06 செப்டம்பர் 2017

ஆசிரியர் தினம்     அம்மாகிட்ட ஒன்று சொல்லுவேன்
      டீச்சர்கிட்ட ஒன்று சொல்லுவேன்
ஆனா இப்ப புரிஞ்சிடுச்சி. அம்மாகிட்ட சொல்றதையும், டீச்சர்கிட்ட சொல்றதையும், சொன்னபடியே சொல்வேன்

   எங்க அப்பா, நான் படிக்கனும்னு வெளிநாட்டில் கஷ்டப்படுறாங்க. போன் பன்னிப் பேசும்போது, நான் உங்க அம்மாவுக்காக எல்லாம், இங்க கஷ்டப்படல்ல, உங்களுக்காகத்தான் கஷ்டப்படுறேன்று சொன்னாங்க.

   அதனால் நான், நீங்க சொல்றதையும், அம்மா, அப்பா சொல்றதையும் கேட்பேன்.

   நானும் உங்களைப் போலவே வருவேன்.


----

   உங்களிடம் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். எங்களுக்குப் படிக்கச் கொடுப்பதையே, …………, ………………, …………, போன்ற பிள்ளைகளுக்கும் கொடுக்காதிங்க.

   ஏன் என்றால், நாங்கள் படித்து விடுவோம். ஆனால் அவர்களுக்குப் படிக்க முடியுமா என்று தெரியவில்லை. அதனால் அதை மாற்றிக் கொள்ளுங்கள். இதைத் தவிர உங்களிடம் குறை சொல்ல எதுவும் இல்லை.

---

     இவர் நடத்தும் பாடம் கணிதம், ஆங்கிலம் எனக்கு பசுமரத்தாணி போல், என் நெஞ்சில் ஆழமாக பதிந்துள்ளது. இவர் எனக்கு ஊக்கத்தை அளிக்கிறார். ஆனால் சார், உங்களுக்கு கோபம் ரொம்ப வருகிறது. அதனால் நீங்கள் கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

----

     இவர் சொல்லுக்கிணங்க, நான் என் படிப்பில் மிகவும் ஆர்வம் செலுத்தி, இனி நடக்கும் தேர்வுகளில், என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

     என் பெற்றோரின் நம்பிக்கையையும், எனது ஆசிரியரும் தந்தையும் ஆகிய ஜெயக்குமார் அவர்களின் ஆசையையும் நிறைவேற்றுவேன் என்று, நான் இன்றிலிருந்து உறுதி எடுத்துக் கொள்கிறேன்.

-----

     நண்பர்களே, இவையெல்லாம் என் வகுப்பு மாணவிகள் எழுதியவை.

     ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, என் வகுப்பில், பேச்சுப் போட்டியினையும், கட்டுரைப் போட்டியினையும் நடத்தினேன்.

     எனது ஆசிரியர் என்பது கட்டுரைப் போட்டியின் தலைப்பு.

    ஒன்றாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை, உங்களுக்குப் பாடம் நடத்திய ஆசிரியர்களுள், உங்கள் மனதிற்குப்  பிடித்த ஆசிரியரைப் பற்றி, ஆசிரியையைப் பற்றி எழுதுங்கள் என்று கூறினேன்.

     வாழ்வில் முதன் முறையாக, பாடப் புத்தகத்தில் படித்ததை எழுதாமல், மனதில் படிந்திருந்த எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை, வார்த்தைகளால் கோர்த்து எழுதி அசத்திவிட்டார்கள்.

      உண்மையிலேயே நெகிழ்ந்துதான் போய்விட்டேன்.

       மாலை கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிக்கானப் பரிசளிப்பு விழா.


நண்பரும் பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன், முதுகலை உதவித் தலைமையாசிரியர் திரு ஜி.விஜயக்குமார், பட்டதாரி நிலை உதவித் தலைமையாசிரியை திருமதி அ.இராணி, முதுகலை ஆசிரியர் திரு எஸ்.சரவணன், திரு ஆர்.லெனின்., உடற் கல்வி ஆசிரியர் திரு துரை.நடராசன், உடற்கல்வி இயக்குநர் திரு கே.திவாகர், பட்டதாரி ஆசிரியர் திரு அ.சதாசிவம், திரு ஜெ.கிருட்டின மோகன், ஓவிய ஆசிரியர் திரு எஸ்.கோவிந்தராசன், பட்டதாரி ஆசிரியைகள் திருமதி ப.உஷாராணி, திருமதி எஸ்.கவிதா, திருமதி எஸ்.தமிழ்மணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

        நண்பர்களே, ஒரு செய்தியைச் சொல்ல மறந்துவிட்டேன்.

       கடந்த 3.9.2017 ஞாயிற்றுக் கிழமை மாலை 5.00 மணியளவில், நாகப்பட்டினம், சர் ஐசக் நியூட்டன் கல்லூரி வளாகத்தில், நாகப்பட்டினம் போர்ட் டவுன் லயன்ஸ் சங்கம் ஏற்று நடத்திய, பன்னாட்டு லயன்ஸ் சங்க, மாவட்ட ஆசிரியர் தின விழா சிறப்புடன் நடைபெற்றது.

      தந்தி தொலைக் காட்சி, தலைமை செய்தி ஆசிரியர் திரு ரெங்கராஜ் பாண்டே அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

      இவ்விழாவின்போது, 93 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் திலகம் என்னும் விருது வழங்கப்பெற்றது.

      இவ்விருதினைப் பெற்றவர்களுள் அடியேனும் ஒருவன்.

ஆசிரியர் திலகம் விருதிற்கு என்னைத் தேர்வு செய்த மண்டலத் தலைவர் திரு ராஜன் அவர்களுக்கும், தஞ்சாவூர் வசந்தம் அரிமா சங்கத் தலைவர் திரு ரமேஷ், செயலாளர் திரு அண்ணாசாமி, பொருளாளர் திரு அப்துல்லா, இணைப் பொருளாளர் திரு க.பால்ராஜ், உறுப்பினர் திரு ஜெகதீசன் ஆகியோருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


      இவ்விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு, புறப்பட்ட எங்களை, ஆர்வத்தோடு, தனது மகிழ்வுந்தில், தானே மகிழ்வுந்தினை ஓட்டியபடி அழைத்துச் சென்று, அழைத்து வந்த, என் முன்னாள் மாணவர் திரு.பா. மணி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்வு அடைகின்றேன்.