து உணர்வுகளைக் கிளர்ந்தெழச் செய்யும் வகையில், பாடம் நடத்தியதை, மனதில் அசை போட்டவாறே, வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தான், அந்த ஐந்தாம் வகுப்பு மாணவன்.

     வீட்டிற்குள் நுழைந்தான்.

      வீட்டுச் சுவற்றில், அடுப்பின் கரித் துண்டினால், அண்ணன் ஏதோ எழுதிக் கொண்டிருந்தான்.

அன்பே ஆருயிரே
அழகின் வடிவே
அன்னக் கிளியே
அம்மா நீ எங்கே ……

     தாயைப் பிரிந்து, தாத்தா வீட்டில் படிப்பு.

     வறுமையினைப் பகிர்ந்து கொள்ளப், பெயரன்களைத் தன் வீட்டிற்கு அழைத்துப் படிக்க வைக்கும், பாசக்காரத் தாத்தா.

     தாயைப் பிரிந்த ஏக்கத்தினை, வீட்டுச் சுவற்றில் இறக்கி வைத்திருந்தான் அண்ணன்.

     இது என்ன?

     தம்பி கேட்டான்.

     இதுதான் கவிதை என்றான் அண்ணன்.

     பாரதியும் இப்படித்தான் எழுதியிருப்பாரோ?

     நாமும் எழுதினால் என்ன?

     ஐந்தாம் வகுப்பிலேயே, அந்தச் சிறுவனுக்குக் கவிபாடும் ஆசை, உள்ளத்தில் துளிர்க்கத் தொடங்கியது.

     மெல்ல மெல்லத் தழைக்கவும் தொடங்கியது.

     இரண்டு, மூன்று கவிதைகளை எழுதி, கலைந்த முடியோடும், மூக்குச் சளியோடும், தலைமையாசிரியரிடம் காட்டினான்.

     கிழிந்த சட்டையோடும், ஓட்டை டவுசரோடும், சிரித்த முகத்துடன், அம்முகமெங்கும், பெரும் எதிர்பார்ப்போடும், நின்ற அந்தச் சிறுவனை அள்ளி அணைத்துக் கொண்டார்.

     சபாஷ்

     வாயார, மனதார வாழ்த்தினார்.

     அடுத்த நாளே, கட்டம் போட்ட சட்டையும், ஊதா கலர் டவுசரும் கொண்டு வந்து கொடுத்தார்.

     வேறென்ன வேண்டும்.

     மகிழ்வோடு படித்தான்.,

     கவியோடு வளர்ந்தான்.

     ஆண்டுதோறும் வகுப்புகள் உயர்ந்த போதும், வசதி மட்டும் வளரவே இல்லை.

      வறுமை, பின்னோக்கி இழுத்தது.

      படிக்கவிடாமல் தடுத்தது.

      இறைவா என்னைப் படிக்க விடு என்று மன்றாடி நின்றபோது, தெய்வம் வரவில்லை.

      தேவதையொன்று வந்தது.

      ஆசிரியையின் வடிவெடுத்து, தேவதையொன்று எதிரில் வந்து நின்றது.

      நீ படி என்று ஆசீர்வதித்தது.

      மூன்றாண்டுகள் முழுச் செலவினையும் ஏற்றுக் கொண்டது.

      அச்சிறுவன், இன்று ஒரு ஆசிரியர்.

      அதற்கும் மேலே, கவிஞர்.

வீட்டு வேலையும்
விருந்தினர்
உபசரிப்பும்
காத்திருக்கிறது ……………

விளம்பர
இடைவேளைக்காக…..

     ஆறே வரிகளில், இன்றைய இல்லங்களின் அவல நிலையினைத் துல்லியமாய்ப் படம் பிடித்துக் காட்டுகிறார் இந்தக் கவிஞர்.

நன்றாகவே
உயர்ந்து இருக்கிறது
இந்தியா ….

விலைவாசியில்.

      சிறு வயது முதலே, நாள்தோறும் நேரில் சந்தித்தும், இறங்கி வர மறுத்து, தன்னை மட்டும், எழ விடாமல் பார்த்துக் கொண்ட, விலைவாசியை எப்படி மறப்பார் இந்தக் கவிஞர்.

என் தாய்த் திருநாட்டை
தேடியபடி நான்…..
அலைந்து திரிந்தும்
அகப்படவில்லை.
துவண்டு விடாமல் தொடங்கினேன்
தேடலை

கழிவுகளைச் சுமந்தும் –பிறர்
காரி உமிழ்வதை ஏற்றும்
கண்ணியத்தோடு
நடந்து கொள்ளும்
புண்ணிய நதியாம்
கூவத்தை வணங்கியபடி

……………………………………………..
……………………………………………..

ஈக்களும் வண்டுகளும்
சூறையாட
தலைவிரி கோலத்தில்
கீறல் பட்ட மேனியுடன்
சுருண்டு கிடந்தாள்
ஒட்டத் துணியை
கெட்டியாய் பிடித்தபடி
ஒருத்தி …….

…………………………………….
…………………………………..

புரிந்துவிட்டது எனக்கு
என் தாய்த்திருநாடே
நீயா

கால்களில்
மண்டியிட்டேன்

       படிக்கப் படிக்க நம்மைப் பதறச் செய்து, உலகின் உண்மை முகத்தினைத் திரை விலக்கிக் காட்டுகிறார் இந்தக் கவிஞர்.

குளம் இருக்க
வாய்க்காலைக் காணோம்
அழகாய்
விளைந்து இருக்கு
வயல் தோறும் வீடுகள்….

மதிப்பு இல்லை
5,10,20,25 பைசாக்களுக்கு
மட்டுமல்ல
மனித வாழ்க்கையும்தான்.

எல்லாம் மாறிவிட்டது
இதுமட்டும்
மாற மறுக்கிறது
சாதி ………

     இன்றைய வாழ்வில் யதார்த்தத்தை, கவிதைகளாய், பெரும் ஈட்டிகளாய் தீட்டி, நம் மனதைக் கீறிப் பார்ப்பதில் வல்லவர், இந்தக் கவிஞர்.

      நாம் தினமும் கடந்து போகும் பாதையில், கவனிக்கத் தவறிய காட்சிகளை, தன் கவிதை வரிகளால் படம் பிடித்து, நம்மை வியக்க வைக்கும், இந்தக் கவிஞர், வாழ்வெனும் ஏணியில், தன்னை ஏற்றி விட்ட, அந்த தேவதையை, ஒரு நாளும் மறந்தாரில்லை.

     நூலின் தொடக்கமே, அந்த தேவதைக்குத்தான்.

பத்து தொடங்கி பனிரெண்டாம் வகுப்பு
என மூன்றாண்டு செலவுகள்
புனிதத் தாயினைச் சேரும்.

உணவு முதற்கொண்டு
உலை வைக்கப் பாத்திரம்
தட்டு முதல் என் தாய்க்கு
சேலை வரை

   மூன்றாண்டுகள் முழுதாய், தாயாய் காத்து, தந்தையாய் வளர்த்து, ஆசானாய் அறிவூட்டி, நண்பனாய் நல் வழிகாட்டிய, தேவதைக்கு நன்றி சொல்ல, இந்த வாழ்வு முழுதும் போதாது என்பது புரிந்து போனது.

    யோசித்தார்.

    தானே, தேவதையாய் மாறிப்போனார்.

    பெற்றோர் இட்ட பெயர், பதிவேட்டில் இருக்கட்டும்.

    இனி, என் கவி ஏட்டில், தேவதையின் பெயரே என்றென்றும் நிலைக்கட்டும்.

சோலச்சி

தேவதையின் பெயர்
கவிஞரின் பெயராய் மாறித்தான் போனது.


காட்டு நெறிஞ்சி

சோலச்சியின் இரண்டாவது நூல்
தேவதையின் பெயர் தாங்கி நிற்கும் இரண்டாவது நூல்.

     கவிஞரின் ஒவ்வொரு எழுத்தும், ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு மூச்சும், ஒவ்வொரு துடிப்பும், இதயத் துடிப்பும்.
சோலச்சி   சோலச்சி   சோலச்சி
எனத் தேவதையின் நற்பெயரை துடிப்பாய், நாடித் துடிப்பாய் முன்னெடுத்துச் செல்கிறது.

வாழ்த்துக்கள் கவிஞரே
தங்கள் கவிதைக்கும்
நேரம் மறவா, பாச உள்ளத்திற்கும்

வாழ்த்துக்கள் நண்பரே.


31 கருத்துகள்:

 1. நண்பர் திரு. சோலச்சி அவர்கள் மேலும் பல காவியங்கள் படைத்திட வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. கரந்தையாருக்கும் கவிஞர் சோலச்சீ அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. இனிய கவிதை நூல் ஒன்றினை அறிமுகம் செய்தமைக்கு மகிழ்ச்சி....

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 4. mika arumai. vaazththukkaL iruvarukkum. Solachi peyar superb :)

  பதிலளிநீக்கு
 5. திரு. சோலச்சி சிறப்பே தனி... இனிய நண்பருக்கு வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துகள். கவிஞர் சோலச்சிக்கும் கவிஞரை சிறப்பித்த ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கும்.

  பதிலளிநீக்கு
 7. யாரந்தக் கவிஞர் என கடசிவரை சொல்லவே இல்லையே.. மிக நன்றாக இருக்கு படிக்க. சோலச்சிக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
  வோட்டும் போட்டுவிட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விடிய விடிய கதை கேட்டு ,சீதைக்கு ராமன் சித்தப்பன் என்றானாம் :)
   இது உங்களுக்கே நல்லாயிருக்கா அதிரா :)

   நீக்கு
 8. அருமையான வரிகள். படிக்கத் தூண்டுகிறது. பெயர்க்காரணம் நெகிழ்ச்சி.

  தம +1

  பதிலளிநீக்கு
 9. கவிஞர் சோலச்சி அவர்களின்
  பெயர் காரணம் இன்றுதான் தெரிந்து கொண்டேன்
  எடுத்துக்காட்டாய் சொல்லிய கவிதைகளும்
  அவர் குறித்த வாழ்க்கைக் குறிப்புகளைச்
  சொல்லிச் சென்ற விதமும் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 10. கவிஞருக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 11. சோலச்சி அவர்களை புதுக்கோட்டைப் பதிவர் விழாவில் சந்தித்திருக்கிறோம்.

  அழகான வரிகள்!!! பெயர்க்காரணம் மனதை நெகிழ்த்திவிட்டது!!

  வாழ்த்துகள் சோலச்சி, மற்றும் தங்களுக்கும் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 12. சிறந்தவர்களை அவர்கள் எழுத்துகளை படம் பிடித்துக் காட்டும் உங்களுக்குப் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 13. அருமையான கவிதை நூலைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி. சோலச்சிக்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 14. .வாழ்க..வளர்க..அன்புடன் ஸ்ரீநாத். ஒரு மூத்த சாமான்ய எழுத்தாளன்.

  பதிலளிநீக்கு
 15. சோலச்சியின் கவிதைகள் நல் முத்துக்கள்.
  நன்றி
  .

  பதிலளிநீக்கு
 16. சோலச்சி பெயர் வித்தியாசமா இருக்கேன்னு நினைப்பதுண்டு ,உங்கள் மூலம் விளக்கம் கிடைத்தது !கவிஞருக்கு... இல்லை இல்லை ...கவிமதிக்கு வாழ்த்துகள் :)

  பதிலளிநீக்கு
 17. இனிய நூல் அறிமுகம் செய்ததுக்கு நன்றிகள் கவிஞர் சோலச்சிக்கு வாழ்த்துக்கள் இன்னும் பல கவிநூல்கள் வெளிவர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 18. வீட்டு வேலையும்
  விருந்தினர்
  உபசரிப்பும்
  காத்திருக்கிறது ……………

  விளம்பர
  இடைவேளைக்காக…..
  இந்த ஒரு கவிதை போதும் சோலச்சியின் கவிபுனை ஆற்றலை வெளிப்படுத்த...

  பதிலளிநீக்கு
 19. சோலச்சிக்கு வாழ்த்துகள் ! சிறு வயதிலிருந்து கவிதையாய் வளர்ந்தற்கு..நானோ எனது ஐம்பது வயதிற்குபின்தான் வலைப்பூவில் எழுதத்துவங்கி..ஏதோ கிறுக்கி கொண்டு இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 20. சோலச்சிக்கு வாழ்த்துகள் ! சிறு வயதிலிருந்து கவிதையாய் வளர்ந்தற்கு..நானோ எனது ஐம்பது வயதிற்குபின்தான் வலைப்பூவில் எழுதத்துவங்கி..ஏதோ கிறுக்கி கொண்டு இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் பாசத்திற்குரிய அருமை நண்பர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கும் தோழர்கள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து மகிழ்கின்றேன்
   நட்பின் வழியில்
   சோலச்சி புதுக்கோட்டை

   நீக்கு
 21. "குளம் இருக்க
  வாய்க்காலைக் காணோம்
  அழகாய்
  விளைந்து இருக்கு
  வயல் தோறும் வீடுகள்….

  மதிப்பு இல்லை
  5,10,20,25 பைசாக்களுக்கு
  மட்டுமல்ல
  மனித வாழ்க்கையும்தான்.

  எல்லாம் மாறிவிட்டது
  இதுமட்டும்
  மாற மறுக்கிறது
  சாதி………"

  என்ற அடிகள்
  இலங்கைக்கும் இந்தியாவுக்குமல்ல
  உலக மாற்றைத்தைத் தேடும்
  எல்லா நாடுகளுக்கும் அடிக்கிறதே
  மாறியது மாறாததும் எதுவென்றே!

  கவிஞர் சோலச்சீ அவர்களுக்குப் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 22. வீட்டு வேலையும்
  விருந்தினர்
  உபசரிப்பும்
  காத்திருக்கிறது ……………

  விளம்பர
  இடைவேளைக்காக…..
  அருமையான வரிகள்

  பதிலளிநீக்கு
 23. கவிஞருக்கு வாழ்த்துகள். அறிமுகத்துக்கு நன்றி !!

  பதிலளிநீக்கு
 24. அறியத் தந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 25. கவிஞரை பாராட்ட சொற்களைத் தேடுகிறேன்! அவரை அறிமுகப் படித்திய உங்களை வாழ்த்துகிறேன்

  பதிலளிநீக்கு
 26. வாழ்த்துகள் சகோதரே!

  பதிலளிநீக்கு
 27. பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்.
  இங்கு வாருங்கள் புது வலை
  https://kovaikkothai.wordpress.com/

  பதிலளிநீக்கு

அறிவை விரிவு செய், அகண்ட மாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை, அணைந்து கொள், உன்னைச் சங்கம மாக்கு, மானிட சமுத்திரம் நானென்று கூவு