24 ஜூன் 2017

தலை நிமிர்ந்த தமிழ்

சுவாமி விபுலாநந்த அடிகளார் ஆவணப் படம்
முன்னோட்டம்


தலை நிமிர்ந்த தமிழ்


     ஆண்டு 1872.

     ஆதீனத்தின் உணவுக் கூடம்.

     பிற்பகல் மணி 1.00

     பணியாளர்கள் பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

     இன்னும் சிறிது நேரத்தில் ஆதீனம் வந்து விடுவார்.


     உணவுப் பதார்த்தங்களை ஒவ்வொன்றாய் சரிபார்த்து, பரிமாறுவதற்கு தயாராக எடுத்து வைக்கிறார்கள்.

      இதோ ஆதீனமும் வந்து விட்டார்.

      பணியாளர்கள் வணங்கி வரவேற்கின்றனர்.

      ஆதீனம் மெல்ல தன் இருக்கையில் அமர்கிறார்.

      ஒரு பணியாளர், பணிவோடு வாழை இலையினை விரித்து வைத்து, தண்ணீர் தெளிக்கிறார்.

       சற்று பொறுங்கள்

        ஆதீனம் மெதுவாய் ஆணையிட, இலை போட்டவரின் முகத்தில் கலவரக் குறி தோன்றுகிறது.

         ஏதேனும் தவறு செய்துவிட்டோமோ?

         காரணம் புரியாமல் பதறுகிறார்.

        பணியாளரின் முகக் குறிப்பை உணர்ந்த ஆதீனம், மெல்லச் சிரிக்கிறார்.

        நம் ஆதீனத்தில் மாணவர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருக்கும், ஆசிரியர் வந்தவுடன் சாப்பிடுகிறேன். அதுவரை காத்திருக்கிறேன்.

        அருகே நின்றிருந்த பணியாளர்களின் முகத்தில் தெரிந்த பதற்றம், மெல்ல மெல்ல வியப்பாக மாறுகிறது.

        ஆசிரியருக்காக, ஆதீனம் காத்திருப்பதா? அப்படியானால் ஆசிரியர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்.

         வாய் மூடி வாசலைப் பார்க்கிறார்கள்.

         இதோ ஆசிரியர் வருகிறார்.

         ஒரு யானை மெல்ல, மெல்ல அசைந்து அசைந்து நடந்து வருவதைப் போல ஆசிரியர் வருகிறார்.

         நன்கு வளர்ச்சியடைந்த உயரமான தோற்றம்

        இளம் தொந்தி

        முழங்கால் வரை நீண்ட கைகள்

        பரந்த நெற்றி

        மார்பிலே ருத்திராட்ச கண்டி

        இடையில் தூய வெள்ளை ஆடை

        ஆழ்ந்து பரந்த சமுத்திரம் அலையடங்கி நிற்பது போன்ற, அமைதியான முகம்.

         குளிர்ந்த பார்வை

        உணவுக் கூடத்தின் வாயிலருகே நிற்கிறார்.

        உயர்ந்த உருவம், நிலை வாயிலோ சிறியது. மெல்லக் குனிந்து, உள்ளே நுழைகிறார்.

         ஆசிரியரின் வரவை மகிழ்வுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த, ஆதீனத்தின் மலர்ந்த முகத்தில், திடீரென சிந்தனையின் ரேகைகள் படருகின்றன.

          ஆதீனத்தின் மனதில் தீவிரமாய் ஒரு எண்ணம், ஒரு வருத்தம் நுழைந்து விட்டதை, அவர்தம் முகம், மின்னல் போல், ஒரு நொடி வெளிப்படுத்தி மறைகிறது.

        எண்ணவோட்டத்தை வெளிக் காட்டாமல், பிறர் அறியாமல் மறைத்தபடி புன்னகையோடு, ஆசிரியரை வரவேற்று அமர வைக்கிறார்.

         மதிய உணவு முடிந்தவுடன், ஆசிரியரை அனுப்பி வைத்துவிட்டு, ஆதீனம் அமர்நதே இருக்கிறார்.

        குழம்பிப்போன பணியாளர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

         ஆதீனத்தின் முகத்தில் மீண்டும் சிந்தனை ரேகைகள்.

         உருவத்தால் மட்டமல்ல, உள்ளத்தாலும், தமிழ் உள்ளத்தாலும், உயர்ந்து நிற்கும் ஆசிரியர், தலை குனியலாமா?

         தம்மிடம் உள்ள வற்றா தமிழ் வளத்தை, மாணவர்களுக்கு வாரி  வாரி வழங்கும் பெரு வள்ளல் தலை குனியலாமா?

         இவருக்கு முன்னும் யாரும் இல்லை, பின்னும் யாரும் வரப்போவதில்லை எனப் போற்றத் தக்க வகையில், ஆயிரமாயிரம் பாடல்களை இயற்றிய மகாகவி, தலை குனியலாமா?

        வித்துவான்களுக்கு எல்லாம் பெரிய வித்துவான், மகா வித்துவானின் தலை, உணவுக் கூடத்தில கூட தாழக் கூடாது.

         கட்டிடப் பராமரிப்பாளரை உடனே அழைத்து வாருங்கள்.

         ஆதீனத்தின் உத்தரவு கேட்டு, நாலாபுறமும் பணியாளர்கள் சிதறி ஓடுகிறார்கள்.

          சிறிது நேரத்தில், கட்டிடப் பராமரிப்பாளர், கை கட்டியபடி, ஆதீனத்தின் முன் நிற்கிறார்.

        உணவுக் கூடத்தின் நுழைவு வாயிலை இடித்து, உடனே உயர்த்திக் கட்டுங்கள். அடுத்த வேளை, உணவு உண்பதற்கு முன், நிலை வாயிலின் உயரம் உயர்ந்தாக வேண்டும்.

         ஆதீனத்தின் முகத்தில் ஒரு புதுப் பொலிவு,. மகிழ்வோடு எழுந்து, மன நிறைவோடு மெல்ல வெளியேறுகிறார்.

        அடுத்த சில மணி நேரங்களில், நுழைவாயில், இடிக்கப் பட்டு, உயரம் உயர்த்தப் பட்டது.

      நண்பர்களே, இந்த ஆதீனம் யார் தெரியுமா?

திருவாவடுதுறை ஆதீனத்தின்
16 வது பட்டம்
திருமிகு மேலகரம் சுப்பிரமணிய தேசிகர்.

ஆதீனத்தால், உணவுக் கூடத்தின்
நிலை வாயில்,
உயர்த்தப் பட்டது
யாருக்காகத் தெரியுமா,


மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
அவர்களுக்காக.

வாழ்க தமிழ்